Home » இதழ் 21 » * 9/11 பின்னரான இலக்கியங்களில் முஸ்லிம் பெண் கதையாடல் ஒரு நோக்கு- ஷமீலா யூசுப் அலி

 

* 9/11 பின்னரான இலக்கியங்களில் முஸ்லிம் பெண் கதையாடல் ஒரு நோக்கு- ஷமீலா யூசுப் அலி

 

 

 

9/11 க்குப் பின்னான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்

————————————

 2001 இன் ஒரு புலரிப் பொழுது. ‘அமெரிக்கா அழிந்து விட்டது’ இப்படி என்னுடைய பெரியம்மா எனக்குச் சொன்ன போது நான்  தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். அந்த விடயம் எனக்குள் ஜீரணமாவதற்கு சில மணித்தியாலங்கள் எடுத்தன. ஆனால் அப்போது எனக்குத் தெரியாது  அந்த நிகழ்வு என்னுடைய வாழ்க்கையையும் இன்னும் பல மில்லியன் மக்களின் இருப்பினையும் என்றைக்குமாய் மாற்றிவிடப் போகிறதென்பது.

9/11 அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் இடிந்து விழுவதை உலகெங்கும் உள்ள மக்கள் தொலைக்காட்சிகளில் பேரதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதி உயர் பாதுகாப்பு பற்றியும் யாராலும் தொட முடியாத இடங்கள் பற்றியும் இருந்த பிம்பங்கள் சரிந்து கொண்டிருந்தன.அந்த அதிர்வு, இலங்கையில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சிற்றூரில் ஒரு சிங்கள விவசாயியை ஒரு13 வயது முஸ்லிம் சிறுவனிடம் பயங்கரவாதத்தைத் தூண்டும் இஸ்லாம் பற்றிக் கேள்வி கேட்கத் வைத்தது. 

அந்த அதிர்வு, பெண் வலுவாக்கம் பற்றிப் பேசும் நீங்கள் ஏன் இந்த ஹிஜாபை அணிகிறீர்கள் என்று என் பல்கலைக் கழக சகபாடிகளை குழம்ப வைத்தது.

அந்த அதிர்வு,உலகில் நடக்கின்ற எல்லாப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தலைகுனியவும் மன்னிப்புக் கேட்கவும் வைத்தது.

பின்னர், அல்கைதா அந்தத் தாக்குதலுக்கு உரிமம் கோரியதும் அதைச் சுற்றி ஏராளமான கன்ஸிப்ரஸி தியரிகள் எழுந்ததும் நாம் எல்லோரும் அறிந்தவை.

ஒரு அரபு ஆய்வாளர் எழுதுகிறார். After 9/11 Muslims became the new villains, the New Souviet Union.

அமெரிககா, முஸ்லிம் உலகத்தின்  அடக்குமுறை அரசாங்களுக்கெதிராக திரண்டெழுந்த  கம்னியூஸ்ட்களையும் ஏனைய இஸ்லாமியச் சிந்தனைப் பள்ளிகளையும் நசுக்குவதற்காக தனக்கு அல் கைதாவுடனும் வஹாபி சிந்தனையியலோடும்  சவூதி அரேபியா போன்ற ஏகாதிபத்திய அரசுகளோடும் இருந்த இறுக்கமான பிணைப்பை, அப்படியே மறந்து விட்டது. அல்லது மறந்து விட்டதாக நடித்தது.பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதலுக்கு காரணமாகச் சொன்ன இஸ்ரேலின் அத்து மீறல்களுக்கு அமெரிக்கா துணை போன துரோகத்தின் அநீதியின் வரலாற்றையும் அப்படியே பொது வெளியிலிருந்து புறந்தள்ளி விட்டது.

உலகம் முழுவதும். எல்லோருடைய கவனமும் ஒரே குழு மக்கள் மீதும் அவர்கள் பின்பற்றும் கொள்கையின் மீதும் குவிந்தது.

முஸ்லிம்கள் என்ற மக்கள் குழு இஸ்லாம் என்ற கொள்கை இந்த இரண்டும் துப்பவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் எல்லோருடைய தொண்டைகளுக்கும் சிக்கிக் கொண்டன.

War against Terrorism பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை ஜோர்ஜ் டபிள்யூ புஷ் பிரகடனம் செய்தார். மற்ற எல்லாக் குரல்களையும் நசுக்கிக் கொண்டே  அந்த ஒரே குரல் மேல் எழுந்தது.

எங்கள் முன்னிலையில் ஒரே ஒரு தெரிவு தான் இருந்தது.

Us vs  them

USA vs இஸ்லாம்.

இன்னும் அழகான சொற்களில் சொல்வதானால் 

நாகரீகமடைந்தவர்கள் vs நாகரீமற்ற காட்டுமிராண்டிகள்.

எழுத்தாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும்  உலகத்தின் ‘முஸ்லிம்களுக்கெதிரான இந்தப்  பொது இணைவு’  குறித்து  தெளிவுபடுத்துவதற்காகத் தங்களுடைய சொந்த விளக்கப்பதிவுகளை முன்வைத்தார்கள்.

“நீங்கள் ஒன்றில் எங்களோடு இருக்கலாம், அல்லது எங்களால் முத்திரை குத்தப் பட்டிருக்கும் எங்களுடைய எதிரிகளோடு இருக்கலாம்”. அந்த இரண்டிற்கும் இடையில் வேறொன்றும் கிடையாது.அந்த எதிரிகள் சமாதானத்தினதும் ஜனநாயகத்தினதும் எதிரிகள்.

சாமுவேல் ஹன்டிங்டன் போன்ற,பெரு நிறுவன புத்திஜீவிகளால் அதீத கற்பனைக்குள்ளாக்கப்பட்டு  (Romanticized) முன்னிறுத்தப்பட்டிருந்த  West vs Rest என்கிற இரட்டை எதிர்நிலை(Binary opposition) க்கு புஷ் செயல் வடிவம் கொடுத்தார்.

ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு,  ஜனநாயகத்தினதும் சமாதானத்தினதும் தேவ தூதர்கள். அவர்கள் மனித இனத்தின் காவலர்கள். அதன் நாகரீகத்தை போஷித்து வளர்ப்பவர்கள். உலகத்திற்கு முன்னேற்றத்தையும் நலனையும் பரிசளிக்கும் முற்போக்காளர்கள்.-  கயிற்றின் மறு நுனியில் இருக்கும் மனிதர்கள் பயங்கரவாதத்தின் வேர்கள். அவர்கள் மனித சமூகத்தை பூண்டோடு அழித்தொழிக்கத்தூண்டுகின்ற கொள்கையை சுமந்தவர்கள். நாகரீகமற்ற பிற்போக்காளர்கள்.

இந்த மனித இனத்தின் காவலர்களுக்கு ,ஒவ்வொரு சமூகமும் ஒரு குறிப்பிட்ட ஆதிக்கக் கலாச்சாரத்தின் கார்பன் பிரதியாக இருக்க வேண்டும். இது தான் எதிர்பார்ப்பு. அப்படி இல்லாதவர்கள் பழமைவாதிகள், நாகரீகமற்றவர்கள்.  இது எனக்கு ஐரோப்பாவின் (Anti-Semitism) அன்டி செமடிஸம் என்ற யூதர்களுக்கெதிரான துவேஷத்தை நினைவூட்டுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது அன்டி செமடிஸம் ஐரோப்பிய சமூகங்களில் அதன் உச்சத்தில் இருந்தது. யூதர்கள் அவர்களுடைய வழமைகளை விட்டு நீங்கி ஐரோப்பிய மைய( Eurocentric)  பகுத்தறிவுவாத நவீனத்துவத்தை தழுவுமாறு எதிர்பார்க்கப்பட்டார்கள். மிகப் பாரியளவிலான மக்கள் தங்களுடைய மதம் மற்றும் கலாச்சாரத்தை வைத்து கேள்விகளுக்குட்படுத்தப்பட்டார்கள். இனஅடையாளத்தை கிரிமினலைஸ் பண்ணுவதன் மூலம் ஹோலோகொஸ்ட் இறுதியில் நடந்தேறியது. ‘clashes of fundamentalisms; நூலை எழுதிய தாரிக் அலி 9/11 க்குப் பிறகு முஸ்லிம்களை சுற்றி எழுந்துள்ள துவேஷம்,  போன நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த யூதர்களுக்கெதிரான துவேஷத்துக்கு ஒப்பிடுகிறார்.

௦௦௦௦

9/11 இற்குப் பின்னர் முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்கள் எப்படிப் பார்க்கப்பட்டார்கள்    ?  

—————————————————————————————————————————-

இஸ்லாத்தைப் பற்றியும் அது பெண்களை எவ்வாறு நடத்துகின்றது என்பது பற்றியுமான வாதப்பிரதி வாதங்கள் உலகின் mainstream பொதுபோக்கை நோக்கி நகர்த்தப்பட்டன. மேற்கத்திய பெண்ணிலைவாதிகள், பெண்வெறுப்புக் கொண்ட  பெண்களை அடக்கியாளும் தலிபான்களுக்கெதிராக கிளர்ந்தெழுந்தனர்.கொன்டலீஸா ரைஸும் ஹிலரி க்ளின்டனும்  மத்தியகிழக்கிலும் பர்ஸியன் வளைகுடாவிலும் பத்தாம்பசலி சமூகங்களில் அடைபட்டு  கிடக்கும் பெண்களுக்காக கண்ணீர் வடித்தார்கள்.

மேற்கத்தேய பெண்ணிலைவாதிகள் ஜோர்ஜ் புஷ்ஷுடன் இணைந்து  இந்த சமூகங்களில் உள்நுழைந்து ஜனநாயகத்தை  நிலைநாட்ட வேண்டுமென்று குரல் கொடுத்தார்கள். அதற்காக அந்த நாடுகளைக் கைப்பற்றி  அவற்றின் நடப்பு ஆட்சிகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.பெண் வெறுப்பு இஸ்லாத்தையும் அதன் அடையாளம் கொண்ட  கலப்புக்களையும் களைந்தெறிய , அமெரிக்க சிப்பாய்கள் அந்த தேசங்களில் வந்திறங்கினார்கள். ஆணாதிக்கத்துக்கும் ஒடுக்குகின்ற புர்காவுவிலிருந்தும் பெண்களை விடுதலை செய்யும் தங்களுடைய உயர்ந்த பணியை  கொண்டு நடாத்துவதற்கு அவர்களுக்கு பெண்ணியல் வாதிகளின் பெருமளவு ஆதரவு கிடைத்தது.

இங்கு ஒரு சுவீடன் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக பால்நிலைஆய்வாளர் சோபியா இவர்சன் (Sofia Ivarsson) குறிப்பிடுகிறார்

“இந்தக்கருத்து நாங்கள் வாழும் உலகத்தின் இந்தப் பகுதியில் நாங்கள் பால்நிலை சமத்துவத்தை அடைந்து விட்டோம் என்பதன் அடியில் எழுகிறது. ஒடுக்கப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களை ஆண்களுக்குச் சமமான அந்தஸ்த்தைப் பெற்றுக் கொடுக்க உதவப் போகிறவர்கள், படைப்பிரிவுகளிலுள்ள மேற்கத்திய ஆண்கள். இது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. இராணுவம் என்பதை உலகிலுள்ள பால்நிலை சமத்துவம் பேணும் நிறுவனங்களிலொன்றாக கொஞ்சம்  கூட பார்க்க முடியாது.”  மேலும் இவர்ஸன், இந்தவிதமான உலகநோக்கு (world view) அந்தந்த நாடுகளில் பெண்கள் வலுவாக்கத்துக்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண்ணிலைவாதக் குழுக்களுக்கு தடங்கலை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார். உணமையில் இவ்வாறான அமைப்புக்கள் ஈராக் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இயங்கி வந்தன.

இராணுவம், போர் இவற்றின் ஊடுருவல்களால் அதிகம் பாதிக்கப்படப் போவதும் நசுக்கப்படப் போவதும் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப் போவதும் பெண்கள் தான்.

ஆப்கானிஸ்தானையும் ஈராக்குக்கும் எதிரான தாக்குதல்களில் ‘அடக்கியாளப்படும் பெண்களை விடுதலை செய்தல் என்பது          அமெரிக்க போர் பிரச்சாரத்தில் முன்வைக்கப்ப்ட்ட ஒரு வாதம். பெண்ணியம்  யுத்தத்தை நியாயப்படுத்துவதற்கான ஒரு வாதமாகப் பயன்படுத்தப்பட்ட அவலம் இங்கு தான் நேர்ந்தது.

 ‘அனேகமான ஈராக்கியர்கள்,அவர்கள் சதாம் ஹுஸைனை வெறுத்தாலும், இப்போது ஆக்கிரமிப்பின் கீழுள்ள அவர்களின் வாழ்க்கையை விட சதாமின் கீழிருந்து வாழ்க்கை எவ்வளவோ மேலானது என்கிறார்கள் என்கிறார் தாரிக் அலி.

ஒரு பெண் தனக்கு விருப்பமானதை சுதந்திரமாகத் தெரிவு செய்வதற்கான நிலையை ஏற்படுத்தாமல், புர்காவிலிருந்து பெண்களைப் பலவந்தமாக வெளியேற்றுவது அவளை விடுதலை செய்வது அல்ல, அவளை நிர்வாணமாக்குவது. அது அவமானத்தினதும் கலாச்சார ஏகாதிபத்தியதினதும் செயல். ஒரு பெண்ணை புர்காவைக் கழற்றப் நிர்ப்பந்திப்பது, அவளை புர்காவை அணியக் கட்டாயப் படுத்துவது போன்றே மோசமானது. இது புர்காவைப் பற்றியதல்ல, நிர்ப்பந்தம் பற்றியது. 2001 இல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கும் போது மேற்கத்திய மிதவாத பெண்ணிய குழுக்கள் தார்மீகக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டன. ஆப்கான் பெண்கள் தலிபான்களுக்கு கீழே மிக தீவிரமான கஷ்டங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.- அருந்ததி ரோய்

 

பல ஆய்வாளர்கள் இந்த  பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தத்தால்  பெண் விடுதலை எப்படிப் போனாலும் அந்தந்த நாடுகளின் பால் சமத்துவம் , மிகப் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியதற்கான ஆதாரங்களை முன்வைக்கிறார்கள்.

17 வருடங்கள் தாண்டித் தொடர்கின்ற பயங்கரவாதத்துகெதிரான  யுத்தம் சாதித்தது என்ன? .பர்சியன் குடாவிலும் மத்தியகிழக்கிலுமுள்ள முஸ்லிம் சமூகங்களுக்கு எந்தளவு ஜனநாயகத்தையும் பால் சமத்துவத்தையும் கொண்டு வர மேற்குறித்த போர்களினாலும் ஆக்கிரமிப்பினாலும் முடிந்திருக்கிறது ?

௦௦௦௦

9/11 குப் பின்னர் வந்த நாவல்கள்,திரைப்படங்கள் விருதுகள் அதிலிருந்த பெருங்கதையாடல்அதில் எப்படிப் பெண் கதையாடல் இருந்தது.

————————————————————————————————————————————————————————————————————

இலக்கியத்திலும் புனைவுகளிலும் முஸ்லிம் பழமைவாத அடிப்படை வாத  சமூகங்களில் அடக்குமுறைக்குள்ளாகும் அறபுப் பெண்கள் பற்றிய நாவல்கள் எழுதப்பட்டன அல்லது பாரியளவு உற்பத்தி செய்யப்பட்டன. அவை உலகம் முழுவதும் பரபரப்பாக விற்பனையாகின.

Mayada- the daughter of Iraq ,Princess, Daughters of Arabia, Behind the veil, Infidel இப்படியான  தலைப்புக்களில் ,கண் மட்டும் திறந்து பாதி மூடிய முகப் பெண்களின் கவர்ச்சியான முகப்புப் படங்களுடன் வெளிவந்தன.இலங்கையில், சிங்கள மொழியில் கூட  இந்த நாவல்களில் பெரும்பாலானவை மொழி பெயர்க்கப்பட்டு  பல்கலைக்கழகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன்.

இந்த வகையான பெருங்கதையாடல் கொண்ட நூல்கள் தொடர்ந்து எழுதப்பட்டன, சிலவற்றுக்கு  சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றிலிருந்து ஹொலிவூட் பிரமிக்கத்தக்க கதைகளை  உருவாக்கி அவற்றை பிரமாண்டமான திரைப்படங்களாக்கத் தொடங்கின.  அவற்றுக்கு ஒஸ்கார்கள் வழங்கப்பட்டன. ஹர்ட் லொகர்களும் கைட் ரன்னர்களுக்கும் அடக்கப்பட்டவர்களினதும் விடுதலை செய்தவர்களதும் கதையைச் சித்தரித்தன. உலகம் முழுவதும் பாரியளவு வரவேற்பு கிடைத்தது.

இன்றைய  பிரதான மைய நீரோட்ட மீடியாவும், புனைவுகளும்  முஸ்லிம் பெண்களை அவர்களுடைய சில பொதுமைப்படுத்தப்பட்ட  வடிவங்களை வைத்தே சித்தரிக்கின்றன. அனேகமாக அவை ஒரியன்ட்லிஸ்ட் சிந்தனைகளை அடியாகக் கொண்டு எழுபவை. முஸ்லிம் பெண்களுக்குள்ளிருக்கும் தனித்துவம், வித்தியாசங்கள்,பன்மைத்துவங்களை எல்லாம் இந்தக் கண்ணாடி காட்டுவதில்லை. அவர்களிருக்கும் உள்ளார்ந்த உணர்வுகள், வாழ்வியலை அவை கண்டு கொள்வதில்லை.

முஸ்லிம் பெண்களைப் பற்றிய மேற்கின் பொதுவான நிலைப்பாடு. அவர்கள்  பாதிக்கப்பட்டவர்கள்.  ஒன்று அவர்கள் தங்களுக்கெதிரான அடக்குமுறைகளைச் சரி கண்டு அவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.அல்லது அதற்கெதிராகப் போராடுகிறார்கள். 

மேற்கைப் பொறுத்தவரை, விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் பெண்களைக் காப்பாற்றுதல் என்ற ஒரு விடயம், அது, முஸ்லிம் உலகத்திற்குள் இராணுவரீதியாகவும் அரசியல் சமூக ரீதியாகவும் உள்நுழைவதற்கான அதிகாரத்தையும் நியாயத்தையும் தரப் போதுமானது.

முஸ்லிம் பெண்ணின் புறத் தோற்றம்,அவள் அணிந்திருக்கும் உடைகள் அவளை அடக்கியாளப்படுபவளாகவும், அடக்குமுறையிலிருந்து தப்பி ஓடுபவளாகவும், ஆண் நினைத்தபடி பொம்மையாய் ஆட்டிவைக்கப்படுபவளாகவும் மட்டுமே அர்த்தப் படுத்தப்படுகின்றன.ஒரு முஸ்லிம் பெண்ணுக்குள் இருக்கக் கூடிய ஏராளமான நுண்ணுணர்வுகள்,தன்மைகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.

இங்கு குறிப்பிடத்தக்க இன்னொரு சுவாரஷ்யமான விடயம் முஸ்லிம் பெண்கள் எனும் போது அனேகருக்கு ஞாபகம் வருவது அறபு பெண்கள் தான். முஸ்லிம் சனத்தொகையில் 17% மட்டுமேயுள்ள மத்தியகிழக்குக்கு அப்பால் இந்துனீசியா,மலேசியா,ஆசிய நாடுகள்,ஆபிரிக்க நாடுகள், ஐரோப்பா இங்கெல்லாம் பரந்து வாழ்பவர்களும் இந்த ஓரினத்தன்மை (homogenious identity)  அடையாளத்துக்குள் சுருக்கப்பட்டு விடுகிறார்கள்.

இந்த ஒரே  அச்சில் நின்று வார்க்கப்படும் ஏராளமாக இலக்கியங்கள் இன்று எங்களுடைய வாசிப்பு வெளியை ஆக்கிரமித்துள்ளன.அடக்குமுறைக்காளானவர்கள் அவர்களை விடுதலை செய்ய வந்தவர்கள் என்ற இரட்டை எதிர்நிலையில் இந்தப் பெருங்கதையாடல்கள் நிகழ்ந்தன. அதற்குள்ளிருந்து சிறு கதையாடல்களுக்கான வெளி இல்லாமலாக்கப்பட்டது.

௦௦௦

பழமைவாதமும் ஒரு சமூகத்தை வெளியிலிருந்து பார்ப்பதும்……

——————————————————————————————-

பழமைவாதம் என்பது எல்லாச் சமூகங்களுக்கும் பொதுவானது. உலகெங்கும் அதிகம் அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் உள்ளாக்கப்படுபவர்கள் பெண்கள் தான் என்பதிலும் இரு கருத்து கிடையாது. ஆயினும் 9/11 க்குப் பின்னர் தான் முஸ்லிம் பெண்கள் என்ற ஒரு குழு மீது மட்டும் அதிக கவனக் குவிப்பு நிகழ்கிறது.

பழமைவாதம் எந்தச் சமூகத்தில் இல்லை?

பெண் அடிமைப்படுத்தலும் சுரண்டலும் நிறைந்த சீனச் சமூகம் பற்றி எத்தனை பேர் பேசுகிறோம்?

இந்திய ஹிந்து பெண்கள் வாழ்வில் பிறந்தது முதல் இறப்பு வரை , சாதி முதற் கொண்டு பாலியல் வன்முறைகள் வரை பல்வேறு விதமான அடக்க்குமுறைகளுக்கும் அதிகாரங்களுக்கும் தலைகுனிய வேண்டியிருக்கிறது.

மேற்குக் கலாச்சாரம் பெண்ணுடலுக்கான ஒரு  image ஐ உருவாக்கி வைத்திருக்கிறது. அந்த உடம்பின் அமைப்பும் அளவுகளும் நிறமும், பெண்ணுடலை விளம்பரப்படுத்தும் பழமைவாதத்துக்குள்ளிருந்து எழுந்தவை தான். நவகாலனித்துவம் பெண்ணுடலை ஒரு வியாபாரப் பொருளாக மாற்றியிருப்பதும், அந்த உடல்கள் மீது காலவதித் தேதிகள் பொறித்திருப்பதும் நீண்ட உரையாடலை வேண்டி நிற்கும் தலைப்புக்கள்.

பெண் கத்னா என்பது எந்தளவு பழமைவாத, உடல் மீதான் வன்முறையோ, சிலிக்கான் மார்பகங்களும் அதேயளவான உடல்மீதான வன்முறை தான். இது ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எம்மில் பலர் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

எல்லாச் சமூகங்களுக்கும் வெளியே சொல்ல முடியாத ஒரு  உணர்வுச் சிக்கல்கள் (Unmentionable sensitivities) இருக்கின்றன. அதைப் புரிந்து கொள்வதற்கு அந்த சமூகத்திக்குள் இறங்கி ஒன்றித்து பார்க்கும் போது தான் அவற்றைப் புரிந்து கொள்ளலாம்.அப்படியான முஸ்லிம் சமூகத்துக்கே உரிய சில உள்ளார்ந்த சமூக, உளவியல் இழைகளால் தான் இஸ்லாமிய வாழ்வு பின்னப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல்  பொத்தாம் பொதுவாக எல்லா விடயங்களையும் பொதுமைப் படுத்திச் சொல்வது ஒரு எழுத்தாளன் சுமந்திருக்கும் அறத்திற்கு எதிரானது.

 

௦௦௦௦௦

தமிழில் வருகின்ற உதிரியான நாவல்களுக்குள்ளும் இதே முஸ்லிம் பெண் கதையாடல் எப்படி நிகழ்கின்றது?

தமிழில் எழுதப்படுகின்ற நாவல்கள் முஸ்லிம் பெண்களின் சித்தரிப்பும் இதே நேர்கோட்டில் நிகழ்வது ஒரு துரதிஷ்டவசமான நிலை. இலக்கியம் உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும்.  உள்ளதை உணர்ந்தபடி சித்தரிக்க வேண்டும். சில குறிப்பிட்ட அம்சங்களை அழுத்தப் படுத்தும் ஆதிக்கப் பெருங்கதையாடலுக்குள்ளால் முன்னால் சிறு கதையாடல்களுக்கு இடமில்லாமல் போகின்றது. இப்படியான நாவல்களுக்கான  கேள்வியும் ஆர்வமும் அதனைத் தூக்கிப் பிடிப்பவர்களும்  இருக்கும் வரை இந்தப் பெருங்கதையாடல் தொடரத்தான் போகிறது.

ஹிஜாப் என்னும் தலைக்கவசம் பிற்போக்கின் அடையாளமாகச் சித்தரிக்கப்படத்தான் போகிறது.

இந்தப் பெருங்கதையாடலுக்கு அப்பால் முஸ்லிம் சமூகத்துக்குள் உருவாகியிருக்கும் பொதுவான பதட்டம், உலகில் எங்கு குண்டு வெடித்தாலும் அதற்கான மன்னிப்புக் கேட்கவோ, அல்லது இஸ்லாம் வன்முறைக்கு எதிரானது என்று பேஸ்புக் நிலைத்தகவல் இடுவதற்கோ தள்ளப்பட்டிருக்கும் மனோ நிலை.

தலைக்கவசத்தோடு வெளியேறும் ஒரு பெண்,  தனக்குள்ளும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்கள்.

தன்னுடைய அடையாளத்துக்கான போராட்டம்

வறுமை சுரண்டல் இவற்றுக்குள் சிக்கி உடைந்து போயிருக்கும் வாழ்க்கை.

எப்படி (Secularism) மதச்சார்பின்மை ஒரு சர்வாதிகாரமாக மாறியிருக்கிறது என்பது சம்பந்தமான கதையாடல்.

போர் நிலங்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள்

இப்படியான மிக வித்தியாசமான பன்மைத்துவ விவகாரங்களை அடையாளப் படுத்தும் இலக்கியங்கள் மிகக் குறைந்தளவு தான் வாசகர்களைச் சென்றடைகின்றன.

 

இந்த இடத்தின் நான் இன்னொன்று சொல்ல வேண்டும்.முஸ்லிம் சமூகத்துக்குள் பெண் வலுவாக்கம் (Empowerment of women) பற்றி எனக்கு அதிக ஈடுபாடு இருக்கிறது.  முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருக்கும் ஆணாதிக்க எச்சங்கள், பெண்களை அடக்கியாள்வதற்காக சில மெளலவிமார்- குர்ஆன் ,ஹதீஸை எடுத்தாண்டு சொல்லும் ஆழமற்ற விளக்கங்கள், பெண்ணை இரண்டாந்தரமாக நடத்தும் இழிவுபடுத்தும்  வாழ்க்கை முறைகள்,இஸ்லாத்தின் பெயரில் நடக்கும் இஸ்லாம் சொல்லாத கலாச்சார அம்சங்கள் பற்றியெல்லாம் விசனம் எனக்கும் இருக்கிறது. அது வேறு. முஸ்லிம் பெண் விடுதலை என்ற பெயரில் நடக்கும் Propoganda war, and propaganda literature வேறு. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.இங்கே என்னைப் போன்ற ஒரு பெண்வலுவாக்கம் பேசும் முஸ்லிம் பெண் ,சமூகத்துக்குள்ளிருந்தும், வெளியிருந்தும் ,இரண்டு முனைகளிலிருந்து வெவ்வேறான அழுத்தங்களை எதிர்நோக்குகிறோம்.

 ௦௦௦௦

பெருங்கதையாடலை உடைக்கும் விதமாக வந்த சிறு கதையாடல்கள் கொண்ட நாவல்கள்

————————————————————————————————————————————-

Snow – Orhan Pamuk

ஸ்னோ  முஸ்லிம் பெண்களின் தனித்துவமான ஒரு பிரச்சினைய அடையாளப்படுத்துகிறது. தீவிர மதச்சார்பற்றவர்களுக்கும் நெகிழ்ந்து கொடுக்காத மதவாதிகளுக்குமிடையில் இழுபடும் பெண்களின் வெளி பற்றி அது பேசுகிறது. சர்வாதிகார மதச்சார்பற்றவர்கள் தங்கள் தாராளவாதத்தை சட்டங்கள் மூலம் பலவந்தமாகத் திணிக்க முற்படுகிறார்கள். அதற்கெதிராக நிற்கும் பழமைவாதிகள். தாரிக் அலி Clash of fundamentalism இல் சொல்வது போல இரண்டு அடிப்படைவாதங்களுக்கிடையில் பலிக்கடாவாக்கப்பட்ட பெண்களையும், மதசார்பற்ற மிதவாதிகளால் அவர்களுக்கு இழைக்கப்படும் அடக்குமுறைகளையும் அவர்கள் இழந்து விட்டிருக்கும் சுதந்திரத்தையும் விடுதலையையும் ஒரான் பாமுக்கின் கதையாடல் சொல்லிச் செல்கிறது.

 

The Reluctant Fundamentalist Muhsin Hamid

அமெரிக்காவின் நீண்ட காலம் வாழ்கின்ற ஒரு பாகிஸ்தானிய இளைஞன் 9/11 க்குப் பிறகு அதே நாட்டில் எப்படி அந்நியமாக உணர வைக்கப்படுகிறான் என்பதைச் முஹ்ஸின் அழகாகச் சொல்லியிருப்பார்.

Honour Elif Shafak

1970 களில் துருக்கியிலிருந்து லண்டன் வரும் ஒரு இடம்பெயர்ந்த குடும்பத்தினூடாக துரோகம்,காதல்,கெளரவம் என கதை நகர்கிறது. லண்டனில் இருக்கின்ற புலம் பெயர்ந்தவர்களின் ‘other அல்லது otherness என்பதைப் பேசும் நாவல் பழமையையும் நவீனத்தையும் ஒரே நேரத்தில் கொண்டாடுகிறது. ஆணின் தவறு பெண்ணின் தவறு இவை இரண்டும் இருவேறு கண் கொண்டு பார்க்கப்படுவதை மிக நுணுக்கமாக முன் வைக்கிறார் எலிப்.

In Praise of Hatred -Khalid Khalifa – வன்மத்தைக் கொண்டாடுதல்.

சிரியாவில் தடை செய்யப்பட்டுள்ள இந்த நாவலை எழுதியிருக்கிறவர் காலித் கலீபா.

அந்த நாவலுக்கூடாக  முஸ்லிம் பெண்கள் சம்பந்தமான சிறு கதையாடல்கள் எப்படி நிகழ்கிறது என்பதைப் பற்றிக் கொஞ்சம் பேச விரும்புகிறேன். 1980 களிலிருந்து இப்போது வரை,சிரிய சமூகம் பீதியின் தேசமாக மாறிவிட்டிருக்கிறது. யாரும் பொதுவெளியில்  நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றிக் கருத்துக்கூற முடியாது. கதைகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இரகசியமாகத் தான் கடத்தப்படுகின்றன. இந்த இடத்திலிருந்து தேசத்தின் அரசியல் அமைதியின்மையையும் சமூக இடிபாடுகளையும் எழுதுவதும் மிகப் பெரும் துணிவை வேண்டிநிற்கும் ஒரு செயல். அது தான் ஒரு எழுத்தாளன் சுமந்திருக்கும் சமூகப் பார்வை.

ஒரு துயரின் விளிம்பில் நிற்கும் சமூகத்தின் உள்ளார்ந்த மனச்சிக்கல்களை,அதன் ஆறாத காயங்களை, சொல்லித் தீராத வலிகளை சொல்லும் ‘வன்மத்தைக் கொண்டாடுதல்’  டமஸ்கஸில் இரகசியமாக வெளியிடப்பட்டது. ஆனால் 40 நாட்களுக்கும் சிரிய அரசினால் தடை செய்யப்படுகிறது. பின்னர் லெபனானில் வெளியிடப்படும் நூல், அரபு புனைவுகளுக்கான சர்வதேச பரிசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. (International Prize For Arabic Fiction 2008) Arabic booker.

நாவலின் சுருக்கம்

சிரியாவின் 1980 களின் சிரியாவில் தன்னுடைய  உம்மம்மா, அப்பாவின் பழங்காலத்து விசாலமான வீட்டில் வசித்து வரும் பெயரற்ற பெண் தான் இந்த நாவலின் கதைசொல்லி.

விரைவில் அந்த வீட்டின் சுவர்களால், வெளியே நடக்கின்ற சமூக அரசியல் போராட்டங்களிலிருந்து, அவளைக் காப்பாற்ற முடியவில்லை. முஸ்லிம் சகோதரத்துவம்,கம்யூனிஸிட் கட்சிகளுக்கெதிரான ஆளும் கொடுங்கால் அரசின் குரூரமான அடக்குமுறைகள் அவளுக்குள் அரசுக்கெதிரான தீவிர வன்மத்தை விதைக்கின்றன. தன்னுடைய மார்க்கம் தன்னுடைய நாடு இவற்றுக்காகப் போராடத் துணிந்து இறங்குகிறாள்.

அவளுடைய குரல் உணர்வுபூர்வமான,குழப்பமான சமயங்களில் தன்னையே மறுதலிக்கின்ற  ஒன்றாக ஒலிக்கிறது. மென்மையும் வெட்கமும் காதல் உணர்வுகள் நிரம்பிய அந்த இளம் பெண் தான்’ ஒரு கட்டத்தில் ‘எங்களுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்க எங்களுக்கு வன்மம் தேவைப்படுகிறது’ என்று சொல்கிறாள்.

ஒரு சாதாரணப் பெண் ஆயுதம் தூக்கத் தயாராவது சின்ன விடயமல்ல. அது ஒரு கணத்தில் நிகழ்வதும் அல்ல. அதற்கான உந்துதல்கள்,நெருக்கடிகளுக்குள்ளால் அவள் புதிதாகப் பிறக்கிறாள்.வன்மத்தைக் கொண்டாடத் தொடங்குகிறாள்.

கதைசொல்லியின் வீட்டின் பாரம்பரியங்களும் விழுமியங்களும் சில வேளைகளில் அவளை மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றது.

1963 இல் சிரியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர் பாத் கட்சியின் இராணுவப் பிரிவு முற்றாக அதிகாரத்தை தன்னகத்தே எடுத்துக் கொண்டது. ஹாபிஸ் அல் அஸாத் இன் தலைமையில் மதச்சார்பற்ற அரசு, தனது அத்துமீறல்களைக் கட்டவிழ்த்து விட்டது.சிரியாவின் இடது சாரிகளும் இஸ்லாமியவாதிகளும் அரசுக்கெதிராக ஒன்றிணைந்தனர். அவர்களை மிகக் கொடூரமாக அரசு நசுக்கியது. ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

கவிஞர் ஹஸன் அல் கையர்

“There are two gangs;one is ruling in the name of patriotism but has none of it.

Another gang claims good faith; and religion forbids their saying and acts.

Two gangs,my people be aware of both! Both drink from the same well.

Regime murdered him in prison.”

 

அலெப்போ நகரம், அதன் செழுமையான இஸ்லாமிய வரலாறு,கவிதை, சூபிகள்,இசை, தரைக்கம்பளங்கள், ஹாமம் என்கிற பொதுக்குளியலறைகள் என்று நாவல் புலம் விரிகிறது. இந்த சுவர்களுக்கு அப்பால் மதசார்பற்ற அலெப்போவும் இருக்கிறது. மதச்சார்பற்ற ஆதிக்க உலகம்.  பாடசாலையில் உடம்பை மூடாத  பெண்கள், ஹிஜாப் அணிந்தவர்களை பென்குவின் க்ளப் என்று அழைக்கிறார்கள். அவர்களில் ஒரு பெண் நதாவை, அவளை விட பல வருடங்கள் மூத்த  ‘கொலைப்படை அதிகாரி’ ஒருவன், காதலியாக வைத்திருக்கிறான்.அவள் அந்த அதிகாரத்தை வைத்து சக மாணவிகளையும் ஆசிரியர்களையும் மிரட்டுகிறாள்.

பிள்ளைகள் பாடசாலையிலிருந்து வெளியே வரும் போது அந்த உத்தியோகத்தன் தன்னுடைய கார்க்கதவைத் திறந்து பாடசாலை கேட்டை மறித்து நிற்பாட்டுவான். அவன் எவ்வளவு அழகன் என்பதை நாங்கள் கண்டிருந்தோம். அவன் வெட்கமின்றி எங்களுடைய மார்பகங்களை வெறித்துப் பார்க்கின்ற போது தலைமை ஆசிரியை தன்னுடைய பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொள்வார். நதா அவனுக்குப் பக்கத்துக்கு இருக்கையில் ஒரு வித இராணுவ நாடகத் தன்மையுடன் பாய்ந்து உட்கார்ந்தாள்.அவளைப் பார்க்கும் போது பயமாக இருந்தது. பாடம் நடந்து கொண்டிருக்கும் போது அவள் இடையில் வகுப்பில் நுழைவாள், விரும்பிய போது வெளியேறுவாள். எல்லா ஆசிரியைகளும் அவள் வகுப்பறைக்கதவை அறைந்து சாத்தும் போது கண்டுகொள்வதில்லை. கெமிஸ்ட்ரி ஆசிரியையைத் தவிர. அவர் ஒரு முறை நதாவை வெளியேற அனுமதிக்கவில்லை,அவளை பாடசாலையிலிருந்து விலக்கி விடுவதாகப் பயமுறுத்தினார். நதா ஒரு ஏளனப் பார்வையுடன் அங்கிருந்து நீங்கிச் சென்றாள். நாங்கள் சுவாரசியமான தொலைக்காட்சித் தொடரின் அடுத்த பகுதிக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் ஒருவருடைய பேரார்வத்தோடு அடுத்த கெமிஸ்ட்ரி பாடத்துக்காக எதிர்ப்பார்த்திருந்தோம். கெமிஸ்ட்ரி ஆசிரியை நதாவை வெளியேறுமாறு கடுப்போடு பணித்தார். நதா நக்கலாகச் சிரித்தாள். ஆசிரியை அவளருகில் வந்து முடியைப் பற்றிப் பிடித்து வகுப்புக்கு வெளியே இழுத்து வீசினார். நதாவின் அச்சுறுத்தல்களைத் தாண்டி அவர் கதவை மூடி விட்டு அமைதியாக கரும்பலகைக்கு திரும்பினார். கெமிஸ்ட்ரி ஆசிரியை இஸாஸ் என்ற அலெப்போவுக்கு வடக்கில் உள்ள சின்ன நகரத்துக்கு மாற்றலாக வேண்டி வந்தது.தலைமை ஆசிரியை அதை மாற்ற முயற்சி செய்து தோல்வியடந்தார்.

அமைதியாக, கெமிஸ்ட்ரி ஆசிரியை தன்னுடைய தாள்களை சேர்த்து எடுத்துக் கொண்டு எங்கள் முன் வந்து சொன்னார்இது பாடசாலை அல்ல பன்றித் தொழுவம்

இன்னொரு இடத்தில் ….

நதா பரீட்சைக்கேள்விகளுக்கான பதில்களை வெளிப்படுத்துமாறு ஆசிரியைகளைப் பலவந்தப்படுத்தி இருந்தாள்.அப்போது தான் அவளால் சித்தியடைய முடியும். ஆசிரியைகள் மிகுந்த வெறுப்புக் கொண்டார்கள். ஆனால் எப்போதெல்லாம் அவர்கள் இதற்கெதிராக கண்டனம் தெரிவிக்க நினைத்தார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்கு கெமிஸ்ரி ஆசிரியையின் ஞாபகம் வந்தது. அதனோடு முகாபராத் ரோந்தினால் தன்னுடைய அயல்வீட்டவர்கள்  முன்னிலையிலேயே வீட்டிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட  மெலிந்த புவியியல் ஆசிரியையின் ஞாபகமும் அவர்களுக்கு வந்தது. அவருடைய சின்னப் பிள்ளைகள் அழுதுஅரற்ற அவருடைய உடைகள் கிழிக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் காரணம் அவர் ஒரு மாணவிக்கு ஸைபர் போட்டது தான்.அந்த மாணவி தந்தை முகாபாராத் இராணுவத்தின் புலன் விசாரணை அதிகாரியாக இருந்தார். அவர் ஆசிரியை ஒரு வேசி என்று திட்டினார் . முகாபாராத் தடுப்புச் சிறைகளின் இருளில் நடக்ககூடிய சித்திரவதைகள் மரணம் பற்றி மற்றவர்கள அச்சுறுத்தினார். புவியியல் ஆசிரியை அசைவற்று கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தார். அந்த நிகழ்வுக்குப் பிறகு தன்னுடைய மாணவர்களை நேரடியாகக் கண்ணால் பார்க்கக் கூடிய வலிமையை அவர் இழந்து விட்டார். ஒரு ஆவியைப் போன்று. கரும்பலகையில் வரைவதும் பிரதான நகரங்களைப் கவனச் சிதறலாகப் பற்றிப் பேசுவதுமாக இருந்தார்.”

கதைசொல்லும் இளம் பெண் ஒரு நேரத்தில் தனக்குள் எழும்பும் வன்மத்தை மொழிபெயர்க்கிறாள்.

அதீத காதல் எப்படி காதல் கொண்டவரை மலைக்கச் செய்யுமோ அப்படி வெறுப்பு என்னை மலைக்கச் செய்தது. நான் என்னுடைய மீட்சிக்காக பல மணிநேரங்கள் தனியாக உட்கார்ந்து இருப்பேன்

உடல், அதற்குள் எழும் கிளர்ச்சிகள் அனைத்துமே பாவமும் அழுக்கும் நிரம்பியவை என கதைசொல்லிக்குப் போதிக்கப்படுகிறது. அவள் சொல்கிறாள்.

அன்றிரவு, நான் என் கூந்தலைப் பார்ப்பதற்க்காக கண்ணாடி முன் நின்றேன். என்னுடைய தோற்றம் ஒரு ஓவியத்தை ஒத்திருந்தது; தீர்க்கமான கண்கள், நீண்ட பழுப்பு நிற முகம், கீழ் நோக்கி வளைந்த கண் இரப்பைகள். நான் எனது கேசத்தை வெட்டினேன், என்னுடைய பெண்மையின் ஏதாவது அடையாளம் மிச்சமிருந்தால் அதனை நீக்கி விட விரும்பினேன்

அலெப்போவெங்கும் உறைந்திருக்கும் பீதியின் மர்மக்கரங்கள் உள்ளேயிருப்பவர்கள் மனதுகளைக் கூட விட்டு வைக்கவில்லை.

“அந்த இலையுதிர் காலம், வீட்டிலிருக்கும் நாங்கள் எல்லோரும் உபசாரங்களைப் பரிமாறிக் கொள்ளும் அந்நியர்கள் போல இருந்தோம். நாங்கள் எங்களுடைய மன உளைச்சல்களை மறைத்தோம்,  நாங்கள் உணர்ந்து கொண்ட உண்மையை வெளிப்படுத்துவதைப் பற்றி அச்சமுடையவர்களாக இருந்தோம் என்பதை நாங்கள்  ஒப்புக் கொள்ள விரும்பவில்லை.”

மரணம் எவ்வளவு சாதாரண நிகழ்ச்சியாகி விட்டது என்பதை காலித் கலீபா விவரிக்கிறார்.

மரணம் இப்போது நடைபாதையில் வீசிறி எறிந்திருக்கும் ஒரு கூடை அழுகிய பேரிப்பழங்களைப் போல சாதாரண நிகழ்வாகி விட்டிருந்தது. அது அதனுடைய கண்ணியத்தை இழந்து கதை சொல்லிகளால் சொல்லப்படுகின்ற ஆழமற்ற கதைகளாக மாற்றப்பட்டிருந்தது.

“1981 இன் நத்தார் கொண்டாங்கள் வந்து போயின. அலெப்போவின் கிரிஸ்தவர்கள் தங்களுடைய சர்ச் மணிகளை அடக்கமாக அடித்து அமைதியாகப் பிரார்த்தனை செய்தார்கள். அலெப்போ ஒரு மரண நகரமாக மாறியது; மரணத்தின் வாடை எல்லா மூலைகளுக்கும் படர்ந்தது. “

கதை சொல்லியைக் கைது செய்கிறார்கள். 8 வருடங்கள் சிறை வாழ்க்கை. இஸ்லாமியவாதிகளும் கம்யூனிஸ்ட்களும் சிறையில் ஒன்றாக இருக்கிறார்களமொத்தத்தில்  ஒரு தேசத்தின் சிக்கலான பிரச்சினையை, பல்வேறுவிதமான பாத்திரங்களுக்கூடாக, பல்வேறு திசைகளிலிருந்து பேசுகின்ற நாவல்.

தீவிரவாதம் என்ற சொல்லை மானுடம் என்ற கண்ணாடிக்குள்ளால் அடையாளப் படுத்துகிறார் காலித்.

தொடர்ச்சியான போர் மற்றும் தீவிர அழுத்தங்களுக்கால் வாழும் மனிதர்களின் குணங்கள் எப்படி எப்படியெல்லாம் காலத்துக்குக் காலம் மாறுகின்றன, அவர்களுக்குள்ளிருக்கும் வேறு முகங்கள் இவற்றையெல்லாம் மிக காத்திரமான கதையாடல்களுக்குள்ளால் வெளிப்படுத்துகிறார், காலித் கலீபா.

கதைசொல்லியின் சொந்தக் கதைக்கு அப்பால்,விரிவான பின்புலங்களுடன் இன்னும் பல வித்தியாசமான பாத்திரங்களின் சித்தரிப்பு, கதையாடல்கள் என நாவல் நீள்கிறது

கடைசியாக, காலித் கலீபா சொன்ன வார்த்தைகளோடு இந்த பகிர்வை முடித்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

“I don’t want people to read my book, because  I am an oppressed writer or a writer who lives under dictatorship.  I want them to read it because they are interested in the story.

” நான் ஒரு அடக்குமுறைக்காளான எழுத்தாளன் என்பதற்காகவோ அல்லது சர்வாதிகாரத்தின் கீழ் வாழ்பவன் என்பதற்காகவோ என்னுடைய புத்தகங்களை வாசிக்காதீர்கள். என்னுடைய கதை பற்றி உங்களுக்கு உண்மையான ஆர்வம் இருந்தால் வாசியுங்கள்.”

 

00000000000000000000

 

(லண்டனில் நடைபெற்ற தோழர் பரா குமாரசாமி அவர்களின் ,10 ஆவது ஆண்டு நினைவுக் கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரையின் எழுத்து வடிவம்).

16.12.2017

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment