Home » இதழ் 21 » * பாதுகாக்கப்பட்ட துயரம்——– பாத்திமா மாஜிதா

 

* பாதுகாக்கப்பட்ட துயரம்——– பாத்திமா மாஜிதா

 

தங்களுக்காக மனிதர்கள் இல்லை, மனிதர்களுக்காகவே மதங்கள் உண்டு என்ற களந்தை பீர்முகம்மதுவின் வரியினூடாகவே “பாதுகாக்கப்பட்ட துயரம்” என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு நூலினுள்ளே நுழைகிறேன் . மதம் என்பதை ஒற்றை மையப்படுத்தி சிறுபான்மை – பெரும்பான்மை என்று எண்ணிக்கையடிப்படையில் மக்களை உட்செரித்துக்கொண்டு பிரிவினையும் துயரங்களும் அகலித்து வருகின்றன. மதம் என்ற கண்ணாடியின் முன் நின்றே அனைத்தையும் தீர்மானிக்கும் குறுகிய மனப்போக்கு அதிகரித்து வருகின்றது.

 

மதங்களில் கூறப்பட்டுள்ள மனித நேயம், சமத்துவம், நீதி, ஒப்புரவு போன்ற விழுமியங்களை அதிகாரம் படைத்தவர்கள் தங்களது நலன்களுக்கேற்றாற்போல் திரிவுபடுத்தி வியாக்கியானம் கூறுகின்றனர்.  அதனை உண்மையென நம்பிப் பின்பற்றும் மனிதர்களே இன்று பெருகி வருகின்றார்கள். சர்வதேச அரசியலிலும் பொருளாதார ஏகாதிபத்தியத்தின் தூண்களாக மதங்களே நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மையநீரோட்டத்தில் உலகளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகம் அகமும் புறமுமாக எதிர்நோக்கும் சவால்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்லாத்தின் அடிப்படை விழுமியங்கள், மாண்புகள் புறக்கணிக்கப்பட்டு ஒற்றைத்தன்மை கொண்ட வஹாபியம் நுகர்வுக் கலாச்சாரத்தன்மை கொண்ட கார்ப்பரேட் ஆன்மிகமாக வீறுநடைபோடுகின்றது. நபிகள்(ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளும் அல்குர்ஆன் வசனங்களும் நேர்ப்பொருள்வாத முறையிலேயே வியாக்கியானம் அளிக்கப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தும் உலகப்பேரரசுகளும் இனவாதமும் முஸ்லிம் சமூகத்தின் மீது உலக சமாதானத்தினைச் சீர்குலைக்கும் பயங்கரவாதம் என முத்திரையிட்டுக்கொண்டிருக்கின்றன. மதவாதம் என்ற கூண்டுக்குள் முஸ்லிம் சமூகத்தினை முன்னுறுத்தி இனச்சுத்திகரிப்பினை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்திய முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் துயரங்களையும் கறைபடிந்த நிழல்களையும் இரு மருங்குகளிலும் கவனித்து உணர்ந்த காட்சிகளை பாதுகாக்கப்பட்ட துயரமாக களந்தை பீர்முகம்மது முன் நிறுத்தியுள்ளார்.                     

 

குஜராத் கலவரம், பாபர் மசூதி பிரச்சனை, கோவை கலவரம் போன்றவற்றால் சிறுபான்மையினமான முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட வடுக்களையும் அதனால் இந்து சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையே கட்டியெழுப்பப்பட வேண்டிய உறவின் அவசியத்தினையும் இந்நூல் விளக்கிக் கூறுகின்றது. இந்துத்துவ தீவிரவாதத்தினை முறியடிப்பதற்கான மாற்று மருந்து முஸ்லிம் மதவெறியோ தீவிரவாதமோ அன்று. ஜனநாயக இயக்கங்களில் பங்கு பெறுவதே முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும் என வலியுறுத்திக்கூறும் அதேவேளை அத்தகைய ஜனநாயகப் பேருருவை அமைப்பதில் முஸ்லிம் சமூகம் முயற்சிக்கவில்லை என விளக்கிக் கூறுகின்றார்.    தீவிரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி முஸ்லீம்களை நோக்கிக் குறிவைப்பதாகவே பிரச்சாரங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ள தன்மையையும் முஸ்லிம் தீவிரவாதிகளின் வெறியாட்டங்களுக்குப் பிறகு கைது செய்யப்படுகின்றவர்கள் அனைவரும் நம்பத்தகுந்த சாட்சியங்களின் அடிப்படையில் கைது செய்யப்படுவதாகத் தோன்றவில்லை என்பதையும் ஆங்காங்கே நூலாசிரியர் கூறி நிற்கின்றார்.   

 

தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பதைப் பொறுத்தவரை தனது பால்ய வயதில் முஸ்லிம்களும் இந்துக்களும் மதவாதத் தன்மையற்று வாக்களித்ததை நினைவுகூறும் ஆசிரியர் தற்பொழுதைய சூழலில் வாக்காளர்களை அரசியல் கட்சிகள் அணுக நேர்ந்த முறைகளில் மதரீதியான மோதல்களுக்கான சித்தாந்தம் இருப்பதைக் கூறுகின்றார். ஒரு பக்கம் இஸ்லாமியத் தீவிரவாதம் கட்டமைக்கப்படுகையில் இன்னொரு புறத்தில் முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கப்படுவதையும் விளக்கிக்கூறும் ஆசிரியர் முஸ்லிம்களுக்கு மட்டுமான தனி இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையைப் பொறுத்தவரை நாடாளுமன்ற, சட்ட மன்றங்களிலும் இட ஒதுக்கீட்டை முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என களந்தை பீர்முகம்மது வலியுறுத்தி நிற்கின்றார்.           

 

இன்றைய இஸ்லாமிய சமூகத்திற்கும் வாழ்க்கைக்குமான இஸ்லாமிய இணைப்புப்பாலம் ஏதும் இருப்பதில்லை. முஸ்லிம் நாடுகள் தனது இறையாண்மையைப் பாதுகாத்து உயிர்த்துடிப்பான அந்தஸ்த்துக்கு வருவதற்கு முடியவில்லை. தமது நாடுகளின் பொருளாதார, கல்வி, தொழிநுட்ப விடயங்கள் அனைத்திற்கும் ஏனைய நாடுகளையே கையேந்தி நிற்கின்ற சூழலை விளக்கிக்கூறும் நூலாசிரியர் ஜனநாயகத்தினை மறுதலிக்கின்ற ஆட்சி முறை, கல்வியறிவின்மை ஆகிய இரண்டு வழிகளை இஸ்லாமிய உலகம் இன்னும் ஏற்றுக்கொள்ளாமலும் ஏற்றுக்கொண்டதில் முதிர்ச்சி இல்லாமலும் இருப்பதுதான் மேற்கூறிய நிலைமைகளுக்குக் காரணமென விளக்குகின்றார். இவ்வழியில் இஸ்லாமும் அதன் கொள்கை சார்ந்த வழிமுறைகளும் கடுமையான பாதிப்பினை அடைந்துள்ளமையினையும் அதேநேரம் விரக்தியும் வெறுப்பும் போன்ற பலவித இழைகள் தத்தமது தனி வண்ணங்களை இழந்து ஒரே நேரத்தில் மதவெறித்தறியில் நெய்யப்பட்டுத் தீவிரவாதம் என்ற கருத்தாக்கத்தில் சந்திப்பதாய்க் கூறி நிற்கின்றார். அதேநேரம் முஸ்லிம்களிடையேயும் முஸ்லிம் நாடுகளினிடையேயும் பிளவை உண்டாக்குவதற்காக இஸ்லாமியத் தீவிரவாதம் பேரபாயமாக மேற்குலக நாடுகளால் உருப்பெருக்கப்பட்டுள்ளதையும் இந்நூல் கூறுகின்றது.  

     

இஸ்லாமிய சமூகத்துள் நிலவும் அடிப்படைவாதங்களை விமர்சிக்கும் நூலாசிரியர், “இந்திய முஸ்லிம்கள் இக்கட்டான நிலைக்கு வந்துவிட்டனர் எனில் நாடும் அதே இக்கட்டான நிலைக்கு வந்துவிட்டது என்றே அர்த்தம். சமூகத்தின் ஒரு பகுதியை நிராதரவாய் விட்டுவிட்டு, இன்னொரு பகுதி காலூன்றிக் கொள்ளும் என்பதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத மாயை.” என்றும் உரைக்கிறார்.தன் சமூகம் நோக்கி வரும் அபாயங்களை எதிர்க்கிற, தன் சமூகத்துள் நிகழும் அடிப்படைவாதம் களையப்பட வலியுறுத்துவதுமான இரு பக்கப் பொறுப்புணர்வுடனும் செயல்படுகிறார். இவ்விரு நிலைகளும் முஸ்லிம் சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்துவதாகவே புரிந்துகொள்ள முடியும்.

 

பெண்ணியம் தொடர்பான பகுதியில் ஆணாதிக்கம், பெண்களின் முன்னேற்றத்தினை ஒழுக்கவியலோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பதாகவும் தங்களது நலன்களுக்கேற்றாற்போல இஸ்லாமியச் சட்டங்களை ஆணியச்சமூகம் வளைத்து வைத்துள்ளதால் பெண்களின் இறை பக்தியை ஆணாதிக்கம் சார்ந்த கருத்துக்களோடு வளர்த்தெடுத்திருப்பதாலும் ஆண்களால் மட்டுமே பெண்களின் ஒழுக்கம் பேணப்படும் எனும் போதனை கொடுக்கப்பட்டிருப்பதாலும் முஸ்லிம் பெண்கள் வளர்வதற்கான சூழல் அடியோடு மழுங்கிவிட்டதாக நூலாசிரியர் சாடுகின்றார். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் முஸ்லிம் பெண்களின் உரிமை விடயங்களில் அதிகளவு முன்னேற்றகரமான இடத்தில் இருந்ததை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களை எடுத்துரைக்கும் களந்தை பீர்முகம்மது அல்குர்ஆன், ஹதீஸ் போன்ற இஸ்லாமிய அடிப்படை மூலாதாரங்களை வாசிப்பது ஆணாதிக்கம் மட்டுமே, இந்நிலையில் காலத்தின் தேவைக்கேற்ப சமூகக் கண்ணோட்டத்தோடு ஷரீயா சட்டங்கள் மாற்றம் பெற வேண்டி நிற்பதை நூலாசிரியர் வலியுறுத்திக் கூறுகின்றார். உதாரணமாக தலாக் நிறைவேற்றப்படும் முறையில் பாதிக்கப்படும் பெண்ணிற்கு வழங்கப்படும் ஜீவனாம்சம் தொடர்பிலும் ஷாபானு விவாகரத்தின் பின்னர் எழுந்த சிக்கல்களையும் நூலாசிரியர் விளக்கிக் கூறுகின்றார். அதேபோன்று ஷபனா ஆஸ்மி விவகாரம், தீபா மேத்தாவிற்கு எதிரான போராட்டம் போன்றவற்றினைத் திரைப்படம், நடிப்பு போன்றவை ஹலால்(ஆகுமானது) என இஸ்லாத்தில் இல்லாதபோது அதற்கான மீறலும் ஹராமானதாக (விலக்கப்பட்டதாக) இல்லை என்பதே இஸ்லாமியப் புரிதலாகும் என்பதையும் நூலாசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

 

பெண்ணை அடிமைப்படுத்துவதில் எல்லா அடிப்படைவாதங்களும் ஒன்று போலச் செயல்படுவதைக் குறிப்பிட்டு, இஸ்லாமியச் சமூகத்துள் பெண் இருப்பு, பெண்ணுக்கு நிகழும் அநீதி, பெண்ணைச் சக உயிரியாக மதிப்பிட வேண்டிய அவசியம் ஆகியன குறித்து விரிவாக உரையாடுகிறார். இருப்பினும் இந்நூலாசிரியரும் பெண் குறித்த விஷயங்களில் கவனங்கொண்டு செயல்படுதல் அவசியமாகிறது.

“பூக்கோயாத் தங்ஙளின் அதிகார வரம்பு ரசிக்கும்படியாக இருக்கின்றது. அவருடைய நம்பிக்கைக்குரிய கணக்கர் பப்புக்கன்னாரனின் மனைவிக்குக் குப்பாயம் மாட்டும் நிகழ்ச்சி அது. மார்பை மறைக்க வேண்டும் என்கிற எண்ணமில்லாத கணக்கரின் மனைவியிடம் இரண்டு பசங்களை ஏவிவிட்டு அவள் முலைகளைக் கசக்க வைக்கிறார் தங்ஙள்.”புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் படைப்புலகம் குறித்து சிலாகிக்கையில் ‘மீஸான் கற்கள்’ நாவலில் வரும் பூக்கோயாத் தங்களின் அத்துமீறலை ரசனைக்குரியதாக எழுதுகிறார்.பெண்ணுக்கான ஆதரவு எழுத்தாக அறியப்பட்ட பிற மொழிகளோடு பெண்ணை துய்ப்புக்கான உடலாகக் காணும் இவ்வெழுத்தும் கலந்திருப்பது பெண் என்ற கருத்துருவத்துக்கான விடுதலை பேசப்படுமளவிற்குப் பெண் உடல் விடுதலைக்கான மனப்பாங்கு பெண்ணுக்கான ஆதரவு எழுத்திலும் வெளிப்படுதல் அரிது என்பது விளங்குகிறது.

 

நூல் முழுமையும் ஒரு செறிந்த கருத்தில் தெளிவுற்றிருக்கின்றது.  அது, உலக மக்களுக்கு எதிர் மக்களாக ஒழுங்குபடுத்தும் அரசியலுக்கு ஆட்படாமல் அந்தந்த வாழ்நிலத்திற்கேற்ற நெகிழ்வுத்தன்மையுடைய தாமாக உருப்பெற்றுவந்த வரலாற்றின் கண்கொண்டு சமகால வாழ்முறையை அமைத்துக்கொள்வதும், அதற்கான அரசியல் செயல்பாடுகளைக் கொண்டிருப்பதுமான ஒரு முயற்சி வேண்டும் என்பதாகும்.  களந்தையின் வரலாற்றுப் பார்வையிலான தெளிவும் அதன்வழிக் கிடைத்த அறிவின் தெளிவும் இச்சமூகத்திற்கு ஒளியேற்றும் விளக்காகும் என்பதை எந்த மாயகக்கண்ணாடியும் அணியாது வாசிக்கும் எவரும் புரிந்துகொள்ள முடியும்.

 

000000

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment