Home » இதழ் 20 » * என் வாசிப்பும் எழுத்தும் சார்ந்த அனுபவங்கள் – சமீலா யூசுப் அலி

 

* என் வாசிப்பும் எழுத்தும் சார்ந்த அனுபவங்கள் – சமீலா யூசுப் அலி

 

same

 

 

“Always remember that when a man goes out of the room, he leaves everything in it behind… When a woman goes out she carries everything that happened in the room along with her.”

― Alice Munro, Too Much Happiness

பெண்களின் எழுத்து பற்றி பேசும் இந்த அரங்கில் பெண் என்ற ரீதியில் பொதுவாகவும் குறிப்பாக முஸ்லிம் பெண் என்ற வகையிலும் என் வாசிப்பும் எழுத்தும் சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்க்காக என்னை இங்கு அழைத்த இந்த ஏற்பாட்டுக்குழுவுக்கு  எனதுநன்றிகள்.

வாழ்க்கை சார்ந்த என் அனுபவங்கள் வித்தியாசமானவை.

வாசிப்பினூடாக வாழ்க்கையை வாசிக்கத் தொடங்கும் அல்லது பார்க்கத்  தொடங்கும் எல்லோருடைய அனுபவங்களும் வித்தியாசமானவை.தனித்துவமானவை தான். அதில் சந்தேகம் கிடையாது.

சிமமன்டா அடீச்சியினுடைய கமலாதாஸ் சுரையாவுடைய ஜும்பா லாஹீரியுடைய அல்லது அலிஸ் மன்ரோவுடைய வாழ்க்கை முறைமைகளும் சூழல் அமைப்பு,இருத்தலியல் போராட்டங்களும்  ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை; ஆனால் அவர்கள் எல்லோரையும்  ஒரே புள்ளியில் இணைப்பது, தான் சார்ந்த சமூகத்தின் அழுத்தங்களை சுட்டுவிரல் நீட்டி விசாரிக்கும் எழுத்துக்கள்; அவர்தம் சுய விசாரங்கள்.

என் இலக்கியப் பயணம் என் தந்தையின் மடியில் தான் ஆரம்பித்தது.

என்னுடைய வாப்பா ஊடாகத் தான் தமிழ் இலக்கியங்களும் உலக இலக்கியங்களும் நிரம்ப சிறுவயதிலேயே எனக்கு பரீட்சயமாகின.

அவர் தமிழும் பிறகு சிங்களப் பாடசாலைகளில் சிங்கள இலக்கியமும் கற்றுக் கொடுத்தவர்.

மார்டின் விக்ரமசிங்க,குமாரதுங்க முனிதாச, ஜெயகாந்தன்,கல்கி, மு,வரதராசன் Anton chekhov,Tolstoy,victor hugo,ernest hemingway போன்றவர்களையெல்லாம் வாப்பா அறிமுகப்படுத்தினார்.

அப்போது எனக்கு ஜெயகாந்தனின் ‘நினைத்துப் பார்க்கிறேன்’ தொகுதி மிகப் பிடித்தமாயிருந்தது.13603301_10154471106812323_5788229307986596911_o (1)

வாப்பா அவரது இளமையில் மார்க்ஸிச்ட் சிந்தனைகளால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தார்.

வாழ்க்கையைப்பற்றிய ஒரு தெளிவான நோக்கு அவரிடமிருந்தது.

தீவிரமான வாசிப்பும் தேடலும் அவரிடமிருந்து எனக்குத் தொற்றிக் கொண்ட பழக்கங்கள்.

அதற்கு அப்பால் எனது வாசிப்பும் தேடலும்  நீட்சி பெறுவதில் பல்வேறு தடங்கல்கள் இருந்தன.

நான் பிறந்தது மாவனல்லையில். சூழ வர இருந்தவை சிங்களக் கிராமங்கள்.

எனது ஊரைப் பொறுத்தவரை ஆசிரியர்களும் அரசதுறையில் பணியாற்றுபவர்களும் மீதிப் பேர் வியாபாரத்திலும் ஈடுபடக் கூடியவர்களைக் கொண்ட  சமூகம்.

இலக்கியம்,ரசனை இவற்றில் அதிக ஈடுபாடற்ற அல்லது அதற்கான நேரத்தை கொண்டிராத சமூகம்.

Academics அறிவுத்துறையில் அதிகம் ஈடுபடக் கூடியவர்கள் இருந்த போதிலும் எழுத்து,இலக்கியம் ஆக்கத் துறை சார்ந்த நுண்ணுணர்வுகள் முன்னுரிமை பெறாத சமூக ஒழுங்கு.

தமிழ் நூற்கள் வாங்குவதென்றால் கண்டிக்குச் செல்ல வேண்டும்.மாவனல்லை நூலகத்தில் சிங்கள நூற்களே அதிகமாயிருந்தன,மருந்துக்குப் போல சில தமிழ் நூற்கள்.

அப்போதென் மனசில் பீடம் போட்டு உட்கார்ந்திருந்தவர்கள் வைரமுத்து,மேத்தா மற்றும் அப்துல் ரஹ்மான். கிட்டத்தட்ட அவர்களது கவிதைகளின் ஒவ்வொரு வரியும் அப்போது மனப்பாடம்.

கலீல் ஜிப்ரானின் சில நூற்களில் தமிழாக்கங்களும் கிடைத்தன.முறிந்த சிறகுகளும் ஞானிகளின் தோட்டமும் மிகப் பிடித்தமாகின.

அதற்குப் பின்வந்த காலம் வாசிப்பைப் பொருத்தவரை ஒரு தேக்க நிலை stagnant period.

ஒரு மூடிய semi conservative ஆன சமூகத்தில் நடக்கக் கூடிய விடயங்கள் என்னையும் சுற்றியிருந்தன.

வெளி சமூகத்தோடு அதிகம் புழக்கம் இல்லாத, வாசிப்பினையோ எழுத்தினையோ அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல முடியாத ஒரு நிலமை.

எழுத்தில் துணிச்சலாக சில விடயங்களை வெளிக் கொணரும் போது ஏற்படும் சமூக அழுத்தங்கள், அதை எதிர் கொள்ளும் பக்குவம் இருந்தாலும் மறைமுகமாக குடும்ப அமைப்புகளுக்குள் ஏற்படும் பாதிப்புக்கள். நெருக்கடிகள் எழுத்தின் வீரியத்தினை வெகுவாகக் குறைத்து விட்டன.

 

என்னுடைய தாகம் மிகைத்திருந்தாலும் அதற்கான வாய்ப்புக்களை இனங்கண்டு கொள்வதில் அதிக தாமதம் ஏற்பட்டது.

இந்த சமயத்தில் தான் என் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்துக்குப் பிறகு தான் நான் இன்னும் தீவிரமாக வாசிக்கத் துவங்கினேன்.

அம்பையின் காட்டில் ஒரு மான் எனக்குள் கனன்று கொண்டிருந்த கேள்விகளை இன்னும் விசிறி விட்டது.

வைக்கம் முஹம்மது பஷீரின் கதைகள் இன்னொரு பரிமாணத்தைப் பார்க்க வைத்தன.

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் என் தேடலுக்கான தீனி கிடைக்கத் துவங்கியது. பல்கலைக் கழக நூற்களஞ்சியத்தில் சுந்தர ராமசாமி,நகுலன்,அசோக மித்திரன் போன்றவர்களின் எழுத்துக்களைக் காணக் கிடைத்தது.

சம காலத்திலேயே ஆங்கில இலக்கிய வாசிப்பும் தீவிரமடையத் தொடங்கியது. மனுஷ்யபுத்திரன்,சல்மா மற்றும் சுந்தரராமசாமி போன்றவர்களின் எழுத்தை இணையத்தளங்களூடாக வாசிக்கத் தொடங்கினேன்.

சல்மாவின் இரண்டாம் ஜாமம் எனக்கு மிக மிகப் பிடித்தமாயிருந்தது.

முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலை பிரதிபளிக்கும் அந்த நாவலில் உள்ளீடுகள் நான் பிறந்து வளர்ந்த காலத்துக்கு சற்று முந்தையதோர் காலகட்டத்திலிருந்த என் சமூகத்தை அப்படியே வெளிக்கொணர்ந்திருந்தது அந்த விருப்பத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

Sociology படிக்கும் போது வெர்ஜீனியா வூல்ப்,பெட்டி பீரிடன் போன்றவர்களும் பெண்ணிய இயக்கங்களும் அறிமுகமாகின.

பெட்டி ப்ரீடனின் பெமினின் மிஸ்டீக் நூலில் பெண்ணின் அடையாளச் சிக்கல் identity crisis சம்பந்தமாகப் பேசும் the problem which has no name பெயர் அற்ற ஒரு பிரச்சினை  என்னை அதிகம் சிந்திக்க வைத்தது.

ஒரு பெண் தாய் அல்லது மனைவி என்ற பாத்திரங்களோடு மாத்திரம் தன்னை நிறுத்திக்கொள்வது அல்லது சுறுக்கிக் கொள்வது மிகப்பெரியதோர் அநியாயம் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்தேன்.

பெண்ணின் சுயம் பற்றியும் அடையாளம் பற்றியும் இன்னும் என் வாசிப்பினை விசாலப்படுத்தினேன்.As Betty Friedan says,  the problem lay buried, unspoken, for many years in the minds of women.

பெண்ணுடைய பிரச்சினைகளை ஆண்கள் அடையாளப்படுத்தும் அவளுக்கான தீர்மானங்களை அவர்களே எடுக்கும் கலாச்சாரத்தை கண்டு மனம் வெதும்பினேன்.

In order to be universal, you have to be rooted in your own culture. Abbas Kiarostami

உலகளாவிய மனிதனாக நீ  ஆக வேண்டுமானால் முதலில் உன் சொந்தக் கலாச்சாரத்தில் உன் வேர்கள் ஆழமாக இருக்க வேண்டும்

நான் வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தையும் கலாச்சாரத்தையும் ஒட்டுமொத்தமாக மறுதலித்து உடைத்தெறிவதில் எனக்கு உடன்பாடில்லை. அதற்குள்ளிருந்தே மாற்றத்திற்கான முன்னுரையை எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

நான் எனக்கான அடையாளத்தை என் எழுத்துக்களுக்குள்ளிருந்து கண்டெடுத்தேன்.

 

இனி ….

அந்த எழுத்துக்கள் பேசட்டும்.

 

—————————————————————————————————————————————————–

 

13603318_10154471102657323_9110025968189740740_o

 

கண்ணாடி மீன்கள்

 

 

நிலவொளி இரவுகளையோ

சமுத்திரத்தின் கர்ப்பத்திலுள்ள முத்துக்களையோ

பற்றிய அறிவு அதற்கில்லை.

 

அதுவோர் கண்ணாடி மீன்.

அதைச் சுற்றிய கைதட்டல்கள் பற்றி கர்வித்திருந்த்து.

 

எல்லையிலாப் பெரு வெளிகள் தாண்டி

வலிக்க நீந்திச் செல்லும் மீன்களைப் பற்றியும்

எதிர்பாராத மர்மங்கள் தரும் விடுதலை பற்றியும்

அதற்கெந்த கிளர்ச்சியும் இல்லை.

 

கண்ணாடித் தொட்டிக்கப்பால் அதிகபட்சம்

வரவேற்பறை உலகம்.

 

அண்டசராசரங்களையே சுற்றி வருவதாய்

ஒற்றையாயொரு சோழிக் கிழிஞ்சலை சுற்றி வந்து கொண்டிருந்தது.

 

ஒக்சிஜனையே செயற்கையாய் நுகர்ந்து கொண்டிருக்குமதற்கு அமாவாசை இரவுகளின் அலைப் பெருக்கென்ன தெரியும்?

அகன்றலையும் வானம் பார்த்து கடல் நுகரும் கனவுகள் கூட அதற்கு வந்ததேயில்லை.

 

அகழ் சமுத்திர மீன்கள் அலட்டாமல் நீந்திச் சென்று கொண்டிருந்தன,

முடிவறாத காலங்கள் தாண்டி….

கண்ணாடி மீனோ அகம்பாவத்துடன் சுதந்திரம் பற்றி பேசிக் கொண்டேயிருந்தது.

 

———————————————————————————————————————————————————-

 

ஓரங்குலமும் அசையேன்

 

என்

பேனாவை நிலத்தில்குத்திஉடை!!!

 

என்

மடிக்கணணியைபிடுங்கி

ஓங்கி நிலத்தில்அடி!!!

 

என்

குரல்வளையை

உன் விரலிடுக்கில்நசுக்கு!!!

 

துப்பாக்கியைத்

தொண்டைக்குள்குத்து!

 

அநீதிக்கெதிராய் கொதிதெழுந்தவர்களின்

சடலங்களைக்காட்டு….

 

என்னை

சின்னாபின்னப்படுத்து….

 

என் குடும்பத்தை

இகழ்….

 

என்

பாதையைபெயர்த்து எடு…

 

நான் வாழும்

குடிசைக்கு

நெருப்பு வை

 

என்

சோற்றில்

நஞ்சு வை

 

என் எழுத்துக்களில்

காறித்துப்பு

 

உன்

எதேச்சதிகாரத்துக்கெதிராக

 

ஓரங்குலமும் அசையேன்

 

———————————————————————————————————————————–

 

திறக்கப் படாத கதவு

திறக்கப் படாத கதவுகளுக்குப் பின்னால்
வெகு நேரமாக அவள் நின்று கொண்டிருக்கிறாள்.

இலகுவில் நெம்பி உடைத்து விட முடியாத உறுதியில் இருமாந்து தொங்கிக் கொண்டிருக்கும்

அந்தப் புராதனமான பூட்டு துருப்பிடித்திருக்கிறது

கனக்கத்துவங்கியிருக்கும் காலை மாற்றி நின்று கொள்கிறாள்

ஷெஹர்சாதைப் போல் ஆயிரத்தோர் கதைகள் அவள் அறியாள்
அதனால் ஷெஹ்ரியார்களினால் ஒவ்வொரு இரவும் அவள் கொல்லப்பட்டாள்

மீண்டெழுதலையும் இரகசியக் கனவு காணலையும் அவளிடமிருந்து பிய்த்தெடுக்க முடியவில்லை

அவளின் துயரந்தோய்ந்த விழிகளில் எழுதியிருக்கும் நம்பிக்கையின் பச்சை நிறக் கீற்றுக்கள் கதவுகளில் அறைந்து கொண்டேயிருந்தன.

எப்போதாவது கதவிடுக்குகள் அகன்ற போது
அவளது பார்வையைகள் ஊசியாய் உள்நுழைந்தன.
அவர்கள் பதட்டப் பட்டார்கள்.

அவள் மற்றக் காலை மாற்றி வைத்துக் கொண்டாள்.

வானம் இருண்டு சூழ் கொண்ட மேகங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் நகர்ந்து கொண்டிருந்தன.

ஊழியின் கோரத்தாண்டவங்களோ, எரிக்கும் வெயிற் பாலைக் கோடைகளோ
அவளுக்குப் புதிதல்ல

மழை நீர் அவளது மெல்லிய தேகத்தைக் கரைத்து விடுமளவு வஞ்சத்துடன் இடைவிடாது பொழிந்து கொண்டிருந்தது.

அவளோ சலனங்களற்ற சன்னியாசி போல பூட்டினை வெறித்துக் கொண்டிருந்தாள்.

காலம் அவளை வெகு வேகமாகக் கடந்து கொண்டிருந்தது.

அவள் பேசவில்லை.
அதிகம் பேசுவது பற்றிய அதிகம் நம்பிக்கை அவளதல்ல.

ஆனால் அவள் தனக்காகப் பேசக் கூடிய ஏதோவொன்றைத் தயாரித்துக் கொண்டிருந்தாள்.
காலங்களின் இருண்மையில் கனக்கும் அந்தப் பூட்டு மெளனித்திருந்தது.
அதன் சாவிகளோ அகங்காரத்தின் பெருவெளியில் கைகட்டி வாய் பொத்தி நின்றிருந்தன.

அவள் வெறும் கனவுகளைப் பொறுக்கும் பட்டாம் பூச்சியல்ல
கனவுகளுக்கு இறக்கை கட்டுபவள்

புறக்கணிக்கத் தக்கதோர் கணத்தின் ஒரு அசட்டுத் துணிச்சலில்
அவள் எம்பி அந்த பூட்டினைத் தொட்டாள்.

பூட்டு உதிர்ந்து விழுந்தது
—————————————————————————————————————————————-

ஹைபேசியாஉனக்கு நினைவிருக்கிறதா?

 

ஹைபேசியா புராதன அலெக்ஸென்ரியாவில் வாழ்ந்த ஒரு கணித மேதை,வானவியலிலும் தத்துவத்திலும் கரை கண்டவள்.

அவள் மதவெறியர்களால் கொல்லப்படுகிறாள்.

ஹைபேசியா உனக்கு நினைவிருக்கிறதா?

அலெக்ஸான்ரியா உன்னிடம் கால் மடித்துப் பாடம் கேட்டது
அது ஒரு காலம்.
வானத்தின் நீண்ட பரப்புகளில் மறைந்திருக்கும் மர்மங்களில் உறைந்திருக்கும் உன் விழிகள்.

நூலகத்தின் அகன்ற படிகளில் உன் நிழல் …மேலே நிலவு

உன் உள்ளத்தை எவராலும் சிறைபிடிக்க முடியாதிருந்தது…
பெருக்கெடுத்தவுன் அன்போ எல்லோர்க்கும் பொதுவாய்த்தானிருந்தது.

நூற்களுக்குள் மட்டுமே உன்னைச் சுற்றிக் கொண்டாய்.

.

ஹைபேசியா
உனக்கு நினைவிருக்கிறதா?

தூங்காது இரவுகளில் உன் சிந்தனை சுற்றிக் கொண்டேயிருந்தது
பூமி சூரியனைச் சுற்றுகிறதா அல்லது பூமியைச் சூரியன் சுற்றுகிறதா
தெரிந்தாக வேண்டுமுனக்கு
உனக்குச் சுற்றியிருந்தவர்களுக்கு …

உன் பதட்டங்களோ,தேடலின் தாகங்களோ குறைந்தபட்ச அதிர்வுகளையும் ஏற்படுத்தவில்லை.
ஒரு பெண்ணுக்கு திருமணம்,கணவன்,குழந்தைகளுக்கப்பால்
எது வேண்டியிருக்கிறது ஹைபேசியா
ஒன்றுமேயில்லை.

காலங்காலமாய் இருந்து வருகின்ற பெண் என்கிற புராதன பிம்பத்திற்குள் நீ பொருந்தவில்லை.
அது உன் தவறு.

புத்தகங்களையும் கற்பித்தலையும் விவாகரத்துச் செய்தால்
உனக்கு விடுதலை என்றார்கள்.
நீ எதிலிருந்து விடுதலை என்றெதிர்க் கேள்வி கேட்டாய்.

அவர்கள் உன் உடைகளை களைந்தார்கள்
நிர்வாணப்பட்டதோ அவர்களது அகங்காரம் தான்.

உன் தோலை உரித்தார்கள்
உன்னை உயிரோடு எரித்தார்கள்
உன் கண்களின் ஓரம் வன்மத்துக்குப் பதிலாக கருணை வழிந்தது.
அவர்கள் அறியாதிருக்கிறார்கள்.

ஹைபேசியா,
இப்போதும்
அவர்கள் அறியாதிருக்கிறார்கள்.

 

————————————————————————————————————————–

 

  கடந்த 09 ஜூலை 16 இல் , தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் நடாத்திய ,  நான்கு  பெண்களின் எழுத்துக்களை முன்வைத்து…பெண்களால் நடாத்தப்பட்ட  உரையாடல் நிகழ்வில் ஆற்றப்பட்ட உரையின் எழுத்து வடிவம் .

 

5 Comments

 1. பெயரில்லா வாசகன் says:

  சமீலா பின்த் யூசுப் அலி,
  அற்புதமான அனுபவப் பகிர்வு.
  உங்களது படைப்புகளையும்
  வருங்கால சந்ததிகள்
  வாசித்து பயன் பல அடையும்
  என்பதில் ஐயமேதுமில்லை.
  பல நூறு படைப்புகளை நீங்கள்
  படைக்க வேண்டுமென்பதே
  இந்த வாசகனின் அவா.

Post a Comment