Home » இதழ் 21 » *அ.சிவானந்தனின் இரு நேர்காணல்கள் -1- யமுனா ராஜேந்திரன்

 

*அ.சிவானந்தனின் இரு நேர்காணல்கள் -1- யமுனா ராஜேந்திரன்

 

இனம் மற்றும் வர்க்கம்ரேஸ் அன்ட் கிளாஸ்–  காலாண்டு இதழ் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலத்தில் வெளியாகி வருகிறது.  இலண்டனிலிருந்து வெளியாகும் இவ்விதழின் ஆசிரியர் அ. சிவானந்தன், ஈழத்தமிழர்.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். 1958 இல் இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தைத் தொடர்ந்து இலண்டனுக்குக் குடிபெயர்ந்தவர்.  ஐரோப்பிய மையச் சிந்தனைக்கெதிராக, மூன்றாம் உலகச்சிந்தனையின் மேதைமையையும் ஆன்மாவையும், போராட்ட உணர்வையும் நிலைநாட்டத் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். ஐரோப்பிய நாடுகளில் வெள்ளை நிறவெறிக்கெதிரான போராட்டத்தில் ஆசிய, ஆபிரிக்க. இலத்தீன் அமெரிக்க மக்கள் ஸ்தாபன மயமாகத் திரளவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருபவர்.  வர்க்கப் பிரச்சினையை நிறம் மற்றும் இன அணுகுமுறையின்படியே கையாளவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். 

1994 ஆம் ஆண்டின் இறுதியில் பல்வேறு தொடர்ச்சியான உரையாடல்களுக்குப் பின், அவரது நேர்முகம் உறுதியானது.  இலண்டன் “கிங்ஸ் கிராஸில் ” இயங்கும் “இன்ஸ்டிட்யூட் ஆப் ரேஸ் ரிலேசன்ஸ்” நிறுவனத்திற்கு நான் போனபோது, அவர் ஒரு கூட்டத்தில் இருந்தார்.  15 நிமிடங்களில் அதை முடித்து விட்டு வந்தவர் முன்று மணி நேரத்தை எனக்காக ஒதுக்கித் தந்தார்.  ‘வாங்க தம்பி, சுகமாக இருக்கிறீர்களா?’ என்பதுதான் அவர் என்னுடன் பேசிய தமிழ் சொற்கள்.  சரளமாகத் தமிழில் உரையாட அவரால் இயலுவதில்லை.  தமிழில் நாம் பேசுவதைப் புரிந்து கொள்கிறார்.  இவர் தன் அறிவார்ந்த கருத்தமைவுகளால் எட்வர்ட் ஸைத், சமீர் அமீன், இக்பால் மசூத், ஸ்டுவர்ட் ஹால் போன்ற மார்க்சிய அறிஞர்களோடு சேர்த்துச் சொல்லப்படுபவர்.

 

பல்வேறு அறிஞர்களுடனான அவரது நான்கு நேர்முகங்கள் இரண்டு சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, என்னுடனான உரையாடலையும் சேர்த்து, அவரின் 50 ஆண்டுகால நிறவெறிப் போராட்ட அனுபவங்கள், அவரின் கோட்பாட்டுப் பங்களிப்புகள் போன்றவற்றை ஒன்றிணைத்துத் தொகுக்குமுகமாக, ஒரே தொடர்ந்த உரையாடலாக இங்கு நான் மாற்றியிருக்கிறேன். அ. சிவானந்தனின் நினைவுகள் மரணிக்கும்போதுவென் மெமரி டைஸ் – நாவல் வெளியானதையடுத்து நான் நிகழ்த்திய அவருடனான இரண்டாவது உரையாடலில், தேசியம், இலக்கியம், பின்சோவியத் மார்க்சியம், பின்நவீனத்துவம் போன்றவை குறித்த எனது கேள்விகள் இடம்பெறுகின்றன

 

 ——————————————————————————————————————————————————————————————————————————————-

 

 

. சிவானந்தனின் இளமைக்காலம், கல்வி, இனம் மற்றும் வர்க்கம்  பத்திரிகையின் தோற்றம் ,வளர்ச்சி போன்ற பகுதிகள் குவிண்டன் ஹோரே, மால்கம் இம்ரே ஆகியோருடனான இவரின் நேர்முகங்களிலிருந்து மொழியாக்கம் பெறுகிறது. பிரித்தானிய அரசியல், இனங்களுக்கிடையிலான உறவு, தொழிற்சங்கம், ஐரோப்பிய அரசியல் பற்றிய அவரது கருத்துக்கள் பர்மிந்தர் கவுரால் 1992 ஆம் ஆண்டு தொழிற்கட்சி மாநாட்டுக் கருத்தரங்கிற்கு முன்னதாக எடுக்கப்பட்ட நேர்முகப் பிரசுரத்தினின்று மொழியாக்கம் பெறுகிறது.

 

ஏகாதிபத்தியம், இயந்திரமயமாதல். ஐரோப்பிய அறிவுஜீவிகள் பற்றிய அவரது கருத்துக்கள் மைக்கேல் ஸ்டாக் உடனான நேர்முகத்தினின்று மொழியாக்கம் பெறுகிறது. பின் நவீனத்துவம், பின் அமைப்பியல், பின் நவீனத்துவ உலகில் நிறவாதம், ஸல்மன் ருஷ்டி பிரச்சினை, இந்திய சமூகத்தில் சாதிக்கும் நிறவெறிக்கும் உள்ள உறவு பற்றிய கேள்விகள், காலனிய அறிவுஜீவிகளின் விடுதலை போன்றன குறித்த கேள்விகள் என்னுடைய நேரடி நேர்முகத்தினின்று மொழியாக்கம் பெறுகிறது. பின் நவீனத்துவம் மற்றும் கணிப்பொறியியல் காட்சிப்புல வெளி தொழில்நுட்பம் பற்றிய அவரது பதில்கள் அவரது நியூ ஸ்டேட்ஸ்மேன் (15, அக்டோபர் 1993 மற்றும் 14 ஜுலை 1995 இதழ்கள்), இன்ஸ்டிட்யூட் ஆப் கன்டம்பரரி ஆர்ட்ஸ்  அரங்கச் சொற்பொழிவுகளில் இருந்து மொழியாக்கம் பெறுகிறது. 

 

பிரித்தானியக் கலாசாரம் எவ்வாறு உங்களைப் பாதித்து வந்திருக்கிறது?

 

இலங்கையில் , பிரித்தானிய  காலனித்துவ அரசியல் சூழலுக்குள்தான் நான் பிறந்தேன்.  அதுதான் என்னை உருவாக்கியது.  பிரித்தானிய அரசியல் அல்ல. மாறாக பிரித்தானிய நிர்வாகம்தான் அனைத்திலும் தழுவியிருந்தது. பள்ளிக்கூடங்கள், பணிகள், நாட்டை நிர்வாகிப்பது, தபால் அலுவலகம், ரயில்வே நிர்வாகம் என அனைத்திலும் நிரவியிருந்தது. பிரித்தானிய நிர்வாகம் இருந்த இடங்களில் ஆங்கிலக் கல்வி வழியே எனது தந்தை,  நான் என அனைவரும் பிரித்தானிய கலாசாரத்துள் வந்தோம்.  ஆங்கில கல்வியின் மூலம்தான் முதன்மையாகப் பிரித்தானிய கலாச்சாரத்துள் வந்தோம்.  குறிப்பாக இலங்கையின் வடபகுதி , குழந்தைகளைத் தவிர எதுவும் வளரமுடியாத வரண்டபூமி, அங்கு மலைகள் இல்லை. நதிகள் இல்லை.  உப்புநீர்தான் எங்கும்.  வயல்கள் சிறு நிலங்களேயன்றி பெரிய பண்ணைகளாக இருக்கவில்லை. எனது தாத்தா ஒரு குறுநிலச் சொந்தக்காரர்.  அவரது ஒரே ஆசை ஆங்கிலப் பள்ளிக்கு தமது பிள்ளைகளை அனுப்பி படிக்கச் செய்ய வேண்டும் என்பதுதான்.  (அதாவது பயிற்றுமொழி ஆங்கிலம்) அதன்முலம் அவர்கள் ‘சரியான வேலை’ பெறமுடியும் என்பது அவரது எண்ணம்.  பிற்பாடு பொருளாதார சமூக ஸ்திரநிலை அடையமுடியும் என அவர் கருதினார் .  இதுதான் வடக்கில் வாழ்ந்தோரின் ஆசை.  அநேகமாக அனைத்துத் தமிழ்ப் பகுதிகளின் நிலையும் இதுதான்.

 

எனது அப்பா பதின்முன்று பதினான்கு வயதாக இருந்தபோது இவ்வாறுதான் தமிழ்ப் பள்ளியிலிருந்து ஆங்கிலப் பள்ளிக்குப் போய்ச் சேர்ந்தார்.  ஒரு சில ஆண்டுகளே அங்கு பயின்று பிற்பாடு தபால் திணைக்களத்தில் எழுத்தராகச் சேர்ந்தார்.  அவரது ஆசை, தம் மகனை இன்னும் மேலான ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்பி அதன்முலம் இன்னும் நல்ல சமூகப் பொருளாதார நிலை அடையும் வேலை தேடுவதாகத்தான் இருந்தது.  அவர் தபால் பிரிவில் இருந்ததால் பிரிட்டிஷ் ராஜ்யத்தின் கீழ் அவர் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டார்.  இந்த அரசு உத்தியோகஸ்தர்கள் தான் (சிங்களவர், தமிழர்,  பெரும்பாலும் தமிழர்) காடுகள், குக்கிராமங்கள் என மனிதர்கள் சாதாரணமாக நுழைய முடியாத இடங்களுக்கெல்லாம் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தைக் கொண்டு சென்றவர்கள்.

 

நல்ல பள்ளிக்கூடங்கள் கொழும்பில், சிங்களப் பிரதேசமான தெற்கிலேயே இருந்தது.  கத்தோலிக்கர்களால் அல்லது ஆங்கிலிகன் கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்டன.  அடிக்கடி இடம் மாறுவதால் என் படிப்பு தடைப்படுவதின் நிமித்தம் நான் கொழும்பில் இருக்க அனுப்பப்பட்டேன். எனது வாழ்வு முழுக்கவும் முரண்பாடுகள் நிறைந்து இருந்தது.  நான் வெகுசாதாரண விவசாயப் பின்னணியில் இருந்து வந்தவன்.  நான் கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்தில் படித்தேன்.  ஒரு சிங்களச்சேரியில் மிக வறுமையான ஒரு மாமாவின் வீட்டில் தங்கியிருந்தேன்.  தமிழனும் இந்துவுமான நான் கத்தோலிக்க மதக்கல்வி கற்கவேண்டியிருந்தது.  பொதுவழிபாட்டுக்குப் போகவேண்டியிருந்தது.  அதேவேளை வெள்ளிக்கிழமைகளில் எனது மாமாவோடும் உறவினர்களோடும் இந்துக் கோவில்களுக்குப் போனேன்.  இவ்வாறு எனக்குள் மேற்கத்தியக் கலாசாரமும் மதமும் எனது இந்து நம்பிக்கைகளும் கலந்திருந்தன.  மத்தியதர வர்க்கமாகிக் கொண்டிருந்த ஒரு ஏழைப் பையன் இவ்வாறுதான் சேரிக்கலாசாரத்தைக் கற்றுக்கொண்டவனாயிருந்தான்.  எனது முரண்களை நான் அருவமாக சொல்கிறேன் என நினைக்கிறேன்.  இப்படி நான் வாழ்ந்தது பலவேளை எனக்கு துக்கமாகவிருந்தது.  எல்லாவற்றிக்கும் மேலாக, ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பையன் பள்ளி, கல்லூரி, பிற்பாடு பல்கலைக்கழகம் எனச் சென்று நல்ல வேலைபெற்று குடும்பத்தைக் காப்பாற்றி பெற்றோருக்கு உதவவேண்டிய கடமையேயிருந்தது.  அந்தப் பொறுப்புணர்வு “நியராரே”  சொல்கிறபடி ‘எந்த மக்கள் நமக்குப் படிப்பைக் கொடுத்தார்களோ அவர்களுக்கு திரும்ப அவர்களின் நலனுக்கு நாம் படிப்பைத் தரவேண்டும்’ என்கிற மாதிரியானது.  எனது எல்லா முரண்களின் துக்கத்தின் மீதும் இதுவே நிரவியிருந்தது. 

 

என்னைச் சிதிலமாக்கிப் போட்ட அனுபவங்களும் உண்டு.  ஒவ்வொருமுறை எனது பள்ளி விடுமுறையின் போதும் நான் மிக மிகப் பின்தங்கிய நிலையில் இருப்பதை நான் காணக்கூடியதாக இருந்தது.  கிராமத்தின் கிரிக்கெட் விளையாட்டின்போதுகூட, பதினாறு வயதேயான நான் பதினொரு பேரில் முதலாவதாக விளையாடுபவனாயிருந்தேன்.  இது கொழும்பில் சென்று படிக்கும் மாணவர்கள் கிராமத்து மாணவர்களைக் காட்டிலும் மேலாக இருப்பதைக் காட்டியது.  இந்தப்பிரிவு எனக்கு மிகவும் வேதனையைத் தந்தது.  ஏனெனில் நான் கிராமத்தில் ஒருவனாகவே இருக்க விரும்பினேன்.  அதே வேளை எனது இன்னொரு பக்கம் கொழும்புக்காரனாக, ஆங்கிலப் பள்ளியில் படித்தவனாக, படித்த நண்பர்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும் என்ற ஆசை.  எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.  எனது ஏழை மாமிக்கு நான் இழைத்த துரோகம்.  அவள் ஏழையாக அழுக்காக இருந்ததால் எனது மிகப் பிரியத்துக்குரிய அந்த மாமியை , எனது குடும்பத்தின் வேலைக்காரி என்று நான் எனது பள்ளி நண்பர்களுக்குச் சொன்னது ஞாபகம் இருக்கிறது.

 

காலனித்துவப் பிரதிமையாகவே உங்கள் கல்வி உங்களை உருவாக்கியதுமிகச்சரியாகச் சொன்னால் தரகு வர்க்கத்தவனாகவே கல்வி உங்களை உருவாக்கியதுஆனால் அங்கேயே நீங்கள் முடிந்துவிடவில்லைஅது ஏன் அப்படி நிகழ்ந்தது என நினைக்கிறீர்கள்?

 

காலனியம் ஒரு வழிப்பாதை என நினைப்பது தவறு என நினைக்கிறேன்.  அது உனக்கு நேர்ந்ததாக, உன்னை முழுக்க எடுத்துக்கொண்டதாக, எதிர்க்கவே முடியாத அதிகாரமாக நினைப்பது தவறு.  உமது கலாசாரத்தினின்று, உமது மொழியினின்று. உமது மதத்தினின்று எப்போதும் எங்கேனும் இருந்து எதிர்ப்பு இருந்துகொண்டேதானிருக்கும்.  அந்த எதிர்ப்பு முதலில் இருத்தலிலிருந்து எழும் கலகமாகவே முதலில் எழும்.  உனது வேர்களுக்கு சாராம்சத்திற்கு எதிரான எல்லாவற்றிற்கும் எதிரான கலகமாக எழும். நான் இந்துவாக இருந்தும் சர்ச்சுக்கு போகச் சொல்லி தாய் தந்தையர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டேன்.  அது எனக்கு கலகத்திற்கான தருணத்தைத் தந்தது.  கல்வியின் போக்கில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பின் எதிர்ப்பைக் காண்பித்தேன்.  ஆனால் ஒரு மாற்றை அப்போது கண்டிருக்கவில்லை.

 

இரண்டில் ஒன்றில் நான் போயிருக்க முடியும்.  முழுத் தமிழராக,  முழு இந்துவாக ,முழு இலங்கையனாகப் பின்நோக்கிய தேசியத்திற்கு நான் போயிருக்க முடியும்.  காலத்தைப் பின்னோக்கிப் போக வைத்து பிரிட்டிஷ், டச்சுக் கலாசாரங்களை, கல்வி அமைப்பை, அரசியலை, எம்மைப்பற்றிய எமது உணர்தலை பாதிப்பைச் செலுத்தவில்லை என நிராகரித்திருக்க முடியும்.  (எனக்குள் ஒரு உணர்வு இருந்தது.  நான் எனது கோவில்களுக்கு பின்னோக்கிப் போய் இருந்தால் எனது கலாசாரத்துக்கு போய் இருந்தால் கத்தோலிக்கத்திலிருந்து காலனியாதிக்கத்திலிருந்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து தப்பியிருக்க முடியும் என) மற்றொருபுறம் நான் ஸ்தானங்களைப் பெற விழைந்தேன்.  எனது ஏழைக் குடும்பத்தைக் காப்பாற்ற உழைத்தேன்.  ஒரு நேரம் நான் விரும்பியபடி ஒரு பரிஸ்டராக விழைந்தேன்.  ஏதோவொரு காலத்தில் இங்கிலாந்துக்குப்போக, பல்கலைக்கழகம் நுழைய,  அன்றிருந்த அமைப்புக்குள்ளேயே இருந்துவிட விழைந்தேன்.  நீங்கள் குறிப்பிட்ட மாதிரித் ‘தரகனாக’ ஆக விழைந்தேன்.  ஆனால் உலகில் பொருளாதார ரீதியில், சமூக அளவில் போவதான காரியம் மட்டுமே இது என்று நான் நினைக்கவில்லை.  நான் அப்படிப் பார்க்கவில்லை.  தேர்வு, இரண்டு பாதைகளுக்கு இடையில் இருந்தது தேசியவாதியாக இருப்பது அல்லது தரகனாக இருப்பது.

 

எவ்வாறு வரவேண்டும் என நீங்கள் தேர்ந்தீர்கள்?

 

எனது சூழலில் இருக்கிற எவரும் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இல்லை.  எவரும் அப்படித் தேர்வு செய்வதும் இல்லை.  நான் பல்கலைக்கழகத்தில் நுழைந்தபோது எனது எல்லா முரண்பாடுகளும் கொதிநிலைக்கு வந்தன.  இந்தக் கிராமம், நகரம் போன்ற முரண்பாடுகள்.  மிகப் பிரமாண்டமான முரணாக தேசியம் அல்லது மேட்டுக்குடிக் காலனியம்.  அப்போது ஒரு நேரம் நான் ஒன்றாகவும், மறுநொடி பிறிதொன்றாகவும் இருந்தேன்.

 

ஆக ,ஒரு அரசியல் நபராக வருவதற்கு முன்பாகவே முரண்பாட்டில் நீங்கள் இருந்திருக்கிறீர்கள்என்ன அறிவார்த்தமான பார்வை அரசியல் ரீதியில் உங்களை நிலைப்பாடு எடுக்க வைத்தது? ஒரே இரவுக்குள் நீங்கள் மார்க்சியவாதியாக ஆகி இருக்க முடியாது என நாங்கள் நினைக்கிறோம்?

 

நான் மார்க்சிஸ்ட்டா என்றெனக்குத் தெரியாது.  என்னளவில் மார்க்சியம் ஒரு சூத்திரமோ, நம்பிக்கையோ அல்ல, அது உலகைப் புரிந்து கொள்ள ஒரு வழிமுறை.  என்னளவில் ஒரு அரசியல் மனிதனாக இருப்பது என்பது எப்போதும் நீங்கள் அரசியல் பேசுவது என்பது காலனியம் தவிர்த்து சாத்தியமில்லை.  எல்லா காலனியாதிக்கத்திற்கு உள்ளான மக்களும் எல்லாக் காலத்திலும் அரசியல் அகவுலகைக் கொண்டே இருக்கிறார்கள்.  அதிகாரம் பற்றிய உணர்தலாக அல்லது அதிகாரம் இல்லாத மக்களெனும் உணர்தலாக இது இருக்கிறது.  ஆகவே அரசியலினின்று ஒருவர் அகற்றப்படுதல் முடியாதது. நான் பேசிக்கொண்டிருக்கின்ற எல்லா முரண்பாடுகளும் காலனி ஆதிக்கம் ஏற்படுத்திய சமூக முரண்பாடுகள், தனிநபர் முரண்பாடுகளாகவும் இயல்பாகின்றது.  ஒருவரை இழிந்து போகச் செய்த அவலங்களாக, அந்த இழிவுக்கெதிரான எதிர்ப்பு உணர்வு அனுபவங்களாக நிகழ்கிறது.  அதிகாரமற்ற சூழலின் பகுதிகளில் ஒன்றுதான் அரசியல் பிரக்ஞை என்பது, ஒருவர் பள்ளிக்கூடம் செல்வதான அனுபவத்துக்குள், குடும்பத்தின் உறவுகளுக்குள், ஒரே குடும்பத்தை சேர்ந்த வசதியானவர்கள் வசதியற்றோர்களுக்கிடையிலான எதிரெதிர் தன்மையின் வழி பெறுவதுதான் அரசியல் பிரக்ஞை.

 

பல்கலைக்கழகம் செய்ததெல்லாம் இந்த அரசியலை ஒரு வரையறைக்குள் வடிவமைத்ததுதான்.  குறிப்பாக நான் அரசியல் விஞ்ஞானமும் பொருளாதாரமும் படித்தேன்.  சமூகத்தை எவ்வாறு நோக்க வேண்டுமென அது எனக்கு கற்றுக்கொடுத்தது. பல்வேறு அரசியல் கோட்பாடுகள் என்முன் இருந்தன. ஹாப்ஸ், லாக்கி, ரூஸோ, ஓவன், ப்ரூதோன், பூரியர்  போன்றோர்கள்.  இறுதியில் மார்க்ஸைக் கண்டடைந்தேன்.  ஒருவருக்குள் ஏற்படும் முரண்பாடுகள், பிளவுகளே இங்கு சக்தி என்பதை, ஒருவர் வாழும் சமுகத்தின் இயக்குசக்தி என்பதைக் கண்டு கொண்டேன்.  மார்க்சியம் கொடுத்த இந்த வரலாற்றுப் பொருள் முதல்வாதப் பகுப்பாய்வுக் கருவிதான் என் வாழ்வின் அதிசய நிகழ்வின் தருணம்.  டைலன் தாமஸின் வார்த்தைகளில், முடிவுறாத ஒளிக்கீற்று  பிற்பாடு எனக்குத் தெரிந்தது, மிகப் பின்னால்தான் தெரிந்தது, கவிகளின் வழி நாவலாசிரியர்களின் வழி, இயங்கியல் வெறுமனே பகுப்பாய்வுக் கருவி மட்டுமல்ல, அது அனுபவம்சார் உணர்வு.

 

இது உண்மையிலேயே அவலநாடகம், இந்தப் பிரித்தானியக் கல்வி தான், உங்களுக்கு காலனியாதிக்கக்காரர்களிலும் அவர்களது காலனிய மொழியிலும் இருந்த நல்ல விஷயங்களுக்குக் காரணமாயிருந்ததுஅதன் முலம்தான் எங்கிருந்து போராட வேண்டும் என்னும் உணர்வையும் நீங்கள் கற்றீர்கள்?

 

ஆமாம்.  அதேவேளை இல்லை.  பிரிட்டிஷ் கலாசாரத்தின் முற்போக்கான, காலனிய எதிர்ப்பு, ஸபால்டன் கூறுகள்தான் எனக்குக் கற்றுத்தந்தது.  பிரிட்டிஷ் கலாசாரத்தின் ஆதிக்கக்கூறுகள் என்னைப் பாதிப்புச் செலுத்தி எனக்குக் கற்றுத்தரவில்லை.  இந்த உள்வாங்கல்-வெளியேறுதல் லண்டன் ஸ்கூல் ஒப் எகானமிக்ஸ் நாட்களில்தான் நிகழ்ந்தது.  ஹரால்ட் லாஸ்கியின் கிராமர் ஆப் பாலிடிக்ஸ், மாரிஸ் தோப், ஜோன் ரோபின்ஸன், வெப்ஸ், பேபியன்ஸ், இம்மாதிரி சிந்தனையாளர்களே இதைச் சாத்தியமாக்கினர்.  ஒரு பழைய கண்ணாடி பாட்டில் கடையில்  டி.ஏ. ஜாக்ஸனின் இயங்கியல் புத்தகத்தை கண்டெடுத்த அந்த நாளை மறக்கவே முடியாது.  கண்கூசச் செய்த ஒளிப்பிரவாகமான நாட்கள் அவை.  சொக்கிப்போன நாட்கள் அவை.

 

யுத்தத்திற்குப் பின்னால், எமது நாடுகள் விடுதலை பெற்றன.  இந்தியாவிலும் இலங்கையிலும் தேசியம் முற்போக்கு தன்மை கொண்ட காலம் வந்தது.  காலனிய எதிர்ப்பு அதனோடு தொழிலாளி வர்க்கச் சார்பு.  எனது பல்வேறு விரிவுரையாளர்கள் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் கல்வி பெற்றவர்கள்.  புரட்சிகரமான இலட்சியங்களோடு அவர்கள் வந்தார்கள்.  பிரிட்டனில் இடதுசாரி மரபுகளைச் சுவீகரித்துக் கொண்டவர்கள் அவர்கள்.  எம்மீது அந்த மரபுகளைச் செலுத்தியவர்களாக அவர்கள் இருந்தார்கள்.    அவர்களில் பலர் இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களாக இருந்தார்கள்.  கம்யூனிஸ்ட் கட்சியினராக அல்லது டிராட்ஸ்கியக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி சார்ந்தவர்களாக இருந்தார்கள்.  அவர்களது போதனை கோட்பாடுகளாக அல்ல நடைமுறைகளாக இருந்தன.  பள்ளிக்கூட அறைகளினின்று தெருக்களுக்கு அவை எங்களை எடுத்துச் சென்றன.  ஆகவே நாங்கள் கற்றுக்கொண்ட அரசியல் வகுப்பறைகளில் பட்டப்படிப்பின் பாடத் திட்டத்திலிருந்து மட்டுமல்ல, பல்கலைக்கழக நேரம் தவிர்ந்த பொதுக் கூட்டங்கள் (லங்கா சம சமாஜ கட்சி, டிராட்ஸ்க்கிஸ்ட் அரசியல் இயக்கம்) படிப்பு வட்டங்கள், குழுக்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம்.

 

இந்த ஆசிரியர்கள் பிரிட்டிஷ் கலாசாரத்தின் அடங்கிப் போவதற்கு எதிரான கூறுகளைக் கற்றுத் தந்தார்கள்.  சுதந்திரத்திற்கும் சமத்துவத்துவத்துக்குமான பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தில் இருந்து கற்றுத் தந்தார்கள். இதேமாதிரியான சமத்தன்மையுள்ள எம் சமூக நிகழ்வுகளைப் பார்க்கவும், அதன் வழி எமது உழைக்கும் மக்களின் போராட்டங்களில் பங்குபெறவும் கற்றுத் தந்தார்கள்.  இடதுசாரிப் பகுப்பாய்வின்றி ஆங்கில இலக்கியத்தை அவர்கள் பயிற்றுவிக்கவில்லை. வொய்ப் ஆப் பாத்ஸ் டேல்  கதைக்குள் நாங்கள் எமது மனைவியரின் கதைகள், கவிதைகள், நாட்டுப்பாடல்கள் போன்றவற்றையும் பார்த்தோம்.  படைப்பாளிகளின் தரிசனத்தை எம் அனுபவத்தில் பார்க்க, செழுமைப்படுத்திக்கொள்ள ஸ்வீகரித்துக் கொள்வது என, எமது அனுபவங்களில் பொருத்திப் பார்க்க அல்ல, எம் அனுபவங்களை சிருஷ்டிகரமாக்க நாங்கள் பயின்றோம்.  பிரபஞ்சத் தன்மையை அவற்றினின்று எடுத்து எமது சொந்தக் குறிப்பனுபவங்களில் காண அவர்கள் பயிற்றுவித்தார்கள்.  ஸாஸர் இன்னும் இங்கிலாந்திலேயே இருக்கவிட்டு அவரை உள்ளுர்காரர் ஆக்கினார்கள். 

 

இது பல்வேறு துறைகளில் எம்மை வழிநடத்தியது.  எடுத்துக்காட்டாக இசை.  சிங்கள, தமிழ் இசைக்குள் மூழ்கினேன்.  குறிப்பாக தமிழ் தேவாரம் இப்போது கிரிகோரியன் ராகங்களைக் கேட்கிறபோது எமது மக்களின் தெய்வீக இசை எவ்வாறு அவற்றுள் இருந்தது என அனுபவிக்கிறேன்.  எங்களது பழைய தமிழ் மரபுக் கவிகள், எவ்வாறு எமது சிங்களக் கவிகள் கிராமம் கிராமமாகச் சென்று பாடினார்கள், சந்தைக் கடைகளினின்று ஓலைச்சுவடிகளைப் பாடினார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன்.அவ்வாறு சுதந்திர இலங்கைக்கான கலப்புக் கலாசாரத்துக்கான போராட்டத்தால் நான் உருவாக்கப்பட்டேன்.  ஆகவேதான் நான் இப்போதும் நினைக்கிறேன், கலாசாரம் என்பது செயல்படுவது. இயங்குவது. போராட்டத்தினிடையில் நின்று கலப்பது. மாறாக சில திட்டமிட்ட கலைச் சூத்திரங்கள் அல்ல அவைகள்.  முன்கூட்டி உணரப்பட்டவை அல்ல.  வெறுமனே நாடோடிப் பாடல்கள் அல்ல.  (அதாவது உடனடியாக இப்போது பல்கலாசாரம் என்று அடையாளப்படுத்துகிறோமே அது அல்ல).

 

பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே வந்ததும், இடதுசாரி அரசியல் செயல்பாட்டாளனாகி விட்டீர்களா? உங்களுக்கு ஒரு வேலை வேண்டியிருந்தது, நீங்கள் பல்வேறு குடும்ப நபர்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவராகவும் இருந்திருக்கிறீர்கள்?

 

எனது வாழ்வின் முதல் பகுதி முழுவதும், சொல்லப்போனால், சில முரண்பாடுகளைத் தீர்க்கப்போவதாக இருக்க, பிறசில முரண்பாடுகளுக்கு எதிராக நிற்க வேண்டியவனாகவே இருந்தேன்.  நான் ஒரு பல்கலைக்கழகப் பட்டத்துடன் வெளிவந்தபோது  எனக்குப் பெரிய செல்வாக்கு செலுத்தக்கூடிய தகுதி கொண்ட பெரிய குடும்பம் இருக்கவில்லை.  அப்போது ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தோர் கல்வி கற்பிக்கச் செல்வர்.  பணக்காரக் குடும்பங்களில் இருந்து வருவோர் சட்டம், மருத்துவக்கல்வி, மேல்நிலை அரசு உத்தியோகம், போலீஸ் சூப்ரண்டு, சிறைச்சாலை உயர் அதிகாரிகள் என உத்தியோகத்திற்குச் செல்வர்.

 

நான் முதலில் ஒரு தேயிலைத் தோட்டப் பிரதேசத்தில் கல்வி கற்பிக்கச் சென்றேன். மாணவ மாணவிகள் பெரும்பாலோர் ஏழைச் சிங்கள தொழிலாளர் குழந்தைகள்.  ஒரு சிலர் மலையகத் தமிழ்த் தொழிலாளர் குழந்தைகள்.  இந்த இந்தியத் தமிழ் குழந்தைகள்தான் கல்வி கற்கவே வழியற்ற வறியவரினும் வறியவர்.  அங்கிருந்து நான் கண்டி மலைப் பிரதேசத்துக்கு கற்பிக்கச் சென்றேன்.  இரண்டும் முக்கியமான அனுபவங்கள் இருந்தன.  தமிழ் நிலத்தை நானறிவேன், நகர்ப்புற மேட்டுக்குடி வாழ்வை நானறிவேன். இப்போது நான் மலைத் தோட்டத் தொழிலாளர்க்கிடையில் வாழ்ந்தேன்.  அவர்கள் எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என நான் அறிந்தேன்.  கண்டியில் தேயிலை பயிரிடுவதற்காக, கபளீகரம் செய்யப்பட்டு வயல்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலமற்ற சிங்கள மக்களோடு நான் வாழ்ந்தேன். எனது நேரடி அனுபவத்தின் மூலம் எனது நாட்டில் சமூக உருவாக்கம் பற்றின புரிதலை நான் பெற்றேன். பிற்பாடு இந்த அனுபவங்கள், எனக்கு எமது சமுகத்தின் பல்வேறு முரண்களைப் புரிந்துகொள்ள உதவியது.  எவ்வாறு பிரிட்டன் மற்றும் பிற காலனியாதிக்கங்கள் எமது நாடுகளை பல்வேறு காலகட்டங்களில் எவ்வாறு பாதித்திருக்கிறது என நான் உணர்ந்தேன்.  நாட்டின் பல்வேறு பாகங்களில், பல்வேறு வகைகளில் ஒரு சின்ன நாட்டில் எவ்வாறு வேறுபட்ட சமுக உருவாக்கங்களை அது வீசியிருக்கிறது என உணர்ந்தேன்.  எமது நாடுகள் வளர்ச்சியுறா நிலையில் தள்ளப்பட்டு, எமது நாட்டின் பிரச்சினையாக இன்று வளர்ச்சி பெற்று, பேசப்படும் இனத்துவ, இனக்குழு அரசியலின் வித்தியாசங்களாக முற்றிய நிலையடைந்திருப்பதை நான் உணர்ந்தேன்.

 

இலங்கை தோட்டப்பிரதேச ஆசிரியராக இருந்து , பிரிட்டனின் இடதுசாரி அரசியல் சிந்தனையாளராக வளர்ந்திருக்கும் இந்த மாற்றம் சுமூகமாக நிகழ்ந்ததா?

 

நிச்சயமாக இல்லை.  காலனியாதிக்கத்துக்குள்ளானவர் வன்முறையிலான முரண்பாடுகளினூடே போய் வரவேண்டியிருக்கிறது.  ஒரு நிமிடம் தரகனாக. எதிர்ப்புரட்சி தேசியவாதியாக மறுநிமிடம். முற்போக்காளனாக, இடதுசாரியாக அதற்கடுத்த நிமிடம்.  ஆசிரியத்தொழில் சொற்ப வருமானத்தையே தருகிறது.  அதைக்கொண்டு என் குடும்பத்தை நான் காப்பாற்ற முடியவில்லை.  ஆகக் கடைசியில் வங்கி அதிகாரியாக ஆகி வங்கியின் துணை மேலாளராகவும் ஆனேன்.  அந்த நேரத்தில் இலங்கையில் சில பட்டதாரிகளே இருந்தோம்.  அப்போது வங்கிகள் தேசவுடைமையாக்கப்பட்டன.  ஆகவே இலங்கை பிரஜைகள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டனர்.  உங்களுக்கு டிகிரி இருந்தால் நீங்கள் பதவி உயர்வுக்குக் காத்திராமலேயே நேரடியாக நிர்வாக உத்தியோகத்திற்கு உயரச் செல்லலாம். குடும்ப காரணங்களுக்காகத் தான் நான் அந்த வேலையில் சேர்ந்தேன்.  ஆனால் அந்த வாழ்க்கை சில முறைமைகளைக் கொண்டிருந்தது.  ஹொங்கொங்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டுச்சட்டையை நான் அணியவேண்டும், மோட்டார் கார் ஓட்ட வேண்டும், வேலைக்காரர்கள் இருக்க வேண்டும், கிளப்புகளுக்குப் போகவேண்டும், இறக்குமதி செய்யப்பட்ட ஜெர்மன் லாகர் குடிக்க வேண்டும்.  இன்கம் டேக்ஸ் கமிசனருடனோ அல்லது   ஒரு எப்.ஆர்.சி.எஸ். அல்லது ஒரு பாரிஸ்டர் ஏதோ ஒரு தரகனுடனோ அமர்ந்து குடிக்க வேண்டும்.

 

அதேவேளை அந்த வாழ்க்கைக்காக நான் அவமானம் கொண்டேன்.  எனது பெற்றோர்களைப் பார்க்க நான் வீடுதிரும்பும்போது. பின் கிராமத்துக்குப் போகும்போது, எனது மக்களின் வறுமையைக் காணும்போது எனது ஆடம்பரத்துக்காக நான் அவமானம் கொண்டேன். இதே சந்தர்ப்பத்தில் நானறிந்த சேரிகளில் இருந்து வேலைக்கு வந்து கொண்டிருந்த வங்கி கிளார்க்குகளோடு சேர்ந்து நான் குடிக்கப் போவேன்.  அவர்கள் வீடுகளுக்கு போவேன். அவர்களின் வாழ்க்கை முறையும், வறுமையும், அவர்கள் சுரண்டப்படும் கொடுமையும் என்னை மிகமிகப் பாதித்தது.  பேங்க் ஆப் சிலோனின் வங்கிக் கிளார்க்குகளின் முதல் யூனியன் குறித்த கூட்டப்பேச்சு எனது சொந்த வீட்டில்தான் நிகழ்ந்தது.  இந்தக் காரணங்களால் மேனேஜ்மன்டின் பிரச்சினைக்குரிய ஆளாக நானாகினேன்.  மேனேஜ்மென்ட் பிரிட்டிஷ்காரர்களாயிருந்தார்கள்.  நான் தொந்தரவுக்குள்ளானேன்.

 

எப்போதும் நான் வேலை உயர்வு பெறவே இல்லை. எனது பெற்றோருடன் எனக்கு அப்போது பிரச்சினை ஏற்பட்டது.  காரணம் ஒரு சிங்களக் கத்தோலிக்கப் பெண்ணிடம் நான் காதல் கொண்டிருந்தேன்.  ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டோம்.  சரியாகப் பாருங்கள், எவ்வாறு ஒரு புறநிலை முரண்பாடு அகநிலை முரண்பாடாக வருகிறது? எமது இருவரது பெற்றோர்கள் இவ்வாறான கலப்புத் திருமணத்திற்கு எதிரானவர்கள்.

 

அப்புறம் 1958 இல் சிங்கள-தமிழ் கலவரம் வெடித்தது.  எனது தந்தையின் வீடு தாக்கப்பட்டது.  ஒரு வெற்றுத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு போலீஸ் போல போலி வேடமிட்டு ஒரு கும்பலிருந்து என் தந்தையை நான் மீட்கப்போனேன். தமிழர்கள் என்று இருக்க நேர்ந்த காரணத்துக்காக மட்டுமே மனிதர்கள் கொல்லப்பட்டதை நான் கண்டேன்.  மனிதர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள்.  இந்தக் கொடுமைகளில் அகிம்சைக்கு அர்ப்பணித்து கொண்டதாகச் சொல்லிக்கொள்ளும் சிங்கள பௌத்த அரசாங்கம் இது குறித்து மௌனமாக இருந்தது.  பெரிய பதவிகளில் இருந்த படித்த மேதாவிகள் ஏதும் செய்யவில்லை.  பத்திரிகைகளும் ரேடியோவும் நள்ளிரவில் உடைந்து போனது.  எமது மக்கள் அவமானப்படுத்தப்பட்டதும், கேவலப்பட்டதும் என் நாசியில் எரிகிறது.  இதைச் சகித்துக்கொள்ள முடியாது.  எனது நாட்டிலிருந்து விரைவில் நான் வெளியேறிவிட விரும்பினேன்.  வேலையை விட்டேன்.  எதையெதை விற்க முடியுமோ அனைத்தையும் விற்றேன்.  இங்கிலாந்துக்கு என்னைத் தள்ளினேன்.

 

இங்கு வந்து பேய்ஸ் வாட்டரில் வாழ்ந்தேன்.  நேரடியாகவே நாட்டிங்ஹில் கலவரத்துள் நுழைந்து நடந்தேன். அக்கினிப் பிரவேசம்.  இரண்டுமுறை அக்கினிப் பிரவேசம்.  சிங்கள தமிழ் கலவரம் அங்கே.  வெள்ளையின கறுப்பினக் கலவரம் இங்கே.  பிற்பாடு நான் கறுப்பன் என்பதை உணர்ந்தேன்.  ஓரங்கட்டிக்கொண்டு இருக்க முடியாது.  நிறம், இனம் ஒரு பிரச்சினை.  அது என்னை நேரடியாகப் பாதிக்கிறது.  வங்கி வேலையோ அல்லது நான் பொருந்திப் போகிற, ஆம் பொருந்திப் போகிற எதற்காகவும் என்னை இழந்துவிட நான் தயாராயில்லை.  சமூக மேம்பாட்டுக்கு என் பங்களிப்பைச் செய்ய ஏதேனும் நான் வழி கண்டுபிடித்தாக வேண்டும்.  மனிதன் மானுடனாக ஆகிற சமுக அமைப்பைக் கொண்டுவர நான் ஒரு வழிகண்டாக வேண்டும்.  எனக்கு படிக்க நேரம் வேண்டும், பிரதிபலிக்க, செயல்பட எனக்கு நேரம் வேண்டும்.  (ஒதுக்கல் நிறைய இருந்தது.  நான் பட்டம் பெற்றிருந்தும், வங்கியில் அனுபவம் பெற்றிருந்தும் நான் வங்கி வேலை பெற முடியவில்லை.  கறுப்பர்கள் அப்போது நம்பிக்கைக்கு உரியவர்களாக கருதப்படவில்லை).  நான் மிடில்செக்ஸ் நூலகமொன்றின் டீ பாய் உத்தியோகத்திலிருந்து படிப்படியாக அந்த நூலக மேலாளராக ஆனேன்.  இறுதியாக 1964 ஆம் ஆண்டு இன்ஸ்டிட்யூட் ஓப் ரேஸ் ரிலேஸன்ஸ் நூலகராகப் பணிபுரியப் போனேன்.

 

பெரும்பாலான உங்கள் அரசியல் எழுத்துக்கள், எல்லோருக்கும் பரிச்சயமான எழுத்துக்கள்,  நீங்கள் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து பிறகு எழுதியவைதான்உங்கள் சிந்தனையும் உங்கள் எழுத்தும் நீங்கள் பணிபுரியும் இடத்தை மாற்றுவதாக அமைந்திருக்கிறது.  ‘படிப்புக்குத் திரும்புதல்என்ற நடவடிக்கையோடுதான் உங்கள் மாற்றத்துக்கான செயல்பாடும் இணைந்திருக்கிறது என்று கருதலாம், அதாவது சமூகத்தை மாற்றுவது நீங்கள் சொல்கிறபடி அப்படித்தானே?

 

நான் அப்போது உணர்ந்திருக்கிறேன்.  வாழ்வதும் இயங்குவதும் வேலையும் வேறு வேறு அல்ல.  மாற்றுவது என்பது ‘வெளியிலிருக்கும் சமூகத்துக்கு’ ஒருவர் செய்வது அல்ல.  மாறாக ‘தனக்குள்ளேயே’ நிகழ்வது அது.  வேலையிடத்தில், அவர் வேலையில் அவரது தினசரி வாழ்வில் நிகழ்வது அது.  1960 கள் கறுப்பு அதிகாரத்தின் – பிளாக் பவர் – காலம். ஆபிரிக்காவில் காலனிய நீக்கம், வியட்நாம் யுத்தம் போன்றவற்றின் காலம்.  கறுப்பு அதிகாரம் என்னோடு நேரடியாகப் பேசியது.  இனம், நிறம், மற்றும் வர்க்கப் போராட்டம் என நேரடியாகப் பேசியது.  ஒரே நேரத்தில் பேசியது.  மேலாக அது இருத்தலின் அரசியலாக இருந்தது.  இன்ஸ்டியூட் ஆப் ரேஸ் ரிலேஸன்ஸில் நான் செய்த வேலையானது, ஒரு சுயாதீன அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது.  வெள்ளையர்கள், வெள்ளையர்கள் அல்லாதவர்களுக்கிடையிலான உறவுகள் பற்றி ஆய்வது எனது வேலை. உலகெங்கும் பரந்ததான ஆய்வு இது.காலனியாதிக்கம், காலனியாதிக்க வெளியேற்றம் பற்றி இங்கு ஆய்வு செய்யவில்லை.  இன்ஸ்டிட்யூட்டின் அதிகார பீடம் அருவமான முறையில் நிற, இன உறவுகளைப் பார்த்தது.  ஆனால் நிற. இனம் பற்றிய ஆய்வென்பது நிறவாதம், இனவாதத்தை ஒழிப்பதோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என நான் நினைத்தேன்.  இன்ஸ்டிட்யூட் சார்பெடுக்காமல் இருக்க முடியாது என்று நினைத்தேன்.  ஏனெனில் தொழில் கட்சியும்,  கன்ஸர்வேடிவ்க் கட்சியும் நிறவாத குடியேற்றச் சட்டங்களை இயற்றிக் கொண்டிருந்தது.

 

1960 களில் இன்ஸ்டிட்யூட் என்ன மாதிரி அமைப்பாக இருந்தது என்பதையும் அதன்பின் அது எவ்வாறு உருமாறி வளர்ந்தது என்பதையும் சொல்வீர்களா?

 

இந்த இன்ஸ்டிட்யூட், ராயல் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்டர்நேசனல் அபேர்ஸின் ஒரு பிரிவாகத் தான் 1950 இல் நிறுவப்பட்டது.  1958 கலவரங்களுக்குப் பின்னான காலத்தில் தான் அது சுயாதீனத்தன்மை பெற்றது.  இது பிரிட்டனிலும் பிற இடங்களிலும் நிற, இன உறவுகள் தொடர்பாக கோட்பாட்டு ரீதியில் ஆய்வு செய்யும் அமைப்பாகவே இருந்தது.  1962 குடியேற்ற சட்டத்திற்குப் பின்னால் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதான இன, நிற உறவுகளுக்கு தேவையான வளர்ச்சிப் பாதை என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தது.  கொஞ்சமே கறுப்பர்கள், அதனால் மட்டுமே ஒருமைப்பாடு முடியும் என்ற நிலைப்பாடு. கறுப்பர்கள் இல்லையெனில் பிரச்சினை இல்லை.  எண்ணிக்கை தவிர பிரச்சினை வேறில்லை.  ஹிட்லர் இதேமாதிரித்தான் சொல்லியிருக்கிறான். 

 

இன்ஸ்டிட்யூட் தன்னளவில் சுயாதீனமாகத்தான் செயல்படுவது மாதிரியிருந்தது.  பகாசுர நிறுவனங்கள் பண உதவி செய்தன. ஷெல், நவ்பீல்ட், ராக்பெல்லர், போர்ட்  போன்ற நிறுவனங்கள். ஓப்பன் ஹேய்மர் ஆப் சவுத் ஆப்ரிக்கா, பார்க்லே பேங்க் போன்ற நிறுவனங்கள். ஆரம்பகால ஆய்வுகள் எல்லாம் எவ்வாறு ஆபிரிக்காவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் இருந்தன என்பது நோக்கிய ஆய்வாகவே இருந்தது.  வளர்ச்சியடைந்து வரும் நாடுகளையும் இந்நோக்கில் ஆய்வு செய்தது.  இதுதான் சர்வதேசிய இன நிற ஆய்வுகளின் அடியில் பொதிந்திருந்த மனக்கிடக்கை. பிரிட்டிஷ் மேலாதிக்கத்தை ஒப்புக் கொள்ளாத புதிதாக விடுதலை பெற்ற நாடுகளில் தொடர்ந்த வியாபார முதலீடு செய்வதில் உள்ள பிரச்சினைகளை ஆய்வதற்கே நிற இன ஆய்வுகள் பயன்பட்டன.  ஆகவே புதிதாக விடுதலை அடைந்த நாடுகளின் தரகு முதலாளிகளோடு நீங்கள் போய் வியாபாரம் செய்ய வேண்டுமானால், அவர்கள் தாழ்ந்தவர்கள் என்று நீங்கள் கருதுவதாக அவர்கள் நினைக்கக்கூடாது.  அவர்களது கலாசாரம் தாழ்ந்தது என நினைக்கக்கூடாது.  நாம் எல்லோரும் சகோதரர்கள், ஒரே முதலாளித்துவ தோலுள்ளவர்கள் எனப் பிரகடணம் செய்ய வேண்டும்.  இது தான் அன்று நிலவிய ஆய்வுகளின் நோக்கமாக இருந்தது.

 

1972 இல் இன்ஸ்டிட்யூட் பல காபந்துக்காரர்களை வெளியேற்றி புதிய கவுன்ஸிலை அமைத்ததுஅதில் வேலை செய்தவர்கள், அதற்காக வேலை செய்தவர்களே இதைச் சாதித்தார்கள்புதிய அமைப்பு எந்த நோக்கங்களைக் கொண்டிருக்கிறது அது எவ்வாறு ஜீவித்தது எனச் சொல்வீர்களா? 1990 களில் அமைப்புக்களில் ஏற்பட்ட பல்வேறு புரட்சிகர மாற்றங்கள் என்பன மறைந்துவிட்ட சூழலில் உங்கள் அமைப்பின் ஜீவித நியாயம் பற்றிச் சொல்வீர்களா?

 

இன்ஸ்டிட்யூட் நிலவிய அமைப்பின் ஒரு பகுதியாகவே இருந்தது.  பெரிய நிறுவனங்களால் நிதி வழங்கப்பட்டு அதனாலேயே கட்டுப்படுத்தப்படுவதாகவே இருந்தது.  அரசு நலன்களுக்காகவே அது பேசியது.  அதேவேளை நிற இன உறவுகளுக்காக சுதந்திரமான கல்வித்துறை ஆய்வுகள் மேற்கொள்வதாக அது பாசாங்கு செய்தது.  ஆனால் நிறவாதம், காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், முன்றாம் உலக நாடுகளின் நிலை   அதன் ஆய்வுகளில்,  ஆனால் இப்பிரச்சினைகள் பற்றி குறைந்தபட்ச அக்கறையே இருந்தது.  இந்தப் பார்வை இன்ஸ்டிட்யூட்டின் கருத்தரங்ககளிலும் பத்திரிகைகளிலும் அங்கு வேலை செய்பவர்களால் முன்வைக்கப்பட்டது.  அப்போதே போராட்டம் தொடங்கி விட்டது.  போராட்டத்தின் மூலம் எங்கேயோ இருந்தபோதிலும், போராட்டம் இன்ஸ்ட்யூட்டில் வேலை செய்தோர் மற்றும் ஆய்வாளர்களின் கல்வித்துறை ஆய்வுச் சுதந்திரம் என்ற முறையிலே வெளிப்பட்டது.  பத்திரிகைச் சுதந்திரம் என்கிற கருத்துருவத்தின் வழியே வெளிப்பட்டது.  இந்த பிரச்சினைக்குப் பின்னால், நிறவாதத்தை ஒழிப்பதில் அக்கறையின்மை, அரசு நிறவாதத்தை ஆய்வுமுலம் நியாயப்படுத்தல், அரசு நிறவாதத்துக்கு நியாயம் வழங்குதல் போன்றவைகள் நிலவிவந்தன.  பாக்கி எனும் வசை மொழிப்பரவல், போலீஸ் வன்முறை, பள்ளிக்கூட நிறஒதுக்கல், பாஸ்போர்ட் ரெய்ட் போன்ற கொடுமைகள் தவிர்க்க முடியாமல் இன்ஸ்ட்யூட்டை நெருக்கடிக்குக் கொண்டு சென்றது.  நமது மனசாட்சி எழுந்து நின்றது.  மாற்றம் வந்தே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது.

 

உங்கள் இரண்டாவது பகுதிக் கேள்விதான் மிக முக்கியமானது.  இந்தக் கதையைச் சொல்லுமளவு நாங்கள் எப்படி ஜீவித்தோம் எனும் கேள்வி. நிறைய நெருக்கடிகள்.  முதலில் நிதி நெருக்கடி.  ஏனெனில் பழைய நிதியை முழுவதும் பழைய ஆதிக்கக்காரர்களே கட்டுப்படுத்தி வந்தனர்.  இதற்கான விடை நான் நம்புகிறபடி இன்ஸ்டிட்யூட்டின் அலுவலர்கள் ,உறுப்பினர்களில்தான் தங்கியிருந்தது.  வேலையில் ஈடுபாடு செலுத்தி, நிறவாதத்திற்கு எதிராக மக்களை கற்பிக்க வேண்டும் எனும் உறுதியுடன், இன்ஸ்டிட்யூட்டின் ஆதாரவளங்களையும் செயல்பாட்டையும் அதற்காக உபயோகிக்க வேண்டும்.  நிறவாதத்தால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவ வேண்டும் என்று செயல்பட்டது, பேசியது என உறுதியோடு நின்றனர்.  இன்ஸ்டிட்யூட் சிந்தனைக் களஞ்சியமாகத் திகழ்ந்தது.  களஞ்சியத்தின் பொருட்டே சிந்தித்தோம்.  கறுப்பு மற்றும் முன்றாம் உலக மக்களின் களஞ்சியம்.  எமது அறிவுச் செயல்முறை விடுதலைக்காகவே இருந்தது. 

 

நிதி கிடைத்ததோ இல்லையோ, நாங்கள் பொறுப்புடன் செயல்பட்டோம்.   கறுப்பு மற்றும் மூன்றாம் உலகச் செயல்பாட்டுக் குழுக்கள் என்று சாத்தியமில்லாமல் இருந்ததை மீறியும் செயல்பட்டோம்.  ஒன்றிணைந்து செயல்பட்டோம். எமது சொந்தத் தேர்வுகளின் வழி செயல்பட்டோம்.  விவாதப் பொருளை மாற்றினோம்.  முன்பின் நுழைந்திராத ஆனால் நுழைந்தே ஆகவேண்டிய, கல்வித்துறை, பத்திரிகை, ஊடகம் , ஏன் அரசு போன்றவற்றில் ஊடுருவிச் செயல்பட்டோம்.  இத்தகைய பிரதேசங்களில் நாங்கள் தலைமை பெற்றோம்.  பல்வேறு சமூகக் குழுக்கள், அமைப்புக்கள் செயல்படக் காத்திருந்த தளங்களில் செயல்பாட்டுக்கு நாங்கள் தலைமையேற்றோம்.  இவ்வாறு இன்ஸ்டிட்யூட் ஆய்வமைப்பு, தொழில்ரீதியான அமைப்பு என்பதினின்று இயக்கமாக, சேவகனாக மாறியது.

 

உங்களது பத்திரிக்கை  இனம், நிறம் மற்றும் வர்க்கங்களுக்கு இடையிலான உறவு குறித்துப் பேசுகிறது.  1960 களில் இது அர்த்தமுள்ளதாக அமெரிக்க ஐரோப்பிய அனுபவத்தில் தோன்றியதுஆனால் தற்போது இவைகளுக்கிடையிலான உறவில் இணக்கம் காண்பது கடினமாகவுள்ளதென சொல்லப்படுகிறதுநீங்கள் பிரக்ஞை பூர்வமாக உங்கள் பத்திரிகையை வர்க்கம்இனம், நிறம், என இணக்கம் கொண்டு நடத்தி வருகிறீர்கள்அதன் சித்தாந்த உள்ளடக்கம் பற்றிக் கூறுவீர்களா?

 

1903 இல் டபிள்யூ.இ.பி.துபோய்ஸ் என்ன சொன்னார் என்று ஞாபகப்படுத்திக் கொள்கிறீர்களா? ‘இருபதாம் நூற்றாண்டின் பிரச்சினை என்பது நிறத்தின் வழி’. இன்று நிறம் தான் வறுமை மற்றும் அதிகாரம் போன்றவற்றின் வழி.  நாங்கள் வெள்ளையர்கள் அல்லாதவர்கள்.  நாங்கள் ஏழைகள்.  நாங்கள் அதிகாரமற்றவர்கள்.  முதலாளித்துவம் இவர்களுக்கிடையிலான உறவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  ஏகாதிபத்தியம் இதன் தொடர்ச்சியாக இருக்கிறது.  விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசில கறுப்பு மேட்டுக்குடியினர் தவிர, பெரும்பாலான வெள்ளையரல்லாத உலகமக்கள் ஏழைகள், தமது வறுமைபற்றி ஏதும் செய்ய இயலாதவர்கள்.  அதிகாரமற்றவர்கள்.  ஏகாதிபத்தியத்தினால் அவர்கள் அவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  உழைக்கும் மக்களின் நோக்கத்துக்காகப் போராடாமல் நீங்கள் கறுப்பு மக்களுக்காகப் போராட முடியாது.  கறுப்புச் சுரண்டலை எதிர்த்துப் போராடாமல் நீங்கள் கறுப்பு ஒடுக்குமுறையை மட்டும் எதிர்த்தீர்களானால் ஒன்றுக்கு மற்றதைப் பிணையாக வைப்பதில்தான் நீங்கள் போய்முடிவீர்கள்.

 

மூன்றாம் உலக நாடுகளில் கடந்த 15-20 ஆண்டுகளாக நடந்துவருபவைகள் கவனம் பெறவில்லை.  இடதுசாரிகள் இவை பற்றிய அக்கறை கொள்வதில்லை.  உலகு தழுவிய தொழிற்சாலைகளில் மிகக் குறைந்த கூலிபெறுகிற மிகக் கேவலமான வேலை செய்கிறவர்கள் இன்று மூன்றாம் உலக நாடுகளில்தான் இருக்கிறார்கள்.  ஐரோப்பாவில் அமெரிக்காவில் இல்லை.  இங்கேயும் வெளிக்குத் தெரியாத குடியேற்றக்காரர்கள்தான் (கறுப்பர், ஆசியர்) கடை வேலைகளிலும் சேவைகளிலும் ஈடுபடுகிறார்கள்.  உற்பத்தி சக்திகளில் குணரீதியில் ஏற்பட்டிருக்கிற உலகளாவிய மாற்றங்களைக் காண மேற்கின் இடதுசாரிகள் தவறுகிறார்கள்.  தமது வாழ்வு மேம்பாடு உலகத் தொழிலாளி வர்க்கத்தின் சுரண்டலின் மீதுதான் சார்ந்திருக்கிறது என்பதைக் காணத் தவறுகிறார்கள்.  மாறாக அவர்கள் ‘தொழிலாளி வர்க்கத்துக்க விடை கொடுப்போம்’ என்கிறார்கள்.  (அதாவது தங்கள் வர்க்கம் மட்டுமே இருக்கிறது என நினைத்துக் கொண்டு) புதிய சக்திகளான பெண்கள் இயக்கம், கறுப்பர்கள், சமப்பாலுறவாளர்கள், பசுமை இயக்கக்காரர்கள் போன்றோர்களை மட்டுமே முன்னிறுத்தி, இவர்களே சமூக மாற்றத்தின் பிரதிநிதிகள் என்கிறமாதிரி முன்னிறுத்திகிறார்கள். மூன்றாம் உலக நாடுகளை மேற்கின் கருணைக்கு நிற்கும் புறப்பொருட்களாக இந்த மேற்கின் இடதுசாரிகள் காண்கிறார்கள். எமது பத்திரிக்கை இவ்விடயத்தில் இவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்கிறது. 

 

நிறவாதத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்குமான உறவை குறியீட்டுத்தன்மை வாயந்ததாக நாம் பார்க்கிறோம்.  அதாவது கறுப்பு மற்றும் மூன்றாம் உலக மக்கள் ‘முதல் உலகில்’ இருப்பதானது நேரடியாக ‘முதல் உலகின்’ பன்னாட்டுக் கம்பெனிகள் வடிவில். முன்றாம் உலக வல்லரசு இயந்திரமாக்குதல் போன்றவற்றோடு தொடர்புடையது.  ஆனாலும் எமது பத்திரிக்கை நிறம், இனத்தை வர்க்கத்திலும் கீழானதாக கருதுவதில்லை.  வர்க்க அடிப்படையில் நிறம்,  இனத்தைப் பார்க்கிறது.  அதேவேளை வர்க்கப்போராட்டத்தின் இன , நிறப் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள முனைகிறது.  இதுதான் பிற பத்திரிகைகளில் இருந்து இடதுசாரி மார்க்ஸிஸ்ட் அல்லது முன்றாம் உலக இதழ்களிலிருந்து எம்மை வித்தியாசப்படுத்துகிறது.  எங்களுக்கு அப்படி ஒரு வரையறை இருக்கவில்லை.  ஆனால் இன்ஸ்ட்டியூட்டை மாற்றுவது தொடர்பான போராட்ட அனுபவத்தில் நாங்கள் ஒரு விமர்சன அளவீட்டை எட்டினோம்.  குறிப்பாக அறிவுச் செயல்பாடு குறித்த போராட்டத்தின் போது இதை நாம் காண்பித்தோம்.

 

ஏகாதிபத்தியம் , மூன்றாம் உலக வரலாறுகளைத் திரித்து ஒன்றுக்கு எதிராக பிறிதொன்றை நிறுத்துவதற்கு எதிராக எமது இதழ்  செயல்படுகிறது.  அது ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலின் பொது வரையறையைக் காண முயல்வதோடு பொதுவான போராட்டத்தையும் முன்னெடுக்க முனைகிறது. மூன்றாம் உலகப் போராட்டத்தையும் முன்னெடுக்க முனைகிறது.  மூன்றாம் உலகப் போராட்டங்கள் பற்றி ‘திமிங்கிலத்தின் வயிற்றுக்கு உள்ளிருந்தே’ பகுப்பாய்வு செய்வது மாதிரி (ஜியார்ஜ் ஆர்வலின் வார்த்தைகள் 1940ஆம் ஆண்டு இன்சைட் த வேல் எனும் புத்தகத்தை ஆர்வல் எழுதினார்.  (இதே வார்த்தைகளை தனது இமேஜனரி ஹோம்லேன்ட்ஸ் எனும் நூலிலும் ஸல்மான் ருஷ்டி கையாள்கிறார் – யமுனா) நாங்கள் எழுதுகிறோம்.  ஆனால் விடுதலை இயக்கங்களுக்கிடையில் சார்பு நிலைப்பாடு எடுப்பதோ, குறுங்குழுவாத நிலைப்பாடு எடுப்பதோ எமது நோக்கமல்ல.  எப்படி போராட்டத்தை நடத்துவது என அறிவுறுத்துவதும் எமது நோக்கமல்ல. ரேஸ் அன்ட் கிளாஸ் முலம் ஒருவகையான இடதுசாரி கலாசார ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அரணாக நாங்கள் நிற்கிறோம் .மேற்கின் அனுபவங்களை நேரடியாக மூன்றாம் உலக சமூகங்களுக்கு மேலேற்றுவதை, அந்தப் போக்கை நாம் மறுதலிக்கிறோம். மூன்றாம் உலகின் குறிப்பான போராட்டங்கள், இயக்கங்கள் போன்றவற்றினின்று நாம் கற்றுக் கொள்ள விரும்புகிறோம்.

 

ரேஸ் அனட் கிளாஸ் இதழில் அடிக்கடி மரபுவழியிலான கல்விசார் படிப்பின் வர்க்கச் சார்பினை நாம் அம்பலப்படுத்துகிறோம்.  எந்தக் கலாசாரக் கட்டமைப்பின் சார்பாக அவை எழுந்தன என அம்பலப்படுத்த முயல்கிறோம்.  சமுகவியல், வரலாறு, தத்துவம், விஞ்ஞானம், கணிதம் என முடிகிறவற்றிலெல்லாம் இதனை மேற்கொள்கிறோம்.  புதிய கல்விசார் ஆய்வை, வரலாற்று மீட்பை நாம் மேற்கொள்கிறோம்.  அது பிராட் வாட்டர் பண்ணை குடியிருப்பாளர்கள் ஆனாலும் சரி, மாவ்மாவ் எழுச்சி ஆனாலும் சரி, அனைத்துக்கும் மேலாக கோட்பாட்டுக்கும் தத்துவத்துக்கும் இடையிலான பிளவை நாங்கள் கடக்க முயல்கிறோம்.  வேர்மட்டங்களுக்கும் கல்வித்துறை ஆய்வுக்கும் பாலமாகச் செயல்பட முனைகிறோம்.  எந்த மக்களுக்காகப் போராடுகிறோமோ அந்த மக்களுக்காக எழுதவே நாம் எப்போதும் எக்காலத்திலும் முயன்று வருகிறோம்.

 

நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள்கறுப்பு மக்களின் போராட்டம் என்பது சோஷலிசத்திற்காகத்தான்’. இன்றைய சூழலில் நீங்கள் இதை எப்படி விளக்குவீர்கள்?

 

ஒடுக்கப்பட்ட மக்களின் எந்தப் போராட்டமாயினும் அது கறுப்பு மக்களோ, பெண்களோ எவராயினும், அப்போராட்டம் தங்களுக்கு மட்டுமே இருக்குமானால் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்கள், சுரண்டப்பட்ட மக்கள் பற்றிய கவலையைக் கொண்டிருக்கவில்லையெனில் அது மிகக்குறுகியதும். சுயநலம் கொண்டதுமே ஆகும்.  அவை மனிதனின் இருத்தலை எவ்வகையிலும் மேம்படுத்தாது.  அது ஒடுக்குமுறை அனுபவம் கொள்தலின் சாராம்சத்தை மறுப்பது என்பது மாத்திரமே அல்ல, அதன் அர்த்தத்தை உயிருள்ள தாக்காததும் ஆகும். ஆகவேதான் எனது எழுத்துக்கள் கறுப்பு மக்கள் போராட்டத்தின் விடுதலை அம்சங்களை வலியுறுத்துவது மட்டுமல்ல , அந்தத் தளங்களின் பொருத்தப்பாட்டையும் தேடிச் சொல்கிறது.  கறுப்பு மத்தியவர்க்கம், கறுப்பு சமுகக் குழுக்கள், கறுப்புக் கல்வியாளர்கள் எனது அக்கறைக்குறியவர்கள் அல்ல. எனது பிரச்சினை என்னவென்றால் கறுப்பு மற்றும் மூன்றாம் உலக மக்களின் அனுபவம் என்ன, ஒடுக்கப்பட்ட மக்களின் அனுபவம் என்ன என்பதுதான் எனது பிரச்சினை.  இதுதான் எனக்கு பிற ஒடுக்குமுறைகளைப் புரிந்து கொள்வதற்கான ஆதாரம், அதனின்றுதான் அனைவருக்குமான சமதர்மமான நீதியான, சுதந்திரமான ஒரு சோசலிச சமூகத்துக்கான போராட்டத்துக்கான உறுதி பிறக்கிறது.எந்த விடுதலைப் போராட்டமும், அது சோசலிசத்துக்கானதாக இல்லாத போது கொடுங்கோன்மையில்தான் சென்று முடியும்.  .  இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை.  விடுதலைக்குப் பின்பு சோசலிசம் என்பது இல்லை.  சோசலிசம் என்பது விடுதலையை வெல்வதற்கான இயக்கப்போக்காகும்.

 

புதிய தொழில்நுட்பம்சிலிக்கன் சில்லுப் புரட்சிதகவல் தொழில் நுட்பம் போன்றவை பற்றி நீங்கள் தீர்மானமாகப் பேசி வருகிறீர்கள்இவைபற்றி, மூன்றாம் உலக நாடுகளில் இவற்றின் தாக்கம் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? நவீனகால ஏகாதிபத்தியம் பற்றிய உங்கள் ஆய்வு பிரசித்தமாகப் பேசப்படும் ஒரு கருத்தமைவுபாட்டாளி வர்க்கம் தன் புரட்சிகரத் தன்மையை இழந்து விட்டது என்கிறார்கள். மைக்ரோ சிப் புரட்சி   வர்க்க உறவுகளை முற்றிலும் மாற்றி அமைத்து விட்டதாகச் சொல்லப்படுகிறதுஇச்சூழலில் ஏகாதிபத்தியம். ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கம், முன்றாம் உலக மக்களின் போராட்டங்கள் இவற்றுக்கிடையிலான உறவு பற்றி என்ன கருதுகிறீர்கள்? புதிய சமூக இயக்கங்கள் பற்றிய உங்கள் மதிப்பீடுகள் எத்தகையவை?

 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இம்பரீயலிசம் அன்ட் சிலிகன் ஏஜ் என்ற கட்டுரையை எழுதினேன்.  ‘கூட்டுச் சேரா நாடுகள்’ என்ற சொல்லப்படுகிற மூன்றாம் உலக அரசுகள் உருவாக்கிய பொருளாதார அரசியல் சுயாதீன வளர்ச்சி அமைப்புகள் பின் வெற்றி பெறாமல் சிதைந்தன என்ற ஆய்விலிருந்துதான் எனது கருத்துக்கள் அமைவு பெற்றன. நான் மிகக் கடுமையாக ஐரோப்பிய இடதுசாரிகளோடு முரண்படுகிற ஒரு அம்சம், அதிநகரமயமான ஐரோப்பிய தொழிலாளி வர்க்கத்தைதான் இவர்கள் தொழிலாளி வர்க்கம் பற்றிப் பேசுகிறபோது குறிப்பிடுகிறார்கள்.  இந்த இவர்களின் பார்வைக்கு எதிர்மறைதான் தொழிலாளி வர்க்கம் பற்றிய எனது பார்வை. ஐரோப்பிய மையவாதத்திற்கெதிரான மூன்றாம் உலகின் தொழிலாளி வர்க்கம் பற்றியது அது.   எனது கருத்து என்னவெனில் மேற்கின் அதிநகரமான தொழிலாளி வர்க்கமல்ல இன்று சுரண்டப்படுகிறது, மாறாக மூன்றாம் உலகின் தொழிலாளி வர்க்கம்.  எனது இரண்டாவது அக்கறை தொழிலாளி வர்க்கத்தினிடையிலான உறவு எவ்வாறு இங்கு மாற்றம் பெற்றிருக்கிறது என்பது.  தொழிலாளி வர்க்கம் இங்கு ஒரே இடத்தில் செறிந்து காணப்படவில்லை.  ஏனெனில் மூலதனம் இப்போது இதன் தொழிற்சாலைகளை எடுத்துக்கொண்டு இடத்துக்கு இடம் நடந்து கொண்டிருக்கிறது.  தொழிலாளிவர்க்கம் இப்போது ஸ்கில்ட், அன்ஸ்கில்ட் என்று பிரிக்கப்பட்டுள்ளது.  மாறாக அதி உயர்ந்த ஸ்கில்ட் உழைப்பு சக்தி ஒருபுறம் விளிம்பு நிலையிலுள்ள அன்ஸ்கில்ட் உழைப்புச்சக்தி மறுபுறமென ஆகியிருக்கிறது.  இந்த உழைப்புசக்தி தற்காலிகமானதாக, அர்த்தமிழந்து போகக் கூடியதாக இருக்கிறது. இதனால்தான் தொழிலாளி வர்க்க இயக்கங்கள் சிதறுண்டு போய்விட்டன.  மூன்றாவதாக சுரண்டல் விகிதம் தொழில்முறை மூலதனத்தைக் கொண்ட இடத்திலிருப்பதைவிட மிக உயர்ந்த அளவிலாகி விட்டிருக்கிறது மூன்றாம் உலக நாடுகளில்.

 

இவ்விடத்தில் போஸ்ட்-போர்டிஸ்ட்  சித்தாந்திகளோடு நான் உடன்படுகிறேன்.  தொழில்நுட்ப புரட்சியினால் உழைப்புக் குவிப்பு சிதறிவிட்டது, உழைப்புச்சக்தி ஒன்றிணைவது தகர்ந்து விட்டது, மூலதனம் சார்புநிலையில் உழைப்பிலிருந்து ‘விமோசனம்’ பெற்றதாகி விட்டது. இவையெல்லாம் மிகுந்த கசப்புடன் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மைகள்.  இவைகளை நாம் எதிர்கொள்ளவில்லையானால் நாம் மறுபடியும் நட்பை திரட்டிக்கொள்ள முடியாது.  மாற்றத்துக்கான சக்தி எது என இனம் காண முடியாது. சூழலியலாளர்கள், பெண்நிலைவாதிகள், சமப்பாலுறவாளர்கள், அனார்க்கிஸட்டுகள், தெருக் கிளர்ச்சியாளர்கள்  என்று புதிய சமூக இயக்கங்கள் செயல்படுகின்றன.  இந்த எல்லா சமூக இயக்கங்களிலும் வதிகிற கீழ்நிலை மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, மையமாகக் கொண்டு இந்த இயக்கங்கள் இந்த இயக்கங்களை மேற்கொள்ளும் ‘வர்க்கத்தவரின்’ சுயலாபங்களுக்கும் தம் வாழ்வின் மேன்மைக்கும் மட்டுமே பயன்படும். இங்கு  சமவாய்ப்புக் கொள்கையை வலியுறுத்தும் ஆபிரிக்க, ஆசிய மக்கள் புதிய மத்தியதரவர்க்கமாக உருவாகி இருக்கிறார்கள்.  இவர்களைப்பற்றி இவர்கள் உரிமைகள் பற்றி நான் பேச விரும்பவில்லை.  எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் எல்லா இயக்கத்தின் அடிநாதமாகவும் ஒடுக்கப்பட்டோர், கடைக் கோடி மக்களின் நலன்களையே நான் முன்னிறுத்துகிறேன்.

இப்போது அடையாள அரசியலின் பெயரில், பல்கலாச்சாரத்தின் பெயரில் பிரிட்டிஷ் அரசாங்கம் நிதியுதவி கொடுத்து ஆசிய, ஆப்ரிக்க மக்கள் மத்தியில் நிரந்தரமான பிளவுகளை உருவாக்கிவிட்டது. இப்போது சுரண்டல், வர்க்க, நிற அடிப்படையில் அரசியல் இல்லை.  மாறாக அடையாள அரசியலாக ஆகிவிட்டது.  பல்கலாசார அரசியலாக ஆகிவிட்டது.  இச்சூழலில் அகதிகள், அரசியல் அடைக்கலம் கோருவோர் போன்றோரோடு இங்குள்ள கறுப்பு மக்கள் பொதுவான ஒருமைப்பாட்டுக்கான அடிப்படைகளை காண வேண்டும்.

 

பல்வேறு மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக எழுதி வந்த நீங்கள் உங்கள் பத்திரிகையில் ஸல்மான் ருஷ்டி பிரச்சினை பற்றி துப்புரவாக எழுதாமல் இருப்பதன் காரணம் என்னஎழுத்தாளனின் சுதந்திரம் பற்றி நீங்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறீர்கள்?

 

இக்கேள்வி பல்வேறு முறைகள் கேட்கப்பட்டபோதும் நான் இங்கிருக்கும் பத்திரிகைகளுக்கும் பதில் சொல்லாமல் தவிர்த்து வந்தேன்.  எங்கள் இதழில் அந்த விசயம் பற்றி முற்றிலும் எழுதுவதைத் தவிர்த்தோம், காரணம் ருஷ்டி பிரச்சினையில் வெள்ளையர்கள் மற்றும் பிரிட்டிஷ் அரசின் ஆர்வத்தில் இருக்கும் இனவாதத் தன்மை. எந்த எழுத்தாளனதும், எந்த மனிதனதும் வெளியீட்டுச் சுதந்திரம் கௌரவத்திற்கு உரியதுதான்.  அதற்காக நான் குரல் கொடுக்கிறேன்.  அதேவேளை அதைவிடவும் முக்கியமான விசயங்கள் இருக்கின்றன. பிரட்போர்ட் வீதிகளில் நள்ளிரவில் ஒரு முஸ்லீம் பெண் சுதந்திரமாக நடந்து போகும் சுதந்திரம்தான் எனக்கு முக்கியம். ஒருபக்கத்தில் இனவாதத்தை நியாயப்படுத்துவதற்காக முஸ்லீம் வெறுப்பை நியாயப்படுத்துவதற்காகவே  சுதந்திர எழுத்தாளர் ருஷ்டியின் பிரச்சினையை இந்த அரசாங்கமும் வெள்ளை அறிவுஜீவிகளும் கையாண்டார்கள். இந்தப் பிரச்சினையில் முழுக்கவும் ருஷ்டியின் சுதந்திரத்தை ஆதரித்து முஸ்லீம் எதிர்ப்பாளராகவே பிரிட்டனில் நான் இயங்கவேண்டும்.  அல்லது பிரிட்டிஷ் அரசாங்கம் வெள்ளை அறிவுஜீவிகளின் முஸ்லீம் வெறுப்புத் தன்மைக்கு இப்பிரச்சினையைக் கையாள்வதை விமர்சித்து நான் முஸ்லீம் மக்களோடு நிற்க வேண்டும். தனித்துவமான சுயாதீனமான கறுப்பின மக்களின் சுதந்திரத்திற்காகவே நான் நிற்க முடிவு செய்தேன்.

 

போஸ்ட் மாடர்னிஸம், போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிஸம் அனைத்து சிந்தனை அமைப்புக்கும் பின்னால்போஸ்ட்எனப் போட்டுக்கொள்வது இப்போது ஒரு மோஸ்தராகி வருகிறதுஇவை பற்றி ஐரோப்பியப் பின்னணியில் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

 

தொழில்நுட்பப் புரட்சி பல்வேறு அரசியல் போக்குகளை உருவாக்கியிருக்கிறது.  பின் – மார்க்ஸியம் (அல்லது மார்க்ஸியம் கடந்த இசம்) வரலாற்றின் இறுதி, பின், காலனித்துவம், பின் – நவீனத்துவம் என, ஜபடிஸ்பா புரட்சி இன்டர்னெட் புரட்சி என்கிறார்கள்.  ஆம், பரந்து பட்ட ஒரு விவசாய ராணுவமான ஜபடிஸ்பா இயக்கம் தொழில் நுட்ப முதலாளியத்துக்குள் வாழ நேர்ந்திருக்கிறது.  அதனால்தான் மின்னஞ்சல் மூலம் தம் எழுச்சியை உலகுக்கு அறிவித்தார்கள். மனங்களையும் மூளையையும் சென்றுசேர தகவல் சாதனத்தையும் கைப்பற்ற வேண்டியது முக்கியம்.  ஆனால் மாறிய மனங்கள் யதார்த்தத்தை மாற்றிவிடாது.  அப்போது அங்கு புரட்சியை ஏற்படுத்த மக்கள் வேண்டும்.  இதற்கப்பால் கிராமப்புற மெக்சிக்கோவில் மின்சாரமே இல்லை என்பதை இங்கு ஞாபகம் வைக்கவேண்டும்.  பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை இஸ்ரேல் அரச கட்டுப்பாட்டையும் தாண்டி இன்ட்டிபாதாவே இணைக்க முடிகிறது. ஆனால் தலைமை பங்குபெற முடியாது.  பர்மாவிலும் கலகக்காரர்கள் ஒருவரோடு ஒருவரை  மின்னஞ்சலில் இணைக்க முடியும்.  ஆனால் பூமியில் ஒரே இடத்தில் இணைக்க முடியாது.  நான் முன்பே சொன்னபடி புரட்சியை சாதிக்க மக்கள் வேண்டும்.  பிற்பாடு இன்டர்னெட் வேண்டும்.  ஒரே தளத்தில் ஒரே வகையில் கொண்டு சேர்க்கும் இவை மறுதளத்தில் விலக்கியும் விடுகிறது. இதுதான் பின்-நவீனத்துவவாதிகளின் விசேஷமான குணம். 

 

போராட்டத்துக்குள் பங்குபெறாமலே அவைகளை ஸ்வீகரித்துக் கொள்வார்கள். கடைசியில் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்வதைத் தவிர வேறொன்றும் நடக்காது. இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த அறிவுஜீவிகள் பலம்வாய்ந்த நிலைகளில் இருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்கள் அது நம் யுகத்தில் ஆளும் கருத்துக்களாக இல்லாதிருக்கலாம்.  ஆனால் அது கவர்ச்சிகரமான கருத்துக்கள்.  நம்காலத்தின் பாஷன் இவர்களை விமர்சித்து ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.  ஏனெனில் இவர்கள் எதிர்ப்புரட்சியாளர்கள், அபாயகரமானவர்கள், வஞ்சகமானவர்கள், மக்களை வஞ்சிப்பவர்கள்.  இந்த தகவல் தொழில்நுட்ப யுகம் அவர்களுக்கு வாய்ப்புக்களை கொடுத்திருக்கிறது.  அதை அவர்கள் விற்கிறார்கள். அவர்களின் சில கருத்துக்களைப் பாருங்கள், வரலாறு முடிந்துவிட்டது.  இனி முரண்பாடுகள் என்பது இல்லை.  முதலாளித்துவத்திற்கு முரண் சக்தி இல்லை.  இயங்கியல் என்பது இல்லை. காலனியாதிக்கம் ஒரு நிலைப்பாடு. அது தவிர்க்கவியலாதது.  அதற்கும் வறுமைக்கும் நிறவாதத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இனி உறவில்லை.  அதன்பின் மார்க்சியவாதிகளுக்கு பின்நவீனத்துவவாதிகளுக்கு எல்லாம் நிலையற்றவை.  சிதறுண்டவை. அலைந்து கொண்டிருப்பவை. ஒரு பெருங்கதையாடலும் இல்லை.  பிரபஞ்ச உண்மைகள் என்பது இல்லை.  பகுப்பாய்வை மறுத்து உரையாடல் புனிதப்பட்டுவிட்டது.  கட்டமைப்பை மறுத்து கட்டுடைப்பு புனிதப்பட்டுவிட்டது.  தற்காலிகத் தன்மை நிரந்தரத்தன்மையை மறுத்து புனிதப்பட்டுவிட்டது.ஆனால் மிருகங்கள்தான் காலத்தில் வாழ்கிறது.  மனிதகுலம் நிரந்தரத்தில் வாழ்கிறது.  ஆகவேதான் நமக்கு நினைவுகள், மரபு, மதிப்பீடுகள், தரிசனம் எல்லாரும் இருக்கின்றது. 

எல்லாம் குறுகலானவை, அலைபவை என்பது தனிநபர் அகந்தையின் தத்துவம்.  சுயநலத்திற்கு பிரதி, சுயநலத்திற்கு அறிவுபூர்வமான விளக்கம். இதிலிருந்து தான் இந்த கலாச்சார அடிப்படையினின்றுதான் உலக முதலாளித்துவம் அதிகாரம் பெறுகிறது.  பின் மார்க்சியவாதிகள் நிஜ உலகத்தில் புனிதமான வர்க்கமற்ற சமூகத்திற்கான தேடுதலை விட்டுவிட்டார்கள்.  மாறாக சொர்க்கம் காட்சி யதார்த்தத்தின் இன் வாசலில் இருக்கிறதென்று காத்திருக்கிறார்கள்.

 

இதை வேறு வகையில் சொல்வதானால் இந்த புதிய தொழில்நுட்பம் பிரம்மையை மைய நிஜமாக காண்பிக்கிறது.  இந்த உலகம் வீட்டில் உருவாக்கப்படுவதால் நீங்கள் இந்த பிரமையில் வாழலாம்.  ஆகவே தனிமையான உலகத்தில் நீங்கள் தனியனில்லை.  வர்க்க முரண்பாடு உள்ள உலகத்தில் உங்களுக்கு வர்க்கம் இல்லை.  பின் மார்க்சியம் ஸைபர் ஸ்பேஸ் யுகத்தின் கருத்தியல். இப்போது நிறைய கலாசார நிர்ணயம் பற்றி அடையாள அரசியல் பற்றி பேசப்படுகிறது.  பொருளாதார போரபாயம் அரசியல் போராட்டம் இரண்டாம் பட்சமாகி விட்டது.  பிரிட்டனில் டெமாக்ரடிக் லெப்ட், பழைய கம்யூனிஸ்டுகள் சுரண்டல் அமைப்புடன் தட்சரின் வாக்குறுதி அரசியலின் உரையாடலுக்குள் கரைந்து விடுவதுதான் அவர்கள் அரசியல் என்கிறார்கள்.  மார்க்சியம் முடிவு பெற்றுவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். நியூ டைம்ஸ் என்று பின் சோவியத் பின் கிழக்கு ஐரோப்பிய, தகவல் தொழில்நுட்பயுகத்தை குறிப்பிடுகிறார்கள்.  அரசியல் போராட்டங்களை கைவிட கோருகிறார்கள்.  இவர்களைப் பொறுத்து இவர்களின் உலகம் என்பது மூன்றாம் உலக மக்கள் தவிர்த்த உலகம்தான். இவர்களது கருத்தியல் பின் நவீனத்துவக் கருத்தியல் தான். போராட்டத்தின் பக்கம் நிற்பதாகப் பாவனை செய்வார்கள்.  ஆனால் யதார்த்தத்தில் போராட்டங்களுக்கு எதிராகவே இவர்களின் செயல் இருக்க முடியும்.  இந்தக் கலாச்சார நிர்ணயவாதம் குறித்து நாம் விமர்சனபூர்வமாக இயங்க வேண்டும்.

 

காலனிய சிந்தனை நீக்கம், கறுப்பு அறிவுஜீவிகளின் சிந்தனா விடுதலை பற்றி சொல்லிவருகிறீர்கள், கறுப்பு அறிவுஜீவிகளின் மனோவிடுதலைக்கு தடையாக இருப்பவையாக நீங்கள் கருதுபவை என்ன?

 

இந்தியாவிலிருந்து உதாரணம் சொல்கிறேன். காந்தியை ஒருவர் இவ்வாறு தான் பார்க்கவேண்டும்.  அவரது கோட்பாடு அவரது செயல் போன்றவற்றோடு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும்.  அந்த மக்களின் மரபுகளோடு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும்.  அந்த அரை நிர்வாணப் பக்கிரி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மாபெரும் அதிகாரத்தை கோட்பாடு நடைமுறை மரபு என ஒன்றிணைத்து முறியடித்தார். பின்னோக்கிப் போய்ப் பழைய இந்திய இலக்கியங்களையும் கலைகளையும் பார்க்க வேண்டும். இதில் கவிஞன்  கவிதையை விட முக்கியத்துவம் குறைந்தவன். கலையுடன் ஒப்பிட கலைஞன் அடையாளம் அற்றவன். பெஞ்சமின் லோறன்ட் சொல்கிறபடி இந்திய கலை ஒரு சமூகத்தின் வரலாறு பற்றியவை. அது தனிப்பட்ட கலைஞர்களின் வரலாற்றை விட அதிகம் கோருவதாக இருக்கிறது. கலைஞன் எந்த தனிநபரையும் போலவே அறிவுஜீவியோ அல்லது வேறொருவரோ சமூகத்து உரியவன். சமூகம் அவனுக்கு உரியதல்ல. அவன் வெளியிடுகிறவை அதிகளவு அவனது சொந்த அனுபவ உண்மையல்ல. மாறாக அவன் அங்கமாக இருக்கிற கூட்டுத் தரிசனத்தையே அவன் வெளியிடுகிறான். அவனுக்கு மட்டுமே அத்யந்தமான மொழியில் அவனுக்காகவும் அவனது சகபாடிகளுக்காகவும் அவன் பேசவில்லை. மாறாக அதிகம் தெரிந்த மொழியில் அல்லது குறியீடுகளில் உண்மையின் பொது மொழியில் பேசுகிறான். அறிவுஜீவித் தினவுக்கு நாம் விரும்பும் சமூகங்களில் இடமில்லை என்கிறார் நைரரே.

 

காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட  மனிதனின் மொழி இன்னொரு மொழி. பிறிதொரு மனிதனின் மொழி. பெனான் சொல்கிறபடி ‘ஒருமனிதனின் முழு உலகமும் அவனது சொந்த மொழியின் மூலம்தான் வெளிப்படுகிறது. பொருத்தப்பாடுடையாதாகிறது!’ பிற மனிதனின் மொழி உருவாக்கும் எமக்கான கடவுள்கூட எமக்கு அன்னியக் கடவுள்தான். இந்தக் காலனிய மொழியை ‘வெள்ளைமயமான’ அதன் இலக்கணத்தை, உச்சரிப்பை அதன் மொழித் தொகுதியை என்ன செய்யலாம்? ஜெனே சொல்கிறபடி ‘ஒரே ஒரு வழிதான் உண்டு. இந்த மொழியை ஒப்புக்கொள்வது, ஒப்புக்கொண்டு எவ்வளவு அதைச் சிதைக்கமுடியுமோ அவ்வளவு அதை புத்திசாலித்தனமாகச் சிதைக்க வேண்டும், வெள்ளை மனிதனை அவனது பொறியிலேயே சிக்கவைக்க வேண்டும். அவனது இருட்டில் அவனை ஆழ்த்த வேண்டும். அவன் இருக்கவே, அவன் பார்த்துக் கொண்டிருக்கவே அம்மொழியை விடுதலை செய்ய வேண்டும். மொழித் தொகுதி, ஸ்ப்தம், எல்லாம் அரசியல் நடவடிக்கைகள்தான். எவ்வாறு நிகழ்வுகள் அனுபவப்பட்டனவோ அதை அவ்வாறே வெளியிட்டவைதான் இவை! ஆகவே மொழியை நிறவாதம், இனவாதம் காலனியாதிக்கத்தினின்று விடுவியுங்கள். சிந்தனையை விடுவியுங்கள்.

 

ஆங்கிலத்தினின்று நிறைய தமிழுக்கு மொழியாக்கம் செய்வதைவிட தமிழிலிருந்து நிறையச் செய்யுங்கள். மூன்றாம் உலகின் வளமான இலக்கியங்களை காலனிய மொழிகளுக்குள் கொண்டு வாருங்கள். கம்பனை, வள்ளுவனை, நமது மகாகவி பாரதியை ஆங்கிலத்துக்குக் கொண்டு வாருங்கள். கணிதம், கலை, சமூகவியல், வரலாறு என அனைத்திலும் காலனிய சிந்தனை நீக்கம் நிகழ வேண்டும். மொழியை விடுதலை செய்வதன் மூலம் தான் நமது சிந்தனையை நமது வரலாற்றை நமது சமூகத்தை விடுதலை செய்ய முடியும்.

 

மூன்றாம் உலகின் அறிவுஜீவியாக மேற்கில் உங்கள் அனுபவம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

 

நான் என்னை அறிவுஜீவி என்று குறிப்பிடுவதை ஒப்புக்கொள்வதில்லை. ஏனெனில் உலகில் இந்த சோ கால்ட் அறிவுஜீவிகள் தங்களை ஒரு செக்ட் ஆக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு சலுகைக்குரிய மேல் வர்க்கமாக காணப்படுகிறது. சொல் வேறு, செயல் வேறு அதாவது கோட்பாடு வேறு நடைமுறை வேறு என நான் நினைக்கவில்லை. கிராம்ஸி சொல்கிற உயிரூக்கமுள்ள அறிவுஜீவிகள் எனும் கருத்தமைவு இவ்விடத்தில் தான் முக்கியத்துவம் பெறுகிறது. நான் என்னை ஒரு நடவடிக்கையாளன் என்றே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் என்னை மார்க்ஸிஸ்ட் என சொல்லிக்கொள்ளலாமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னளவில் மார்க்சியம் சூத்திரம் அல்ல. நடைமுறைக்கான ஒரு பகுப்பாய்வுக் கருவி என்றே நான் புரிந்திருக்கிறேன். எப்போதும் நான் என்னை ஒரு கருவி என்றே  புரிந்திருக்கிறேன். எப்போதும் நான் என்னை ஒரு மூன்றாம் உலகத்தவனாகவே உணருகின்றேன். மேற்கத்திய சமூகத்தின் திட்டம் வேறு, மூன்றாம் உலக சமூகங்களின் திட்டம் வேறு. நான் இங்கேயிருந்தாலும், எங்கேயிருந்தாலும் அந்த மூன்றாம் உலக சமூக செயல்போக்குபற்றியே சிந்திக்கிறேன். செயல்படுகிறேன்.

 

இந்திய, ஈழத்து மனோவியலில் ஆபிரிக்க மக்களின், மீதான வெறுப்புக்கும் ஒதுக்கத்துக்கும் ஏதேனும் பலமான காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

 

இந்துமதம்தான் உலகிலேயே மிகுந்த இனவெறிகொண்ட ஒரு மதம்.  இந்திய, ஈழமக்களின் வாழ்க்கையின் எல்லாத்தளங்களிலும் இந்த சதீயத் தன்மை என்பது இருக்கிறது. மிகுந்த ஒதுக்கலையும்  வெறித்தன்மையையும் கொண்டது இந்துமதம்.  தன்சானியா, உகண்டா போன்ற நாடுகளுக்குச் சென்ற இந்தியர்களின் முதல் நோக்கமாக பணம் சம்பாதிப்பதுதான் இருந்தது. சாதீயத் தன்மை நிறவெறி ஒதுக்கலையும் இலாபம் சம்பாதிக்கும் தன்மை ஆபிரிக்க மக்களின் மூலதன சுரண்டல் தன்மையையுமே கொண்டிருந்தது. இஸ்லாமிய மதத்தில், புத்தமத்தில் இந்த சாதீய ஒதுக்கல், நிறஒதுக்கல் ஒப்பிடும்படியாக இல்லை. ஆகவேதான் அம்பேத்கார் முஸ்லிம் மதத்துக்கோ புத்தமதத்துக்கோ சாதிய ஒடுக்குமுறைக்குள்ளானவர்களை மாற்றினார். கோசாம்பி இந்திய வரலாற்றின் முழுமையிலும் மனிதத்தன்மையற்று நிலவிய இந்த சாதீயத்தன்மையைச் சுட்டிக் காட்டுகிறார்.தென் ஆபிரிக்க வாக்கெடுப்பில் ஆபிரிக்க காங்கிரஸ் உடன் நிற்காது , நெல்சன் மண்டேலாவுக்கு எதிராக வெள்ளை நிர்வாகத்தை தென் ஆபிரிக்க இந்தியர்கள் ஆதரிக்க இந்த மனோவியல்தான் காரணமாகிறது.

 

கலாச்சார ஏகாதிபத்தியம் பற்றி இப்போது நிறையப் பேசப்படுகிறது. அது குறித்து உங்களது அபிப்பிராயங்கள் என்ன? இங்கு நடக்கும் போராட்டங்களின் தலைமை சம்பந்தமான பிரச்சினைகள் வரும்போது எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

 

இவர்கள் ஐரோப்பியர்கள் , வரலாற்றை காலனித்துவத்தினின்றுதான் தொடங்குவதாக  சாதிக்க முனைகிறார்கள். ஆய்வுகள் அவ்வாறே நிலவுகிறது. முன்காலனித்துவம், காலனித்துவம், பின் காலனித்துவம் என்று சகலவற்றையும் இவர்களே கற்று கொடுத்ததாகச் சொல்கிறார்கள். நிர்வாகம், அழகியல், வாழ்க்கை மதிப்பீடுகள் எல்லாம் இவர்களாலேயே எமக்கு நேர்ந்தது என்கிறார்கள். இவர்கள் அழித்தவை பற்றிய குற்றவுணர்வு இவர்களுக்கு இன்றும் இல்லை. வெள்ளை அறிவுஜீவிகள், புரட்சிகரக் கட்சி, தொழிற்சங்கங்கள் என்று சொல்பவை ஆப்ரிக்க,  ஆசிய மக்களின் உரிமைப்போராட்டங்களின் திசை வழியைத் தீர்மானிக்க நினைக்கிறார்கள். எமது போராட்டங்களின் இலக்கும், திசை வடிவமும், நோக்குகளும் பல்வேறு தனித்தன்மைகள் கொண்டவை. இவைகளை நாமே தீர்மானித்து நாமே தலைமையேற்று நடக்க வேண்டும். பொதுவான போராட்டங்களும் உண்டு. அதுவும் கூட எமது மக்களை நாம் தலைமையேற்று என்ற வழியிலேயே, பொதுவான புரிந்துணர்வு அங்கீகாரம் பகிர்ந்துகொள்ளுதல் நோக்கி வளர முடியும். இவ்வாறுதான் கறுப்பு வெள்ளை புரட்சியாளர்க்கிடையிலான புரிந்துணர்வு என்பதும் போராட்டத் தன்மை என்பதும் உருவாக முடியும்.

 

மிகத் தனிப்பட்ட  ஒரு கேள்வி. எங்கே இப்போது உங்கள் போராட்டம்? நீங்கள் நாடு அற்றவனாக இருப்பதாக தற்போது உணர்கிறீர்களா? நீங்கள் எங்கே சஞ்சரிக்கிறீர்கள்?

 

நான் என்னில் சஞ்சரிக்கிறேன். எனது எல்லா அனுபவங்களிலும் நான் இருக்கிறேன். கலாசாரம், மதிப்பீடுகள், வரையறைகள் என நான் சென்று வந்த அனைத்திலும் நான் இருக்கிறேன். நான் ஒரு நாடு கடந்ததவனாக என்னைக் கருதவில்லை. ஏனெனில், நான் எதிலிருந்து விலகியவனாக இருக்கிறேன்? என என்னையே கேட்டுக்கொள்வேன். சொற்களில் வேண்டுமாயின் என் நாட்டினின்று அகன்றவனாக நானிருக்கலாம். ஆனால் இன்றும், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், எமது எல்லா எல்லைகளும் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கும்போது, எமது வேர்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. சில இடங்களில், எமது சமூகத்தைப் புரிந்து கொள்ள அதில் நம்மைப் புரிந்துகொள்ள ஆதாரங்களையே பார்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாட்டின் கலாச்சாரத்தில்  நம் இடத்தையே பார்க்க வேண்டும். என்னளவில் ‘அகன்றவனாக’ என்னைப் பார்ப்பதென்பது நான் எங்கிருந்து வந்தேனோ அந்த மூன்றாம் உலக மக்களின் கறுப்பு மக்களின் போராட்டங்களில் இருந்து ‘அகன்றவனாக’ இருந்தால்தான் நான் அப்படிப் பார்ப்பேன். நான் எங்கேயிருக்கிறேனோ அங்கே போராட்டம் இருக்கிறது.  போராட்டம் அங்கும் இங்கும் எங்கும் இருக்கிறது. நிஜத்தில் இரட்டைப் பிரக்ஞையை நான் கொண்டிருக்கிறேன். சமூகத்தில் என் இடம், இங்கும் அங்கும் நிகழ்கிற கறுப்பு மற்றும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களில் எனது இடம். மற்றது மூன்றாம் உலக நாட்டு மக்களின் போராட்டத்தில் என் இடம், அங்கும் இங்கும் நடைபெறும் மூன்றாம் உலக நாடுகளின் அனுபவங்களில் என் இடம். நான் இவைகளிலிருந்து ‘அகன்றவன்’ இல்லை. நான் நேரடியாக கால, இடத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவைகளில் நான் பங்குகொண்டிருப்பவன். ஆகவே ‘அகன்றிருத்தல்’ புரிந்து கொள்ள முடியவில்லை. எங்கே போராட்டமோ அங்கே என் இதயம் இருக்கும்.

 

௦௦௦௦௦

 அ. சிவானந்தன் அவர்களின்  நினைவாக, இந்த  நேர்காணல் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment