Home » இதழ் 21 » *அ.சிவானந்தனின் இரு நேர்காணல்கள் -2- யமுனா ராஜேந்திரன்

 

*அ.சிவானந்தனின் இரு நேர்காணல்கள் -2- யமுனா ராஜேந்திரன்

 

 

-2

 

——————————————————————————————————————————————————————————

*நினைவுகள் மரணிக்கும்போது – “வென் மெமொரி டைஸ் “நாவலின் தோற்றவியல் பற்றிச் சொல்வீர்களா? எவ்வாறாக இந்த நாவலின் மனிதர்களையும் பிரச்சினைகளையும் உள்வாங்கி, தேர்ந்து எழுத முற்பட்டீர்கள்?

 

எனது நாட்டின் கதையைச் சொல்லவிரும்பினேன். சில எழுத்தாளர்கள் சொல்கிறார்கள் எழுதக் கதைகள் இல்லையென. ஆனால், ஒவ்வொரு மனிதரிடமும் சொல்ல ஒரு கதையிருக்கிறது.நான் ஒரு அகதியாக இங்கு வந்தேன். எனது நாட்டின் சாரம் இன்னும் எனக்குள் இருக்கிறது. எனது நாட்டின் மலைகள் இரத்தத்தினால் மூடுண்டு கிடக்கிறது. என்னால் அதைச் சகித்துக் கொள்ளமுடியவில்லை. ஒரு வகையில் நான் அதிர்ஷ்டாலி.பல்வேறு மனிதர்களுடன் பழகுகிறேன்.ஆனால் ஒரே தேசம் எனும் உணர்வு எங்களிடையில் இருக்கிறது. இதுதான் மார்க்சீயம் தரும் மன உணர்வு. தனிநபராக நீங்கள் இருப்பீர்கள். சமூகத்தடன் நீங்கள் இருப்பீர்கள். மனிதர்களோடு இணைந்தவனாகவும் நீங்கள் இருப்பீர்கள். எனது நாட்டில் நிரப்பப்படாத ஒரு வெற்றிடம் இருக்கிறது. ஒரு வகையில் எனது நாவல் இந்த வெற்றிடத்தை கவனம் கொள்கிறது.

 

 நான் 1958 கலவரத்தைத் தொடர்ந்து வெளியேறினேன். ஓரு சிங்களப் பெண்ணை மணந்து கொண்டேன். இங்கு வந்தவுடனேயே “நாட்டிங்ஹில்” கலவரத்தினுள் நுழைந்தேன். எனது நாட்டில் எதிர்கொண்ட இனவெறியை வேறொரு வகையில் நான் இங்கு எதிர் கொண்டேன். நான் இலங்கையைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிற வெளிநாட்டு விற்பன்னன் அல்ல. 1983 ஆம் வருட அனுபவங்கள் தொடர்பாக எழுதுவதுதான் எனது நோக்கமாக இருந்தது.

 

1982 ஆம் ஆண்டு நான் ஒரு இலங்கையில் ஒரு வீடு கட்டத் தொடங்கினேன். எனது வீடு தாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து “ரேஸ் அன்ட் கிளாஸ்” இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஒரு சிறப்பிதழைக் கொண்டுவந்தது. அந்த சஞ்சிகையில் எவ்வாறாக இலங்கை அரசு சிங்கள அரசாகவும் தமிழ் மக்களின் மீது தாக்குதல் தொடுக்கிற சிங்கள பௌத்த பெருந்தேசிய அரசாகவும் இருக்கிறது என்பது குறித்து கட்டுரைகள் வந்தன. அந்த இதழில் நான் எழுதிய கட்டுரையில் இலங்கை சம்பந்தமாக இடதுசாரிகளின் பல்வேறு தவறான கருத்தாக்கங்களை, புரிதல்களைத் தொட்டிருந்தேன். சண்முகதாசன் தொழிலாளி வர்க்கப் பார்வையிலிருந்து இந்தப்பிரச்சினையைப் பார்த்து எழுதியிருந்தார்.

 

இனப்பிரச்சினை எல்லா தொழிலாளி வர்க்கத்திடமும் எவ்வாறு வெட்டிச்செல்கிறதென- மலையகத் தொழிலாளிகள், தமிழ்த்தொழிலாளிகள், சிங்களத் தொழிலாளிகள் என எவ்வாறாக எல்லோரிடமும் இந்த இன உணர்வு வளர்ந்திருக்கிறதெனப் பார்த்தது அக்கட்டுரை. மதப்பிரிவினைகள் ,மொழிப்பிரிவினைகள் போன்று சகலரிடமும் ஊடுறுவியிருக்கிற இந்தப்பிரச்சினைகள் தொடர்பாக- இது வரை இடதுசாரிகள் கணக்கெடுக்காத இன மொழி மதப் பிரச்சினைகள் தொடர்பாக அந்த இதழில் எழுதினேன். அந்த சமயத்தில் நான் செய்த ஆய்வுகள் போன்றனதான் 1985 இல் நான் எழுதத் தலைப்பட்ட இந்த நாவலுக்கான அடிப்படைகளாக அமைந்தன.

 

இதன் தோற்றவியல் பற்றிச் சொல்லும்போது இரண்டு விஷயங்களை நான் சொல்ல வேண்டியிருக்கிறது. எனக்குள் இருக்கிற வெப்பம் வெளியில் வைக்கப்படவேண்டும் எனும் அவசியம் எனக்கிருந்தது. எனது நாட்டுக்காக நான் ஏங்கிக்கொண்டிருந்தேன். எனது மக்கள் கொலையுண்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் இங்கே இருந்து கொண்டிருப்பது சுலபம். நான் இங்கே இன, நிறவாதத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தேன். இலங்கையில் இனவாதத்தைத் துடைத்தெறியப் போராடவேண்டியதும் எனது கடமை. எழுதுவது எனபது என்னளவில் போராடுதலில் ஒரு பகுதி.

 

எனது எழுத்துக்களைப் பார்த்தால் அது இரு வகையில் அமைகிறது. ஓன்று எனது அரசியல் எழுத்துக்கள். மற்றது எனது ஆக்க இலக்கியமான நாவல், சிறுகதை எனும் எழுத்துக்கள். நான் எனது அரசியல் எழுத்துக்களுக்குள் ஆக்க இலக்கியத்தன்மையைக் கொண்டு வருகிறேன். எனது ஆக்க இலக்கியத்துக்குள் அரசியலைக் கொணர்கிறேன். இது முரண்பாடென்று நான் நினைக்கவில்லை. மாறாக, பரஸ்பரப் பகிர்தல் என்று நினைககிறேன். அரசியல் மனிதர்கள் ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும். தரிசனங்களைக்கொண்டிருக்க வேண்டும்.அதே வேளையில் ஆக்க இலக்கியவாதிகள் அரசியலைத் தேற வேண்டும். அல்லவெனில் அவர்கள் தகவல் தொழில்நுட்பச் சூழலினால் சுவீகரிக்கப்படுவார்கள். அதனோடு சேர்ந்து ஒத்துழைப்பவர்களாக ஆகிப்போவார்கள். இவர்கள் இப்படியாகிப்போனால் மக்களுக்காகப் போராடுகிறவர்களாக இருக்கமுடியாது. எதிரிக்குப் போராடப்போகிற கூலியாளனாக ஆகிப்போவான் இந்த எழுத்தாளன்..

 

*நீங்கள் இந்த நாவலை ஏன் மூன்று தலைமுறைக் கதையாக எழுத நினைத்தீர்கள்? அதற்கு விசேஷமான காரணங்கள் ஏதேனும் உண்டா? இந்த நாவல் ஒரு வகையில் இலங்கையின் நூற்றாண்டு அரசியலை மறுவாசிப்புக்கு உட்படுத்தியிருக்கிறது. இப்போது நாவல் வெளியாகி விமர்சிக்கிப்படுகிற இந்தச்சூழலில் ,இந்த நாவலின் வெளிப்பாட்டு முறைமை பற்றி அதனது இலக்கிய ரீதியிலான வெற்றி, அரசியல் ரீதியான உள்ளடக்கம் போன்றவை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

 

எனது நாட்டின் கதையைச் சொல்ல விரும்பினேன். அந்தக் கதையைத் தொடக்கம் இல்லாமல் சொல்லமுடியாது- தொடக்கம் என்கிறபோது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் பற்றிச் சொல்லாமல் எனது நாட்டின் கதையை எழுத முடியாது என்று சொல்கிறேன்.யாழ்ப்பாண விவசாய மனோபாவம், கல்விக்கான அவர்களது அவா, பௌத்தர்களின் கலாச்சார விழிப்பு, சமசமாஜிகளின் இயக்கம் போன்றன.அந்த வரலாறு இப்போது அநேகமாக மறக்கப்பட்டுவிட்டது. . இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எமது நாட்டின் வரலாறு மாறத்துவங்கியது.

 

இறுபது, முப்பதுகளில் இந்திய சுதந்திரப் போராட்டம்,  காந்தி – சரோஜினிநாயுடு போன்றவர்கள் இலங்கைக்கு வந்தனர். இந்திய தேசிய சுதந்திரப்போராட்டம் பற்றி அறிந்து கொண்டோம். காமன்வெல்த்தின் உருவாக்கம் முக்கியமான பாதிப்பாக இருந்தது. இங்கிலாந்தில் சக்ளத்வாலா போன்றவர்கள் இடதுசாரி நிலைபாடுகளை எடுத்தனர். குணசேனா இங்கிலாந்தின் தொழிற்கட்சியின் அங்கமாக தன்னை நினைத்தார். இந்திய காங்கிரஸ்கட்சியின் பகுதியாக அல்லது பிரிட்டீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதியாக அல்ல- பிரிட்டீஸ் தொழிற்கட்சியின் பகுதியாக அவர் தன்னை நினைத்தார். குணசிங்கதான் இலங்கை அரசியலில் இனவாதத்தை விதைத்த முதல் நபராக இருந்தார். இவர்தான் இலங்கையில் தொழிற்கட்சியைத் தொடங்கினார். சரவணமுத்து,  குணசிங்காவின் மிகப்பலமான ஆதரவாளராக இருந்தார். எனது தந்தையும் குடும்பத்தினரும் நானும் கொட்டஹேனாவில்தான் இருந்தோம்.

 

நடேசய்யர் மலையகத் தமிழர்களுக்குத் தலைமை தாங்கினார், யாழ்ப்பாணத்தமிழர்கள் ஒரு வகையில் மலையகத்தமிழரைப் பொறுத்து இனவாதிகளாக ஆயினர். . இவையெல்லாம் முக்கியமான விஷயங்கள். இந்த வரலாறெல்லாம் இப்போது மறக்கப்பட்டு விட்டது. நாவலின் முதல் பாகம் என்பது எவ்வாறாக இலங்கையின் வட பகுதி இருந்தது என்பதைச் சித்தரிக்க முயன்றது. அதன் மலைகள், பூகோள சீதோஷ்னநிலை, குழந்தைகள் வளர்தல் போன்றவை வருகின்றன. இனவாதம் அப்போது வளரச்சியுறவில்லை. அப்போது எவரும் பட்டினி கிடக்கவில்லை. சுபிட்சம் நோக்கியதாக வாழ்வு இருந்தது.

 

நகரமயமாதல், அரசாங்க உத்தியோகம், பின் காலனியப்பொருளாதாரம், இடப்பெயர்வு, இன்னும் கிராமப்புறத்திலிருந்த தமிழ் தொழிலாளிகள் கூட குணசிங்காவின் அரசியலினால்  காவு கொல்லப்பட்டார்கள். இவ்வாறுதான் தமிழ் தேசிய உணர்வென்பது எதிர்மறையாக தமிழர்களிடம் விதைக்கப்பட்டது. இவ்வாறு கடந்த காலம் நிகழ்காலத்தினூடு எதிர்காலம் என்கிற வகையில்தான் மூன்று தலைமுறைக் கதையாக உருவாகியது. இந்த நாவலை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதத் தொடங்கினேன். பல்வேறு பணிகள், மன அலைச்சல்கள், சொந்த அவலங்கள் போன்றவற்றால் தொடர்ந்து எழுதி முடிக்கவில்லை. நிறவாதம், இனவாதம் அங்கும் இங்கும் என்பதாகத்ததான் எனது ஆரம்ப நினைவுகள் அமைந்திருந்தது. துரதிருஷ்டவசமாக எனது மனைவி என்னை விட்டு விலகிப்போனாள்.

 

1963 இல் நான் எனது அடிப்படை வாழ்வு பற்றிக் கவலைப்படவேண்டியிருந்தது. எழுதுவதற்கான நேரம் முற்றிலும் இல்லை. வேலை, பல்கலைக் கழகப்படிப்பு என நேரம் அரிதாயிருந்தது. குழந்தைகளைக் கவனிக்கவேண்டி, சமைக்கவேண்டி என சொந்தக் காரணங்கள். பிற்பாடு எனது வாழ்வுக்குள் ஜென்னி வந்தாள். நூலக உதவியாளனாக, டீ  போய் என  அப்போது இருந்தது எனது வாழ்வு.. குழந்தைகள் வளர்கிற வரையிலும் என்னால் இதை எழுதி முடிக்க முடியவில்லை. இடையில் நான் இலங்கை போவதும் வருவதுமாக இருந்தேன். மறுபடி 1970 களின் பிற்பகுதி ஆண்டுகளில்தான் எழுதத்தொடங்கினேன். எனது முதல் கடமை குழந்தைகள் வளர்ப்பு. இரண்டாவது கடமை இந்நாட்டில் நிறவாத எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது. எனது நாட்டுக்கான எனது கடமை காத்திருந்தது.1983 ஆம் ஆண்டு ரேஸ் அன்ட் கிளாஸ் சஞ்சிகைக்கான எனது ஆய்விலிருந்து நாவல் வடிவம் கொள்ளத் தொடங்கியது.

 

*இங்கே ஒரு கேள்வியை நான் கேட்க வேண்டியிருக்கிறது. இந்த நாவலை நீங்கள் ஆரம்பத்தில் எழுத நினைத்தபோது மூன்று தலைமுறைக் கதையாக நீங்கள் தொடங்கவில்லை. அதனது வளர்ச்சிப் போக்கில்தான் அது மூன்று தலைமுறைக் கதையாக உருப் பெறத் தொடங்கியது என்றா நீங்கள் சொல்கிறீர்களா?

 

ஆமாம். குடியேற்றம் தொடர்பான விஷயங்கள் ,பிரச்சினைகள் எல்லாம் இருந்தபோதிலும் நான் கடந்த காலத்தின் மனிதனாகவே இருந்தேன். ஜான் பெர்ஜர் இந்த நாவல் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார். ஜான் பெர்ஜர் ஏற்கனவே புக்கர் இலக்கியப் பரிசு பெற்றவர். பெர்ஜர் ஒரு ஓவியர். அவரைச் சந்தித்தது எனது வாழ்வில் திருப்பமுனையானது. அவர் பிக்காஸோ பற்றி எழுதியவர், புகாரின் பிரச்சனை பற்றி எழுதியவர். தற்போது பிரான்சில் வாழ்கிறார். இன்ஸ்டிடியூட் ஆப் ரேஸ்  ரிலேஷன்ஸின் சேர்மனாக இருந்த மைக்கேல் கெய்ன் புக்கர் அமைப்பின் சேர்மனாகவும் இருந்தார். ஜான் பெர்ஜர் புக்கர் பரிசு பெற்றபோது அதனது பாதி பரிசுப் பணத்தை பிரிக்ஸ்டன் ஆப்ரிக்க மக்களின் பிளாக்பாந்தர் அமைப்புக்குத் தந்தார் ஜான் பெர்ஜர். நாங்கள் மிக நல்ல நண்பர்களாக இருந்தோம்.

 

நாங்கள் இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது ஜான் இந்த நாவல் அற்புதமான நாவலாக வரும் என்றார். இரண்டு பகுதிகளாலான இந்த நாவல் படைப்புரீதியில் முழுமையடைந்த ஒன்றல்ல. மூன்று பகுதியிலான நாவலாக இது  அமையுமென்றால், படைப்பு முழுமை பெறும் என ஜான் சொன்னார். இவ்வாறுதான் இந்த நாவல் மூன்று தலைமுறை நாவலாக உருவானது.. இது வரலாறும் வாழ்வும் இணைந்ததால் பாதியில் நிற்பதாக –  இந்த நாவல் இரண்டு தலைமுறையில் நிற்கிறது – இரண்டாம் பகுதி என்பது 1956 வரையிலும் தான் வருகிறது- முதல்பகுதி என்பது ஒரு வகையில் என்னை மறுகண்டுபிடிப்பு செய்வதாகும். அவ்வகையில் இந்நாவல் வரலாற்று முழுமை கொண்டதல்ல. அறுபதுகளில் முற்றிலும் புதிய நிலைமைகள் வளர்கின்றன. தமிழ் ஆயுத எழுச்சி கெரில்லாப் போராட்டம் போன்றவை. விடுதலைப் போராட்டம் பற்றிய விவாதங்கள் தோன்றுகின்றன. விடுதலை என்பது சோசலிசத்துடன் இணைந்த பகுதி. நாம் முதலில் எம் மக்களை விடுவிப்போம். பிற்பாடு சோசலிசம் பற்றிப் பேசுவோம் என நீங்கள் சொல்லமுடியாது. சோசலிசம் நோக்கிய வழிமுறைதான் விடுதலைப்போராட்டம்.

 

*பல்வேறு விமர்சகர்கள் உங்களது நாவல் பற்றிக் குறிப்பிடும்போது நாவலின் இரண்டாம் பகுதி என்பது வாழ்ந்துபட்ட அனுபவம் கொண்டதும் மிகுந்த ஆதாரத்தன்மையும் ஆழமும் கொண்டதாக இருக்கிறது என்கிறார்கள். ஏனெனில் நீங்கள் அறிந்தபடி இக்காலகட்டம் பெரும்பாலும் உங்கள் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது நாவலின் ராஜன் பாத்திரம் போல 1958 இனக் கலவரத்தைத் தொடர்ந்து  நீங்கள் இலங்கையைவிட்டு வெளியேறி விடுகிறீர்கள்.நாவல் 1990  வரை விரிகிறது. நீங்கள் அடிக்கடி  இலங்கைக்குப்  போனீர்களா? வாழ்ந்துபட்ட அனுபவத்துக்கும் நாவலின் மூன்றாம் பாகத்துக்கும் இருக்கும் உறவு தொடர்பான விமர்சனங்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

 

1962 ஆம் ஆண்டு நான் இலங்கைக்குச் சென்றேன். அதன்பின் ஓவ்வொரு ஆண்டும் நான் இலங்கை சென்றேன். 1982 இல் அங்கே ஒரு வீடு கட்டுவதற்காகப்  போனேன். ஓவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்கள் வரை அந்த நாட்டில் நான் தங்கியிருக்கிறேன். மனித உரிமைகள் அமைப்புகள், இடதுசாரிகளுடன் வேலை செய்திருக்கிறேன். வடக்கு கிழக்குக்கும் பயணம் செய்தேன். சண்முகதாசன், சிங்கள அறிவஜீவிகள், ஒரு சில போரளாளிக்குழு சாரந்தவர்கள் போன்றோரையும் சந்தித்தேன்.1979 இல் இனக்கலவரத்தில் வெள்ளவத்தையில் நான் தங்கியிருந்த எனது சகோதரரின் வீடு தாக்கப்பட்டது. நானும் எனது மகளும் சகோதரனும், பிறருடன் சேர்ந்து சுயபாதுகாப்புக் கமிட்டியை உருவாக்கினோம். தமிழ்மக்களுடனும் இலங்கை இடதுசாரிகளுடனும் நான் 1982 வரை வாழ்ந்திருக்கிறேன். வரலாறு உங்களிலிருந்து துவங்குவதில்லை. உங்களது பாட்டி உங்களது வரலாறு. உங்களது தந்தை உங்கள் வரலாறு. உங்களது மாமா உங்கள் வரலாறு. உங்களது மகனும் பேரனும் கூட உங்களது வரலாறுதான்.

 

*இம்மாதிரியான வாழ்ந்துபட்ட அனுபவம் தொடர்பான கேள்விகள் ஸல்மான் ருஷ்டி, மைக்கேல் ஒன்டாஜி போன்றவர்கள் மீதும் வைக்கப்படுகிறது. ருஸ்டியின் இந்திய நாவல்கள் பற்றியும் ,ஒன்டாஜியின் அனில்ஸ்ட் கோஸ்ட் நாவல் பற்றிய விமர்சனங்களிலும் இந்த வாதங்கள் வருகிறது. ருஸ்டிக்கு இந்திய விசா மறுக்கப்பட்டது. இந்தியாவுக்குள் அவர் அனுமதிக்கப்படவில்லை என்பது குறித்து இவர்கள் சௌகரியமாக மறந்து விடுகிறார்கள். இன்னும் எழுத்தாளர்களும் மனித உரிமையாளர்களும் சில குறிப்பிட்ட இடங்களுக்குச்சென்று வருவது என்பது உயிர்க் கொலை தொடர்பான பிரச்சினையாகவும் இருக்கிறது. இதற்கு கொலையுண்ட பல கலைஞர்களின் எழுத்தாளர்களின் பெயர்களை ஆதாரமாகச் சுட்டமுடியும். ஆயுத இயக்கங்கள், அரசின் ஆயுதப்படைகள் போன்றவை குறித்த விமர்சனங் கொண்டவர்களுக்கு நடமாட்டம் என்பது மிகுந்த பிரச்சினைக்குரிய விஷயமாயிருக்கிறது.

 

நாவலில் விஜய் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதும், அவர் போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர்களைச் சந்தித்ததும் எனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அமைந்ததாகும். நான் அவர்களைச் சந்திக்க யாழ்ப்பாணம் சென்றேன்.என்னுடைய விவாத அடிப்படைகளிலிருந்து என்னை விமர்சிக்கிறவர்களின் விவாத அடிப்படைகள் வித்தியாசமானது. நான் நாவலாசிரியன் அல்ல. நான் ஒரு கதை சொல்லி.

 

நாவலாசிரியர்கள் உருவாகிறார்கள். கதைசொல்லிகள் பிறக்கிறார்கள். நான் கதைசொல்ல விரும்புகிறேன். நான் இலக்கியப்பள்ளிகளுக்குச் செல்லவில்லை. இலக்கியம் எழுதுவது சம்பந்தமான பாடங்கள் படிக்கவில்லை. நாவல் எழுவதற்காக நான் பல்கலைக்கழகப் பாடங்களுக்கும் செல்லவில்லை.நாவல் என்பது கற்பனையாற்றல் சம்பந்தமானது தான். நாவல் எழுதுவதற்கு முழுக்கவும் வாழ்ந்துபட்ட அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்பது அபத்தமாகும். ஆதாரத்தன்மை என்பது கற்பனையாற்றலின் ஆதாரத்தன்மை; தரிசனத்தின் ஆதாரத்தன்மையாகும்.

 

இந்திய, இலங்கை அரசியல் நாவல்களில் எடுத்துக் கொண்டால் பாலுறவு சம்பந்தமான சித்தரிப்புகள் விவரணங்களுக்கு அதிகமான இடம் இருப்பதில்லை. வாழ்வில் இதற்கு மிகப் பெரும் இடம் இருக்கிறது. உங்களுடைய நாவலில் நான் பெற்ற அனுபவம் வித்தியாசமானது. பல்வேறு புணர்ச்சி அனுபவங்கள், மனம் சார்ந்த பாலுறவுத்தோய்வுகள் உங்கள் நாவலில் இடம்பெறுகின்றன. இவ்வகையில் இந்த நாவலின் கதைசொல்லலின் முறை குறித்து ஏதேனும் சொல்ல உண்டா உங்களுடைய பெண் பாத்திரங்கள் மிகப்பலம் வாய்ந்த சக்தி கொண்ட பாத்திரங்களாக இருக்கிறார்கள். சாதாரணமாக இந்த வகைச் சித்தரிப்பை இடதுசாரி நாவல்கள் அல்லது புரட்சிகர நாவல்கள் என்பவற்றில் பார்ப்பது அரிதானது.

 

பாலுறவு, அதனது நெகிழ்வு, அன்பு போன்றன மனித நெருக்கம், அருகாமை சம்பந்தமானது. எமது சமூகங்களில் இதை சொல்ல மறுத்து வந்திருக்கிறோம். அது பேச்சில் வருவதுல்ல; நெருக்கத்தில் உணர்வது. இந்தியர்களும் இலங்கையர்களும் இது பற்றி எழுத மறுக்கிறார்கள் எனில் அது ஒரு எதிர்வினை- மேற்கு நோக்கிய ஒரு எதிர்ப்புரட்சிகர எதிர்வினை.

 

எமது கலாசாரத்தில் பாலுறவும் அதன் நெருக்கம் உணரப்பட்டிருக்கிறது. மகத்தான இலக்கியங்களில் எமது காவியங்களில் அது இருக்கிறது. தொடுதலில், உணர்தலில் கற்பனையாற்றலில் பாலுறவு வாழ்கிறது. பாலுறவை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள். பாலுறவு எனது நாவலின் அங்கமாக இருக்கிறது. அது அழகானது ஏனெனில் அது முழுமையானது.

 

நமது சமூகம் அதீதமாக பெண்எதிர்ப்பு சமூகமாக இருக்கிறது. தமிழர்கள் , சிங்களவர்கள் இருவருக்கும் இது பொருந்தும். நமது கிராமப்புறப் பின்னணிகள்,  விவாயப் பின்னணிகள் போன்றன நகரமயமாதலின் போது மாறுதலைடைகின்றன- பால் ரீதியிலான சமூகப் பாத்திரங்கள் மாறுதலுக்கு உள்ளாகின்றன. நகர்மயமாதலில் பெண்கள் வீட்டு வேலையும் செய்கிறார்கள். வெளியில் சமூக உற்பத்தியிலும் ஈடுபடுகிறார்கள். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் எப்போதும் அதிகாரப்படிநிலைகள் இருக்கின்றன. அந்த சமூகத்திற்கே உரிய சாதிய அடிப்படையிலான,  அதைத் தாங்குகிற அதிகார அமைப்பு இருக்கிறது. இந்தக் காரணங்களால்தான் பெண்களின் குணச்சித்தரிப்பென்பது எமது நாவல்களில் அருகியிருக்கிறது. பெருநகர்ப்புறங்களில் ஆண்களாகிய நாம் குழந்தைகளை வளர்க்கிறோம். இரவுமுழுக்க படிக்கிறோம். அனைவரின் உள்ளாடைகளையும் துவைக்கிறோம்; கழிவுகளைத் துப்புரவு செய்கிறோம். இவையெல்லாம் கடினமானதென நாம் அறிவோம்.

 

எனது மனைவி ஒரு கத்தோலிக்கப் பெண். எனது அம்மா போன்றவர்கள் பலமான ஆளுமைகொண்டவர்கள். அவர்கள்தான் பிரபஞ்சத்தின் மையமாக இருப்பவர்கள். எனது மாமியார் 1958 கலவரங்களின் போது தனது தமிழ் நண்பர்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றார். இப்படி நான் பார்த்த பெண்கள் மிகுந்த ஆளுமையும் பலமும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் தான் எனது நாவலில் வருகிறார்கள்.

 

*இது ஒரு வகையில் இலங்கைப்பிரச்சனை பற்றிய நாவல். அதே வேளையில் இதில் பின் சோவியத் அனுபவங்கள் இருக்கிறது. பின் புரட்சிகர சமூகங்களின் படிப்பினைகளை எடுத்துக் கொள்கிறது. வழிமுறையும் இலக்கும் என்கிற பிரச்சனையையும் எடுத்துக் கொள்கிறது.—.

 

வழிமுறையும் இலக்கும் பிரிக்கமுடியாதவை. இரண்டும் வேறுவேறல்ல. அது போல விடுதலைவழிமுறை என்பதும் சோசலிச இலக்கும் பிரிக்கமுடியாதவை. நீங்கள் சொன்ன மாதிரி இது பின் சோவியத் பிரச்சினை மட்டுமல்ல, பின் காலனித்துவப் பிரச்சினையும் ஆகும்.

 

சோவியத் கம்யூனிஸமும் சரி காலனியாதிக்கமும் சரி இரண்டுமே மையப்படுத்தும் சக்திகள். காலனியாதிக்கம் என்பது மையப்படுத்தப்பட்ட அரசுகளை எமது நாடுகளில் உருவாக்கியது. பிரித்தானியர்கள் சென்ற இடங்களிலெல்லாம் பெடரல் கவர்ன்மென்ட், சென்ட்ரல் கவர்ன்மென்னட் என்று அமைத்தார்கள். நைஜீரியா, இலங்கை , இந்தியா என எங்கும் இம்முறை நாட்டை ஒன்றுபடுத்தும் நோக்கம் என்றார்கள்.

 

எங்கெங்கே காலனியாதிக்கம் சென்றதோ அங்கெல்லாம் அரசியல் ரீதியில் இன்டக்ரேட் செய்தார்கள்.  பொருளாதார ரீதியில் இன்டிக்ரேட் செய்வதற்காக அரசியல் ரீதியில் பிரித்தார்கள். இலங்கையை பொருளாதார ரீதியில் ஒன்றுபடுத்தினார்கள் ஆனால் அரசியல் ரீதியில் தமிழ் மக்களைப்பிரித்து பிரிட்டீஸ் அரசாங்கத்தின் பதவிகளுக்கு சேவகம் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டார்கள் ,சிங்கள மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள். சிங்கள மக்களிடம் இதற்கு எதிர்வினை வந்தது. யூகோஸ்லீவியாவிலும் இந்த மையப்படுத்தல்தான் மக்களை ஒருவருக்கு எதிராக மற்றவரை நிறுத்தியது. எமது சமூகம் பிளவுண்டு உடைந்து போனது. இனவாதம் இதிலிருந்துதான் தோற்றம் பெறுகிறது. மதப் பிரிவினைகள், இனப்பிரிவினைகள் தோன்றின. இந்த இனத்தை எடுத்துக்கொண்டு நாம் உடைந்து போவோம் என்று பிரச்சினைகள் வளர்ந்தன. இவ்வகையில் காலனிய சக்திகளால் நாடுகள் உடைபட வேண்டி வந்தன.

 

இதில் இன்னொரு பரிமாணமும்  உண்டு. சமவேளையில் தொழில்நுட்பப் புரட்சி , உலகமயாகும் நிகழ்வு. மூலதனம் சர்வதேசமயமாகியது. தேசிய அரசுகள் உடைந்துபோனது. மத இன மொழி பிரிவுகளாக உடைந்து போனது. இந்த இரண்டும் அருகருகே இணைவாக வருகின்றன. இந்த முரண்பாடுகளில் இருந்துதான் பிரச்சினை வருகிறது. இதை இரண்டு முனைகளிலும் எதிர்த்து நாம் போராட வேண்டியிருக்கிறது. இனச்சுத்திகரிப்பு என்பதை நாம் எதிர்த்துப் போராடவேண்டியுள்ளது. அதேவேளை  இலத்தீனமெரிக்கா ஆசிய ஆப்ரிக்கா என எல்லா இடங்களிலும் இனச்சுத்திகரிப்போடு உலகமயமாதலையும் இதனையும் வைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.

 

இந்தப் பிரச்சினகளின் எதிர்காலம் எவ்வகையில் இருக்குமென நினைக்கிறீர்கள்? யூரோப்பியன் யூனியனில் இனைவதெற்கென பெரும்பாலுமான ஐரோப்பியர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஓரே ராணுவம் ,அதிகார அலகு, சட்டமுறை, பணப்புழக்கம்,  இனம் நிறம் என எல்லா அடிப்படையிலும் ஒருங்கு திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஒரு விஷயத்தை நாம் நிராகரிக்கவே முடியாது , அதாவது பெரும்பான்மை இனங்கள் இந்த ஆபத்தை உணராதிருக்கிறது. சிறுபான்மை இனங்களையும் அவர்தம் உரிமைகளையும் கலாச்சார அடையாளங்களையம் அங்கீகரிக்க வேண்டியது தமது பொறுப்பு என உணராதிருக்கிறார்கள்.

 

*தேசியத்தையும் நாம் மூன்று வகையாகப் பார்க்கலாம். பாசிச தேசியம். காலனியாதிக்க எதிர்ப்பு தேசியம். பிற்பாடு சமகால இனத்தேசியம். இனத்தேசியம் என்பது சிறுபான்மை இனங்களின் மீது பெரும்பான்மை இனத்தால் சுமத்தப்பட்டதாக இருக்கிறது. எவ்வாறு இந்த ஒடுக்குமுறைக்கான தீர்வு இருக்கமுடியும்?

 

இந்த நாவலில் நான் , ஜேவிபி யின் சிங்கள தேசியத்தில் எந்த ஆபத்தை அறிந்து கொள்ள முடிந்ததோ அதே அளவிலான எச்சரிக்கையைத்தான் தமிழ் தேசியம் சம்பந்தமாகவும் உணர்ந்தேன். இந்த நாவலை அதனது கருத்தியல் ஒருமைக்காவும் மறுதலைமுறை தொடர்ச்சி என்கிற மாதிரியான கதை ஒருமைக்காகவும்தான் எனக்குப் பிடிக்கிறது. இந்த இரண்டு விஷயங்களும் நாவலில் ஒன்றை ஒன்று நிறைவு செய்வதாக இருக்கிறது.

 

நாம் இருக்கிற சூழலை மறுநிர்ணயம் செய்து கொள்வோம். மூலதனத்தின் உலகமயமாதல்- சர்வதேச மயமாகும் தொழிலாளிவர்க்கம். இதுவன்றி தேசிய முதலாளி வர்க்கம். இத்தோடு தேசியம் என்பதும் வருகிறது. எமது அரசுகள் சர்வதேசிய மூலதனத்திற்காகவும் பன்னாட்டுக் கார்ப்பரேஷன்களுக்காகவும் எம்மை ஆளுகிறார்கள்.

 

நாம் காலனியாதிக்க காலங்களில் போராடிப் பெற்ற உரிமைகள் பேச்சு எழுத்து கூட்டம் கூடுதல் தொழிற்சற்க உரிமைகள் எமது பூகோளத்தின் மீதான எமது உரிமைகள் எல்லாவற்றையும் சர்வதேச மூலதனத்தைக் காப்பதற்காக தேசிய முதலாளிகள் எடுக்கும் நடவடிக்கைகளினால் இழந்து கொண்டிருக்கிறோம்.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தேன். சென்னைக்கும் சென்றிருந்தேன். இந்தியாவைப் பாருங்கள். அண்ணன் தம்பி அம்மா அக்கா உறவுகள் அங்கே மாறிப்போயிற்று. அம்மா என்றால் என்ன மதிப்புப் பெறுவாள்? தம்பி ரொம்ப நாட்களாக வேலைசெய்கிறான். அவனிடமிருந்து எவ்வளவு காசு எடுக்கலாம்? இந்த விருந்தாளியால் எனக்கு என்ன லாபம்? என எல்லாமுமே இன்று பணப்பட்டுவாடா உறவுகளாக ஆகிவிட்டது. கூட்டுக்குடும்பம் ,சமூக உறவுகள், கூட்டுணர்வு எல்லாமே மாறிப்போய்விட்டது. கலாச்சாரத்துக்கு மாறாக வி டிபன்ட் கேஸ் நெக்ஸஸ்.

 

மதப்பிரச்சினகள் சம்பந்தமாக நமக்குள் சில புரிதல்களுக்கு நாம் வந்து சேர வேண்டும். இன்று ஒரு புதிய ஏகாதிபத்தியம் எமது நாடுகளைச் சுரண்டி வருகிறது. உலகமயமாதல் என்பதுதான் புதிய ஏகாதிபத்தியத்தின் பெயர். இதனால்தான் உலகமயமாதலை எதிர்த்து உலகெங்கிலும் போராட்டங்கள் எழுந்து வருகிறது. இந்த உலகமயமாதலால் வறுமை அரிகரித்து வருகிறது .மூன்றாம் உலக நாடுகளின் மூன்றில் இரண்டுபகுதியும் ,ஐரோப்பாவில் மூன்றில் ஒருபகுதியும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை மத இன வேறுபாடுகள் பிரிக்கிறது.இந்தச்சூழலில்தான் கருத்தியலின் முக்கியத்துவம் உணரப்படவேண்டும். உங்களுக்கு ஒரு கருத்தியல் அடிப்படை இல்லையானால் இவைகளைப் புரிந்து கொள்ளமுடியாது.

 

சிறுபான்மை இன உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும் என்பது நிச்சயம். நூறு சதம் இப்பிரச்சினைகளில் நான் ஒடுக்கப்பட்ட இனமக்களின் பக்கம் நிற்கிறேன். இலங்கையில் தமிழ் மக்கள்தான் ஒடுக்கமுறைக்குள்ளாக்கப்படுகிறார்கள். அவர்கள்தான் துயருருகிறார்கள். அவர்களின் போராட்டம் கேள்விக்கு அப்பாற்பட்டது. இங்குதான் சோசலிசம் விடுதலை தொடர்பான பிரச்சினை வருகிறது. ஆபத்தை நாம் உணரவேண்டும்.

 

தேசியத்தில் இருவகையுண்டு. புரட்சிகர தேசியம். எதிர்ப்புரட்சி தேசியம். அமில்கார் கேப்ரல் ஒரு மாபெரும் தேசியப் புரட்சியாளன். கலாச்சாரம் என்பது பிற கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொள்ளவேண்டும். பிற கலாச்சாரங்களுக்கு திறந்தபடி நாம் இருக்க வேண்டும். கலாச்சாரம் தன்னளவில் உள்ளொடுங்கிப்போகமுடியாது. நாம் நமது மக்களை ஒடுக்குகிறோம். இதை எவ்வாறு நிறுத்துவது?.

 

யூதர்களைப்பாருங்கள். அடக்கப்பட்ட மக்களாக இருந்து அடக்குமுறையாளர்களாக உருவானவர்கள். இவர்கள்தான் இன்று இலங்கை அரசோடு சேர்ந்து தமிழர்களைக் கொல்கிறார்கள். இது பற்றிய எச்சரிக்ககை உணர்வு நமக்கு வேண்டும். இதை அறிவது இயங்கியல் சம்பந்தமான பிரச்சினையாகும்..

 

*நீங்கள் அனல்கக்கும் நிறவெறி எதிர்ப்பாளர், அரசியல் போராளி என்பது அனைவருக்குத் தெரியும். இப்போது உங்களுடைய சிறுகதைத் தொகுப்புவென் தேர் ஈஸ் டேன்ஸ்புத்தகமும் வெளியாகியிருக்கிறது. ஏசியன் டப் பவுண்டேஷனின் ஆசிய பாப் மியூசிக் ஆல்பமொன்றிலும் கூட அவர்கள் உங்களது குரலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். உங்களது கோட்பாட்டு பங்களிப்புகள் பற்றி உலகளவில் இடதுசாரிகள் எழுதிய தொகுப்பொன்றும் 1999 ஆம் ஆண்டு உங்களை கௌரவப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ளளது ( வோர்ல்ட் டு வின்) உங்களுடைய அரசியல் எழுத்துக்களில் வெளிப்படும் வெப்பமும் இலக்கியநயமும் உங்களுடைய எழுத்தில் பரிச்சயமுள்ளவர்கள் அறிவார்கள். உங்களுடைய இலக்கிய ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது? உங்களை ஆகர்ஷித்த எழுத்தாளர்கள் எவரெனச் சொல்லமுடியுமா?

 

எனது தந்தை சுயமாகத் தன்னை வளர்த்துக் கொண்டவர். 16 வயதில் தபால் அலுவலக வேலையில் சேரந்து விட்டார். சகோதர சகோரிகளை சிரமப்பட்டு வளர்த்தார். எனது தாத்தா ஒரு விவசாயி. நாவலில் அவர்தான் பாண்டியன். எனது தந்தை டிக்கன்ஸ், டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்க்கி ,ரோமன் எம்பயர் என எல்லா வகை புத்தகங்களையம் வாங்கிப்படிப்பார். பஞ்சதந்திரா,  வால்மீகி என நிறைய வாங்கிக் குவிப்பார்.

 

ரஷ்ய , பிரெஞ்சு நாவல்கள்தான் எனக்குப்பிடிக்கும்.  மப்பாஸன், தாமஸ்மான் போன்றவர்களை குறிப்பாக ஸோலாவை எனக்கு நிறையப்பிடிக்கும். ரேஸ் அன்ட் கிளாஸை நாங்கள் தொடங்கும்போது சொன்னோம். சிந்திப்பது என்பது சிந்திப்பதன் பொருட்டல்ல- நடவடிக்கையின் பொருட்டு சிந்திப்பது என்று- இதுதான் என் படிப்பு முறையும் கூட-பிற்பாடு நான் சம கால எழுத்தாளர்களை இந்நோக்கில்தான் படித்தேன்.

 

*ஆங்கிலத்தில் இலங்கைப்பிரச்சின சம்பந்தமாக மூன்று நாவல்கள் எழுதப்பட்டிருக்கிறது. உங்களுடைய வென் மெமரி டைஸ். மைக்கேல் ஒன்டாஜியின் அனில்ஸ்ட் கோஸ்ட் மற்றது ஸியாம் செல்வதுரையின் பன்னி பாய்.

 

மைக்கேல் ஒன்டாஜி அந்த நாவலுக்கு ஆய்வு செய்ததாகச் சொல்கிறார், சுமார் 50 அறிஞர்களைச் சந்தித்திருக்கிறார். ஆனால் இந்த நாவல் ஆதாரத்தினளவில் சமநிலை கொண்டதல்ல. பன்னி பாய் அதிகம் இனப்பிரச்சினை பற்றியது என்பதைவிடவும் கொழும்பில் வாழ்ந்த ஒரு தமிழ் சமப்பாலுறவு இளைஞனின் அனுபவம் தொடர்பானது எனலாம். இந்த வகையில் இலங்கைத் தமிழர்களுக்கு நேர்ந்த மானுட சோகத்தை அதிகமாக உங்கள் நாவல்தான் வெளிக்கொண்டுவந்திருக்கிறது. அதாவது தமிழர், சிங்களவர் என இருபகுதி அப்பாவி மக்களின் மீதான வன்முறையை , துயரத்தை உங்கள் நாவல்தான் முன் வைத்திருக்கிறது.

 

இதல்லாமல் ரொமேஷ் குணசேகரா தனது ரீப் நாவலில் சில வரிகளிலும் பொத்திக் ( மங்க் பிஸ் எனும் ஆங்கிலத் தொகுப்புக் கதை) எனும் சிறுகதையொன்றிலும் இலங்கைப் பிரச்சினையைச் தொட்டுச் செல்கிறார்.

 

இவ்வகையில் ஆங்கிலத்திலான இனப்பிரச்சனை குறித்த இலங்கை எழுத்துக்கள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? நாவலின் இரண்டாம் பாகத்தில் ராஜன் இங்கிலாந்து வந்துவிடுகிறான். அவனுக்கென்ற இங்கே அனுபவங்கள் இருக்கிறது. இதனுடைய தொடரச்சியாக ராஜனின் கதையை எழுதுகிற எண்ணம் உண்டா?

 

அனில்ஸ் கோஸ்ட் நாவல் இலங்கை இனப்பிரச்சனையைச் சொல்கிறதென நான் நினைக்கவில்லை. இது அதிகமாக ஜேவிபி இளைஞர்களின் எழுச்சியையும் அரசு இயந்திரத்தின் ஒடுக்குமுறை பற்றியதும் ஆகும்.ஸியாம் செல்வதுரையின் நாவல் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெருநகரக்கலாச்சாரத்தினிடையில் இரு வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்களுக்கிடையிலான பிரச்சிகைளைச் சித்தரித்தது என்பது முக்கியமானதானாலும்கூட, அது அரசியல் ரீதியிலான பரிமாணம் கொண்டதல்ல என்பதுதான் எனது அபிப்பிராயம்.

 

ஆனால் இலங்கை நாவல்களில் வாசகர்கள் எதிர்பார்க்கும் விஷயம்  யாதெனில் இந்த நாவல்கள் இலங்கை இனப்பிரச்சினையின் விவரங்கள்,  பரிமாணங்கள் எதையேனும் கொண்டிருக்கிறதா என்பதுதான்.

 

நான் மேற்கத்திய வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்காக நாவல் எழுதுவதில்லை. நான் எனக்காகவும் எனது மக்களுக்காகவும்தான் எழுதுகிறேன். மக்கள் என்று சொல்கிறபோது நம் காலத்தில் வாழும் மக்கள் எனும் அர்த்தத்தில் சொல்கிறென். புத்த பிக்குகள் பாசிஸ்ட்டுகளாயிருக்கிறார்கள். போர்ப்பிரகடனம் செய்கிறார்கள். எவ்வாறு இது சாத்தியமானது? உலகின் மிக வன்முறையான மதமாக அது ஆகியிருக்கிறது. ஆனால் மேற்கில் அது அகிம்சையைப் போதிப்பதாக மட்டுமே உணரப்படுகிறது. இதையே பெரும்பாலுமான எழுத்தாளர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கிறார்கள். அதன் மறுபக்க யதார்த்தத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இவ்வகையில புத்த மதம்பால் பாராட்டுணர்வு கொண்ட அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் நான் எழுதவில்லை. நமது மக்களுக்கு நான் எழுதுகிறேன்.

 

நீங்கள் ஒரு அற்புதமான அரசியல் பகுப்பாய்வாளர் என்று இங்கிலாந்துப் பதிப்பாளர்கள் என்னைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் ஒரு அற்புதமான நாவலை வைத்திருக்கிறேன் என்று சொன்னேன். இருபத்தியேழு பிரதான பதிப்பாளர்கள் எல்லோரும் என்னை அறிவார்கள், எனது நாவலில் அதிகம் அரசியல் என்றார்கள். ஆர்க்காடிய பதிப்பாளர் ஒரு சமப்பாலுறவாளர். அவர் அதிகமும் சமப்பாலுறவு எழுத்துக்களைத்தான் பதிப்பிப்பவர். ஆயினும் அவர் இடதுசாரியானதால் எனது நாவலை விருப்பமுடன் வெளியிட்டார். யுரொ ஏஷிய காமென்வெல்த் பரிசை பிற்பாடு எனது நாவல் பெற்றது. இது வரையிலும் மூன்று பதிப்புகள் வந்துவிட்டன. இப்போது இந்தியப் பதிப்பும் வந்திருக்கிறது. பெரும்பாலுமான எழுத்தாளர்கள் ஐரோப்பிய சந்தைக்காக எழுதுகிறார்கள். நான் அப்படி எழுதமாட்டேன்.

 

நார்வேஜியர்கள் எனது  நாவலை மொழிபெயர்ப்பதற்காகக் கேட்டு எழுதியிருக்கிறார்கள். இந்தோனேசிய நாவலாசிரியர் பிரமோதயாவின் நண்பரும் கவியுமான ஒருவர் மலேசிய மொழியில் மொழிபெயர்க்க அனுமதி பெற்றிருக்கிறார்.இன்னொரு நாவலுக்கு இன்னும் சில காலங்கள் பொறுக்கவேண்டும். என்னைப்பற்றி இப்போதுதான் எ வோர்ல்ட் டு வின் என்கிற தொகுப்பொன்று வந்திருக்கிறது. நான் இப்போதுதான் ஆறுமாதம் மருத்துவ மனையிலிருந்து  வந்திருக்கிறேன்.

 

ஆனாலும் ஒரு நீண்ட சித்திரம் எழுதிக் கெர்ணடிருக்கிறேன். ஸல்மான் ருஸ்டியும் இந்த நாட்டின் முஸ்லீம் மக்களின் வாழ்வும் தொடர்பானது அந்தப்புத்தகம். சீக்கிரமே அதை முடித்து விடுவேன். அதையடுத்து ஏன் மதம் மிக முக்கியமானது என்பது குறித்து ஒரு நூல் எழுத இருக்கிறேன்.மார்க்ஸ் சொன்னார் : மதம் என்பது உனது கடந்த காலத்தின் வெட்கம். அது ஒரு எதிர்வினை. மதம் மக்கள் வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

 

*விஷேமான இன்னொரு அம்சம், உங்களுடைய நாவல் . ஐரோப்பாவில் வெளியிடப்பட்டிருக்கிறது காலனியம் பற்றியும் சுதந்திரப் போராட்டம் பற்றியும் பேசுகிறது. ஆனால் ஒரே ஒரு ஐரொப்பியப் பாத்திரம் கூட நாவலில் இல்லை. ஐரோப்பியர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக இப்போது இந்தியர்களும் இலங்கையர்களும் எழுதும் நாவல்களில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதை முழுக்க நமது நாடுகளில் நடந்தாலும் கூட ஆங்கிலப் பாத்திரங்கள், அமெரிக்கர்கள் வருவார்கள். உதாரணமாக பங்கஜ் மிஸ்ராவின்ரொமான்ஸ்நாவலில் வரும் அனைத்து முக்கியமான பெண் பாத்திரங்களுமே வெள்ளையர்கள்தான்.

 

நீங்கள் தான் இந்த அம்சத்தைக் குறிப்பிட்ட ஒரே ஒருத்தர். எனக்கு ரொம்பவும் சந்தோஷம். நான் எனது மக்களைப்பற்றி எனது மக்களுக்கும் எனது மக்கள்பால் அக்கறையுள்ள உலக மக்களுக்கும தான் இந்நாவலை எழுதியிருக்கிறேன். அதனால்தான் நாவலில் முழுக்க எனது மக்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

 

*கார்ஸியா மார்க்வெசின் நாவல் உலக அளவில் பேசப்பட்டபின் ,பெரும்பாலான எழுத்தாளர்கள் மாஜிக்கல் ரியாலிச பாணியில் எழுதுவது அல்லது பின்நவீனத்தவ பாணியில் எழுதுவது என்று அதன் மீது மோகம் கொண்ட இவ்வேளையில் ஏன் யதார்த்தவாத வகையை உங்கள் நாவல்  தேர்ந்து கொண்டது?

 

ஏனெனில் நான் பின்நவீனத்துவத்தை வெறுக்கிறேன். எனது எழுத்துக்களில் நான் பின்நவீனத்துவத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறேன். எனது கடந்த கால எழுத்துக்களை நீங்கள் பார்த்தீர்களேயானால்- மார்க்சிசம் டுடே ஆட்கள் முன்வைத்த நியூடைம்ஸ் எனும் அவர்களது அறிக்கையை மறுத்தேன். ஹோக்கம் ஆப் நியூ டைம்ஸ் என்பது அக்கட்டுரை. கலாச்சார அரசியல் அடையாள அரசியல் போன்ற இவையெல்லாம் பின்நவீனத்துவத்தோடு சேர்ந்து அணிவகுத்து வரும். எல்லாம் பிளவுன்டு கிடக்கிறது. எல்லாம் அலைகிறது என்பார்கள். மார்க்சிலிருந்து மேற்கோள்களை எடுத்துக்கொண்டு அதற்கு நேர்மாறாக நடப்பார்கள். உலகம் மாறியிருக்கிறது உண்மைதான். பல்வேறு பழைய வரையறைகள் போதாது என்பது உண்மைதான். பழைய தொழிலாளிவர்க்கம் இல்லை என்பது உண்மைதான். இனப்பிரச்சினை பாலியல் பிரச்சினை இருக்கிறது உண்மைதான்.

 

என்ன மசிர் பேசுகிறீர்கள்? என்ன மேஜிக் ரியாலிஸம்? என்ன இந்த மேஜிகல் ரியாலிச வியாபாரம்?  இலத்தீனமெரிக்காவில் என்ன மேஜிக் வாழ்கிறது? அங்கிருக்கிற வறுமை மேஜிக்கா?  சித்திரவதையும் வன்பாலுறவும் மேஜிக்கா? அடிப்படைவாதம் குறித்து மேஜிக் என்ன சொல்கிறது? யூத-இந்து-இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி?   பிஜேபி பற்றி? இவற்றில் என்ன மேஜிக் வாழ்கிறது? நமது யதார்த்தம் நம்மை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. மார்க்ஸ் சொன்னார் : மாற்றுவதற்காக வேண்டி நிஜத்தைப் பற்றிப் பிடியுங்கள். பின் நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள் : வியாக்யானத்தை மாற்றுவதற்காக நிஜத்தைப் பற்றிப் பிடியுங்கள்.   வியாக்கியானத்தை மட்டும்தான் அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள்.  நான் நிஜத்தில் மாற்றத்தை விரும்புகிறேன். எனது வாழ்க்கை முழுக்க நான் இனங்களுக்கிடையிலான நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். இன அநீதியோ அல்லது சமூக அநீதியோ எதுவாயினும் அதை எதிர்த்துத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். பின் நவீனத்துவமோ அல்லது மேஜிகல் ரியாலிசமோ இவைகளை வளர்த்துச் செல்லப்போதில்லை.

 

நீங்கள், துல்லியமானதற்கும் கற்பனைக்கும் இடையில் தேர்ந்து அதிலுள்ள  துயரத்தை வெளிக் கொணர வேண்டும். சித்திரவதையை, வலியை, துன்பத்தை, அதனோடு வாழ்வின் அற்புதத்தை நீங்கள் வெளிக்கொணர வேண்டும். ஆமாம், உண்மைதான், நீங்கள் காலத்தையும் இடத்தையும் கலங்கச் செய்யத்தான் வேண்டும். இந்த அரத்தத்தில்தான் எனது நாவலை பல இடங்களில் நான் கலங்கலாக வைத்திருக்கிறேன். 

 

ஸல்மான் ருஸ்டி மற்றும் மேஜிக் ரியாலிஸ்ட் நாவலாசிரியர்களில் எனக்கிருக்கும் பிரச்சினை என்னவெனில் அவர்கள் எவரும் மக்கனை நேசிப்பதில்லை. தங்களது பிரதியைக் காதலிக்கிறார்கள். சம்பவங்களை எழுதுவதில்லை. ஸர்ரியலை எழுதுகிறார்கள். காலத்திலும், இடத்திலும் நடக்கிற கொடுமைகளையும் நெருக்கடிகளையும் காலமழித்து இடமழித்துச் செய்வதன் மூலம் இந்த எழுத்தாளர்கள் எதைக் கண்டுபிடிக்கிறார்கள்? நிகழ்வுகளில் உண்மையைத் தேடு என்றார் மாவோ. அந்த உண்மை காலத்திலும் இடத்திலும் தீர்மானிக்கப்பட்டதாயிருக்க வேண்டும்.

 

௦௦௦௦

அ. சிவானந்தன் அவர்களின்  நினைவாக, இந்த  நேர்காணல் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment