Home » இதழ் 21 » * சண்முகம் சிவகுமார் கவிதைகள்

 

* சண்முகம் சிவகுமார் கவிதைகள்

 

 

 

எல்லாம் தாண்டி திறக்கும் உடல்

————————————————-

 

நேற்றைய புறக்கணிப்பின்

வடு தந்த

மிகுந்த எரிவை  துடைத்து

திறக்கிறது உடல்

 

அது  இதயத்தில்

பசுமையாய்

ஒளிரும் அன்பாய் வளர்கிறது

 

பழைய சம்பவத்தினால் கொன்று

தெருவில் வீசிய என்னை

மீள சேகரித்து

பெருத்த வலிமையோடு

உடலை திறக்கிறது

 

எல்லாவற்றிலும்

நெழிந்து

சுழித்து

நாடகிக்கும் கணங்களின்

காதை திருகி

புன்னகைக்கச் சொல்லியது

 

இப்படி

உடலுக்குள்

கனிகளுக்கு பஞ்சமில்லாத

அழகிய பூவொன்று பூக்கிறது

 

இனி

எல்லாம் திறப்படும்

 

0000

 

ஒளிச்சிறகுகளுடன் சில சொற்கள்

 

ஆதியிலிருந்த வனைஞன்

எதிர் காலத்திற்கென

ஒளிச்சிறகுகளுடன் சில சொற்களையும்

படைத்து பறக்கவிட்டான்.

 

இருளின்

அடர்ந்த கருமைக்குள்ளேயே

துளாவிக் கொண்டிருந்த நான்

சிறகுகளுடன் ஒளிரும்

சொற்களை கண்டு அஞ்சினேன்

 

வனைஞன்

கை நிறையநிறைய

அள்ளி தந்த

சொற்களில் படபடப்புடன்

ஒளிரும் சிறகை

பெரும் அச்சத்தோடு தொடப்பயந்து

மீளா இருளுக்குள்

ஓடிக் கொண்டிருந்தேன்

 

ஒளிச்சிறகுகளுடன்

பறந்து கொண்டிருந்த சொற்கள்

முகமற்றவருக்கு

அழகிய செழித்த முகத்தையும்

அற்புதங்களை

நிகழ்த்தும் குரலையும்

விடுதலையின்

பரந்த வானத்தையும் தருகிறது

 

நானும் சூடிக் கொண்டேன்

ஒளிச்சிறகுகளுடன்

சில சொற்களை…

௦௦௦௦௦

 

 

 

கதைகளுக்குள் காணாமல் போனவன்…

 

கதை சொல்பவன்

நீண்ட பெருமூச்சுடன்

கதையை நிறுத்திக்கொண்டான்

 

அவன் கூறிய கதைகளில்

நான்

எனது முகத்தை கண்டதில்லை

 

கதைக்குள்

வளர்ந்திருந்த பூஞ்செடிகளில்

எழும்பிய வண்ணாத்துப்பூச்சிகளின்

கால்களில் ஒட்டியிருக்கும் மகரந்தம்

எங்கு

செழிப்பை கொட்டியிருக்கிறது

எனக்கு தெரியாது

 

நான்

இல்லா கதைகளில்

தும்புதடியை வைத்துக்கொண்டு

காலத்தை கூட்டி பெருக்குதலே

வாழ்வானது

 

கதை கூறுபவன்

பொழுதொரு நிறத்தோடு

வருகிறான்

 

பின்

என் பரம்பரையின் கதைகளே

கருத்த வார்த்தைகளால் தீட்டி

மறைத்துவிடுகிறான்

 

இப்படி

கதைகளுக்குள்

காணாமல் போனவன்

புதிய மொழியாலான கதைகளோடு

இன்னும் கொஞ்சம் நேரத்தில்

உங்கள் கதவை தட்டுவான்

 

தயவுசெய்து

அவனுக்கு கதவை திறவுங்கள்

௦௦௦௦௦

  • நன்றியுடன்,  ஓவியர் புகழேந்தியின் ஒவியம் எடுத்தாளப்பட்டுள்ளது
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment