Home » இதழ் 19 » *ஆங்கிலக் கவிதை உலகில் தடம் பதித்த துரைராஜா தம்பிமுத்து – எம். பௌசர்

 

*ஆங்கிலக் கவிதை உலகில் தடம் பதித்த துரைராஜா தம்பிமுத்து – எம். பௌசர்

 

ஒரு நூற்றாண்டின் நினைவு 1915 – 2015

 

 

77777

 

1938இல் இலங்கையிலிருந்து தனது இருபத்திமூன்றாவது வயதில் இங்கிலாந்துக்கு கப்பலில் வந்துசேர்ந்த ஒரு இளம் கவிஞன், ஒரு ஆண்டு காலத்திற்குள் ஆங்கிலக் கவிதை உலகினுள் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல கவிதை இதழொன்றின் ஆசிரியராக பரிணமித்து இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் அறியப்பட்டார் என்பது ஒரு சாதாரணமான நிகழ்வன்று.அதுவொரு வரலாறு, தேடி கண்டடையப்பட்டு துலங்க வைக்கப்பட வேண்டிய பணி அது. எழுத்தும் தேடலும் பதிப்புமே வாழ்வாகி , ஆங்கில நவீன கவிதையில் முக்கியத்துவமான பங்களிப்பாளன் எனும் பெயருடனும் , பொது வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையில் நெருக்கடிகளுடன் அலைந்துழன்று தனது 67 வயதில் இங்கிலாந்திலேயே மரணமடைந்த துரைராஜா தம்பிமுத்து எனும் எழுத்தூழிய ஆளுமையின் நூற்றாண்டு இது.

1939ம் ஆண்டு இவரை ஆசிரியராகக் கொண்டு  “POETRY LONDON” முதலாவது இதழ் வெளிவந்திருக்கிறது. “எல்லோருக்குள்ளும் கவிதை இருக்கிறது”  ( Every Man has poetry within Him) எனும் முகப்பு வாசகத்துடன் வெளிவந்த இதழ் , அன்று ஆங்கிலக் கவிதை உலகிள் எழுதிக் கொண்டிருந்த கவிஞர்களை ஈர்த்ததுடன் , வாசகர்களிடையே கவிதை தொடர்பான பார்வையை அகலிக்க செய்திருப்பதுடன்,  புதிய அணுகுமுறையையும் தோற்றுவித்திருக்கிறது. இந்த கலாசார அதிர்ச்சியின் வாயிலாக 1940 தொடக்கம் 1950 ஆரம்பகாலம் வரை “POETRY LONDON”இதழும் தம்பிமுத்து எனும் கவிஞனும் இங்கிலாத்து கவிதைப் பரப்பில் பிரசித்தமான நாமங்களாக இருந்திருக்கின்றன. இரண்டாவது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது இவர் எழுதிய “இந்த யுத்தத்திற்கு வெளியே ” என்ற நீள்கவிதை ஆங்கிலக் கவிதை உலகில்  அன்றைய யுத்த நிலைமையில் பெரும் அதிர்வலையை தோற்றுவித்திருக்கிறது.

அன்று எழுதிக் கொண்டிருந்த பெருமளவிலான எழுத்தாளர்களுள் பெருமளவினானோர் தம்பிமுத்துவுடன் இணைந்து பணியாற்றக் கூடியதாகவும், முக்கிய ஒவியர்கள் இதழின் அட்டையை வடிவமைப்பவர்களாகவும் , உள் ஓவியங்களை t-1வரைபவர்காளாவும் இருந்திருக்கிறார்கள். இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட ரிஎஸ் எலியட், ஜோர்ஜ் ஒர்வெல், அந்தோனி டிக்கின்ஸ், முல்க்ராஜ் ஆனந்த் போன்றவர்களுடன் இணைந்து தம்பிமுத்துவால் பணி செய்யவும் முடிந்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் போன்ற ஆங்கில இலக்கிய படைப்பாளிகள் சஞ்சரித்த கலை இலக்கிய மண்ணில் , புலம்பெயர்ந்து வந்து மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே தனது கலை இலக்கிய ஆளுமையைமட்டுமே பின்புலமாகக் கொண்டு அதிக கவனம் பெறுவதும் தாக்கம் செலுத்துவதும் சாமானிய விடயமன்று.

இலங்கையின் வடமாகாணத்தில் அச்சுவேலியில் 15 ஆகஸ்ட் 1915இல் பிறந்த தம்பிமுத்து ஒரு கத்தோலிக்கராவார். கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் ஆங்கில மொழியில் கல்வி கற்ற இவர், கொழும்பு பல்கலைகழகத்தில் படித்துள்ளார். இவர் இங்கிலாந்துக்கு வந்த நோக்கம் உயர்கல்வி கற்பதற்கு என சில தகவல்களும், உல்லாசப் பயணியாக இங்கிலாந்துக்கு வருவதும் இங்குள்ள எழுத்தாளர்களுடன் உறவினைப் பேணுவதுமே நோக்கமாக இருந்தது என சில தகவல்களும் தெரிவிக்கின்றன. இரண்டாவது நோக்கமே இவருக்கு இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இவர் இங்கிலாந்து வந்து உயர்கல்விகற்பதில் ஆர்வம் செலுத்தாது , எழுதுவதிலும் எழுத்தாளர்களை சந்திப்பதிலும் இலக்கிய விமர்சனத்திலுமே அளவற்ற ஆர்வம் காட்டி உள்ளார். இங்கிலாந்து வரும் முன்னரே மூன்று ஆங்கிலக் கவிதைத் தொகுப்புகளை இலங்கையில் வெளியிட்டுள்ளார். இவரது தந்தை இலங்கை அச்சகக்கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றியதுடன்,  சொந்தமாக அச்சகத் தொழிலையும் மேற்கொண்டுள்ளார். அச்சுக்கலை மற்றும் வடிவமைப்பு போன்றவற்றில் சிறுவயது முதலே இவருக்கு ஈடுபாடு இருந்து வந்திருக்கிறது.

கவிஞராக, சிறுகதை எழுத்தாளராகப் படைப்பூக்கம் கொண்டிருந்த தம்பிமுத்துவின் “POETRY LONDON” வெளிவந்த போது ஒரு புதிய பாய்ச்சலாகவே விதந்துரைக்கப்பட்டிருக்கிறது. கவிதைத் துறையில் இளம் தலைமுறைக்கும் புதிய போக்குகளுக்கும் வாசலைத் திறந்துவிட்டவர் தம்பிமுத்து என்கின்றனர்.பின்வந்த காலங்களில் இங்கிலாந்தில் கவிதைத்துறையில் தாக்கம் செலுத்திய முக்கிய பல ஆங்கிலக் கவிஞர்களை இனம்கண்டு அவர்களுக்கு ஊக்கசக்தியாக இருந்து பிரசுர அறிமுகத்தினை வழங்கிய தம்பிமுத்து, இதழியல் பணியில் முழு நேர ஈடுபாட்டாளராக இருந்ததனால், அவர் கொண்டிருந்த படைப்புத் துறையில் முழு வீச்சாக செயற்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து வெளிவந்த இதழ்களில் இவரது சிறுகதைகள் பிரசுரம் கண்டிருக்கின்றன. கவிதை, சிறுகதை எழுதும் இவரது ஆற்றல்கள் இதழியல், பதிப்பு, விமர்சனம் போன்ற பணிகளால் தேக்கம் கண்டிருக்கிறது. படைப்பூக்கமிகு கலைஞர்கள் தமது ஆற்றல்களை பல்துறைகளில் கால்பதித்து செலவிடுகின்றபோது, தமது சொந்தப் படைப்புகளுக்கான அர்ப்பண வெளியை இழக்கவேண்டி வருகிறது. இதற்கு தம்பிமுத்து அவர்களும் விதிவிலக்காக இருக்கவில்லை.

“POETRY LONDON”இதழ் பரவலான கவனத்தினைப் பெற்றிருந்த சூழலில் இதன் முக்கிய நிதிப்பங்களிப்பாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் இடைநடுவில் இதழ்வருகை தடைப்பட்டுள்ளது. தம்பிமுத்து இதழின் ஆசிரியப் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்து 1952ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளார். அதே ஆண்டு கடைசிப்பகுதியில் அமெரிக்கா சென்று குடியேறியுள்ளார். இங்கிலாந்தில் புதிய ஆசிரிய நிர்வாகத்தின் கீழ்  இதழ் வெளிவந்த போதும் அது வாசகர்களிடையே தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. சொற்பகாலத்திற்குள் இதழின் மீள் வருகை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.  “POETRY LONDON”இதழ் என்றால் அதில் தம்பிமுத்து என்கிற உயர்ந்த கலைஞனின் பங்களிப்பையே இதழ் தாங்கி நின்றது என்பது நிரூபணமானது.

t-2அமெரிக்காவில் குடியேறிய தம்பிமுத்து அங்கு இலக்கிய, இதழியல் முயற்சிகளை மேற்கொள்ள விரும்பினார். காலமும் சூழலும் அவருக்கு அங்கு வாய்க்கவில்லை என்றே கூறவேண்டும்.  POETRY LONDON – NEWYORK என்ற பெயரில் நான்கு இதழ்களை வெளிக்கொணர்ந்துள்ளார். நிதி நெருக்கடி காரணமாக அவரால் தொடர்ந்தும் இதழ்பணியில் ஈடுபட முடியவில்லை. கொடுப்பனவுகளுக்காக நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் கவிதை குறித்த உரைகளை மாணவர்களுக்கு நிகழ்த்தியுள்ளார். பொருளாதார நெருக்கடி, மதுவுக்கு அடிமையான நிலை, தனிமை, பிரிவு இவரை மிகவும் பாதித்திருக்கின்றன. இந்த நிலையில் 1958ம் ஆண்டு இறுதிப்பகுதியில் இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு மூன்றாவது திருமண வாழ்வில் இணைந்து, பம்பாயில் எழுத்து, மற்றும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார்.மூன்றாவது திருமணத்தின் வழியாக சகுந்தலா என்கிற பெண்மகவுக்கு தந்தையானார். ஏலவே நடந்த இரு திருமண வாழ்க்கையில் இவருக்கு குழந்தைகள் இல்லை. மூன்றாவது திருமணமும் நீண்டகாலம் நீடிக்கவில்லை. இவர் இங்கிலாந்தில் இல்லாத வெற்றிடத்தினை மனதில் கொண்டு 1965இல் இவரது நண்பரான எழுத்தாளர்  Anthony Dickins    எழுதிய (Thambimuthu and Poetry London -London Magazine December 1965 ) எனும் இவர் பற்றிய கட்டுரை இவரது கவிதை, இதழியல் வாழ்வைப் பற்றி மட்டுமல்ல இவரது தனிப்பட்ட வாழ்வைப்பற்றிய ஒரு சித்திரத்தினை நமக்குத் தருகிறது.

1968இல் மீண்டும் இங்கிலாந்து திரும்பிய தம்பிமுத்து, ஆன்மீகத் துறையில் நாட்டம் காட்டியுள்ளார். இந்திய ஞானமரபு இவரை பாதித்திருக்கிறது. தியானம், ஆழ்மன யாத்திரை போன்றவற்றை முன்வைத்துப் பிரசங்கங்களை நிகழ்த்தியுமுள்ளார். எவ்வளவுதான் நெருக்கடியும் தோல்விகளும் தன்னைச் சூழ்ந்தாலும் எழுதுவதையும் இதழியல் நடாத்துவதையும் எழுத்தாளர்களுடன் சம்பாசிப்பதனையும் கைவிட முடியாதவராக இருந்த தம்பிமுத்து, இங்கிலாந்துக் கவிஞர்கள், எழுத்தாளர்களால் மதிக்கப்படுபவராக இருந்தார். கவிஞர் ரிஎஸ் எலியட்டின் 60வது பிறந்த தினத்தினை முன்னிறுத்தி “natarajah” ( சிவநடனம்) எனும் கவிதைப் பிரசுரத்தினை வெளியிட்டார். 1979களில் மீண்டும் POETRY LONDON- Apple Magazine  எனும் பெயரில் இரு இதழ்களை வெளியிட்டார். கடும் கோபக்காரனாகவும்,இறுக்கமான போக்காளனாவும் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகவும் இருந்த இவரது இயல்பும் யாருக்கும் கீழ் பணியாற்ற முடியாத நிலையும் தொடர்ச்சியாக இவரது வாழ்வில் இருந்துள்ளன. இந்தப் பண்புகள் இவரது இதழியல்பணிக்கு நிதிப்பங்களிப்பினைப் பெறுவதை சாத்தியமில்லாததாகவே மாற்றிவிட்டிருக்கிறது.
00000

 

புலம்பெயர்ந்து வந்து இங்கிலாந்திலும்,அவுஸ்திரேலியாவிலும் வாழ்ந்த கலைஞர்கள் பற்றி 1970களின் இறுதியில் வெளியான ஆய்வு நூலொன்றில் இலங்கையைச் சேர்ந்த தம்பிமுத்து தொடர்பில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (Hybridity and Dislocation : Poets of the South Asian Diaspora in UK and Australia )இதில் இவரது பங்களிப்புக்கு முதன்மைப் பாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவருடன் பங்களிப்பு செய்த எழுத்தாளர்களாக, இந்தியாவைச் சேர்ந்த சுதீப் சென் (இங்கிலாந்து), பங்களாதேசைச் சேர்ந்த மோனிராஅல்லி (இங்கிலாந்து),பிஜியைச் சேர்ந்த சுடேஸ் மிஸ்ரா(அவுஸ்திரேலியா) என்போர் விதந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புலம்பெயர்ந்த மற்றும் கலப்பின எழுத்தாளர்கள் என இந்த ஆய்வில் அடையாளப்படுத்தப்படுகின்றனர் என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

t-3

(A recording session for the poetry magazine ‘Voice’:
Sitting: Venu Chitale, JM Tambimuttu, TS Eliot, Una Marson,
Mulk Raj Anand, C Pemberton and NarayanMenon
Standing: George Orwell, Nancy Barratt and William Empson)

பிற்காலத்தில் மேற்குலகுக்கும் கீழைத்தேசத்திற்குமான கலை பண்பாட்டு உறவையும் புரிந்துணர்வையும் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டியவராக இவர் இருந்துள்ளார். கீழைத்தேய கலைஇ பண்பாட்டு மரபின் கொடையை மேற்கு அறிந்துகொள்ள வேண்டும் என இவர் முயற்சித்தார். பிபிசி போன்ற ஊடகங்களுக்காகச் சில நிகழ்ச்சிகளை இந்தியாவை மையப்படுத்தி நடாத்தினார். அதன் உள்ளடக்கம் மேற்கிலும் இந்தியாவிலும் தாக்கத்தினை ஏற்படுத்தின. இவரது ஆர்வத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்திய அரசால் கௌரவிக்கப்பட்டார். இவரது நோக்கத்தின் அடிப்படையிலும், கலாசார ,பண்பாட்டுப் பரிமாற்றத்தின் தேவையின் காரணமாகவும் INDIAN ARTS COUNCIL  உருவாக்கப்பட்டது. தம்பிமுத்து இதன் ஸ்தாபகர்களில் ஒருவராக விளங்கினார். 1982இல் இந்திய அரசால் பிரித்தானியாவுக்கான கலாசாரத் தூதுவராக (Consulate general) நியமிக்கப்பட்டார். வாழ்வில் புதிய பணியும் பொறுப்புகளும் , தேடலை அகலிப்பதற்கான கைகூடலும் வந்த தருணம்  திடீரென 1983 ஜூனில் மாரடைப்பினால்  67 வயதில் இங்கிலாந்தில் மரணமுற்றார் தம்பிமுத்து.

 

தனது வாழ்வில் அரை நூற்றாண்டு காலத்தினை எழுத்திற்கும் பதிப்பிற்கும், கலைஇ,இலக்கியப்பண்பாட்டு வளர்ச்சிக்கும் அர்ப்பணித்த தம்பிமுத்துவை எனக்குத் தெரியப்படுத்தியவர் பத்மநாப ஐயர் அவர்கள். இந்தச் சிறுகுறிப்பினை எழுதுவதற்கான தகவல்களை தேடி சேகரித்து தந்தவரவர். தமிழில் தம்பிமுத்து பற்றிய பதிவுகள் வரவேண்டும் , தம்பிமுத்துவை இன்றைய தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள வேண்டும் என அவர் கொள்ளும் அவா சாத்தியப்படுவது அவரது உந்துதலால்தான் நடக்கிறது. ஏன் இதனை குறிப்பிடுகிறேன் என்றால் அவர் தொகுத்தவழங்கிய “யுகம் மாறும்”( வெளியீடு நியுஹாம் தமிழர் நலன்புரிச் சங்கம் 1999) தொகுப்பில்தான் தம்பிமுத்து பற்றி பேராசிரியர் சுரேஷ் கனகராஜா தமிழில் ஒரு கட்டுரைஎழுதியுள்ளார் ( தம்பிமுத்து:ஆங்கிலக் கவிதை உலகில் ஒரு நட்சத்திரம்) நான் அறிந்தவரையில் தம்பிமுத்து பற்றி தமிழில் இன்னும் விரிவாகப் பதியப்படவில்லை. பத்மநாப ஐயர் மேலும் ஒரு தகவலைச் சொன்னார். மறைந்த பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்கள் தம்பிமுத்து பற்றி ஆங்கிலத்தில் விரிவான ஒரு நூலை எழுதுவதற்கான தேடலிலும் தகவல் சேகரிப்பிலும் ஈடுபட்டிருந்ததாகவும், அந்தப் பணிக்கு உதவும் வகையில் தான் பல நூல்களை, சஞ்சிகைகளை செல்வா கனகநாயகத்திற்கு அனுப்பி வைத்ததாகவும்,அப்பணி நிறைவடைவதற்கிடையில் காலன், செல்வா கனகநாயகத்தினை கவர்ந்து சென்று விட்டான் என்றார். இப்பணியை தேடலும் ஆர்வமும் உள்ளவர்கள் தொடர வேண்டும். இந்த இடத்தில்தான் நாம் செல்வா கனகநாயகம் போன்ற வரலாற்றுப் பங்களிப்பாளர்களின் வெற்றிடத்தினை உணர்கிறோம்.

 

t-4

00000
“எல்லோரிடமும் கவிதை குடிகொண்டுள்ளது . பிரபஞ்சம் பற்றிய மனதின் விழிப்புணர்வே கவிதை. அது அனைத்தையும் அரவணைக்கிறது. எங்கும் நிறைந்த அச்சக்தி . கடவுளைக் கண்டுகொள்ள முடியாததைப்போன்று தோன்றிடினும் அது சிந்தையைச் சதாகாலமும் இயக்குகிறது . வாழ்வின் ஆதாரங்களுக்கு இட்டுச் செல்வது கவிதை” என்பது தம்பிமுத்துவின் கவிதை தொடர்பான வாசகம். ஆர்வமூட்டக்கூடிய , மகிழ்ச்சியான ஒரு கலைஞன் தம்பிமுத்து என்கின்றனர் அவருடன் தொடர்புடைய எழுத்தாளர்கள். அவரது மறைவின் பின் 1989ம் ஆண்டு அவரது எழுத்தாள நண்பர் JANE WILLIAMS தொகுத்த தம்பிமுத்து பற்றிய நினைவுகளின் தொகுப்பான “ BRIDGE BETWEEN TWO WORLDS”அவரது ஆளுமையைக் குறித்துரைப்பதுடன் , ஆங்கிலக் கவிதைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்கும் சான்றாக இருக்கிறது.

அவர் ஒரு குடியேறி, வெள்ளை இனத்தவரல்ல. ஆங்கிலத்தில் எழுதினாலும், அம் மொழியில் அளவற்ற புலமை கொண்டிருந்த போதும் அவர் ஒரு புகலிட எழுத்தாளர் , செயற்பாட்டாளர் என்பதே அவரது அடையாளமாக இருந்தது. புகலிட இலக்கியத்தில் ஆங்கிலத்தில் எழுதிய இலங்கையச் சேர்ந்த தொடக்கப் படைப்பாளிகளில் ஒருவர் அவர். இலங்கையின் தேசிய இன நெருக்கடியின் விளைவான யுத்தத்தின் காரணமாக 1980க்குப் பின்தான் இலங்கையிலிருந்து பெருமளவு புலப்பெயர்வு நிகழ்கிறது. இதன்பின் தமிழில் புகலிட இலக்கியம் எனும் ஒரு பரப்பே விளைகிறது. அடையாள நெருக்கடியாலும், நிற-இனவாதத்தாலும் அவர் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பாதிக்கப்பட்டிருந்தார்.அவரது பிரசுர ,இதழியல் பணிகளை முன்னெடுப்பதில் பல சவால்கள், தடைகளை அவர் சந்தித்தார் என்பதை அறியக் கூடியதாக உள்ளது.

 

தம்பிமுத்து என்கிற அலைந்துழன்ற ஒரு கலைஞனின் வாழ்வின் முடிவு 1983 இல்  இலங்கைக்கு வெளியே பல்லாயிரம் மைல் தாண்டி நிகழ்ந்தது. லண்டன் நகரில் நிகழ்ந்த இவரது இறுதி நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள்,கலைஞர்கள், வாசகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.அந்த இறுதி நிகழ்வு ஒரு சோகம் ததும்பிய இலக்கிய நிகழ்வாகவே அமைந்தது என்கிறார் நிகழ்வில் பங்குபற்றிய கவிஞர் Michael Horowitz . தம்பிமுத்துவிற்கான அவரது அஞ்சலி இப்படி இருந்தது……

வாழ்வின் எச்சமென்று எதை சொல்வது ?
வயதான எலும்புகள் புதையுண்டு போகும்.
அல்லது கமழும் மயான வீச்சத்துடன் எரியூட்டப்படும் .
சிறிய தீக்கங்குகளின் சாம்பல் மெலிதான நிழலாய் மாறும்.
புகை கசிந்து நின்றபின் நடுப்பகல் காற்றில் நீ விட்டுச் சென்றது
அந்த நீலநிற வெற்றுக் காகிதம் ?

000000000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment