Home » ஆனந்தன் » வலைஞர்மடம்-செபமாலை தேவாலயம். போரின் இறுதி நாட்களில்……..

 
 

வலைஞர்மடம்-செபமாலை தேவாலயம். போரின் இறுதி நாட்களில்……..

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

பதிவு-

அகால மரணம்
———————
                                                                                                                                                                                                          -ஆனந்தன்-

 

மார்ச் 2009. வலைஞர்மடத்தில் உள்ள செபமாலை மாதா தேவாலயத்தைச் சுற்றிவளைத்துத் தங்கள் பிள்ளைகளைப் பொத்திக் காப்பதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான தாய்மாரும் தகப்பன்மாரும் சூழ்ந்திருக்கிறார்கள். எண்ணூறுக்கும் கூடுதலாக இளைஞர்களும் இளம் பெண்களும் அங்கே, அந்தத் தேவாலயத்தில் அடைக்கலம் தேடிச் சரணடைந்திருந்தனர்.

குளிப்பு, சாப்பாடு, தூக்கம் என்ற எதுவும் ஒழுங்காக இல்லை. அநேகமாக 13 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகம். எல்லோரும் தேவாலயத்திலும் தேவாலய வளவிலும் படுத்திருந்தார்கள். அங்கேயே சாப்பிட்டு, அங்கேயே மலம்கழித்தார்கள். அங்கேயே அவர்களுடைய இரவும் பகலும் வந்து போயின. தேவாலயத்துக்கு அப்பாலான உலகத்தை அவர்கள் பார்க்க விதியில்லை.

வெளியே போகமுடியாது. போனால், போர்களத்திற்குத்தான் போகவேணும். எனவே, தேவாலயமே சிறைவளாகமானது. இந்தச் சிறை அவர்களாகவே உருவாக்கியதல்ல. சூழல் உருவாக்கியது. அது உருவாக்கிய நிலைமைகளின் விளைவு.

போர்களத்திற்கு போகலாம் என்றால், தேவாலத்திற்கு வந்திருக்கத் தேவையில்லையே. தேவாயலத்திற்கு வந்ததே போர்க்களத்திற்கு போகமுடியாது என்றபடியால் அல்லவா! அந்தக் கட்டத்தில் போர்க்களத்திற்கு போவதால் எந்தப் பயனும் இல்லை என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.

களநிலவரம் மாறி படையினருக்கு வாய்ப்புகள் குவிந்த பின் போர்க்களத்திற்கு போவது சாவுக்கு ஒப்பானது. சாவுக்குத் தங்கள் தலையைப் பரிசளிக்க அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் மட்டுமல்ல விசயமறிந்த யாருமே விரும்பவில்லை. அதனால், தங்களை எப்படியாவது காப்பற்றுவதற்காகவே அவர்கள் பாடுபட்டார்கள்.

 

 

 

அதற்காகவே அந்தத் தேவாயலத்தில் சரணடைந்திருந்தார்கள். அதற்காகவே மாதாவுக்குத் தோத்திரம் சொன்னார்கள். அதற்காகவே அவளை வழிபட்டார்கள். இதிலே மதபேதங்கள் ஏதுமிருக்கவில்லை. நெற்றியிலே திருநீற்றைப் பூசிக்கொண்டே மாதாவின் முன்னிலையில் மன்றாடினார்கள். கழுத்திலே குருசைக் கட்டியோரும் கைகளிலே வேதாகமத்தை வைத்திருந்தோரும் மாதாவின் முன்னே மண்டியிட்டழுதனர். சுருவத்தை வணங்காத கிறிஸ்தவர்களும் மாதாவின் திருச்சுருவத்தின் முன்னே மன்றாடினர். ‘றைபிளை’ ஏந்தமுடியாதென்பதற்காக ‘பைபிளை’ ஏந்தினார்கள் பலர். எல்லாமே  போர்க்களத்திற்கு போகும் விதியை நிராகரிக்கும் படியான மன்றாட்டங்கள். ஒரே வகையான பிரார்த்தனை இந்த மாதிரி மரணம் சூழ களங்களில்தான் உருவாகின்றன போலும்.

தேவாலய வளாகத்தில் வன்னியின் அத்தனை கிறிஸ்தவ மதகுருமார்களும் ஒன்றாக இருந்தனர். தலைமை மதகுருவாக ஜேம்ஸ் பத்திநாதர் இருந்தார். கன்னியாஸ்திரியர்கள் இருந்தனர். அவர்களோடு வன்னியிலிருந்த மருத்துவர்களும் இருந்தார்கள். இன்னும் ஒன்றிரண்டு அரச அதிகாரிகளும் இருந்தனர். அதற்கு அருகே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உள்ளுர் பிரதிநிதிகள் இருந்தார்கள். இன்னும் வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோரும் அக்கம் பக்கமாக இருந்தனர். எல்லோருக்கும் தேவாலயம் ஒரு பாதுகாப்பான சூழல் என்ற எண்ணம்.

மாதாவை ஏற்றுத் தேவலாயம். தேவாலயத்தையும் மாதாவையும் நம்பி மதகுருக்கள். மாதாவையும் தேவாலயத்தையும் மதகுருக்களையும் நம்பி மருத்துவர்கள். மாதாவையும் தேவாலயத்தையும் மதகுருக்களையும் மருத்துவர்களையும் நம்பிப் பாதுகாப்பிடம் தேடும் இளைஞர்களும் யுவதிகளும். இந்தச் சூழலை நம்பிச் சனங்கள். அதனால் அதைச் சுற்றிவர ஆயிரக்கணக்கான குடும்பங்கள். அவர்களுடைய அகதிக்கூடாரங்கள். அவர்களுடைய பதுங்குகுழிகள். அந்த வளாகமே இருந்தது நம்பிக்கையின் மையமாகியது.

மதகுருக்களும் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் மருத்துவர்களும் அதிகாரிகளும் அங்கே இருப்பதால் தேவாலயத்திற்கு வந்து கட்டாயமாக போருக்கு பிடித்துச் செல்ல வாய்ப்பிருக்காது என்றே பெற்றோர் நம்பினர். பிள்ளைகளும் அப்படியே நம்பினார்கள். பெரும்பாலும் எல்லோரும் அவ்வாறே நம்பினார்கள்.

அது ‘பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் மகிழ்ந்திருந்த காலம், அவர்கள் மட்டுமே ஓரளவுக்கு நிம்மதியாக இருந்த காலம்’. மற்றும்படி பிள்ளைகளைப் பெற்றவர்கள் எல்லாம் நித்திரையையும் சந்தோசத்தையும் தொலைத்திருந்த காலம். ஒரு வாய் சோற்றை, ஒரு கிண்ணம் கஞ்சியை உள்ளுக்குள்ளே இறக்க முடியாமல் அந்தரித்த காலம். போதாக்குறைக்கு தலைகளைக் கொண்டு போகும் படையினரின் தாக்குதல்களும்.

ஆகவே அவர்கள் நிம்மதியாகத் தூங்கி எத்தனை நாட்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் சிரித்து மகிழ்ந்து எத்தனை நாட்கள் என்றும் யாருக்கும் தெரியாது.

மடியிலே நெருப்பை வைத்திருப்பவன் சிரித்து மகிழ முடியுமா? கண்ணுக்கு முன்னே பிள்ளைகள் கதறக் கதற இழுத்துப் போர்க்களம் கொண்டு போகப்பட்ட நாட்கள் அவை. அப்படிக் கதறக் கதறக் கொண்டு போகப்பட்டவர்கள் இரண்டு அல்லது மூன்று நாள் பயிற்சியின் பிறகு போர்க்களத்தில் விடப்பட்டு நான்காம் நாளோ ஐந்தாம் நாளோ பிணமாகக் கொண்டு வரப்பட்ட நாட்கள் அது.

பயிற்சிக்குப் போகாமலே பலியானோரும் உண்டு. பயிற்சியில் பலியானோரும் உண்டு. இந்த நிலையில் எந்தத் தாய் தன்னுடைய பிள்ளையை போருக்கு அனுப்புவாள்? எந்தத் தந்தை தன்னுடைய புதல்விக்கோ புதல்வனுக்கோ நெற்றியில் வெற்றித்திலகமிடுவான்? எனவே, பல பெற்றோர் அந்தத் தேவாலயத்தைச் சுற்றி, மாதாவைச் சுற்றிக் காவல் இருந்தார்கள்.

 

அன்று வன்னியில் யாரும் புறநானூற்றுக் காலத்திற்குப்போகவிரும்பவில்லை. படையினர் கண்ணுக்கு முன்னே,  கூப்பிடு தொலைவில் நிற்கிறார்கள். படையினரை விரட்டுவதற்காக ஒரு காலத்தில் தீரமாகப் போர் தொடுத்தவர்களில் சிலர் தரப்பாள் கூடாரங்களில் தலைமறைவாகியிருந்தார்கள். அவர்களைத் தேடி புலிகளின் படையணிகள், ஒலிபெருக்கிகளில் வலைவீசித்திரிந்தன. புதிய போராளிகளைச் சேர்ப்பதற்கு முதல் பழைய போராளிகளைத் தேடிச் சேர்க்க வேண்டியிருந்தது.

இந்த நிலையில், புதிதாக போருக்குப் போக யார் தயார்? அதைவிட இன்றோ நாளையோ என்ற மாதிரி மிஞ்சியிருக்கின்ற அந்த சிறிய கடலோர நிலத்துண்டையும் படையினர் பிடித்துவிட தயாராகி நின்றபோது, முற்றுகை இறுகியபோது, சண்டையிட யார் துணிவார்? அதிலும் புதியவர்கள்?

 

அதனால், இவர்கள் எல்லாம் தேவாயலத்தில் சரணடைந்திருந்தார்கள். 800க்கும் அதிகமான இளைஞர்களும் இளம் பெண்களும் இரவு பகலாக அங்கேயே இருந்தார்கள். கொளுத்தும் வெய்யிலிலும் கொட்டும் மழையிலும் அங்கேயே படுத்து எழும்பினார்கள். ஐந்து நாள் அல்லது எட்டு நாள் என்ற கணக்கில் வாய்க்கும்போது குளித்தார்கள்.

வெளியே எங்காவது இருந்து சாப்பாட்டை எடுத்து வந்தார்கள் பெற்றோர்.  இரகசியமாக, களவாகக் கொண்டு வந்த சாப்பாட்டை கையில் குழைத்துக் கொடுத்தார்கள். கஞ்சி என்றால் கிண்ணத்தில் ஊற்றினார்கள்.

அத்தனை தொகையாக ஆண்களும் பெண்களும் அங்கே நின்றிருந்தாலும் – அந்தப் பருவ வயதில் அவர்கள் இருந்தர்லும் மரண பயத்தை அவர்களாற் கடக்க முடியவில்லை. பசியும் மரணப் பீதியும் அவர்களை உறிஞ்சிக் கொண்டேயிருந்தது.  பசியும் சாவு பற்றிய அச்சமும் சூழ்ந்திருக்கும்போது வேறு எதைப் பற்றித்தான் யாருக்கும் எண்ணத் தோன்றும்?

அப்போது ஒரு கதை திடீரென உலாவியது. ‘தேவாலயத்திற்குள் இறங்கப்போகிறார்கள்’ என்று. இந்தக் கதை வந்ததும் குருமார் சொன்னார்கள் ‘தயவு செய்து எந்தப் பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கோ| என்று. அது ஒரு தெளிவற்ற வார்த்தை. பிடிகொடாத வார்த்தை என்பார்களே, அப்படியான ஒரு வார்த்தை. அந்த வார்த்தையை அவர்கள் ரகசியமாகப் புலிகளிடம் சொன்னார்கள்.

ஆகவே, எந்த நேரமும் அங்கே புலிகளின் முற்றுகை நடக்கலாம். அல்லது அந்த முற்றுகையை அடுத்து எந்த வேளையிலும் அங்கே படையினரின் எந்த மாதிரியான தாக்குதலும் நிகழலாம். எனவே, பதற்றம் அதிகரித்தது. பிள்ளைகளை எங்கே கொண்டு சென்று காப்பாற்றுவது என்று யாருக்கும் தெரியவில்லை. தாங்கள் இனியும் அங்கேயிருப்பது பாதுகாப்பாக இருக்குமா?  என்று பிள்ளைகளுக்கும் தெரியவில்லை.

இதனால், கொஞ்சப் பேர் சந்தர்ப்பம் பார்த்து எப்படியோ இரவிரவாக வெளியேறி சனத்தோடு சனமாக வேறிடத்திற்கு சென்றுவிட்டார்கள். வெளியே செல்வது பாதுகாப்பில்லை என்றாலும் வருவது வரட்டும் என்று அவர்கள் போனார்கள். அதைவிட வேறுவழியில்லை. குறிவைக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து இருப்பது அர்த்தமில்லை என்று அவர்கள் எண்ணினார்கள்.

ஆனாலும் பெரும்பாலானோர்கள் – ஏறக்குறைய 600க்கும் மேலானோர் – தேவாலய வளவிலேயே தங்கியிருந்தார்கள். அத்தனை மதகுருமாரையும் மிஞ்சி தங்களை அவர்கள் பிடித்துச் செல்லமாட்டார்கள் என்று அவர்கள் நம்பினார்கள். அப்படியே அவர்கள் எதிர்பார்த்தார்கள். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழிகளில்லை. என்றாலும் உள்ளுர அவர்களுக்கு இதில் ஒரு விதமான சந்தேகமுமிருந்தது. ஆனால், வெளியே போனால் பாதுகாப்பில்லை. எனவே என்னவென்றாலும் பார்ப்போம், வருவது வரட்டும், வருவதை எதிர்கொள்வோம் என்று அங்கேயிருந்தார்கள். அவர்களுக்கு காவலாகப் பதற்றத்தோடும் இயலாமையோடும் பெற்றவர்கள் இருந்தனர், நெஞ்சிலே கலக்கத்தைச் சுமந்து.

எதிர்பார்த்தவாறே 25.03.2009 காலை 7.00 மணியிருக்கும். தேவாலயம் முற்றுகையிடப்பட்டது. ஒரு கணத்தில். ஒரேயொரு கணத்தில். அதிரடியான நடவடிக்கைகள். ஆரம்பித்தது தாக்குதல். முற்றுகையிடப்பட்ட தாக்குதல். ஏறக்குறைய 400 க்கும் அதிகமானவர்கள் தாக்கினார்கள். தமிழர்களைத் தமிழர்களே தாக்கினார்கள். ஆயுதந்தாங்கியவர்கள், ஆயுதமில்லாதிருந்த நிராயுதபாணிகளைத் தாக்கினார்கள். போருக்கு அழைப்பவர்கள், போருக்கு அஞ்சித் தேவாலயத்திற் தஞ்சமடைந்திருந்தோரைத் தாக்கினார்கள். துப்பாக்கிச் சூடுகளால் தேவாலயத்தின் கூரை சிதைந்தது. நம்பிக்கைகள் சிதைந்தன. பாதுகாப்பு என்ற எண்ணம் சிதைந்தது. மதகுருக்கள் காப்பாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் சிதைந்தது. மாதாவும் கைவிட்டாள்? ஒரே அல்லோலகல்லோலம். சாவோலம். கத்தலும் கதறலும். வசையும் திட்டும்….. கண்ணீரும் செந்நீரும்… வயிற்றிலும் எரிந்தது நெருப்பு… நெஞ்சிலும் எரிந்தது நெருப்பு… கண்களிலும் எரிந்தது நெருப்பு…. வரலாறே நெருப்பில் மூண்டெரிந்தது….

தரதரவெனவும் கொறகொறவெனவும் பிள்ளைகள் பிடித்துச் செல்லப்பட்டார்கள்@ சுற்றிவர நின்ற ஆட்பிடி வண்டிகளில் அவர்கள் தூக்கித் தூக்கி எறியப்பட்டனர். அள்ளி ஏற்றப்பட்டனர். பறந்து கொண்டேயிருந்தன வண்டிகள்.

மண் அள்ளித் திட்டினர் பல தாய்மார். எதிர்த்து, அடிவாங்கினர் தந்தையர். சில பிள்ளைகள் பிடித்தவர்களை தள்ளிவிட்டு பாய்ந்தோடினர். சிலர் மண்ணை அள்ளிக் கண்ணிலே தூவிவிட்டுப் பறந்தார்கள். அது சனங்களால் நிறைந்த வளாகம். அகதிக் கூடாரங்களால் நிறைந்த பகுதி.

 

பிடிகாரர்களிடம் இருந்து தப்பினால் சனங்களிடம் கரைந்துவிடலாம். ஆனால், தப்பவேணுமே! தேவாயலத்தின் மீது தாக்குதல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. சனங்கள் நிறைந்த பகுதியில் துப்பாக்கிச் சன்னங்கள் தலைக்கு மேலாக சீறிப் பாய்ந்தன. கையிலே பொல்லுகளும் தடிகளும் போதாக்குறைக்கு.

மதகுருமார் பதுங்குகுழிகளுக்குள் சரணடைந்தனர். இல்லையில்லை அங்கே மறைந்தனர். (வெட்கத்தினாலா? அல்லது கள்ளத்தனத்தினாலா?) மருத்துவர்கள் காணாமற்போயினர். சில மதகுருக்கள் அந்தச் சம்பவத்திற்கு உள்ளுர எதிர்ப்புத் தெரிவித்தபோதும் அவர்களையும் கடந்துவிட்டது எல்லாம்.

தேவாயலத்தின் சுவர்கள் துளையிடப்பட்டன. அங்கேயிருந்த தெய்வச்சொரூபமும் உடைந்து நொருங்கியது. ஆத்திரமடைந்த மக்கள் திட்டிக்கொண்டு போனார்கள். வசை. கொடிய வசை. யாரும் கேட்க அஞ்சும் வசை. அப்படியான வசையை அன்றுதான் மாதா கேட்டாள். அவர்களால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை. துக்கத்தை அழுது தீர்ப்பது, கோபத்தைப் பேசித்தீர்ப்பது என்று நினைத்தேன் அந்தக் கணத்தில்.

ஆனால், அங்கேயிருந்த பெற்றோர்கள் மதகுருக்களையும் திட்டினார்கள். சிலர் அவர்களைக் கெஞ்சினார்கள். மன்றாடினார்கள். ஆனால், யாருடைய குரலுக்கும் அங்கே மதிப்பிருக்கவில்லை. எந்தத் தடுத்தலுக்கும் அங்கே இடமிருக்கவில்லை. அந்தத் துயர நாடகம் வெற்றிகரமாக ஆடப்பட்டுக் கொண்டேயிருந்தது.

குருதி ஒழுகக் குருதி ஒழுகக் கொண்டு செல்லப்பட்டனர் சிலர். தூக்கியெறியப்பட்டனர் சிலர். புழுதி மண்ணில் விழுந்து புரண்டாலும் விட்டுச் செல்லவில்லை அவர்கள். ஆட்பிடி வண்டிகள் பறந்துகொண்டிருந்தன. கத்தலையும் கதறலையும் மன்றடலையும் அவை பொருட்படுத்தவில்லை.

யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை. முப்பது நிமிடத்திற்கு மேல் நடந்த அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தபோது தேவாலய வளவு வெறிச்சோடிக்கிடந்தது. காயப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். கிழிந்த உடைகளும் உடைந்த பாத்திரங்களும் அங்கே சிதறிக்கிடந்தன. 500க்கு மேற்பட்டவர்கள் அங்கே பிடித்துச் செல்லப்பட்டதாக சொல்லப்பட்டது.

பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர் பித்துப்பிடித்துக் கதறினார்கள். ஒரு பழிவாங்கும் நாடகம் அங்கே நடத்தப்பட்டதாக வந்தவர்களைப் பற்றிச் சனங்கள் கதைத்தார்கள்.

எல்லாம் முடிந்த பின் மதகுருக்கள் வெளியே வந்தனர். குற்றமும் அவமானமும் நிரம்பிய வெளுறிய முகத்துடன் அவர்கள் அந்தக் காலைப் பொழுதை எதிர்கொண்டனர். சனங்கள் ஆயிரமாயிரம் கேள்விகளைக் கேட்டனர். முறையிட்டுக் கதறினர். திட்டித் தீர்த்தனர். மன்றாடினர். காறி உமிழ்ந்தனர்.

எதற்கும் எந்தப் பதிலும் இல்லை. அது பதிலில்லாமல் கேள்விகளாகவே இருந்த நாட்கள். அந்தக் கணமும் அப்படித்தான் இருந்தது. எனவே, எல்லாக் கேள்விகளையும் போல அங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் யாரிடமிருந்தும் எந்தப் பதிலும் இல்லை. நடந்தது நடந்ததுதான். போனது போனதுதான். துக்கப்பட்டு அழுவதைத் தவிர வேறெதுவும் செய்வதற்கு இல்லை. அழுகை கேவலாகி, விசும்பலாகி ஒடுங்கியது. பிறகு பெருமூச்சு. இந்த வானத்தையே எரித்து விடுமளவுக்கு அனல் பெருகிய பெருமூச்சு.

போர் வெறி பெரும் தினவெடுத்திருந்தது. அந்தத் தினவுக்கு எல்லாமே பலியாகின. எல்லாமும் எல்லாம்.

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 2009 ஆண்டுகள் கழிந்துவிட்டன என்கிறது சரித்திரம். ஆனால், அவர் சனங்களின் பாடுகளுக்காகத் தன் தலையில் முள் முடியேற்றார். தன்னுடலில் சிலுவையை ஏற்றார். தன்னுயிரையே சிலுவைக்கு ஒப்புவித்தார்.

ஆனால், இந்தச் சனங்களுக்காகச் சிலுவையேற்பதற்கு அங்கே இன்னொரு கிறிஸ்து இருக்கவில்லை….

இதையும் அந்தச் சரித்திரமே சொல்கிறது. இந்தச் சரித்திரத்தின் மீது சனங்கள் மண்வாரித் தூற்றினார்கள்.

 

௦௦௦௦௦

 

312 Comments

 1. Ganesh says:

  ஓவ்வொரு வரியும் நெஞ்சில் வலியையும் கண்ணில் கண்ணீரையும் வரவழைத்தது.

 2. Lalitha says:

  I can understand. I also from Mulliyawalai & amp; my sister’s family also trapped amp; came out from this.

 3. sasi says:

  மறப்போமா இதை? மறக்கத்தான் முடியுமா இதை? அங்கே இருந்த தேவாலயம்கூட இப்ப எப்படி இருக்குதோ தெரியாது. இதுதான் கடந்த காலப் போராட்டத்தின் பயன்.

  இவ்வளவு கொடுமையளும் நடக்கப் பார்த்துக் கொண்டிருந்த பாதர்மார் மனச்சாட்சியே இல்லாதவர்கள் – நீதியை மறந்தவர்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமே இல்லை.

 4. நெடுதுயிலோன் says:

  யாருக்கான போராட்டம்?
  எவர்களின் மீட்ச்சிக்கு?
  அப்ப ஏன் தோற்றது?
  இதற்கான பதில்தான் மேலேயுள்ள “அகால மரணம்”.

Post a Comment