Home » இதழ் 20 » *ஈராக் ஆக்கிரமிப்பும், சில்கொட் அறிக்கையும்- வி.சிவலிங்கம்

 

*ஈராக் ஆக்கிரமிப்பும், சில்கொட் அறிக்கையும்- வி.சிவலிங்கம்

 

ll

மெரிக்கா தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பு 2003ம் ஆண்டு பிரித்தானிய அரசின் ஆதரவுடன் ஆரம்பித்தது. இவ் ஆக்கிரமிப்பிற்கான காரணமாக அன்றைய ஈராக் ஆட்சித் தலைவர் சதாம் ஹுசைன் பல ஆயிரம் மக்களை ஒரே சமயத்தில் கொல்லும் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதன் உள் நோக்கம் காலப் போக்கில் அம்பலமானது. அதாவது இவ் யுத்தம் மத்திய கிழக்குப் பிரச்சனைகளில் ஈராக், ஈரான், இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சனை என பலவற்றுடன் இணைந்த ஒன்றாகவே காணப்பட்டது. இஸ்ரேலிய நலன்களில் அதிகளவு நாட்டத்தைக் கொண்டிருக்கம் மேற்குலக நாடுகள் ஈராக் நாட்டினைக் கூறுகளாக்க திட்டமிட்டிருந்தன. அங்கு காணப்பட்ட உள்நாட்டு நெருக்கடிகளைப் பயன்படுத்தி இந் நாட்டினை சுன்னி, சியா, குர்டிஷ் என மூன்று பிரதேசங்களாகப் பிரிக்கத் திட்டமிட்டிருந்தனர். 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க காங்கிரசில் இயற்றப்பட்ட தீர்மானம் அதற்கான ஆதாரமாக உள்ளது. மத்திய கிழக்கில் ஜனநாயகத்திற்கான அடித்தளங்களைப் போடப்போவதாக கூறிய அமெரிக்க அரசு இறுதியில் ஈராக்கில் செயற்பட்ட அரசினையும், சிவில் சமூகத்தினையும் முற்றாக செயலிழக்கச் செய்தமையே முடிவாக அமைந்தது.இவ் ஈராக் யுத்தத்தில் பிரித்தானியாவின் பங்கு குறித்த விசாரணையே இவ் அறிக்கையின் சாராம்சமாக அமைந்தது. இவ் விசாரணை என்பது அரசு தாமாக முன்வந்து மேற்கொண்ட காரியம் அல்ல. மிகப் பெருந்தொகையான மக்கள் நடத்திய ஆரப்பாட்டங்களும், அழுத்தங்களும் இம் முடிவை நோக்கி அரசைத் தள்ளியதன் விளைவே ஆகும்.

 

b-1இவ் ஆக்கிரமிப்பின் ஆரம்பமே மிகவும் கொடுமையாக காணப்பட்டது. 2003ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு 2004ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்கிடையிலான காலப் பகுதியில் மட்டும் சுமார் 1 லட்சம் ஈராக்கிய மக்கள் செத்து மடிந்தார்கள். அத்துடன் எண்ணிலடங்கா தொகையினர் உடல் சிதைந்து அடையாளம் காண முடியாத நிலையில் இறந்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. 35 சதவீதம் முதல் 50 சதவீத மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பாதிக்கப்பட்டார்கள். நாட்டின் மின் உற்பத்தி, கழிவு நீர் வடிகால் அமைப்புகள் மிகவும் சிதைந்தன. சுகாதாரமும், கல்வியும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. ஓட்டு மொத்தமாக சுமார் 190,000 மக்களின் உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளது. அதில் 70 சதவீதமானோர் ஈராக்கிய குடிமக்களாகும். போரினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையைத் தர இந்த நாடுகள் தயாராக இல்லை. ஆனால் அவ்வப்போது வெளிவந்த அறிக்கைகளின்படி 4488 அமெரிக்க ராணுவ வீரர்கள், 3400 அமெரிக்க ஒப்பந்தகாரர்கள் அங்கு இறந்துள்ளனர். ஓட்டு மொத்தமாக 3.9 ரில்லியன் அமெரிக்க டொலர் பணம் அங்கு விரயமாக்கப்பட்டுள்ளது. இப் பணத்தினை அமெரிக்க மக்களே வரியாக செலுத்த வேண்டும். காயமடைந்தும், உடல் ஊனமுற்றும் உள்ளோரைப் பராமரிப்பதற்கு 500 பில்லியன் டொலர்கள் தேவைப்படுகிறது. இப் போரின் காரணமாக உளவியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களின் தொகை 247,000 ஆகும். பிரித்தானியா அரசு ஈராக் நாட்டின் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதன் காரணமாக தற்போது பயங்கரவாதம் முன்னரை விட தீவிரமாகியுள்ளது. மத்திய கிழக்கு மேலும் அமைதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.இத்தகைய ஓர் பின்னணியிலிருந்தே சில்கொட் அறிக்கையின் சாராம்சத்தினை நாம் நோக்க வேண்டும்.

பிரித்தானிய அரசு ஈராக்கில் ஆக்கிரமிப்பை மேற்கொள்ளவதற்கு முன்பதாக சமாதான வழிமுறைகள் யாவும் தோற்றுப்போய் வேறு வழிகள் இல்லை என்ற நிலையில்தான் போரைத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் சமாதான வழிகள் காலாவதியாவதற்கு முன்பதாகவே ராணுவ வழிகளை மேற்கொண்டது இறுதித் தீர்வாக தேர்வு செய்யப்பட்டதாக கூறுவது தவறு என்கிறார்.சதாம் ஹுசைன் மிகவும் ஆபத்தானவர், எமது நலன்களுக்கு அவர் ஆபத்தானவர் என மக்களுக்குக் கூறி ராணுவ தாக்குதலுக்குத் தயார்ப்படுத்தியது மிகவும் மிகைப்படுத்தப்ட்டதாக இருந்தது எனத் தெரிவித்த அவர் அவ் ராணுவ தாக்குதல்களால் மேலும் பல ஆபத்துகள் ஏற்படும் என எச்சரித்தும் அவற்றைப் பிரதமர் அலட்சியப்படுத்தியுள்ளார்.இப் பாராதூரமான முடிவுகளை மேற்கொள்வதற்குத் தேவையான சாட்சியங்களை அல்லது அறிஞர்களின் அல்லது உளவுப் பிரிவின் நயவுரைகளைத் திரட்டுவதற்குப் பதிலாக தனது சொந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே செயற்பட்டுள்ளார்.
ஈராக் அரசின் செயற்பாடுகள் பிரித்தானிய நலன்களுக்கு மிகவும் ஆபத்தானது எனத் தெரிவித்த கருத்துக்கள் நியாயமாக அமைந்திருக்கவில்லை.

blair-2

போரைத் தொடுப்பதற்கு 8 மாதங்களுக்கு முன்பதாகவே, ஆயுத பரிசோதகர்களின் அறிக்கை வெளியாவதற்கு முன்பதாகவே, ரோனி பிளேயர் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அவர்களுக்கு எழுதிய இரகசிய கடிதம் ஒன்றில் ‘ நான் என்ன நடந்தாலும் உங்களுடன் இருப்பேன்’ என குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது போர் பற்றிய முடிவுக்கு எந்தவித கேள்வியும் இல்லாமலேயே ஆதரித்திருந்தார் என்பது புலனாகிறது.போரின் காலத்தின்போது ரொனி பிளேயர் சுமார் 29 கடிதங்கள் எழுதியிருந்தார். 2002ம் ஆண்டு யூலை மாதம் அளவில் எழுதியுள்ள 6 பக்க இரகசிய கடிதம் ஒன்றில் சதாம் ஹுசையினை வெளியேற்றுவது குறித்துத் தெரிவிக்கையில், ‘ ஆக்கிரமிப்புத் தொடர்பாக இரண்டுபட்ட போக்குகளை ஈராக்கிய மக்கள் கொண்டிருந்தாலும் அப் பிரதேசத்தினை விடுவிப்பது அவசியமானது எனத் தெரிவித்திருந்தார். ஆக்கிரமிப்பிற்கான இம் முடிவுகள் திருப்திகரமான பின்னணியில் மேற்கொள்ளப்பட்டதாக இருக்கவில்லை.

இப் பிரச்சனையில் ஐ நா சபையின் பங்குபற்றல், போரிற்குப் பின்னதான ஈராக் கட்டுமானப் பணி போன்றனவற்றில் அமெரிக்க நிர்வாகம் பிரித்தானியா மேல் சவாரி செய்வதாக, அசட்டை செய்வதாக அமைந்திருந்தது. அத்துடன் ஈராக் நாட்டின் எண்ணெய் வருமானத்தைக் கட்டப்படுத்துவதிலும் குழப்பம் காணப்பட்டது. இவ் விசாரணையில் ஈராக் பாதுகாப்பு படைகளின் கட்டுமானத்தை முற்றாக இல்லாமல் செய்த முடிவுகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அறிக்கை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.
சுதாம் குசைன் மனித இனத்தைப் பாரிய அளவில் அழிக்கும் ஆயுதங்களை வைத்திருப்பதாக தவறான தகவல்கள் மூலம் வழிநடத்தியுள்ளது. இதன் அடிப்படையிலேயே போருக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. உளவுப் பிரிவினர் ஆரம்ப முதலே தவறான வழி நடத்தல்களைக் கொண்ட ஊகங்களை மையமாகக் கொண்டே அவ் ஆயுதங்கள் இருப்பதாக கூறியுள்ளது. இவ் ஆயுதங்களை வேறு வழிமுறைகள் மூலம் அகற்றும் வாய்ப்புகளை நாட அவர்கள் முயற்சிக்கவில்லை.

 

aபோரிற்குச் செல்வதற்கான அரசியல் நியாயங்களைத் தயாரித்த அளவிற்கு போரை நடத்துவதற்குரிய ஆயத்தங்கள் மற்றும் ஏனைய தேவைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை. மிகவும் பற்றாக்குறையான விதத்தில் திட்டமிடுதல்களும், தயாரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. அது மட்டுமல்லாமல் சதாம் குசைன் இற்குப் பின்னர் ஏற்படப்போகும் நிலமைகள் குறித்து எந்தவித தயாரிப்புகளும் இருக்கவில்லை. அதன் விளைவாக மிகவும் அவமானத்தை தரும் விதத்தில் எதிரிகளுடன் உடன்பாட்டிற்குச் செல்ல நேரிட்டது. இவ் ஆக்கிரமிப்பிற்குத் திட்டமிட்ட பாதுகாப்பு அமைச்சு அவசரப்பட்டதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மிகவும் ஆறுதலாகவே செயற்பட்டனர். குறிப்பாக மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் கருவிகளால் படையினர் பலர் உயிரிளக்க நேரிட்டது.
ஆக்கிரமிப்புப் போர் தொடர்பான அமெரிக்க முடிவுகளுக்கு எதிராக பிரித்தானியா சென்றிருந்தால் ராஜதந்திர உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்ற வாதத்தை சில்கொட் நிராகரித்துள்ளார். போரில் ஈடுபடாதிருந்தால் அவ்வித பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

இப் போரின் ஆரம்பத்தில் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. குறிப்பாக 2002 இற்கும் 2003ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் இவ் ஆக்கிரமிப்பின் விளைவாக அங்கு உள்நாட்டு யுத்தம் ஒன்று வெடிக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. 2002ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அப்போதைய அமெரிக்க ராஜாங்க அமைச்சர் கொலின் பவல் அவர்கள் சதாம் குசைன் முடிந்தபின் மிக அதிக அளவிலான இரத்தம் சிந்த வாய்ப்பு உண்டு என எச்சரித்திருந்தார். ரோனி பிளேயர் கூறுவது போல அவ்வாறான நிலமைகள் ஏற்படும் என எவரும் எச்சரிக்கவில்லை என்ற வாதத்தைச் சில்கொட் நிராகரித்துள்ளார்.

 

பிரித்தானிய அரசு எக் காரணங்களைக் கூறி ஈராக் நாட்டின் மீது ஆக்கிரமிப்புச் செய்தார்களோ அவற்றில் எதனையும் அவர்கள் எட்டவில்லை. 2009ம் ஆண்டு பிரித்தானிய படைகள் அங்கிருந்து விலகிய பின்னணி அவற்றை உணர்த்தின. இதன் பின்னர் அங்கு ஆழமான பிளவுகள் வெடித்தன. பாஸ்ரா பிரதேசம் மிகவும் சிதைந்த ஒன்றாக காணப்பட்டது. எண்ணெய் வருமானத்தைச் சுருட்டுவதில் உள் வெடிப்புகள் தோன்றின. ஈராக்கிய அரசிற்குள் ஊழல் பெருகியது. புல மக்களைக் கொல்லும் ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்படவில்லை.

b

உலக நாடுகளில் காணப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உரக்கப் பேசும் அமெரிக்காவும், பிரித்தானியாவும் போரில் இறந்த ஈராக்கிய மக்கள் தொகை குறித்து எந்தவித ஆவணங்களையும் முன்வைக்கவில்லை. போரின் ஆரம்பத்தின் போது சமான்ய மக்களின் உயிரிழப்பினை கூடிய அளவில் குறைப்பதாகக் கூறிச் சென்ற இந்த இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சுகள் போர் தொடர்ந்து விஸ்தரித்துச் சென்ற வேளையில் மேலெழுந்தவாரியான மரண விபரங்களையே வழங்கி வந்தன. இம் மரணங்களுக்கு எந்த திணைக்களம் காரணமாக இருந்தது என்பதில் கவனம் செலுத்தினார்களே தவிர மரணத்தின் தொகை பற்றி அக்கறை செலுத்தவில்லை எனக் கூறியுள்ள சில்கொட் அறிக்கை பெருந்தொகையான சாமான்ய மக்களின் இறப்பிற்கு கூட்டு நாடுகள் காரணமல்ல என மறுப்பறிக்கை விடுவதிலேயே குறியாக இருந்தனர்.

 

முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயரின் போர் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட விதம் குறித்தும் மிகவும் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மந்திரிசபை உறுப்பினர்கள் பலர் இருட்டிற்குள் வைக்கப்பட்டிருந்தனர். ஒரு சில குறிப்பிட்ட அமைச்சர்களே பங்கெடுத்தனர். ஜனநாயகத்தின் பிறப்பிடம் என அழைக்கப்படும் பிரித்தானிய அரசு மந்திரிசபைக் கூட்டுப் பொறுப்பினைத் தட்டிக் கழித்து, தனி நபர் தீர்மானத்தின் அடிப்படையில் போரை நடத்தியது ஜனநாயக விரோதமானது. சட்ட விரோதமானது என தற்போது பரவலான அபிப்பிராயம் நிலவுகிறது. அதன் காரணமாக ரொனி பிளேயர் மீது ஜனநாயக சட்ட விரோத முடிவுகளை மேற்கொண்டு உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்ததாக வழக்குத் தொடர ஈராக் போரில் காயமடைந்த, மரணமடைந்த குடும்பங்களின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

 

00000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment