Home » இதழ் 02 » அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல்

 

அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல்

 

–    கருணாகரன்-

இன்றைய உலகத்தின் பொது உரையாடல் அல்லது பொது உரையாடலுக்கான அழைப்பு அல்லது பொதுச் சிந்தனையைக் கோருதல் என்பதெல்லாம்  அமைதியைக் குறித்ததாகவே அமைகின்றன. அதாவது அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல் என்பதை நோக்கியதே இது. எல்லா வழிகளும் எல்லா வழிமுறைகளும் இறுதி இலக்கில் அமைதிக்கானவையே என்பது இதன் அர்த்தம். அமைதியற்ற நிலையில் உருவாக்கப்படும் எத்தகைய முன்னேற்றங்களும் நிலையற்றவை, பாதுகாப்பற்றவை என தெளிவாக உணரப்பட்டுள்ளதன் விளைவே இதுவாகும். ஆகவே, அமைதியின்மையின் மீது எதையும் எழுப்பிப் பிரயோசனமில்லை. எல்லாவற்றுக்கும் முதலில் அமைதியை உருவாக்க வேண்டும் என்று சிந்திக்கப்படுகிறது.

அமைதிக்கான அவா என்பது, இன்றைய உலகத்தில் 98 வீதத்திற்கும் அதிகமான மக்களிடம் உள்ளது. எல்லா மத பீடங்களும் அமைதிக்காகப் பிரார்த்திருக்கின்றன. உலகிலுள்ள பெரும்பாலான ஊடகங்களும் அமைதியைக் குறித்தே எழுதுகின்றன, பேசுகின்றன. கட்சிகள், தலைவர்கள், அமைப்புகள் என அனைத்துத் தரப்புகளும் அமைதியை உருவாக்குவதற்காகவே தாம் உழைத்து வருவதாகச் சொல்வதைக் காண்கிறோம். அமைதிக்காகவே உலகெங்கும் ஏராளம் மன்றங்களும் அமைப்புகளும் உருவாகியுள்ளன. அமைதியை உருவாக்குவதற்காக அல்லது அமைதிக்குத் திரும்பிச் செல்வதற்காக பல  வழிமுறைகள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. இந்த வழிமுறைகளைப் பற்றிய விளக்கங்கள், பிரயோக நிலைக்குரிய ஏற்பாடுகள், திட்டமிடல்கள் என ஏராளம் ஏராளம் முயற்சிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இவை ஒவ்வொன்றுக்குமாகத் தாராளமாக பணம் வாரியிறைக்கப்படுகிறது. அமைதி முயற்சியில் ஈடுபடுவோருக்கான அல்லது அமைதிக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகக் கூறும் அமைப்புகளுக்கான மதிப்பும் மரியாதையும் தாராளமாக வழங்கப்படுகிறது.

ஆனால், இவ்வாறு வழங்கப்படும் முன்னுரிமைக்கும் முயற்சியின் அளவுக்கும்  அமைதி சாத்தியப்படவில்லை. அது இலகுவில் எட்டமுடியாத கனியாகவே உள்ளது. அமைதி என்பது ஒரு வானவில்லைப்போல அழகியதாகத் தோற்றம் காண்பிக்கிறதே தவிர, அது பூமியில் மலர்வதன் சாத்தியங்கள் மிகமிக அபூர்வமானது என்பதே பலருடைய அனுபவம். ஒலிவ் இலையைத் தன் அலகுகளில் ஏந்திய சமாதானப் புறாக்கூடக் களைப்படைந்து விட்டது. ஆகவே, அமைதிக்குத் திரும்புவது இலகுவானதல்ல. உலகமே இதையே சொல்கிறது. உலகத்தின் அனுபவமே இதுதான். சிங்களவர்களும் இதையே சொல்கிறார்கள். தமிழர்களும் இதையே கூறுகிறார்கள். கறுப்பர்கள், அரேபியர்கள் எல்லோருடைய அனுபவமும் இதுதான். எப்படி அமைதிக்குத் திரும்புவது என்றுதான் ஒருவருக்கும் புரியவில்லை.

அப்படியென்றால், அமைதிக்குத் திரும்புதல் என்பதன் அர்த்தம் என்ன? அமைதியை உருவாக்குதல் என்பதன் பொருள் என்ன? இன்றைய உலகத்தில் மிகக்கடினமான ஒரு பதம் இது. மிகக் கடினமான ஒரு செயல்முறையும் திட்டமும் கூட. எனவே புறக்கணிக்க முடியாதது. அவசியமான எதுவும் புறக்கணிக்க முடியாததே. எனவே, அமைதியை உருவாக்குவது, அமைதியை அடைவது என்ற இலக்கில் பயணிப்பது தவிர்க்க முடியாததாகிறது.

 

அவசியமான ஒன்றை, புறக்கணிக்க முடியாத ஒன்றை, உலகம் தழுவிய ஒன்றை நாமும் கண்டடைய வேண்டியுள்ளது, அதை நாமும் உருவாக்க வேண்டியிருக்கிறது. இலங்கையர்கள் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சவாலும் தேவையும் இதுவாகும். நீண்ட யுத்தத்தைச் சந்தித்தவர்கள் இலங்கையர்கள். முரண்களால் சிதைவுண்ட சமூகங்களாக இலங்கை மக்களும் அப்படியான சமூகங்களை உள்ளடக்கிய நாடாக இலங்கையும் உள்ளன. முரண்களை உள்ளடக்கியிருக்கும் சமூகங்கள் அவற்றைக் களையவில்லை எனில் பிரச்சினைகளால் துவண்டு விடும். முடிவற்ற பிரச்சினைகள் முன்னேற்றத்துக்குத் தடையானவை. அதேவேளை அவை பெரும் பாதிப்பையே ஏற்படுத்துவன. கடந்த காலத்தில் சிந்தப்பட்ட இரத்தமும் கண்ணீரும் இதைத் தெளிவாகவே  சொல்லுகின்றன. இந்த இரத்தமும் கண்ணீருமே இன்று அமைதியையும் கோருகின்றன.

ஆகவே கடந்த காலத்தைச் சாட்சியப்படுத்திக்கொண்டு, அதைப் படிப்பினையாகக் கொண்டு, வாழ்வனுபவமாகக் கொண்டு, அமைதிக்காக ஒவ்வொருவரும் தங்களின் மனதில் முன்னகரும் அடிகளை முன்வைக்க வேண்டியுள்ளது. இதை இங்கே உரைப்பதைப்போல மிக எளிதில் செய்து விட முடியாதென்பதே மீண்டும் நாம் வலியுறுத்துவது. அமைதிக்கான வழி என்பது மிகமிகக் கடினமானது. இன்னும் சொல்லப்போனால் யுத்தத்தை நடத்துவது இலகுவானது,அமைதியைக் கண்டடைவதையும் விட, அதை உருவாக்குவதையும் விட.

யுத்தத்தில் வெற்றி தோல்வி என்ற இரண்டு பரிமாணங்களே உண்டு. ஆனால், அமைதி அத்தகையதல்ல. அது பல்பரிமாணமுடையது. இந்தப் பல்பரிமாணமே அமைதியின் முழுமையாகும்.

யுத்தத்தில் முரண்களே அடிப்படை. அமைதியில் அல்லது சமாதானத்தில் இணக்கமே அடிப்படையானது. முரண்களை உருவாக்குவது மிக எளிது. ஆனால், முரண்களை அகற்றுவதும் இணக்கத்தை ஏற்படுத்துவதும் மிகக் கடினமானது. முரண்கள் வளர வளர யுத்தச் சூழல் தீவிரமடைந்து கனியும். அது மேலும் தீவிரமடையும்போது யுத்தம் உச்சகட்டத்தை எட்டும். அல்லது கொதிநிலைகொள்ளும். ஆனால், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, அமைதி உருவாக்குவதற்கு முரண்நிலை அம்சங்கள் களையப்பட வேண்டும். அந்த இடத்தில் நம்பிக்கையும் புரிந்துணர்வும் கட்டியெழுப்பப்படுதல் வேண்டும். இவ்வாறு கட்டியெழுப்பப்படும் நம்பிக்கையும் புரிந்துணர்வும் முரண்களால் உருவான காயங்களை ஆற்றும். பகைமையை மறக்க வைக்கும். பகைமையை மறக்கடிக்காத வரையில் காயங்களை மாற்ற முடியாது. காயங்கள் மாறாத வரையில் அது உண்டாக்கிய வலிகளும் அவற்றின் நினைவுகளும் மாறாது. காயங்களும் வலிகளும் அவற்றின் நினைவுகளும் முரண்களையே வளர்க்கும். அல்லது முரண்களை வளர்க்கும் சக்திகளுக்கு வாய்ப்பளிக்கும்.

இலங்கையில் நடந்து கொண்டிருப்பது காயங்களைப் புதுப்பிக்கும் நிகழ்ச்சிகளே. யுத்தத்துக்குப் பின்னர் அமைதிச் சூழல் தோன்றி விட்டது என்று சனங்கள் கருதினாலும் சரி, அல்லது அவர்களை அப்படி நம்பவைத்தாலும் சரி, உண்மையில் சனங்கள் உண்மைக்கு அப்பால், அமைதிக்கு வெகு தொலைவில், முரண்களின் மத்தியிலேயே நிறுத்தப்பட்டுள்ளனர். இது அபாயங்களின் மத்தியில், அவர்களைக் குடியிருத்தியிருப்பதற்குச் சமனாகும். சனங்களைச் சுற்றி மீண்டும் அபாய வலைகள் பின்னப்படுகின்றன. அவர்களுடைய நாளாந்தச் செயற்பாடுகளில் இருந்து, மத – கலாச்சார விசயங்கள், வாழிடங்கள், நம்பிக்கைகள் அனைத்துமே முரண்களுக்குள் இட்டுச் செல்லப்படுகின்றன. தினமும் நம்பிக்கையீனமான – அபாயமூட்டும் செய்திகளையே அவர்கள் அறிகிறார்கள். அரசியல் அரங்கில் நகர்த்தப்படும் காய்கள் அமைதிப் பிராந்தியத்திலிருந்து ஒவ்வொருவரையும் வெளியகற்றிக் கொண்டேயிருக்கின்றன. பெரும்பாலான அரசியல்வாதிகள் மனங்களில் தீயையும் விசத்தையும் கத்தியையும் ஏந்திக் கொண்டேயிருக்கிறார்கள். ஏன் ஊடகங்களிற் பலவும் கூட இப்படித்தான் உள்ளன. பெரும்பாலான ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் எல்லோரும் நடு நிலையைத் தவறிக் கொண்டிருக்கின்றனர். அதாவது அமைதிக்கு மறுதிசையில் சென்று கொண்டிருக்கின்றனர். இது எங்கே கொண்டு நிறுத்தும் என்பதை யாரும் அறியாததல்ல.

யுத்தத்தத்திலிருந்த மீண்ட நாடு என்ற அடையாளங்களும் யுத்தத்திலிருந்து தப்பிய மக்கள் எனும் அனுபவங்களும் இங்கே கேலிக்குரியனவாகி விட்டன. மறக்கடிக்கப்பட்டு வருகின்றன. யுத்தத்தின் சுவையை உலக மக்கள் உணர்ந்த விதத்திற்கும் இலங்கையர்கள் உணர்ந்த விதத்திற்கும் இடையே வேறுபாடுகள் அதிகம். குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் மோதுண்ட சமூகங்களும் நாடுகளும் அதற்குப் பின்னர் இணக்கப் புள்ளிகளை நோக்கி நகரத் தொடங்கின. தென்னாபிரிக்காவில் இறுக்கமான மனதோடும் கடினமான நடைமுறைகளோடும் இருந்த வெள்ளையர்களும் கறுப்பர்களும் இணக்கப் புள்ளிகளை நோக்கி நகர்ந்திருக்கின்றனர். வரலாற்றின் வழிநெடுகலும் முரண்களோடு பயணித்த இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் முரண்களைக் களைந்து விட்டனர். அல்லது முரண் உருவாக்கங்களைத் தவிர்த்து வருகின்றனர். இல்லையெனில் சிலுவை யுத்தங்கயும் புனிதப் போர்களும் இன்னும் முடிவுக்கு வந்திராது.

ஆகவே இணக்கப் புள்ளிகளைக் களைய வேண்டியுள்ளது. ஆனால் அது எளிதானதல்ல. சமாதானத்துக்கும் அமைதிக்கும் எப்போதுமிருப்பவை எதிர்நிலைகள். இந்த எதிர்நிலைகள் மாற்றுச் சிந்தனையாளர்களையும் யதார்த்தவாதிகளையும் அமைதியைக் குறித்து விசுவாசமாகச் சிந்திப்போரையும் அங்கீகரிப்பதில்லை. சாத்தியமான விசயங்களைக் குறித்துச் சிந்திப்போர், மாற்று உபாயங்களை முன்மொழிவோர், எப்போதும் எதிர்நிலைச் சக்திகளால் எதிராளிகளாகவே அடையாளப்படுத்தப்படுகின்றனர். அல்லது பெறுமதியற்றோர் ஆக்கப்படுகின்றனர். இன்று இலங்கை அரசுக்குள் இருந்து அமைதியைப் பற்றிச் சிந்திக்கும் முற்போக்காளர்கள் கூட அரசாங்கத்திற்குள் இருக்கும் எதிர்நிலைகளால் அவ்வாறுதான் நோக்கப்படுகிறார்கள். அரசுக்கு வெளியேயும் இதுதான் நிலைமை. ஊடகங்களிற்கூட இத்தகைய நோக்கு நிலைதான் உண்டு.
எனவே, இந்த அமைதியைச் சாத்தியப்படுத்திகளை இவை முழுமூச்சுடன் எதிர்க்கின்றன.

அப்படியானால் எதிர்நிலைகளைக் கையாள்வது எவ்வாறு?

கடினமான எதுவும் உரிய பொறிமுறைகளின் மூலமே இலகுவாக்கப்படுகின்றது. எனில், இதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்பட வேண்டும். அந்தப் பொறிமுறையை இயக்கமுற வைக்கவும் வேண்டும். இதற்குச் சிறந்த, ஆளுமை மிக்க, விசுவாசமும் உண்மை உணர்வும் நிரம்பிய மனிதர்களின் சேர்க்கை தேவை. இந்தச் சேர்க்கையில் நிகழும் உரையாடல் தேவை. இந்த உரையாடலை அலைகளாக்கும் விதங்கள் தேவை. இவை உண்டாக்கும் விளைச்சலே அமைதிக்கு நிரந்தரமாகத் திரும்ப வைக்கும். அல்லது அமைதியை உருவாக்கும்.

இங்கே அமைதிக்குத்திரும்புவதற்கான ஒரே வழி பகை மறப்பும் நல்லிணக்கமுந்தான். ஆனால், அது இன்றைய இலங்கை அரசாங்கம் கூறும் வகையில் அல்ல. அது அர்த்தப்படுத்தும் விதமாகவும் அல்ல. அதற்கப்பால், அது உணரவே முடியாத உண்மை வெளியில் – சனங்களின் மத்தியில், அவர்களுடைய விருப்பங்களின் மையத்தில் உள்ளது. இதைக்குறித்துச் சிந்திப்போர் யார் என்பதே இன்றைய கேள்வி. இந்தக் கேள்வியே அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல் எப்படி என்பதிலும் உள்ளது.

00

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment