Home » இதழ் 21 » * தர்மசேன பத்திராஜ- பல்கலைக்கழகம், அரசியல் மற்றும் கலை – தமிழில்: லறீனா அப்துல் ஹக்

 

* தர்மசேன பத்திராஜ- பல்கலைக்கழகம், அரசியல் மற்றும் கலை – தமிழில்: லறீனா அப்துல் ஹக்

 

 

 

1969 ஆம் ஆண்டின் ஒரு காலைப் பொழுது. கவர்ச்சியான தோற்றம் உடைய, மெலிந்து உயர்ந்த ஓர் இளைஞர்  தற்காலிக உதவி விரிவுரையாளராகப் பணியேற்று வித்தியாலங்கார சர்வகலாசாலையின் சிங்களத் துறைக்கு வந்திருந்தார். அக்காலகட்டத்தில் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த விமல் திசாநாயக்க, காமினி ஹத்தொட்டுவேகம, லக்‌ஷ்மன் ப்ரணாந்து, சுனந்த மகேந்திர, சோமரத்ன பாலசூரிய, சந்திரசிரி பள்ளியகுரு மற்றும் அஷோக கொலம்பகே ஆகிய கலை இலக்கிய ஆளுமை கொண்ட ஆசிரியர்கள் குழுவில் அவரும் இணைந்து கொண்டார். அச்சமயத்தில் வித்தியாலங்கார சர்வகலாசாலையில் பல்வேறு கலை இலக்கியப் பட்டறைகள் இடம்பெற்று வந்தன. அதேவேளை, விமல் திசாநாயக்க, சோமரத்ன பாலசூரிய ஆகிய விரிவுரையாளர்கள் மாணவ எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டு ஆக்க இலக்கிய மன்றமொன்றை உருவாக்கினர். காமினி ஹத்தொட்டுவேகமயின் தலைமையில் உருவாக்கப்பட்ட திரைப்படச் சங்கத்தின் மூலம் இரவு புலரும்வரை தேசிய மற்றும் சர்வதேச கலைத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதற்கு மேலதிகமாக காமினி ஹத்தொட்டுவேகம அவர்கள் மாணவர்களுக்காக ஒரு திரைப்படப் பாடநெறியொன்றையும் நடாத்தினார். லக்‌ஷ்மன் ப்ரணாந்து மற்றும் அஷோக கொலம்பகே ஆகியோரால் எழுதப்பட்ட நாடகங்கள் இரண்டையும் உள்ளடக்கி குறுநாடக விழாவொன்றும் இடம்பெற்றது. மொழிகள் பீட மாணவர் சங்கத்தின் சார்பில் சிறுகதை ஊடகம் குறித்த ஒருவாரக் கருத்தரங்கொன்றும் ஒழுங்குசெய்யப்பட்டது.  

 

புதிதாக நியமனம் பெற்றுப் பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசித்த தர்மசேன பத்திராஜ எனும் சினேகபூர்வமான இளைஞரும் தாம் அங்கு வந்த நாள் முதல் மிகுந்த உத்வேகத்துடன் கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடலானார். அவர் கலை இலக்கியச் செயற்பாடுகளில் தேர்ச்சி பெற்றிருந்த முன்னோடிகளைப் பலக்லைக்கழகத்துக்கு அழைத்துவந்து மாணவர்களுக்கு அவர்களைக் கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தச் செய்தார். அத்தகைய இலக்கியவாதிகளில் சைமன் நவகத்தேகம மற்றும் ஜீ.டி. விக்ரமசிங்ஹவும் இருந்ததாக ஞாபகம். பல்கலைக்கழக இலக்கிய மன்றத்தினால் 1970 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “தொரகுலு எரியெமி சஹ வெனத் கதா’’ (தாழ்ப்பாள் திறந்தேன் மற்றும் பிற கதைகள்) எனும் சிறுகதைத் தொகுதிக்கு, “தஹயட்ட வித்தர’’ – பத்துமணி அளவில் – எனும் பெயரில் அவர் அளித்த புதிய வகையான சிறுகதையானது பலருடைய கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

 

அவர் எல்லாத் துறைகளை விடவும் சினிமா, நாடகம் எனும் இரு கலை ஊடகங்கள் மீதுதான் அதிக அக்கறை கொண்டிருந்தார். 1969 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட, பல்கலைக்கழக வாழ்வைக் கருவாகக் கொண்டமைந்த, “ஹந்தானே கதாவ’’ – ஹந்தானையின் கதை – திரைப்படத்துக்கு இணை திரைக்கதை வசனகர்த்தாவாகப் பங்களிப்புச் செய்திருந்தார். “சத்துரோ” – சத்துருக்கள் – எனும் அவரது முதலாவது திரைப்படமும் 1969 ஆம் ஆண்டிலேயே திரையிடப்பட்டது. இளைஞர் மத்தியில் நிலவிய வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கருவாகக் கொண்டமைந்த, ‘சத்துரோ’ திரைப்படத்துக்கும் மிர்ணால் சென்னின் ‘இன்டர்வியூ’ எனும் திரைப்படத்துக்கும் இடையில் ஓர் ஒற்றுமை நிலவுவதாக, பேராசிரியர் விமல் திசாநாயக்க 2000 ஆம் ஆண்டு (ஜனவரி – மார்ச் ) ‘சதிசி’ எனும் சினிமாக் காலாண்டிதழில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

 

அவரது முதலாவது முழு நீளத் திரைப்படமான, ‘அஹஸ் கவ்வ’ (ஆகாய கங்கை) தொடர்பில் 1974 ஆம் ஆண்டு இந்நாட்டின் சினிமா அரங்குகளில் திரையிடப்பட்ட போது அவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாரா, இல்லையா என்பது நினைவில் இல்லை. எது எப்படி இருப்பினும், ‘அஹஸ் கவ்வ’ திரைப்படம் குறித்துப் பல்கலைக்கழகத்தில் கலை இலக்கியவாதிகளான விரிவுரையாளர்களும் மாணவர்களும் மிகுந்த ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் கலந்துரையாடிய விதம் இன்னும் நினைவில் நிழலாடுகிறது. “இரா அந்துருபட்ட பெரதிக அஹசே” (இருட்திரை கிழித்து கிழக்கு வானில் முகிழ்க்கும்) என்று தொடங்கும், ‘அஹஸ் கவ்வ’ திரைப் படத்தின் தலைப்புக் கீதம் மாணாக்கரின் காதுகளில் இடையறாது ஒலிக்கும் ஒன்றாக மாறிற்று. அப்பாடலை இயற்றிய சந்திரசிறி பல்லியகுரு அக்காலத்தில் வித்தியாலங்கார சர்வகலாசாலையின் புகழ்பெற்ற விரிவுரையாளர்களுள் ஒருவராக இருந்தார்.

 

000000

 

“சத்துரோ” (எதிரிகள்) குறுந்திரைப்படத்தைப் போலவே, “அஹஸ் கவ்வ” திரைப்படத்திலும் இந்நாட்டின் இளைய தலைமுறையினரின் வேலையில்லாப் பிரச்சினையே கருப்பொருளாக அமைந்திருந்தது. அதுவரையிலான காலம் வரை பெருவாரியாகத் தயாரிக்கப்பட்ட ஜனரஞ்சகமான காதல் கதைகளைக் கருவாகக் கொண்ட திரைப்படங்கள் தொடர்பில் ஆரம்பத்தில் இருந்தே பத்திராஜ தனது விமர்சனத்தை முன்வைத்தவாறே இருந்தார். “அஹஸ் கவ்வ” திரைப்படத்தைத் தயாரிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் தாம் அதிகமான ஃபிரான்சியத் திரைப்படங்களைப் பார்த்ததாகவும், குறிப்பாக, எலன் ரெனேயின்  LAST YEAR IN MARIANBAD திரைப்படம் தமதுள்ளத்தில் மிகப்பெரும் மனவெழுச்சியை ஏற்படுத்தியதாகவும் JEFF BURTON உடன் பத்திராஜ நிகழ்த்திய உரையாடல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பதை, “வம் இவுரக்க கத்திகா” (இடது கரையொன்றின் கதையாடல்) எனும் நூலில் சத்துர ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ட்ரொபோவின் “400 BLOWS”, கொடாடின் “BREATHLESS” போன்ற ஃப்ரான்சின் புதிய முற்போக்கு அலையில் எழுந்த திரைப்படங்களின் உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் காணப்பட்ட அபூர்வத்தன்மையும், இளமை பொங்கும் சினிமாவொன்றில் பொதிந்துள்ள புரட்சிகரமான உயிர்ப்பும் பத்திராஜவின், “அஹஸ் கவ்வ” திரைப்படத்தில் கருக்கொண்டிருந்தன. ஃப்ரான்சின் “புதிய அலை”யில் எழுந்த இத்தகைய திரைப்படங்கள், ஃப்ரான்சில் அதுகாலம் வரை நிலவிவந்த மரபார்ந்த சினிமா பாணியை எவ்வாறு தலைகீழாக மாற்றியமைத்தனவோ, அதுபோலவே பத்திராஜவின், “அஹஸ் கவ்வ” திரைப்படமும் பாரம்பரியமான பாணியில் இருந்து மாறுபட்டு, இலங்கை சினிமா புரட்சிகரமான மாற்றமொன்றை நோக்கி நகர்வதற்கு உந்துசக்தியாக அமைந்தது.

 

50களின் இறுதிக்கூற்றில் இளம் சினிமாக்காரர்கள் பலர் அதுகாலம் வரையிலும் நிலவிவந்த மரபுசார் சினிமா பாணிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே ஃபிரான்சிய சினிமாவின் “புதிய அலை” (New Wave) உருவானது. “புதிய அலை”யைப் பிரதிபலித்த இப்பிரிவினர், “இடதுகரை சினிமாக்காரர்கள்” (LEFT BANK FILM MAKERS) என  அழைக்கப்பட்டனர். அவர்களில் கோடார்ட் (JEAN LUG GODARD) முதலான இடதுசாரிக் கலைஞர்களும் உள்ளடங்குவர்.“சத்துரோ” மற்றும் “அஹஸ் கவ்வ” போன்ற சினிமாக்களில் தொடங்கிய பத்திராஜவின் சினிமாப் படைப்புகளில் அவரது அரசியல் சித்தாந்தம் மிகக்கூர்மையாக வெளிப்பட்டுள்ளது எனக் கூறலாம். தர்மசேன பத்திராஜ 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் – ஜூன் “சதிசி” இதழில் குறிப்பிட்டு உள்ளதற்கமைய, அவர் கண்டி தர்மராஜ கல்லூரியில் கலைப்பிரிவிலே கல்விகற்ற காலத்திலேயே அரசியலில் ஈடுபாடுகொண்டு, மாணவர் போராட்டங்களில் பங்குகொண்டுள்ளார் என்பது தெரியவருகிறது. சில காலமாக இலங்கை சமசமாஜக் கட்சியின், “ஜனதா தருணயோ” (சமூக இளைஞர்) எனும் அமைப்பில் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியதோடு, பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு ‘ட்ரொஸ்க்கியவாதி’யாகவே பிரவேசித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இத்தகைய அரசியல் சித்தாந்தமானது, பத்திராஜவின் சினிமா படைப்புகளில் குறிப்பாக, ‘சத்துரோ’, ‘அஹஸ் கவ்வ’, ‘பொன்மணி’, ‘பம்பரு எவித்’ மற்றும் ‘சொல்தாது உன்னெஹே’ ஆகிய படைப்புகளுக்குத் தேவையான பார்வைக்கோணத்தை வழங்கியுள்ளன என்ற முடிவுக்கு வரலாம்.தர்மசேன பத்திராஜ ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளுக்குச் சொந்தமான ஒரு கலைஞர். இந்தத் தசாப்தமானது சிங்கள் நாவல், சிறுகதை, நாடகம் மற்றும் உரைநடைக் காவியங்கள் என்பன தமது உள்ளடக்கங்கங்களில் புத்தாக்கம் கொண்டவையாய் மிளிர்ந்த ஒரு காலகட்டமாகும். இந்த யுகத்துக்குரிய கலை இலக்கியப் படைப்புகளில் தமது முந்தைய காலகட்டத்தில் கருப்பொருளாக அமைந்த தனிமை, வெறுமை, இளமைக் காதல் மற்றும் மானசீக அசௌகரியங்கள் என்பவற்றுக்குப் பதிலாக, வறுமை, வேலையின்மை, சமூக அநீதிகள், உழைப்புச் சுரண்டல், வீடின்மை முதலான மனிதர்களின் பௌதீகப் பிரச்சினைகளை முதன்மையாகக் கொண்ட கருப்பொருள்களை உள்ளடக்கி இருந்தன. எனினும், இளம் படைப்பாளிகள் அனேகர் இவ்விடயதானங்களை மேலோட்டமாகவே அணுகினர். அதன் விளைவாக, அவர்கள் சமூகத்தின் நிலைப்பாட்டையே வேறுவகையில் மீளக் கட்டமைப்பவர்களாகத் தமது படைப்புகளை வழங்குவதற்கு முன்வந்திருந்தனர்.     

 

எனினும், பத்திராஜவின் அரசியல் சித்தாந்தத்தின் விளைவாக அவர் ஆரம்பத்தில் இருந்தே இத்தகைய போக்கைத் தவிர்த்து வந்திருந்தார். அவர் மனிதர்களின் பௌதீகப் பிரச்சினைகளை மிகைப்படுத்தியோ, மிகை உணர்ச்சியுடனோ சித்திரிப்பதற்குப் பதிலாக, கலாபூர்வமான கோணத்தில் யதார்த்தத்தை மீளுருவாக்கம் செய்யும் அமைந்திருந்தன. அதற்கேற்ற வகையில் அவரது படைப்புக்களின் வெளிப்பாடுகள் பன்முகத்தன்மை வாய்ந்தனவாய் அமைந்தன. ‘சத்துரோ’, ‘அஹஸ் கவ்வ’. பொன்மணி’, பம்பரு எவித்’, ‘பார திகே’, ‘சொல்தாது உன்னெஹே’ ஆகிய அவரது படைப்புகள் அனைத்திலும் கட்டமைந்திருந்த உள்ளடக்கத்திற்கேற்ப அவற்றின் வெளிப்பாட்டு முறைமைகளும் செவ்வையாக அமைந்திருந்தன. இத்திரைப்படங்களில் கைக்கொள்ளப்பட்ட கலைத்துவமான இவ்வெளிப்பாட்டு முறைமைகள் சிங்களச் சினிமாத்துறையில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தின. இப்படைப்புக்களைப் பார்க்க நேர்ந்த பெரும்பாலான ரசிகர்கள் பெரும் திகைப்பில் ஆழ்ந்ததோடு, அத்திரைப்படங்கள் ஜனரஞ்சகமடையாமல் போனமைக்கும் காரணம், இம்மரபு மீறிய சிருஷ்டிப் போக்காகும்.

 

பத்திராஜ ஆரம்பத்தில் இருந்தே தம் படைப்புக்களில் யதார்த்தவாதப் போக்கினைக் கைக்கொண்டாலும், நவீனத்துவ அம்சங்களிலும் அவர் மிகுந்த ஈர்ப்புக் கொண்டிருந்தார்.  எழுபதுகளில் இருந்தே அவர் ஃப்ரான்ஸ் காஃப்காவின் படைப்புகளின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். வித்தியாலங்கார சர்வகலாசாலையில் 1970-71 வருடத்திற்கான இதழை அச்சிட முனைந்த சந்தர்ப்பத்தில் பத்திராஜ வெளியிட்ட கருத்துக்கள் நவீனத்துவம் சார்ந்து அவருக்குள் இருந்த ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிக்காட்டுவதாய் அமைந்திருந்தன. “சிந்த்தக” எனும் பெயரில் அமைந்திருந்த வருடாந்த இதழுக்காகத் தயாரிக்கப்பட்டிருந்த அட்டைப் படத்தைப் பரிசீலித்தபடி, “இப்படியான ஒரு யுகத்தில் இதுபோன்ற கொட்டை எழுத்துக்கள், வரன்முறையான கோடுகள், பிரகாசமான, கருத்தைக் கவரும் வர்ணங்களின் கலவை என்பன எப்படிப் பயன்படுத்தப்படலாம்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். பத்திராஜவின் இந்தக் கூற்று, வேர்ஜினியா வுல்ஃப், ஜேம்ஸ் ஜோய்ஸின், “யூலிஸீஸ்” நாவலைப் பற்றிக் குறிப்பிட்ட கருத்தை நினைவில் எழச் செய்கிறது எனலாம். அவருக்குள் பொதிந்திருந்த யதார்த்தவாதத்தை அடியொட்டிய பயிற்சி, பிற்காலத்தில் பெரிதும் நெகிழ்ந்து போனதிலும், காஃப்காவின் சிறுகதையொன்றை அடியொட்டி, “ஸ்வரூப” (சுயரூபம்) எனும் திரைப்படத் தயாரிப்பில் இறங்குவதற்கும் இச்சிந்தனை மாற்றமே காரணமாக அமைந்திருந்தது எனக் கூறத் தோன்றுகிறது.

 

சீ. ராஜதுரையின் திரைக்கதையை மையமாக வைத்து, தர்மசேன பத்திராஜ இயக்கிய, “பொன்மணி” எனும் தமிழ்த்திரைப்படம் 1977 ஆம் ஆண்டில் இந்நாட்டுத் திரையரங்குகளில் திரையிடப்பட்டன. பத்திராஜ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்து அனுபவங்கள் இத்திரைப்படத்தைத் தயாரிப்பதற்கான உந்துதலை அவருக்கு வழங்கி இருக்கலாம் எனத் தோன்றுகின்றது. இத்திரைப்படத்தில் நடித்த அனேகர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய விரிவுரையாளர்கள் ஆவர்.சிரில் பி. பெரேரா, “சுரதுர” சினிமா இதழில் 1977 ஏப்ரல் 29 எழுதிய கட்டுரையில், பொன்மணி திரைப்படமானது சுமார் 40 வருடகாலமாகத் தொடர்ச்சியாகச் சிதைவடைந்து போயிருந்த தமிழ் ரசிகர்களின் ரசனையுணர்வை மீட்டெடுப்பதற்கும், தென்னிந்திய கனவுத் தொழிற்சாலைகளின் விகாரமான, மோசமான திரைப்படங்களுக்குச் சவால் விடுக்கும் வகையிலும் அமைந்த ஒரு நல்ல முயற்சியாகும்” என்று குறிப்பிட்டிருந்தார். பேராசிரியர் சுச்சரித்த கம்லத் 1977 ஏப்ரல் 24 ஆம் திகதி “சிலுமின” பத்திரிகையில், “இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொதுவானதும், யாழ்ப்பாண மண்ணைப் பொறுத்தளவில் குறிப்பானதும் கொடுமையானதுமான சாதிப் பிரிவினையையும், சீதன முறைமையையும் பத்திராஜ பொன்மணி திரைப்படத்தினூடே நன்கு வெளிப்படுத்தி உள்ளார்” என்று எழுதி இருந்தார்.

 

பத்திராஜ இவ்வாறானதொரு தமிழ்த் திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்தமையின் மூலமும் அவருக்குள் இருந்த இடதுசாரி அரசியல் சித்தாந்தம் தாக்கம் செலுத்தியுள்ள விதம் குறித்துக் கண்டறிய முடியும். அவர் இனவாதத்துக்கு எதிரான மானிடவாதச் சிந்தனைவயப்பட்டிருந்தார். ஐம்பதுகளின் பிற்கூறு வரையான காலகட்டம் வரை இனவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டின் மூலவேர்கள் பழைய சமசமாஜக் கட்சியில் ஓரளவுக்குப் பரவிக் காணப்பட்டன. தமிழ் மக்களின் அன்றாட வாழ்வை ஆராய்ந்து பார்ப்பதற்கும், அதனைப் புரிந்துகொள்வதற்கும், அதனை மீளுருவாக்கம் செய்வதற்குமான முயற்சியில் அவர் இறங்குவதற்கு அவர் அதன் மூலம் பெற்றுக்கொண்ட சித்தாந்தப் பரிச்சயம் காரணமாக அமைந்து இருக்கக்கூடும்.

 

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பீடாதிபதியாக அக்காலத்திருந்த பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் பத்திராஜ ஓர் இனவாதியல்ல என்பதை நன்குணர்ந்திருந்தார். மாணவர்கள் மத்தியில் இனவாத உணர்வுடன்கூடிய மோதல்கள் அல்லது கொந்தளிப்பான நிலைமைகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் அந்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் அவர் பத்திராஜவையே பெரிதும் ஈடுபடுத்தினார். வட்டுக்கோட்டையில் அமைந்திருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட அத்தகைய மோதல் ஒன்றின் போது, அம்மாணவர்களுடன் ஆழ்ந்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டவாறு அம்முரண்பாட்டைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு தர்மசேன பத்திராஜவுடன் சேர்ந்து விடிய விடிய விழித்திருந்த சுவையான அனுபவம் இக்கட்டுரையாளருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

 

இனவாதத்துக்கு எதிராகப் பத்திராஜவிடம் ஏற்பட்டிருந்த இத்தகைய சித்தாந்தத் தெளிவும் நடைமுறையும், இலங்கையின் சமகால அரசியல் நடைமுறைகளுக்கு எதிராக மேற்கிளம்ப வேண்டிய மிகப்பெரும் முன்மாதிரிச் சக்தியாக மாறவேண்டும். அவரது ‘பொன்மணி’ திரைப்படத்தை அடிப்படையாக வைத்து, ‘ஆரம்பய’ பத்திரிகையில் 1977 ஏப்ரல் இதழுக்கு திலக் ஜயரத்ன எழுதியிருந்த கட்டுரையில் இடம்பெற்ற கூற்றினைக் கொண்டு இக்கட்டுரையை நிறைவு செய்வது மிகப் பொருத்தமானதாக அமையுமென்றே கருத முடிகிறது.

 

“குறுகிய அரசியல் நோக்குகளுக்காக இலங்கை அரசியல்வாதிகளால் கட்டியெழுப்பப்பட்டுள்ள இனவாதத்துக்கான மிகச்சிறந்த மறுமொழியை இத்திரைப்படத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். சிங்களவராக இருந்தாலும் தமிழராக இருந்தாலும் மனிதர்களுக்கிடையில் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் இருப்பதையும் அவர்கள் அனைவரும் ஒரே வகையான பிரச்சினைகளையே எதிர்கொண்டு வருகின்றனர் என்பதையும் இவ்விரு சமூகங்களும் விளங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்தத் தெளிவினைப் பெறுவதில் ‘பொன்மணி’ திரைப்படத்தை அடியொட்டி இவ்விரு சமூகங்களுக்கும் இடையில் சிறியளவிலேனும் நிகழக்கூடிய உரையாடலானது ஒரு பெரும் ஒளிப்பிழம்பினை ஏற்படுத்தக்கூடும்.”

 

௦௦௦௦௦௦௦௦௦௦

சிங்களத்தில்: பேராசிரியர் ஜினதாச தனன்சூரிய

பேராசிரியர் ஜினதாச தனன்சூரிய: களனிப் பல்கலைக்கழகத்தின் சிங்களத்துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர். இவர் சிங்கள மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த ஏராளமான திறனாய்வுக் கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ளார்.    

புகைப்படங்கள்: கலாநிதி ஹினிதும சுனில் செனவி

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment