Home » இதழ் 21 » *போர்க்குணம் கொண்ட ஆடுகள் – ஜிஃப்ரி ஹாஸன் (சிறுகதை)

 

*போர்க்குணம் கொண்ட ஆடுகள் – ஜிஃப்ரி ஹாஸன் (சிறுகதை)

 

 

 

ருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுவதை அவன் தவிர்த்துக் கொள்வதையே விரும்பி வந்தான். அதனால்  தன்னை மருத்துவமனைப்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் நோய் வந்தாலும் மருத்துவமனைப் பக்கம் செல்வதை அவன் விரும்புவதில்லை. சிறிய வயதாக இருக்கும் போது இரண்டு தடவைகள் வைத்தியசாலையில் இருந்திருக்கிறான். அப்போது அவனது தந்தை அவன் கூட இருந்தார்.

 

 அந்நாட்களில் வைத்தியசாலையில் அவ்வளவு கெடுபிடிகள் குறைவுதான். அவன் சிறிய வயதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற போது அப்போது அங்கு கடமையாற்றிய தாதிகள் தொடங்கி  வைத்தியர்கள் வரை எல்லோரும் நல்ல தன்மையாகவும், சற்றுப் பொறுப்புணர்ச்சியோடும் நடந்து கொண்டது இப்போதும் அவனது ஞாபகத்தில் இருந்தது. அதன் பிறகென்றால் பல்கலைக்கழகத்தில் இருக்கும் போதும் மூன்று நாட்கள் மருத்துவமனைப்படுத்தப்பட்டிருந்தான்.

 

மருத்துவமனைக்கு அவன் ஒன்றும் எதிரி அல்ல. அவனை மருத்துவமனையை விட்டும் முதலில் தள்ளிவைத்த விடயம் மருத்துவமனை நெடிதான். மருத்துவமனை நெடியை ஒரு அழியாத்துயரமாகவே அவன் எப்போதும் கற்பனை பண்ணி இருந்தான். ஆடைகளைக் கழற்றி மாட்டினாலும் அதன் வாடையை தன்னில் உணர்ந்தபடியேதான் இருப்பான். அது தனது மூக்கின் குறைபாடா அல்லது மருத்துவமனையின் குறைபாடா என்று இதுவரை யோசித்தும் எந்த முடிவும் அவனுக்கு கிடைப்பதாக இல்லை. மருத்துவமனையை விட்டும் அவனைத் தள்ளி இருக்க அண்மைக்காலமாக அவனைத்தூண்டிய விசயம் அங்கு கடமை புரிபவர்கள் மத்தியில் குடிகொண்டிருந்த அலட்சியமும், பொறுப்பற்ற தன்மைகளும்தான். இத்தனைக்குமிடையில் அவர்கள்தான் அதிகமான சம்பளமும் பெறுபவர்கள் என்பதையும் அவன் தெரிந்து வைத்திருந்தான். போதாக்குறைக்கு இடையிடையே சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டங்கள் வேறு. இந்த சனியன்களால்தான் நியாயமான தொழிலாளர் போராட்டங்களும் மக்களால் கண்டுகொள்ளப்படாமல் போகிறது என உள்ளூர நினைத்தான்.

 

அவன் சிறுவயதில் மருத்துவமனைப்படுத்தப்பட்டிருந்தபோது அவனுக்குத் துணையாக அவனது தந்தையும் அவனுடன் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ஏழு நாட்கள் மருத்துவமனையில் கிடந்தான். ஏழு நாட்களும் நல்ல உணவு கிடைத்தது. வீட்டிலிருந்திருந்தால் இந்த ஏழு நாட்களில் எப்படியும் மூன்று நாட்கள் பட்டினி கிடந்திருக்க வேண்டி வந்திருக்கும். அந்தவகையில் இது கொஞ்சம் அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது. காலையில் பால் கிடைப்பது இன்னும் அவனை மகிழ்ச்சிப்படுத்துவதாக இருந்தது. வீட்டில் பசும்பால் குடிக்கும் பாக்கியம் அவனுக்கு ஒரு போதும் வாய்த்ததில்லை.

 

அவன் என்ன வருத்தத்துக்காக இவ்வாறு ஏழுநாட்களாக மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறான் என்பது சர்வ நிச்சயமாக அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அநேகமாக அவனது தந்தைக்கும் அது தெரிந்திருக்காதுதான். இருந்தாலும் அவன் தந்தையிடம்

‘என்னத்துக்கு வாப்பா என்னெ இங்க வெச்சிருக்காங்க.?’ என்று ஒவ்வொரு நாளும் ஒரு தடவையேனும் கேட்கத்தான் செய்தான். தந்தைக்கும் காரணம் சரியாகத் தெரியாததால் அவர் சரியான பதிலை அவனுக்குச் சொன்னதில்லை.

 

திடீரென்று ஒரு நாள் அவனுக்கு காய்ச்சல் வந்து வாந்தி எடுத்து அவன் பயத்தில் அலறியபோது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான். அப்போது வந்தவன்தான் ஏழு நாட்களாக இங்கேயே வாசம் செய்ய வேண்டியதாயிற்று. வைத்தியர்கள் பல்வேறு கோணங்களில் அவனைப் பரிசோதனை செய்த போதும் அவனது தந்தையிடம் அது குறித்து ஒரு வார்த்தைதானும் அவர்கள் எதுவும் சொல்வதாக இல்லை.

 

சிறிது நாட்களின் பின் இருதயத்தில் ஒரு சிறு பிரச்சினை இருக்கிறது. அது காலப்போக்கில் தானாகவே குணமாகிவிடும் என்று வைத்தியர்கள் கூறுவதாக ஆண் தாதி ஒருவர் தனது தந்தையுடன் பேசிக்கொண்டிருந்ததைதை ஒரு நாள் செவியுற்றான். பெந்தகோஸ்தே சபையைச் சேர்ந்த அந்த மருத்துவப் பணியாளர் அவனை அவர்களது மதகுரு ஒருவரிடம் கொண்டு சென்றால்  அவனது நோயை இலகுவாக குணப்படுத்தி விடலாம் என்று அவனது தந்தையிடம் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்ததை இவன் அவ்வப்போது அவானித்திருக்கிறான். அந்தப் பணியாளர் அதற்கான முயற்சியில் கடுமையாக இருந்தார். அவனது தந்தையை எப்போதும் சந்திந்துப் பேசிக்கொண்டிருப்பார். அநேகமாக அவர் பாத்ரூம் தவிர்ந்த ஏனைய எல்லா இடங்களிலும் அவனது தந்தையைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தார். மிகக் கனிவாக அவர் பேசுவதுடன் அன்பாக அவர்களைக் கவனிக்கவும் செய்தார். அவரது உபசரிப்பில் ஒரு உள்நோக்கம் இருந்தாலும் அவரது கடமையில் ஒரு அர்ப்பணிப்புத் தன்மை இருந்ததை இப்போது அவன் நினைத்துப் பார்க்கிறான். அப்போது கிட்டத்தட்ட எல்லா நோயாளர்களுக்கும் திருப்திபட்டுக்கொள்ளுமளவுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்ததாகவே அவன் நம்புகிறான்.  

 

அதன் பின் மிக நீண்ட காலத்துக்குப் பிறகு இன்று மருத்துவமனைப்படுத்தப்பட்டிருக்கிறான். அவனைப் பொறுத்தவரை அது தவிர்க்கமுடியாததாக இருந்தது. ஒரு விபத்தில் சிக்கி ஏற்பட்ட பாரதூரமான காயமொன்றுக்கு சிகிச்சை பெறவே அவன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட வேண்டி இருந்தது. அவனுக்கென ஒரு இலக்கக் கட்டில் வழங்கப்பட்டிருந்தது. வைத்தியசாலைப் பக்கமே வரக்கூடாது என்றிருந்தவன் இப்போது வைத்தியசாலைக் கட்டிலில் சுருண்டு படுத்துக்கிடந்தான். நாம் ஒன்று நினைக்க இறைவன் ஒன்று நினைக்கிறான் என்றுதான் அதிகபட்சம் அவன் அப்போது எண்ணி இருப்பான்.

௦௦௦

 

அவன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் போது இவான் இல்லிச்சின் ‘MEDICAL NEMESIS: The expropriation of health’ (மருத்துவத் தண்டனை: உடல்நலனை அனுமதியின்றிக் கையகப்படுத்துதல்) எனும் புத்தகத்தை வாசித்த பின் இந்த நவீன மருத்துவம் பற்றிய மாறுபட்ட சிந்தனைகள் அவனுக்குள் வளர்ந்து வருவதை உணர்ந்தான். அன்றிலிருந்து பொதுவாக மருத்துவமனைகளுக்கும் அவனுக்குமிடையிலான தொடர்புகள் மெல்ல மெல்ல அற்றுப்போயின. அந்தப் புரிதலுக்குப் பின் மருத்துவமனை என்றால் வெறும் கட்டடங்களும், மருந்துகளும், பணியாட்களும், நோயாளிகளையும் கொண்ட ஒரு கட்டடத் தொகுதி என்ற எண்ணம்தான் அவனிடமிருந்தது. அதன் பின் மிக நீண்டநாட்களுக்குப் பின் இப்போது தவிர்க்க முடியாமல் அவன் மருத்துவமனைப்படுத்தப்பட்டிருக்கிறான். இம்முறை மருத்துவமனைப்படுத்தப்பட்ட பின் மருத்துவமனை குறித்த அவனது அண்மைய மனச்சித்திரம் இம்முறை சற்று மாற்றத்திற்குள்ளானதைப் போல் உணர்ந்தான். அந்தக் கட்டடத் தொகுதியைத் தாண்டி அது ஒரு விசித்திரமான உலகம் என்பதை இந்த நாட்கள் அவனுக்கு உணர்த்தின. அங்கு பலதரப்பட்ட நோயாளர்களான மனிதர்கள் சிக்சிசைக்காக தங்கி இருந்தனர். ஒவ்வொருவரும் ஒரு விசித்திரமான உலகத்தை தங்கள் படுக்கைகளில் வைத்திருக்கின்றனர். அவர்களுடன் பேசும் போது அந்த மனிதர்களின் வாழ்க்கை துன்பியல் நாடகங்களின், நாவல்களின் கதாபாத்திரங்களை அவனுக்கு ஞாபகப்படுத்தின. உடல் நோய்க்கு வந்தவன் கடைசியில் ஒரு மனநோயாளியாக மாறிவிடும் நிலை உருவானது. அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதும், அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களும் மனித உடல் பற்றியும், வாழ்வு பற்றியும் அவனுக்கு புதிய அனுபவங்களை ஏற்படுத்துவது போல் இருந்தன. அது மட்டுமே இம்முறை அவன் மருத்துவமனையில் கண்ட முன்னேற்றமாக கருதினான்.  

 

 

அவன் சிறு வயதில் வைத்தியசாலையில் இருந்தபோது அங்கு கண்ட காட்சிகளுக்கும் இன்றைய காட்சிக்குமிடையில் நிறைய வேறுபாடுகளைக் கண்டான். கையில் இப்போது இருந்தாற் போல் ஊசியையும் ஏற்றி வைத்துவிடுகிறார்கள்.  சுள்ளென்று அது நோயாளியை மேலும் வேதனைப்படுத்துகிறது. மருத்துவமனைப் பணியாளர்களின் அலட்சியமும் அதிகாரமும் முன்னரை விட  மிக மோசமாக அதிகரித்திருந்ததை இப்போது கண்டான். ஒவ்வொரு மருத்துவமனைப் பணியாளரும் போர்க்குணம் கொண்ட ஆடு போல் நோயாளிகளை முட்டும் தோரணையில்தான் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் அணிந்திருந்த வௌ்ளாடைகள் போர்க்குணம் கொண்ட வௌ்ளாடுகளையே ஞாபகப்படுத்திற்று. இந்த ஆடுகளின் போர்க்குணம் ஆண்டாண்டு காலமாக  தொடர்ந்தபடியே இருப்பதாக நினைத்தான்.

 

மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால் நோயாளிகள் படும் அவஸ்த்தைகளை நேரில் கண்டான். அவற்றில் சில உயிரிழப்புகள் வரை சென்றது. அதிக சம்பளம் பெற்றும் கடமையை சரியாகச் செய்யாது மனித உயிர்களோடு விளையாடும் அந்த உத்தியோகத்தர்களை மோசமான வியாதிகள் பீடித்து அவர்களுக்கு மோசமான மரணங்கள் சம்பவிக்க வேண்டும் என மனதாரச் சபித்தான்.

 

மருத்துவமனையில் அன்றைய நாட்களில் தொலைக்காட்சி பொருத்தப்பட்டிருந்ததாக அவனுக்கு ஞாபகமில்லை. ஆனால் இப்போது பொருத்தப்பட்டிருந்தது. நோயாளிகள் எப்போதும் தங்களது நோயைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்காமல் அவர்களுக்கொரு பொழுது போக்குக்காக தொலைக்காட்சி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனால் நோயாளர்கள் பயனடைந்ததாகத் தெரியவில்லை. மருத்துவமனை பணியாளர்கள்தான் அதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். போதாக்குறைக்கு நல்ல சத்தமாக போட்டு நோயாளர்களின் அவஸ்தைகளை வேறு அதிகரித்துக் கொண்டிருந்தார்கள்.

 

இவன் தனது இலக்க கட்டிலில் படுத்துக் கிடந்தபோது பக்கத்திலிருக்கும் அலுவலக அறைப்பக்கமாக இருந்து தொலைக்காட்சி சத்தம் பெரும் சத்தமாக உருவெடுத்து வைத்தியசாலையை வலம் வரத் தொடங்கியது. விசாலமான அந்த அலுவலக அறைக்குள் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தாலும் நோயாளர்களும் அங்கு சென்று தொலைக்காட்சி பார்ப்பதற்கு தடை இருக்கவில்லை.

 

ஒரே அலுப்பாக இருந்ததனால் தொலைக்காட்சிப் பக்கம் ஒதுங்க நினைத்து கட்டிலிலிருந்து எழுந்தான். பக்கத்துக் கட்டிலில் படுத்துக் கிடந்த வயதானவர் தொலைக்காட்சியின் சத்தத்தை சகிக்க முடியாமல் ஏதோ பிணாத்திக் கொண்டிருந்தார். ஆனால் இரவு முழுவதும் இருமி இருமியே அவனது தூக்கத்தைக் கெடுத்த அவரது இருமல் தொல்லையை விடவும் தொலைக்காட்சி சத்தம் பரவாயில்லை என்பதைப் போல அவன் நினைத்தான்.

 

சற்றுத் தள்ளி இருந்த இலக்க கட்டிலில் படுத்துக்கிடந்த மற்றுமொரு நோயாளியும் தொலைக்காட்சி சத்தத்துக்கெதிரான கண்டனத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இதை எல்லாம் அவன் காதில் வாங்கிக் கொள்ளாதவனைப் போல் தொலைக்காட்சிப் பெட்டி இருந்த அலுவலக அறைக்குள் பிரவேசித்தான். 

 

அப்போது தொலைக்காட்சியில் கந்தசாமி படம் ஓடிக்கொண்டிருந்தது. படத்தில் ‘மியாவ் மியாவ் பூன’  பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

அந்தச் சமயம் மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் சாப்பிடும் அறைப்பக்கமாக இருந்து பூனை ஒன்று ஓடிச் சென்றது. எந்த உணவும் அதற்குக் கிடைக்காத ஏக்கம் அதன் கண்களில் தெரிந்தது. அவன் அந்தப் பூனைக்கும் அந்தப்பாடலுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா என்று பூனையையும் டீவியையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டான்.

 

பின்னர் மருத்துவமனை ஊழியனையும் ஓரக்கண்களால் பார்த்தான். அந்த ஊழியன் பூனையை பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஒரு வௌ்ளாடு பூனை ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி போல அவனுக்குத் தோன்றியது.  தனது அறைக்குள் உணவு எதுவும் இருப்பதில்லை என்பதால் அவன் பூனையைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

 

அப்போது இவனும் பூனையைப் போல் அறைக்குள் பதுங்கி வந்து அங்கு போடப்பட்டிருந்த வாங்கில் அமர்ந்து கொண்டான். ஏற்கனவே வாங்கில் அவனது மற்றப் பக்க கட்டிலில் படுத்துக் கிடந்த இளம் நோயாளியான சிறுவனொருவன்  ஏற்கனவே அங்கு போய் உட்கார்ந்திருந்தான். அவன் தனது அதிகமான நேரத்தை தனது இலக்கக் கட்டிலில் கழிப்பதை விடவும் தொலைக்காட்சி இருக்கும் அறைக்குள்தான் கழித்தான். தூக்கத்துக்கும் சாப்பாட்டுக்கும் மட்டுமே அவன் தனது இலக்க கட்டிலை பயன்படுத்துபவனாக இருந்தான்.அங்கு கடமையிலிருந்த பெண் தாதி ஒருவரும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

௦௦௦௦

இப்போது அவனுக்கு மருத்துவமனையில் கிடைத்த அனுபவங்கள் மருத்துவமனையும், ஆங்கில மருத்துவமும் பற்றிய அவனது அபிப்ராயங்களையும் மேலும் வலுப்படுத்தின. அதன் மீதான அவநம்பிக்கைதான் நாளுக்கு நாள் மேலோங்கிக் கொண்டிருந்தது. தன் இலக்கக் கட்டிலில் கிடந்தபடி இவான் இல்லிச்சின் புத்தகத்தின் வாசகங்களால் அதிகம் தீண்டப்பட்டான்.

 

அவரசரமாக மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும் நோயாளிகள் பலர் கடமையிலிருக்கும் மருத்துவ பணியாளர்களால் சரியாக கண்டு கொள்ளப்படாததைக் கண்டு அவனது மீசை துடித்தது. நோயாளிகள் வேதனையில் துடித்தாலும் முனகினாலும் அதைக் கண்டுகொள்ளாது வெகு நேரத்துக்குப் பின்னரே அவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கினர்.  அதுவரைக்கும் போர்க்குணம் கொண்ட வௌ்ளாடுகளான மருத்துவப் பணியாளர்கள்  சாவகாசமாகப் பேசிக்கொண்டும், அல்லது திரைப்படம் பார்த்துக்கொண்டும் இருந்தனர். இவர்களது மகத்தான பணியை கவனிப்பதற்கு கண்காணிப்புக் கமெராக்கள் பொருத்தப்பட வேண்டும் என நினைத்தான்.  

 

இவன் மருத்துவமனைக் கட்டிலில் உறங்கிக் கிடந்த போது , ஒரு நாள் ஒரு கர்ப்பிணித்தாய் பிரசவத்தின் போது இந்த வௌ்ளாடுகளின் கவனயீனத்தால் உயிர் நீத்ததை அறிய நேர்ந்து பீதியும் கோபமும் கொண்டான். “இது மாதிரியான மருத்துவக் கொலைகளிலிருந்து தப்பிப்பதற்கு சட்டத்தில் எத்தனை ஆயிரம் ஓட்டைகள் இருக்கின்றன என்பதை இவனுகள் எண்ணிப்பார்த்திருப்பானுகள்“ என உள்ளூரக் கொதித்தான். இந்தப் போர்க்குணம் கொண்ட ஆடுகளை கசாப்புக் கடைக்குத்தான் அனுப்ப வேண்டும் என அமைதியிழந்து புளுங்கினான். ஆவேசம் கொண்டவனாக தன் கட்டிலிலிருந்து எழுந்து தொலைக்காட்சி அறைப் பக்கமாக ஓடினான். அங்கே அந்த நோயாளிச் சிறுவன் வழமை போன்று தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தான்.

 

இது போன்று முன்பு ஒரு நோயாளி இவர்களின் கவனயீனத்தால் இறந்த போது அந்த மரணத்துக்கு வேறு ஒரு மருத்துவக் காரணம் சூட்டப்பட்டதாக ஒரு நோயாளி சொல்லிக் கேள்விப்பட்டான். மேற்கொண்டு அங்கு தங்கி இருப்பதற்கு அவனுக்கு அச்சமாக இருந்தது. அங்கிருந்து எப்படியாவது டிஸ்சார்ஜ் செய்து கொண்டு உயிர்தப்பி ஓடிவிட வேண்டும் என எண்ணி பரபரப்படைந்தான். மருத்துவர் வந்ததும் எப்படியாவது பேசி சாதிக்க எண்ணினான்.

 

 ஒரு முடிவுக்கு வந்தவனாக மருத்துவமனையில் தன்னுடன் தங்கி இருந்த சகநோயாளிகளிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு மருத்துவமனை வளாகத்தை விட்டும் வெளியேறினான். மருத்துவமனைக் கேற்றைத் தாண்டி வீதியில் இறங்கி முச்சக்கர வண்டிக்காக காத்து நின்றவனுக்கு வீதியில் நடந்து கொண்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டமொன்று கொலைவெறியைத் தூண்டியது. இந்த மாதத்திலிருந்து தங்களது சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூக்குரல் எழுப்பிய படி அந்த வெள்ளாடுகள் வீதியில் இறங்கி வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பதாகை ஏந்தி நின்று கோஷம் எழுப்பிய வெள்ளாடுகளைப் பார்த்த போது , அவனது பக்கத்துக்கட்டிலில் படுத்துக்கிடந்த இரண்டு முதிய நோயாளிகளின் நிழலுருக்கள் அவன் கண்களுக்குள் வெட்டி மறைந்தன. அவர்களின் மரணமும் அவர்களின் கட்டிலில் அவர்களுடன் சேர்ந்தே படுத்துக் கிடந்தது. “மனித உயிர்களுக்கு மயிரளவுக்குத்தான் இவன்களிட்ட மதிப்பிருக்கு“ என முணுமுணுத்துக்கொண்டே முச்சக்கர வண்டிக்குள் ஏறிக்கொண்டான்.

oooooooo  

  •  நன்றியுடன் ஓவியர் புகழேந்தியின் ஒவியம் எடுத்தாளப்பட்டுள்ளது

 

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment