Home » -அந்துவன் கீரன்- » ஈழத்துக் கவிஞைகளின் நவீன கவிதைகளில் போரும் போரியல்வாழ்வும்!

 

ஈழத்துக் கவிஞைகளின் நவீன கவிதைகளில் போரும் போரியல்வாழ்வும்!

 

 

 
அந்துவன் கீரன்-
 இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீவிரமாகப் பெண்ணியச் சிந்தனை வலுப்பெற்ற நிலையில் பெண்கள் தங்கள் சுய இருப்பை ,உள்மனதை, பெண் நடத்தைவாத முறைகளை, நுண்மை, பருண்மைக் காட்சிகளைப், புற உலகத் தாக்குதல்களைத் தாங்களே விசாரணை  செய்யத்துணிந்தனர். இதனால் கவிதை அரசியல் புதிய பரிமாணத்தைப் பெற்றது. தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் பெண்ணடையாள மையம் சிதைக்கப்படும் போது அவள் எழுத்தை ஊடகமாக்கினாள். அங்கு பெண்ணின் வலியும், மன உளைச்சலும் பெண்ணெழுத்தாக வடிவம் பெறும்போது பெண்ணின் உள்முகத் தன்மை புதிய அடையாளத்தைப் பெற்றது. சமூக உறவுமுறைகளை மீறி பெண்ணின் அக அனுபவங்களை, அகச் சமூக முரண்களை, பெண்ணுடலை அவள் அரசியல் ஆக்க முற்பட்ட வேளையில் பெண் கவிதைகள் முனைப்பு பெற்றன. பெண் கவிஞர்களின் கவிதையின் பாடுபொருள், வடிவம், மொழி, ஆகிய புனைவு வெளிப்பாடுகளைப்  பெண்ணிலை நோக்கில் அணுகும் பெண்மையவாதம் (Gyno criticism),ஆண் சொல்லாடலை மறுவாசிப்புக்குட்படுத்துவதுடன் பெண்ணிலக்கியத்துக்கான இலக்கிய மரபு,திறன் குறித்து ஒரு புதிய இலக்கிய வரலாற்றுக்கான தளத்தை உருவாக்குகிறது.
  ஈழத்தில் 1983களுக்குப்பின் ஆயுதப் போராட்டம் பரந்து பட்ட ரீதியில் வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து தமிழ் மக்கள் கடுமையான யுத்தத்துக்கு முகம் கொடுக்கலாயினர்.அரசியல் பொருளாதார,சமூக முன்னேற்றம் கருதி மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் மக்களின் இயல்பு வாழ்வினைச் சிதைத்து அவர்களின் வாழ்வினை நிர்மூலமாக்கியது.ஆழமான விரிவான தளத்தில் தேசிய விடுதலைப் போராட்டக் கருத்துக்கள் முன்வைக்கப் பட்ட நிலையில் ஈழத்து நவீன கவிதைகள் மக்களின் வாழ்வியல் அனுபவங்களைப் பேசின.புதிய சிந்தனைகள் முன் வைக்கப்பட்ட நிலையில் உரமும் செழுமையும் கொண்ட பிரக்ஞை பூர்வமான கவிதைகள்,நேர்த்தியான மொழிகளுக்கூடாகப் புதியபடிமங்கள,; புதிய வடிவங்களைத் தாங்கி வெளிவந்தன.அதிகார அசமத்துவப் போக்குக்கெதிராக எழுந்த தமிழ்க் கவிதைகள் புண்ணுண்ட மனங்களுக் கூடாகப் போhரின் வடுக்களைப் பேசின.
 1980களுக்குப் பின் ஈழத்தின் பல்வேறு பெண் கவிஞர்களின் போரியல் கவிதைகளைத் தாங்கி வெளிவந்த தொகுப்புக்களாக எழுதாத உன் கவிதை (2001), ‘வானதியின் கவிதைகள் (1990), கஸ்தூரியின் ஆக்கங்கள் (1992), பாரதியின் காதோடு சொல்லிவிடு (1992), சிவரமணி கவிதைகள் (1993), தூயவளின் நிமிர்வு (1993),செல்வி – சிவரமணி கவிதைகள் (1997), ஒளவையின் எல்லை கடத்தல் (2000), வெளிச்சம் கவிதைகள் (1996), காலம் எழுதிய வரிகள் (1994),அம்புலி கவிதைகள்(2005),ஆனையிறவு (2000), வானம் எம் வசம்(1995),செம்மணி(1998) ஆழியாளின் உரத்துப் பேச (2000) முதலான தொகுப்புக்களைக் காணலாம்.
அவ்வகையில் வன்னி நிலவாழ் மக்களின் வாழ்வியல் அவலங்களைப் பெண் அல்லது பெண்ணியவாதப் படைப்புக்களுக் கூடாக வெளிக்கொணர்ந்த இதழ்களில் முக்கிய இதழ்களாக வெளிச்சம், சுதந்திரப்பறவை, எரிமலை,ஈழநாதம் (வெள்ளி வாரமலர்) போன்றன காணப்படுகின்றன.
அம்புலி, ஆதிலட்சுமி சிவகுமார், கஸ்தூரி, மலைமகள், தமிழவள், தமிழ்க்கவி, சுதாமதி, நாமகள், தூயவள், செந்தணல், பிரேமினி சுந்தரலிங்கம், மன்னார் ரூபி மாக்கிரெட், சோழநிலா, அலைஇசை போன்றோர் சிற்றிதழ்களின் ஊடாக மாத்திரம் அறியப்பட்டவர்கள் அல்ல.
கவிதைத் தொகுப்புக்களினூடாகவும் அறியப்பட்டவர்கள். போரையும் போரியல் வாழ்வையும் பாடும் இவர்கள் போரின் பங்காளிகளும் ஆவர். தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று அனுபவங்கள் இவர்களின் கவிதையின் பாடுபொருளாயின. ஆயுதம் தரித்த போராளிகளாக மாறி தமிழ் ஒழுக்கவியல் கோட்பாடுகளை சாடுமிவர் கவிதைகள், பெண் விழிப்புணர்வுக்கூடாக பெண் விடுதலையை சாத்தியமாக்குகின்றன. இவர்களின் பெரும்பாலான கவிதைகள் செப்பனிடப்படா வார்த்தைப் பிரமாணங்களுக்குள் சிக்கி, உணர்வுத் தளமற்று கருத்துருவாக்கங்களுக்குள் சிதைந்து போவதாகக் காணப்படுகின்ற போதிலும் பெண்ணியல் அனுபவங்களுக்கூடாக விரியும் பெண்ணிய மொழி ஆங்காங்கே வீரியம் மிக்க சிறந்த கவிதைகளையும் தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்துள்ளது.
ஈழத்து இலக்கியம் நன்கறியப்பட வேண்டியவர்களில் ஒருவர் ‘சிவரமணி”. இவர் எழுதி எமக்கு கிடைக்கப்பெற்ற கவிதைகள் மிகச் சிலதே ஆயினும் எழுதிய அத்தனை கவிதைகளும் சொல் நேர்த்தி கொண்டவை. எளிமையானவை, புதிய காட்சிப் படிமங்களுக்கூடாக வடிவமைக்கப்பட்டவை. போர்க்காலச் சூழலில் போரின் வடுக்களைத் தாங்கி இயல்பாய் வாழும் சமூகத்தைச் சித்திரிக்கும் சிவரமணியின் ‘தேர்த்திருவிழா” விபரணப் பாங்குடன் புறக்காட்சிப் படிமங்களுக்கூடாகக் கட்டுறுகிறது.
        ‘மீண்டும் ஒருநாள் / வரலாம் / இரத்தத் துளிகள் /மண்ணில்
         தெளிக்கப்படலாம் /மீண்டும் ஒருவன் வருவான் /
         இந்தக் கொடி கிழிந்திருக்கும் /இதற்குப் பதில் /
         இன்னுமோர் கறுப்புக் கொடி /ஏற்றிவைப்பான் /
         எனினும் / என் ஊர்க்கோவிலில் /வழக்கம்போல் /
         திருவிழா நடைபெறும் “
‘காட்சியமைத்தலுக்கூடாக விபரணப் பாங்கில் கவிதை சொல்லுதல்” என்னும் சிவரமணியின் உத்தியை உள்வாங்கி படைக்கப்பட்ட கவிதையே நாமகளின் ‘யதார்த்தம்” என்னும் கவிதையாகும். ஷெல்லினால் சடுதியில் ஏற்பட்ட மரணத்தை புறக்காட்சிப் படிமங்களுக்கூடாக விபரணப் பாணியில் காட்சிப்படுத்துவதாகவே இக்கவிதை அமைந்துள்ளது. கோர்வைப் படுத்தப்பட்ட விபரணப் பாங்கே இக்கவிதையின் அடிநாதமாகும்.
             ‘வீதியில் /இப்போது எதுவுமே இல்லை /எல்லாமே
              பழையபடி /மண்ணெண்ணெய்  வரிசை /முன்பைவிட /
              நீண்டிருந்தது / தேநீர்க் கடையிலும் / புதிதாய் ஒரு பாட்டு /
              ஆரம்பமாகிறது / சனங்கள் /விரைந்து கொண்டிருக்கிறார்கள் /
              எதுவுமே நிகழாத மாதிரி”
இவ்விரு கவிதைகளும் நெருக்கடியான சூழ்நிலைக்குள் அல்லுற்று வாழும் மக்களின் யதார்த்த வாழ்வை மிகத் துல்லியமாக முன் வைக்கின்றன.
  ஈழப்பிரதேசத்தின் பெரும் பகுதி யுத்தமாக விரிந்த காலப்பகுதியில் ஆட்கடத்தல்கள்,நீசப்படுகொலைகள் மனித வாழ்வைச் சிதைத்தது.பிண வாடையே இல்லாத பொழுதுகள் இல்லை என்னும் அளவுக்கு நாள்தோறும் நடுத் தெருக்களில் உத்தியோகப் பணிமனைகளில் உறங்கும் வீPடுகளில் மனிதர்கள் கடத்தப்பட்டு, வேட்டையாடப்பட்டனர்.பள்ளிச் சிறார்கள் கூட தங்கள் சீருடைகளில் விதிவிலக்கின்றி வேட்டையாடப்பட்டனர்.கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போனோராக்கப்பட்டு  வதையின் பின் புதைக்கப்பட்டவருக்காக ஈழத்தில் ‘செம்மணி’ என்னும் தொகுப்பு புதுக்குடியிருப்பு அந்தி வானம் பதிப்பகத்தில் இருந்து வெளியிடப்பட்டது. பிரமிளா, சோழநிலா, தயாமதி, சுதாமதி, தமிழவள், மலைமகள், தூயவள், அம்புலி முதலான பெண்  கவிஞர்களின் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றன.இதன் தொடர்ச்சியாக வெளிவந்த அங்கவையின் கவிதை, சீரழிந்த அரசியல் சூழலால் காவு கொள்ளப்பட்ட பூர்வீகப் பூமியில் வேட்டையாடப்பட்ட பள்ளிச் சிறுமியை, யதார்த்த வாழ்வியலுக்கூடாக  படிப்பவர் மனதில் ஆழமான வருத்தத்தைத் தூண்டும் வகையில் வெளிப்படுத்துகிறது.
      “ உன் முற்பகல் நினைவுகளோடுதான் / தேடினேன் / கறுப்புத்திரையில் / உன் சுவடுகளின்
        புள்ளிகள் ஏதுமில்லை / தென்படாத உன் வட்டமான ஃ/முகத்துக்காக ஏங்கினேன் /
        பள்ளிக்கூடம் வெறுமையில் கிடக்கிறது. / சூரியன் மேற்கிளம்பும் காலையில் /  நாங்கள்
        சீருடையணிந்து / பள்ளிக்கு சைக்கிளில் போனது நேற்றுத்தானே /வழிகள்தான்   பொல்லாதவை / பெரியவாய் திறந்து விழுங்கி விடும்./ அபாய வளைவுகள்
        நிறையவேயிருந்தன./ நீ எங்கே என்று தொடர்ந்து தேடியதில் /உன் உதிர்ந்த   நகங்கலிருந்து  முளைத்திருந்த காளன்கள் / மணந்தன நாறி”
     ஈழத்தில் மனிதர்கள் தங்கள் இயல்பை இழந்து நரகத்தில் வாழும் துன்பியல் நிலையை இக்கவிதையினூடாக நாம் தரிசிக்கலாம். இங்கு நிகழ்வுகளின் வீரியம் பொதுமைப்பட்டதொன்றாகக் காணப்படுகிறது.நடப்பியலின் உட்தோய்தல் கவிதையைச் செழுமைப்படுத்துகிறது.நிகழ்காலத்தின் நினைவின் வேராக இக்கவிதை மனதில் நிழலாடிச் செல்கிறது. 
  தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில்,போராட்டத்துடன் இணைந்து செயற்பட்ட ஈழத்துக் கவிஞைகளின் கவிதைகள் போரியல் வாழ்வைப் பேசின.போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களை அநுபவங்களின் வாயிலாக வெளிப்படுத்தும் இக்கவிதைகள் காலத்தின் பதிவுகளாகும். சிங்கள இனவன்முறையையும் மக்களின் துன்பியலையும் மாத்திரம் பேசாது,விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியையும்போரியல் முறைமைகளையும்  பேசிய கப்டன் வானதி,மேஜர் பாரதி,கப்டன் கஸ்தூரி முதலானோரின் கவிதைகள் மனித வாழ்வுடன் போராட்டத்தையும் இணைத்துக் கொண்டன.
                  “நண்ப… /பொறுத்துக்கொள் /என்வரையில் / பொறுப்பெடுத்து விட்டேன்!/
                   காவலரணில் /  கடமையில் இருக்கும் போது/எதிரியின் பாசறையை /
                   முற்றுகையிடும் போது /அடுத்த பாய்ச்சலுக்காய் /துப்பாக்கியை துடைக்கும்
        போது / ஒவ்வொருரவையாக/எண்ணி…  எண்ணி/எண்ணியெண்ணி / நிரப்பும்
        போது,/ உன்னுடன் பேசுகிறேன் டாம்போ/ மீட்கப்படப் போவது/  வெறும் /
        சிலாபத்துறை மட்டுமல்ல/ என்பதை மட்டும்/இப்போது தெரியப்படுத்துகிறேன்”
   மலரவனின் போருலா,தூயவனின் சமரும் மருத்துவமும் முதலான புனைகதைகள் எவ்வாறு மனித வாழ்வியலைக் களமுனையுடன் இணைத்ததோ அவ்வாறே கப்டன் வானதியின் ‘மன்னார் மீழும்! உன் கனவுகள் வாழும் ! என்னும் இக்கவிதை மன்னார் சிலாவத்துறை இராணுவமுகாம் மீது நிகழ்த்தப்பட்ட நேரடித்தாக்குதல்களைக் களமுனைக்காட்சிகளின் அநுபவங்களுக்கூடாக உயிரோட்டமாகப் பதிவு செய்கிறது. கப்டன் வானதியின் “நாளைய சந்ததிக்கு நடந்ததைக் கூறு” என்னும் பிறிதொரு கவிதை தமிழீழ தேசத்தின் வீர விடியலுக்காய் தம் சுகம் மறந்து காட்டிலும் மழையிலும் நின்று போராடிய போராளிகளின் உன்னத தியாகத்தை எடுத்துகிறது.
      “மாளிகையில்/வாழ்ந்ததை விட /உன் ஒற்றைமர நிழலில்/காவல் இருந்ததை,/
      சந்தோசமாக /நினைந்ததை,/பஞ்சணையில்/படுத்ததை விட /பசும் புல்லில்/
      சுகமாகத் தூங்கியதை,/மழையில் நனைந்து /அடுத்த ஆடைமாற்றாது/‘பொஸிசனில்’
      நின்றதை,/பசி மறந்து /தூக்கம் மறந்து /எதிரி எல்லையை /மீறுவதாயின்/
      எம் உடம்புகளின்/மேலாகத்தான்/என்றஉறுதியோடு/காவலிருந்ததை,/
      கூறுவாயா”
   தேசவிடுதலையில் தன்னுயிர் நீத்த,பங்கெடுத்த போராளிகளின் போரியல் வாழ்வையும் அவர் சார் இறந்தகால இருப்பையும் நிகழ்கால தேசத்துக்கு உணர்த்துமுகமாக எழுதப்பட்ட இக்கவிதைகள் தேசத்தின் மகுடத்துக்காய் போராளிகள் பட்ட மனித அவலங்களை எடுத்துரைக்கிறது.
  ஈழத்தில் ஆயுதப் போராட்டம் வலுப்பெற்ற காலப்பகுதியில் தாயக மக்களின் விடுதலைக்காய் அகிம்சா வழியில் போராடி உயிர்க் கொடை தந்து நீத்தவர்களுள் திலீபன்,அன்னை பூபதி முதலானோர் முக்கியமானவர்கள்.போராட்ட காலத்தில் மண்ணின் விடுதலைக்காக மரணித்த இவர்களின் தியாகங்கள் அளப்பரியன.“குழிவிழுந்த கன்னங் கண்டு இங்கு குளமாகும் கண்கள் …..உங்கள் ஒட்டிய வயிறும் குழிவிழுந்த கண்களும் குற்றுயிராய்க் கிடக்கும் நிலையும் கண்டால் கல் நெஞ்சம் கசிந்து கண்ணீர் விடும்33”என லெப்.கேணல் திலீPபனைப் பாடிய கஸ்தூரி அன்னை பூபதியின் உயிர்க் கொடையையும் உணர்வுபூர்வமாகப் பதிவு செய்தவர்.இதிலும் அன்னை பூபதியோ குடும்பம் என்னும் சிறு வட்டத்துக்குள் தன்னை சிறைப்படுத்தாது தேசம்,மக்கள் என்னும் அகன்ற பரப்பினில் தன்னை உட்படுத்தி தாயக விடுதலைக்காய் உரிமைக்குரல் கொடுத்தவர்.இதனைக் கஸ்தூரியின் “காலம் அவளது கைபிடித்து நகர்கிறது” என்னும் கவிதை உள்ளம் கை நெல்லிக்கனியெனத் விளக்குகிறது.
                                                                “தாயே……!
                             பிரபஞ்ச வரலாற்றின்
                             பிரமாண்டமான உச்சியில்
                             உயிரோட்டத்தோடு
                             உன்னை நீ
                             செத்துச் செத்துச்
                             செதுக்கிக்கொண்டாய் ……
                             உறுதிப்படுத்தப் படாத
                             உலக அழிவு
                             ஒருநாள்
                             உண்மையாகிப் போனாலும்
                             அதற்குப் பின் வரும்
                             யாருமே அறியாத
                             ஆரம்பமொன்றிலும்
                             உந்தன் பெயர்
                             உயிர்த்திருக்கும் ”
மக்களுகென வாழ்ந்தவர்கள்மரணிப்பதில்லை.அவர்கள் என்றும் ஜீவித்துக் கொண்டு இருப்பவர்கள் என்னும் உண்மையை இக்கவிதை வெளிப்படுத்தி நிற்கிறது.
  போர் தின்ற பூமியைக்“காதோடு சொல்லுகின்றோம்” என்னும் கவிதைத் தொகுப்புக்கூடாக உயிரோட்டமாகப் பதிவு செய்தவர் மேஜர் பாரதி ஆவார்.யுத்த மலிந்த பூமியில் அவல வாழ்வியலுக்குட்பட்ட மக்களைப் போராளிகளுடன் இணைத்த இத்தொகுப்பு காத்திரமான கவிதைகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.’போராடச் சென்ற பெண் போராளி தன் தாயினை நினைத்து ஏங்குகின்றாள்.தன் மகவை நேசித்த உள்ளாத்த அன்பு போராளிக் கவிஞையின் உள்ளத்தை வருடிச் செல்கிறது”.தாயின் நேசிப்பும், மகவின் ஏக்கமும்,தேசம் மீது கொண்ட அதீத அன்பும் பாரதியின் ‘அன்பான அம்மா’கவிதையில் வெளிப்படுத்துகிறது.
                “நாளை திரும்பி வரா/உன் மகளை எண்ணி /நீ கவலைப்படாதே /என் மறைவின்
        பின்னர் /புதிய தோழர்கள்;  /அந்த வைகறைக்காய்/புறப்படுவார்கள். /அதற்கு முன்னால்
        அவர்கள் /உன்னிடம் வரலாம்./அப்போது அவர்களின்/புதிய சீருடையில்/புதிய
        துப்பாக்கியில்/இனிய முகங்களில்/என்னைப் பார். / அடுத்து வரும் நாட்களில்/
        அவர்களும் /இல்லாமல் போகலாம்/ஆனால்…ஃ/என்றோ ஒரு நாள் /எம் மக்கள்
        புறப்படுவார்கள்/ அப்போது அந்த/புதிய விடியலை வரவேற்கும் /அதிகாலைப்
        புஸ்பங்களாய்/மெல்லிய பனித்துளியின்/ முகத்தின் பின்னால் /நாம் முகையவிழ்ந்து
        தென்றலின் தடவலில்/முகமலர்ந்தாடுவோம்./அப்போது நீ இருந்தால்/ உற்றுப்பார்.
        உன் செல்ல மகளின் முகம்/ சிரித்தபடியே தெரியும்.35”
  இதனைப் போன்றே தாயைப் பிரிந்து போன மகவின் ஏக்கத்தை கௌதமியின் “அன்னை நிலம்” என்ற கவிதையும் உள்ளம் நெகிழும் வண்ணம் எடுத்துரைக்கிறது.
                        “ அம்மா!
                          அழுகின்றாயே வேணடாம்
                          நான்
                          மீளவில்லையெனில்
                          என் படத்துக்கு ஒரு
                          முத்தம் கொடுப்பாயல்லவா……
                          ஏனெனில் என்றுமே – நான்
                          உனக்கும் குழந்தைதான்!36”
கவிதை மொழியின் வழியே அதிக சாத்தியங்களை உருவாக்கும் என்பதற்கு இக்கவிதை சிறந்த எடுத்துக்காட்டாகும். கவிதைக்குள் பொதிந்திருக்கும் உண்மை,உணர்வின் ஆற்றல் இக் கவிதையை நுகரும் சதாரண வாசகனின் மனதைக் கூட நெருடிச் செல்லும்.
  1987 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசினால் யாழ்குடா நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம திகதி ஒப்பரேசன் லிபரேசன் என்னும் பெயரில் இலங்கை இராணுவத்தால் வடமாராட்சிப்பகுதிகள் கைபற்றப் பட்டன. இதனை அடுத்து வடபகுதியில் பொருளாதாரத்தடையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குகின்றோம் என்னும் அடிப்படையில், இந்தியப்படையினர் இலங்கையின் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து ஐந்து யுத்த விமானங்கள் மூலம் சுமார் 24 தொன் பொருட்களைப் பாராசூட் மூலம் போட்டனர்.ஒப்பரேசன் பூமாலை என்னும் இந்நடவடிக்கையைத் தொடர்ந்து 1987ஆடிமாதம் 29 இல் நிகழ்ந்த இந்திய,இலங்கை ஒப்பந்த்தின் பயனாக இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் நுழைந்தது. 1987 ஆவணி மாதத்துக்குப் பின் இந்திய இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல்களைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையில் பாரிய மோதல்கள் வெடித்தன. இவ்விருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் புலிகள் என்னும் பெயரில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு காணாமல் போயினர்.பெண்கள் புலிகள் எனப் பெயர் சூட்டப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டனர்.தமிழ் இளைஞர்கள்,யுவதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளை ஈழத்துப் பெண் கவிதைகள் பதிவு செய்துள்ளன.
“உலகநாடுகள் முன்
தமிழன்
வயிற்றுப் பசியை
வாதாட்டத்திற்கு வைத்தது
வல்லரசு.
அனைத்து நாடுகளும்
அண்ணாந்து பார்த்து நிற்க
உயரத்திலிருந்த விழுந்தன
உணவுப் பொட்டலங்கள்.
ஒருதலைப் பட்சமாக
உள்ளே வந்த வல்லரசால்
அரிசிப் பொதிகள் விழுந்த
அதே குச்சொழுங்கையில்
குப்பெனப் பீறிட்டது
குரதியாறு ”
ஒரு காலகட்ட வாழ்வியலின் நிஜத்தைப் படம் பிடித்துக் காட்டும் கஸ்துரியின் இக்கவிதை,இந்திய அரசின் உண்மையான முகத்தை வெளியுலகுக்குக் காட்டி நிற்கிறது.
“அமைதி காக்க வந்தவர்கள்
என் வாழ்வின் அமைதியைக் கெடுத்தனரே
புகுந்தனரே என் வீட்டினுள்
பதறியது என் தேகம்
பாய்ந்தனர் என்மீது
பதம் பார்த்தனர் என் உடலை
குரங்கின் கையில் அகப்பட்ட
மாலையாய் ஆனதோ என் உடல்
உடல் முழுக்க நோ
உள்ளத்திலோ பாரம் -ஆனாலும்
என் இருப்புஉறுதியானது ”.
இந்திய அமைதிப்படையினரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் உள்ளத்தையும் அவளது இருப்பையும் முன்மொழியும் இக்கவிதை, துன்பியல் வாழ்வுக்குள் அகப்பட்ட போதும் துவலாது போராடும் தமிழ் பெண்களின் மனோதிடத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.
   போர் மக்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்ததோடு, வாழ்விடங்களையும் பறித்தது.பிறந்தகம் பற்றிய ஏக்கங்களையும் இடம் பெயர்வுற்றவர்களின் துன்பங்களையும் இக்காலத்தில் எழுந்த கவிதைகள் காலத்துயராய் பதிவு செய்தன.குடியிருப்பு மனைகள் தகர்க்கப்பட்டு மக்களில்லா பாலைகளாய் வெறுமை படரக் கிராமங்கள் இருந்த நிலையினை யாழினியின் கவிதை உணர்வுத்தளத்தில் பதிவு செய்கின்றன.
         “மாங்காய்க் கெறிந்து மண்ணில் விளையாடி பாங்காய்த் திரிந்த ஊர் பாழ்பட்டுக்
          கிடக்குதையோ வரம்பில் நடந்து அழகை ரசித்து பரம்பரை வயல்கள் சீரழிந்து
          கிடக்குதையோ தேஙகாய்க் குரும்பை தொஙகிப் பறித்து நாங்கள் குடித்த தென்னை
          தலையிழந்து நிற்குதையோ பால் தயிர் தந்த எங்களின் பசுக்கள் கால் குளம்பிழந்து
          கிடக்குதையோ  ”
சு.வில்வரெத்தினத்தின் காலத்துயர்,காற்றுவழிக்கிராமம் என்பவற்றின் தொடர்ச்சியாய் இக்கவிதை சின்னாபின்னமாய்ச் சிதறுண்டு வாழ்விடத்தை உணர்வுபூர்வமாய்க் காடசிப்படுத்தப்படுகிறது.
   தமிழீழப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்குரிய நியாயப்பாடான பக்கங்கள் பல உண்டெனினும் தவறான கற்ப்பிதங் களுக்குள்ளான தேசியவாதத்தின் மோசமான பக்கங்கள் பல, விமர்ஸ்சிக்கப்பட்டதும் உண்டு.ஜனநாயகமின்மை, கருத்துச் சுதந்திரமின்மை, சகோதரப்படுகொலை, இன அழிப்பு என விரியும் பக்கங்கள் விடுதலையின் பெயரால் மாசுபடுத்தப்பட்டகொடூர நிகழ்வுகளை எடுத்துரைக்கும். ஈழத்தில் விளைவுகளுக்கப்பால் தமிழ்த்தேசியப்போராட்டம் வன்மம் கொள்ளும்       மனிதாபிமானத்தைச் சிதைக்கும், தாய் மகன் உறவில் கூட விரிசலை உருவாக்கும் என்பதை ஒளவையின் ‘வீடு திரும்பிய மகன்’ என்னும் கவிதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது.
                     ‘இராணுவ வீரனாய் என்முன் நின்றான்
                என் மகன்……..
                நண்பனைச்  சுட்டு வந்து
                வீரம் பேசினான்
                தியாகம் பற்றி
                ஆயுதம் பற்றி
                எல்லைப்புற மக்களைக்  கொல்வதைப் பற்றி
                நிறையவே பேசினான்
                      இப்போது நான் மௌனமாக இருந்தேன்
                மனிதர்கள் பற்றி
                விடுதலை பற்றி
                மறந்தே போனான்
                இப்போது நான்
                தாயாக இருத்தல் முடியாது
                      என்று தோன்றுகிறது
                துரோகி என்று
                என்னையே புதைப்பானோ
                      ஒருநாள்  ”.
  போர்க்காலத்தில் பலாத்காரம்,சித்திரவதை, காணாமல்போதல், கொல்லப்படல்,பாலியல் துஸ்பிரயோகம் எனப் பெண்ணுக் கெதிராக நிகழ்ந்த வன்முறைகள் பெண்ணுணர்வை அழித்து அவள் அடையாளத்தைச் சிதைத்தன. இனத்துவ அடிப்படை யில் நிகழ்த்தப்பட்ட இவ்வன்முறைகள் பௌதீக நிலையில் உளவியல்த் தாக்கத்தை ஏற்படுத்தின.தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் அரச வன்முறையினால் கோணேஸ்வரி, கிருஷாந்தி, ஜுடாகமாலிட்ட, ராகினி எனப் பலபெண்கள் குதறிச் சிதறடிக்கப்பட்ட வேளையில் ஆக்கிரமிக்கும் அரசபடைகளுக்கு எதிரான பெண்குரல்கள்ஆக்கிரோசமாக எழுந்தன. கிழக்கு மாகாணத்தில் மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்டு அரச படையினரால் பாலியல் வன்முறைக்குள்ளாகி யோனிக்குள் வெடிகுண்டைச் செலுத்தி குதறிச் சிதைக்கப்பட்ட கோணேஸ்வரியை குறியீடாக்கிப் எழும் கலாவின் ‘கோணேஸ்வரிகள்” என்னும் கவிதை உடலின் உதிரப்பிசிறல்களைக் கந்தகநெடி கமழ எடுத்துரைக்கிறது. ஈழத்து நவீன கவிதைத் தடத்தில் இக்கவிதை ஓர் மைல்கல் எனலாம்.
‘வீரர்களே
உங்கள் வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ளுங்கள்
என் பின்னால்
என் பள்ளித் தங்கையும் உள்ளாள்
தீர்ந்ததா எல்லாம்
அவளோடு நின்று விடாதீர்
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்
ஆகவே
வெடி வைத்தே சிதறடியுங்கள் “
வதைகளின் தடவழியே வன்முறையை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் தார்மீகக்குரல் கலாவின் கவிவழியே பிசிறின்றி ஒலிக்கிறது. கொடுமைகளுக்கு எதிரான எதிர்ப்பின் குரலாக எழும் ஆழியாளின் ‘மன்னம்பேரிகள்’ ஈழத்தின் கவிதை தடத்தில் வதையின் மொழியைத் தத்துருபமாகப் பதிவு செய்த கவிதையாகும். 1971இல் ஜே.வி.பி. கிளர்ச்சியில் பெண்கள் அணிக்குத் தலைமை தாங்கி 1971.04.16 அன்று படையினரால் கைது செய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாகிப் படுகொலை செய்யப்பட்ட மன்னம்பேரி, 17.05.1997 இல் அம்பாறையில் சென்றல் முகாம் பொலிசாரி னால் வன்புணர்வுக்குப் பின் கணவன் முன்னிலையில் யோனியில் கிரனெட் வைத்து வெடிக்கச் செய்த கோணேஸ்வரி முருகேசு முதலானவரைப் பாடும் இக்கவிதை, வீச்சு மிக்க ஈழத்துக் கவிதைகளில் ஒன்றாகும்.
                       “ காலப்பொழுதுகள் பலவற்றில் / வீதி வேலி ஓரங்களில் /நாற் சந்திச் சந்தைகளில்/
           பிரயாணங்கள் பலவற்றில் கண்டிருக்கிறேன்./ நாய்,கரடி,ஓநாய் /கழுகு,பூனை,எருதாய்ப்/
           பல வடிவங்கள் அதற்குண்டு./தந்திக் கம்பத்தருகே/கால் தூக்கியபடிக்கு/ என்னை
           உற்றுக் கிடக்கும்/ அம் மிருகம் துயின்று/ நாட்கள் பலவாகியிருக்கும்./அதன் கண்கள்/
           நான் அறியாததோர்/மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று/ அவற்றின்  பாலைத்தாகம்/அறியாப் பாஷையை/ எனக்குள் உணர்த்திற்று./ அழகி மன்னம்  பேரிக்கும்/அவள் கோணேஸ்வரிக்கும்/புரிந்த வன்மொழியாகத்தான்/ இது இருக்கும்  என/ அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.42”
இத்தடத்தில் எழும் பிறிதொரு கவிதையே கே.சுதாஜினியின் கவிதை பாலியல் வல்லுறவுக்குட்பட்டு சிதைக்கப்பட்டு நலிவடைந்த பெண்ணின் உள்ளத்தை பதிவு செய்கிறது.
           “ ஒழுங்கையில் திடீரென /நாய் குரைக்கும் சத்தம் / அது  அசதாரணமாயிருந்தது /
      யன்னலூடே பார்க்கிறேன் / படலைக்கருகில் “ஓநாய்க்கூட்டம்” / பத்துப் பன்னிரெண்டென
      அவை /என்னை /நான் எதனுள் மறைக்க …. /என் தனிமையில் களி கொண்டு /
      வெடுக்கென என்னில் பாய்ந்தன ஓநாய்கள் / குரல்வளையும் வறண்டு போய் /அதிர  மறுத்தது / ஆனாலும் விக்கித்துக் கதறினேன் / ஓநாய்கள் தம் முன்னங்கால்களால் / என்  கன்னங்களை /அறைந்தன / தலை கிறுகி வந்தது / கணங்கள் இருண்டு போக / என்னுடல் இழுத்துச் செல்லப்படகிறது என் /இருட்டறைக்குள் ……/ நான் நினைவிழக்கிறேன் /…….
 என்னுடலெங்கும் காயங்கள் அசைக்க முடியவில்லை /கிழிந்த உதடுகளிலிருந்து குருதி/
      வடிந்தது /சிதைந்த என் உடலங்களை / ஒருங்கு சேர்க்கிறேன் / மெதுவாய் நிமிர்ந்து  சுவரில் சாய்கிறேன் / நான் கிடந்த இடம்- அது /குருதியில் நனைந்திருந்தது /என் இதயம்  அனலாய்க் கொதிக்க / கண்ணீர் /அதன் வடிகாலாய் வழிந்து /உதட்டுக் குருதியை /  கழுவிச் சென்றது  ”
     விபரணப்பாங்கில் அமையும் இக்கவிதை ஈழத்தில் நடந்த துன்பியலின் வடுக்களை நடப்பியல் வாழ்வுக்கூடாக எடுத்துரைக்கிறது.குரூர வெறியாட்டுக்குட்பட்ட பெண்ணின் உடல் வலிகளுடன் கவிதையை படிப்போன் மனதைத் தைக்கும் வண்ணம் எடுத்துரைக்கிறது.மரபுகளை உடைத்து பெண்ணுணர்வுகளை மையப்படுத்தி எழுந்த இக்கவிதை அச்சம் தரும் சூழலில் நிகழ்காலப் பெண்ணின் இருப்பை ஆவணப்படுத்திக் காட்டிய கவிதையாகும்.
  ஓக்டோபரில் வந்து விழுந்த கவிதைகள் என்னும் தலைப்பில் ‘மூன்றாவது மனிதன்’ சஞ்சிகையில் ஆகர்சியாவால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் ஈழதேசத்தின் ஒரு காலகட்டத்தின் நிகழ்கால பதிவுகளே ஆகும்.வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் போராடும் ஈழப் பெண்ணின் அன்றாட வாழ்வியலை இக்கவிதைகள் எடுத்துரைக்கின்றன.
                                                              “ஷெல்களிலும் சொல்களிலும்
                            சிதறிப் போகின்ற வாழ்க்கையை
                            குனிந்து தடவுகின்றேன்
                            பிரிவு சொல்லிப் போனது
                            பஸ் வண்டி
                            காதிற்குள் குடைந்தன
                            துயர ஓலங்கள்
                            இருப்பென்றும் இறப்பென்றும்
                            பச்சோந்தி முகம் காட்டும்
                            நாட்களின்
                            மார்பில் உதைத்து
                            அடிமரம் பற்றி அழுகின்றேன்
                            தழுவி அணைப்பனவோ
                            வேட்டொலிகள்;  “
துயர் படிந்த பூமியின் துன்பியல் குரலாய் ஒலிக்கும் இககவிதை நிதர்சன வாழ்வின் வரலாற்றுச் சுவடுகள். உயிர்குடிக்கும் எறிகணைத் தாக்குதல்களாலும் துப்பாக்கிகளின் வெடியோசைகளாலும் அதிர்ந்து கொண்டிருக்கும் ஈழதேசத்தில்தன் குழந்தைகளுக்கு நிசப்தமான இனிய காலைப் பொழுதைக்கூடக்  காட்டமுடியாத ஏக்கம் அம்புலியின் ‘தேடி அலைவாய்” கவிதையில் ‘ஒரு அழகிய காலையை ஃஉனக்கு காட்ட முடியாத ஃவசந்த காலத்தில் ஃ விளையாட முடியாத ஃ பாலைவன நாட்களையே ஃ உனக்கு பரிசளிக்கிறேன்;45” என்னும் அடிகளில் நடப்பியல் வாழ்வியலுக்கூடாக வெளிப்படுகிறது.குழந்தைக்கு காட்ட முடியாத காலை மைதிலி அருளையாவின் ‘ஒவ்வொரு காலையிலும்’ கவிதையில் படிமங்களுக்கூடான துயரியின் காட்சிப் பதிவாய் வெளிப்படுகிறது.
                          “ ஒவ்வொரு இரவிலும் கவியும்
                            சோகை பிடித்துப்போன கருமையைக்
                            கரைத்த படி பிழியப்பிழிய அழுது சோர்ந்து
                            முகம் வெளிறிய குழந்தையாய்த் தோன்றும்
                            குரலை ”
இயற்கையைக்கூட பார்க்க முடியாத ரசிக்க முடியாத துர்ப்பாக்கிய சூழலில் யுத்தம் மனித உணர்வுகளைச் சிதைக்கிறது. மனித உறுப்புக்களை காவுகொள்கிறது.ஷெல்லுக்கு இரையாகி குண்டடிபட்டு அங்கவீனப்பட்ட கால்களைப்பாடும் உதயலட்சுமியின் (அம்புலி) குரல்  ஈழதேசத்தின் ஒரு கால கட்டத்தின் நிகழ்காலப்பதிவு ஆகும்.
                          ‘எத்தனை களங்கள்
                           கண்ட என் கால்கள்
                     செத்தநிலை போல
                     சவமாகிக் கிடக்கிறதே; “
வேதனையின் ரணங்களைப்பாடும் அம்புலியின் குரலைப் போன்று ‘அம்மா / இன்று நான் / உன்னிடம் வந்தபோது /வீட்டு முற்றத்தில் பதித்த என் / பாதச்சுவடு காத்து வை / நாளை நான் / வருவேன் என்பது /என்ன நிச்சயம்48″ என நாளைய பொழுதில் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் பெண் போராளியின் பதிவாய் ஒலிக்கும் மன்னார் ரூபி மார்க்கிரட்டின் குரலும் நவீன தமிழிலக்கியத்துக்குப் புதியதே.
  ஈழத்தில் போர் ஏற்படுத்திய தாக்கம் அதீதமானது.போரின் வாழ்வில் பலி கொள்ளப்பட்டவர்கள் அநேகர்.போர்க்கால அமைதியில் அச்சமும் பீதியும் மனித வாழ்வை வாட்டி,வதைத்த அக்கொடூர கணங்களை நிணமும் சதையுமாக ஆழியாளின் ‘சின்னப்பாலம்;’ என்னும் கவிதை பதிவு செய்கிறது.
         ‘போர்க்கால அமைதி /எனது கிராமத்தின் / எஞ்சிய ஊர்மனைகளில் / வெட்ட      வெளீரெனக் கிடந்த வயல் வெளிகளில் /சிற்றாறுகள் பின்னி வைத்த /வண்டல் மண்      கரைகளில் / சின்னப்பாலத்தின் வெறிச்சோடலில் /ஐந்துவிரல் கொண்டு அறைந்து      கிடந்தது. சின்னப் பாலத்தடிக்கு /நித்தம் செட்டை அடித்து வந்தன/ வழக்கத்திலும்        கொழுத்த / ஒற்றைக்கால் கொக்குகளும்,சுழியோடும் நீர்க் கோழிகளும்,/ அவற்றில்      அதிகமாய்/விளைந்து கிடநதன / ஊறி அழுகிய பிணங்களின் /வாசைன முகர்ந்து,சுவை      அறிந்த / ஜப்பான் குறலிகளும்,குறட்டை பெட்டியான் மீன்களும்,/ கபறக்கொய்யாக்களோ/         எவ்வித நிர்ச்சலமின்றி /நீரிற் பொசிந்தூறிய மனித கபாலங்களை / ஆளுக்கு ஐந்து      ஆறாய்ப் / பங்கிட்டக் கொண்டன – சண்டை சச்சரவின்றி சமாதானத்துடனே”
 போருக்குப்பின்னரான அமைதியை ஆழமான படிமத்துக்கூடாக விளக்கும் இக்கவிதை நவீனத்தமிழ்க்கவிதைகளில் தனித்துவமானது.
   போரினால் உடமையிழந்து, உரிமையிழந்து, வலியிழந்து, அடிமையாய், ஏதுமற்ற ஏதிலிகளாய் வாழும் வாழ்வைக் காட்சிப்படுத்தும் கவிதைகளும் பெண்களால் பாடப்பட்டுள்ளன.
                     “அவள் அரசின் வன்செயலால் அகதியாகி வந்திட்டாள் தொற்று நோய்களின் இருப்பிடம்
          நோய்க்காவிகளின் உறைவிடம் வயிற்றுப்பசியின் வாழ்விடம் இதுவே இவள் வதிவிடம்
          அகதிகளின் நிவாரணம் அரைவயிற்றுக்கு அடங்காமல் போனதால் அரைவாசி அவிந்த
          மீனை ஆவலுடன் புசிக்கின்றனர் எரியும் வயிற்றுக்குள் புதைக்கின்றனர் ”
கவிதை அலங்காரத் தன்மை கொண்ட அதீத வார்த்தைகளுக்கூடாகக் கட்டுண்டாலும் ஈழத்தில் இயங்கும் பெரும்பாலான அகதிமுகாம்களின் உண்மைத்தன்மையைக் இக்கவிதை காட்சிப்படுத்துகிறது.
  2002 இல் தொடங்கப்பட்ட சமாதான பேச்சுகள் தொடச்சியற்று நின்றுபோய்விட, நிம்மதியில்லா வாழ்க்கை மீணடு;ம் தொடரப்போவதை எண்ணி கலங்கும் பெண் உள்ளத்தை நாகபூஷணி கருப்பையாவின் ‘மெல்ல மெல்ல’,என்னும் கவிதையில் காணலாம்.
                                  “சந்தோசமாயிருந்த
                                மனங்கள் மீது
                                மெல்ல மெல்ல
                                பதற்றம் தடவியது.
                                திடீரென்று சமாதானப் பேச்சுகள்
                                இடை நிறுத்தப்பட்டது.
                                படுக்கையில்
                                கனவொன்று
                                முன் கூட்டியே
                                நிழலாய் தொடர்ந்தது
                               ……நடுக்கம் வந்து –என்
                                உடம்போடு ஒட்டியது.
                                மீண்டும் –
                                என் நிம்மதி
                                காணமல் போய்விடுமோ
                                என்று ”
 ஈழத்து நவீன கவிதைகள்புறநானூற்று வீரத்துக்கு ஒப்ப படைக்கப்பட்டுள்ளன.“கெடுக சிந்தை கடிதிவடுணிவே52” என்னும் ஒக்கூர் மாசாத்தியார் பாடலில் வரும் தாய் முதிய மறக்குடியில் பிறந்தவள். இவளின் தந்தை யானையைக் கொன்று தானும் மாண்டவன்.இவளது கணவன் நிரைகளைப் பகைவர் கவர்ந்து செல்லாதவாறு தடுத்து மாண்டவன்.அச்சமயம் போருக்கு எழுமாறு பகைவரின் பறையொலி கேட்கிறது.மறப்புகழ்பாற் விருப்பம் கொண்ட அப்பெண் தனக்கிருந்த ஒரேயொரு புதல்வனைக் குடும்பியில் எண்ணை வைத்து வெள்ளிய ஆடையுடுத்தி,போருக்கு அனுப்புகிறாள். இத்தாய்க்கு நிகர்த்த வீரத்தை அ.காந்தாவின் “எந்த மகனுக்காய் என் கால்களை நகர்த்த”என்னும் கவிதையில் காணலாம்.
                                                                       “ அவனை விதைத்த
                                 அடுத்த கணம்
                                 அதோ அடுத்தடுத்துள்ள
                                 கல்லறைகளை நோக்கி
                                 ஓடின கால்கள்.
                                 கண்ணீர் பூக்களைத்
                                 தூவின கைகள்.
                                 எந்த மகனுக்காய்
                                 என் கால்களை நகர்த்த?
                                 நேற்று விதையுண்டு போன
                                 மூத்தவனுக்கா?-இல்லை
                                 இப்போதுதான்
                                 விதைக்கப்பட்ட என்
                                 இளைய குஞ்சுக்கா? ”
 இழப்புக்களைத் தாங்கித் தாங்கி நிமிர்கிறது நம் தேசம். இன்று உள்ளவன் நாளையில்லை.மண்ணுக்காக மரணித்தவன் மாண்ட பின்னரும் வாழ்கிறான்.துயரத்தை நெஞ்சில் ஏந்தி கண்ணீரை விழியில் சேர்த்து தொடர்கிறது ‘சண்முகநாதன் கலைமகளின் பயணம்.
                          “நேற்றுவரை /கண்ணெதிரே நின்று /கதை பேசிச் சிரித்த முகம் இனறு /காவியமாய்ப்
            போனது. /நிஜமும் நிழலாகிப் போக /நீங்க முடியாத/ நினைவுகளால்/நிறைக்கப்பட்ட
            இதயத்தின் /விழி வழியே /நினைவின் துளிகள் /…… இன்னமும் இரண்டு /  மணித்துளிதான். / நேற்றைய உன்னைப்போல் / இன்று உன்னருகில் /நான். /கந்தகச்  சுமையை /கட்டியணைத்தபடி / உன் தடம் பட்ட/மண்ணெடுத்து/முத்தமிட்டு /இலக்கு  நோக்கி /தொடர்கிறது ஃஎன் பயணமும் ”
உடலில் வெடி குண்டினைக் கட்டிச் செல்லும் உன்னத ஆத்மாவின் பதிவும் பார்வையுமாக வெளிப்படு;ம் இக்கவிதை தமிழ் இலக்கிய உலகுக்குப் புதியது.படிப்போர் மனங்களில் கண்ணீரைச் சொரியச் செய்யும் இக்கவிதைகள் நெய்யப்பட்டவை யல்ல.இதயத்திலிருந்து வார்க்கப்பட்டவை.
  தற்கொடைப் போராளிகளுக்கு கல்லறைகள் கிடையாது. அவர்களின் சடலங்கள் உரிமை கோரப்படுவதில்லை.சுவடு தெரியாமல் அவர் இருப்ப மறைக்கப்படும்.இவ்வாறு தற்கொடைப் போராளியாய்ப் போய் உடல் சிதறி வெடியுண்டு சிதைந்து கிடக்கும் தோழியைப் பாடும் பெயரிடப்படாத நட்சத்திரங்கள் என்னும் கவிதை உள்ளத்தை உடைய வைக்கிறது.
                       “அன்பான தோழி/ நீயும் இல்லை / உனக்கு கல்லறையும் இல்லை/ கண்ணீர் விட்டு
           அழமுடிந்தும் / பெயர் சொல்லி அழ முடியவில்லை. / தோழி! உன் சாதனை  உன்னதம். .…/பெயரிடாத நட்சத்திரமே!/பல்லாயிரம் நட்சத்திரங்களில்/ உன்        பிரகாசம் மட்டும்/என் கண்ணைப் பறித்துக் கதை சொல்லுகின்றது… ”
  பெண்ணுடல்,பெண்மொழி என்னும் கருத்துருவங்கள் வலுவடைந்த நிலையில் நுட்பமான வார்த்தைப் படிமங்களுக்கூடான அனுபவ உலகமாக விரியும் ஃபஹீமா ஜஹானின் கவிதைகள் முஸ்லீம் தமிழ் இனத்துவத்தின் உறவுப் பாலமாகும். இஸ்லாமிய அடிப்படை வாதத்திலிருந்து விலகி தமிழ்த்தேசியத்தின் ஆதரவுக் குரலாய் விளங்கும் பஹீமா ஜஹானின் கவிதைகள் போரின் வலி,அடக்குமுறைக்கெதிரான தார்மீகக் கோபம்,இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு,மனிதமனங் களுக்கிடையிலான உறவு முதலானவற்றைப் பேசுகின்றன.சிறந்த குறியீட்டு உத்திகளைக் கையாண்டு தமிழ்க்கவிதைகளை நவீன தளத்துக்கு இட்டுச் சென்ற கவிதா ஆளுமைகளுள்  ஒருவரான பஹீமா ஜகான் தமிழருக்கெதிரான ஒடுக்குமுறை களையும் அவர்களின் வாழ்வியல் அவலங்களையும் பாடியவர்.விடுதலைப் போராட்டத்தின் தீவிரப் போக்குகள் தமிழ் முஸ்லிங்களிடையே விரிசலை ஏற்படுத்திய காலப் பகுதியில் தமிழ் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர். விடுதலைப் போரில் தன்னுயிர் ஈந்த போராளியைப் பாடும் ஒரு கடல் நீரூற்றி என்னும் கவிதை ஈழத்தின் நிகழ் காலப்பதிவுகளில் ஒன்றாகும்.
               “அலையெழுப்பும் கடல் பரப்பினில் / உனக்கான பணி முடிக்கவென விடை      பெற்றுப்போனாய் / வாழ்த்தச் சொல்ல வாயெழவுமில்லை / ஆரத்தழுவிட /நீ     விரும்பவுமில்லை / வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட /     மழைப்புகாரினூடே மறைந்து போனாய் / திரைகடல் சென்ற திரவியமானாய் /       ஆழிப்பரப்பெங்கம் ஊழித்தீ எழுந்து தணிந்தது – நீ /  திரும்பி வரவே இல்லை /
  இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது / காலத்துயரின் பெருமொனம் கவிழ்ந்துள்ளது /  சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !/   இங்கு ஏதுமற்ற உன்கல்லறையில் /    ஒரு கடல் நீருற்றி நிரம்பிடவோ “
வீரம் நிலத்தை ஆக்கிரமித்தது; நிலத்தை வென்றது. உயிர்களைப் பலிகுடித்து உடல்களைச் சிதைத்த போதும் வீரம் பேசப்படும். அன்று தொடக்கம் இன்றுவரை அது வரலாற்று உன்னதமாகச் சித்திரிக்கப்படும். இவ்வகையில் ஆனையிறவு வெற்றி மகத்தான வெற்றியாக கருதப்பட்டு ‘ஆனையிறவு” என்னும் கவிதைத் தொகுப்பை ஈழத்துக்களித்தது. வீரத்தின் வலிகளைத் தாங்கி உப்புக்காற்றுத் தழுவிய சாலையில் ‘ஆனையிறவு” எழுந்து நிற்பதை அலையிசையின் ‘ஆக்கிரமிப்புச் சின்னங்களைத் தாங்கிய பூமி / உலகறியக் கூவும் பிரச்சார விளைநிலம் / வெறித்தனத்தின் உச்சம் சிதற விழித்திருந்தது. (ஆனையிறவு, பக் 41) என்னும் எழுச்சிமிக்க வரிகள் காட்சிப்படிமங்களுக்கூடாக உயிரோட்டம் பெறுகின்றன.
  பெண்ணியத்தின் தீவிரபோக்கைக் கருத்தாடல்களுக்கூடாக உள்வாங்கிய பெண் கவிஞைகள்;, போர் ஏற்படுத்திய வலி, உணர்ச்சி அதன் தாக்கம்  ஆகியவற்றை ஆழமான மொழிச்சொல்லாடல் படிமக்,குறியீட்டுக் கருத்துருவாக்கங்களின் வழி அனுபவங்களை, நவீன கவிதைகளாக உருவாக்கினர்.இக்காலப்பகுதியில் இலக்கிய மீட்டுருவாக்கத்தின் மூலம் பெண்ணிற்கான ஒரு புதிய வெளியை ஈழத்தின் போரியல் கவிதை திறந்தது.இங்கு பெண் மொழி என்பது ஒடுக்கப்பட்ட பெண்ணுடலுக்குள் சூழல் மாற்றம் கிளர்த்தும் கிளர்ச்சி,வேட்கை,வலி,கனவு,ஆகியன உள்ளிட்ட அக நிகழ்வுகள் சார்ந்து உருவாகின்றன. பொதுவாக தான் சார்ந்த சூழலோடு முனைப்பு பெறும் இப்பெண்மொழியானது பிரத்தியேக மனப்படிமங்களுக்கூடாகப் பால்சாhந்த தனித்த அடையாளங்களை வெளி ப்படுத்தி நிற்கிறது.இக்கவிதைகள் ஈழத்தின் வாழ்வியல் சுவடாக ஒளிர்ந்து தனித்துவமான உணர்வுகளை உருக்கமாகவும் உயிரோட்டமாகவும் பதிவு செய்வதால் என்றும் எப்போதும் நிலைத்து நிற்க்கும் என்பதில் ஐயமில்லை. 
00000
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment