Home » இதழ் 21 » * பேதம் – க.சட்டநாதன்

 

* பேதம் – க.சட்டநாதன்

 

 

னசு கனத்துக் கிடந்தது. போர்வையை ஒதுக்கித் தள்ளியபடி எழுந்தவள், ஜன்னல் வரை சென்று வானத்தைப் பார்த்தாள். ஒற்றையாய் ஒரு சிறு பறவை அவள் பார்வையில் பட்டது. கரும்புள்ளியாகி மறையும் வரை அதைப் பார்த்தபடி இருந்தாள்.

‘ நானும் இந்தப் பட்சி மாதிரித் தனித்து விடப்பட்டவளா…? எனக்கு முன்னாலும் பின்னாலும் திரிந்து, பவ்வியமாய் நடந்து, என்னிடம் பயன் பெற்றவர்களும் பயன் பெறாதவர்களும் – எத்தனை பேர் என்னிடம் இருந்து பிரிந்து விட்டார்கள்’
அவளது மனதில் லேசான தவிப்பு.

‘அம்மா இல்லை. அப்பா கொழும்பில வீட்டோட தனது சுகங்களைச் சுகித்தபடி… அப்பாவிடமிருந்து இப்படி யாழ்ப்பாணம் வந்துவிட்டது நல்லதுக்குத் தான்! கட்டுக்கள் ஏதுமில்லாத சுதந்திரம். எழுத்து, இலக்கியம் என்ற தொடர்புகள். இவைகளுக்கு அப்பால் அந்தப் பெண்கள் கல்லூரியின் ஆசிரியப் பணி- எல்லாமே மன அழுத்தங்களையும் பாரங்களையும் லெசாக்கி விடுகின்றனவே…!’
இருந்த போதும் இனந்தெரியாத ஒரு துயரம் சில நாட்களாகவே அவளைக் கவலை கொள்ள வைக்கிறது. சிறிது பிடிபடுவது போலவும் பிடிபடாதது போலவும் அவளுக்கு இருக்கிறது. தீர்மானமாக இது தான் என அவளால் நினைக்க முடியவில்லை.

நேற்று முன்தினம் நடந்த, சுகர்ணியின் ‘வேர்கள்’ புத்தக அறிமுக விழாவுடன்தான் எல்லாமே ஆரம்பித்ததாக அவளுக்குத் தோன்றியது.
‘விழாவில் நடந்தவை எல்லாமே ஒரு வகையில் சடங்காகவும் கோமாளித்தனமாகவும் தானே இருந்தன’.

‘தலைமை உரையில் கா.சி., சுகர்ணியின் ‘வேர்கள்’ சிறுகதைத் தொகுதியைச் சிலாகித்தது, அவளைத் தூக்கோ தூக்கென்று தூக்கி வைத்துப் பேசியது. அவளது கதைகளில் சாதி பேசப்பட்ட போதும் – அவளது எழுத்துக்களில் அதன் தளர்ச்சி… சமூகத்தை ஒரு நெகிழ்ச்சியுடன் பார்க்கிற அவளது பார்வை என்று எல்லாமே தமிழுக்குப் புதிசு,.. புதிசு…’
‘அவர் மட்டுமல்ல, பின்னால் பேசியவர்களும் அவளது எழுத்தில் இல்லாததையும் பொல்லாததையும் கூறி அவளுக்கு ‘ஜாக்’ அடித்தார்கள்.’
‘ம்… எல்லாமே அலட்டலா… பொய்மை கலந்தவையா…?’
அவளது மனதின் கொதிப்பை, உள்ளெரியும் பொறாமைத் தகிப்பைச் சுபத்திராவால் கட்டுப்படுத்த முடியவில்லை.

‘அடி சுபத்திரா! சுகர்ணியைப் பற்றி, அவளது எழுத்துப் பற்றி உனது மதிப்பீடுதான் என்ன…? சொல்லேன்…’
அவளது உள் மனம் அலறியது.
‘சுகர்ணியா… அவளா…? தன்னை முன் நிறுத்தாத, தனது பிம்பத்தை பளிச்சிட வைக்கிற மாதிரி முயற்சி ஏதும் செய்யாத பெட்டை அவள். எனக்கு அவளைப் பிடிக்கும். அவள் நல்ல படைப்பாளி. சில நல்ல கதைகளையும் கவிதைகளையும் எழுதியிருக்கிறாள். இருந்தும் ஏன் என்ரை மனசு அவளை நினைத்ததும் படபடக்கிறது. அசூயைப்படுகிறது. எனக்கே எனக்கென்று இருக்கும் வசந்தனை அவள் வளைத்துப் போட்டிட்டாள் என்ற கேந்தியா…? வசந்தன் எனக்குக் கட்டுப்படுவானா…? என்ரை வசீகரங்களின் முன்னால் அவன் பலம் இழந்தவன். அவனது நடத்தைகளும் கள்ளப்பட்ட மனசும் அதைத் தானே பளிச்செனக் காட்டுகின்றன.’

நினைவுகள் தடைப்பட, அவள் நிலைக் கண்ணாடி முன்னால் வந்து நின்றாள்.
‘உன்ரை உதடுகளின்ரை சுழிப்பில என்னை மட்டுமல்ல, ஒரு ஒன்பது பேரையாவது சுண்டி இழுக்கிற வல்லபம் உனக்கு இருக்கு… ஒரு பெட்டை எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் நீ இருக்கிற… !’
நேற்று, சுபத்திராவைப் பார்க்க வந்த வசந்தன் அவளது திரண்ட உதடுகளைப் பார்த்த நிலையில், அவனது மன உளைச்சல்களை அட்சரம் தப்பாது அவள் புரிந்து கொண்டாள்.
‘வடுவா! என்னை… என்ரை பலவீனங்களை அறிந்து என்னைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுறையா…? இனியும் உன்னை அண்ட விடுவனா…? செக்ஸ் உரசல்களுக்கு நானும் – காதலுக்கும் ரசிப்புக்கும் அந்தப் பரதேவதை சுகர்ணியா…?. என்ரை சுகங்களுக்கு மேலால சுகர்ணியை பழி வாங்கவாவது உன்ரை நகர்த்தல்களுக்கு நான் வளைஞ்சு கொடுக்கத் தான் வேணும்…!’
‘விரும்பிற ஆளோட, அவனது ஆசைகளுக்கு இணக்கமா இருப்பது தவறா… பாவமா…? மன அழுத்தங்களில இருந்து தப்ப, இந்த perversion கூட உதவும் எண்டால் திருமணம் அது இதெண்ட தளைகள் ஏதும் வேணுமா என்ன…?’

 

வரம்பு மீறிய சிந்தனைகளால் தடுமாறியவள், மனதைச் சமனப்படுத்தப் பெரும் பிரயத்தனப்பட்டாள்.
எழுந்து போய் ‘ஸ்வரில்’ நின்றவள், ஆரச்சோரக் குளித்தாள். குளியலறையில் இருந்த அந்தப் பெரிய கண்ணாடியில் தன்னையே ஒரு தடவை பார்த்துக் கொண்டாள். அவளது உடலில் ஒவ்வொரு அங்கமும் தேன் ததும்பும் மலர்கள் போல அவளுக்குத் தெரிந்தன.
‘இந்தப் பெரிய கண்கள், இவற்றின் தீட்சண்யம் – காமத்தைக் கிளர்த்தும் அந்தக் குவிந்த உதடுகள், சிறிய செப்பு மார்ப்பகங்கள், வழுவழுப்பான இந்தக் கழுத்து, பச்சை நரம்புகளுடனான புடைப்புகள், அட அந்த நீண்ட கூந்தல் கூடத் தோகை மயிலின் சோபிதத்தை தழைய விடுகிறதே!’
‘இதை இந்தப் போதை தரும் உடலை வைத்தே வசந்தனை வளைத்துப் போட்டு விடலாமே! ஆண் துணை, அந்தத் தாற்பரியம் மிக்க ஸ்பரிசம் வசந்தனால் கிடைக்கும் போலத் தெரிகிறதே… இருந்தும் ஏதோ தயக்கங்களுடன் அவன் என்னை அணுகுவது போலவும் படுகிறது. இது… இது ஏன்…? சுகர்ணியின் பாலான அவனது ருசியும் தித்திப்புமா காரணம்?’

‘சுகர்ணி செத்தாள்…! அவவும் அவவிட காதலும்…! எனது சுட்டு விரலில் வசந்தன் சுருண்டு கிடப்பது அவளுக்குத் தெரியுமா…? தெரிஞ்சும் தெரியாத மாதிரி அவளது பாவனைகள். ஏமாற்றம் அடையப் போவது நானா… இல்லை அவளா…?’
‘சுகர்ணியை அவன் சடங்கு செய்யிற தெண்டாலும் செய்யட்டும். ஆனால் என்ரை மனதில சாடை மாடையாய் வரும் தடைகளையும் தயக்கங்களையும் தகர்ந்தெறிந்து நான் அவனுடன் உழாயடிவை பண்ண வேணும். அது பேரிடியாய் அவளின்ரை தலையில இறங்க வேணும்…’
‘ம்… இது என்னாலை முடியுமா…? முடியவேணும்.செக்ஸ் எண்டாலெந்த ஆம்பிள்ளைதான் பல்லிளிக்க மாட்டான்!பெரிய எழுத்தாளர் எண்ட அவளது பிம்பமும் மிதப்பும் சரிய, அவளது கண்டறியாத காதல் சின்னா பின்னப்பட வேணும்…’

குரூரமான சிந்தனைகளுடன் பாத்ரூமை விட்டு வெளியே வந்தவள், புதிதாகச் சலவை செய்த டெறஸ்சிங்கவுண் ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டாள். அடுக்களைப் பக்கம் நகர்ந்தவள், குளிரூட்டியில் இருந்து எடுத்த சில பாண் துண்டுகள், பட்டர், சீஸ் கட்டிகளைக் கொண்டு, தனது காலை உணவை முடித்துக் கொண்டாள். இரவு ஃபிளாஸ்கில் ஊற்றி வைத்திருந்த பால் கோப்பியையும் அருந்தினாள்.
காலைத் தினசரிகளைப் பார்க்கும் ஆர்வம் எதுவும் அவளுக்கு இருக்கவில்லை. சக்தி எவ்.எம்மை வானொலியில் திருகியவள், மிகுந்த சலிப்புடன் அந்தச் செய்தியைச் சிறிது நேரம் செவிமடுத்தாள்.

 

அப்பொழுது தெருக்கதவை திறக்கும் ஓசை கேட்டது. ரஞ்சித் வந்து கொண்டிருந்தான். அவன் இளம் கவிஞன். சுமாரான சில கவிதைகள் எழுதியிருக்கிறான். அவளது வட்டத்துள் முக்கியமான இளைஞன். அவனை விட இன்னும் ரூபன், சுரேஸ், மதங்கி, ஜூட் என்று ஒரு ஜால்ரா போடும் கும்பலே-அவளது நானைத் தடவிக் கொடுத்தபடி – அவளுக்கு இருக்கிறது. கொஞ்சம் விடயம் தெரிந்தவர்கள்,ஓரளவுக்கு நன்றாக எழுதுபவர்களை அவள் இயன்றவரை தவிர்த்தாள். ஏதாவது அவர்கள் தனக்கெதிராகச் சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் அவளுக்கு இருந்தது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அவளிடத்தில் பதில் என்று எதுவம் இருப்பதில்லை. விடை என்று ஏதாவது சொல்ல முயன்றாலும் அதைச் செவிமடுக்காத அவர்களது அசிரத்தை அவளுக்கு எரிச்சல் தருவதாயிருக்கும்.

உள்ளே வந்த ரஞ்சித் கைகளில் இருந்த சஞ்சிகைகள் சிலதை காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, கலைமுகம், ஜீவநதி – அவளிடம் தந்தான். அவை, அவன் அவளிடம் இரவல் பெற்ற சஞ்சிகைகள். அவளுடன் கதைத்தபடி இருந்தவன், தருணம் பார்த்து “பிரமிளின் கவிதைத் தொகுதியைத் தரமுடியுமா? பாத்து விட்டுத் தாறன்,” என்று கேட்டான்.
“புத்தகங்களை இரவல் தாறேல்லை. உமக்கெண்ட படியால தாறன்…!” என்றவள், அவனை, உதடுகள் ஜொலிக்க – விழுங்கி விடுவது போலப் பார்த்தாள். பார்த்தவள் கேட்டாள்:
“கோப்பி…?”
“இல்லை வேண்டாம்… குடிச்சிட்டன்…”
மீளவும் கேற்றடியில் சத்தம். திரும்பினாள். என்ன ஆச்சரியம்! சுகர்ணி வந்து கொண்டிருந்தாள்.
‘இவள் ஏன் இங்கு இப்பொழுது…!’
அவளில் விழுந்த பார்வையை விலக்கியவள், ‘உள்ளே வா…’ என்று கூட அழைக்காது, ரஞ்சித்துடன் தொடர்ந்து சல்லாபிப்பதில் சிரத்தை காட்டினாள்.
உள்ளே வந்த சுகர்ணி அவர்கள் இருவருக்கும் அருகாகக் கதிரையொன்றை இழுத்துப் போட்டபடி உட்கார்ந்து கொண்டாள்.
மற்றவர்களது கருத்துக்களை மேலோங்க விடாது, அடாவடியாகக் கதையாடும் சுபத்திரா, சுகர்ணி இருப்பதைக் கண்டு கொள்ளாத பாவனையுடன் தொடர்ந்து ரஞ்சித்துடன் சளசளத்தாள்.
தாரையாய் தவழும் அவளது பேச்சு, சுகர்ணிக்கு அதிக அளவு சிரிப்பை வரவழைத்த போதும் அவளது பேச்சில் இழைந்து வந்த தன் மீதான காழ்ப்பையும் தனது எழுத்தை எவ்வளவு குரோத உணர்வுடன் பார்க்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டாள். சுபத்திராவின் இந்தப் பேச்சு பொய்மையும் இட்டுக் கட்டலும் மிகுந்தவொன்று என்பது சுகர்ணிக்குத் தெளிவாகத் தெரிந்தது.

“ரஞ்சித், நேற்று ‘வேர்கள்’ வெளியீட்டு விழாவுக்கு வந்தனியா…?” – இது சுபத்திரா
“இல்லை மிஸ்…!”

“மிஸ் கிஸ்… எல்லாம் வேண்டாம் சுபத்திரா எண்டு சொல்லடா…!”
“ம்…”
“கூட்டத்தில் அந்த தொப்பை … கா.சி. என்ன மாதிரி இந்த அம்மாவைப் புகழ்ந்து தள்ளினார் தெரியுமா…? அவற்றை உரை பத்தாம் பசலித்தனமாய் இருந்தது. இப்ப ஆர் சாதி பறிறிப் பேசுகினம்! இறுக்கம் குலைந்த, தளர்ச்சி அதிதெண்டு பேத்தல் வேறை… ஆள் சரியான் ஞானசூனியம்”

“ம்…”
“அந்தத் தொகுதி பச்சைத்தண்ணித்தனமானது. எழுத்தெண்ணி எழுதும் பக்குவம் ஏதுமில்லை… செக்ஸ் எண்டதும் சுகர்ணி கூச்சப்படுகிற மாதிரி தெரியுது. சமூகநிலையில எத்தனை perversion எல்லாம் மேற்கிளம்புது… அது பற்றிப் பத்தியத்துக்குதானும் ஒரு கதை… ஒரு கதை கூட இல்லை…!”

“செக்ஸ் உங்களுக்குப் பிடிக்குமா மிஸ்…?”
கண்களைச் சுழற்றிக் கழுத்தை வெட்டியவள், உதடுகள் பளபளக்க கூறினாள்:
“பிடிக்கும், நிரம்பப் பிடிக்கும்.”
அவளது உடல் மொழி அவளது ரசணைகளோடு இணைந்து போவதைப் பார்த்துத் திகைப்படைந்த சுகர்ணி எழுந்து வெளியே வந்தாள். தனது ஸ்கூட்டியை ஸ்ராட் செய்தாள். கேற்றடியில் ஏதோ நிழல் போல் தெரிந்தது. திரும்பிப் பார்த்தாள்.
சுபத்திராதான்! அவளது கண்களில் மிளிர்ந்த எதிர்ப்பும் ஏளனமும் ‘இது போதுமா… இன்னும்…. இன்னும் வேணுமா…?,’ என்று கேட்பது போல் இருந்தது. சுபத்திராவின் உள்மனக் கொதிப்புச் சுகர்ணியை நடுங்க வைத்தது.
‘இதென்னபிறவி…’ என நினைத்த சுகர்ணி அவளது புறக்கணிப்புப் பாரமாய் அழுத்த ‘இவளிடம் இந்த விசரியிடம் வந்திருக்க வேண்டாமே…’ என்ற மனக்கொதிப்புடன் ஸ்கூட்டியில் மிதந்தாள். முகத்தில் படர்ந்த ஈரலிப்பான வாடைக்காற்றின் இதம் அவளை, அவளது நசுங்கிய உணர்வுகளை ஆசுவாசப்படுத்தியது.

 

 

ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் சுபத்திரா தவறாது சுகர்ணியைப் பார்ப்பதற்கு அவளது வீடுவரை வருவாள். மாலை ஐந்து மணிக்கு வந்தால், ஏழு மணி வரையும் அவளது சள்ளையாகவே இருக்கும். பொதுவாக இலக்கியம் பற்றிதான் அதிகம் பேசுவாள். அவளது பேச்சுகளுக்கு இடையே பல எழுத்துலகப் பிரபலங்களின் தலை உருளும். உப்புச் சப்பற்ற பேச்சென்றாலும் சுகர்ணி ஆர்வம் ஏதுமில்லாமல், விதியே என்று அதைக் கேட்டிருப்பாள்.

முல்லை இலக்கிய இதழின் ஆசிரியர் சீவகன், வர்க்க முரண் பற்றி அதிகம் எழுதும் இடதுசாரியும் கம்யூனிஸ்டுமான சில்வெஸ்டர், யாழ் இலக்கிய மன்றச் செயலாளர் பாலா என்று பலரும் அவளது கடைவாய்ப் பற்களில் சிக்குண்டு கதறக் கதற குதறி எடுக்கப்படுவார்கள். சுகர்ணியையும் அவள் விட்டு வைப்பதில்லை. “ரெடிமேட்டா வைத்திருப்பவைகளை… சிலமாற்றங்களுடன் கதையாக்கி விடுகிறாய்… அதை… அந்தக் கெட்டித்தனத்தை மெச்சத் தான் வேணும்…”

 

ஏதோ அதி ஞானம் பெற்ற போதிசத்துவர் போலப் பேசுபவள், திடீரெனத் தனது குரலை மாற்றி, ஒரு வகைச் சுய வெறுப்புடன் தன்னைப் பற்றியும் பேசத் தொடங்குவாள்:
“எனக்கு எல்லாருமே நச்சுத்தன்மை உடையவர்களாயும் பகைமை உணர்வு பாராட்டுபவர்களாயும் தெரியிறார்கள். இப்படி நினைக்கிறதும் பேசிறதும் சரியா…? தெரியேல்ல. எந்த ஒரு மனிசனிட்டடையும் கெட்டதோட, நல்ல பகுதியெண்டு ஒண்டும் இருக்கவே செய்யும். அது என்ரை மனசுக்குத் தெரியிறேல்லை… அப்படிப் பார்க்கிற பக்குவமும் எனக்கு ஏனோ இல்லை…”

“இந்த… என்ரை துரியோதனத்தனமும் புத்தியும் அந்த ஆக்களின்ரை கூடாத பகுதிகளின் பக்கமாகவே செல்லுது…. இப்ப இதெல்லாம் ஓர் உளச் சிக்கலாகி என்னைப் பாடாய்ப்படுத்துது. அதால மன ஆறுதலுக்கு சாந்தியகப் பக்கம் வேற போறன். அங்க தாற கவுன்சலிங் தான் என்னைச் சாந்தப்படுத்துது. டொக்டர் யோகனும் இது விடயத்தில எனக்கு உதவியா இருக்கிறார்.”
‘இது மட்டுமா? இன்னும் எத்தனையோ விடயங்கள் இருக்கு… அதை எல்லாத்தையும் வெக்கத்தை விட்டு இவளிட்ட சொல்லேலுமா…! இந்த செக்ஸ் விடயம் என்னமாய்ப் பாடாய் படுத்துது. எந்த முழிப்பான ஆம்பிளையைப் பார்த்தாலும் அவனோட படுக்க வேணும் போல ஆசை வருகுது…மனசளவிலதான் இந்தக் கூத்தெல்லாம். சரிசரி இதெல்லாம் இருந்திட்டுப் போகட்டுமே…! இருந்தால் என்ன குடியா முழுகிவிடும்…?’

 

மனதில் பச்சையாக எதேதோ சிந்தனைகள். திடீரென ஒரு விழிப்பு நிலைக்கு வந்தவள். சுகர்ணியைப் பார்த்துக் கேட்டாள் :
“உன்ரை ஆள் எப்படி…! அது தான்ரி வசந்தன். அது விடயத்திலஆள் உசாரா…?”
“என்னடி விசரி மாதிரிக் கதைக்கிற… அவனுக்கு என்னில விருப்பம். எனக்கு அவனில ஆசை இருக்கு. அதுக்காக… ! அவனுக்கு என்னை மட்டுமல்ல, உன்னையும் பிடிக்கும். உன்ரை அழகை வாயூறி ஊறி ஆராதிக்கிறான். பலவீனம்… பலவீனம் தான் இந்த ஆம்பிளையின்ரை தகுதியா…? பொறுமையாக இருந்து பார்ப்பம் – ஆற்றை பக்கம் அவன் சாயிறானெண்டு. என்ன கூத்தடிச்சாலும் உன்னைப் பற்றி இன்னொண்டும் சொன்னவன். கேக்க கஷ்டமா இருந்தது. சுபத்திரா கொழும்புப் பெட்டை, அங்க ஆரோட பழகினாளோ… படுத்தாளோ தெரியேல்லை… சரியான குடசைவ என்டு…”
“ஆ அப்படியா சொன்னான் தடியன்” குரல் அடைக்க எழுந்து கொண்ட சுபத்திரா மேலும் கதைத்தாள்.

 

“எனக்கும் அவனுக்கும் இடையில எதுவும் இல்லை… உன்னைத் தான் தேவதையா நினைக்கிறான்…. என்னோட இருக்கிற சந்தர்ப்பங்களிலெல்லாம் உன்னைப் பற்றியே ஏதேதோ புலம்பிறான்”
“ம்ம்… உன்னட்ட வளைஞ்சு கொடுக்காமல், எச்சில் படாமல்? எதுவித சேதாரமும் இல்லாமல் என்னட்டை வந்தால் சரி… அது எனக்குப் போதும்.”
“போடி… பச்சை பச்சையா உன்னாலையும் பேசமுடியுது…!”
“உன்னை விடவா… உன்ர செக்ஸியான பசப்பல்களை விடவா…? இது விடயமா… உன்னட்ட நான் நிறைய படிக்கவேணும்.”
இதமாகப் பேசும் இவளின் மன விகார வலிப்பு, எந்த நிமிடமும் வெளிவரலாம் என்ற பயம் சுகர்ணிக்கு இருக்கவே செய்தது.

“சுகா…! அது சரி கவிஞர் ஆதியின்ரை புத்தக வெளியீட்டுக்குப் போறயா? சைக்கிளில இணுவில் வரை என்னாலை போகேலாது. உன்ரை ஸ்கூட்டியில என்னையும் பிக்கப் பண்ணிறாயா…?”
“அதுக்கென்ன வாற ஞாயிறுதான… மூண்டு மணிக்கு உன்ரை வீட்ட வாறன். வந்து உன்னையும் கூட்டிக் கொண்டு போறன்…”
“சரி… குட்நைற்…” என்று கூறிய சுபத்திரா தனது சைக்கிளில் இலகுவாகத் தொற்றினாள்.தொற்றியவள் சுகர்ணியைப் பார்த்து இதமாக முறுவலித்தபடி விடை பெற்றாள்.
அவளது உதடுகளில் இருந்த அழகும் சுழிப்பும் இவளை நடுங்க வைத்தன.
அவள் வீதி விளக்கு வெளிச்சத்தில் தேவதை போல இருந்தாள்.
‘ஓம் ஓம் அவள் தேவதை தான்…! முரண்பாடுகளோடும் மனப்பிறழ்வுகளோடும் கூடிய அருமந்த தேவதை…!’
சுகர்ணியால் மனதில் கிளரும் சிந்தனைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

ஆதியின் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாபகம் வந்ததும் – சுகர்ணி சுபத்திராவின் வீடு பார்த்துப் புறப்பட்டாள். சுபத்திராவை ஸ்கூட்டியில் பிக்கப்பண்ணும் உத்தேசம் அவளுக்கு இருந்தது. குமாரசாமி வீதியில் இருக்கும் சுபத்திராவின் வீட்டை அடைந்ததும் – ஸ்கூட்டியை நிறுத்தி, ஹோர்ணை அழுத்தினாள். சுபத்திராவின் சிலமன் இல்லை.
‘வரும்படி கூறிவிட்டு இவள் எங்கே போயிருப்பாள்…?’ குழம்பியவள், பக்கத்து வீட்டில் விசாரித்தாள்.
“சுபத்திரா ரீச்சரா…? ஆரோ ஒரு அண்ணாவோட மோட்டார் சைக்கிளில போனாவே…!”
பத்துப் பன்னிரெண்டு வயது மதிக்கத் தக்க ஒரு பெண் குழந்தை அந்தச் செய்தியை இவளுக்குக் கூறியது.

சுபத்திராவின் சுபாவத்தை நன்றாகவே தெரிந்து வைத்திருந்த சுகர்ணி அதிகம் அலட்டிக் கொள்ளாது, இணுவில் நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தாள்.
இணுவில் மத்திய கல்லூரியில் தான் வெளியீட்ட விழா நடந்தது. இரண்டாவது மாடி. ஏறியவள், ஹோலின் வடக்குச் சாய்வில் – பல ஆண்களின் நடுவில் – சுபத்திரா நிற்பதைக் கவனம் கொண்டாள். எல்லாருமே அவளை விடவும் இளையவர்களாக இருந்தார்கள்.
ஆண்களின் வாசம் சுபத்திராவுக்குப் பிடிக்கும் என்பது சுகர்ணிக்குத் தெரியும். ‘அதுக்காக இப்படியா…! போற வாற இடத்திலெல்லாம் வழிய வழிய’ கண்களைச் சுழற்றிய சுகர்ணி, அவர்கள் நின்ற பக்கம் பார்த்தாள். அந்த இளசுகள் எல்லாம் – சுபத்திரா ஏதோ அலட்ட குபீர் எனச் சிரித்தன. அந்தக் கும்பலில் வசந்தனும் இருந்தான். அவனும் விழுந்து விழுந்து சிரிப்பது போல இருந்தது.
‘வெட்கம் கெட்ட சென்மம்…’ மனம் கொதிக்க, சுகர்ணி வசந்தனைச் சுட்டெரிப்பது போல் பார்த்தாள். அவளது பார்வை பட்டதும் -வாலைச் சுருட்டிய வாகில் வசந்தன் அவள் பக்கமாக வந்தான்.

“என்னடா அந்தச் சுகுண சுந்தரியை நீ தான் ஏத்திக் கொண்டு வந்தனியா…?”
“………..”
“சொல்… சொல்லடா, என்னை வரச் சொல்லிப் போட்டு … உன்னோட வந்திருக்கிறாள்.”
“ இல்ல… ஃபோன் பண்ணினவள் அது தான் போய் ஏத்தினனான்…”
“எப்ப போனனி”
“ஒரு மணி இருக்கும். லஞ்சும் அவளோட தான்…!”

“அதுக்குப் பின்னால வேறை என்ன விசேடம்…ஸ்பெசலா எதாவது…?”
“லஞ்செடுத்ததும் அவள் அருகாக வந்து, செல்லப் பூனை மாதிரி உரசினாள்”.
“இது வேண்டாம், சுகர்ணிக்கு துரோகமா நடக்க என்னால ஏலாது… மாட்டன் எண்டு சொன்னன்;”
“ ‘போடா பொண்ணையா… ஆம்பிளையளில கற்புக்கு அரசன் நீ மட்டும் தான்ரா…!’ எண்டு சொல்லி என்ரை நானைக் காயப்படுத்தினா…”
“அப்ப என்ரை ராசனுக்கு ஆம்பிளை ரோசம் பொத்துக் கொண்டு வந்ததாக்கும்.”
“இல்லை”
“சொல்லடா”

“………….”
“ம்…கதை…!”
“அருகில் வந்தவள், அழுத்தமா மூச்சுத் திணறிற மாதிரி என்னை முத்தமிட்டாள். நான் சுதாரிச்சுக் கொண்டு எழுந்திட்டன். உனக் கொண்டும் துரோகம் பண்ணேல்லை…”
“எந்த தேவடியாளெண்டாலும் முத்தங் கொடுக்க உனக்கு நான் லைசன்ஸ் கொடுத்திருக்கிறனா…?”
“இல்லை…”
“அப்ப எச்சில்பட்டு வந்து நிக்கிற…”
“அப்படிக் கதையாதை…. என்ரை குற்றம் ஏதுமில்லை. அவள் தான் வெக்கம் இல்லாமல் …ம்…நாம கெதியில சடங்கு முடிக்கிறது நல்லம்.”
“சடங்கு முடிச்சா மட்டுமென்ன… அவளிட்ட நீ போகமாட்டயெண்டு என்ன உத்தரவாதம்…”
“சத்தியமா நான் இனி அவளைப் பார்க்க மாட்டன். பார்த்துப் பழக மாட்டன்.பேசமாட்டன். நான் இல்ல எண்டா என்ன… இன்னொருத்தன் அவளுக்கு கிடைக்காமலா போயிடுவான்.”
“ ஆர் ரஞ்சித்தா…?”
“ இது உனக்கு…. உனக்கெப்படித் தெரியும். வார்த்தைக்கு வார்த்தை ரஞ்சித் … ரஞ்சித் எண்டு உருகிறதும் அவனது கவிதைகளை அதி அற்புதமெண்டு புளுகிறதும் தாள முடியயேல்லை. ஒரு ஆரம்பக் கவிஞனின் சொற் சிலம்பம் மிக்க அபத்தங்கள் அவனது கவிதைகள். அவனது கவிதைகளோட அவனது இளமையும் பௌருஷமும் அவளுக்கு நிரம்பப் பிடித்தமாய் இருக்கிறது.
அவனது பேச்சுக்கு ம்… கொட்டிய சுகர்ணி, வசந்தனோடு ஹோலில் வசதி பார்த்து உட்கார்ந்து கொண்டாள்.

சற்றுப் பின்னால் சுபத்திரா தனது இளசுகளுடன் இருந்தாள். நடுநாயகமாக ரஞ்சித் இருந்தான்.
கூட்டங் தொடங்கிய பின்னரும் வசந்தனின் மொறமொறப்பு அடங்கிய பாடாகத் தெரியவில்லை.
“பேசாமலிரடா…! அரங்கில நடக்கிறதக் கவனி.”
“ம்…”
தலைமை உரை முடிந்ததும் – அடுத்து நயப்புரை இடம் பெற்றது. ஆதியை நல்ல கவிஞராக இனம் கண்ட எஸ்.பி., கவிதைகள் புதிதாக, அதி புனைவுத்தன்மையுடன் இருப்பதாகக் கூறினார். கவிஞனின் அசலான personality தனித்துவத்தை வெளிக்கொணர்வதாக அவை இருப்பதாகவும் சொன்னார்.
அதை ஆட்சேப்பிப்பது போல சுபத்திரா இருந்த பக்கத்தில் இருந்து குரல்கள் எழுந்தன. யார் கதைக்கிறார்கள், யார் கதைக்காமல் இருக்கிறார்கள் என விளங்கிக் கொள்ள முடியாத குழப்பநிலை.

 

“சுபத்திரா! are you crazy, will you please stop talking எங்களை எரிச்சல்படுத்தாத பிள்ளை!”
தலைவர் தான் அவளைப் பார்த்துக் கூறினார்.
கோபத்துடன் எழுந்த சுபத்திரா, ரஞ்சித்தின் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு, கூட்டத்தை விட்டு வெளியேறினாள்.
பலி ஆடு மாதிரி ரஞசித் அவளுடன் இழுப்பட்டபடி போனது சுகர்ணிக்கு எதுவித ஆச்சரியத்தையும் தரவில்லை. ஆனால் அவளோடு இருந்த ஒட்டொட்டிகள் அதன் பின்னர் மௌனமாகிப் போனது. இவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

 

கூட்டம் முடிந்து வெளியே வந்த சுகர்ணி, வசந்தனைப் பார்த்துச் சொன்னாள்,
“ ஆதியின்ரை கூட்டத்தில கலந்து கொள்ள – தன்னைப் பிக்கப் பண்ணிறத்துக்கு – என்னையும் வரச் சொல்லி உன்னையும் வரச் சொல்லி இருக்கிறாள். ஆனால் கூட்டத்தில என்னைக் கண்டு கொண்டதாகவே தெரியேல்லை. இதெல்லாம் என்னடா…? என்ன கூத்து”.
“உனக்குத் தெரியாததா…? அவள் ஒரு சின்ன மேளம். அதின்ர உச்ச கட்டம் தான் அவளின்ர அந்த வெளிநடப்பு”
“ஆட்டக்காரி… சரியான திமிர் பிடிச்ச ஆட்டக்காரி.”
“சரிசரி விடு சுகர்ணி…!” கெஞ்சுவது போல வசந்தன் அவளைப் பார்த்தான்.
சுகர்ணியின் வீடு வரை வழித்துணையாக வந்த வசந்தன், அவளைப் பின்னர், சந்திப்பதாகக் கூறி விடை பெற்றான்.
வசந்தன், வீடு வரை வந்து விட்டுவிட்டுப் போனது சுகர்ணியின் அம்மாவுக்குப் பிடித்திருந்தது.

“ ஆரது வசந்தனா?”

“ ஓ! அவன்தான்”
சுகர்ணி தந்த பதிலில் நிரம்பிய பிரியம் இருந்தது.

 

ஆவணி மாதம் இரண்டாம் நாள் வசந்தன் சுகர்ணியினது திருமணம் நடந்தது. பெரிய அளவு ஆயத்தமேதுமில்லாமல், துர்காமணி மண்டபத்தில் நடந்த அந்த திருமணத்துக்கு கையடக்கமான உறவினர்களும் நண்பர்களும் வந்து தம்பதியினரை வாழ்த்தினார்கள்.

திருமணப்பதிவு சுகர்ணியின் வீட்டில் நடந்தது. திருமணத்துக்கு வருகை தராத சுபத்திரா ரஞ்சித்துடன் பதிவுத் திருமணத்துக்கு வந்து இருந்தாள். திருமணப் பரிசாக சுபத்திரா ஜெயமோகனின் சில நூல்கள் அடங்கிய பார்சலை சுகர்ணிக்குத் தந்தாள். அதில் அவள் படிக்காத வெள்ளை யானையும் இருந்தது. முடிந்தால் இன்று இரவே அந்த நாவலைப் படிக்க வேணும் என நினைத்துக் கொண்டாள். அந்த நினைப்பே அவளுக்கு ஒரு கள்ளச் சிரிப்பை வரவழைத்தது.

திருமணப்பதிவு ஆரவாரம் அடங்கி ஒதுக்கமாக இருந்த தம்பதிகளைப் பார்த்து சுபத்திரா விடை பெற்றுக் கொண்டாள். அப்பொழுது ரஞ்சித்தின் வலது கரம் சுபத்திராவின் இடையைத் தழுவியபடி இருப்பதைக் கண்ட சுகர்ணி, ஆச்சரியத்துடன் வசந்தனைப் பார்த்தாள்.

“கூச்ச நாச்சமில்லாதவர்கள். ரஞ்சித் இப்ப சுபத்திரா வீட்டிலதான். அடுக்கிடை படுக்கிடை. அவளோடு இருந்து தான் பல்கலைக்கழகத்துக்குப் போறான். அவனது செலவுகளையும் அவளே தான் பார்த்துக் கொள்ளுகிறாள்”.

“ so they are living together……”
“ஓ ! யேஸ்…”
“அப்படி நாமளும் இருந்திருக்கலாம்! எதுக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டி இராது இல்லையா…?”
“ போடி கழிசடை!”
அதனைக் கேட்ட அவள் குலுங்கிச் சிரித்தாள். அவனும் சிரித்தான். அவர்களது அந்தச் சிரிப்பின் தழுவல் அங்கு சிலிர்த்துப் பரவியது.

 

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment