Home » *கருணாகரமூர்த்தி » * ஓடுகாலித்தாத்தா- கருணாகரமூர்த்தி –(சிறுகதை)

 

* ஓடுகாலித்தாத்தா- கருணாகரமூர்த்தி –(சிறுகதை)

 

karu - title

நாங்கள் பள்ளிக்கூடம்விட்டு புத்தூர்சந்தியால் திரும்பி வரும்போதும், சந்தியைக்கடந்து நெல்லோ குரக்கனோ எடுத்துக்கொண்டு மில்லுக்குப் போகும்போதும் சிலவேளைகளில் அந்தக்கிழவர் சந்தியில் சாவகச்சேரிக்கான பேருந்துத்தரிப்பில் நிற்பதைப்பார்த்திருப்போம். அவர் எங்கள் அம்மாவின் சொந்தச்சித்தப்பா என்பது எமக்கு வெகுகாலமாகத் தெரியாது.

 

அம்மாவுக்கு அப்படி ஒரு ஓடுகாலிசித்தப்பா இருந்தாரென்பது ஆச்சரியந்தான். அம்மாவின் அப்பாவை அதாவது தாத்தாவை எங்களுக்குத் தெரியாது, ஞாபகமில்லை. நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போதே அவர் திண்ணையைக் காலிபண்ணிவிட்டார். அவரது ஒரு வண்ணப் படத்தைத்தானும் அவர் காலத்தில் எவரும் பிடித்து வைக்கவுமில்லை, ஆனால் அவரின் சகோதர்களான மற்றைய இரண்டு தாத்தாக்களும் பரமசாதுக்கள், மிதித்தபுல் சாகாது என்பார்களே அந்த வகை. என்ன ஒருவர் கூத்துப்பாட்டு என்று உலைவார், தாத்தாவின் சகோதரர்களில் நேரிளையவரான கூத்துத்தாத்தாவை அம்மா “ஆசையப்பு” என்பார். மற்றவர் வெண்பா சீர் தளை விருத்தம் என்று அலைவார். அவரை “ இளையப்பு” என்பார். அம்மாவின் இந்த ஓடுகாலிச்சித்தப்பா அயல் ஊர்களில் எங்கேயாவது தன் அலுவல்களைப் பார்த்துவிட்டுத் திரும்பிவருகையில் புத்தூர்ச்சந்தியூடாக சுன்னாகத்திலிருந்து சாவகச்சேரிக்குப் போகும் பேருந்தில் ஏறி மட்டுவிலுக்குப்போவார்.

 

அவர் பேருந்துக்குக் காத்திருக்கையில் அவரைக்கடந்து நாங்கள் மிதிவண்டியிலோ, நடந்துபோனாலோ அவர் எங்களைப்பார்த்து சிரிக்கவோ முகமன்செய்யவோ விசாரிக்கவோ மாட்டார். காரணம் நாம் யாரென்றே அவருக்குத்தெரியாது. இரவு எட்டுமணிபோல சாவகச்சேரிக்குச்செல்லும் 775 தட பேருந்தை ஒருவேளை தவறவிட்டுவிட்டால் 6 மைல் தொலைவிலுள்ள மட்டுவிலுக்கு பொடிநடையாகவே சென்றுவிடுவார். வழியிலுள்ள எங்கள் வீட்டுக்கோ , பெரியம்மா வீட்டுக்கு, வரவோ தங்கவோமாட்டார். என்றாவது அவர் எங்கள் வீட்டுக்கு வந்ததோ, சின்னத்தாத்தாவென்று உறவுகொண்டாடியதோ, நாங்கள் அவர்மடியில் தூங்கியதோ இல்லை. அவர் எங்களது தாத்தாவென்று தெரியும். எங்களுடன் கோபதாபம் பாராட்ட எதுவும் நடந்ததில்லை. உறவுகளுடன் ஒட்டுறவின்றி வாழ்ந்துவிட்டார். அப்படி ஒரு ஜென்மம் என்றுமட்டுந்தான் சொல்லலாம். ஏன் எங்களுடன் இப்படி ஒட்டாமல் அவர் வாழ்ந்தாரென்பது எங்களுக்குத்தெரியாததுபோல், அவருக்குந்தான் தெரியாது.

 

அவர் இளம் வயதில் கடும் துடியாட்டக்காரனாம், கள்ளுக்கொட்டில்களும் பஞ்சமர்வீடுகளில் சாப்பாடும் வம்புச்சண்டைகளுமாக அவரளவில் ஒரு மறுத்தோடியாகத் திரிகையில் சின்னத்தாத்தாவின் உற்பாதங்கள் தாங்கமுடியாமல் ஒருமுறை பெரியதாத்தா பூவரசம் கம்பொன்று கிழிந்து நாராகிப் பறக்கும்வரை அவரைப் போட்டு அடித்தாராம். அதோடு கோபித்துக்கொண்டு போனவர் ஆண்டுக்கணக்கில் வீடுதிரும்பவே இல்லையாம். பிறகு ஆட்கள் அவரை மன்னாரில் கண்டதாகவும், களுவாஞ்சிக்குடியில் பார்த்ததாகவும், திருகோணமலையில் ஆமியில் சேர்ந்துவிட்டதாகவும் அவ்வப்போ கதைகள் மட்டும் வந்ததுண்டாம். அவருக்குப் படிப்பும் பெரிசாயில்லை, யாழ்த்தீபகற்பத்தில் வாழவும் பிடிக்கவில்லை. கட்டறுத்துக்கொண்டு அலைந்தவர் சிறிதுகாலம் விவசாயிகளிடமிருந்து நெல்லு, நிலக்கடலை, மிளகாய், எள்ளு, குரக்கன் என்று தானியங்கள் கட்டி வியாபாரம் செய்து நல்ல பொருளீட்டினாராம். வளர்ச்சியின் பொங்குமுகத்தில் ஒஸ்டின் கேம்பிற்ட்ஜ் காரைக்கொம்பனியால் இறக்கிவைத்து இரத்தினக்கற்கள் வியாபாரம்வரை போனதாகவும் காலத்தோடும் கூட்டுக்களோடும் எல்லாமே மெல்லச்சரிய தம்புள்ளவில் ஒரு புடவைக்கடை மட்டத்தில்வந்து அதிலேயே சிறிதுகாலம் நிலைத்ததாகவும் சொன்னார்கள். காலங்கழிய வியாபாரங்களிலிருந்தும் விடுதலையாகி மன்னார், மாறவில, மதுரங்குளி, மாதம்பை என்று சுற்றியவர் காத்தான்குடியைச்சேர்ந்த முகமதிய விதவைப் பெண்ணொருத்தியைச் சேர்த்துவைத்துக்கொண்டு மாதோட்டத்தில் விவசாயம் செய்துகொண்டு வாழ்கிறாரென திருக்கேதீஸ்வரம்போன யாரோ கண்டுவந்து கடைசியாகச் சொன்னார்கள்.

 

அவர்பற்றிய தகவல்கள் உறவுகள் எவருக்கும் தெரியாமல்போனதுக்கு அக் காலம் எண்ணிமத் தகவலறியும் வசதிகளில் பின்தங்கியிருந்தது மட்டுமே காரணமல்ல. அவர்பற்றிய அக்கறைகள் ஒரு குருவிக்கும் இருந்ததில்லை என்பதுதான் நிஜம். ஏறத்தாழ அப்படி ஒரு சின்னத்தாத்தா இருக்கிறார் என்பதையே மறந்து போயிருந்தோம். அம்மாவும் தன் சின்னப்புவென்று அவரைப்பற்றி எங்களிடம் கதைத்ததேயில்லை. அவரைப்பற்றிய கதைகள் வருவதற்கு அவரின் சேதிகளை யாரும் அறிந்திருந்தால்த்தானே?ஒரு காலத்தில் பெரியதாத்தாவுக்கு புகையிலை வியாபாரம் இருந்ததாம். கொச்சினுக்கு கோழிக்கோட்டுக்கு பாய்மரக்கப்பல்களில் புகையிலையை ஏற்றிவிட்டு அங்கிருந்து, கப்பல் வாழைப்பழமும், கொத்தமல்லி, சிகைக்காய், எள்ளுப்பிண்ணாக்கு, கருவாட்டுச்சிப்பங்கள், தேக்குத்தீராந்திகள், இரட்டைப்பீலி ஓடுகளும் வருவிப்பாராம்.

 

பெரியதாத்தாவுக்கு ஒரே மகள், அவர் பெரியம்மாவின் நாற்சார் வீட்டின் ஒருபகுதியில் அவரது பரிபாலனம் நடந்துகொண்டிருந்தது. மாலையானதும் சின்னவி பூவரசங்கதியாலில் கள்ளைக் கொழுவிவிட்டுக் குரலைக்காட்டிச் சமிக்ஞை செய்துவிட்டுப்போகவும் பெரியதாத்தா ஒரு பூனையைப்போல் ஓசைப்படாமல் எழுந்துபோய் கழுவிக்கவிழ்த்துக் காயவிட்டிருக்கும் தன் செதுக்கிய சிரட்டையில் அதைவார்த்து மாந்திப் பலதினிசில் ஏப்பங்கள் விட்டபின்னால் நீளச்சுருட்டோடும் புகையோடும் கோடியிலிருந்து வெளிப்படுவார். பொழுதுசாய்ந்து இருட்டுக்கட்ட சாய்மனைக்கட்டிலில் பெரியவர் அமர்ந்திருக்க அவரது நண்பர்கள் யாராவது வந்து சேர்ந்திருப்பார்கள். முதியோர் அரங்கம் ஒன்றுகூடும். சவாரிக்கைலாயர், வாழைப்பழக்கதிரேசு, அண்ணாமலை வாத்தியார் ஆகியோர் அதன் நிரந்தர பேராளர்கள். சவாரிக்கைலாயர் வந்திருந்தால் நடந்த நடக்கப்போகிற அனைத்து வண்டிச்சவாரிகள்பற்றியும் சொல்லித்தீர்ப்பார்.

karuna - pic

கைதடிக்கழுகன் மூச்செடுக்கும் விதம், பெரியபுலம் மயிலையன் குதிரையைப்போல கால்களை எடுத்துவைக்கும் லாவகம் எனத்தான் விரட்டிய சவாரிமாடுகளின் பிரதாபங்களையும், மற்றும் அயல் ஊரிலுள்ள அவருக்குப்பிடித்தமான மாடுகள் பற்றியும் ஏதோ ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்ட பெருமையுடன் அவிழ்த்து உதறுவார். சவாரிமாடுகள் பற்றிக்கதைக்க மனுஷனுக்கு அலுப்பதே இல்லை. வாழைப்பழக்கதிரேசுவுக்கு அவரது ஆதனங்களாகவும் சீதனங்களாகவும் பத்தாயிரங்கன்றுக்கும்மேல் தேறும் நாலைந்து வாழைத்தோட்டங்கள். சந்தையில் வாழைக்குலைகள், மற்றைய காய்பிஞ்சின் விலைகளுக்கப்பால் அவர் அக்கறைகள் இருப்பதில்லை. ஆனாலும் கால்பெருவிரல் நகச்சுத்திலிருந்து கபாலக்குத்துவரை எந்தநோயானாலும் இளவாலைச் அல்போன்ஸ் அத்தனாசி சவரிமுத்துப்பரியாரியின் சர்வரோகசூரணம் 3 கண்டம் சாப்பிட்டால் போதும் குணம்வந்துவிடும் என்பதில் அவருக்குரிய அசைக்கமுடியாத நம்பிக்கையை அச்சமூகத்தில் மீள்பதிவுசெய்யாமல் போகமாட்டார். அண்ணாமலை வாத்தியார் வந்தால் நாட்டுநடப்புகள் பற்றிய அலசல்கள் இருக்கும், ஜி.ஜி.பொன்னம்பலம் பேசியதாகச்சொல்லப்படும் கற்பனையான வழக்குகள், மதிநுட்பமான அவரின் வாதங்கள், உருத்திரபுரம் 10ம்வாய்க்கால் கோகிலாம்பாள் கொலைவழக்கில் அவர் செய்த திடுக்கிடுத்தும் குறுக்குவிசாரணைகள், வழக்குகளின் தீர்ப்புகள் அனைத்தையும் எதிரிலிருந்து பார்த்தவரைப்போல விபரிப்பார். வந்திருப்பது வயற்செய்கை விவசாயிகளாயின் இரணைமடு, அக்கராயன், முத்தையன்கட்டு, விசுவமடு, வவுனிக்குளத்தில் சேர்ந்திருக்கும் தண்ணீர் சிறுபோகத்துக்குப் போதுமோ போதாதோவென்று கவலைப்படுவார்கள். அவரவர் கவலைகளுடனும், கரிசனைகளுடனும் சபைகலைந்த பின்னால் சாப்பாட்டை முடித்துக்கொண்டு பெரிய தாத்தா தூங்கச்செல்வார்.

 

தனது காலத்தில் உறவுகளுடன் ஏதோ கோபித்துக்கொண்டவர்போல அவரது இருப்புக்கே தடயங்கள் இல்லாதிருந்த தன் ஓடுகாலிச்சித்தப்பாவென்று உயிர்தரித்து இருந்ததோட சரி, ஒஸ்டின் கேம்பிறிட்ஜ் காரில் பவனி, வெள்ளைக்காரன் காலத்தில சிங்கப்பூர் ஈறாகப்போய்வந்த மனிசன், சென்மத்தில ஒரு யார் பப்ளின் துணிகூட அண்ணனின் பிள்ளைகளென்று எங்களுக்கு எடுத்துத் தந்திருக்கமாட்டார், பொருள் பண்டம் என்றுதான் குவிக்காவிட்டாலும் தம்மேல் ஒரு வாஞ்சையோ ஒட்டுதலோ இல்லாத சென்மம் என்றுதான் அம்மா எப்போதாவது அவரைப்பற்றிச் சொல்லுவார். பெரியம்மாவுக்கு ஒரேமகன் நல்லநாதன் கரப்புக்கூடுபோல அரைக்காற்சட்டை போட்டுக்கொண்டு யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து டியூட்டறிகளையும் துடைத்து வைத்தும் அண்ணனால் எந்தப்பல்கலைக்கழகத்துள்ளும் நுழையமுடியவில்லை. இப்போது தானே வர்த்தக பாடங்களுக்கு ஒரு டியூட்டரி நடத்திக்கொண்டிருக்கிறார். கட்டைப்பிரமச்சாரி ஆதலால் குழந்தைகள் கூச்சல்கள் இல்லாத அமைதியானவீடு அவர்களது.

*
பெரியம்மாவீட்டருகில்தான் எங்களுக்கான சங்கக்கடை இருந்தது. அம்மா பங்கீட்டு அட்டையை எடுத்துப்போய் மளிகைச்சாமான்கள் வாங்கிவரும் ஒவ்வொருதடவையும் பெரியம்மாவீட்டுக்கும்போய் பெரியம்மாவையும், பெரியதாத்தாவையும் பார்த்துச் சுகநலம் விசாரித்து சகோதரியிடம் ஒருவாய் தேநீர்குடித்து வெற்றிலை போட்டுக்கொண்டு வருவது வழக்கம்.

*
விவிலியத்தில் வரும் வழிதவறிய மைந்தன் அஸாஸெல் தந்தையிடம் திரும்பியதுபோல் ஓடிஓய்ந்துபோன ஓடுகாலிச்சித்தப்பாவும் ஒருநாள் பெரியதாத்தாவின் சமூகத்துக்கு வந்துசேர்ந்தார். தான் வாழ்வில் மிகவும் அடிபட்டுக் கஷ்டப்பட்டுவிட்டதாயும் இப்போது தனக்கு உடம்புக்கு முடியவில்லையெனவும், தன்னைக்கவனிக்க யாருமே இல்லை என்றும் அண்ணனிடம் நொந்துமுனகவும் உருகிப்போன பெரியதாத்தா
“ பின்னை உன்னட்ட இருக்கிற சாமான்சக்கட்டுக்கள், தண்டுதளவாடங்களை ஒரு வண்டில்ல ஏற்றிக்கொண்டுவாவன்…………………….” என்று மறுகவும் கேட்டுக்கொண்டிருந்த பெரியம்மா அருள்வந்ததுபோலக்குதித்து…………..
“இது நல்லதொரு xxxxxமாயக்கதை……………………………. நான் உன்னையே பார்க்கமாட்டாமல் கிடந்து அல்லாடுறன், அதுக்குள்ள இந்தக்கிழவனையும் வரச்சொல்லுறாய்……. உனக்கென்ன கழன்றுகிழன்றுதான் போய்ச்சோ……… இருந்த இருப்பில நோகாமல்ச் சொல்லிப்போட்டாய்…….. உலையிற எனக்கெல்லோ அக்கப்பாடு”

 

பெரியம்மா உச்சத்தில் எகிறிக்கொண்டிருந்தவேளை அந்தப்பக்கம்போயிருந்த அம்மாவும் எதேச்சையாகக் களரியில் சமூகமானார்.
“பார்த்தியோடி கேட்டியோடி ராசம் இந்தக்கிழடுகள் அடிக்கிறகூத்தை………… தன்னைச்சுமந்து நாரிமுறிஞ்சுபோய் கிடக்கிற என்னை இந்த ஓடுகாலியையும் சேர்த்துச்சுமக்கட்டாம். இந்த சென்மங்களோட இனியும் கிடந்து உலையேலா…….. கதிரமலைக்கந்தா இதுகளுக்கு முன்னால என்னை அள்ளிக்கொண்டுபோ, நான் துலைஞ்சுபோறன்” என்று பிலாக்கணம் வைத்தவர் மூச்செடுக்கச் சிறிய இடைவெளிவிட்டுப்பின் “எப்பிடியடி இரண்டு கிழடுகளையும் தனியொருத்தியாய் நான்வைத்து மாரடிக்கிறது, ஒரு யோசனை வேண்டாம். ” என்று விட்ட இடத்திலிருந்து புதிதாக எகிறினார்.

 

சின்னத்தாத்தா பெரியம்மாவின் அலறலைக்கேட்டும் திண்ணைவிளிம்பில் தமையனின் காலடியில் ஏதோ மன்னிக்கமுடியாத தவறிழைத்தவர்போல தலையைக்குனிந்து காற்பெருவிரலைப் பார்த்துக்கொண்டு எதுவும் பேசாமல் மௌனித்திருந்தார். என்னதான் காலத்தில் மைனர் வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் ஆட்டஓட்டங்களுக்கெல்லாம் வயோதிபம் ஒரு நிறுத்தற்புள்ளியிடுகையில் மனிதன் தனிமரமாகிறான். என்ன அந்தநாள் நமக்கும் கடுகி வந்துகொண்டிருக்கிறது என்பதை அவன் உணர்வதில்லை.

 

அம்மாவின் தார்மீக காரியங்களை அப்பாவோ நானோ மற்றைய சகோதரங்களோ எதிர்க்கமாட்டோமென்று அவவுக்கும் தெரியும். அம்மா வீட்டுக்குவரும்போது சின்னத்தாத்தாவையும் வீட்டுக்கு அழைத்துவந்தார்.
என்றைக்கும் வாராது எம் முற்றத்தை மிதித்து வந்து கதிரையில் அமர்ந்ததும் சொன்னார்:
“ என்னட்டை பத்துச்சுத்து வண்டிலொன்று நிற்குது ராசம், மாடுகளை மாரியில பராமரிக்கேலா வித்துப்போட்டன், துரைச்சிங்கத்திட்ட ஆயிரம் பவுண் காசும் கொடுத்து வைச்சுருக்கிறன், உனக்குச் செத்தவீட்டுச்செலவுக்குப்போதும்”
“ இஞ்சபார் சித்தப்பு……………… உன்ர பொருளுக்குவேண்டி நான் உன்னைக்கூட்டிவரேல்ல, ரத்தவுறவுள்ள ஒரு சீவன் தெருவில அலைக்கழியக்கூடாதென்றுதான் கூட்டிவந்தனான், நீ ஒன்றுக்கும் யோசிக்காமல் மனத்தை உழட்டாமலிரு நான் உன்னைப் பார்ப்பன்” என்றார் அம்மா.

 

சுபாவத்தில் அவர் ஒன்றுங் கலகலப்பான மனிதன் அல்ல, தன் இயல்புப்படியே எங்களுடனும் பெரிதும் ஒட்டாமலும் கலக்காமலுந்தான் இருந்தார். அட ஆடுகள் கோழிகளுடனுங்கூடல் கதைக்கின்ற எங்கம்மாவுக்கு இப்படி ஒரு சித்தப்பா இருந்ததும், அவரைப்பார்க்கும் வேளையியிலும் எமக்குச் நம்பமுடியாதபடி சிரிப்புத்தான் வந்தது.

 

இரண்டுநாள் கழிச்சுத் தன் ‘கிறீச்’ ‘கிறீச்’ சத்தம் எழுப்பும் சிங்கப்பூர் முதலைத்தோற்செருப்போடு மாலைநேரம் உலாவப்போனவர் கோப்பிறேசனில் நுழைந்து கொஞ்சம் கீறிக்கொண்டு லேசான உலாஞ்சலுடன் வீடு வந்து சேரவும் அம்மா கண்டிப்பான குரலில் சொன்னார்: “ சித்தப்பு கோப்பிறேசனெண்டு வெளிக்கிட்டுப்போய் எங்கேயாவது விழுந்துகிழுந்து முறியாதை…….. நான் சின்னவியிட்டைச்சொல்லி உனக்கும் கள்ளுக்கொண்டுவந்து வைக்கச்சொல்லுறன்”

“ சரி மேனை, நான் இனிப்போகேல்லை, நீ சொல்லிவிடு ” என்றார் ஈனக்குரலில்.

 

மறுநாள் அவருக்கு விருப்பமான ஆட்டிறைச்சி சமைத்திருந்தும் அவர் சாப்பிடவில்லை. உடம்பும் லேசாய் காய்வதைப்போலிருந்தது. அம்மா பல வெஞ்சனங்கள் சேர்த்து அவருக்கு ரசம் ஒன்று வைத்துக்கொடுத்தார். பாதிகூடக்குடிக்கவில்லை வேண்டாமென்று தள்ளிவைத்தார். இரவாகவும் அவருக்குக் சுவாசம் சற்றுச் சீரற்றும் மூச்சுத்திணறுவதைப் போலுமிருந்தது. இருந்தது. தன் சாம்பல்நிற போளைக்கண்களை எல்லாத்திசையிலும் சுழற்றிப் பார்த்துகொண்டிருந்தார். மருத்துவர் பாலகிருஷ்ணனை அழைத்துவர நான் போனேன். அவ்வேளையில் அவர் அசந்து தூங்குகிறாரென நினைத்தோம், நான் மருத்துவருடன் வரமுதலே அவர் பேச்சும் மூச்சும் அடங்கி விட்டிருந்தன.

அதிர்ச்சியானதொரு துக்கவீடென்று சொல்லமுடியாது, அம்மா, பெரியம்மாவைத் தவிர அங்கே யாரும் பெரிதாய்ச் சலிக்கவுமில்லை. எட்டாம் நாட்காரியங்கள் எல்லாம் முடிந்து ஒருவாரம் கழிந்திருக்கும். எங்கள் குடும்பச் சட்டத்தரணி அம்பலவாணர் தன் மொறிஸ் மைனர் காரில் வந்து
“உங்களிட்ட ஒரு கையெழுத்து வாங்கவேணும்………அதுதான் வந்தனான்” என்றபடி இறங்கினார். அம்மா ஒன்றும்புரியாமல் முழிக்கவும் “உம்மட சரவணைச் சித்தப்பா மட்டுவில்ல பத்துப்பரப்பில காணியொன்று உமக்கு நன்கொடையென்று எழுதி வைச்சிருக்கிறார். உடனம் உங்களுக்குத் தெரியப்படுத்தவேண்டாம் என்பது அவரது வேண்டுகோள். இனிநான் தெரியப்படுத்தலாந்தானே………. அதுதான் நான் உறுதியைக் கச்சேரிக்கு பதிவுக்கு அனுப்ப உம்மட கையெழுத்துவேணும்” என்றார்.

முப்பத்தோராம் நாள் காரியத்துக்கு வந்த பெரியம்மா அம்மாவிடம் சொன்னார்: “ அடியே ராசம்……… மட்டுவில் தோட்டக்காணியை சித்தப்பு வித்துப்போட்டுதெண்டல்லே நான் நினைச்சுக்கொண்டிருந்தன்……… அந்த யோகம் உனக்கெண்டு இருந்திருக்குதென்ன…………”
ஓடுகாலித்தாத்தா வந்தது, தந்தது, சென்றதெல்லாம் இன்னும் ஒரு கனவைப்போல் இருக்கிறது.

000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment