Home » இதழ் 21 » * நினைவுகள் மரணிக்கும் போது…..(அ.சிவானந்தனின் ஆங்கில நாவலை முன்வைத்து…) – யமுனா ராஜேந்திரன்

 

* நினைவுகள் மரணிக்கும் போது…..(அ.சிவானந்தனின் ஆங்கில நாவலை முன்வைத்து…) – யமுனா ராஜேந்திரன்

 

 

When Memory  Dies – இந்நாவல் இலங்கைத் தீவு முழுக்கவுமான மனிதர்கள் பற்றியது. இந்தத் தீவு மனிதர்களின் கடந்த கால வரலாறு இவர்களிடமிருந்து பல்வேறு அன்னியர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. வரலாற்றை மறுவாசிப்பு செய்யப் புறப்பட்ட இவர்கள் – பல வரலாறுகள் ,பல்கலாச்சார நினைவுகள் பரவிய ஒரு வெளியை – மதம் இனம் மொழி சார்ந்த பொய்யான நினைவுகளைக் கட்டமைக்க முற்பட்டார்கள். நேசமும் பாசமுமாய் இருந்த நினைவுகள் மரணித்தன. அகழ்வாய்விலும் மானுடவியலிலும் கல்விச் சாலைகளிலும் விஷம் விதைக்கப்பட்டது. அடர்ந்த வனங்களும் அருவிகளும் அழகும் நிறைந்த இந்த நாடு பிணக்காடாக ஆகியது. இந்நாவல் இந்த மனிதர்கள் குறித்த கதை. மூன்று தலைமுறை மனிதர்கள் குறித்த நூற்றாண்டு காலம் குறித்த தியானத்தின் விளைவு.

 

நாவல் அதனது அரசியல், அறவியல் செய்திக்காக மட்டுமல்ல அதனது அடிப்படையான மனிதனது கலாச்சார,  நாகரிக உறவுகள் தொடர்பான சித்தரிப்புக்காகவும் முக்கியமான நாவலாகும். பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மனிதனுக்காக அவனது மொழியில்; அவனது வாழ்வின் அர்த்தங்களும் அனர்த்தங்களும் அழகும் இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. தால்ஸ்த்தோயின் முழவாழ்வு தழுவிய நாவல் கட்டமைப்பின் வழியும் தரிசன நோக்கிலும் இந்நாவல் விரிகிறது. போரும் வாழ்வும் சாவும் பிரிவும் உறவும் காமமும் அன்பும் என முழு மானுட வாழ்வு தழுவியதான இலங்கைத் தீவு மனிதர்களின் மூன்று தலைமுறையினரின் நூற்றாண்டு காலத் தியானமாக இந்நாவல் விரிகிறது. இந்நாவலில் வரலாற்றுத் தவிர்ப்புக்கள் இல்லை. பின் நவீனத்துவ மந்திர உச்சாடனங்கள் இல்லை. பிசாசுகளும் மொழித்திரிபுகளும் நடமாடுவதில்லை. வாழ்வின் செய்தி போலவே நாவல் நேரடியாகப் பேசுகிறது.

 

இந்நாவல் மிகச் சாதாரணமான மனிதர்கள் பற்றிய மிக எளிமையான யதார்த்தமான ஆழமான அர்த்தங்களை உள்வாங்கிய நாவல். கதையின் போக்கில் நூற்றுக் கணக்காக மனிதர்கள் வந்து போகிறார்கள். நொடிப்பொழுதே வந்து போகிற எல்லா மனிதர்களுக்கும் இந்நாவலில் அடையாளமும் முகமும் தரப்பட்டிருக்கிறது. சிங்கள இடதுசாரியான டாக்டர் லாலைக் கொல்ல வருகிற மகளை இழந்த சிங்கள மனிதனுக்கு முகம் தரப்பட்டிருக்கிறது. பஸ் கட்டண உயர்வினால் தன்னால் கட்டணம் கொடுத்து அடுத்த இடத்தில் சென்று வெங்காயம் விற்க முடியாது என்று சொல்கிற வயோதிகத் தாய்க்கும் முகம் தரப்பட்டிருக்கிறது. மனிதர்கள் மீது அடிப்படையான அன்பும் வரலாற்றின் மீதான தீராத தேடலும் கொண்ட மனிதருக்கே இந்தத் தரிசனம் சாத்தியம்.

 

நாவல் குறித்த அவதானங்கள் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவை. சமகால உலகின் உள்நாட்டு யுத்தங்கள் இன மொழி மத அடிப்படையிலான யுத்தச் சாவுகளின் பின்னணியில் நாவல் பார்க்கப்படுகிறது. அவ்வகையில் – வியட்நாமின் – பாசிச காலத்தின் – பாஸ்க் பிரதேசத்தின் – யுகோஸ்லேவியாவின் – இந்தோனேஷியாவின் நாவல்களுடன் இந்நாவல் ஒப்பு நோக்கப்படுகிறது. அதிகரித்துவரும் பின்காலனித்தவ ஆசிய இலக்கியம் எனும் விமர்சனப் பின்னணியிலும் இந்நாவல் பார்க்கப்படுகிறது. ஸல்மான ருஸ்டியின் மிட் நைட் சில்ட்ரன்,; கோஹெட்சியின் டிஸ்கிரேஸ் போன்ற நாவல்களுடன் ஒப்பு நோக்கிப் பேசப்படுகிறது.1958 க்குப் பின்னான தமிழர் , சிங்களவர் வாழ்வில் பரஸ்பர அன்பு கொண்ட மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியமின்மை பற்றிய வடக்கு சார்ந்த தமிழ்ப் பார்வையும் முன் வைக்கப்படுகிறது. நாவலின் விவரணக்கட்டமைப்பு பற்றிய பிரச்சினைக்கும் பிரச்சினையில் ஆசிரியரின் நேரடி அனுபவம் சார்ந்த அறிவுக்கும் இடையில் உறவுபடுத்தப்பட்டு நாவலின் பலவீனமான கண்ணிகள் ஆய்வு செய்யப்படுகிறது. அமெரிக்க நாவலாசிரியரான டான் டில்லில்லாவின் இரண்டாம் மாவோ, ஒன்டாஜியின் அனில்ஸ் கோஸ்ட் போன்றவைகளை முன் வைத்து நாவலின் பயங்கரவாதம் ,வன்முறை குறித்த ஆய்வும் புரிதலும் விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறது.

 

நாவலில் நான் அனுபவம் கொண்ட மிக முக்கியமான ஒரு பிரச்சினை எமது கிழக்கத்திய மனிதர்களின் வாழ்வையும் அதில் பொதிந்திருக்கம் இயல்பான அன்பையும் உறவுகளில் உறைந்திருக்கும் அழகையும், நிலவும் ஐரோப்பியக் கலாச்சாரப் பரவலின் பின்னணியில் மிகவும் உள்ளார்ந்த பிரமிப்புடன் வாஞ்சையுடன் இந்நாவல் எமது மனிதர்களுக்குள் மீளப்பார்த்துச் சொல்கிறது எனும் பிரச்சினைதான். மேற்கத்தியர்களிடம் வரலாறும் அதனது படிப்பினைகளும் இருக்கிறது. ஆயின் அவர்களது வாழ்வில் அழகு இல்லை. எமக்கு வரலாறும் அதனது படிப்பினைகளும் இல்லை – வரலாறு திருடப்பட்டது – திசை மாற்றப்பட்டது – இப்போது மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு சின்னாபின்னப் படுத்தப்படுகிறது. ஆனால் எமது வாழ்வில் அன்பும் அது தரும் அழகும் விரவிக் கிடந்தது. இன்று வரலாற்றைத் தேடும் போக்கில் எமது அன்பும் அழகும் நிறைந்த நினைவுகளைத் தொலைத்து விட்டு நிற்கிறோம். இது எமது ஆதாரமான பண்பாட்டின் மரணம் என்பதை நாவல் வலியுறுத்திச் சொல்கிறது.

 

நாவல் மூன்று பகுதிகளால் ஆனது. 1. மறக்கப்பட்ட காலை. 2. எனது வேர்கள் ஆயின் மழை இல்லை. 3. பிறழ்ந்த நினைவுகள். ‘மறக்கப்பட்ட காலைப் பகுதி சண்டிலிப்பாயிலிருந்து கொழும்பு நோக்கி வரும் வடக்கிலங்கை விவசாயி பாண்டியனின் மகனான ஆங்கிலக் கல்வி கற்ற சகாதேவனின் கதை. ‘எனது வேர்கள் ஆயின் மழை இல்லை’ பகுதி மத்திய இலங்கையில் சிங்கள மக்களுடன் வாழ நேர்ந்த ராஜன் என்கிற ராஜநாதனின் கதை. ‘பிறழ்ந்த நினைவுகள்‘ பகுதி சிங்களத் தாய்க்கும் தமிழ் வளர்ப்புத் தந்தைக்கும் இடையில் வாழ்க்கையை அன்பைக் கற்க நேர்ந்த விஜய்யின் கதை.

 

முதல் பகுதிக் கதையில் , வட இலங்கையின் சண்டிலிப்பாய் கிராமத்தைச் சேர்ந்த நன்றாகப் படிக்க கூடிய பையனான சகாதேவன்,  அவனது பத்தொன்பதாவது வயதில் தபால் திணைக்களத்தில் வேலைக்குச் சேர்கிறான். பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் ஏற்பாட்டின்படி ஒரு தமிழ்ப் பெண்ணை மணந்து கொள்கிறான். அவனது நண்பன் திஸ்ஸாவுடனான நட்பில் தொழிற்சங்கவாதி எஸ்டபிள்யூவுடனும் அவனது வயோதிக மனைவியான பிரேமாவுடனும் அவர்கள் வீட்டில் தங்குகிறான். அதன் போக்கில் சிங்கள தேசியவாத சமரசவாத இடதுசாரிகளைக் கண்டு கொள்கிறான். திஸ்ஸாவின் காதலியான முஸ்லீம் பெண் ஸோனாவின் சகோதரன் சுல்தான் ,போலி தொழிற்சங்க வாதியானவனின் துரோகத்ததினால் கொல்லப்படுகிறான்.

 

இரண்டாம் பகுதிக்கதை சகாதேவனின் மகன் ராஜனுடையது. தனது தந்தையைப் போலவே ஆங்கிலக் கல்வி பெறும் ராஜன் , கல்லூரி வாழ்க்கையில் சிங்கள நண்பன் லாலையும் அவனது சகோதரி லலியையும் சந்திக்கிறான். லலியின் மீத காதல் கொள்கிறான். லலியின் முன்னை நாள் காதலன் சிங்கள நடவடிக்கையாளன் ஸேனா , ஹர்த்தாலின் போது நடந்த கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட – ஸேனா மூலம் கர்ப்பிணியாண லலியை அவள் மீது காதல் கொண்ட ராஜன் மணந்து கொள்கிறான். லலிக்குப் பிறக்கும் குழந்தை விஜய்க்கும் தகப்பனாகிறான். 1958 இனக் கலவரத்தில் தமிழ்ப் பெண்ணெனக் கருதி சிங்களக் காடையர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி லலி மரணமடைந்த பின்னால், ராஜன் தனது மகனை ஸேனாவின் தாய் தந்தையர்களிடமும் – நண்பனும் விஜய்யின் மாமாவுமான லாலினதும் பொறுப்பில் விட்டுவிட்டு , இங்கிலாந்து சென்று விடுகிறான்.

 

மூன்றாம் பாகம்-  விஜய்யின் கதை. கல்லூரியில் படிக்கும் காலத்தில் பத்மா எனும் சிங்களப் பெண்ணுடன் காதல் கொள்ளும் விஜய் தொடர்ந்து ஜேவிபி இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான். மலையகத் தமிழர்களையும் இலங்கைத் தமிழர்களையும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் பகுதியாகக் காணும் அவ்வியத்தின் ஐந்தாவது கருதுகோள் – பிப்த் தீஸிஸில் – பொதிந்திருக்கும் இனவாதத்தை நினைவு கூர்கிறான் விஜய். பத்மா இலங்கை அரசாங்கத்தின் நரவேட்டையில் மரணமடைகிறாள். ஜேவிபி இயக்கம் அழித்தொழிக்கப்படுகிறது. இடையில் மலையகத் தமிழ்ப் பெண்ணாண மீனாவைக் கண்டு காதல் வயப்படுகிறான் விஜய். மலையகத் தமிழர்களின் மீதான தாக்குதலில் பெண்கள் பாலியல் பலாத்காரப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மலையகத்திருந்து சென்றுவிடும் மீனாவைக் காணமுடியாது போக, அங்கு கல்வி கற்பிக்கிறான். அங்கு சிங்களப் பெண் மொனலை யதேச்சையாகச் சந்தித்து மணந்து கொள்கிறான். இனவாதம் ஆசிரியையான மொனலை முழுக்கவும் பீடித்திருக்கிறது. எண்பத்து மூன்று கலவரத்தைத் தொடர்ந்து அவர்களுக்கிடையில் நடந்தே தீர வேண்டிய பிரிவு நடந்தேறுகிறது. கொலையிலிருந்து தப்பும் மீனாவுடன் யாழ்ப்பாணம் செல்லும் விஜய் தனது உறவினனும் இயக்கத் தலைவனுமான ரவியின் மூலம் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

 

ஒரு வகையில் அதி உயர் அரசியல் பிரக்ஞை நோக்கியதாகவும் இந்நாவல் அமைகிறது. வடக்கிலங்கையின் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த சகாதேவன். நகர வாழ்க்கைக்கும் அதனின்று பெருநகர் வாழக்கைக்கும் நகர்வதை முதல் பகுதி சொல்லும்போது,  காலனியப் பிரக்ஞையை உடைத்துக் கொள்ளும் சிங்கள சுதேசி உணர்வின் வளர்ச்சியையும் இணைந்தபடி சொல்லிச் செல்கிறது. அரசியல் ரீதியில் தாராளவாதக் கண்ணோட்டம் கொண்ட மரபாளரான சகாதேவனின் மகன் ராஜநாதன் ,பெருநகர்க் கலாச்சார அரசியல் வாழ்வினூடேயும் காலனிய எதிர்ப்பு சர்வதேசிய மூலதனச் சார்பு வளர்ச்சியினுடேயும் இடதுசாரி அரசியல் சார்பு பெறுவதனை இரண்டாம் பகுதி சித்திரிக்கிறது. கடந்த நூறாண்டு கால வளர்ச்சியாக எழுந்திருந்த காலனிய எதிர்ப்பு , சிங்கள தேசிய உணர்வு நிறத்தையும் மொழியையும் இனத்தையும் அடிப்படை கொண்ட அரசியலாகி மேல் மத்திய தரவர்க்க சிங்கள இடதுசாரிகளையும் அதிதீவிர இளைஞர்களையும் தனக்குள் இழுத்துக் கொள்வதை மூன்றாம் பகுதியில் விஜயினுடைய வாழ்க்கை சொல்கிறது.

 

விஜய் நம் காலத்தின் விமர்சன பூர்வமான அதி உயர் பிரக்ஞை பெற்ற சோசலிஸ்ட்டாக இருக்கிறான். நிஜத்தில் லங்கா சம சமாஜக் கட்சியில் வெறுப்புறும் லால் – அவனது சகோதரியும் ராஜனின் மனைவியுமான லலி – லலியின் மகனும் சிங்கள தமிழ் மனிதனுமான விஜய் – மரணமெய்திய ஸேனா மூலம் கற்பமடைந்த லலியை மணந்து கொள்ளும் ராஜன் – இவர்களது அரசியல் ஆன்மீக வாழ்வாகத்தான் நாவல் விரிகிறது. விஜய்யின் பாத்திரம்தான் நாவலின் உயிர்நாடியான கருத்தியல் பிரதிமையாக நமது இறுதி நினைவுகளில் உறைகிறது. விஜய் ஒரே சமயத்தில் சிங்களவனாகவும் தமிழனாகவும் இருக்கிறான். அதே வேளை இரண்டு தரப்பாரும் இன விஷம் ஏறிய நிலையில் மறுக்கப்படவும் சந்தேகிக்கப்படவும் ஆன உயர் அன்பு நிறைந்த உயிர்ஜீவியாக இருக்கிறான். கடந்தகால நினைவுகளின் அற்புதமான இலட்சிய வடிவமாகத்தான் அவன் நாவலில் பரிமாணம் பெறுகிறான். அவனது வேர்கள் இலங்கைத் தீவு முழுக்கத் தழுவி அழுத்தமாக இருக்கிறது. ஆனால் இன்று அவனுக்கு வேர்கள் இல்லை. இந்தச் சோகம் தான் நாவலின் ஜீவனாக இருக்கிறது.

 

இரண்டு தரப்பிலும் வெறுப்பும் வேதனையும் கசப்பும் வெஞ்சினமும் வளர்ந்து விட்ட இன்றைய சூழலில் ,விஜய்யின் பாத்திரம் நடைமுறை மனிதனாக ஓப்புக் கொள்ளப்படுவதில் இரண்டு பக்கமுமே சாத்தியமில்லைதான். ஆனால் மனிதன் கடந்த காலத்துடனும் நினைவுகளுடனும்தான் வாழ்கிறான். நிகழ்காலம் விஷமானது வரலாற்றின் சோகம். இந்தக் கோடையும் வெப்பமும் மரணமும் எதிர்காலத்தில் மறக்கப்பட்டு விடலாம். ஆனால் அப்போதும் கடந்த கால நினைவுகளும் காதலும் அன்பும் வாழும். ஏனெனில் மனிதன் காதலில் திளைக்கவும் அன்பு செய்யவும் அடுத்தவரை நேசிக்கவும் பிறந்தவன். இந்தத் தரிசனம் சிலருக்கே வாய்க்கிறது. கலைஞன் இதைக் கலா தரிசனம் என்கிறான். தத்துவாதி இதைக் கால தரிசனம் என்கிறான். மார்க்ஸ் போன்ற நடைமுறை மனிதர்கள் இதை இயங்கியல் என்கிறார்கள்.

 

சில மனிதர்கள் நிலவிய எக்காலத்தையும் மீறி இந்தத் தரிசனம் பெறுகிறார்கள். அதனால்தான் யாழ்ப்பாணத்தில் ஒரு அபத்தமான சூழலில் இயக்கத் தலைவரான கமாண்டர் ரவி,  சிங்களவனும் தமிழனும் முறைசாராமல் ஜனித்தவனும் ஆன விஜய்யைச் சுட்டுக் கொன்ற பின்னால் , மலையகத் தமிழ்ப் பெண்ணாண மீனாவுக்குக் கண்ணீர் விட முடிவதில்லை. அவள் பெருமிதத்துடன் தீர்க்கதரிசனமாகச் சொல்கிறாள் : இந்த மண்ணில் இருந்த ஒரே நாகரீகமான ஜீவியையும் கொன்று விட்டீர்கள். இனி என்றுமே நாம் ஒரே முழுமையாக இருப்பதென்பது சாத்தியமேயில்லை.

 

நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் கடைசியில் எண்பதுகளின் இறுதியில் முடிகிறது. நானூற்றுப் பதினோரு பக்கங்கள் கொண்ட இந்நாவல் இரண்டு தளங்களில் சமாந்தரமாக இயங்குகிறது.

1.இந்த நூற்றாண்டு கால சமூக வளர்ச்சி என்பது எவ்வாறாக இத் தீவில் வாழும் மக்களின் உறவுகளில் பாதிப்புச் செலுத்தியிருக்கிறது என்பதை நாவல் சொல்கிறது. சிங்கள தமிழ் முஸ்லீம் கிறித்தவ மலையக மக்களுக்கடையிலான உறவுகள் எவ்வாறு வளர்ந்து தேய்ந்து விஷம் பாரித்துப் போனது என்பதைச் சொல்கிறது.

2.பல்வேறு காலனியங்கள் எவ்வாறாக வடக்குத் தமிழர்களை காலனிய அமைப்பின் எழுத்தர்களாகவும் தென்னிலங்கைச் சிங்களவர்களை பியூன்களாகவும் ஆக்கியது என்பதை நாவல் சொல்கிறது. பயிர் வளராத குழந்தைகள் மட்டுமே வளரும் வரண்ட வடக்குப் பூமித் தமிழர்களுக்கு எவ்வாறாக கல்வி ஒரு மூலதனமாகவும் தமது சகோதரியருக்கான சீதனத்துக்கான வருவாயாகவும் வாழ் முறையாகவும் ஆனது என்பதை நாவல் சொல்கிறது. காலனிய எதிர்ப்புத் தேசியவாதம் எவ்வாறாக தமிழர் எதிர்ப்புத் தேசியமாகவும் சிங்கள மொழி மத இனத் தேசியமாகவும் வளர்ச்சியுற்றது என்பதை நாவல் சொல்கிறது. அதி உயர் வர்க்கத்தவர்களின் வர்க்கநலன் சோலிசம் எவ்வாறாக வர்க்க சமரசமாகி இனவாத அரசியலில் கரைந்தது என்பதை நாவல் சொல்கிறது.

 

சோசலிசம் இறுதி இலக்கு அல்ல, அதுவே பாதையும் இலக்குமாகும். அதிகாரத்திற்குப் பின் சோசலிசம் என்பது இல்லை. அதிகாரத்தின் நிலைநாட்டம் பயங்கரத்தின் தொடக்கம் என்று நாவல் சொல்கிறது. இதுவரையான தீவின் இடதுசாரிவாதமும் சோசலிசச் சிந்தனையும் சித்தாந்தத்திலிருந்து பிறந்ததாக இருக்க , வடகிழக்குத் தமிழ் இளைஞர்களின் அரசியல் எவ்வாறாகச் சித்தாந்தம் தவிர்ந்த நடைமுறையிலும் , துப்பாக்கி அதிகாரத்திலும் நம்பிக்கை கொண்டு இறுகியது என்பதையும் நாவல் சொல்கிறது. சோசலிசம் என்கிற இலட்சியவாதம் மரணித்துப் போனது. இயக்கத் தலைவரான யோகிக்கு சமநிலைச் சமூகம் என்பது தற்போது இரண்டாம் பட்சம். அதிகார நிறுவனங்களே தற்போது தேவை. முதலில் மக்கள் இருந்தார்கள். அவர்களின் கௌரவம் காப்பாற்றப்பட்டபோது அவர்கள் போராளிகளோடு நின்றார்கள். மக்கள் நலனில் யார் அதிகாரம் செலுத்துவது என்பதில் மோதல்கள் நிகழ்ந்தபோது மக்கள் இரண்டாம் பட்சமாகி நிறுவனமும் அமைப்புக்களுமே முக்கியமாகின. மக்கள் அந்நியமாகினர். அவர்கள் பயம் கொள்ளவும் செய்தார்கள் என்கிறது நாவல்.

 

விஜய் ஈழம்தான் தீர்வு என்ற கருதுகிறான். சோசலிச ஈழத்தின் அமைப்புகள் பற்றியும் அவன் சிந்திக்கிறான். ஆனால் அதிகாரத்தின் பின் சோசலிசம் என்பதில் அவனுக்கு நம்பிக்கையில்லை. விடுதலையின் பாதையும் இலக்கும் சோசலிசத்தை நோக்கியதாயின் போராட்டத்தினது நிறுவன அமைப்பும் மக்களின் பாலான அணுகுமுறையும் கீழிருந்து பரிமாணம் பெறுவதாகவே மக்களின் பங்கெடுப்பிலிருந்து பரிமாணம் பெறுவதாகவே அமையும். இது பின் சோவியத் பின்புரட்சி சமூகங்கள் தந்த அனுபவம். இலங்கைத் தீவில் சே குவேராவை ஆதர்ஷமாகக் கொண்டு எழுந்த இளைஞர்களின் எழுச்சி இனவாதமாகப் பரிமாணம் பெற்றதிலிருந்து விஜய் பெற்ற அனுபவம் இது. அதி உயர்வர்க்க லங்கா சம சமாஜ மார்க்சிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகளானதினால் சோசலிசக் கோஷம் இனவாதத் தேசியமாகப் பரிமாணம் பெற்றதினால் கிடைத்த தரிசனம். நினைவுகள் தந்த வரலாற்றுப் பாடம் இதுதான். இந்த நினைவுகள் மரணிக்கும்போது மனிதர்கள் மரணிப்பர். மக்கள் மரணிப்பர் என்கிறது நாவல். இந்த நினைவுகள் வரலாற்றை மறுவாசிப்புச் செய்கையில் சின்னா பின்னமாகிய பிறழ்ந்த நினைவுகள் ஆகுமாயின்,  அது ஒரு மக்கள் கூட்டத்தின் கொலையாகத் தற்கொலையாக முடியும் என்கிறது நாவல்.

 

நாவலில் மரபும் மாற்றமும் பல்வேறு தலைமுறை சார்ந்த மனிதர்களிடம் எவ்வாறாக இயல்பாக அணுகுமுறை மாற்றங்களைக் கொண்ட வந்திருக்கிறது என்பது அழகாகப் பரிமாணம் பெறுகிறது. சகாதேவனும் அவரது மனைவியும்; லலி ராஜனின் கலப்பு மணத்தை ஒப்புக் கொள்ளும் நிகழ்வு – ராஜனின் பிற சகோதரிகளும் அவனது அன்னையின் உறவினர்களும் லாபமே குறிக்கோளாகின கொழும்புத் தமிழர்களாகும் சித்தரிப்பு – பெண்கள் பாத்திரச் சித்தரிப்பும் நெருக்கடியான காலங்களில் அவர்களது அழுத்தமான உளவியல் நிலைப்பாடுகளும் அதியற்புதமாகச் சித்தரிப்புப் பெறுகிறது.

 

தொழிற்சங்கவாதியான வயோதிபரின் மனைவியான பிரேமா – போராளியான ரவியின் தாயான லீலா – மரணமுற்ற ஜேவிபி போராளிப் பெண் பத்மா – சிங்கள மனித உரிமையாளர்கள் சரத் தமயந்தி – லாலின் தங்கையும் விஜய்யின் தாயும் ராஜனின் காதல் மனைவியுமான லலி – ராஜனின் தாயும் சகாதேவனின் மனைவியுமான பெண்மணி – விஜய்யின் காதலியும் மலையகக் கூலித் தொழிலாளியின் மகளுமான மீனா – நாவலில் கொஞ்ச காலமே வந்து போனாலும் அழுத்தமான நினைவுகளை விட்டுச் செல்லும் முஸ்லீம் பெண் சேனு -சமரசத் தொழிற்சங்கவாதி முனசிங்க – நம்மைக் கலவரப்படுத்தும் விஜய்யின் மனைவி மொனல் – பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி பிரசவத்தின் போது மரணமுறும் மலையகத் தமிழ்ப்பெண் – அகதிகளுக்கு உதவும் கத்தோலிக்க அன்னை – பாலுறவுச் சாகசம் புரியும் மிஸ் முனசிங்கே – ஞானியேயான பரா – காளை மாட்டு வண்டியோட்டி – முழு இலங்கை மனிதர்களிடமும் அன்னியமாகி நடமாடும் மனசாட்சி மிக்க மனிதர் மாமா ஞானம் – தொழிற்சங்கவாதி எஸ்டபிள்யூ – சகதேவனின் காதலி ராணி – என நூற்றுக் கணக்கான பாத்திரங்கள் நாவலில் நடமாடுகிறார்கள். இவர்களது குணச்சித்திரங்களெல்லாம் நாவலில் அற்புதமாக உருவாகியிருக்கிறது.

 

நாவலில் ஆண் பெண் உறவு, அவர்களது உடல் இருப்பு சார்ந்த சித்தரிப்புக்களும் முக்கியமாகப் பேசப்பட வேண்டுமென நினைக்கிறேன். லலியின் மார்பும் பிருஷ்டங்களும் தொடைகளும் உடனடியாக ராஜனுக்குக் கிளர்ச்சியூட்டுகிறது. ராணி உரலிடிக்கும் போது மேலேறி இறங்கும் முலைகள் சகாதேவனுக்குக் கிளர்ச்சியூட்டுகிறது. கிடைத்த சந்தர்ப்பத்தில் அவளது உதடுகளைக் கவ்வும் சகாதேவன் போலவே ராஜனும் மிஸ் முனசிங்காவை சமையலறையில் முத்தமிட்டுக் கட்டிப் பிடிக்கும் போது அவனுக்குக் கால்சட்டைப் புடைப்புக் கொள்கிறது. விஜியின் கைகள் நேரடியாகவே மொனலின் மார்புகளைப் பிடிக்கிறது. மீனா விஜய்யுடன் பாலுறவு கொள்வது பற்றி அலட்டிக் கொள்வதுமில்லை. சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்பதுதான் நடைமுறைப் பிரச்சினையாக இருக்கிறது. கிழக்கத்திய மற்றும் தமிழ் மனத்தின் பாலுறவு வேட்கையின் மைய இடங்களாக முலைகளும் பிருஷ்டமும் தொடைகளும் இருப்பதை மிக இயல்பாக நாவலின் பாலுறவுச் சித்தரிப்புகள் தெரிவிக்கிறது.

 

நிறையச் சாவுகள் அடுத்த நாள் சூரிய வெளிச்சத்தை எதிர்கொள்ளும் நிச்சயத்துடனும் இயல்புடனும் திடுக்கிடலுடனும் நிகழ்கிறது. தொழிற்சங்கவாதி எஸ்டபிள்யூவும் மாமா ஞானமும் தூக்கத்திலேயே மரணமுறுகிறார்கள். சிங்களக் காடையர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படும் மலையகத் தமிழ்ப் பெண்ணொருத்தி பிரசவத்தில் குழந்தையைக் பெற்றுவிட்டு இறக்கிறாள். தப்பிப் பிழைக்கும் குழந்தை வாளால் வெட்டுண்டு சாகிறது. லலி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி மரணமுறுகிறாள். ராஜனின் தாயின் மரணம் நிகழும் அதே தினத்தில் சிங்களத் தனிச்சட்டம் கொண்டு வரப்படுகிறது. தமிழ் மொழியும் தனது தாயும் ஒன்றாகக் கொல்லப்பட்டதாக அரற்றுகிறான் ராஜன். விஜய்யின் கண்ணெதிரில் பத்மா மரணமுறுகிறாள். சகாதேவனின் கண்ணெதிரில் முஸ்லீம் சிறுவன் சுல்தான் சுட்டுக் கொல்லப்படுகிறான். சிங்கள இடதுசாரி ஸேனா ஹர்த்தால் ஊர்வலத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறான். சகாதேவனின் சகோதரன் போராட்டச் சூழலில் மறக்கப்பட்ட மரணமாகிப் போகிறான். நாவல் முழுக்க சாவின் வாடை நமக்கு துக்கத்தை நெஞ்சில் ஏற்றியபடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

 

நாவலின் போக்கில் இரண்டு சம்பவங்களில் பாவிக்கப்படும் மொழிநடை சிவானந்தனின் உளவியல் சார்ந்த மொழிப்பிரயோகத்திற்குச் சான்றாகிறது.

பிரேமா எனும் வயோதிபத் தாயை இருளில் பார்க்கையில் – சில நாட்களில் அவள் மரணமடைந்து விடுகிறாள் – அந்த அன்பு முகம் ஏற்படுத்தும் விகாரமும் அழகும் பிரமிப்புடன் விவரிக்கப்படுகிறது :”சகாதேவன் அவளது வார்த்தைகளைப் பிடிக்க அவளை நோக்கித் திரும்பினான். அப்போதுதான் மேகத்திலிருந்து எழுந்த நிலவின் வெளிச்சம் அவள் மீது விழுந்தது. குட்டையான கொழுத்த அவளது முகம் எவ்வளவு விகாரமாகத் தோன்றியது என்பதை சகாதேவன் கவனிக்கத் தவறவில்லை. வடிவமற்றுக் கொழுத்திருந்தது அவளது உடல். அவளது புன்னகை, அதுதான் அவளது அத்தனை வித்தியாசங்களுக்கும் காரணம். அவளது புன்னகைதான் அவளது முகத்தை மாற்றுகிறது. அந்தக் கணத்தில் அதனை அழகாக்குகிறது. அவளது உப்பிய முகத்தையும் ஆறுதல் தரக்கூடியதாக மாற்றுகிறது.”

 

மலையகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்குத் தப்பிவரும் வழியில் ஒரு லொறி டிரைவரின் உதவியைப் பெற்ற வேளை அவனால் மீனா பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறாள். உயிர் வாழ்தலுக்கும் இயலாமைக்கும் இடையிலான ரணத்தை அவள் ஏற்று நிற்கிறாள். விஜய்யின் மனைவி மொனலின் இனவாதச் சொற்கள் இனி அவளோடு வாழமுடியாது எனும் நிலையை விஜய்க்கு உருவாக்குகிறது. முன்னொருபொழுது விஜய் மீனா இடையில் கனன்ற காதல் மறுபடி இப்போது கனிகிறது. இச்சூழலில் விஜய்யைப் பார்த்து மீனா சொல்கிறாள். யாழ்ப்பாணத்தில் நடேசனின் வீட்டின் பின்புறம் செடிகொடிகளின் மறைவில் மீனா விஜய் இடையில் நடக்கும் அந்தரங்கமான உரையாடல் அது :

ஆகவேதான் நான் உன்னை மொனலிடம் அனுப்பினேன். எனக்கு விருப்பமில்லை. அந்தக் கடவுளுக்குத் தெரியும் அதை நான் கொஞ்சமும் விரும்பவில்லை. எனக்கு நீ வேண்டும். எப்போதை விடவும் இப்போது நீ எனக்கு வேண்டும். எனக்கு எங்கே வலிக்கிறதோ அந்த இடத்தில் என்னைத் தொட நீ வேண்டும். எங்கே எனது வலிகளெல்லாம் குவிந்திருக்கிறதோ – கடந்த காலங்களின் வலிகள் அனைத்தும் – ஒரு மலையகக் கூலிக்காரக் பெண்ணாக ஒரு.. அந்த இடத்தில் என்னைத் தொட நீ வேண்டும். அந்த இடத்தில் என்னை முத்தமிட நீ வேண்டும். முன்னொருபோது நீ செய்தது போல.. நீ மட்டுமே என்னைச் சுகப்படுத்த முடியும்.

மனித உறவுகளில் கருத்தியலும் வரலாறும் நம்பிக்கைகளும் ஆண் பெண் உறவை எவ்வாறு குலைக்கவல்லன என்பதை நாவலின் ஒரு சம்பவம் திகிலுடன் விவரிக்கிறது.

சிங்களத் தனிச் சட்டம் நிறைவேறிவிட்டது. ராஜனின் தாய் இறந்து விட்டாள். இனக் கொலைத் தாக்குதலில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். தனது மனைவி லலியுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் ராஜன் சம்பவங்களின் இறுக்கத்தினால் லலியின் மீது தீராத வெறுப்புக் கொள்கிறான். அவளது இயல்பான அன்பு கனிந்த நடவடிக்கைகள் எல்லாவற்றையும் இப்போது அவன் பாசாங்காகவும் வேஷமாகவும் கருதுகிறான். அவள் நெற்றியில் வழக்கமாக வைத்துக் கொள்ளும் குங்குமமும் உயிர் தப்பி வரும் அகதித் தமிழர்களுக்கு அவள் செய்யும் பணிகளும் அதீதமான நடவடிக்கையாக அவனுக்குத் தோன்றுகிறது. தமிழர்களின் மீது அன்பு கொண்டவளாய்க் காண்பிக்க அவள் போடும் வேஷமாகப் படுகிறது அவனுக்கு. ரயிலில் வீடு திரும்பும் போது லலியின் நெற்றிக் குங்குமத்தைக் கோபத்துடன் குழப்பத்துடன் அழிக்கிறான் ராஜன். குங்குமம் அடையாளமாக அவள் கொல்லப்படக்கூடும் என்பதனால் அழித்தானா அல்லது வெறுப்பின் உச்சத்தில் அழித்தானா என்கிற தன்வயமான சந்தேகத்தில் உழல்கிறான் அவன்.

 

தொடர்ந்து வரும் நாட்களில் லலியுடன் பேசுவதை ,அவள் அருகாமையை அவன் வெறுக்கத் தொடங்குகிறான். அவளிடம் தான் யாழ்ப்பாணம் போகத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறான். வெளியில் சென்றுவிட்டு வரும் அவள் தனது கணவன் யாழ்ப்பாணம் போய்விட்டதாகவும் இடையில் தகர்க்கப்பட்ட ரயிலில் அவனும் தாக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதிய அவள் ,பக்கத்து வீட்டுச் சிநேகிதியிடம் அழுது அரற்றகிறாள். ஜூரத்திலிருந்தபடி அறையிலிருந்து வெளியே வரும் கணவனைக் கண்டதும் குரலெடுத்துக் கதறுகிறாள் அன்பே உருவான லலி;. ராஜனின் குற்றமனம் தொடர்ந்து வந்த நாட்களில் கரையுடைத்த அன்பாகப் பிரவகிக்கிறது. அடுத்துவரும் சில நாட்களில் தமிழ்ப் பெண்ணெனக் கருதி லலி சிங்களக் காடையர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிக் கொல்லப்படுகிறாள்.

 

நாவலின் விவரண வடிவம் குறித்தும் இதனது பல்லடுக்கு அர்த்தம் குறித்தும் மனித உறவுகள் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்தும் நிறைய விமர்சகர்கள் பேசியிருக்கிறார்கள். இந்த நாவல் மானுட அன்பு குறித்ததாகும் என்கிறார் ஜான் பெர்ஜர். இந்த நாவல் இரண்டு பகுதிகள் கொண்டதாக ஆரம்பத்தில் சுவீகரிக்கப்பட்டு மூன்றாம் பாகமாக நீட்டிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கிறார் ரெஜி சிறிவர்த்தன. இந்த நாவலின் மூன்றாம் பகுதி 1958 க்குப் பின்னான சமகாலப்பகுதி நாவலின் பலவீனமான பகுதி என்கிறார் ஏ.ஜே.கனகரத்னா (தேர்ட் ஐ : யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் :1999).  1958 க்குப் பின்னான காலகட்டம் பற்றிய வாழ்ந்துபட்ட அனுபவம் சிவானந்தனுக்கு இல்லாமல் போனதாக இருக்கலாம் என்கிறார் அவர். இக்காரணங்களால் முதல் இரண்டு பாகங்களில் பாத்திரப் படைப்புகள் வரலாற்றுச் சம்பவங்கள் பெறும் ஆதாரமான உயிர்ப்பான நிலையை மூன்றாம் பாகம் பெறவில்லை என்கிறார். ரவி விஜய்யைச் சுட்டுக் கொல்வது போன்ற நாவலின் இறுதிச் சம்பவம் போன்றன இதனால் நாடகத் தன்மையைப் பெறகின்றன என்கிறார் கனகரத்னா.

௦௦௦௦

இந்த மூன்று பகுதிகளில் இரண்டாம் பகுதியின் அவதானிப்பிலும் விவரணத்திலும் சிவானந்தனின் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை நாம் நிறையப் பார்க்கமுடியும். சிவானந்தன் 1958 கலவரத்தைத் தொடர்ந்து ராஜன் போலவே இங்கிலாந்தில் குடியேறிவிடுகிறார். ராஜனின் இருப்பு என்பது மூன்றாம் பாகத்தைப் பொறுத்து அவர் தனது மகன் விஜய்யிக்கு எழுதும் சில கடிதங்கள் மூலமே நிகழ்கிறது. முதல் பாகத்திலும்; தனது தந்தை சகாதேவன் பற்றிய ராஜனின் நினைவுகளும் பல்வேறு உறவினர்கள் நண்பர்கள் மூலம் திரட்டிக் கொண்ட மீள் நினைவுகளாகவே அமைகிறது. இக்காரணத்தினாலேயே நாவலின் இரண்டாம் பாகமாகிய ராஜனின் கதை வரலாறும் வாழ்ந்து பெற்ற அனுபவமும் புனைவும் கொண்டதாக மிகுந்த ஆதாரத் தன்மையுடன் அமைகிறது.  இந்நாவலின் இரண்டாம் பாகம் மிகுந்த ஆழம் வாய்ந்ததாக அமைகிறது எனக் கொள்ளலாம் என்று இலக்கிய விமர்சகர் திமோதி பிரன்னன் அவதானிக்கிறார் (போஸ்ட் இகனோகிளாசம் : திமோதி பிரனன் : டைம்ஸ் லிடரரி ஸப்ளிமென்ட :14.02.1997). மீள் நினைவுகளான முதல் பாகத்திற்கும் சமகால தேசிய யுத்தம் தொடர்பான மூன்றாம் பாகத்திற்கும் சிவானந்தன் வரலாற்றையும் வரலாற்றுச் சான்றுகளையும் சமபவங்களையும் நண்பர்களையும் உறவினர்களையுமே சார்ந்திருந்திருக்கிறார்.

 

சிவானந்தன் ஆசிரியராக இருந்து வெளியிடும் ‘இனம் மற்றும் வர்க்கம்‘ காலாண்டிதழ் இலங்கைப்  பிரச்சனை பற்றிய மிகுந்த முக்கியத்துவம் கொண்ட ஒரு ஆய்வுச் சிறப்பிதழை வெளியிட்டதை இங்கு ஞாபகம் கொள்வது நல்லது. சிவானந்தன், சண்முகதாசன்,; குமாரி ஜெயவர்த்தனா போன்றவர்களின் இலங்கைப் பிரச்சினை பற்றிய மிக முக்கியமான ஆக்கங்கள் அதில் வெளியாகின. ஆக நாவலின் மூன்றாம் பாகங்களுக்கு வரலாற்றுச் சான்றுகளும் உறவினர்களதும் சக இலங்கை நண்பர்களுடையதும் சிவானந்தனின் 1983 வரையிலான வாழ்ந்துபட்ட அனுபவங்களுமே சான்றாக அமைகின்றன. (என்னுடனான உரையாடலில் அவர் வாழ்ந்துபட்ட அனுபவம் நாவலின் தத்துவதரிசனம் போன்ற விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசுகிறார்)

 

நாவல் மூன்றாம் பாகத்தில் கவனம் கொள்ளும் எண்பதுகள் தொடக்கம் தொண்னூறுகளின் ஆரம்பம் வரையிலுமான காலகட்டத்தில் குறிப்பிட்ட பிரதேசங்களில் இயங்க நேர்ந்த கலைஞர்களும் மனித உரிமையாளர்களும் அரசின் ஆயுதப் படைகளாலும் கொலைக்குழுக்களாலும் இயக்கங்களாலும் பெற்ற உயிர்வாழ்தல் தொடர்பான அச்சுறுத்தல்களையும் மரணங்களையும் இங்கு ஞாபகம் கொள்வது நல்லது. நாவலின்  மூன்றாம் பாகங்களிலும் கூட பாத்திரங்களின் உளவியல் சித்தரிப்பிலும் தீவின் இயற்கைசார் சித்திரிப்பிலும் ஒருவர் பூரணத்தன்மையைக் காணத் தவறலாமேயொழிய நாவலின் வரலாற்றுத் தொடர்ச்சியிலும் நாவல் எடுத்துக்கொள்ளும் பிரச்சினையிலும் வரலாறு சார்ந்த தர்க்கத் தொடர்ச்சியிலும் ஆழமின்மையைக் காணமுடியாது.

 

நாவலின் கட்டமைப்பும் மொழிநடையும் விவரண முறையும் குறித்த சில அவதானங்கள் :

 

நாவலின் மொழி நடை மிக நிதானமானது. சிவானந்தன் சம்பவங்களுக்காக அவசரப்படுவதில்லை. உச்சபட்சமான உணர்ச்சிகரமான நடை இல்லை. நிறைய விவரணங்கள் இடம் பெறுகிறது. இயற்கை சார்ந்த,  தாவரங்கள் மரங்கள் தெருக்கள் ஒழுங்கைகள் என புவிப்பரப்பு சார்ந்த விவரணங்கள் விஸ்தாரமாக இடம் பெறுகிறது. கதை முழு இலங்கையின் புவிப்பரப்பையும் இனக்குழு மக்களையும் தனக்குள் எடுத்துக்கொள்கிறது. இயற்கையின் அழகும் அதன் அழிவும் மனிதனது அழிவுடனும் அழகுடனும் இணைத்து சித்தரிப்புப் பெறுகிறது. யாழ்ப்பாணம்  நுவரெலியா கொழும்பு அனுராதபுரம் ஹட்டன் என கலவரங்களின் தோற்ற இடமாகவும் அழிவுகளின் மையமாகவும் இருந்த நகரங்கள், கிராமங்கள், லயன்கள் குடியிருப்புகள் நாவல் முழுக்க விரவிக் கிடக்கிறது. வாழ்ந்து பெற்ற அனுபவம் எனும் பிரச்சினை நாவலின் ஆதாரத் தன்மையையோ நாவலின் முழுமையையோ கட்டமைப்பையோ பாதிக்கவில்லை என்பதுவே நிஜம்.

 

நாவலின் முழுமை என்பது இரண்டு வகையில் அமைகிறது.

1.காலனியாதிக்கக் காலகட்டம் – சோசலிசக் கனவுகள் – இனவாத தேசியத்தின் வளர்ச்சி – தமிழ் இலட்சியவாதம்; எவ்வாறாக சிங்கள தேசியவாதத்தின் திசைவழியிலேயே பிறழ்ந்த பிரக்ஞையாகப் பரிமாணம் பெறுகிறது எனும் தொடர்ந்த சிந்தனை – ஜான் பெர்ஜர் இந்நாவலை வியட்நாம் குறித்த பாவ்லோ நின்னின் நாவல், ஜெர்மன் பாசிசம் குறித்த ஆன் மச்செலின் நூல், ஸ்பானிய பாஸ்க் தேசியவாத அனுபவங்களைச் சொல்லும் பெர்னார்டோ அச்சாகாவின் நாவல் போன்றவற்றுடன் வைத்துப்; பேசுவதை இங்கு நாம் கவனம் கொள்ள வேண்டும் (பேக் டு த பியூச்சர் : ஜான் பெர்ஜர் : தி கார்டியன் : 13.02.1997).

2.நாவலின் சித்தாந்த முழுமை என்பது காலனியாதிக்கத்தின் தாக்கம் ,சோசலிசத்தின் வீழ்ச்சி , தேசியத்தின் சமகால நெருக்கடி போன்ற அனைத்தும் தழுவியதாக அமைகிறது. அரசியல் மொழியில் ஜெர்மன் பாசிசம் – ரஷ்ய சோசலிசம் – கியூபப் புரட்சி – யுகோஸ்லாவியப் பிரச்சினை – ருவாண்டா உள் இனக் கொலைகள் போன்ற முழு வரலாற்று அனுபவங்கள் சார்ந்ததாக அமைகிறது.

 

பாத்திரப் படைப்புக்களின் முழுமை என்பது சிங்களவரும் தமிழரும் அடையாளம் தனித்துக் கொண்டிருந்தபோதும் சரி பரஸ்பரம் சிங்களர் தமிழர் அடையாளம் மறுத்து வெறுத்த நிலையிலும் சரி அன்பு செய்தல் என்பதுவே மனிதனின் விதியாக இருக்கிறது. நிகழ்காலம் சாஸ்வதமில்லை. வரலாற்றின் அனர்த்தம் விளைவித்தது நிகழ்காலம். கடந்த காலத்தில் அதன் தோழமையில் அன்பும் காதலும் நிலவியது. நாடுகள் பிரியலாம். எல்லைகள் வரையறுக்கப்படலாம். ஒரு நிலப்பிரப்பில் மறுபடியும் எதிர்காலத்திலும் இறுகிய கட்டமைக்கப்பட்ட அடையாளங்களை விட்டு மீறிய விலகிய உறவும் அன்பும் தோன்றும் வளரும். இதுவே மனிதனுக்கு விதிக்கப்பட்டது. விஜய்யின் பாத்திரம் அடையும் பதில்கள் – நாவலின் ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் – சகாதேவனும் திஸ்ஸாவும் – ராஜனும் லாலும் – ராஜனும் லலியும் – திஸ்ஸாவும் முஸ்லீம் பெண் சோனுவும் – விஜய்யும் மொனலும் – கேட்டுக் கொண்ட கேள்விகள் அடைந்த பதில்கள் – இந்தக் கோள்விகளையும் பதில்களையும் தான் இறுதி வரை விஜய்யும் மீனாவும் நினைவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் அனர்த்தமான கொலைகளுக்கும் அதனது அபத்த நாடகத் தன்மைக்கும் வரலாறு சான்றாக நிற்கிறது.

 

ஸல்மான் ருஸ்டியின் மிட் நைட் சில்ரனுக்குப் பின்னான நாவல்கள் அனைத்தும் குறித்து வாழ்ந்து பட்ட அனுபவம் எனும் அடிப்படையில் இந்திய ஆதாரத் தன்மை குறித்த கேள்விகள் எழுப்ப்பட்டிருக்கிறது. ஆயினும் அவரது இந்திய வாழ்வு குறித்த – மூர்ஸ் லாஸ்ட் ஸை நாவல் உள்பட – நாவல்கள் அனைத்தினதும் ஆதாரமாக – இந்து பாசிஸம் பம்பாய் முஸ்லீம் மக்கள் கொலைகள் பால்தாக்கரே என – வரலாற்றுச் சம்பவங்கள் இருக்கிறது. இன்னும் தகவல் தொழில்நுட்பம் மனிதர்களின் இடப்பெயர்வு போன்றவை மிக வேகமாக விரைந்து கொண்டிருக்கும் சூழலில் கால இடைவெளியும் தூரமும் குறிப்பிட்ட புவிப்பரப்பின் அரசியல் மற்றும் வாழ்வு குறித்த நாவல்களின் குணச்சித்திரங்களின் சித்தரிப்பில் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கும் என்றும் தோன்றவில்லை. இன்னும் நாவலின் வடிவம் விவரணம் மற்றும் அழகியல் சார்ந்த பிரச்சினைகள் கூட அரசியல் பரிமாணம் கொண்டவைதான் என்பதிலும் சந்தேகம் இல்லை.

 

கற்பிதம் செய்யப்பட்ட தேசியங்கள் , நினைவுகள் மறந்த பிறழ்ந்த கட்டமைக்கப்பட்ட தேசியங்கள் ஆகிறது. கற்பிதம் செய்யப்பட்ட தேசியம் கருத்தியலாகிறபோது பதற்றத்துடன் தன்னைக் காத்துக்கொள்ள அது பயங்கரவாதமாக வடிவம் கொள்கிறது. காலனியாதிக்க எதிர்ப்பும் தேசியப் பிரக்ஞையும் கலாச்சார எழுச்சியும் கருதிய சிங்கள தேசியம் இன்று இனவாத தேசியமாகி சிறுபான்மை தமிழ் இனத்திற்கெதிரான இனக் கொலையாகப் பரிமாணம் பெற்றிருக்கிறது(ஸர்மினி பாட்ரீஸியா கேப்ரியல் : தி சேட் ஸ்டோரி ஆப் சிறிலங்கா : நியூ செயின்ட்ஸ் டைம்ஸ் : 22.04.1998). சிங்கள தேசியம் சென்று இன்று உறைநிலை அடைந்திருக்கிற பாதையில்தான் தமிழ்த் தேசியமும் தன்னைக் கருத்தியலாகக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. பெனடிக் ஆண்டர்ஸன் அவதானத்தின்படியும் சமகால சர்வதேசிய அனுபவங்களின் படியும் அனர்த்தங்கள் தொடர்கிறது.நாவலை ஆப்ரோ அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் பால்ட்வினது நாவலுடன் சேர்த்துப் பேசுகிறார் இங்கிலாந்து விமர்சகர் மெலிசா பென் (தி இன்டிபென்டன்ட் : ஐலன்ட் இன்த ஸ்ட்ரீம் ஆப் ஹிஸ்டரி : 11.01.1997 ) இதே போல ஆப்பிரிக்க எழுத்தாளரான செம்பேன் உஸ்மானுடன் இணைத்துப் பேசுகிறார் இலக்கிய விமர்சகர் திமோதி பிரணன் (போஸ்ட் இகனோகிளாஸம் : திமோதி பிரணன் : டைம்ஸ் லிடரரி சப்ளிமென்ட் :14.02.1997) ஜேம்ஸ் பால்ட்வின் சிவானந்தன் போலவே தீவிரமான அரசியல் நிலைபாடுகள் கொண்டவர். இலக்கியவாதியாகவும் வென்றவர்.

 

தீவிரமான அரசியல் நிலைப்பாடுகள் கொண்ட படைப்பாளர்கள் ஒரு விபத்தில் சிக்கிக் கொள்ள நேர்வதுண்டு : ‘செஸ் பலகையின் காய்களைப் போல தமது பாத்தரங்களை தமது அரசியல் நிலைபாடுகளுக்காக நகர்த்துவார்கள் என்பதுதான் அந்த ஆபத்து. ஆனால் அரசியல் நிலைபாடுகளும் நம்பிக்கைகளும் மானுட உணர்ச்சி நிலைகளிலிருந்தும் அறிதலிலிருந்தும் பிரிக்க முடியாதவை. ஓரே சமயத்தில் அரசியலின் உள்ளே இருப்பதும் மானுடர்களைச் சித்தரிக்கும்போது அதிலிருந்து வெளியேறுவதுமான சிருஷ்டி வித்தையில் சிவானந்தனும் பால்ட்வினும் வெற்றி பெறுகிறார்கள். செம்பேன் உஸ்மானின் திரைப்படங்களும் சரி அவரது திரைப்படங்களுக்கு ஆதாரமான அவரது நாவல்களும் சரி பின்காலனிய நாவல்கள் என்ற நினைவு கூரல்களுக்குள் அமையாது. அவரது கதை மாந்தரும் பிரச்சினைகளும் முழுக்க ஆப்ரிக்கத் தன்மையும் இடையறாத ஆப்ரிக்க வரலாற்றுத் தொடர்ச்சியும் கொண்டவர்கள் (செம்பேன் உஸ்மான் : ஆப்ரிக்க சினிமா : யமுனா ராஜேந்திரன் : தாமரைச்செலவி பதிப்பகம் : இந்தியா) இதைப் போலவே சிவானந்தன் நாவல்களை பிரிட்டீஷ் ராஜ் நாவல்கள் அல்லது பின் காலனித்துவ நாவல்கள் என்ற வகையினத்துள் அடக்கமுடியாது. ஏனெனில் சிவானந்தனின் கதை மாந்தர்களின் சித்தரிப்பும் சரி , அவரது கதையின் வரலாற்றுப் பின்புலமும் சரி முழுக்கவும் இலங்கை மக்களின் வரலாற்றுத் தொடர்ச்சியும் மானுடத் தொடர்ச்சியும் பண்பாட்டுத் தொடர்ச்சியும் கொண்டவையாகும். இவ்வகையில் சிவானந்தனின் நாவல் அரசியலும் அழகியலும் சிருஷ்டித்தன்மையும் மூன்றாம் உலகப் படைப்பாளியின் பிரக்ஞையும் ஒருங்கே அமையப் பெற்ற படைப்பாகிறது.

 

நாவலைப் படித்து முடிக்கிறபோது மனதெங்கும் விரவியிருக்கிறபடி நான்கு பாத்திரங்கள் உலவுகின்றன. இவர்கள் சமரசம் செய்து கொள்ளாத இலட்சியவாதிகள். நேசிக்க மட்டுமே தெரிந்தவர்கள். அதிகாரவர்க்க சோசலிஸ்ட்டுகள் பற்றி விமர்சனத்துடனும் சேவை மனப்பான்மையுடனும் நடமாடும் சிங்கள மருத்துவரான லால். அன்பும் காதலும் கொண்ட பெண்ணாகிய அடுத்தவர் நலன் நாடும் ராஜனின் மனைவியான மரணமுற்ற லலி. லலியைத் தனது வாழ்வின் மையமாகவும் ஆதாரமாகவும் காதலாகவும் கொண்டு வாழ்ந்து அவளது மரணத்தின் பின் இங்கிலாந்து சென்றுவிடும் ராஜன். இன அடையாளம் அற்றவனாகி மானுட அடையாளம் மட்டுமே நிறைந்தவனாகி அதே மானுட அன்புக்காக தனது சமீபத்திய நண்பனான யோகாவைக் காப்பாற்றப்போய் கொலையுறும் விஜய். நான்கு பேருமே சமரசமற்று நேசிக்கத் தெரிந்த சிந்திக்கத் தெரிந்த இலட்சியவாதிகள். இலட்சியவாதமும் அன்பும் சேரும் போதுதான் புதிய மானுடம் பிறக்கிறது. இந்த நாவலிலும் ஒன்டாஜியின் அனில்ஸ் கோஸ்ட் நாவல் போலவே ஆவிகள் வருகின்றன. விஜய் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த ஆவிகளை நினைவு கூர்கிறான். ஒன்று-  அன்று உலகை ஆட்டிப்படைத்த கம்யூனிஸ பூதமாகிய ஆவி. இன்று அவனது அன்னை லலியின் ஆவி. இந்த ஆவிகள் நாவலின் ஆன்மாவாக எங்கெங்கும் அலைந்து திரிகிறது.

நாவலின் இறுதியில் ரவி விஜயைச் சுட்டுக் கொன்ற பின்னால் மீனா எதிர்ப்புக் குரல் எழுப்பும்போது அவளையும் சுட எத்தனிக்கும் ரவியின் துப்பாக்கியைத் தட்டிவிடும் யோகி – நான் பொறுப்பெடுத்துக் கொண்டுவிட்டேன் – என்கிறான். நாவல் முடிகிறது. நாவல் போதனைகள் செய்யவில்லை. எதிர்காலம் குறித்த தீர்ப்புக்கள் எதையும் முன்வைக்கவில்லை. யோகி பொறுப்பெடுத்துக் கொண்டது அவநம்பிக்கையின் குரலா அல்லது நம்பிக்கையின் அறைகூவலா என்பது பதில் காண முடியாத கேள்வியாக நிற்கிறது.

௦௦௦௦

 

அ. சிவானந்தன் அவர்களின்  நினைவாகவும், கடந்த, சமகால நிலைமைகளின் அனுபவங்களும், மனித அவலங்களும் குறித்த முக்கியத்துவம் கருதி இந்த   நாவல் மதிப்புரை மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment