Home » இதழ் 20 » *காணாமற்போனவர்கள் போல நீயும்….. -சாந்தி நேசக்கரம்

 

*காணாமற்போனவர்கள் போல நீயும்….. -சாந்தி நேசக்கரம்

 

 

2016-04-07 20.17.36 (1)

‘அக்கா அக்கா’ என நீ ஸ்கைப்பில் கூப்பிடும் குரலும் மறைந்து…ஸ்கைப்பில் உன் பெயர் இப்போது அடையாளமின்றிக் கிடக்கிறது….!

 

ஏதோ எனது வீட்டில் என்கூடப்பிறந்த உறவு போல என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தவன். உனக்குள்ளான துயரங்களை வெற்றிகளையென எல்லாவற்றையும் கடிதமெழுதி இளைப்பாறிக்கொள்ள ‘அன்பின் அக்கா’ என்று ஆரம்பித்து அனைத்தையும் எழுதியனுப்புவாய்.

 

எத்தனையோ தோழதோழியரின் எழுத்துக்கள் ஞாபகங்கள் போல நீயும் எனக்கு எழுதிய கடிதங்கள் பேசிய வார்த்தைகளென உன் ஞாபகமாய் ஏராளம் நினைவுகள்……!

 

யாரையும் கேட்கவோ அறியவோ முடியாமல் நீ எனக்குள் தேடப்பட்டுக் கொண்டேயிருக்கிறாய். நீ எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதாக எனக்குள் நம்பப்படுகிறாய்.

 

வவுனியாவில் அமைந்துள்ள போராளிகள் தடுப்பு முகாமில் நீயும் அழவோ ஆறுதல் தேடவோ இயலாமல் எப்போதும் போல தனிமையைத் தேடுவாயோ…..? 2009இன் யுத்தம் நிறைவடைந்த பின் உன்னை இப்படித்தான் தேடிக்கொண்டிருந்தேன்.

 

அக்கா உயிரியல் படித்துக்கொண்டிருந்த நேரம் நீ சாதாரணதர பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றாய். உயர்தரத்தில் கணிதத்தைத் தெரிவு செய்து படிக்க ஆரம்பித்த உனது கவனத்தையெல்லாம் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை காவு கொண்டது.

 

அம்மாவோடும் அக்காவோடுமாக சுற்றித் திரிந்த உனது உலகம் போரையும் அகதி வாழ்வையும் தந்து சாதாரணமான இரவுகளெல்லாம் உனக்கு நீண்ட யுகங்களாகின…..!

 

ஊரெங்கும் நிரம்பிய துயரம் உன்னையும் நாளடைவில் போராளியாக்கியது.

 

யாழ்மாவட்டமே அகதியாகி வன்னி நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரம் நீ வன்னிக்காடுகளில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தாய். ஒரு பெரும் இலட்சியக்கனவு உனக்கும் இதயம் முட்ட……!

 

ஆயிரமாயிரமாய் அணிவகுத்து நின்ற போராளிகளில் ஒருவனாய் களங்களில் காவியம் எழுதிக் கொண்டிருந்த உனக்கு அரசியல் பிரிவில் சு.ப.தமிழ்ச்செல்வனின் அருகாமையில் பணி அமைந்து விடுகிறது.

 

அமைதியும் கடமையும் உன்னை ஓர் சிறந்த வீரனாக்கியது. அரசியல் பிரிவுக்குள்ளிருந்து தடைப்பட்ட கல்வியைக் கற்றாய். கணணிவரை உனது கற்றல் விரிந்து உலகைக் கைகளுக்குள் அடக்கும் வலுவையெல்லாம் பெற்றுக் கொண்டாய்.

 

போரால் சிதிலமான வன்னிமண்ணை உலகம் வியந்து பார்க்கும் அளவுக்கு வியக்க வைத்தது வன்னியின் வளர்ச்சியும் எழுச்சியும். ‘அக்கினிகீல’ சமர் சமாதானக்கதவுகளைத் திறக்க வழிகோலியது. வந்த சமாதான காலம் உன்னை எனக்கு அடையாளம் காட்டியது.

 

விரிந்த இணையம் உனக்கும் எனக்குமான உறவை புதுப்பிக்க உனது கனவுகளை கேட்டு உனக்காக பிரார்த்திக்க வழியைத் தந்தது.ஈழநாதத்தில் நான் எழுதிய பகிர்வுகளில் நீ வாசகனாகி என்னோடு கருத்தாடல் கவிதைகள் கதைகள் என எல்லாவற்றையும் பகிரத் தொடங்கினாய். மெல்ல மெல்ல உனக்குள்ளிருந்த எல்லாவற்றையும் என்னோடு பகிரத் தொடங்கினாய்.

 

‘ஏதோ கனகாலம் பழகினமாதிரியிருக்கு… உங்களிட்டை எல்லாத்தையும கதைக்கலாம் பகிரலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறீர்கள் அக்கா’ என்றொருதரம் மடலிட்டிருந்தாய்.

 

அன்றிலிருந்து உனது மடல்கள் மின்னஞ்சல்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என நீ என்; பிள்ளைகள் வரையும் நெருங்கியிருந்தாய். குறைந்தது வாரம் ஒரு தரம் ஏதாவதொரு வகையில் தொடர்போடிருந்தோம்.

2005 ஒரு மடலிட்டிருந்தாய். அக்கா நிலமை இறுகப்போகிறது. வர முடியுமாயின் வாருங்கள். உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் போலுள்ளது. பிள்ளைகளையும் கூட்டிவாருங்கள். எப்போது சந்திக்க இனிக் கிடைக்குமோ தெரியாதென எழுதியிருந்தாய்.

 

ஊர் போகும் ஏற்பாடுகள் முடியும் தறுவாயில் பயணம் தடைப்பட்டு உன்னைச் சந்திக்க முடியாதென்றதை அறிவித்த போது நீ; மிகவும் ஏமாந்து போனாய் என்பதை நீ எழுதிய கடிதங்கள் மெய்ப்பித்திருந்தன.

 

நீ அதிகாரிகள் பயிற்சி முடித்த போது உனக்கு தலைவரிடமிருந்து கிடைத்த  கணணி , கமரா என எல்லாவற்றுக்குமான உனது சந்தோசங்களையெல்லாம் மகிழ்வோடு பகிர்ந்த எழுதிய மின்னஞ்சல் புகைப்படங்கள் எத்தனை…!

 

அப்படியொரு நாளில் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட பலர் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் பரவிய நேரம் நீயுமாயிருக்குமோ என இணையத்தில் தேடினேன். ஆனால் அன்று நீ தப்பியிருந்தாய். உன் பணிகள் காரணமாக தொலைவில் நின்றதாக பின்னர் கூறியிருந்தாய்.

 

அந்தநாளின் பணிகளும் சுமைகளும் நீ அவ்வப்போது மடல் வரைந்து உனது துயர்களையெல்லாம் எழுதிக் கொண்டிருப்பாய். திடீரென சில மாதங்கள் காணாமற்போயிருந்தாய். உன்னைப்பற்றி எவ்வித தகவலும் இல்லாது போனது.

 

உன்னைத் தேடி உனக்காய் கவிதையொன்றை எழுதி எனது வலைப்பூவில் பதவிட்டிருந்தேன். என் எதிர்பார்ப்பு போலவே அந்தக்கவிதை உன் கண்ணில் பட்டிருந்தது. கவிதை படித்ததும் கண்ணீரோடு நீ வரைந்த கடிதம் இப்போதும் வாசிக்கிற போது விழிகள் நனைகிறதடா !

 

நீ; இருப்பாய் என்று நம்பவேர் இல்லையென்று சொல்லவோ தொடர்புகள் அற்றுப்போயின…. ஆனால் உனது கடிதங்களாக கருத்துக்களாக…. நிழற்படங்களா…..நீ; என்னோடு வாழ்ந்து கொண்டிருந்தாய்…!

 

2009இன் பங்குனி மாதம் மீளவும் உயிர் தந்து நீ எழுதியிருந்த மடல் என்னை மீளவும் உயிர்ப்பித்தது.

 

அன்பின் அக்கா அண்ணா மற்றும் பிள்ளைகள்,

நான் நலமாக இருக்கின்றேன் இதுவரை. நீங்களும் நலமேயிருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இம்மடலினை எழுதுகின்றேன்.

 

எப்பொழுது கடைசியாக உங்களுடன் தொடர்பு கொண்டேனோ தெரியவில்லை. மிக நீண்ட நாட்களாகிவிட்டன என்று நினைக்கின்றேன். எனக்கு தொடர்ச்சியாக இணையத் தொடர்பு இருந்த போதிலும் அண்மைக் காலமாக நிறைய வேலைகள் இருந்தமையால் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. எனினும் உங்கள் அனைவரையும் இடைக்கிடை நினைத்துக் கொள்வேன். அடிக்கடி என்று பொய் சொல்ல முடியவில்லை.

 

அம்மா அக்காவுடனும் போனவருடம் 10ம் மாதம் கதைத்தபின்னர் சென்ற மாதம்தான் கதைத்தேன். அவர்களுக்கு கூட நான் இதுவரை கடிதம் எல்லாம் எழுதியது கிடையாது. உங்களுக்குத் தான் கடிதம் எழுதுகின்றேன். சிலவேளைகளில் – அநேகமாக இறுதிக் கடிதமாகக்கூட இருக்கலாம்.

 

போன மாதம் இணையத்தில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக உங்களுடைய வலைப்பதிவிற்கு வரநேர்ந்தது. அதிலும் எனக்காக நீங்கள் எழுதிப் பதிந்திருந்த ‘நலமா நீயென்று கேட்கேனடா’ என்ற பதிவை கண்களில் நீருடன் படித்தேன்.

 

எனக்காக யாருமே அருகிலில்லை என்ற உணர்வு சிலவேளைகளில் தலைதூக்கும். களைத்தபொழுது தலைசாய்த்து ஆறுதல் காண அன்னை மடி இல்லையே என்று ஏங்குவேன். அப்பொழுதெல்லாம் யாருடனும் எதுவும் கதைக்கப் பிடிக்காது எங்காவது தனியே போய் இருப்பேன். ஆனால் உங்களுடைய அந்தப் பதிவைப் பார்த்தபோது என்னையே அறியாமல் கண்களில் நீர்வந்துவிட்டது. அதிலும் நான் அந்தப் பதிவைப் படிக்கும்போது யாருமே அருகிலில்லை. மனம்விட்டு கொஞ்ச நேரம் அழுதேன்.

 

நீங்கள் இவ்விட நிலைமைகளையும் அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். உலகமே திரண்டுவந்து எம்மீது போர்தொடுத்துக் கொண்டிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் என்னோடு தோளோடு தோள் நின்று ஒன்றாக படுத்துறங்கி ஒருதட்டில் உணவுண்டு வாழ்ந்த உறவுகள் பலர் களத்தில் வீழ்ந்துவிட்டார்கள்.

 

காணாமற்போனவர்கள் போல நீயும்பல தடவைகள் மரணம் மிக அருகில் வந்துவிட்டுப் போயிருக்கிறது. ஆனால் இன்னும் அழைத்துச் செல்லவில்லை. அதிஸ்டமோ துரதிஸ்டமோ தெரியவில்லை இந்தக்கணம்வரை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

 

இன்று அம்மா அக்காவுடன் கதைத்தேன். அம்மா நிறைய யோசிக்கின்றா போலத் தெரிகிறது. குரல் உடைந்து போயிருந்தது. நான் எதுவுமே காட்டிக்கொள்ளாது சாதாரணமாகக் கதைத்துவிட்டு வைத்துவிட்டேன்.

 

சில படங்களும் அனுப்பி விடுகின்றேன். அம்மாவின் அக்காவின் தொலைபேசியிலக்கம் அனுப்புகிறேன். அம்மாவுடன் இடைக்கிடை கதையுங்கள். நேரம் கிடைக்கின்ற போது அம்மாவோடு கதையுங்கள். அம்மா என்னை நினைத்துக் கவலைப்படாமல் இருக்க ஆறுதலாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.என்றாவது சந்திப்போம் என்ற நம்பிக்கை போய்விட்டது ஆனாலும் ஒருமுறை கதைக்கலாம் என்ற நம்பிக்கையுடன்

தம்பி வசந்.

 

இக்கடிதத்தின் பின்னர் ஒரு சனிக்கிழமை மாலை தொலைபேசியில் அழைத்தாய். அக்கா என்றழைத்தவன் அரைமணித்தியாலங்கள் வரையில் அத்தனை நாள் கதைகளையும் சொல்லி முடித்தாய்.

ஸ்கைபில் தினமும் வரும் நேரங்களைச் சொன்னாய். உனது வரவுக்காக தினமும் எனது ஸ்கைப் ஐடி காத்திருந்தது. வருவாய் பேசுவாய். பேசும் நிமிடங்களில் நம்பிக்கையை விதைப்பாய். நம்பியிருங்கள் அக்கா நாங்கள் வெல்லுவோம் என்றுதானே கடைசிவரை சொல்லிச் சென்றாய்.

 

2009 மேமாதம் ஒரு மடலிட்டிருந்தாய்.

நான் கடவுள் படத்தில் ‘அம்மா உன் பிள்ளை நான்…’ என்ற பாடலை கேட்டுப்பாருங்கள். பழைய ‘மாதா உன் கோயிலில் மணிதீபம் ஏற்றினேன்..’ என்ற பாடலின் மெட்டில் இளையராஜா மீண்டுமொருமுறை தான் ராஜாதான் என்பதை நிரூபித்திருக்கிறார். நல்ல அர்த்தமான பாடல் வரிகளும் கூட.

அமைதியான ஒரு இடத்தில் மெல்லிய சத்தத்தில் பாடலை கேட்டுப்பாருங்கள். கேட்டுவிட்டு கருத்து எழுதி எனக்கு அனுப்புங்கள் அக்கா.

தம்பி வசந்

 

உனது நல்ல ரசனைகளில் ஒன்று உனக்குப் பிடித்த பாடல்கள் கவிதைகளை எனக்கும் அனுப்பி வைப்பாய். அவைபற்றிய கருத்துக்களையும் என்னிடமிருந்து கேட்பாய். நீ விரும்பிக் கேட்கும் பாடல்கள் யாவும் எனக்கும் வந்து சேரும். அவை எனக்கும் பிடித்த பாடல்களாக….!

 

எப்போதும் சிரிப்பும் கதையும் உனக்குப் பிடித்த பாடல்களுமென தொடர்போடு இருந்தவன். 06.05.09 அன்று சொன்னாய். அக்கா இயன்றவரை உறவுகளைப் பேணுவோம். நாளைக்கு வேறையிடம் போறேன். இனிமேல் கதைக்க முடியுமோ தெரியேல்ல. அதிஸ்டம் இருந்தால் கதைக்கலாம்.

 

நம்பிக்கை தரும்படி எதையாவது தருவாயென்ற நம்பிக்கையில் உன் கதைகள் புதிர்போல இருந்தது. அதன் பின்னால் உன்னை எதிர்பார்த்து ஸ்கைப் தவமிருந்தது. நீ வரவேயில்லை……ஒன்லைன் போகும் நேரமெல்லாம் ஸ்கைப்பில் காத்திருந்தேன். நீ வரவேயில்லை….!

 

எல்லாம் முடிந்தது. நீயும் நானும் நினைத்த யாவும் கனவாகி பிரளயமொன்று நடந்து முடிந்து சூனியமாகியது எங்கள் நிலம். நீயும் ஒருநாள் உன்னை எரித்துச் சாம்பலாகினாய். வுhவென்ற போது சிரித்தபடி போகிறேன் என்று விடைபெற்றவன் நீ.

 

உன் அம்மாவுடன் பேசிய போதெல்லாம் நீ வருவாயென்ற நம்பிக்கையே அவவிடமிருந்தது. உன்னையும் உனது உடமைகளையும் சேர்த்து உன்னையே எரித்தாயென்ற உண்மையைச் சொல்லும் தைரியம் இன்னும் இல்லை.

உயிரோடு நீயில்லையென்பது உறுதியான பிறகு உன் அம்மா அக்காவுடனனா தொடர்புகளைப் பேணாமல் ஒளித்திருக்கிறேன். வருடங்கள் ஏழு கடக்கப்போகிறது ஆனாலும் நீ வருவாயென்ற நம்பிக்கையில் வாழும் அவர்களுக்கு என்ன தைரியத்தோடு நீ இல்லையனெ;று சொல்ல ?

 

உனது ஞாபகமாய் நீயனுப்பிய நிழற்படங்களும் பாடல்களும் உன்னோடு கரைந்த பொழுதுகளில் நீ பேசியவவைகளுமே மீதமாய் உனது ஞாபகமாக…!

 

கணணியில் இருந்த உனது படங்களை இப்போது சாமிகளுடன் சமன்படுத்தியுள்ளேன். உனக்காய் ஒரு மெழுகுவர்த்தியும் சில பூக்களும் உன் சிரித்த முகத்தின் முன்னால் ஒளிர்கிறது.

 

வசந்தன் என்ற பெயரில் எரியும் சோதிக்குள் நீயும் சோதியாய். வசந்தம் காணாத வரலாற்றின் துயரங்களோடு நீயும் ஒருவனாய். உனது நினைவுகள் வருகிற போதெல்லாம் கண்ணிமைகளை நிறைக்கும் கண்ணீர்த் துளிகளில் நீ கவிதையாக ஒலித்துக் கொண்டேயிருக்கிறாய்.

 

காணாமற்போனவர்கள் போல நீயும் காணாமற் போய்விட்டாய். சொல்லியழ முடியாத் துயரமாய் நீயும் சொல்லாத கதைகளோடு என்னோடு சேர்ந்து வருகிறாய். கனவுகளாக கதைகளாக கவிதைகளாக….!

00000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment