Home » இதழ் 02 » மூன்று நூல்களின் வெளியீடும் குறிப்புகளும்…….

 

மூன்று நூல்களின் வெளியீடும் குறிப்புகளும்…….

 
சி.சிவசேகரத்தின் குழந்தையும் தேசமும் சிறுகதைகள் வெளியீட்டு நிகழ்வு
————————————————————————————————————–
  சி.சிவசேகரத்தின் “குழந்தையும் தேசமும்”  சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வு 21.04.2012 மாலை நான்கு மணிக்கு யாழ்ப்பாணம் ஊடக வளங்கள் கற்கை நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் திரு. க.தணிகாசலம் தலைமை தாங்கினார். வெளியீட்டுரையை சோ. தேவராஜா நிகழ்த்தினார். விமர்சன உரைகளை கருணாகரன், ராஜேஸ்கண்ணா ஆகியோர் ஆற்றினர். இந்த நிகழ்வில் எதிர்பார்த்ததையும் விட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அரங்கிற்குக் கொண்டு வந்திருந்த புத்தகங்கள் போதாமற்போய்விட்டது. அந்த அளவிற்கு கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் புத்தகத்தை ஆர்வத்தோடு வாங்கினார்கள்.
 சிவசேகரமும் கதைகளை எழுதியுள்ளாரா என்று பலருக்கும் ஆச்சரியம். ஆனால், இந்தக் கதைகளில் பலவற்றையும் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு இதழ்களில் ஏற்கனவே பலரும் படித்திருந்தனர். இப்போது எல்லாவற்றையும் தொகுத்து, சி.சிவசேகரம் என்ற பெயரிலேயே வெளியிட்டிருக்கிறது தேசிய கலை இலக்கியப் பேரவை. எல்லாமாக 20 கதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன.
வாசிப்புக்கு மிகச் சுவாரஷ்யத்தை ஊட்டும் இந்தக் கதைகள் புலப்படுத்தும், உணர்த்தும் விசயங்கள் ஏராளம். சர்வதேச மயப்பட்ட பார்வையும் அனுபவமும் பல் பிராந்தியக் களங்களும் கொண்டிருக்கும் இந்தக் கதைகள் பல திரைகளையும் விலக்கி உண்மையை, யதார்த்தத்தை, மனிதவாழ்வை, அதன் வேட்கையைக் காண்பிக்கின்றன. தேசிய கலை இலக்கியப் பேரவை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தது.
0000

 

 

முருகேசு ரவீந்திரனின் வாழ்க்கைப் பயணங்கள் (சிறுகதைத் தொகுதி) வெளியீட்டு நிகழ்வு!
————————————————————————————————————————————
 இலங்கை வானொலியின் அறிவிப்பாளரும் எழுத்தாளருமாகிய திரு.முருகேசு ரவீந்திரனின் “வாழ்க்கைப் பயணம்“ என்ற சிறுகதை நூல் வெளியீட்டு விழா  16.04.2012 அன்று மாலை நான்கு மணிக்கு யாழ்ப்பாணம், நல்லூர் சொர்ணாம்பிகை மண்டபவத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு யாழ்பாணப் பல்கலைக் கழக ஆங்கில விரிவுரையாளரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு. அருணகிரிநாதன் தலைமை தாங்கினார். சிறப்புரையினை எழுத்தாளர் திரு. ந.சத்தியபாலன் நிகழ்த்தினார். வரவேற்புரை, வெளியீட்டுரை, நன்றியுரை ஆகியவற்றை முருகேசு ரவீந்திரனின் பள்ளித் தோழர்களாகிய – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1985 உயர்தர மாணவ நணர்பர்கள் நிகழ்த்தினர்.
இந்த மாணவ நணபர்களே இந்த நூலையும் வெளியிட்டு, வெளியீட்டு விழாவையும் நடத்தினர். இந்த நிகழ்வில் குறிப்பிட்ட மாணவ நண்பர்களுக்குக் கல்வி கற்பி்த்த ஆசிரியர்களும் நூலுக்கான அட்டைப்படத்தை வரைந்திருந்த ஓவியர் கைலாசநாதனும் கௌரவிக்கப்பட்டனர். இந்த மாதிரியான ஒரு தெரிகையின் மூலமும் ஒழுங்கமைப்பின் மூலமும் நிகழ்ச்சி சற்று வேறுபட்ட வகையில் ஈர்ப்பைத்தந்தது. புத்தகத்தை வெளியிடுவதற்கும் இந்த நண்பர்களே ஒத்துழைத்திருக்கிறார்கள். இது நல்லதொரு ஆரம்பம்.
பெரும்பாலும் யாழ்ப்பாணச் சமூகத்தின் வாழ்க்கைப் பிரச்சினைகளையே இந்தக் கதைகளில் மையமாக்கியுள்ளார் முருகேசு ரவீந்திரன். எளிமையான கதைகள். அநேகமானவை, பத்திரிகைகளி்ல் வெளிவந்தவை.  ஊகடத்துறை சார்ந்த ஒருவராக இருப்பதன் மூலமாக பரவலான அறிமுகத்தைப் பெற்ற முருகேசு ரவீந்திரன், இப்போது இந்தக் கதைகளின் மூலம் இன்னொரு அறிமுகப் பிராந்தியத்தையும் சேர்த்துக்கொள்கிறார்.
0000
-பர்மிய பிக்கு சொன்ன கதைகள் -சோ. பத்மநாதனின் வெளியீட்டு நிகழ்வு!
———————————————————————————————————
(01)
பர்மா என்றவுடன் இன்று சட்டென நினைவில் எழுவது ஒங்சான் சுகி (aung san suu kyi). நீண்டகாலமாகவே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிந்த ஒரு அரசியற் போராளி, ஒரு ஜனநாயகவாதி. ஒரு மனித உரிமைச் செயற்பாட்டுக்காரர். மறுபக்கத்தில் அவர் பர்மிய அரசின் நீண்டகால எதிரி. இதனால் பர்மிய அரசினால் மேற்குலகின் ஏவலாள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர். ஆனால், என்னதான் இருந்தாலும் இன்று இந்தப் பெண் பர்மாவின் இருப்புப் பூட்டுகளை அவர் மெல்லத் திறந்து விட்டார். நீண்ட சகிப்பின் மூலம், அதையே ஆயுதமாக்கிச் சுஜி இந்த நிகழ்ச்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதற்கு முன் பர்மாவைப் பற்றி நாம் அறிந்திருந்தது பெரும்பாலும் அரிசியினால். ஆசியாவின் மிகப் பெரும் நெற்களஞ்சியம் என்று பர்மாவைப் பற்றிச் சொல்லப்பட்டது. அந்த நெற்களஞ்சியத்திலிருந்து இலங்கைக்கு நீண்டகாலமாகவே அரிசி வந்தது. வெள்ளை அரிசி. கூடவே, தேக்குமரங்களாலும் பேரெடுத்தது பர்மா. இன்னும் பல வீடுகளில், உல்லாச விடுதிகளில் எல்லாம்;பர்மியத் தேக்கு மரங்களால் செய்யப்பட்ட தளபாடங்கள் உள்ளன.
இவையெல்லாவற்றையும் விட பர்மாவைப் பற்றித் தமிழர்கள் அதிகமாக அறிய வைத்தவை ரங்கூன் ராதா, பராசக்தி போன்ற திரைப்படங்களே. பர்மாவிலும் தமிழர்கள் உள்ளனர், அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், அங்கே என்ன நடக்கிறது என்ற விசயங்கள் பரவலாக மக்கள் மயப்பட்ட அளவில் அறிய வைத்தன இந்தப் படங்கள்.
 பால்மரக்காட்டினிலே’ என்ற நாவலை பர்மாவைக் களமாகக் கொண்டு, அங்குள்ள தமிழர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி அகிலன் எழுதினார் என்றொரு ஞாபகம்.
தமிழ்நாட்டில் இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசால் தொழிலாளர்களாகவும் அரச சேவர்கர்களாகவும் பர்மா(மியான்மார்) கொண்டு செல்லப்பட்டவர்களின் வம்சாவழியினர் பர்மா தமிழர் ஆவர். ஆரம்பத்தில் 500 000 மேற்பட்டவர்களாக இருந்தார்கள். தமிழர்களில் செட்டியார் எனப்பட்டவர்கள் ஆதிக்க சக்தியாக மாறி பர்மா விவசாயிகளின் நலன்களை பாதிக்குமாறு நடந்துகொண்டார்கள்.அதனால் ஏற்பட்ட கிளர்ச்சியில் பெரும்பாலான தமிழர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இருப்பினும் இன்றும் பர்மாவில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். பர்மா அரசு அவர்களுக்கு தமிழ் கல்வியையோஇ பண்பாட்டையோ பேண இடமளிக்கவில்லை என்ற படியால் பலர் பர்மா மைய நீரோட்டத்தில் கலந்துவிட்டார்கள். இருப்பினும் குறிப்பிடத்தக்க தொகையினர் தமிழ் அடையாளத்தோடும் இன்றும் பர்மாவில் வசிக்கின்றனர்.
 என்கிறது விக்கிப் பீடியா.
இவையெல்லாம் பர்மாவுக்கும் தமிழர்களுக்குமிடையில் உள்ள உறவும் அறிதல்களும். இதற்கப்பால் பர்மா ஒரு பௌத்த நாடு என்பதும், அது தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்று என்பதும் மேலதிகமான தகவல்கள். அதற்கப்பால்….?இப்பொழுது இன்னொரு புதிய கதவைத் திறந்து தமிழர்களுக்கு பர்மாவைப்பற்றிய மேலும் சில விசயங்களை அறிய வைக்கிறார் சோ.ப. பர்மிய பிக்கு ஒருவர் சொன்ன கதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருப்பதன் மூலம் இந்தப் புதிய அறிதலை அவர் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.
பிக்கு சொன்ன கதைகள் என்ற தலைப்பில் குமரன் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
23.05.2012 யாழ்ப்பாணத்தில் நடந்த இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்வு (பர்மிய பிக்கு சொன்ன கதைகள்) குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அளவான பேச்சுகள். முக்கியமான உரைகள். நிறைந்த சனக்கூட்டம். காத்திருப்புகள்,இழுபடல்கள்,அலுப்பு ஏதுமில்லாமல் நடந்த நிகழ்வு. இப்படி நிகழ்வுகள் நடந்தால் பலரும் ஆர்வத்தோடு வருவார்கள். செலவழிக்கும் நேரத்துக்கும் நேரம் ஒதுக்கி நிகழ்வுக்கு வருவதற்கும் நன்மையும் கிடைக்கும்.
இந்த நூல் தொடர்பாகவும் வெளியீடு தொடர்பாகவும் உள்ள இன்னொரு முக்கியமான விசயம்         
1.இது ஒரு பௌத்தத் துறவி (பர்மிய பிக்கு) சொன்ன கதைகள்.
2. இதை மொழிபெயர்த்தவர் ஒரு சைவரான சோ. பத்மநாதன்.
3. இதற்கு அணிந்துரை எழுதியவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரா கலாநிதி எம்.ஏ. நுஃமான்.
4. இந்த நுாலை வெளியிட்டவர்,கிறிஸ்தவரான பேராயர் ஜெபநேசன்.
வெளியீடு நடந்த இடம்கூட சற்று வித்தியாசமானதுதான்,மலேயன் பென்சனியர்ஸ் கட்டிடம். – தற்போதைய யாழ்ப்பாணப் பல்கலை க் கழகத்தின் ஊடக வளங்கள் கற்கை நிலையம்.
௦௦௦௦
குறிப்பும் புகைப்படங்களும்-கருணாகரன்
௦௦௦௦
நிகழ்வுகள் குறித்த பதிவுகளை எமக்கு அனுப்பி வையுங்கள்!பதிவேற்றுகிறோம்….


 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment