Home » இதழ் 21 » * முரண்- கோமகன் ( சிறுகதை)

 

* முரண்- கோமகன் ( சிறுகதை)

 

                                                                          

2010

ஹொப்பித்தால் ட்ருசோ”வின் பிரதான வாயிலில் இருந்து உள்ளே செல்லும் நீண்ட சாலையில் காலைப்பனி மூடியிருந்தது. அதன் இருமருங்கிலும் நின்றிருந்த பைன் மரங்கள் இலைகளைத்துறந்து துக்கம் கொண்டாடிக்கொண்டு இருந்தன. அதன் கிளைகளில் இருந்த  மொக்குகளில் பனி  உறைந்து காலை வெளிச்சத்தில் பளபளத்தது.  இருபக்கமும் பனிச்சொரியல் மூடியிருக்க நடுவே வீதி சுத்தமாக்கப்பட்டு கருஞ்சாரையாய் நீண்டு சென்றது. ஆங்காங்கே பனியில் சறுக்காமல் இருக்க உப்புத்தூவப்பட்டிருந்தது. “இந்த மரங்களே இப்படித்தான் வசந்தகாலத்தில் இலைகளால் நிறைந்து அத்தனை பறவைகளையும் தமக்குள் வைத்துக்கொண்டு ஒரேயடியாக சந்தோஷத்தைக் கொண்டாடுவதும் பின்னர் குளிர் வந்தவுடன் இருந்த இலைகளையும் பறவைகளையும் பறிகொடுத்து விட்டு துக்கத்திலேயே மூழ்கி கிடப்பதும் எனக்குச் சகிக்க முடியாதிருந்தது. இவைகளுக்கு சந்தோசத்தையும் துக்கத்தையும் ஒரே நேர் கோட்டில் பார்க்கத்தெரியாதா ?”என்று எனது மனம் தத்துவ விசாரத்தில் இறங்கியது. மிருதுளா மிகவும் சோர்வாக எனது தோளில் சாய்ந்து கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். சற்றுமுன்னரே அவளுக்கு மயக்கநிலையில் செயற்கை முறையில் கருக்கட்டப்பட்ட அவளது கருமுட்டை கருப்பையில் வைக்கப்பட்டிருந்தது. டொக்ரர் லு கென் எதுவும் முற்றாக சொல்லாத நிலையில் எனது மனமோ இலைகளை உதிர்த்த பைன் மரம்போல இருந்தது. இந்த சந்தர்ப்பம் அரசாங்கம் எமக்கு தந்திருந்த மூன்றாவது இலவச சலுகை.

 

000000000000000000000000

 

 

 

 

 

 

2016

நானும் மிருதுளாவும் திருமணம் செய்து ஐந்து வருடங்களைக் கடந்திருந்தாலும் எமக்கிடையிலான உறவுநிலைகளில் இடைவெளிகள் இல்லாது இறுக்கமாகவே இருந்தன. திருமண வாழ்க்கையை  ஒரு விபத்தாகக்  கருதாது மனமொன்றிய இலட்சிய தம்பதிகளாவும் மற்றையவர்கள் பார்த்துப் பொறாமைப்படுவதாக நாங்கள் அமைத்துக் கொண்டிருந்தாலும்  எங்களுக்குள்ளே  எங்காவது ஒரு மூலையில் இனங்காண முடியாத  ஏதோவொன்று குறுகுறுத்துக் கொண்டியிருக்கும் போலத்தான் தெரிகின்றது.”பரம்பரையைப் பேணல்” என்ற விடையம்  எனதுமனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.ஒருநாள் இருவரும் டொக்ரர் லு கென் -இடம் பரிசோதனைகளுக்காக வந்தோம். அன்றைய திகதியில் அவரே பாரிஸில் பல உயிர்களை உருவாக்குகின்ற பிரம்மாவாக இருந்தார். மெடிக்கல் செக்அப் ரிப்போர்ட் “எனக்கு உயிரணுக்களில் போதிய பலம் இல்லை” என்று கருப்புக்கொடி காட்டியது. நான் மனத்தால் மிகவும்  உடைந்து விட்டேன். என்னையே நம்பி வந்த மிருதுளாவிற்கு என்ன சொல்லப் போகின்றேன்? அவள் என்ன பாவம் செய்தாள்? அவளை எப்படி ஆற்றப்போகின்றேன்? என்றெல்லாம் என்னுள் மருகிக்கொண்டேன். ஆனால் மிருதுளாவோ எனக்கு இப்படியான தாழ்வுச்சிக்கல் இருப்பதை அறவே வெறுத்தாள். இருக்கும் வரை ஆண்டு அனுபவித்து வாழ்க்கையை சுவைப்போம் என்பது அவளது நிலைப்பாடு. இறுதியாக டொக்ரர் லு கென் காட்டிய வழியில் செல்வதாக முடிவு செய்தோம். நான் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மிருதுளா மருந்துகளின் தாக்கத்தினால் தன்னை உருக்கி கொண்டிருந்தாள். நாம் என்னதான் தலைகீழாக நின்றாலும் எமது பிறப்பின் ரகசியத்தில்  ஏலவே பதியப்பட்டிருந்த  ப்ரோக்கிராம்களே வெற்றி கண்டன. எமக்கு ஒரு பரம்பரை உருவாகுவதற்கு வாய்ப்பே இல்லை என்று டொக்ரர் லு கென் உறுதியாகவே சொல்லி விட்டார்.

 

 2017 ஜனவரி

மிருதுளா சந்தோசமாகவே வளைய வந்து கொண்டிருந்தாள். எனக்கு இந்த நிகழ்ச்சி நிரலில் இருந்து மீள நீண்ட காலம் தேவைப்பட்டது. மிருதுளாவின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை என்னால் கண்டு பிடிக்க முடியாது இருந்தது. மொத்தத்தில் நான் அவளிற்கு நடித்து கொண்டிருந்தேன். எனது பொய்யான நடப்புகளும் எனக்கு உடன்பாடில்லாமல் இருந்தன. சிலவேளைகளில் இந்த எல்லாவிதமான  பொய்களுமே  ஒரு தற்காலிகமான மகிழ்வையும் தப்பித்தலையும் ஏற்படுத்துகிறதோ என்ற ஐயப்பாடும் என்மனதில் அவ்வப்பொழுது எழுந்ததுண்டு. அதே வேளையில் பொய் என்ற ஒன்று இல்லாதிருந்தால் இந்த வாழ்வும்  சுவாரஸ்யம் இன்றிப் போகுமல்லவா? என்று எனது மனம் என்னை சமாதானப்படுத்துவதும் உண்டு? என்மனத்தில் இருந்த தாழ்வுச்சிக்கல் பெரியளவில் வளர்ந்து என்னை அழுத்திக்கொண்டிருந்தது. எல்லா வழிகளிலும் நான் என்னைக் குறுக்கிகொள்ள ஆரம்பித்தேன். மிருதுளாவுடன் மட்டுமே உற்ற தோழனாக இருந்தேன். ஆனால் அதுவும் எனக்குத்தெரிந்து நடிப்பாகவே இருந்தது.

00000000000000000000000000000000

தகிக்கும் பாலைவனத்தில் அடங்காத்தாகத்துடன் சென்றுகொண்டிருந்த பாலைவனப்பயணிக்கு நீர்ச்சுனை ஒன்று தட்டுப்பட்டாற்  போல “ஓர் பிள்ளையை தத்து எடுத்து வளர்த்தால் என்ன?”என்று எனக்கு ஒரு யோசனை உதித்தது. நினைப்புடன் நின்று விடாது அது தொடர்பான தகவல்களை எடுக்கத்தொடங்கினேன். ஒரு பிள்ளையை எப்படி எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்று எனக்குள்ளேயே கற்பனைகளை வளர்த்தேன். மனதில் மீண்டும் ஓர் புதிய உற்சாகம் பிறந்தது. ஒரு நாள் மிருதுளாவிடம் சந்தோசமான தருணமொன்றில்,

“ஒன்று சொன்னால் கோவிக்க மாட்டீரே ?”

“இல்லை சொல்லுங்கோ.”

“எங்களுக்கு பிள்ளை விசயத்திலை எல்லா வழியும் அடைச்சு போட்டுது. நாங்கள் ஒரு பிள்ளையை தத்து எடுத்து வளத்தால் என்ன?”

“உங்களுக்கு என்ன நடந்தது ? நாங்கள் சந்தோசமாய் தானே இருக்கிறம்? ஊருலகத்திலை எல்லாம் நடக்கிறதுகள் பாக்கிறியள் தானே? பெத்ததுகளே தாய் தேப்பன்ரை சொல்வழி கேளாமல் தலைகீழாய் நடக்குதுகள். இதுக்குள்ளை எடுத்து வளக்கிறது சரியாய் இருக்குமே? எல்லாம் எழுத்துப்படிதான் நடக்கும். எனக்கு உதிலை துண்டாய் விருப்பமில்லை”.

“இல்லை மிருதுளா சொல்லுறதை கொஞ்சம் கேளும். இப்ப எங்களுக்கு வயசு இருக்கேக்கை இதுகள் தெரியாது. வயசு போகப்போக இதுவே பெரிய பிரச்சனையாய் இருக்கும். எங்களுக்கும் எங்கடை வாழ்க்கையிலை ஒரு பிடிப்பு வேணுமெல்லோ ?”

“உங்களிலை பிழையை வைச்சு கொண்டு ஏன் என்னை அரையண்டப்படுத்துறியள் ?

அமிலமாக அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.

“உம்மட்டை இருந்து இப்பிடி ஒரு கதையை நான் எதிர்பார்க்கேலை.”

“இல்லை. சொறி. நான் வேணுமெண்டு சொல்லேலை. இந்த கதையை திருப்பவும்  எடுக்க வேண்டாம்.” 

இல்லை கொஞ்சம் யோசியும் மிருதுளா. சண்டையிலை எவ்வளவு குழந்தையள் அப்பா அம்மா இல்லாமல் ஹோமிலை இருக்குதுகள். அதிலை ஒண்டை எடுத்துவளப்பம். எங்களுக்கு புண்ணியமாய் போம்.”

“உங்களுக்கு என்ன நடந்தது ……………..?”

என்று அழுதவாறே அறைக்குள் சென்று விட்டாள் மிருதுளா.

00000000000000000000000000000000

மிருதுளாவின் மனசு வலித்தது. ஒரு பெண்ணாக பிறந்தது அவளது பாவமா என்ன? அவளால் அழுகையை கட்டுப்படுத்தவில்லை.

“கலியாணம் கட்டின நாளையிலை இருந்து இண்டு மட்டும் இவருக்கு நான் என்ன குறை வைச்சன் ? இவ்வளவு காலமும் பிள்ளையில்லை எண்ட குறை அவருக்கு தெரியக்கூடாது எண்டு அவரை எவ்வளவுக்கு சந்தோசப்படுத்தேலுமோ அவ்வளவுக்கு சந்தோசப்படுத்தினனே? என்னைப் பாத்து இப்பிடி சொல்ல அவருக்கு எப்பிடி மனம் வந்துது? இவருக்காகத்தானே மூண்டுதரம் எல்லா சித்திரவதையளையும் தங்கினன். ரெஸ்ட்ரியூப்பேபியை பற்றி இவருக்கு என்ன தெரியும்? ஒருக்கால் சுகமில்லாமல் வந்தாலே எனக்கு வயிறு எவ்வளவு நோகுமெண்டு இவருக்கு தெரியுமே? அனுபவிச்சிருந்தால் தானே இதுகளெல்லாம் தெரியவரும். அதோடை இப்ப எடுத்த மருந்துகளால எத்தினை முட்டையள் வந்திருக்கும்? இனி  மருந்துகளின்ரை சைட்  இஃபெக்ட்ஸ்…. இதெல்லாம் எங்கை இவருக்கு விளங்க போகுது? என்னை மட்டும் சிம்பிளாய் பிழை சொல்ல எப்பிடி மனம் வந்திது? இது முதல்லை தெரிஞ்சிருந்தால் இந்த கலியாணத்துக்கு ஓம் சொல்லியிருக்க மாட்டனே? அம்மா அப்பா சரியாய் தானே விசாரிச்சு இருப்பினம்? இல்லாட்டில் அவையை ஏய்க்காட்டி  போட்டினமோ? சிலநேரம் இதைச்  சாட்டாய் வைச்சு என்னை டிவோர்ஸ் எடுக்க போறாரோ? நோ………. அப்படி செய்யிற ஆள் அவர் இல்லை. அவரும் பாவம் என்ன செய்வார்? எனக்கு மட்டும் பிள்ளை வேணுமெண்டு ஆசை இல்லையே? ஆனா என்னிலை தான் பிழை எண்ட மாதிரி கதைச்சது தான் என்னாலை தாங்கேலாமல் கிடக்கே…..”

என்று பலவாறாக அவள் மருகினாள். அழுது அழுது கண்கள் களைத்துப் போய் ஒருகட்டத்தில் அவள் நித்திரையாகி விட்டாள். 

0000000000000000000000000000000

முரண் 01

இந்த இடத்தில் எனது கடந்த காலத்தையும் நான் சொல்லியாக வேண்டும். எனது சிறுவயதில் எனக்கு ஐந்து வயது கூடிய  மச்சான் முறையானவன் ஒருவன் எல்லாவகையிலும் மிகவும் நெருக்கமாக இருந்தான். அவன் ஒரு பிஞ்சிலே பழுத்த பிரகிருதி. எங்களுக்குள் தெரியாத ரகசியங்கள் என்று எதுவும் இருந்ததில்லை. அவனே எனக்கு பல செக்ஸ் கதைகள் சொல்லி முதல் முறையாக சுயஇன்பம் மூலம் எனது விந்தை வெளியேற்றிய வாத்தியார். மிகுந்த வலியுடன் தடிப்பாகப் போன விந்தைப் பார்த்து நான் பயந்து விட்டேன். ஆனால் அவன் பல கதைகளை சொல்லி என்னை உருவேற்றினான். அதன் பின்னர் அவன் என்னுடன் தொடுகைகள் முத்தங்கள் என்று வளர்ந்து முயங்கல் வரை என்னை அவனது கட்டுக்குள் கொண்டு வந்தான். ஒருமுறை எமது அயலவர் ஒருவர் நாங்கள் வயல்வெளியில் இருந்த பற்றைக்குள் பிணைந்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு எனது அப்பாவுக்குப் போட்டு கொடுக்க அப்பா அடித்த அடியில் உயிர் போய் வந்தது. அவர் அடித்ததுடன் நிற்காது ஓர் உற்ற தோழனாகப் பல புத்திமதிகள் சொல்லியதால் அவனை மறந்து எனது படிப்புகளில் கவனத்தை செலுத்தினேன். ஆனால் இந்த நிகழ்வானது எனது ஆழ்மனதில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகக் குந்திக்கொண்டிருந்தது.

நான் இங்கு வந்ததின் பின்னரும் எனது நண்பர்கள் தங்களது ஆண்மையை பரிசோதிக்கும் இடங்களான “றியூ செயின்ட் டெனியோ” இல்லை ஹொலெண்டில்  இருக்கும் “டென்ஹா” – வோ என்னை ஈர்க்கவில்லை. செக்ஸ் என்றாலே எனக்கு ஒருவிதமான அலர்ஜியை கொண்டு வந்தது. இந்தநிலையில் தான் நான் அம்மா அப்பாவின் ஏற்பாட்டில் நான் மிருதுளாவை கைப்பிடிக்க வேண்டி இருந்தது. அவளை நான் கலியாணம் செய்தவுடன் எனது வாழ்வில் பல திருப்பங்களும் வந்து ஒட்டிக்கொண்டன. அவளை நான் ஓர் உற்ற தோழியாகவே பார்த்து வந்தேன். என்னளவில் அவளுடனான முயங்கல்களையும் ஒரு கடமைக்காகவே செய்து வந்தேன். அவளுடன் முயங்கும் பொழுது எனது மச்சான் உடனான சிறுவயது  பிணையல்களே எனக்கு  நினைவில் வந்து தொலைத்தன.

ஆனால் என்னை முற்று முழுதாக நம்பி வந்த அவளின் அழுகையும் பிள்ளை விடயத்தில் எனது சொல்கேளாத அவளின் பிடிவாதக்குணமும் என்னை மிகவும் துயர் கொள்ளச் செய்தது. ஆனால் நானும் சாதாரண ஆசாபாசங்களுடன் உருவாக்காப்பட்ட உயிரிதானே? எனக்கொரு வம்சம் வேண்டுமென்று எதிர்பார்ப்பது பிழையா? என்னுடைய கொள்ளுத்தாத்தா போட்ட விதையின் விருட்சம் இன்று பல கிளைகளைப் பரப்பி  நிமிர்ந்து நிற்கின்றது. அதில் இருக்கும் ஒரு கிளையாகிய நான் மட்டும் கருகிப்போவதா? எது எப்படியோ இந்த விடயத்தில் மிருதுளாவை தொடர்ந்தும் வற்புறுத்துவதில்லை என்று முடிவு செய்தேன். இப்பொழுதெல்லாம் எமக்கிடையே உடல்ரீதியான தொடுகையே நின்று விட்டது. நான் ஒருமுறை என்னுடன் வேலைசெய்கின்ற கொலீக்-உடன் இதுவிடயமாக பேசும் பொழுது எனது உடல் ஆசையை தெரிந்து கொண்டு அவன் வேறுபக்கமாக என்னை நகர்த்தி விட்டான். எனது ஆழ்மனதில் உறை நிலையில் இருந்த குரங்கு மீண்டும் கொப்புக்குக் கொப்பு தாவியது.

ஆசை என்பது  எப்பொழுதுமே எங்களை ஆட்டிப் படைக்கிறது. அதற்குப் பால் பேதம் ஒரு பொருட்டல்ல. ஒரு விடயத்தில் ஆசை வைத்து அது உடனே கிடைத்து விட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் ஆசைப்பட்டது கிடைக்காது என்றாலுமே பிரச்சினை இருக்காது. இந்த கிடைக்கும்,கிடைக்காது என்ற திரிசங்கு நிலை வரும்பொழுதுதான் அது ஒரு பெரிய பிரச்சனையாக எமக்குத் தெரிகின்றது. இந்த ஆசையானது ஒரு கட்டத்தில்  தீவிரமடைந்து  பின் வெறியாக ஆவேசநிலைக்குள் கொண்டு வந்துவிடும் .பயம் ஒரு பக்கமும், வெறி ஒரு பக்கமும் என்று இரண்டு பக்கமுமாகப் பிசையப் பிசையக் எம்மில் குழப்பம் உண்டாகும். மனதில் எவ்வளவுதான் தைரியம் இருந்தாலும் எமது புத்தி தடுமாறிவிடும்.இடம் பார்த்து எனது கொலீக் என்னை நன்றாகவே குழப்பி விட்டான். அதில் நான் வசமாகவே மாட்டி விட்டேன். என்னால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. காலப்போக்கில் அதில் பைத்தியமாகவே இருந்தேன்.

0000000000000000000000000000000000000000

2017 நவம்பர்-முரண் 02

கால ஓட்டம் மிருதுளாவின் கவலைகளுக்கு ஒத்தடம் கொடுத்தது. அவளும் இயல்பாக இருந்தாலும் மனதின் மூலையில் சோகம் ஒன்று ஊடறுத்துப் பாய்ந்து வலியைத்தந்து கொண்டிருந்தது. அன்று மிருதுளா இரண்டு கிழமையாக வருடாந்த விடுமுறையில் வீட்டில் நின்றாலும் அன்று வழமையாக எழும்பும் நேரத்திற்கே எழுந்து விட்டாள். காலை கோப்பியைத்  தயாரித்துக்கொண்டிருக்கும் பொழுது, கடந்த சில மாதங்களாக இருவருக்கும் பொதுவான வங்கிக்கணக்கில் இனந்தெரியாத வகையில் 200யூரோக்கள் எனது கிரெடிட் கார்ட்- ஆல்  எடுக்கப்படுவது நினைவுக்கு வரவே போட்ட கோப்பியை எடுத்துக் கொண்டு வந்து செற்றியில் இருந்தவாறே மிருதுளா தனது மடிக்கணணியை விரைவாக இயக்கி வங்கிக்கணக்கில் புகுந்தாள். இந்த மாதமும் 200 யூரோ எனது கிரெடிட் கார்ட் விழுங்கியிருந்தது. அதில் இருந்த  விபரம் சரியாக மிருதுளாவிற்கு விளங்கவில்லை. அதைப் பிரதி பண்ணி கூகிளில் பதிந்து தேடினால் அது “கே”க்கள் கூடும் ஓர் கிளப்பாக இருந்தது. அவளால் தனது கண்களை நம்ப முடியவில்லை. தனது பிறந்தநாளும் அதுவுமாகக்  கணணியை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தாள். இவ்வளவு ஒரு பெரிய விடையத்தைத் தனக்கு மறைத்து நம்பிக்கை துரோகம் செய்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாக கணணியை அப்படியே திறந்து வைத்து விட்டு அவசரமவசரமாக தனது ஷுட்கேசில் அகப்பட்ட உடுப்புகளை திணித்துக்கொண்டு தனது பாஸ்போர்ட்டையும் எடுத்துக்கொண்டு   சார்ள்ஸ் டு கோல் விமானநிலையம் நோக்கி விரைந்தாள்.

0000000000000000000000000000

இரண்டு கிழமை வருடாந்த லீவில் மிருதுளா வீட்டில் இருப்பதுடன் இன்று மிருதுளாவின் பிறந்தநாளுமாகையால் நான் அவளை சந்தோசமாக ஒரு றெஸ்ரோரன்ட்க்குக்  கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று மனதில் எண்ணியவாறே வேலையால் வரும் வழியில் ஒரு பொக்கேயும் கேக்கும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். அதிசயமாக வீட்டுக் கதவு பூட்டியிருந்தது. எனது கதவு திறப்பால் திறந்து கொண்டே மிருதுளாவை அழைத்தவாறே உள்ளே நுழைந்தேன். எந்த அறையிலும் அவளை காணக்கிடைக்கவில்லை. நான் ஹோலிற்குள் வந்தபொழுது அங்கிருந்த செற்றியின் முன்னால் இருந்த சிறிய மேசையில் அவளது மடிக்கணனி அணைக்கப்படாமல் இருந்தது. அதில் இரண்டு ஜன்னல்கள் குறுக்கப்பட்டு ஒன்றாக இருந்தன. ஒன்றில் அந்த மாதத்து கிரெடிட் கார்ட் கொடுப்பனவு விபரங்களும் மற்றயதில் நான் சென்று வரும் கே கிளப் முகவரியும் இருந்தன. 

௦௦௦௦

 

  • நன்றியுடன் ஓவியர் புகழேந்தி, மற்றும் ஓவியர் சீலனின் ஒவியங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment