Home » இதழ் 02 » துயரத்தின் கதைகளை, அங்கதத்தால் சொல்ல முடிந்த கதைஞன்!

 

துயரத்தின் கதைகளை, அங்கதத்தால் சொல்ல முடிந்த கதைஞன்!

 

சயந்தனின் ‘ஆறாவடு”                                                                                                                                                     – பௌசர்-

—————————————————–

போர் கொதித்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் ஆயிரமாயிரம் கதைகள் எழுதப்படவேண்டி நமக்குள் உள்ளன. அப்படியான எழுத்துக்கள் படிப்படியாக எழுதப்படத் தொடங்கி விட்டன என்பது எனது பார்வை. அத்தகைய எழுத்துப்பிரதிகள் சார்பு, எதிர்ப்பு என்கிற அடையாளப்படுத்தல் வகை மாதிரிக்குள்ளும் தொடக்குக்கும் தழுவலுக்குமான தேர்வுக்குள்ளும் நமது தமிழ் வாசக மனம் அடைந்து கிடப்பது சங்கடம் தருகிறது. என்ன செய்யலாம்? இந்த அரசியல் மனம் நம்மை விட்டு சுலபத்தில் அகலப் போவதில்லை என்றாலும் இந்த நிலைமையை மாற்ற நமது தமிழ்ச் சூழலில் ஒரு கலாசாரப் புரட்சி நடந்தாகத்தான் வேண்டும்.

இந்த பண்பு ,பார்வை மாற்றத்திற்கு, நமது வாழ்வில் அனைத்துப் பகுதிகளையும் போக்குகளையும் தன்னிலை சார்ந்து மட்டுமல்லாது பிறர் நிலை சார்ந்தும் அணுகி ஒழிவு மறைவின்றி எழுதும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கதைசொல்லிகள் தோவைப்படுகிறார்கள். நான் இதுவாகவே இருந்தேன், இருக்கிறேன். என்கிற பார்வையும் தாண்டி மற்றவர்களும் இருந்ததற்கும், இருப்பதற்குமான அகமும் புறமுமான பார்வைத் தேர்வு முக்கியமானது எனக்கருதுகிறேன். நமது மனங்களிலும் எண்ணங்களிலும் குடி கொண்டுள்ள  பொதுப் புத்தி சார்ந்த பல் வேறு கதையாடல்கள்,முன்முடிவுகள் உடைக்கப்பட்டு இக்கதையாடலின் அடிப்படையான கற்பிதங்கள், புனைவுகள்,போக்குகள் அதன் சூழல்கள் விரிவாக எழுதப்பட்டு பதியப்படவேண்டிய காலகட்டம் இது! மனிதர்களினதும் சமூகங்களினதும் வாழ்வை எழுதுகிற படைப்புகள் ஏன் முக்கியத்துவமாகின்றன என்கிற கேள்வி நமக்குமுன் உள்ளது.

சயந்தன் ஒரு படைப்பாளி என்கிற வகையில் தனது கருத்துக்களை முன்னிலைப்படுத்தாமலும் தனது நிலைப்பாட்டை நிறுவும் போக்கினையும் கைவிட்டு ,பல பாத்திரங்களின் ஊடாகவும் சனங்களின் வழியாகவும் இலங்கை இனச்சிக்கலின் பின்புலத்தில் ஒரு காலகட்டத்தில் (கிட்டத்தட்ட15 வருடம்) நிலவிய போக்குகளையும் நிலவரங்களையும்; அதன் திசைகளையும் எழுத முயன்றுள்ளார்.

ஒரு படைப்பாளி தான் ஒரு பாத்திரமாக மாறாமல் பிரச்சார நோக்கத்துக்காகவோ தனது நிலைப்பாட்டை வலுப்படுத்தவோ நிறுவவோ முயலாது  ,தான் படைக்க விரும்பிய அந்த காலகட்ட வாழ்வின் பல்வேறு போக்குகளையும் மனோநிலையையும் வரலாறு அந்த மனிதர்களை எப்படி நடாத்துகிறது ,நடாத்தியதுஎன்பதை சொல்லி இருக்கிறார். ஆறாவடு நாவலில்…. இதுவே இந்த நாவல் கூர்ந்து பார்க்கப்படுவதற்கும், முக்கியத்துவம் பெறுவதற்குமான முன்மாதிரியை நமது தமிழ் சூழலில் தருகிறது என நம்புகிறேன். ஒரு படைப்பாளியின் தன்னிலை சார்ந்த  அரசியல் நம்பிக்கையையும் தாண்டி அப்படைப்பு முழுமை பெறுவதற்கு இந்த தன்மை அவசியமானதாக இருக்கிறது. என நான் கருதுகிறேன்.

நான் இந்த நாவலை வாசித்ததன் ஊடாக பெறுகிற தரிசனம் வரலாறு மனிதர்களை எப்படி எப்படி கட்டமைக்கிறது, எங்கு எங்கு கொண்டு நிறுத்துகிறது என்பதுடன் இதில் அவர்களது பார்த்திரம் என்ன என்பதனையும் தான் எனக்கு காட்டுகிறது. இக்கதைகளின் ஊடாக வருகின்ற பார்த்திரங்கள் இக் கேள்விக்கான பதிலை தம்மை சூழ கவிந்திருந்த ஒவ்வொரு காலகட்ட இருன்மையும் நெருக்கடியுமிக்க வாழ்வு அனுபவத்தின் ஊடே நமக்கு முன்தருகிறது. இதனை நாம் பார்க்க வேண்டும் என்றால் இந்த நாவலில் மட்டுமல்ல, நடைமுறையிலும் ஏராளமான உதாரணங்கள்  நம்முன் நாளுக்கு நாள் விரிந்து கொண்டிருக்கின்றன. இதற்கான உதாரணங்களை விரித்து சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன்.

அமுதனின் கதை

————————-

இத்தாலிக்கு போக மூன்றாவது முறை ஏஜெண்சுக்கு காசி கட்டி மூன்று மாதத்தின் பின் நீர்கொழும்பிலிருந்து மீன்பிடி வள்ளமொன்றில் அறுபத்தி நாலுபேருடன் கடல் பயணத்தை தொடங்குவதுடன் அமுதன் நமக்கு அறிமுகமாகிறார்.

சொந்த பெயர் ஐயாதுரை பரந்தாமன், ஐந்து வருட இடைவெளிக்குள் இயக்கம் இரண்டு பெயர்களை வைத்தது.  இவான் இந்திய இராணுவம் வெளியேறிய இரண்டாவது மாதத்திலும் ,அமுதன் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்கு ஆறுமாதத்திற்கு முன்பும். இந்திய இராணுவம் இலங்கையில் கால்பதித்த காலகட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்திருந்த ஐயாத்துரை பரந்தாமன் .இந்தியப் படையால் பிடிக்கப்பட்டு ஈ பி ஆர் எல் எப் யினரால் பலவந்தமாக உயிர் அச்சுறுத்தலுகுள்ளாக்கப்பட்டு  தமிழ்த் இராணுவ ஆயுதபாணியாக மாற்றப்படுகிறார். இவருடன் இவரது நண்பர் தேவபாலுவும்.

“இரண்டாவது நாள் துவக்குச்சுடவும் கிரனைட்டை சுழற்றி எறியவும் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அப்படியே இரண்டு மூன்று நாள் பயிற்சிகள் கடந்த பிறகு ஒருநாள் இவன் பொறுப்பாளரிடம் தயங்கி தயங்கி கேட்டான், அண்ணை எங்கட தலைவர் யார் என்று இண்டைக்கு வரைக்கும் சொல்லேல்லையே.”

இதுதான் ஐயாத்துரை பரந்தாமனின் இயக்க வாழ்வின் ஆரம்பம். இக்காலகட்டத்தில்  இவரின்அரசியல் சமூகம் பற்றிய பொது அறிவின் பார்வை மனப்பதிவு இது….

” இந்திய இராணுவம் வருகிறதாம் என கதையடிபட்டபோது இவனுக்கு இந்தியா பற்றிய மூன்று சங்கதிகள் தெரிந்திருந்தன.

1.    இந்திய  ஒரு வெளிநாடு.
2.    இந்திய ஜனாதிபதி எம். ஜீ. ஆர். அவர் ஒரு தமிழர்.
3.    இந்தியாவில் ரஜனிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் முதலான நடிகர்களும் ராதா, அமலா, நதியா முதலான நடிகைகளும் வாழ்ந்து வருகிறார்கள்.”

இப்படியான  ஐயாத்துரை பரந்தாமன்ஆயுதபாணியாக்கப்பட்டு அவர் வாழ்வு அன்றைய அரசியல் சூழலால் தீர்மானிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளில் சேரும் முடிவுகூட அவனால் எடுக்கப்பட வில்லை என்பதும் இங்கு முக்கியம்.

ஈபி ஆர் எல் எப் காலத்தில் ஒரு சம்பவம் ஊர்காவற்துறையிலிருந்து நயினாதீவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் “அலையரசி” படகினை  கடலில் வழிமறித்து யாழ்ப்பாணத்தில் இந்தியப்படைக்கு ஆதரவாவக நடக்கும் கூட்டத்திற்கு பயணிகளை வலுக்கரமாக அழைத்துச் செல்லும் கட்டத்தில் அமுதன் இப்படி நடந்து கொள்கிறான்.

“இவன் தனது கைகளில் எல்எம்ஜியை வானத்தை நோக்கி உயர்த்தி பிடித்திருந்தான். சற்று முன்னர் அதிலிருந்து மூன்று நாங்கு குண்டுகள் கடல் அதிரும் சத்தத்தோடு  வெளியேறியிருந்தன. “என்னத்திற்கு எங்கள திரும்ப கூட்டிக் கொண்டு போறீங்கள் எண்டு தெரிஞ்சு கொள்ளலாமோ?” என்று அதிபர் கேட்டார்..”
“கொண்டு வரச் சொல்லி ஓடர்”
“யாரிட்ட இருந்து”
“மேலிடம்”
“நானொரு அதிபர் கவர்மெண்ட் உத்தியோகத்தன். இஞ்ஞை பாரும் சனங்கள் குழந்தைகள் வயோதிபர்கள் எண்டு நிறையப் பேர். இப்படி நீங்கள் செய்யக் கூடாது… சனங்களின்ர சாபம் உங்கள சும்மா விடாது. நீங்கள் செய்யிறது நல்லதில்லை….”

இந்த இடத்தில் ஐயாதுரை பரந்தாமன் அதிகாரத்தின் கருவியாய் மாறுகிறான். “இவனுக்கு உச்சந்தலை கொதித்துக் கொண்டு வந்தது நாங்கள் செய்கிறது நல்லதில்லை எண்டு எங்களுக்கும் தெரியுமடா நாயே என்று அவரைப்பிடித்து தள்ளினான். தடுமாறி விழப் போனவரை அவரது மனைவியாக இருக்க வேண்டும் ஒருவாறு தாங்கிப்பிடித்துக் கொண்டாள். தோளில் சாய்ந்திருந்த குழந்தை நித்திரை குழம்பி கத்தத் தொடங்கியது இவனுக்கு இன்னும் கோபம் அடங்கியமாதிரி தெரியல்ல”

“எடியே உன்ர புருசனிட்ட கேள், உயிரோட கரைக்குப் போக விருப்பமோ இல்லாட்டி செத்த சவமா கடலுக்குப் போக விருப்பமோ எண்டு” அதற்குப் பிறகு அலையரசி அமைதியானது ஒன்றிரண்டு விசும்பல்கள் மட்டுமே கேட்டன.”

“கரையில் வெயில் கடுமையாக இருந்தது, இவர்களை அழைத்துப் போக இரண்டு மினி பஸ்சுகள் அங்கே நின்றன. முன்னொரு காலத்தில் சுடலையில் குப்புறக் கிடத்தி சுட்டு சுட்டு விளையாடிய, இப்போதய இவனது பொறுப்பாளன் இவர்களை வரவேற்றான்.”

இந்த இடத்தில் ஐயாதுரை பரந்தாமனுடன் சேர்த்து நண்பனான தேவபாலுவும் ஆயுதபாணியாக்கப்பட்டதையும் தேவபாலுவின் அகாலமரணத்தையும் குறித்துக் காட்டவேண்டி உள்ளது.

“இவனையும் தேவபாலுவையும் பின்னால் கைகளைக்கட்டி இந்திய ஆமிக்காரர் இவ்விரண்டு பேராக தூக்கி ட்ரக்கில் எறிந்தார்கள் ட்ரக் புறப்பட்ட போது அம்மா தலைவிரி கோலமாக பின்னாலே ஓடிவந்தா….”

“இவனை, தேவபாலுவை, சந்திரனை, காந்தனை இன்னும் ஊரின் இளைஞர்களை கைகளை பின்புறமாக கட்டி வெறும் பென்ரரோடு குறுக்கும் மறுக்குமாக நிலத்தில் போட்டிருந்தார்கள். உடல் முழுவதும் முரட்டு சப்பாத்துக்களின் அடையாளம் புழுதியால் பதிந்திருந்தது…..”

௦௦௦௦……

“இவனும் தோழர்களும் முகாமுக்கு திரும்பினார்கள் அடுத்துவந்த காலங்கள் பதற்றம் மிகுந்தவையாக இருந்தன. இவனது பொறுப்பாளர்கள் பேயறைந்ததைப் போல திறிந்தார்கள். இந்தியப் படைகள் வெளியேறப்போவது கிட்டத்தட்ட உறுதியானது. வன்னிக் காட்டுக்குள் நின்ற பெரிய பெரிய புலிகலெல்லாம் கொழும்பு ஹில்டன் தங்கி நின்று பிரமதாசாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் தமிழ் தேசிய இராணுவத்தை சேர்ந்த பலரை போட்டுத்தள்ள புலிகள் தொடங்கி இருந்தார்கள் அவர்களில் தேவபாலுவும் ஒருவனானான்.”

“அவன் வீட்டுக்குப் போயிருந்த போது அது நடந்தது. அன்றைக்கு அவனது குழந்தையின் பிறந்த நாள். விடிய ஆறுமணிப் பொழுதில் அவன் வீட்டக்குப் புறப்பட்டான். குழந்தையை முதுகில் சுமந்து ஒரு யானையைப் போல தேவபாலு தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த எட்டுமணி வாக்கில் வெளிப் படலையை இரண்டு இளைஞர்கள் தட்டினார்கள். அதற்கு சற்று நேரம் கழித்து அவர்கள் தேவபாலுவையும் தட்டினார்கள்”

“இளைஞர்களில் ஒருவன் தேவபாலுவின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து அழுத்திய போது கண்கள் இருளத் தொடங்கின தேவபாலுவின் குரல் நடுக்கமுற்று கீச்சிட்டது “நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை… நான்.” என்று அவன் முடிக்க முன்பாகவே சத்தம் அதிர பிடரியை பீய்த்துக் கொண்டு குண்டு பறந்தது. அவன் தேர் சரிவதைப் போல பின்புறமாக சரிந்தான். திறந்து கிடந்த விழிகளில் திகைப்பு அடங்கியிருக்கவில்லை. மனைவி மூச்சிப் பேச்சின்றி சரிந்தாள்…. தேவபாலுவின் குழந்தை அவனது தலைக்கு அருகில் உட்காந்து இரத்தத்தில் கைகளை அளைந்து விளையாடியது. பிறகு “ப்பா ப்பா” என்று அவனது கன்னத்தில் தட்டியது சற்று நேரத்தில் பீரிட்டு கத்தத் தொடங்கியது…..”

“தேவபாலுவின் சாவு இவனை கலங்கடித்திருந்தது. இந்தியப் படைகள் வெளியேரும் நாள் நெருங்க நெருங்க சாவு வாயைப் பிளந்தபடி இவனை நோக்கி விரைவதைப் போலவே இருந்தது. சுழி புரத்தில் இந்திய இராணுவமுகாம் ஒன்றுக்குள் இவர்கள் முடங்கிக் கிடந்தார்கள்.

௦௦௦௦௦…

விடுதலைப் புலிகளில் சேர்க்கப்பட்டது

“புலிகள் வீட்டுக்குள் புகுந்த போது அவர்களது கைகளில் துப்பாக்கிகள் எதனையும் கொண்டுவரவில்லை….” “சாவுக்கு இரண்டு சோடிக் கால்கள் முளைத்து வாயில் படியில் நிற்பதை இவன் கண்டான்… இப்படித்தான் முன்பு ஒரு நாள் தேவபாலுவின் வீட்டு வாசலிலும் சாவு முளைத்தபடி நின்றது.”

“அப்பு ராசாக்கள் உங்கள கையெடுத்துக் கும்பிடுறன். இவன் எதனையும் விரும்பிச் செய்யல, காலமும் நேரமும் அவனை இப்படி அலைக்கழிக்குது, தயவு செய்து அவனை விட்டுட்டு போங்கோ இவனை தன்பின்னால் தள்ளி மறைத்துக் கெண்டாள்….” தாய்.

“இவனது கையைப் பிடித்தார்கள். உடல் நடுங்கத் தொடங்கிய போது வார்த்தைகள் அது பாட்டுக்கு வந்தன. உங்களுக்கு தெரியாத ஒன்றில்ல ஈ.பி என்னை பைஃபோசாகத்தான் பிடித்து அவ  சென்னதைத்தான் நான் செய்தேன்.”

“போகுற வழியில் புலிகள் சந்திரனையும் கைது செய்தார்கள்…. நகரின் இரண்டாம் குறுக்குத் தெருவில் மதில் சுவர்களை மேலும் உயர்த்தி தாவரங்களால் வேலி இடப்பட்டகாணியில் அந்த பெரிய வீடு இருந்தது…..”

“இவர்கள் நுழைந்த போது அங்கு ஏற்கனவே கோயில் ஐயர்கள், பள்ளிக்கூட அதிபர்கள் சேர்ச் பாதிரிகள் சரணடைந்து இருந்தார்கள்….. பருத்த உடம்பினை உடைய புலிகளில் ஒருவன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான்….”

“உள்ளே “சொல்லடா நாயே” “சாகவிருப்பமோ” எங்களுக்கு எல்லாம் தெரியும் முதலான வார்த்தைகள் கடூரமாக ஒலித்த வண்ணம் இருந்தன….”

“ ‘ஒருக்கா உள்ளே வந்து பாருங்கோ’ என்று அழைத்தான் விசாரணையாளன், இவர்கள் உள்ளறைக்கு நடந்தார்கள். அங்கு நிறையப் பேருக்கு வேறுமாதிரியும் விசாரணை நடந்து கொண்டிருந்தன….. இவன் தன்னை அறியாமல் பொறுப்பாளர் என்று கூவினான். இவனது முன்னாள் பொறுப்பாளர் கைகள் பின்னால் கட்டப்பட்டு வெறும் ஜட்டியோடு தலையை குனிந்தபடி உட்காந்திருந்தார். அவரை இந்தியாவுக்கு கூட்டிப் போய் இருப்பார்கள் என்றுதான் இவன் நம்பியிருந்தான்.  “இந்திய வேசை மக்கள் நம்ப வைச்சு கழுத்தறுத்துப் போட்டான்கள்” என்று விசாரணை இடைவெளி ஒன்றில் முனகியதாக விசாரனையாளன் சிரித்துக் கொண்டு எங்களிடம் சொன்னான்….”

‘இவர்களைப்பற்றி எங்களுக்கு தெரிந்ததை விட அதிகமாக உங்களுக்குத் தெரியும் யார் யார் என்ன நடவடிக்கையில் ஈடுபட்டவை எங்கிற விசயங்கள் நீங்கள் தரவேனும்.”

“இவன் தரலாம் என்பதைப் போல தலையசைத்தான். அது தலையாட்டி அசைப்பதைப் போல மேலும் கீழுமாக இருந்தது. பிறகு சொல்லத் தொங்கினான்………”

௦௦௦௦௦…

“நீர் எங்களோட நில்லுமன்” என்றான் விசாரனையாளன். பிறகு “வெற்றியும்” முந்தி ரெலோவில இருந்து எங்களோட சேர்ந்த ஆள்தானே”  என்று சொன்னான்.”

‘இவன் மிக சாதாரணமாக “சரி” என்றான்”

“மூன்று மாதங்களுக்குப் பின் இவனுக்கென்று புதிய பொறுப்பாளர்கள், புதிய நண்பர்கள் கிடைத்திருந்தனர்.”

௦௦௦௦..

இப்படியாகத்தான் ஐயாதுரை பரந்தாமன் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் உறுப்பினறாகிறார். இந்த பிரதான பாத்திரத்தின் விபரிப்பை முழுவதுமாக குறித்துக் காட்ட வேண்டி இருந்ததற்கான காரணத்தை நீங்கள் புரிந்திருப்பீர்கள்…… ஐயாத்துரை பரந்தாமனின் விடுதலைப் புலிகளின் காலம், சனங்களின் மனோநிலை, விடுதலைப்புலிகளின் அரசியல் இயக்கச் செயற்பாடு, சாதியம், புலம் பெயர் மக்களின் வருகை, தியாகி, துரோகி கதையாடல், நேரு ஐயாவின் பாத்திரம் 2012 சமாதான காலம், கொலைகள், அமுதனின் காதல், அமுதன் இயக்கத்திலிருந்து விலகுதல், சிங்ள தமிழ் முரண்பாடு, கடற்பயணம் என இந்த நாவல் பல சம்பவங்களின் ஊடாக மேலும் விரிகிறது.

இந்த நாவலில் அக்காலகட்டத்தின் மக்களின், இயக்கங்களின்,  அரசியலின் தெளிவான சித்திரத்தை  தனது கதை சொல்லலின் ஊடாக சயந்தன் தீட்டியிருக்கிறார். இது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதியல்ல. முழுக்க முழுக்க பாத்திரங்களின் வழியே அரசியல் பேசுகின்ற,  தன்னிலைக் கதை சொல்லலைக் கடந்தஅரசியல் பிரதியென்பதில் எனக்கு ஐயமில்லை. அது எதிர்ப்பு அரசியலுமல்ல ஆதரவு அரசியலுமல்ல. சனங்களின் வாழ்வை எழுதிய ஒரு கலைஞனின் தன்னிலை சார்ந்த எழுத்தில் இருந்து விலகிய ஒரு புறவயமான படைப்பு மனோநிலையிலிருந்து பிறந்தவை….

ஐயாதுரை பரந்தாமன், தேவபாலு போன்றவர்களை நீங்கள் வாழ்வில் சந்தித்திருக்க முடியும். இப்படியான மாற்றங்களையும் கொலைகளையும், நெருக்குவாரத்தையும் நீங்களும் நானும் கடந்து வந்தவர்கள்தான். தான் கண்ட வாழ்வின் ஒரு பகுதியை சயந்தன் படைப்பு மொழி ஆளுமையுடன் பதிவு செய்திருக்கிறார். இந்த நவீனத்தை வாசிப்பதன் ஊடாக நான் ஒரு காலகட்ட சமூகம், அரசியல் சார்ந்த பல்வேறு போக்குகனை துல்லியமாக இனங்காண்கிறேன்…….

தொடரும் –

௦௦௦

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment