Home » இதழ் 21 » * ‘காலம்’ இதழ்கள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்- எஸ்.வாசன்

 

* ‘காலம்’ இதழ்கள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்- எஸ்.வாசன்

 

 

காலம்’ இதழானது மிக அண்மையில் தனது 51 வது இதழினை வெளியிட்டுள்ளது. தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் மட்டுமன்றி நவீன தமிழ் இலக்கிய பரப்பிலும் தனது தடங்களை மிக ஆழமாகவே பதித்துள்ள காலம் தனது தொடர்ச்சியான வருகையின் மூலம் படைப்பிலக்கியங்கள் குறித்து அச்சமும் கவலையும் தரும் சூழ்நிலையில், எமக்கு ஏதோ ஒரு நம்பிக்கையினையும் ஒரு சிறிய ஆசுவாசத்தினையும் தந்து நிற்கின்றது. 

 

“காலம் ஏற்படுத்திய நிர்ப்பந்தத்தால் அகதிகளாய் கனடாவைத் தஞ்சமடைந்த  தமிழ் இளைஞர்கள் சிலர் கொண்ட  ஆர்வத்தின் வெளிப்பாடு” –  காலம் முதலாவது  இதழில் சுமார் 28 வருடங்களுக்கு முன்பு தனது முதல் பதிவினை  மேற்கூறியவாறு பதிவு செய்கிறார் அதன் ஆசிரியர் செல்வம் அருளானந்தம் அவர்கள். இது தொண்ணூறுகளின் ஆரம்பமாக இருந்த ஒரு காலப் பகுதி. தாயகத்தில் மட்டுமன்றி உலக அரங்கிலும் கூட அதிக நெருக்கடிகளும் மாற்றங்களும்  மிகுந்த காலகட்டமாக இது கணிப்பிடப்படுகின்றது. தாயகத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தது. இந்தியாவில் ஏழாவது பிரதமராக வரும் வி.பி.சிங்,  இந்திய இராணுவத்தை திருப்பி அழைக்கிறார். இரண்டாவது ஈழப் போர் ஆரம்பமாகின்றது. வடபகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப் படுகின்றார்கள். இந்தியாவில் அத்வானியின் ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு சம்பவங்களின் மூலம் பாரதிய ஜனதா எழுச்சி பெறுகின்றது. இதற்குமப்பால் உலக அரங்கில் பெர்லின் மதில் தகர்ப்பு, சோவியத் யூனியன் உடைவு போன்ற சம்பவங்கள் புரட்சிகர சக்திகளினதும், இடது சாரிகளினதும் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சிதைக்கின்றது. இத்தகைய அரசியல்  மாற்றங்கள் உலகின்  இலக்கியப் பரப்பில் மட்டுமன்றி நவீன தமிழ் இலக்கியத் தளத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. பல்வேறு புதிய சிந்தனைகளும் தத்துவங்களும் தமிழ்ச் சூழலும் உட்புகுகின்றது. பின் நவீனத்துவ சிந்தனைகள் பின் கதவு வழியாக உள்ளே நுழைகின்றது. தலித்திய சிந்தனைகளும் பெண்ணிய சிந்தனைகளும் கூர்மையடைகின்றது. இத்தகைய மாற்றங்களையும் சிந்தனைகளையும் உள்வாங்க வேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் காலம் இதழிற்கும் ஏற்படுகின்றது. எனவே இவை அனைத்தையும் உள்வாங்கியவாறே அது தனது பயணத்தை தொடர்கின்றது.

 

‘காலம்’ இன்று தனது 51 வது இதழினை ஒரு நீண்ட 28 வருட கால  இடைவெளியினுள் நிகழ்த்தியுள்ளது. இதில் இரண்டு வெளியீடுகள் இரு இதழ்களை இணைத்து வெளியிட்டிருந்தபோதிலும் அது 48 பிரதிகளாக தனது 51 இதழ்களையும் வெளியிட்டுள்ளது. இடைவெளிகள் மிக அதிகம் என்பதினை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. அத்துடன் இது சிற்றிதழ் என்ற தளத்திலிருந்து இடைநிலை இதழாக உருமாற்றம் அடைந்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் வேறு. ஆயினும் இலக்கிய வரலாற்றில் ஒரு அபாரமானதும் அசாத்தியமானதுமான ஒரு மாபெரும் சசாதனையினை காலம்  நிகழ்த்தியுள்ளது என்பதினை நாம் மறுக்க முடியாது. தாம் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள ஒரு கடுமையான பனிப் பொழிவுகளும் கொடுமையான குளிரும் வருத்துகின்ற  ஒரு அந்நிய தேசத்திலிருந்து இத்தகைய இதழ் ஒன்றினை வெளியிடுவது என்பதே ஒரு இடர்ப்பாடு நிறைந்த அசாத்தியமான  காரியம். அவற்றிலும் சிற்றிதழ் கலாச்சாரம் மிகவும் அருகி இடைநிலை இதழ்களின் ஆதிக்கம் அதிக வலுப்பெற்றுள்ள இன்றைய சூழலிலும் ஆனந்தவிகடன், குமுதம் போன்ற மிகப் பெரிய வணிக நிறுவனங்கள் கூட  தடம், தீராநதி போன்ற இலக்கிய இதழ்கள் மூலம் ஒரு மாபெரும் வணிக சந்தையை உருவாகியுள்ள நிலையிலும், முகநூலில் மட்டுமே எழுதவும் வாசிக்கவும் அதனூடாக மட்டுமே  தமது சிந்தனைகளையும் அறிவினையும் வளப்படுத்திக்கொள்ளும் ஒரு புதிய தலைமுறை ஒன்று உருவாகியுள்ள நிலையிலும்  இத்தகைய இதழ் ஒன்றினை எத்தகைய சமரசமும் விட்டுக் கொடுப்புக்களும் இன்றி  ஒரு மூன்று தசாப்தகாலங்களாக வெளியிட்டு வந்துள்ள காலம் இலக்கியக் குழுவினரின் செயற்பாடானது பாராட்டுக்களுக்கும் அப்பாற்பட்டது.

 

இந்த காலகட்டத்தில் பல்வேறு சிறு சஞ்சிகைகள் புலம்பெயர் தேசங்களில் தோன்றியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை ஒரு குறுகிய எண்ணங்களையும் குழு மனப்பான்மைகளையும் கொண்டவைகளாகவே இருந்து வந்துள்ளன. ஆனால் இவற்றிற்கு முற்றிலும் மாறாக , காலம் இதழானது பல்வேறு சித்தாந்தங்களினாலும் பிளவுண்டு கிடந்த சமூகத்தில் பல்வேறு ஆளுமைகளும் தமது படைப்புக்களை வெளிப்படுத்திய மிகப் பெரிய தளமாக இருந்து வந்துள்ளது. ஏ.ஜே.கனகரட்னா, பொ.வேல்சாமி இலிருந்து யமுனா ராஜேந்திரன் வரை பல்வேறு ஆளுமைகளும் பல காத்திரமானதும் கனதியானதுமான  கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். கோபி கிருஷ்ணன், கலாமோகனில் இருந்து பொ.கருணாகரமூர்த்தி வரை பலரும் அற்புதமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள். சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், செழியன், திருமாவளவன், ஆழியாள், அனார், ஆனந்த பிரசாத், ,தேவ அபிரா, பிரசாத், தர்மினி, சுமதி ரூபன், மு.புஷ்பராஜன் போன்ற ஈழத்துக் கவிஞர்களும் விக்ரமாதித்யன், மனுஷ்யபுத்திரன், லக்ஷ்மி மணிவண்ணன், லீனா மணிமேகலை, யுவன், ஷங்கர் ராமசுப்ரமணியன் போன்ற தமிழகத்து கவிஞர்களுமாக ஒரு மாபெரும் கவிஞர்கள் பட்டாளமே  இதில் தமது படைப்புக்களை படைத்துள்ளார்கள். இதற்குமப்பால் அன்றைய புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் காலம் இதழில் எழுதி தமது படைப்பாற்றலை வளப்படுத்தியும் வெளிப்படுத்தியும் வந்துள்ளனர். ஷோபா சக்தி பல சிறுகதைகளை எழுதியுள்ளார். நா.வினோதரன் பல கவிதைகளை எழுதியுள்ளார். சயந்தன் கதிர் இதில் எழுதிய ‘புத்தா’ என்ற சிறுகதையே பின்பு ஈழ புகலிட இலக்கிய உலகில் பேசப்பட்ட  ‘ஆதிரை’ நாவலாக விரிவாக்கம் பெற்றது என்பதினையும் இங்கு குறிப்பிடுவது மிகவும் அவசியமானதாகும். இதுவரை வெளிவந்த 51 இதழ்களிலும் 120 இற்கும் மேற்பட்ட மிக உன்னதமான சிறுகதைகளும் 200 இற்கும் மேற்பட்ட கவிதைகளும் பிரசுரமாகியுள்ளன என்பதினையும் குறிப்பிடுவது அவசியமானதாகும்.

 

‘காலம்’ இதழானது தனது நீண்ட பயணத்தில் மற்றைய சிற்றிதழ்களைப் போலவே அதன் பலம், பலவீனங்களின் ஊடாகவே பயணித்திருக்கின்றது. குறித்த காலப் பகுதிக்குள் வெளிவராமல் மிகத் தாமதமாக வெளிவருவதும் அதற்காக தொடர்ச்சியாக மன்னிப்புக் கேட்பதுவும் சிற்றிதழ் பண்புகளில் ஒன்று. இதனையே காலம் இதழும் பல தடைவைகளில் செய்திருக்கின்றது. ஆண்டுக்கு 4 இதழ்கள் வெளிவரும் என்று அளித்த உறுதி மொழியை இந்த 28 வருட காலப்பகுதியில் அது ஒரு வருடத்தில் கூட நிறைவு செய்யவில்லை. இது ஒரு சிற்றிதழின் பலவீனமாக பலராலும் கருதப் பட்டாலும் இதுவே சிற்றிதழின் பலமாகவும் விதந்துரைக்கப்படுகின்றது. ஒவ்வொரு இதழ்களுக்குமான இடைவெளிகள் அதிகரிக்கும்போது அதனது உள்ளடக்கம் கனதியானதாகவும் காத்திரமானதாகவும் அமையும் என்பதும் பல்வேறு விமர்சகர்களின் கருத்து. இதனை உண்மையாக்குவது போலவே காலம் தனது ஒவ்வொரு இதழினையும் மிகவும் காத்திரமானதாகவும் கனதியானதாகவும் வெளியிட்டுள்ளது.

 

ஒரு குறிப்பிட்ட குழுவினரால் மட்டுமே அனேகமாக நடாத்தப்படும் சிற்றிதழ்களில் ஒரு குறிப்பிட்ட நபர்களும் அவர்களது நட்பு வட்டத்தைச் சேர்ந்த ஒரு சிலருமே என்றுமே எழுதும் ஒரு பலவீனமான பண்பு ஒன்று சிற்றிதழ் கலாச்சாரத்தில் தொடர்கின்ற ஒரு விரும்பப்படாத விடயம் ஆகும். இதற்கு காலம் இதழும் விதிவிலக்கல்ல. இந்த 3 தசாப்த காலப் பயணத்தில் காலம் இதழில் பல்வேறு பட்ட ஆளுமைகளும் படைப்பாளிகளும் பங்கெடுத்துக் கொண்டாலும் ஒரு குறிப்பிட்ட படைப்பாளிகளே தொடர்ச்சியாக எழுதி வந்த ஒரு பலவீனமான பக்கமும் இவ் இதழின் வரலாற்றில் உண்டு என்பதினையும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகின்றது. இவர்களது படைப்புக்கள் ஆனது காத்திரமானவையாக கனதியானவையாக இருந்துள்ள போதிலும் ஒரே இதழில் தொடச்சியாக வெளியிடப்படுவது சில வேளைகளில் வாசகனிற்கு  சலிப்பூட்டுபவையாக அமையும் ஆபத்துக்களாக மாறிவிடும் சாத்தியமுமுண்டு.

 

காலம் இதழின் சிறப்பு அதன் சிறப்பிதழ்கள் மூலமே பெரிதும் வியந்தோதப்படுகின்றது. வெளிவந்த 51 இதழ்களிளும் 20 இற்கும் மேற்பட்ட இதழ்கள் சிறப்பிதழ்களாகவே வெளிவந்திருக்கின்றன. பல்வேறு ஆளுமைகளையும் சிறப்பிக்கும் வகையிலும் மகாகவி, மு.பொன்னம்பலம், சிரித்திரன் சுந்தர், பேராசிரியர் சிவத்தம்பி, பத்மநாப ஐயர், கே.கணேஷ், ஏ.ஜே.கனகரட்னா, குமார் மூர்த்தி, தாசீசியஸ்,எஸ்.பொன்னுத்துரை, செல்வா கனகநாயகம், குழந்தை ம.சண்முகலிங்கம் போன்ற ஈழத்து ஆளுமைகளை மட்டுமன்றி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன்,ஜெயமோகன்,வெங்கடசாமிநாதன் போன்ற தமிழக ஆளுமைகளையும் கௌரவித்து அது சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. அத்துடன் சிறுகதை சிறப்பிதழ், நாடக அரங்க சிறப்பிதழ், வாழும் தமிழ் சிறப்பிதழ், அறிவியல் சிறப்பிதழ், என வெவ்வேறு தளங்களில் தனது பார்வையை ஆழப்பதித்து அதற்கான சிறப்பிதழ்களையும் வெளியிட்டு வந்திருக்கின்றது. குமார் மூர்த்தி நினைவுச் சிறப்பிதழில் அவர் குறித்த நினைவுகளை கவிதையாகவும் கட்டுரையாகவும் பகிர்ந்து கொண்ட செழியன், திருமாவளவன் இருவரும் கூட இன்று இல்லை என்பது புகலிட இலக்கிய சமூகமானது தொடர்ந்தும் இட்டு நிரப்ப முடியாத இழப்புக்களுடனேயே பயணிக்கின்றது என்பதை பறை சாற்றி நிற்கின்றது. அத்துடன் மேற்கூறிய ஆளுமைகள் குறித்த சிறப்பிதழ்கள் அனைத்தும் அவர்கள் புகழ் பாடும் குறிப்புக்களை மடுமே தாங்கி நின்றன என்பதுவும் இவர்கள் குறித்த விமர்சனங்கள் எதனையும் முன் வைக்கவில்லை என்பதினையும் நாம் இங்கு பதிவிடுவது அவசியமாகின்றது.

 

காலம் இதழ்களில் வெளிவந்த நேர்காணல்களும் அதன் சிறப்பினை விளக்குவதற்கு இன்னொமொரு உதாரணமாகும். அவற்றிலும்  இவ் நேர்காணல்களுக்கு அது தேர்ந்தெடுத்த ஆளுமைகளும் அதனது கவன வட்டமும் எம்மை வியப்பில் ஆழ்த்துபவை. டொமினிக் ஜீவா,  மு.பொன்னம்பலம், அ.முத்துலிங்கம், சியாம் செல்லத்துரை, சோ.பத்மநாதன், வேங்கட சாமிநாதன், அசோகமித்திரன், கே.கணேஷ், அ.ராமசாமி, என  படைப்பின் உச்சியில் உள்ள படைப்பாளிகளை மட்டுமன்றி தாசீசியஸ், ஞானம் லம்பேர்ட், ந.முத்துசாமி, பாலேந்திரா போன்ற நாடகக் கலைஞர்களையும் மரிய சேவியர் அடிகளார், கட்டடக் கலைஞர் மயூரநாதன், ஐராவதம் மகாதேவன், தொ.பரமசிவன், எஸ்.என்.நாகராஜன் போன்ற கற்கை நெறியாளர்களையும் துறைசார் வல்லுனர்களையும், பாலு மகேந்திரா, நாசர், போன்ற திரைப்படக் கலைஞர்களையும் நேர்காணல் செய்த காலம் இதழ் பிரவேசித்த பல்வேறு தளங்களும் எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அது மட்டுமன்றி கன்னட எழுத்தாளர் யு. ஆர். அனத்தமூர்த்தி, திரைப்பட நெறியாளர் தர்மசிறி பண்டாரநாயக்க போன்றோரது நேர்காணல்களின் மொழிபெயர்ப்புக்களையும் பதிவு செய்த காலம் இதழின் எல்லைகளற்ற பயணங்கள் ஆனது அதனது சிறப்பினை இன்னொரு தளத்திற்கு இட்டுச் செல்கின்றது.

 

இத்தகைய பலத்த வீச்சுடனும் செறிவுடனும் காலம் இதழ் தனது பயணத்தை தொடர்ந்தாலும் அது மற்றைய இதழ்களைப் போலவே பலத்த எதிர்வினைகளையும் விமர்சங்களையும் அவதூறுகளையும் எதிர்கொண்டது என்பதினையும் இங்கு மறுப்பதிற்கில்லை. முக்கியமாக தமிழக எழுத்தாளர்களின் அதிக பங்களிப்பும் அவர்களுக்காக வெளியிடப் பட்ட பல சிறப்பிதழ்களும் ‘காலம் ஒரு புகலிட இலக்கிய சஞ்சிகை அல்ல. அது கனடாவில் இருந்து வெளிவரும் ஒரு தமிழக சஞ்சிகை’ என்ற ஒரு நையாண்டியான விமர்சனம் இன்று வரை தொடர்கின்றது. ஆனால் காலம் ஆசிரியர் குழுவோ ‘காலம் இதழானது வெறுமனே புகலிட இலக்கிய சஞ்சிகை அல்ல. இது தமிழ் பரப்பில் எல்லைகளற்று செற்பட விரும்புகின்றது‘ என்ற தமது எண்ணத்தினை பல தடைவைகளிலும் பதிவு செய்து வந்திருக்கின்றது. உண்மையில் காலம் இதழானது ஈழம், தமிழகம், புகலிடம் என்ற மூன்று புள்ளிகளை இணைக்கும் முக்கோணப் பரப்பில் ஒரு பாலமாகவும் இந்த தளங்களில் இருந்து தமது கருத்துக்களையும் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்ளும் ஒரு பரிவர்த்தனை நிலையமாக விளங்கியது என்பதினையும் நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதனை  தனது எண்ணங்களில் மட்டுமல்ல செயல்முறையிலும் அது நடத்திக்காட்டியது. அதனால்தான் பத்மநாபஐயர் குறித்த ‘தமிழ் ஈழத்தின் இலக்கிய தூதர்’ என்ற கட்டுரையையும் ‘ஒரு தமிழகத்து வாசகனின் பார்வையில் ஈழத்து சிறுகதைகள்’ என்ற கட்டுரையையும் எம்.வேதசகாயகுமாரினால் காலத்தில் எழுத முடிகின்றது. கூடவே சுந்தரராமசாமி குறித்து மு.நித்தியானந்தன் எழுதிய ‘ஈழத்தவர்களின் கவனக் குவிவில் சீரிய எழுத்து’ என்ற கட்டுரையையும் காலம் பிரசுரிக்கின்றது.  

 

மேலும் எழுத்தாளர் ஜெயமோகனுடனான காலம் இதழும் அதன் ஆசிரியரும் ஆசிரியர் குழுவில் உள்ள மற்றவர்களும் கொண்டுள்ள உறவும் நட்பும் எல்லோராலும் உவப்பாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஈழ விரோத, இடதுசாரி விரோத, தலித் விரோத, இஸ்லாமிய விரோத என்று பல்வகைப் பட்ட பிற்போக்குத் தனங்களையும் கொண்டுள்ளவராக ஒரு இந்துத்துவா ஆதரவு சக்தியாக கருதப்படும்  ஒருவரை அநேகமானோர் நிராகரிப்பதில் நியாயமுண்டு. ஆனாலும் காலம் ஆசிரியர் குழுவானது பல தடவைகளிலும் “ஒரு படைப்பாளியின் ஆளுமையை நாம் நோக்கும்போது அவரது தனி மனித பலவீனங்களை நாம் நோக்குவதில்லை” என்று நியாயப்படுத்துகின்றது. ஆயினும் ஒரு படைப்பாளியின் தனிமனித பலவீனம் என்பது வேறு, அவரது தந்திரமான அரசியல் காய் நகர்த்தல் வேறு என்பதினை காலம் ஆசிரியர் குழுவினர் புரிந்து கொண்டு எதிர்காலத்தில் செயற்படவேண்டும் என்பது எமது விண்ணப்பமும் வேண்டுகோளும் ஆகும்.

 

காலத்தில் வெளிவந்த கட்டுரைகளும் காலம் குழுவினரது செயற்பாடுகளும் அவ்வப்போது பலத்த சர்ச்சைகளையும், அதிர்வுகளையும் அவ்வப்போது எதிர் நோக்கியிருந்தது. இதில் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் நூலான ‘நவீனத்துவம்-தமிழ்- பின் நவீனத்துவம்’ குறித்து தலித்தியப் பார்வையில் வரன் என்பவரால் எழுதி  வெளிவந்த ஒரு காட்டமான  கட்டுரையொன்று  மிக மோசமான எதிர்வினைகளை உண்டாகியிருந்தது. அத்துடன் சுந்தர ராமசுவாமி அவர்கள் தனது கனடா விஜயத்தின் போது டானியலின் பஞ்சமர் நாவல், நாவல் என்ற தரத்தை அடையவில்லை என்பதாக  தெரிவித்த கருத்துக்களும் பல மோசமான எதிர்விளைவுகளை உண்டாகியிருந்தது. இதன் போதெல்லாம் தாம் தொலைபேசியின் ஊடாக மிரட்டப்பட்டதாக அஆசிரியர் குழுவினர் தெரிவித்திருந்தனர். மேலும் சு.வில்வரத்தினம் கவிதைகள் குறித்து ஜெயமோகன் எழுதிய விமர்சனங்களும் அதற்கு எதிர்வினையாக மு.பொன்னம்பலம் எழுதிய கட்டுரையும் அன்று வாசகர்கள் மத்தியில் பலத்த சர்ச்சைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியிருந்தன. ஆயினும் இத்தகைய சர்ச்சைகளையும் எதிர்வினைகளையும் காலம் ஒரு நாகரிகமான மொழியிலேயே பேசியிருந்தது என்பது மிக முக்கியமான விடயமாகும்.

 

பிரதேசவாதம், பிற தேசவாதம் என்பவை சாதாரண மக்களிடையே தலை தூக்கி நிற்பதைப் போலவே இல்லகிய வாதிகளிடமும் தல தூக்கி நிற்பதனை இலக்கியவரலாறுகளை உன்னிப்பாக கவனிப்போர் அறிவர். இதற்கு ‘காலம்’ இதழும் விதிவிலக்காக அமையாதது எமக்கு கொஞ்சம் விசனத்தையே ஏற்படுத்துகின்றது.  செல்வம் அருளானந்தம் அவர்கள்  காலம் இளவேனில்1997 இதழில் தனது ஆசிரியர் உரையில் பின்வருமாறு எழுதுகிறார். “புலப்பெயர்ந்த படைப்புக்கள் என அழைக்கப்படும் இன்றைய முயற்சிகள் இனிமேல் கனடா தமிழ் இலக்கியம் என அழைக்கப்படும் ஆரம்ப கால கட்டத்தில் நிற்கிறோம். அதன் வரவிற்கு ‘காலம்’ வழி சமைகிறது என்பதில் பெருமை அடைகிறது.” இந்த எண்ணக்கரு ஆனது எப்படி அவர் மனதில் உருவாகியது என்பதுவும்  எதற்காக இவர் புலம்பெயர் இலக்கியம் என்ற பொதுவான  பதத்திலிருந்து கனடா தமிழ் இலக்கியம் என்ற பிறிதொரு இலக்கிய வகையை உருவாக்கக முயல்கிறார் என்பதும் எமக்கு இன்னமும் புரியாமலே உள்ளது.   தமிழ் புலம்பெயர் இலக்கிய சூழல் என்பது எல்லைகளற்ற, நாடுகள் கடந்த ஒரு பொது வெளியில் பயணிக்கும்ஒரு இலக்கியப் போக்கு ஆகும். அதனால் தான் அது மிகக் குறைந்த வயதுடையதாக, மிகக் குறைந்த எண்ணிக்கையினரால் வழி நடத்தப்படுவதாக இருந்துள்ள போதிலும் ஈழ-தமிழக இலக்கிய சூழலுக்கு நிகராக அது பயணிக்கின்றது. இதுவே ஜெர்மன் தமிழ் இலக்கியம், பிரான்ஸ் தமிழ் இலக்கியம் அல்லது இங்கிலாந்து தமிழ் இலக்கியம் என்ற பதாதைகளின் கீழ் இயங்க முற்பட்டால் அதன் விளைவு எப்படியாகும் என்பதை மிகச் சாதாரண அறிவுள்ளவர்களே புரிந்து கொள்வர்.

 

மேலும் இன்றைய காலகட்டத்தில் உலக அரங்கிலும் நவீன தமிழ் இலக்கிய பரப்பிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காலம் எவ்வாறு உள்வாங்கியுள்ளது என்பதை அவதானிப்போமானால்  இது எமக்கு மிகப்  பெரிய ஏமாற்றத்தினையே  அளிக்கின்றது. இன்று நவீன வாழ்வின் அனுபவங்களையும் புரிதல்களையும்  வெளிப்படுத்தும் பல புதிய படைப்பாளிகளின் பிரவேசம் அல்லது படையெடுப்பொன்று  நவீன தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் நிகழ்ந்துள்ளது. ஈழத்தில் யோ.கர்ணன், அனோஜன் பாலகிருஷ்ணன், கிரிசாந்த், யதார்த்தன், யோ.கௌதமி, அகரமுதல்வன், போன்ற ஆளுமைகளும்  தமிழகத்தில் கே.என்.செந்தில், லக்ஷ்மி சரவணகுமார், போகன் சங்கர், சரவணன் சந்திரன், மாரி செல்வராஜ், ஜீவ கரிகாலன் போன்ற படைப்பாளிகளுமாக நவீன தமிழ் இலக்கியத்தில் ஒரு மாபெரும் படையெடுப்பொன்றே நிகழ்ந்துள்ளது. இதில் யதார்த்தனது ஒரு சில கவிதைகளைத் தவிர மற்றைய ஆளுமைகளது படைபுக்களோ அல்லது அவர்கள் பற்றியோ  அவர்களது படைப்புக்கள் பற்றிய சிறு குறிப்புக்களோ காலத்தில் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தினை அளிக்கின்றது.

 

இன்று உலகெங்கிலும் படைப்புக்களின் மொழியில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. மக்களின் அவலங்களையும் அவர்களது போராட்டங்களையும் பேசும் படைப்புக்களுக்கான அங்கீகாரம் ஆனது தமிழ் பரப்பிலும் மிக அதிகமாகவே அதிகரித்துள்ளது. ஆனால் இவற்றிட்கான தளம் காலத்தில் இல்லாததும் இது குறித்து பேசும் வலிமை காலம் குழுவினரிட்கு இல்லாமல் இருப்பதும் கூட எமக்கு மிகுந்த விசனத்தையே ஏற்படுத்துகின்றது. போரிற்கு பின்பான படைப்புக்களில் அதிக கவனம் பெற்றவர்களான யோ.கர்ணன், குணா கவியழகன், அகரமுதல்வன்  போன்றவர்களது படைப்புக்கள் குறித்து ஒரு சிறு குறிப்பெதுவும் காலத்தில் இதுவரை இடம்பெறவில்லை. புகலிட இலக்கிய படைப்புலகை இன்னொரு தளத்திற்கு நகர்த்திய சேனனின் ‘லண்டன்காரர்’ குறித்து ஒரு பெரிய மௌனமே காலம் குழுவினரிடம் காணப்படுகின்றது. இது போன்றே தமிழகத்திலும் இரா.முருகவேளின் ‘மிளிர்கள்’, ‘எரியும் பனிக்காடு’ ‘முகிலினி’ பாரதி நாதனின் ‘தறியுடன்’ மற்றும் ‘வந்தேறிகள்’, ஹீரா சம்சுதினின் ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ போற நாவல்கள் அண்மையில் பெற்ற அங்கீகாரங்களும் அவை சமூக, கலை, இலக்கியத் தளங்களில்  மக்களிடையே பெற்ற வரவேற்பும் நாம் அறிந்தவையே. இவை குறித்த இருட்டடிப்புக்களை ‘காலம்’ இதழானது ஏன் புரிகின்றது என்பது எமக்கு இன்னமும் புரியாமலே உள்ளது. இப்படைபுக்கள் குறித்தெல்லாம் ஒரு குறித்த குழுவினர் மிக வன்மையான கண்டனங்களையும் வசவுகளையும் பொழிந்தது நாம் அறிந்ததே. எனவே காலம் குழுவினரும் அக்குறித்த குழுவினரும்  ஒரே அலைவரிசையில் தமது சிந்தனையை வெளிப்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எம்மிடையே அடிக்கடி ஏற்படுத்துகின்றது.

 

இவையனைத்துக்கும் அப்பால் பாரதி,புதுமைப்பித்தனிற்கும் பின்பு நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த ஆளுமையாகக் கருதப்படும் பிரமிளின் படைப்புக்கள் எதுவும் காலம் இதழ் ஒன்றில் கூட வெளிவரவில்லை என்பதும் இந்த 51 இதழ்களிலும் அவர் பற்றிய ஒரே ஒரு கட்டுரை மாத்திரமே வெளிவந்தது என்பதும் எமது மிகப் பெரிய ஆதங்கமாக உள்ளது. அதே போன்றே மு.தளையசிங்கம் குறித்த ஓரிரு கட்டுரைகளை மட்டுமே எமது அவதானிப்பிற்கு உட்படுகின்றது.  இவற்றினை நிவர்த்தி செய்யும் முகமாக இவர்களுக்கான  சிறப்பிதழ்களை  காலம்  வெளியிட வேண்டும் என்பது எமது விண்ணப்பமும் வேண்டுகோளும் ஆகும். இவை மட்டுமன்றி இன்று எம்மிடையே வாழும் ஆளுமைகளாக புகலிடத்தில் எம்மிடையே உலா வரும் படைப்பாளிகளை, சமூக, கலை, இலக்க்ய தளங்களில் இயங்குபவர்களை  கௌரவிக்கும் வகையில் சாத்தியமாயின்  அவர்களுக்கான சிறப்பிதழ்களையும் வெளியிட வேண்டும் என்பதுவும் கூட எமது விண்ணப்பமும் வேண்டுகோளும் ஆகும்.  அத்துடன் இதுவரை காலம் இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளையும் கவிதைகளையும் நேர்காணல்களையும்  தனித்தனி தொகுப்புக்களாக வெளியிடுவதின் மூலம் அடுத்த தலைமுறையினரும் காலம் இதழின் செயல் திறனை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்பதுவும் எமது எண்ணமும் நிலைப்பாடும் ஆகும்.

 

ஒரு 28 வருட காலப்பகுதியில் 51 இதழ்களை வெளியிட்ட ஒரு சஞ்சிகையின் பணி குறித்து ஒரு 4 அல்லது 5 பக்க கட்டுரைகளில் எழுதுவதென்பது ஒரு சாத்தியமான விடயம் அல்ல. அது குறித்து தனித்தனியான ஆய்வுகளை, விமர்சங்களை, திறனாய்வுகளை  எதிர்காலத்தில் பலரும் மேற்கொள்ள வேண்டுமென்பது எமது எண்ணமாகும்.

முடிவாக  காலம் ஒரு துயர்  மிகுந்த சமூகத்தின் மூன்று தசாப்த கால வேதனைகளையும் வலிகளையும் கொண்ட வரலாற்றை நேரிடையாகவும்  தனது படைப்புக்களின் ஊடாகவும்  மிகவும் காத்திரமாக பதிவு செய்திருக்கின்றது என்பதினை நாம் எவ்வகையிலும் மறுக்க முடியாது. தொடர்ந்தும் துயரங்களின் ஊடாக மட்டுமே பயணிக்கும் எமது சமூகத்தின் குரல்களை காலம் தொடர்ந்தும் சரியான முறையில் வெளிப்படுத்தவும், அது தொடர்ந்தும் ஒரு காலத்தின் குரலாக இடைவெளிகளின்றி வெளிவரவும் வாழ்த்துகிறோம்.

௦௦௦௦௦

 

 

 

 

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment