Home » ஆளுமை » *பிரித்தானியாவில் இன சமத்துவத்திற்காகப் போராடிய இலங்கைத் தமிழர்- அம்பலவாணர் சிவானந்தன் – வி. சிவலிங்கம்.

 

*பிரித்தானியாவில் இன சமத்துவத்திற்காகப் போராடிய இலங்கைத் தமிழர்- அம்பலவாணர் சிவானந்தன் – வி. சிவலிங்கம்.

 

 

மானிட சமத்துவத்தை நேசிக்கும் எவருக்கும் இனம், மொழி, மதம், நிறம் போன்ற பாகுபாடுகள் தேசங்கள் கடந்து வாழ்ந்தாலும் அவை தடையாக இருப்பதில்லை. இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள மானிப்பாய் கிராமத்தில் குடும்ப வேர்களைக் கொண்ட சிவானந்தன் அவர்கள் ஓர் சிறந்த ஆய்வாளர், நூலகர், போராளி, எழுத்தாளர் என பன்முகம் உடையவர். இவர் தனது உயர் கல்வியை கொழும்பிலுள்ள பரிசுத்த யோசப் கல்லாரியில் பயின்றார். பின்னர் பிரித்தானியாவில் பல்வேறு பொது நூலகங்களிலும் குறிப்பாக குடியேற்ற காரியாலயத்தில் அமைந்த நூலகத்திலும் பணிபுரிந்தார். இக் காலம் அவரது பொற்காலமாகும். பிரித்தானிய குடியேற்ற ஆட்சிக்கால வரலாறுகள் யாவும் அதற்கென உருவாக்கப்பட்ட தனி நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை வகைப்படுத்தவும், வரலாறுகளை அறிந்து கொள்ளவும் வாய்ப்புக் கிட்டியது. வரலாறு தொடர்பான இவரது ஆழ்ந்த ஆய்வுகள் காரணமாக 1964ம் ஆண்டில் இன உறவுகளுக்கான நிறுவனத்தின் ( ( Institute of Race Relations – IRR) பிரதம நூலகராக நியமிக்கப்பட்டார். இந்த நூலகத்தை விருத்தி செய்த பெருமை இவருக்கே உரியது. காலப் போக்கில் இந் நூலகம் 2006 இல் Warwick University  இற்கு இடமாற்றம் செய்யப்பட்டுத் தனி நூலகமாக ‘சிவானந்தனின் சேர்க்கைகள்’ என்ற பெயரில் உள்ளன.

 

இன உறவுகள் தொடர்பாக பிரித்தானியாவில் காணப்படும் இன முரண்பாடுகள், அவற்றிற்கான தீர்வுகள் என்பவை தொடர்பாக பல ஆய்வுக் கட்டுரைகளை வரைந்த அவர் 1974ம் ஆண்டில் இன உறவுகளுக்கான நிறுவனத்தினால் (IRR) வெளியிடப்படும் ‘இனமும் வர்க்கமும்’ (Race and Class) என்ற வெளியீட்டின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவ் வெளியீடு கறுப்பு இன மக்களின் வாழ்வு, போராட்டம் என்பவற்றுடன் மூன்றாம் உலக நாடுகளின் குறிப்பாக பிரித்தானிய குடியேற்ற நாடுகளாக இருந்து விடுவிக்கப்பட்ட நாடுகளில் காணப்படும் பிரச்சனைகளை மிக ஆழமாக ஆராய்ந்தார். பிரித்தானியாவில் இனம், வர்க்கம், அரசு என்பனவற்றில் கறுப்பு இன மக்களின் அனுபவங்களை, தகவல்களை, ஆய்வுக் கட்டுரைகளைத் தந்தார். இனவாதத்தின் தோற்றப்பாடுகளை அதாவது தனி மனிதர்கள், தனியார் நிறுவனங்கள், அரசு என்பவற்றிற்கிடையே நிலவும் இனப் பாகுபாட்டினைத் தெளிவாக இனம் காட்டியது. இதனால் உலக அளவில் இனம் மற்றும் எகாதிபத்தியம் சம்பந்தமான விவாதங்களைத் தூண்டும் மிக முக்கிய ஆவணமாக இவ் வெளியீடு கருதப்பட்டது.

இதன் காரணமாக பிரித்தானியாவிலுள்ள கறுப்பு இன சிந்தனையாளர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார். இதன் காரணமாகவோ என்னவோ இவரது மரணச் செய்தியை இந்திய பத்திரிகையான ‘இந்து’ தனது செய்தியில் இலங்கையைச் சார்ந்த பிரபல கறுப்பு இன சிந்தனையாளர் எனக் குறிப்பிட்டிருந்தது.பல நூல்களை வெளியிட்டுள்ள அவரின் வெளியீடுகளோடு அவரது நாவல்களும் பிரசித்தி பெற்றன. அவரது நாவல்களில் பிரசித்தி பெற்ற வெளியீடு ‘‘When memory dies’  என்பதாகும். இந் நாவல் அவரது ஆரம்ப வாழ்வினை உணர்த்துவதாக அமைந்திருந்தன.

வாசகர் ஒருவர் அவரது ஆரம்ப வாழ்வு குறித்துக் கேட்ட போது அதனை மிகவும் இலக்கிய ரசனையோடு குறிப்பிட்டிருந்தார். யாழ்ப்பாணப் பகுதியைப் பற்றிக் கூறுகையில் நிலப் பகுதி தட்டையானதாகவும், தரிசாகவும், மரங்கள் அரிதாகவும், ஆறுகள், மலைகள் அற்ற பிரதேசம் எனத் தெரிவித்த அவர், தனது குடும்பத்தை மிக அழகாக இணைத்து தனது பேரனார் சிறிய நிலத் துண்டினை வைத்திருந்தார். அங்கு பிள்ளைகளைத் தவிர எதையும் விளைவிக்க முடியாது. ஆதனால் அவருக்கு 13 பிள்ளைகள். அவர்களில் 7 பேர் பிறப்பில் அல்லது சற்று இளமையில் இறந்தனர். அவரது சிறிய நிலம் பசுமை இல்லாமலிருந்தாலும் அவரது ஆணுறுப்பு மிகவும் பசுமையாக இருந்ததாக கிராமத்தவர் குறிப்பிடுவர் என்கிறார்.

 

இந்த 13 பிள்ளைகளில் இரண்டாவதாகப் பிறந்தவரே இவரது தந்தை அம்பலவாணர் ஆகும். இவர் தனது ஆரம்பக் கல்வியை தமிழிலும், ஆங்கிலத்திலும் கற்றார். பின்னர் தனது 16வது வயதில் தபால் திணைக்களத்தில் பதவி பெற்றார். சிவானந்தன் பிறந்த போது அவரது தந்தை கண்டி தபால் நிலையத்தில் உதவித் தபால் அதிபராகக் கடமையாற்றினார். சிவானந்தனின் ஆரம்பக் கல்வியின் போது காணப்பட்ட விவேகம் காரணமாக அவருக்குப் புலமைப் பரிசில் கிடைக்கப் பெற்று கொழும்பிலுள்ள பரிசுத்த ஜோசப் கல்லூரியில் கல்வி பயிலும் வாய்ப்புக் கிடைத்தது. இவரது ஆரம்ப ஆங்கிலக் கல்வி அவர் பிரித்தானியா வந்ததும் மிகுந்த உதவியாக அமைந்தது. மேலும் பல நூல்களைப் படித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆற்றலை வழங்கியது.சிவானந்தன் அவர்களின் கட்டுரைகள் அவரது சிந்தனைத் திறனையும், விவாதப் புலமையையும் வெளிப்படுத்தியது. அவரது கட்டுரைகளில் பிரதானமானது ‘ இனவாதம், தேசியவாதம் குறித்த அடிப்படைகள்’ என்ற கட்டுரைகளாகும்.

 

நவீன பிரித்தானிய சமூகம் வர்க்கங்களாக இல்லை. பதிலாக ஒரு வகையில் ‘பழங்குடி’ என அழைக்கப்படுபவர்களே உள்ளனர் என புதிய வடிவில் சமூக இயக்கத்தை ஆராய்ந்தார். இவர்கள் ‘அடையாள பழங்குடி’ (Identity Tribes) எனக் கருதப்பட வேண்டியவர்கள். தற்போது அடையாளம், கலாச்சாரம் மற்றும் தேசம் தொடர்பாக முன்வைக்கப்படும் விவாதங்கள் அவற்றையே உணர்த்துகின்றன. இவை குடிவரவு, இனம் என்பவை சார்ந்த அரசியலின் உற்பத்தி ஆகும். தேர்தல் அரசியலே நாட்டின் பிரதான போக்கைத் தீர்மானிப்பதால் அவர் தேர்தல் முடிவுகளிலிருந்தே தனது ஆய்வைத் தொடங்குகிறார்.

 

நவீன பிரித்தானியாவில் இவ் வகை அரசியலை எடுத்துச் செல்லும் பிரிவினரை இவ்வாறு வகுக்கலாம்.

பல்லின கலாச்சாரத்தில் இறுக்கமான நம்பிக்கை உடையோர் ( இவர்கள் வாக்களிப்போரில் 8 சதவீதமாக உள்ளனர்.)

பிரதான நீரோடத்திலுள்ள தாராளவாதிகள் – லிபரல்ஸ் ( 16 சதவீதம்)
அடையாள அரசியல் குறித்து தடுமாற்றத்தில் உள்ளவர்கள்  (28 சதவீதம்)

கலாச்சார ஒருங்கிணைப்பைக் கோருபவர்கள்  (24 சதவீதம்)

பின்னோக்கிய விரோத உணர்வை உடையவர்கள். (10 சதவீதம்)

தீவிர எதிப்ர்புணர்வுள்ளவர்கள்,(13 சதவீதம்)

 

இப் பிரிவினரில் அடையாள அரசியல் குறித்துத் தடுமாற்றத்தில் உள்ளவர்கள் மத்தியிலும், கலாச்சார ஒருங்கிணைப்பைக் கோருபவர்கள் மத்தியிலும் பொது உடன்பாடு காணப்பட வேண்டும். 24 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாச்சார ஒருங்கிணைப்பைக் கோருபவர்கள் அதிகாரமும், ஒழுங்கும் பேணப்பட வேண்டும் என வற்புறுத்துகின்றனர். அடையாள அரசியல் குறித்துத் தடுமாற்றத்தில் உள்ள 28 சதவீத பிரிவினர் பொருளாதாரப் பாதுகாப்புத் தொடர்பாகவும், சமூக மாற்றம் சம்பந்தமாகவும் கவலை கொள்கின்றனர்.இப் பிரிவினரில் பாதிக்கு அதிகமானவர்கள் எந்த அரசியல் கட்சிகளுடனும் தம்மை இணைத்துக் கொள்ளாதவர்கள். இவர்களை ‘மிதக்கும் வாக்காளர்கள்’ என அழைக்கலாம். இப் பிரிவினர் இனம் மற்றும் குடிவரவு காரணிகளைப் பயன்படுத்தி விவாதிக்கும் வலது நோக்கிய பிரிவினராகும். பொருளாதாரப் பாதுகாப்பு, சமூக மாற்றம் எனக் கோரும் இப் பிரிவினர், வலதுசாரிப் பிரிவினரை நோக்கி மேலும் செல்ல விடாமல் தடுக்க வேண்டும்.

 

இந்த மிதக்கும் வாக்காளரை நோக்கி நடத்தப்படும் சில செயற்பாடுகளை அவர் இவ்வாறு அடையாளம் காட்டுகிறார். தேர்தல் காலங்களில் அல்லது சிக்கலான தருணங்களில் வெளியிடப்படும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு என்பது மக்களின் அணுகுமுறையை அறிவதற்காக எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவ் வகை வாக்காளரின் அணுகுமுறைகள் மாறக்கூடியன. இதனை அவர்கள் விளையாட்டாகவும் எடுத்து அபிப்பிராயங்களைக் கூறலாம். இந் நிலையில் முக்கிய கொள்கைகளை வகுப்பதற்காக இவ் விபரங்களைப் பயன்படுத்த முடியுமா?மக்களின் போக்குப் பற்றி அபிப்பிராய கணக்கெடுப்பின் போது அவை இனம், குடிவரவு என்பவற்றுடனும் சம்பந்தப்படுகின்றன. எனவே இவை பாரபட்சமாக காணவும் வாய்ப்பு உண்டு. இங்கு அரசினதும், ஊடகங்களினதும் பங்கு கவனத்திற்குரியது. மக்கள் மத்தியில் குடிவரவு, பல்லின கலாச்சாரம் என்பவை குறித்து ஆழமான சந்தேகங்கள் நிலவவதாக செய்திகளை வெளியிடுகின்றன.

 

தேசமும், கலாச்சாரமும்

நாட்டில் வறுமைக்கு எதிராகவும், சமத்துவமற்ற நிலமைக்கு எதிராகவும் மக்கள் போராடுகின்றனர். தனியார் மயமாக்கல் கொள்கைகள் அரச கட்டுமானங்களைப் பலவீனமாக்குகிறது. குறிப்பாக சமூகத்திலுள்ள வறுமையை ஒழிக்க உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் செயற்பாடற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றன.வறுமைக்கு எதிராகவும், சமத்துவம் கோரியும் மக்கள் குரல் கொடுக்கும்போது சமூகத்திலுள்ள வசதி படைத்த பிரிவினர் தமது அடையாளங்கள் குறித்து தாமும் போராடுகின்றனர். எனவே அவர்கள் மூல நோயைக் கைவிட்டு அறிகுறிகளுக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர். நாம் இவை இரண்டிற்கும் எதிராக தெருக்களிலும், வாக்குச் சாவடிகளிலும் போராட வேண்டும்.இதற்கென முற்போக்கு எதிர்ப்புக் கலாச்சாரம் ஒன்றினைத் தோற்றுவிக்க வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்ட மத்திய பிரிவினரை வென்றாக வேண்டும். இப் போராட்டங்கள் ஆங்கில தீவிர தேசியவாதிகள் (English Natinalist Extreamism), முஸ்லீம் தீவிரவாதம் என்பவற்றிற்கு எதிராகவும் திரும்ப வேண்டும். இவை இரண்டும் ஒரே விதமாகவே கையாளப்பட வேண்டும்.

அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானித்தல் அவசியம். இந்த நாடுகளில் சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராட்டங்கள் தொடரும் அதே வேளை, மதவாதிகளிடமிருந்து அதிகாரத்தை மீட்டெடுக்கவும், இஸ்லாமிய மத விவகாரங்களில் சீர் திருத்தங்களையும் கோருகின்றனர். மக்களின் அபிப்பிராயங்களை அறிய கருத்துக் கணிப்புகளை நடத்துவோர் பிரித்தானியாவில் வாழும் முஸ்லீம்களில் அடிப்படைவாதிகளின் தொகையையும், பிரித்தானியாவை வெறுப்போரின் தொகையையும் அறிய முயற்சிக்க வேண்டும். அவ்வாறான கருத்துக் கணிப்பை ஏன் அவர்கள் நடத்த எண்ணவில்லை?பிரித்தானியாவில் இயங்கும் வலதுசாரி இனவாத அமைப்பான ஆங்கில பாதுகாப்பு லீக் ( English Defence Leaque) அமைப்பினர் புதிய அடையாளங்களை வரையறுக்கும்படி கோருகின்றனர். தாம் கோரும் அடையாளம் என்பது நிறம் சார்ந்தது அல்ல என்கின்றனர். இங்கு இஸ்லாமிய வெறுப்புணர்வு (Islamophobia), இஸ்லாமிய எதிர்ப்பு இனவாதமும் இரு வேறுபட்டன. இரண்டையும் சமப்படுத்த முடியாது. இஸ்லாமிய வெறுப்புணர்வு என்பது இஸ்லாம் மதத்திற்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தும் சிந்தனைகளைக் கொண்டது. அவை அம் மனிதரை கேவலப்படுத்தியும், அவப் பெயரைத் தோற்றுவிப்பதாகவும் அமையும். இச் சிந்தனைகள் வர்க்கங்களை ஊடறுத்தச் செல்கின்றன.

 

இவ் வகைத் தேசியவாதம் அடையாள அரசியல் குறித்துத் தடுமாற்றத்தில் உள்ளவர்களை நோக்கித் திருப்பப்படுகிறது. ஆங்கில பாதுகாப்பு லீக் போன்றவற்றின் வாதங்களுக்கு முகம் கொடுக்க வேண்டுமெனில் அவர்களின் தேசியவாத நிலைப்பாடுகளைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். இத்தகைய போக்குகள் பிரதான கட்சிகள் மத்தியில் பிரித்தானிய விழுமியங்கள் (British values) என்ற போர்வையிலும், பல்லின கலாச்சாரம் என முன்வைக்கப்படும் வாதங்களிலும், ஒருங்கிணைத்தல் அல்லது கரைத்து விடுதல் ((Intigration and assimilation )என்ற வாதங்களின்போதும். சொந்த நாடு (nativism) என அழைக்கப்படும் கூறுகளிலிருந்தும் வெளிப்படுகிறது.சிவானந்தன் அவர்களிடம் பிரித்தானியாவில் காணப்படும் இஸ்லாமிய வெறுப்பு வாதமும், இஸ்லாமிய எதிர்ப்பு இனவாதமும் கடந்த கால இனவாதத்தை விடப் புதிதானதா? எனக் கேட்ட போது ஒவ்வொரு இனவாதத்தினது தோற்றுவாயில் வேறுபட்டது அதே வேளை கோட்பாட்டில் ஒருமித்தது என்கிறார். இதனைப் பிரித்தானிய அனுபவங்களிலிருந்து விளக்குகிறார்.

 

பிரித்தானிய கலாச்சாரம் என்பது வெற்றி, அடிமைப்படுத்தல் என்பவற்றினூடாக கருக்கொண்டதாகும். இதனுள் இனவாதம், சொந்த நாடு அல்லது அந்நியர்கள் எதிர்ப்பு என்ற சிந்தனைகள் இணைந்து உள்ளன. இவ்வாறான சிந்தனைகள் காலப் போக்கில் முழுமையான வடிவம் பெற்றவையாக பொருளாதார மற்றும் அரசியல் திட்டங்களுடன் உதாரணமாக அடிமைகளாக்குதல், நிறவெறி என்பனவும் இச் சிந்தனைகளில் இணைந்து வடிவம் பலமடைந்தது.இச் சிந்தனைகள் தற்போதும் வெளிவரத் தவறுவதில்லை. உதாரணமாக பாகுபாடு காட்டப்படும் போதும், இன வன்முறைகளால் பாதிக்கப்படும் போதும், வேலை வாய்ப்பிற்கான, வீட்டு வசதிக்கான போட்டிகள் அதிகரிக்கும் போதும் சொந்த நாட்டவர், அந்நியர், குடியேற்ற வேலையாளர்கள் எனபொருளாதார நெருக்கடி ஏற்படும்போது வெளி வரும் நியாயங்களில் இத் தேசியவாதத்தின் கூறுகளாக அவை வெளிவருகின்றன.பொருளாதார நெருக்கடி ஏற்படும் காலங்களில் சொந்த நாட்டில் வறுமையில் உழல்பவர்கள், வெள்ளை இன மக்கள் என்போர் வீட்டு வசதி, வேலை வாய்ப்பு, சமூக சேவை என்பன கிடைக்காமல் அல்லல் படும்போது நிற வேடுபாடுகள், அந்நியர் எதிர்ப்பு, கலாச்சார வேறுபாடுகளை உயர்த்திப் பிடித்தல் போன்ற நிகழ்வுகள் இயல்பாகவே எழக்கூடியவை.

 

இத்தகைய சந்தர்ப்பங்களில் அரசும் இப் பிரச்சனைகளைக் காரணம் காட்டி அல்லது நியாயப்படுத்தி உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளை தமது கட்சியின் தேர்தல் வெற்றிகளைக் கவனத்தில் கொண்டு அவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட கொள்கைகளாக மாற்றுகின்றன. இவ்வாறான அரை வேக்காடு கொள்கைகள் அரசியல் சித்தாந்தங்களாக மாறி பிரபல இனவெறிச் சிந்தனைகளின் நியாயங்களாக மாறுகின்றன. இனவாதமானது அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், என்பவற்றிற்குள்ளும் அவ்வகையான நியாயங்களுடன் ஊட்டப்படுவதை அவதானிக்கலாம். ஆனால் இவ் இனவாதமானது நாடு, தொழில் மயமாக்கப்பட்ட போது காணப்பட்ட சமூக நிலையிலிருந்து மாறி தொழில் மயமக்கப்பட்ட சமூகமாக மாறிய பின் இனவாதத்தின் கூறுகள் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளன.

 

தொழிற்துறை முதலாளித்துவத்தின் (Industrial Capitalism ) போது இனவாதம் என்பது சுரண்டல், அடிமைப்படுத்தல், குடியேற்றாதிக்கம், நிபந்தனைகளுடன் கூடிய குடிவரவு என்பவற்றுடன் தொடர்புடையதாக இருந்தது. இனவாதம் மாற்றமடைவதற்குப் பொருளாதாரமே பிரதான காரணியாக அமைந்தது அதனுள் உருமாற்றம் பெற்றுச் செயற்படுவதற்கு உதவியது. தொழிற்துறை முதலாளித்துவத்தின் ஆரம்பங்களில் தொழிலாளர் உழைப்பை உறிஞ்சுவது அதன் சுற்று வட்டத்தில் நிகழ்ந்தது. அதாவது அரசியல் மற்றும் கலாச்சாரக் கூறுகளில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் தற்போது ஊடகத்துறையின் வளர்ச்சிக்கான காரணியாக இனவாதம் மாறியதால் பொருளாதாரக் காரணிகளின் உதவியின்றியே செயற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தொழிற்துறை முதலாளித்துவத்தின் போது அடிமைப்படுத்தல், குடியேற்றம் என்பவற்றினூடாக இனவாதம் கசிந்து கீழே சென்றது. இவை அதிக அளவில் தொழிலாளர் மத்தியில் காணப்பட்டது. ஆனால் தொழிற்துறையின் பிந்திய கால வளர்ச்சி சமூகத்தில் இச் சிந்தனைகள் ஒட்டு மொத்த சமூகத்திற்குள்ளும், கலாச்சாரத்திற்குள்ளும் ஆழ ஓட்டியுள்ளது.

 

உலக மயமாக்கல்

உலக மயமாக்கல் அரசின் செயற்பாட்டை மக்களுக்கான நலன்களைப் பேணும் நிறுவனம் என்ற நிலையிலிருந்து சந்தையின் செயற்பாட்டை உறுதி செய்யும் பொறிமுறையாக மாற்றியுள்ளது. மக்கள் நலனைப் பேணுதல் என்பது சமூகக் கூட்டினை சமூக சமத்துவக் கோட்பாடுகளினூடாக அடையும் நோக்கங்களைக் கொண்டதாகும். ஆனால் சந்தையின் செயற்பாடுகளைப் பராமரிப்பது என்பது செல்வ உருவாக்கம், தனி மனித உழைப்பின் வெற்றி என்ற கோட்பாடுகளை வழி நடத்தலாக கொண்டுள்ளது.இக் கோட்பாடுகள் சமூகத்தினை கூறுபட்ட சமூகங்களாகவும், தனி மனித உறவுகளை பலவீனப்படுத்துவதாகவும் உள்ளது. இங்கு ஒரு தேசம் என்பதை ஒன்றிணைப்பதற்கான இயல்பான பொதுக் காரணி இல்லாமலுள்ளது. பிரித்தானிய விழுமியங்கள் எனக் கூறி அவற்றை மேலிருந்து கீழாகத் திணிப்பதும், தேசத்தை ஒருங்கிணைக்கும் திட்டங்கள் என்பது அச்சத்தை உருவாக்கும் அரசியலாகவும், ‘எதிரி எம்முள்’ எனக்கருதும் உள் நோக்கங்களைக் கொண்டதாகவும் உள்ளன. இவ் எண்ணங்கள் நடைமுறையில் வரும்போது தேசியவாத வெளிப்பாடுகள் வெளியுறவுக் கொள்கைகளினூடாகவும், பிரித்தானிய பிரஜை என சத்தியப் பிரமாணம் அல்லது விசுவாசம் தெரிவிக்கும் வேளையிலும் புலப்படுகின்றன.

 

இத்தகைய ஆதிக்கப் பிரிவினரின் செயற்பாடுகள் அச்சத்தைத் தோற்றுவிக்கும் அல்லது சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒரு வகைக் கலாச்சாரத்தை சமூகத்தில் தோற்றுவிக்கிறது. அத்துடன் இவை பிரித்தானிய தேசியக் கட்சி, ஆங்கில பாதுகாப்பு லீக் போன்ற அமைப்புகள் தொடர்ந்து தொழிற்படவும் வாய்ப்பளிக்கிறது.பிரித்தானிய விழுமியங்களைச் சகலரும் பின்பற்ற வேண்டுமென அரசு உரத்துக் கூறுவது இதர இஸ்லாமிய விழுமியங்கள் அல்லது இஸ்லாமிய கலாச்சரம் போன்றன பிற்போக்கானவை, அச்சம் தருபவை என உணர்த்துவதாகவே உள்ளன.சிவானந்தன் அவர்களின் கருத்துக்கள் மிகவும் புதிதானவை. ஆழமாக நோக்கப்பட வேண்டியவை. அவர் இலங்கையர் என்ற வகையிலும், தமிழர் என்ற வகையிலும் உழைக்கும் மானிடத்திற்காக அவர் வழங்கிய சேவை என்றும் உன்னதமானது. நினைவூட்டப்பட வேண்டியது.

௦௦௦௦௦

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment