Home » ஆளுமை » தோழர் விசுவானந்ததேவன் 1952-1986: – நூல் பற்றிய சில எதிர்வினைக் குறிப்புகள் -எஸ்.கே. விக்னேஸ்வரன்

 

தோழர் விசுவானந்ததேவன் 1952-1986: – நூல் பற்றிய சில எதிர்வினைக் குறிப்புகள் -எஸ்.கே. விக்னேஸ்வரன்

 

 

 

தோழர் விசுவானந்ததேவன் அவர்கள், அவருடன் கூடச் சென்ற சகதோழர்களுடன் சேர்த்துக்  கடத்திச் செல்லப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றின் முக்கியமான, ஆற்றலும் வீச்சும் மிக்க ஒரு ஆளுமை அவர். நாட்டின் பிரதான பிரச்சினையாக தீவிரமடைந்து வந்த தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையில், இடதுசாரிய இயக்கங்கள் காட்டிவந்த அணுகுமுறையை தீவிரமாக விமர்சித்து வந்தவர் அவர்.  பாரம்பரிய தமிழ்ப் பாராளுமன்றக் கட்சிகளின் உணர்ச்சி அரசியலை தீவிரமாக விமர்சிக்கும் இடதுசாரி இயக்கம், இந்த மக்களின் நியாயமான பிரச்சினைக்குக் குரல் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர். தான் சார்ந்திருந்த இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ), இந்த மக்களின் உரிமைகளுக்கான ஜனநாயகப் போராட்டத்தினை தலமையேற்று நடாத்தவேண்டும் என்று தீவிரமாகச் செயற்பட்டவர்; இதன் பலனாக, ’தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற அமைப்பு உருவாகக் காரணமாக இருந்தவர். இன்னொரு வகையில் சொல்வதானால், தமிழ் மக்களது தேசிய உரிமைக்கான போராட்டத்தை, வரலாற்றில் முதன் முதலாக, இலங்கை இடதுசாரிய இயக்கமொன்று தனது முக்கிய அரசியல் வேலைத்திட்டமாகக் கொண்டு செயற்படுவதற்கான நிலமை உருவாகுவதற்கும்  காரணமாக இருந்தவர் அவர்.

 

1983 இனக்கலவரத்தை அடுத்து மாறிய அரசியற் சூழ்நிலை காரணமாகவும், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் செயற்பாடுகள் மிகவும் மந்த நிலையில் இருந்ததாலும்,  அதை ஒரு செயல்வேகம் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தோழர் விசு, அதன் இரண்டாவது  தேசிய மாநாட்டைக் கூட்டவைத்தார். அத்துடன், இந்த மாநாட்டில், அதன் பெயர், தமிழீழ தேசிய விடுதலை முன்னணி என மாற்றம் செய்யப்பட்டு, அது ஒரு புரட்சிகர தேசிய விடுதலை இயக்கமாக வடிவங்கொள்ளவும் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார். வரலாற்றில் இத்தகைய முக்கிய பங்களிப்பை ஆற்றிய தோழர் விசுவானந்த தேவன், விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட பலநூறு போராளிகளில் ஒருவராக மட்டும் பட்டியலிடப்படும் நிலை நிலவுவது எமது காலத்தின் துயர். தமது இலக்கின் மீதான பற்றுறுதி, செயல் வேகம் என்பவற்றுக்காக மட்டுமல்லாமல், வரலாற்றில் தான் நிற்கும் இடம் என்ன, தான் செய்ய வேண்டியது என்ன என்பவற்றைத் தெரிந்து கொண்டு, அதற்காக செயற்படுவதில் உறுதியாக நின்ற ஒரு போராளி என்றவகையில், அவர் வரலாற்றில் மற்றைய போராளிகளிலிருந்து தனித்து நிற்கிறார். தனது செயலாலும், அர்ப்பணிப்பாலும் தனக்குள்ளே துடிப்பான ஒரு தலைவனது, வழிகாட்டியினது ஆற்றலையும், ஆத்ம பலத்தையும் கொண்ட ஒருவராக விளங்கியவர் அவர்,. ஆம், அவர் ஒரு தலைவராக மட்டுமல்ல, தானே ஒரு இயக்கமாகவும் இருந்தார்!.

 

அவர் காணாமற்போய் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பற்றிய நினைவுகூரல் நடாத்தப்படுவதும், அவர் பற்றிய ஒரு நூல் வெளியிடப்படுவதும் மிகவும் முக்கியமான விடயங்கள். அப்படி ஒன்றை செய்யவேண்டும் என்று நினைத்துச் செயற்பட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர் நினைவாக வெளியிடப்படும் ஒரு நூல், அவரது, ஆளுமையை, அவரது வரலாற்றுப் பங்களிப்பை, வரலாற்றில் அவரது முக்கியத்துவத்தை முழுமையாக வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும். ஆனால் வெளியிடப்பட்ட அந்த நூல் அதிர்சிதரும் விதத்தில், அதிகமாக ஜனநாயக முன்னணிக்கு முன்னான காலம் பற்றிப் பேசியதே ஒழிய, அதற்குப்பின்னான அவரது செயற்பாட்டின் முக்கியமான எந்த விடயங்களையும் தரவில்லை என்பது மட்டுமல்லாமல், அவர் கொண்டிருந்த கருத்துக்களை எள்ளல் செய்யும் கருத்துக்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இந்தக் கருத்துக்கள் தொடர்பான ஒரு எதிர்வினையாகவே இந்தக் கட்டுரை அமைகிறது.

௦௦௦௦௦

நூல் பற்றிய கட்டுரையினுள் புகுவதற்கு முன்பாக, சில முக்கியமான விடயங்களை இங்கு பதிவுசெய்வது அவசியம் என்று நினைக்கிறேன். தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி 1975 இல் உருவாக்கப்பட்டது என்று சொல்லப்பட்ட போதும், அதன் முதலாவது தேசிய மாநாட்டு அறிக்கை 1980 இல் தான் திருத்தப்பட்டு வெளியிடப்படுகிறது. உண்மையில், அதன் பிறகுதான் அது பரவலான செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்குகிறது. அரசியல் பிரச்சார வகுப்புக்கள், கலை இலக்கியம் சார் செயற்பாடுகள், அரசியல் விமர்சன நாடக மேடையேற்றம், துண்டுப் பிரசுரங்கள் வெளியிடல் என்று அதன் நடவடிக்கைகள் விரிவடைகின்றன. ( தோழர் விசு அவர்கள் எழுதிய NLFT அமைப்பின் சுருக்க வரலாறு இலக்கு இதழ் 4 இல் வெளியியாகியிருந்தது. மேலதிக விபரங்களை அதில் காணலாம். முழு இலக்கு பிரதிகளும் படிப்பகத்தில் முழுமையாகப் படிக்கக் கிடைக்கிறது: http://padippakam.com/index.php?option=com_content&view=article&id=219:-04&catid=52:nlft&Itemid=53). ஆயினும், அதன் செயற்பாடுகள் மிகவும் மந்தகதியிலேயே நடந்துகொண்டிருந்தன. செயற்படும் தோழர்கள் மத்தியில் ஒரு புது உத்வேகத்தையும், கருத்துப் பலத்தையும் ஏற்படுத்த வேண்டுமென்பதை உணர்ந்த தோழர் விசு அதற்கான பல வழிகளிலும் முயன்றார். அமைப்பின் உட்கட்சிப் பத்திரிகையாக “பயணம்” என்று ஒரு இதழை வெளியிட்டார், ஆயினும் இன்னொரு தேசிய மாநாட்டை நடாத்தாமல் போராட்டத்தை மேலும் வேகமாக முன்னெடுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தபின், அதற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் தான், 1983 ஆடியில்,மீண்டுமொரு பாரிய இனப்படுகொலை கொழும்பில் வெடித்தது.  இந்த நிகழ்வு, போராட்டத்தின் மீதான ஆர்வத்தையும் அதன் அவசியத்தையும் பற்றிய அவரது உணர்வு மேலும் வலுப்பெறக் காரணமாக அமைந்தது. இந்த நிலையில், 1983 செப்டம்பர் மாதம், தமிழ்மக்கள் ஜனனாயக முன்னணியின் அர்ப்பணிப்புமிக்க தோழர்ககளைக் கூட்டிய, அதன் தேசிய மாநாட்டுக்கு முதல் நாள் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், ஜனநாயக முன்னணியில் செயற்பட்டுவந்த பல புதிய உறுப்பினர்களுடன், (இவர்களில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளடங்குவர்), மேலும் சில இடது சாரிய, மாக்சிய லெனினிய மாவோயிச சிந்தனை கொண்ட புதிய உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

 

இந்தச் சந்திப்பு இலங்கையின் இடதுசாரிய வரலாற்றில் உண்மையில் முக்கியமான ஒரு சந்திப்பாகும். இந்தச் சந்திப்புக்குத் தலைமை தாங்கிய தோழர் விசு, ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் இடைவழி சமரசமற்ற உறுதியான வளர்ச்சிக்கும், உழைக்கும் மக்களின் தலமையிலான போராட்டமாக அது வளர்த்தெடுக்கப்படுவதற்கும், அதன் தொடர்ச்சியான வெற்றிக்கும் புரட்சிகரக் கட்சி ஒன்றின் அவசியம் பற்றி வலியுறுத்தினார். இலங்கையில் நிலவும் சமூக முரண்பாடுகளில் பிரதான முரண்பாடாக கூர்மை பெற்றிருப்பது தேசிய இன முரண்பாடே என்று வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் விளக்கிய அவர், புரட்சிகரக் கட்சி ஒன்று இல்லாமல், ஒரு புரட்சி சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார். இலங்கையில் உள்ள எந்த இடதுசாரியக் கட்சியும், புரட்சிகர அரசியலைப் பேசவில்லை, அப்படிப் பேசுபவர்களும், இன முரண்பாட்டை பிரதானமான முரண்பாடாக அடையாளம் காணவில்லை. ஆனால் இதைப் பிரதான முரண்பாடாக அனுபவரீதியாக புரிந்து கொண்ட தேசியவாத சக்திகள் தேசிய விடுதலை, தேசியம் என்ற சொற்களுக்கே உரிய அரசியல் அர்த்தங்களைப் புரியாதவர்களாக, விடுதலைப் போராட்டம் என்று செயற்படத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு, இந்திய அரசு இராணுவ பயிற்சி வழங்கப் போவதாக அறிவித்தும் இருக்கிறது. அந்த அரசின் முகவர்கள் இளைஞர்களைத் திரட்டித் தருமாறு இங்குள்ள மற்றைய ஆயுதக் குழுக்களை கேட்கின்றனர் என்ற தகவலை தெரிவித்து, இது மிகவும் ஆபத்தான ஒரு நிலை, எமது மக்களின் போராட்டத்தை இல்லாமலாக்கும் நடவடிக்கை என்று தெரிவித்தார்.

 

 தனது சொந்த நலனுக்காக இந்தியா விரிக்கும் இந்த வலைக்குள் நாம் விழாமல்,  எம்மக்களது போராட்டத்தை நடாத்த வேண்டுமானால், நாம் மாக்சிய, லெனினிச, மாவோசேதுங் சிந்தனை வழியிலான ஒரு புரட்சிகரக் கட்சியின் வழிகாட்டலில், எமது போராட்டத்தை நடாத்த வேண்டும். முழு இலங்கைக்கான புரட்சிக்கான ஆரம்பப் புள்ளிக்குரிய  ‘பலவீனமான கண்ணி’ இங்குதான் இருக்கிறது என்பதையோ, இலங்கையில் ஒரு புரட்சி நடப்பதானால் அது வடக்குக் கிழக்கிலிருந்தே ஆரம்பிக்க முடியும் என்பதையோ இன்றைய எந்த இடதுசாரிக் கட்சிகளோ, பேரினவாத மாயைக்குள் சிக்கியுள்ள பெரும்பான்மை மக்கள் மத்தியிலுள்ள உழைக்கும் மக்களோ உடனடியாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லை. ஆகவே இந்தப்பணி நமது கைகளில் தான் இருக்கிறது. நாம் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்து, தமிழீழ மக்கள் குடியரசை நிறுவும் இலக்கில் பயணிப்பது தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவை என்று அவர் அங்கு தெரிவித்தார். இந்தக் கருத்து விவாதிக்கப்பட்ட போது, இன்றைய நிலையில், உழைக்கும் மக்களின் தலமையிலான தமிழ் மக்கள் அனவரையும் இணைக்கும் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க, முதலில் அவசியமானது ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியே. அதை உருவக்கி அதன் ஒரு முன்னணியாக தேசிய விடுதலைக்கான ஒரு முன்னணியை நாம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இந்தப் பின்னணியில், அந்தச் சந்திப்பு, தமிழீழ கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) என்ற கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான அமைப்புக் குழுவின் முதலாவது மாநாடாக நடாத்தப்பட்டது. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் முக்கியமான மூன்று விடயங்களை இங்கு குறிப்பிட்ட வேண்டும். ஒன்று கம்யூனிஸ்ட் கட்சியை உடனடியாகப் பகிரங்கப் படுத்தப்படுவது நல்லதல்ல, கூடாது என்பது. குறிப்பாக, இந்தியா, இலங்கை இனவாத அரசு, தமிழ் இனவாத,தீவிர குறுந்தேசியவாத சக்திகள் இதை, தமது நலனுக்கு சாதகமாக திசை திருப்பி, பேரழிவை ஏற்படுத்தலாம். எப்படி கம்பூச்சிய கம்யூனிஸ்ட் கட்சி இரகசியமாகப் பேணப்பட்டு, கமறூஜ் விடுதலை இயக்கம் முன்னணியில் விடப்பட்டதோ அதே போலவே இங்கும் செய்யப்பட வேண்டும். அதற்கு கம்யூனிஸ்ட் கட்சி பின்னணியிலிருந்து, தேசிய விடுதலைக்கான  முன்னணியை வழிநடத்த வேண்டும். அதற்கேற்ற விதத்தில், கட்சி உறுப்பினர்கள்  முன்னணியின் தலமைப் பொறுப்புக்களில் பெரும்பான்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இரண்டாவது, மக்கள் படைக்கான முன்னணியாக அமையும் புரட்சிகர இராணுவத்தின் அவசியம். அதன் தலைமைப் பொறுப்பும் கட்சியால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்டதாக அமைய வேண்டும். மூன்றாவது, எமது முன்னணியால் நடாத்தப்படும் போராட்டம், ஒடுக்கப்படும் எமது மக்களின் விடுதலைக்கான ஒரு தேசிய விடுதலைப் போராட்டம். இது பிற இன மக்களுக்கோ குறிப்பாக இனவாத மாயைக்குள் வீழ்ந்திருக்கும் சிங்கள மக்களுக்கு எதிரானதோ அல்ல. மாறாக அவர்களுக்கு, அவர்களின் நலன்களுக்கு ஆதரவாக செயற்பட்டு அவர்களை எம்பக்கம் வென்றெடுக்க விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான சக்திகளாக மாற்ற நாம் போராட வேண்டும். முன்னணிக்குள் இது மிகவும் சவால் மிகுந்த போராட்டமாக இருக்கும். இதற்கு முன்னணியில் செயற்படும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் முன்னணிக்குள் தீவிரமாக செயற்பட வேண்டி இருக்கும்.

 

இந்த அடிப்படையில், நடந்த கட்சியின் மாநாட்டில் கட்சி அமைப்புக்குழு ஸ்தாபிக்கப்பட்டதுடன், அதன் மத்திய குழுவும் தெரிவு செய்யப்பட்டது. அங்கிருந்த அனைவரும் கட்சி உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். மறுநாள்  நடக்கவிருந்த  தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாட்டில், சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையின் வரைபு, அதன் மத்திய குழுவுக்கான உறுப்பினர்களாக யாரைப் பிரேரிப்பது, இராணுவ அமைப்புக்கான தலைமை உறுப்பினர்களை பிரேரிப்பது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.மறுநாள் நடைபெற்ற ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாட்டில், கட்சி உறுப்பினர்களை விட மேலும் பல தோழர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். முன்கூட்டிய  கட்சி மாநாட்டுத் தீர்மானப்படி அனைத்தும் நடைபெற்றன. தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற பெயர், தமிழீழ தேசிய விடுதலை முன்னணி எனப் பெயர்மாற்றமும் நடைபெற்றது. அதன் மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு, முன்னணிக்கான உடனடி, மற்றும் நீண்டகால திட்டங்கள் பற்றி விவாதித்து உரையாடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

 

பின்னர் முன்னணியின் மத்தியகுழு கூடி நடைமுறை சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த முடிவுகள் எடுக்கப்பட்ட கூட்டத்தில் தோழர் மோகன் (விசு) முன்வைத்த கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. அவற்றில் பிரதானமானதும் முக்கியமானதுமான கருத்துக்களாக, தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் போராட்டம் முழுக்க முழுக்க மக்கள் யுத்தப் பாதையிலேயே செல்லும் என்பதுவும், இந்திய அரசால் வழங்கப்படும் பயிற்சிகளுக்குள் எமது தோழர்களை இராணுவப் பயிற்சிக்கு அனுப்புவது ஆபத்தானது மட்டுமல்ல அது மக்கள் யுத்தப் பாதைக்கு எதிரானது என்பதுவும், தமிழீழ மக்கள் குடியரசு என்பது ஒரு சோசலிச சமுதாயத்தை நோக்கிய எமது பயணத்தின் முதற்படி என்பதுவுமாகும். அந்த அடிப்படையில், ஆயுதமேந்திய மக்கள் யுத்தப் போராட்டப் பயணத்திற்கான புரட்சிகர மக்கள் படையை கட்டியெழுப்புவதற்கு அவசியமான அடிப்படை இராணுவப் பயிற்சிகளை இந்திய முற்போக்குப், புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ள அவர்களுடன் தனக்குள்ள தொடர்பு காரணமாக ஆவண செய்ய தான் சிலகாலம் இந்தியா செல்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். கூடவே இந்தப் பயணத்தின் போது, மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் அறிக்கையையும் முன்னணியின் உத்தியோக பூர்வ ஏடான “இலக்கு” பத்திரிகையையும் இந்தியாவிலேயே அச்சிட்டு எடுத்துவருவதற்கான ஒழுங்குகளை தான் மேற்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

 

மத்திய குழுவின் ஏகமனதான ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த முடிவுகளின் படி அவருக்கு உதவியாக இன்னும் இரு தோழர்களுடன் இந்தியா சென்றார். சென்ற ஒருமாத காலத்துள் அங்கிருந்து அரசியலறிக்கையும் முதலாவது இலக்கு இதழும் வந்து சேர்ந்தன. இவற்றின் அடிப்படையில், தமிழீழ தேசிய விடுதலை இயக்கத்தின் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்படத் தொடங்கின. வடக்குக் கிழக்கு முழுவதும் பரவலான முறையில், அரசியல் பிரச்சாரக் கூட்டங்கள் நடாத்துவது, ஆர்வமுள்ள இளைஞர்களை கிராம மட்டக் குழுக்களாக அமைப்பது, அவர்களுக்கு உலக அரசியல், இலங்கை அரசியல் வரலாறு, சமூகம், மக்கள் போராட்டம் மற்றும் சமகால நிகழ்வுகள் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட வகுப்புக்கள் என்பன நடாத்தப்பட்டன. சமகால அரசியல் பிரச்சினைகள் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் வெளியிடல், சுவரொட்டிகள் ஒட்டுதல், இலக்கு பத்திரிகையையும், முன்னணிச் செய்தியையும் பரவலாக விற்பனை செய்தல் என்று முன்னணியின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. ஆதிக்கத்தில் இருக்கும் தவறான, தேசியம் தொடர்பான இனவாதக் கண்ணோட்டம், சுத்த இராணுவக் கண்ணோட்டம் என்பவற்றைப் பற்றியும் இவற்றின் அடிப்படையில் செயற்படும் பிற அமைப்புக்களின் தவறுகளை விமர்சித்தும், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை,அரசியல் உரிமை,சுயநிர்ணய உரிமை, பிரதான எதிரியான சிங்கள பேரினவாத அரசினை அம்பலப் படுத்துதல் என்பவற்றினூடாக முன்னணியை கட்டி எழுப்புவதே அப்போதைய பிரதான வேலைத்திட்டமாக இருந்தது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த இயக்கங்களிலிருந்து, அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் முன்னேறிய கருத்துக்களைக் கொண்ட ஒரு அமைப்பாக இருந்த தமிழீழ தேசிய விடுதலை முன்னணி விரைவிலேயே மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும் ஒரு அமைப்பாக வளர்ச்சி கண்டது.

 

இவைதான் தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் ஆரம்ப நடவடிக்கைகளாக அமைந்திருந்தன. இன்று சில மரபுசார் இடதுசாரி இயக்கத் தோழர்கள் சொல்வது போல தமிழீழ தேசிய விடுதலை முன்னணி ஒன்றும் மார்க்சியத்திலிருந்து குறுந்தேசியவாதத்துக்குப் பலியானவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. அதனிடம் பின்நாளில், முன்னணியே அடையாளம் கண்டுகொண்ட சில கோட்பாட்டு மற்றும் நடைமுறை அரசியல் நடவடிக்கை சார் தவறுகள் இருந்தன என்ற போதும், நிச்சயமாக அவை ஒன்றும் குறுந்தேசியவாதத்தின் அடியான தவறுகள் அல்ல என்பதை, முன்னணியின் அரசியல் அறிக்கை, அதன் பத்திரிகைகள் என்பவற்றைப் படிக்கும் எந்த ஒருவராலும் புரிந்துகொள்ள முடியும்.

000000

 

இப்போதைக்கு இந்த வரலாற்றை இந்தளவில் நிறுத்திவிட்டு, நூலில் வெளியாகியுள்ள கட்டுரைகளில், தோழர் விசுவானந்த தேவன் பற்றியும், தமிழீழ தேசிய விடுதலை முன்னணி பற்றியும் நூலிலுள்ள கட்டுரைகள் முன்வைக்கும் விமர்சனங்கள் தொடர்பாக நோக்கலாம். அதற்கு முன்பாக ஒரு முக்கியமான விடயத்தை இந்த இடத்தில் பதிவு செய்வதும் முக்கியம் என்று தோன்றுகிறது. மாக்சிய லெனினிய சிந்தனையின் அடிப்படையில், மக்கள் யுத்தப் பாதையில் ஒரு புரட்சிகர தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான விடுதலை முன்னணியைக் கட்டி எழுப்பிய ஒரு தோழரின் நினைவாக, அவர் மறைந்து 30 ஆண்டுகளுக்குப் பின் முதன்முதலாக எழுதப்படும் ஒரு நூலில், பதியப்படும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. ஒரு ஆவணம் என்ற முறையில், அதில், அவர் தொடர்பாகவும், அவரது கருத்துக்கள் தொடர்பாகவும் எழுதும் ஒருவர், அவற்றை, முடிந்தளவுக்கு ஆதாரத்துடன் எழுத வேண்டும். முடியாத பட்சத்தில்,அவற்றை தமது கருத்தாகவே தெரிவிக்க வேண்டும். குறைந்த பட்சம், அந்தக் கருத்துக்களை அவருடன்  சேர்ந்து செயற்பட்ட, சம்பந்தப்பட்ட தோழர்களுடன் பேசி சரிபார்த்த பின்னர் எழுத வேண்டும். அவருடனான தமது தனிப்பட்ட உறவுகள், உரையாடல்கள் அனுபவங்கள் பற்றி யாராவது எழுதுவதை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டியதில்லை. ஆனால் அமைப்பு சம்பந்தமாக ,அவரது அரசியல் சம்பந்தமாக எழுதப்படுபவற்றை, அதுவும் அவரது ஆளுமைக்கு இழுக்கு சேர்க்கும் விதத்தில் எழுதப்படுபவற்றை கேள்விக்குள்ளாக்காமல் இருக்க முடியாது. இன்னொரு விடயமும் இங்கு முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டும். வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது போல, அவருடன், இந்த நூலில் எழுதியிருப்பவர்களை விட அதிகமாக, தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயற்பட்டவர்கள், கருத்து விவாதங்களில் ஈடுபட்டவர்கள், மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பலபேரிடம் நூலுக்கான கட்டுரைகள் கோரப்பட்டமலே விடப்பட்டுள்ளன. இது, ஒரு ஆரோக்கியமான ஆவணமாக இந்த நூல் உருவாகுவதை மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

 

நாம் நூலுக்கு வருவோம். அவருடன் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்ட 24 பேர்கள் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில், அவரது தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பான செயற்பாடுகளின் போது இணைந்தோ அல்லது ஆதரவு மட்டத்திலோ இயங்கியவர்கள் என்று சொல்வதானால் ஐந்து பேர்களிடமிருந்துதான் கட்டுரைகள் பெறப்பட்டிருக்கின்றன. நூல் வெளியீட்டுகுழு தனது பதிப்புரையில், தாம் பலருடன் தொடர்புகொண்டு கட்டுரை தருமாறு கேட்ட்தாகவும்,அவர்கள் பலரும் கட்டுரை தர இசைந்ததாகவும், அவர்களில்  சிலர் ’ வேறு சிலரின் பெயர்களையும் அவர்களது இருப்பிடங்களையும் தெரிவித்தார்கள். அவர்களோடு தொடர்புகொள்ளவும், அவர்கள் மேலும் சிலரின் பெயர்களைக் கூறவும், தொடர்பு கொண்டவர்களின் பட்டியல் சங்கிலித் தொடராக நீண்டு சென்றது என்றும் விசுவானந்ததேவனை தனிப்பட்ட வகையிலும், அரசியல் ரீதியாகவும் தெரிந்தவர்களில் பலர் கட்டுரைகளை எழுதித் தர முன்வராவிடினும் அவர் பற்றிய தங்கள் நினைவுகளை  எங்களுடன் பகிர்ந்துகொண்டதோடு, பிரயோசனமான பல தகவல்களையும் எங்களுக்கு வழங்கினர்’ என்றும் தெரிவிக்கிறது. ஆனால், வெறும் 24பேர்களின் கட்டுரைகள் மட்டுமே (பதிப்புரை சொல்வது போல 25 அல்ல. ஒன்று, அவரது தோழர்களால் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அஞ்சலிக் குறிப்பு) இந்த நூலில் வெளியிடப்பட்டுள்ளது. தவிரவும் நூல் வெளியீட்டுக் குழுவிடம் விசுவைத் தனிப்படவும், அரசியல் ரீதியாகவும் தெரிந்த ‘பெரும்பாலானோர்’ பகிர்ந்து கொண்ட ‘நினைவுகளை’ யோ ’பிரயோசனமான பல தகவல்களையோ’ நூலில் காண முடியவில்லை. இதை விடவும் முக்கியமான விடயம், தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் உருவாக்கத்துக்குக் காரணமான 2 வது தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட, முக்கியமான பல, இந்த நூலில் எழுதிய எல்லோரையும் விட அதிக அளவில் விசுவுடன் சேர்ந்து பணியாற்றிய தோழர்களில் ஒரே ஒருவர் மட்டுமே ஒரு சிறு குறிப்பு எழுதுவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்  என்பது ஒன்றும் இலேசான விடயம் அல்ல. நூலில் விசு பற்றியும், அவரது அரசியல் பற்றியும், தமிழீழ தேசிய விடுதலை முன்னணி பற்றியும் தெரிவிக்கப்படும் கருத்துக்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில் நூல் வெளியீட்டுக் குழு, தான் இன்று வைத்திருக்கும் அரசியலுக்கு ஏற்ற விதத்தில் கட்டுரையாளர்கள் தெரிவுசெய்யப் பட்டிருக்கிறார்களோ  என்ற சந்தேகம் எழுவதை தடுக்க முடியவில்லை.

 

முதலில், நூலிலுள்ள கட்டுரைகள் தமிழீழ தேசிய விடுதலை முன்னணி பற்றியும், தோழர் விசுவானந்த தேவன் பற்றியும் முன்வைக்கும் விமர்சனங்களைப் பார்ப்போம்‘,

1.இலங்கையில் வர்க்க முரண்பாட்டைவிட, தேசிய முரண்பாடு பிரதான இடத்தை எடுத்திருப்பதால், அதைப் பயன்படுத்தி, ஒடுக்கப்பட்ட தேசிய இனமான தமிழ்மக்கள் வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில், ஆயுதப் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு தற்காலிக சோசலிச அரசை அமைத்துவிட்டு, அந்த அரசைப் பின்தளமாகக் கொண்டு,தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில், போராட்டத்தை நடாத்தி, முழு இலங்கையிலும் சோசலிச அரசை அமைக்க வேண்டும் என்பதே அவரது (விசு) எண்ணக் க(ன)ருவாக இருந்தது.

 

2. தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் மாநாடு நடாத்தப்பட்டு அதன் பெயரும் மாற்றப்பட்டு, புதிய மத்திய குழு அமைக்கப்பட்ட பொழுது, முன்னர் கட்சியால் அதன் மத்திய குழுவுக்கு நியமிக்கப்பட்ட பெரும்பாலானோர் நீக்கப்பட்டு விட்டனர்..அவர்களுக்குப் பதிலாக முன்னர் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் உட்பட முழுக்க முழுக்க வெறும் தமிழ் தேசியவாதிகளே மத்திய குழுவுக்குத் தெரிவானார்கள். அதாவது அமைப்பு முதன்முதலாக, தமிழ் தேசியவாத அமைப்பாக மாற்றப்பட்டது. அதன் மூலம் தேசிய இனப் பிரச்சினையைப் பயன்படுத்தி, சோசலிச அரசொன்றை நிறுவும் விசுவானந்த தேவனின் கனவில் மண் விழுந்துவிட்டது-

 

3. இயக்கத்தில் மேலும் மேலும் தமிழ் தேசியவாதப் போக்கு ஆதிக்கம் பெற்றதுடன் வெறும் தமிழ் தேசிய வாத உணர்வு மட்டும் உள்ளவர்களால் இயக்கம் நிரம்பத் தொடங்கியது. இயக்கத்தில் தமிழ் தேசிய வாதத்தின் ஆதிக்கம், சுத்த இராணுவக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி, வங்கிக் கொள்ளைப் பணத்தின் மீதான கவர்ச்சி, தலைமைத்துவ மோகம் என்பன தலை தூக்கியதுடன் பாசிசப் புலிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்துப் போராடவேண்டும் என்ற மிக மோசமான கருத்தும் தலை தூக்கியது.

 

4. தனிப்பட்ட முறையில் தோழர் விசுவானந்த தேவன் மார்க்சியத்தின் மீதும், சோசலிச இயக்கத்தின் மீதும் மிகவும் பற்றுறுதி உள்ளவராக இருந்த போதும், ஒரு பாட்டாளி வர்க்கத் தலைமை இல்லாமல் அவர் முன்னெடுத்த முயற்சிகள் அவரையேதிருப்பி அடிக்கத் தொடங்கின. அமைப்பின் அதிகாரமும்,கொள்ளையடித்த பணமுமே அவர்களது இலக்காக இருந்தன. இதனால் அவர்களுக்கும் தோழர் விசுவானந்த தேவனுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்தன.

                                                                – சண்முகம்-சுப்பிரமணியம். ( ப: 34,36)

5.’ தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்காகப் போராடும் எல்லாப் பிரிவினருடனும் ஐக்கியப்பட்டுப்  போராடவேண்டுமென்பதை, NLFT கருத்து ரீதியாக ஏற்றுக் கொண்டாலும் தோழர் விசுவானந்த தேவன் போன்ற சிலர் அதை நடைமுறைப்படுத்துவதை NLFT எதிர்த்தது. பாட்டாளி வர்க்க தலமையிலான கட்சி ஒன்றை நிறுவிய பின்னர், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதா அல்லது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதனூடாக பாட்டாளிவர்க்கக் கட்சி ஒன்றை நிறுவுவதா என்ற விவாதங்கள் NLFT அமைப்புக்குள் எழுந்தன. ஏறத்தாழ 1985 ஆண்டின் முழுக்காலப் பகுதியும் NLFT அமைப்புக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் போராட்டத்திலேயே கழிந்து போயிற்று. NLFT உருவாகி 3 வருட காலத்தில் NLFT அமைப்புக்குள் உருவாகியிருந்த தீவிர இடதுசாரிப் போக்கினையும், தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்காகப் போராடும் ஏனைய சக்திகளை அரவணைத்து பரந்தளவில் போராட மறுக்கும் கருத்தினையும், தோழர் விசுவானந்த தேவனும்,  NLFT அமைப்பின் ஒரு பிரிவினரும் கடுமையாக எதிர்த்தனர்.   

                                                  தோழர்களின் அஞ்சலி (ப :78)

6.ஆனால், அச்சமயம் அவர் சார்ந்த தமிழீழ தேசிய விடுதலை முன்னணியிலிருந்த பல வரட்டு வேதாந்திகதிகள், அராஜக ஆயுதக் குழுக்களில் இணைந்த அனைவரும் ’அராஜக வாதிகள்’ என்றும் அராஜக வாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது தவறு என்றும் விமர்சித்தனர். எனக்கும் கூட அடைக்கலம் தந்து தஞ்சமளித்தவர் விசுவானந்த தேவன் தான்.

                                                        – நல்லைய தயாபரன் (ப: 165)

7.தமிழீழ தேசிய விடுதலை முன்னணி உருவாகி அதன் வளர்ச்சிப் பாதையை அவதானித்தால், அந்த அமைப்பு தேசிய விடுதலைப் போராட்டத்தினை முற்போக்காக இட்டுச் செல்லக் கூடிய வல்லமை வாய்ந்ததாக ஒருபோதும் இருக்கவில்லை. பாட்டாளிவர்க்கத் தலமையில்,தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்து தமிழீழத்தை உருவாக்குதல் என்பதே அதன் கொள்கையாக இருந்தது.’ -ப.பாலசூரியன்

 

இவை தவிர, வேறும் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றபோதும், அனேகமாக எல்லாமே சாரத்தில் மேற்குறிப்பிட்ட விடயங்களுள் அடங்குவன என்பதால், இவற்றில் கூறப்பட்டுள்ள விடயங்கள் எந்தளவுக்கு சரியானவை, பொறுப்பானவை என்று பார்ப்பது போதுமானதாக இருக்கும். இவை தவிர, தமிழீழ மக்கள் விடுதலை முன்னணியை தோழர் விசு ஆரம்பித்த போது, அவர் தமிழீழ தேசிய விடுதலை முன்னணி தொடர்பாக வைத்த விமர்சனமும் இந்த நூலில் வெளியாகியுள்ளது. அவர் மிகத் தெளிவாக தாம் எங்கே தமிழீழ் தேசிய முன்னணியிடமிருந்து வேறுபடுகிறோம் என்பதை பதிவு செய்திருக்கிறார். அவை அவரது கருத்துக்கள், அவரது அமைப்பின் கருத்துக்கள். அவை பற்றிய விவாதத்துக்கான களமோ அவசியமோ அல்ல இந்தக் கட்டுரை என்பதால், அவற்றை தவிர்த்து, மேல் கூறப்பட்ட விடயங்களை பார்ப்போம்.

௦௦௦௦௦

* தோழர் விசுவானந்த தேவனிடம் சோசலிச தமிழீழக் கனவு இருந்ததாக குறிப்பிடும் சுப்பிரமணியம் அவர்கள், தான் தெரிவிக்கும் எல்லாக் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தனக்கு நேரடியாக தெரிந்தவர்/ தெரிந்தவை என்ற அடிப்படையிலேயே முன்வைத்துள்ளார். அவர் சொல்பவற்றுக்கு எங்கேயும் அவர் எந்த ஆதரத்தையும் தரவில்லை. ஆனால், தோழர் விசு எந்த இடத்திலும் சோசலிச தமிழீழம் பற்றிக் கதைத்தவர் அல்ல. தமிழீழ மக்கள் ஜனநாயகக் குடியரசு என்ற சொல்லையோ அல்லது புதிய ஜனநாயகப் புரட்சி என்ற சொல்லை தான் பயன்படுத்துவார். சுப்பிரமணியம் சொல்வது போல, வடக்கு கிழக்கில் ஆயுதப் போராட்டத்தை நடத்தி ஒரு தற்காலிக சோசலிச தமிழீழ அரசை உருவாக்க முடியும் என்று கூற அவர் ஒன்றும் அன்ரன் பாலசிங்கம் அல்ல. இலங்கையின் புரட்சிக்கான ஆரம்பப் புள்ளியாக வடக்குக் கிழக்கு அமையும் சாத்தியம் பற்றி அவர் சொல்லிடிருக்கக் கூடிய ஒன்றை இவர் இப்படித்தான் விளங்கி வைத்திருக்கிறார்.

 

* மத்திய குழுவுக்கு முழுக்க முழுக்க வெறும் தமிழ் தேசியவாதிகளே தெரிவு செய்யப்பட்டனர்’. என்பது மிகவும் ஆச்சரியமான செய்தி. மாநாட்டுக்கு வராத ஒருவர், மாநாட்டில் வந்தவர்கள் யாருடனும் கலந்துரையாடல் கூட செய்யாமல், என்ன நடந்தது என்பது பற்றி தனது ஊகத்தின் அடிப்படையில் எழுதிச் செல்வதை இங்கு விளக்க வேண்டியதில்லை. 4 வது இலக்கு இதழில், மாநாடு நடந்த சூழல் பற்றி விசு அவர்கள் எழுதிய வரலாற்றுக் குறிப்பே இவரது இந்த கருத்தை தெளிவாக மறுதலிக்கப் போதுமானது. ஆனால், சுப்பிரமணியம் அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகின்ற தர்க்கப் பொருத்தமற்ற எழுத்தை, நூலில் வெளியான மேலே காட்டப்பட்டிருக்கும், தோழர்களது அஞ்சலிக்குறிப்பிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி தெளிவாக காட்டுகிறது. தோழர் விசுவுடன் இயங்கிய தோழர்கள் தமது அஞ்சலிக் குறிப்பில், தமிழீழ தேசிய விடுதலை முன்னணி தீவிர இடதுசாரியப் போக்கை கொண்டதாக கூறுகின்றனர். அப்படியானால், ஒரே நேரத்தில் தீவிர இடதுசாரியமும், குறுங்தேசியவாதமும் அமைப்புக்குள் இருந்ததா?. தமிழீழ தேசிய விடுதலை முன்னணி தொடங்கிய காலம் முதலே, விசுவுடனான தனது தொடர்பைத் துண்டித்துக் கொண்டதாகக் கூறும் சுப்பிரமணியம் அவர்களுக்கு எப்படி இவ்வாறு கூறமுடியும்? தனது இன்றைய அரசியலை, நியாயப்படுத்தவென அவர் முன்வைக்கும் கருத்துக்கள் அன்றே அவரிடம் இருந்திருந்தால், அவர் சார்ந்திருந்த கட்சி அன்று என்ன செய்துகொண்டிருந்தது?. குறைந்தபட்சம், 2009 க்குப் பிறகாவது இன்றுவரை ஏன் அந்தக் கட்சி இன்னமும் வாய் திறக்கவில்லை என்பதை அவரால் விளக்க முடியுமா?. இலக்கு 4 இல் தோழர் விசு எழுதிய த.தே.வி.மு வரலாற்றுக் குறிப்பில், எப்படி 1975 முதல் 1980 வரையான காலப்பகுதியில் ஜனநாயக முன்னணி ஒரு செயலற்ற அமைப்பாக சீரழிந்து போனதென்பதை தெளிவாக எழுதிருக்கிறார். கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் மத்திய குழுவில் சேர்க்கப்பட்ட தென்பதை விட, அவர்கள் யாரும் செயற்பட தயாரான நிலையில் இருக்கவில்லை என்பதே உண்மை,. இதை விசுவே அக்கட்டுரையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். சரி, த.தே.வி.மு தான் அவர்களை விலக்கிவிட்டது என்று வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் அதன் பிறகு என்ன செய்தார்கள்? ஜனநாயக முன்னணியைக் காப்பதற்காக எதாவது வேலை செய்தார்களா? அல்லது அவர்களுக்கு, சுப்பிரமணியம் கூறும் பாட்டாளிவர்க்கக் கட்சி ‘ கட்டுண்டோம் பொறுத்திருப்போம்’ என்று பொறுத்திருக்க உபதேசம் செய்த்தா? ஏனிந்த திரிப்பு நியாயங்கள்?

 

 

*இயக்கத்தில் … “பாசிசப் புலிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்துப் போராடவேண்டும் என்ற மிக மோசமான கருத்தும் தலை தூக்கியது” அனைத்து இயக்கங்களிலும் மிக மோசமாக, சுத்த இராணுவக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த புலிகளை, ஆரம்பமுதலே தீவிரமாக விமர்சித்து வந்த த.தே.வி.மு ஒருபோதும் விடுதலைப் புலிகளுடன் ஐக்கிய முன்னணி பற்றி நினைத்துப் பார்த்ததே இல்லை. இந்த உண்மைக்குப் புறம்பான கருத்தை வேண்டுமென்றே இட்டுக்கட்டியிருக்கிறார் சுப்பிரமணியம். தோழர்களின் அஞ்சலியிலோ, தோழர் விசு த.தே.வி.மு இலிருந்து பிரிந்து சென்று எழுதிய, பிரிவுக்கான காரணத்தை விளக்கும் கட்டுரையிலோ கூட இந்த விடயம் பற்றி தெரிவிக்கவில்லை. உண்மையில் புலிகளின் அரசியலை மிகத் தீவிரமாக இலக்கு விமர்சித்து எழுதி வந்தது. பாலசிங்கத்தின் சோசலிச தமிழீழத்தை நோக்கி என்ற நூல் தொடர்பான விமர்சனத்தில், புலிகள் தெரிவிக்கும் ’சோசலிச’ அரசியல் கருத்துக்கள் காரணமாக, அவர்களது ஆயுதங்கள் மக்களுக்கு எதிராக திருப்பப்படும் ஆபத்து உண்டு என்பது தெளிவாக முன்வைக்கப்பட்டிருந்தது. 1984 இலேயே இதை சுட்டிக்காட்டி இலக்கு எழுதியதை படிப்பகம் நூலகத்தில் இன்றும் பார்க்க முடியும்!. புலிகளின் அரசியல் மீது அவ்வளவு தெளிவான விமர்சனத்தை முன்வைத்த அமைப்பின் தலைமையில் இருந்தவர் என்ற முறையில், தோழர் விசு புலிகளுடன்  இணைந்து போவது பற்றிய ஒரு கருத்தை தெரிவித்திருக்க வாய்ப்பே இருக்கமுடியாது. இது சுப்பிரமணியம் அவர்களின் புதிய கண்டுபிடிப்பு மட்டுமே. உண்மையில் ஐக்கிய முன்னணி என்பது, புலிகளைப் பொறுத்தவரை அவர்களின் அரசியல்,அமைப்பு வழிமுறைகள் என்று எல்லாவற்றையும் முழுமையாக ஏற்று அவர்களது இயக்கத்துடன் ஒரு அணியாக மாறுவதென்பதேயன்றி அதற்கு மேல் வேறு எந்த அர்த்தமும் இல்லை என்பதில், த.தே.வி.மு அமைப்பிலிருந்த யாருக்கும் சிறிதளவு சந்தேகம் கூட இருந்ததில்லை. .ஆக, இதுவும் மேலே குறிப்பிட்டதுபோல தமது இன்றைய அரசியலுக்கு நியாயம் கற்பிக்க சுப்பிரமணியம் அவர்கள் முன்வைக்கும் பொய்யுரையன்றி வேறல்ல. மாறாக  தோழர் விசுவும், த.தே.வி.மு வும் தொடர்ச்சியாக, தனிமனித படுகொலைகள், மற்றைய இயக்கங்களுக்குள்ளே நடந்த அராஜகப் போக்குகள் என்பவற்றால் பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு, பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வந்ததையும் அவர்களுடன் ஒரு ஐக்கியப்பட்ட வேலைத்திட்டத்தை நோக்கி செல்வதற்கான உரையாடல்களில் ஈடுபட்டதையும்  சுப்பிரமணியம் அவர்கள் இன்று அறிந்திருக்க நியாயம் உண்டு என்ற போதும், அவற்றை வசதியாக சொல்லாமல் விட்டுவிடுகிறார்.

 

*‘தனிப்பட்ட முறையில் தோழர் விசுவானந்த தேவன் மார்க்சியத்தின் மீதும், சோசலிச இயக்கத்தின் மீதும் மிகவும் பற்றுறுதி உள்ளவராக இருந்த போதும், ஒரு பாட்டாளி வர்க்கத் தலைமை இல்லாமல் அவர் முன்னெடுத்த முயற்சிகள்’ என்ற இந்த வாதத்துக்கு தமிழீழ கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய மேலே குறிப்பிட்ட வரலாற்றுக் குறிப்பு விளக்கம் தரும். ஆனால், சுப்பிரமணியம் கூறும், பாட்டாளி வர்க்க தலமையை அவர் சார்ந்திருந்த கட்சி தரும் அளவுக்கு இயங்கிக் கொண்டிருந்ததா? அதன் மத்திய குழு உறுப்பினரான சுப்பிரமணியம் அவர்கள், தமது கட்சி சார்பாக, தமது மதிப்புக்குரிய தோழருக்கு ஒரு விமர்சன அறிக்கையை சமர்ப்பிக்கும் அளவுக்காவது இயங்கும் நிலையில் இருந்ததா என்பதை சொல்ல முடியுமா? அப்படி இயங்கும் நிலமையில் இருந்ததென்றால், ஏன் அப்படி ஒரு தவறான பாதையில் த.தே.வி.மு போவதை, அதுவும் தானே உருவாக்கிய ஜனநாயக முன்னணி இவ்வாறு இயங்கும் முடிவை எடுத்ததை எப்படிக் கண்டிக்காமல் இருந்தது? அல்லது,எப்படி அந்தப் போக்கை மக்கள் முன் அம்பலப்படுத்தாமல் மவுனம் காத்தது? இது எத்தகைய சந்தர்ப்பவாதம், சுப்பிரமணியம் அவர்களே? இதுதான் இவ்வளவு காலத்துக்குப் பிறகு நீங்கள் கூறும் பாட்டாளிவர்க்கத் தலமையின் அரசியல்ரீதியான வரலாற்றுப் பொறுப்பு என்று கருதுகிறீர்களா?

 

*தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்காகப் போராடும் எல்லாப் பிரிவினருடனும் ஐக்கியப்பட்டுப் போராடவேண்டுமென்பதை, NLFT கருத்து ரீதியாக ஏற்றுக் கொண்டாலும் தோழர் விசுவானந்த தேவன் போன்ற சிலர் அதை நடைமுறைப்படுத்துவதை NLFT எதிர்த்தது’ – தோழர்களின் அஞ்சலிக்குறிப்பிலுள்ள இந்த கருத்து உண்மைக்குப் புறம்பானது. ரெலோ, புளோட், தீப்பொறி, ஈ.பி.ஆர் எல்.எஃப் அமைப்புகளிலிருந்த அந்தந்த அமைப்புக்களுடன் கருத்து மாறுபாடு காரணமாகவோ பின்னாட்களில் புலிகளின் அழித்தொழிப்புக்கு அஞ்சியோ பாதுகாப்பு கோரிய அனைவர்க்கும் மறைந்து வாழ்வதற்கு முடிந்தளவுக்கு அனைத்து உதவிகளையும் த.தே.வி.மு மத்திய குழு தீர்மானமெடுத்துச் செய்தது. இந்தியாவில் பிரிவுக்கு முன்னான, தோழர் விசு செய்த அனைத்து  இத்தைகைய செயற்பாடுகளும் த.தே.வி.மு வில் எடுக்கப்பட்ட முடிவின்படியே நடைபெற்றன. உடைவுக்கு சில காலம் முன்பாக, சந்ததியார் அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னதாக, அவரின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைக் கூட விசு த.தே.வி.முவின் முடிவினடிப்படையிலேயே செய்திருந்தார். இதை தவிர ஐக்கிய முன்னணி முயற்சிகள் பலவேறு மட்டங்களில் புலிகளை தவிர்ந்த எல்லா அமைப்புகளுடனும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எந்த ஒரு இயக்கமும் உத்தியோக பூர்வமாக ஐக்கியப்பட்ட வேலைக்கு இணைந்து செயற்பட தயாராக இருக்கவில்லை என்பதுதான் உண்மை. த.தே.வி.மு வை ஒருவிதத்திலும் அவர்கள் கணக்கில் எடுக்கவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். உண்மையில் த.தே.வி.முவின் இந்த முயற்சியால் தான், அந்த இயக்கங்களுள் அவைகளின் கருத்துக்களுடன் முரண்பட்ட தோழர்கள் பின்னர் தொடர்பை ஏற்படுத்தினர். இந்தக் குற்றச்சாட்டு மிகத் தவறானதாகும். தவிரவும் இலக்கு திரும்பத்திரும்ப ஐக்கிய முன்னணியின் அவசியம் பற்றிக் குறிப்பிட்டும் எழுதிவந்தது என்பது பற்றி யாரும் கவனித்ததாக தெரியவில்லை.

 

*’தமிழீழ தேசிய விடுதலை முன்னணியிலிருந்த பல வரட்டு வேதாந்திகள், அராஜக ஆயுதக் குழுக்களில் இணைந்த அனைவரும் ’அராஜக வாதிகள்’ என்று தெரிவித்தனர்’ என்று தயாபரன் தெரிவிப்பதையிட்டு நகைக்காமல் இருக்க முடியவில்லை. ‘புதியதோர் உலகம்’ எழுதுவதற்காக, தோழர் டொமினிக் அல்லது கோவிந்தன் என அறியப்பட்ட தோழர் நோபேர்ட் அவர்கள் தங்க வைக்கப்பட்ட இடம், அவருக்கு உதவிக்கும் பாதுகாப்புக்குமாக நியமிக்கப்பட்டிருந்த தோழர்கள், நூலை அச்சிட்டது என்று எல்லாம் த.தே.வி.மு வின் மத்திய குழுவின் அனுமதியும், ஒத்துழைப்புமின்றி நடந்ததென்றா தயாபரன் நினைத்துக்கொண்டிருக்கிறார்? அமைப்பின் இந்திய மட்ட வேலைகள் அனைத்தும் விசு அவர்களின் கீழ்தான் நடந்தன. அதன் அர்த்தம் அமைப்பின் ’வரட்டுவாதத்தை’ மீறி தோழர் விசு இந்த வேலைகளை இந்தியாவில் செய்தார் என்றா தயாபரன் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்?. அவர் அமைப்பின் தலமைத் தோழர் என்ற முறையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சில உடனடித் தேவை அடிப்படையில் தாமே முடிவெடுத்துச் செய்த விடயங்களைக் கூட அவர் உடனடியாக மத்தியகுழுவுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்காமல் இருந்ததில்லை. ஆக, அராஜகவாதக் குழுக்களில் இணைந்த அனைவரும் அராஜக வாதிகள் என்று அமைப்பின் சார்பாக யாரும் பேசியிருக்க எந்த வாய்ப்பும் இல்லை என்பது நிச்சயமானது. அப்படி யாராவது பேசியிருந்தாலும் அப்படிப் பேசிய சந்தர்ப்பத்தைப்பற்றிப் பேசாமல் இப்படி மொட்டையாக அபிப்பிராயம் தெரிவிப்பது மிகவும் தாழ்ந்த நடவடிக்கையாகும். தயாபரன் தமிழீழ தேசிய விடுதலை முன்னணி பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறார் என்று தனது விமர்சனத்துக்கு முன்பாக ஒரு வரி கூட எழுதவில்லை. தோழர் விசுவானந்ததேவனை உண்மையாக மதிப்பவர்கள் அதை நிரூபிக்க இவ்வளவுக்கு கீழிறங்கி வார்த்தைகளைக் கொட்ட வேண்டியதில்லை. தமது கருத்துக்களையும்,அரசியலையும் தோழர் விசுவின் பேரால் சொல்ல, அவர் சொன்னார், அவர் செய்தார் என்று எந்த ஆதாரமும் இன்றி எழுதுவதை விட  மோசமான ஒரு நினைவுக்குறிப்பு ஒருவரால் எழுத முடியாது.

 

*’தமிழீழ தேசிய விடுதலை முன்னணி உருவாகி அதன் வளர்ச்சிப் பாதையை அவதானித்தால், அந்த அமைப்பு தேசிய விடுதலைப் போராட்டத்தினை முற்போக்காக இட்டுச் செல்லக் கூடிய வல்லமை வாய்ந்த்தாக ஒருபோதும் இருக்கவில்லை.’பாலசூரியன் அவர்களது இந்த விமர்சனம் வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த விமர்சனத்துக்கு அவர் எந்த ஆதாரமான தமது அவதானிப்புக்களையும் எழுதவில்லை. அதில் ஏமாற்றமளிக்க ஒன்றும் இல்லை தான். பாலசூரியன் அவர்கள் த,தே.வி.மு மாநாட்டில் கலந்துகொண்ட ஒருவரல்ல. அது இயங்கிய காலம் முழுவதும் தமிழ் நாட்டிலேயே இருந்தவர். தோழர் விசு தனது தனிப்பட்ட குடும்பநிலை காரணமாக தன்னை அமைப்பினுள் எடுக்க முயலவில்லை என்று அவர் கூறுவதை அமைப்பில் இருக்கும் எவரும் நம்பப்போவதில்லை. அப்படியானால், இன்று அமைப்புடன் இணைந்து கொல்லப்பட்டுவிட்ட பல தோழர்களின் குடும்ப நிலமைகள் ஒன்றும் பாசூரியனின் குடும்ப நிலைகளை விட உயர்வானதல்ல. உண்மையில், தோழர் விசு, அமைப்பின் கருத்தை ஏற்றுக்கொண்டவர்கள் எந்த மட்டத்தில் வேலை செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதை பார்த்தே அவர்களுக்கான பணியை வழங்குபவர். அவர் மட்டுமல்ல, முழு அமைப்பின் நடவடிக்கையும் அவ்வாறு தான் இருந்த்து. பாலசூரியன் தான் செய்ததாகக் குறிப்பிடும் எந்த வேலைகளும் நேரடியாக அமைப்பின் மத்திய குழுவுடன் சம்பந்தப்பட்டதல்ல. அவர் தோழர் விசுவின் இந்திய வேலைகளுக்கு, தோழர் விசுவின் தொடர்பு காரணமாக அவருக்கு அனுசரணையாக வேலை செய்தவர். இலங்கையில் நடைபெற்ற வேலைகள், கருத்து விவாதங்கள் மக்களமைப்பு வேலைகள், மக்கள் போராட்ட நடவடிக்கைகள் எதுவுடனும் அவருக்கு நேரடியான பரிச்சியம் இருந்ததில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலையில் அவர் இப்படி ஒரு விமர்சனம் வைக்கப்படும் போது, அனைத்தையும் தீர விசாரித்து, அறிந்துகொண்டு அது எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது அவருக்கு முக்கியமல்ல. தன்னைப்பற்றிய விபரங்களை எழுதுவதற்கே கட்டுரையின் பெரும்பான்மையான பக்கங்களை எடுத்துக் கொண்ட அவருக்கு இதற்கு நேரம் கிடைக்கவில்லை என்று நம்பமுடியவில்லை. ஆனாலும் அவர் அப்படித்தான் எழுதியிருக்கிறார்.

 

இவ்வாறுதான் இலக்கு பத்திரிகை சம்பந்தமாக எழுதுகையிலும், அவர் சில முக்கியமான விமர்சனங்களை வைத்திருக்கிறார். உண்மையில், இலக்கு பத்திரிகையின் உதவி ஆசிரியராக அமைப்பால் நியமிக்கப்பட்ட தோழர் சென்னையில் தான் அமைப்பு வேலைகளுக்காக தங்கியிருந்தார். இலக்கு அவரது கண்காணிப்பிலேயே இந்தியாவில் தயாராகி வந்தது. அதன் வடிவமைப்பு, இலங்கையிலிருந்து வரும் கட்டுரைகளுக்கு மேலதிகமாக வேறு விடயங்களை சேர்த்தல் என்பன அவரது பொறுப்பாகவும் இருந்தது. பாலசூரியன் அவர்கள் இலக்கு வேலைகளை செய்தார் என்பது நாம் இப்போதுதான் கேள்விப்படுகிற செய்தி. இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், இந்த நூலில் அந்த இலக்கு இதழின் உதவி ஆசிரியராக இருந்த தோழரிடமும் கூட, கட்டுரை பெறப்படவில்லை.  மிக அதிகளவான காலம் தோழர் விசுவுடன் இணைந்து இந்தியாவிலும் இலங்கையிலும் அரசியற் பணிகளில் ஈடுபட்ட தோழர் அவர். அவரிடம் கூட இந்த விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டதாக பாலசூரியன் குறிப்பிடவில்லை. இந்த விமர்சனங்கள் எதுவும் இலங்கையிலுள்ள பத்திரிகையோடு தொடர்பான அமைப்புத் தோழர்களுக்கு கிடைக்கவில்லை, இந்த நிலையில் இன்று சாட்சிக்கு வரமுடியாத தோழர் விசுவிடம் தனது கருத்துக்களை தெரிவித்ததாக சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. இத்தனைக்கும், இலக்கு பத்திரிகை தொடர்பான தனது கருத்துக்களை இலங்கைக்கு யாருக்கு அனுப்பினால், அது பத்திரிகையோடு சம்பந்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் என்பதும் அவருக்குத் தெரியாததல்ல. ஆனால், அவர் அப்படியெல்லாம் செய்யவில்லை. இப்போது ‘நான் அப்பவே சொன்னேன், அப்பவே நினைத்தேன்’ பாணியில் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். சாரத்தில், தயாபரன், சுப்பிரமணியம் ஆகியோருக்கும், அமைப்புக்காக செயற்பட்டதாக கூறும் இவருக்கும் கட்டுரை எழுதிய நோக்கத்தில் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை. ஆக, தோழர் விசு பற்றிய பதிவுக்கான நூலின் ஊடாக, தம்மைப்பற்றிய கவனயீர்ப்பை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கமாக உள்ளது தெளிவு.

 

இக் கட்டுரையில் மேலே எழுதப்பட்ட 7 விமர்சனங்களைத் தவிர, பேராசிரியர் நுஹ்மான், பேராசிரியர் மார்க்ஸ், சமுத்திரன் ஆகியோரும் சில முக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஆயினும், பேராசிரியர் நுஃமான், அமார்க்ஸ் இருவரும் முன்வைத்துள்ள விமர்சனக் கருத்துக்கள் த.தே.வி.மு வின் ஆவணங்களிலிருந்து ஆதாரமாகக் காட்டப்படாமல் பிறர் கருத்துக்களிலிருந்து மேற்கோளாக காட்டப்பட்டே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. தோழர் விசுவாவின் கருத்தை விமர்சிக்க, மணியம் அவர்களின் தேனீ யில் தெரிவிக்கப்பட்ட கருத்தை பேராசிரியர் நுஃமான் பயன்படுத்துகிறார். அமைப்பின் அரசியல் அறிக்கை, இலக்கு என அமைப்பின் உத்தியோக பூர்வமான கருத்துக்கள் வெளிவந்த ஆவணங்களை விடுத்து, அமைப்புடன் என்றுமே ஒரு உறுப்பினராக செயற்படாத ஒருவர், தோழர் விசு அவர்களது மரணத்தின் பின் தெரிவித்த கருத்தை மேற்கோள் காட்டுவது அவரது ஆய்வுத் துறையின் பாற்பட்டதா என்பதை அவர்தான் விளக்க வேண்டும். பேராசிரியர் மார்க்ஸ் இதற்கும் மேலே போய்,, அவரது வழமையான பாணியில் இலக்கு எழுதியதாக ஓரிரு வசனங்களை மேற்கோள் காட்டி அது தனது இடதுசாரி அடையாளங்களை இழக்கத்தொடங்கியதாக எழுதியுள்ளார். ஆனால் அவர் இதை எங்கிருந்து எடுத்தார் என்பதை, தனது வாதத்துக்கு வசதியாக குறிப்பிடாமல் விட்டுவிடுகிறார். அவர் சொல்லும் கருத்துக்கள் இலக்கு (01) இதழில் வெளிவந்த ’தமிழ் நாட்டு அமைப்புக் கமிட்டியின் வரட்டுச் சூத்திரவாதமும் ஈழத் தமிழரின் உண்மை நிலையும்’ என்ற கட்டுரையிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன. அதிலிருந்தும் தனது மேற்கோள் குறிக்குள் இட்டிருக்கும் வரியை மிக லாவகமாகத் திருத்தி விட்டிருக்கிறார்!. இந்தக் கட்டுரையை முழுமையாக வாசிப்பவர்களுக்கு எந்த சந்தர்ப்பத்தில் இந்த மாதிரி ’அர்த்தப்படுத்தக்’ கூடிய வசனம் வருகிறது என்பதை புரிந்து கொள்வது சிரமமில்லை. எவ்வாறாயினும், அமைப்புக்கு வெளியில் இருந்தவர்கள் என்ற வகையில் இவர்களது அவதானங்கள் முக்கியமானவையே.

 

ஆக மொத்தத்தில், த.தே.வி.மு மீதும், அதனோடு சம்பந்தப்பட்ட காலத்திய தோழர் விசு மீதும்,  வைக்கப்பட்ட விமர்சனங்களில், உண்மை நிலையை விளங்கிக் கொள்வதற்கான ஆர்வமோ அக்கறையோ இருப்பதற்குப் பதில், போகிறபோக்கில் காறித் துப்பிவிட்டுப் போகும் மனநிலையும்,அதன் மூலம் தமது இருப்பை நியாயப்படுத்தும் போக்குமே இந்த நூலில் காணப்படுகின்றன.எவ்வாறாயினும், இந்த நூல் தோழர் விசுவின் ஜனநாயக முன்னணிக்கு முந்திய காலம் பற்றிய பல தகவல்களைப் பதிவு செய்துள்ளது என்பதற்காக வெளியீட்டாளர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்

0000

 

இறுதியாக, தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் தேசிய மாநாட்டுக்குப் பின்னான காலப்பகுதி நடவடிக்கைகளை பற்றிய ஒரு சிறு குறிப்பை தருவது பொருத்தமானது என்று கருதுகிறேன். தேசிய மாநாட்டுக்குப் பின்னான காலப்பகுதியில், உடனடியான வேலைத்திட்டங்களாக இருந்தவை, அரசியல் ரீதியாக மக்கள் மத்தியில் வேலை செய்தல், தேசிய விடுதலைப் போராடட்த்தில் ஈடுபடும் சக்திகளை  ஐக்கிய முன்னணிக்குள் இணைக்க முயல்தல், புரட்சிகர மக்கள் படை ஒன்றினைக் கட்டியெழுப்பும் நோக்கிலான இராணுவக் கருவமைப்பு ஒன்றை உருவாக்குதல் என்பவையாகும். இவற்றில் முதலாவது செயற்பாட்டின் ஒரு அம்சமாகவே இலக்கு இதழும்,பின்னர் முன்னணிச் செய்தி பத்திரிகையும் வெளியிடப்பட்டன. இதை தவிர பரவலாக சுவரொட்டிகளை ஒட்டுதல், துண்டுப்பிரசுரம் வினியோகித்தல், அரசியல் கூட்டங்களை நடாத்துதல், அரசியல் வகுப்புக்கள் நடாத்துதல் என்பவை தொடங்கப்பட்டன. இவற்றின் வளர்ச்சியின் அடுத்தபடியாக,  கலை இலக்கிய அணி, புதிய ஜனநாயக மகளிர் அணி, புதிய ஜனநாயக மாணவர் அணி என அனைப்புக்கள் உருவாக்கப்பட்டன. உழைக்கும் மக்கள் மத்தியிலான வேலைகளும் மக்கள் அமைப்பு வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. உழைக்கும் மக்களின் கூலிப் போராட்டம், கூலி விவசாயிகளின் நில உரிமைப்போராட்டம், பல்கலைக் கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம், அவர்களின் எழுச்சி ஊர்வலங்கள் போன்ற நடவடிக்கைகள் அமைப்பின் மக்கள் திரள் அமைப்புகளினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த விடயங்கள் தொடர்பான கட்டுரைகளை இலக்கு இதழும், முன்னணிச் செய்தியும் தாங்கி வெளிவந்தன. இவற்றுக்கு அவசியமான கட்டுரைகள் நூல்கள் என்பன மொழிபெயர்க்கப்பட்டன. இவற்றில் முக்கியமான இரண்டு நூல்கள் அச்சிலும் வெளிவந்தன. அமைப்புக்குள் தத்துவார்த்த,அரசியல் ரீதியான, பல்வேறு கருத்துக்களிடையேயான விவாதங்களும் இதற்குச் சமாந்தரமாக நடைபெற்றன. நூறு பூக்கள் மலரட்டும் என்ற தலைப்பில், அரசியல்,போராட்ட வழிமுறை, மக்கள் அமைப்பைக் கட்டுதல் என்பன தொடர்பான பல்வேறு கருத்துக்களும் விவாதத்துக்கு வந்தன. இவை வெறும் விவாதங்களாக மட்டுமன்றி பரவலான கல்வியூட்டும் நடவடிக்கைகளாகவும் அமைந்தன. 

 

தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் நடவடிக்கைகள் அதன் அரசியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலான செயற்பாடுகளாகவே தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. எந்தக்கட்டத்திலும், குறுந்தேசியவாதமோ, இனவாதமோ மேலெழவில்லை. முஸ்லிம்கள், மலையக மக்கள் தொடர்பான நிலைப்பாடுகளில் மேலும் தெளிவான கருத்துக்களுக்கு அமைப்பு வந்திருந்தது. முஸ்லிம்கள், மலையக மக்கள் ஆகியோரை தனியான, தனித்துவம் மிக்க தேசிய இனங்களாக வகைப்படுத்த வேண்டும் என்ற விவாதங்களும் அமைப்பில் இருந்தன. ஆயினும் இவை அனைத்தும் அடுத்த தேசிய மாநாட்டுக்கான விடயங்களாக வைக்கப்பட்டன. எவ்வாறாயினும், அமைப்பில் உருவான கருத்து விவாதங்களுக்கான போராட்டம் வெற்றியளிக்காது அமைப்பில் ஏற்பட்ட உடைவும், தோழர் விசு தனியாகச் சென்று இயங்குவதாக எடுத்த முடிவும், அதற்குக் காரணமாக முன்வைத்த கருத்துக்களும், உள்ளக விவாதத்துக்கு அப்பற்பட்ட விடயங்களாக இருக்கவில்லை. தவிரவும், இவை மிகப்பெரும் பகை முரண்பாடுகளாக இருக்கவும் இல்லை. உடைவின் பின் த. தே வி.மு வும் த.ம.வி.முவும் தனித்தனியாக இயங்கிய காலத்திலும் அவர்களின் வேலை முறைகளில் எந்த வேறுபாடும் இருந்ததாக தெரியவில்லை. தோழர் விசு உயிருடனிருந்து, இரண்டு அமைப்புகளதும் தோழர்கள் புலிகளால் பலியெடுக்கப்படாத ஒரு நிலை இருந்திருந்தால்,காலப்போக்கில் இரண்டு அமைப்புகளும் மீண்டும் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். இந்த இரண்டு அமைப்புகளதும் முக்கிய தவறு என்று சொல்வதானால், சமகால வெள்ளைப் பயங்கரவாத சூழலில் எப்படி பாதுகாப்பாக புரட்சிகர அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவது என்பது பற்றிய விடயத்தில் இழைக்கப்பட்ட தவறு மட்டுமே என்றுதான் தோன்றுகிறது. எவ்வாறாயினும், இது அவசியம் பேசப்பட வேண்டிய, முக்கியமான ஒரு விடயம்.அதற்கு பொருத்தமான இடம் இதுவல்ல.

 

ஆனால் அமைப்பு பற்றிய அரைகுறை கருத்துக்களை மட்டும் தெரிந்தவர்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்களில் இந்த உண்மைத் தன்மைகள் வெளிப்படுவதில்லை. உண்மையில் உடைவின் போது தோழர் விசுவுடன் சென்று இயங்கிய, த.தே.வி.முவின் ஆரம்பகால உறுப்பினர்களாக இருந்த, இன்று உயிருடன் இருக்கும் தோழர்கள், உடைவின் போது, மொத்தமாக அரசியலை விட்டு ஒதுங்கிய தோழர்கள் என்று யாரிடமும் கட்டுரைகள் பெறப்படாமல் இந்த நூல் வெளிவந்திருப்பதே இந்த பதில் கட்டுரைக்கு காரணமாகும். ஏனென்றால் இத்தகைய ஒரு பதிவு இல்லாத பட்சத்தில் இந்த நூல் தோழர் விசு பற்றிய ஒருபக்கப் பார்வையை மட்டுமே கொண்டிருக்கும் நிலையை உருவாக்கும் என்பதுதான். (உடைவுக்குப்பின்,1990 இல் புலிகளினால் அமைப்புத் தோழர்கள் தேடித் தேடி அழிக்கப்பட்ட காலம் வரையான த.தே. வி.மு வின் செயற்பாடுகளை அறிந்தவர்களுக்கு இந்த நூலில் தெரிவிக்கப்பட்ட விமர்சனங்களின் உண்மைத் தன்மையை புரிந்துகொள்வது கடினமல்ல. ஆயினும், அதுபற்றி விபரிப்பது இந்தக் கட்டுரையின் தேவைக்கு மேற்பட்டதால் அதை இவ்விடத்தில் பேச முயலவில்லை.) அவர் ஒருபோதும் ஒரு இனவாதியாகவோ, செயலூக்கமற்ற வரட்டுவாதியாகவோ, திண்ணைப்பேச்சு அரசியல் வாதியாகவோ இருந்தவரல்ல. முகம் முழுவதையும் மறைத்து விடுகிற கருகரு என அடர்ந்த தாடிக்குள்ளிருது ஜொலிக்கும் கூரிய விழிகளும், பளிச்சென்ற புன்னகையும், தோழில் புத்தகங்களுடன் தொங்கும் ஜோல்னாப் பையும்  கொண்டவராக சதா இயங்கித் திரியும்  அந்த எளிய மனிதரின் புரட்சி, விடுதலை, மனிதநேயம், ஜனநாயம் என்பவற்றின் மீதான அர்ப்பணிப்புள்ள ஈடுபாட்டுடன் கூடிய போர்க்குணம் மிக்க நடவடிக்கைகள் காலத்தால் மறக்கப்பட முடியாதவை. அவை வரலாற்றின் மிக முக்கியமான பதிவுகள்..

மார்ச் 8,2017

0000

இக்கட்டுரையாசிரியர் தோழர் விசுவானந்ததேவன் அவர்களுடன், நீண்டகாலமாக  அரசியல் வேலை செய்தவர், அமைப்பில் பிரபா என்கிற பெயரில் அறியப்பட்டவர்.

 

**************உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பதிவிடுங்கள் (ஆசிரியர் குழு)

 

  

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment