Home »

 

படிப்பகம்/நூல்கள்

 

 

மேலதிக நூல்களுக்கு இந்த இணைப்பை அழுத்தவும்

 

*கடவுள் தொடங்கிய இடம்

அ.முத்துலிங்கம்

தமிழ் நாவல் ஒன்று உலகத் தரத்தோடு வந்திருக்கிறது. உலகத் தரம் என்று இங்கே குறிப்பிடுவது இதில் கையாளப்பட்டிருக்கும் உலகம் தழுவிய பிரச்னைகளாலும்தான். இலங்கையின் தமிழ் இளைஞன் ஒருவன் கனடாவில் தஞ்சம் அடையக் கிளம்புகிறான். தமிழர்கள் அகதிகளாக இன்று உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். தஞ்சம் அடையும் அந்தப் பயணம் எப்படி நிகழ்கிறது என்பதை உணர்ச்சிகரமாக விவரிக்கிறது இந்த நாவல். இலங்கையில் இருந்து புறப்பட்ட 19 வயது நிஷாந், உயிரைக் காக்கும் பயணத்தில் உயிரையே பணயம் வைக்கும் தருணங்கள் பதற வைக்கின்றன. பாகிஸ்தான், உக்ரைன், ரஷ்யா, துருக்கி, ஜெர்மன், பிரான்ஸ், லண்டன், ஈகுவடார், கனடா என எத்தனை நாடுகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. எத்தனை கெடுபிடி, எத்தனை போலீஸ், எத்தனை காயம், எத்தனை குளிர்… குடியுரிமை வாங்கி ஒரு நாட்டில் தம்மை ஒப்புக்குக் கொடுக்கிற வரை காலூன்ற இடமில்லாமல் தேசம்விட்டு தேசம் ஊசலாடும் இந்த மனிதப் பறவைகளின் அவலம் ஒவ்வொரு வரியிலும் உரக்கச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

*தெற்கிலிருந்து ஒரு சூரியன்:

கருணாநிதியின் அயராத உழைப்புக்கான மரியாதை!

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தொடர்ந்து தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் சட்ட மன்றப் பணியின் அறுபதாண்டு… இந்த மூன்று தருணங்களும் தமிழ்நாட்டைத் தாண்டியும் இந்தியா முழுமைக்கும் முக்கியமானவை. ஆனால், இந்தியாவின் தேசிய ஊடகங்கள் வழக்கம்போல இதற்கும் பெரிய கவனம் அளிக்காமலேயே கடந்துபோயின. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் குழுவால் அப்படிக் கடந்து போக முடியவில்லை.

எல்லா நிறை – குறைகளைக் கடந்தும், இந்த மண்ணில் மகத்தான ஒரு பணியை, குறிப்பாக சமூக நீதித் தளத்தில் திராவிட இயக்கம் நிறைவேற்றியிருக்கிறது. அதன் முக்கியமான தளகர்த்தர்களில் ஒருவர் என்பதோடு, இந்த ஐம்பதாண்டுகளில் தமிழகத்தின் நீண்ட கால முதல்வர், சவாலான எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையையும் கொண்டவர் கருணாநிதி. ஜனநாயக நாடு ஒன்றில் 60 ஆண்டு காலம் தொடர்ந்து மக்களால் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு, அதுவும் சாதி ஆதிக்க இந்திய அரசியலில் ஒரு அழுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து, இப்படி சாதித்த வரலாறு கருணாநிதியை அன்றி யாருக்கும் இல்லை.

ஆக, இந்த முக்கியமான தருணத்தில் அவருடைய பங்களிப்பைப் பேசும் நூல் ஒன்றை ஏன் நாம் கொண்டுவரக் கூடாது என்ற கேள்வியை நாங்கள் கேட்டுக்கொண்டோம். அதற்கான பதில்தான் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகம்! கூடவே, திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு பின்னணியையும் திமுக, அதிமுக இரு கட்சிகளின் ஆட்சியிலும் தமிழகத்தில் நிகழ்ந்த நல்ல மாற்றங்களையும் இந்நூலில் தொட்டிருக்கிறோம்.

*சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

யுவால் நோவா ஹராரி

தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களைவிட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை….

சேப்பியன்ஸ் மற்ற மனித இனங்களை கொன்றொழித்துவிட்டு, இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறோம் என்று அதிரடியாகத் தொடங்கும் இந்நூல் சேப்பியன்ஸின் வளர்ச்சிக்குக் காரணம் அவர்களின் அறிவுத்திறனில் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒருபுரட்சிகரமான மாற்றம் என்கிறது. இந்த அறிவுப்புரட்சிக்கு அடுத்து மனித குலத்தைத் தீர்மானித்தது எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த வேளாண்புரட்சி. அதன்பின்னர் சமீபகாலத்தில் உருவான அறிவியல் புரட்சி, வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக மனிதர்களை உருவாக்கி உள்ளது. நாம் கடவுளாக மாறிய ஓர் விலங்கு என்று முடிகிறது இந்தபுத்தகம். இந்த நூலை தமிழ்ப்படுத்தியிருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். இதைத் தமிழ்ப்படுத்த எத்தனைக் கலைச்சொற்கள் தேவை என்பதை இந்நூலை ஆங்கிலத்தில் படித்தவர்கள் உணர்ந்திருப்பர். ஆனால் அந்த சவாலை நேர்மையாக எதிர்கொண்டு வென்றுள்ளார் மொழிபெயர்ப்பாளர்.இந்த நூலை தமிழின் அறிவுலகுக்கு ஒரு கொடை என்றே சொல்லலாம்!

*மலர் மஞ்சம்

தி.ஜானகிராமன்

தி. ஜானகிராமனின் இரண்டாவது நாவல் ‘மலர் மஞ்சம்’. ‘கிராம ஊழிய’னில் 1940களின் தொடக்கத்தில் தொடராக வெளிவந்த ‘அமிர்தம்’ போலவே இந்த நாவலும் ‘சுதேச மித்திரன்’ வாரப்பதிப்பில் 1960ஆம் ஆண்டில் தொடராக வெளிவந்தது. நாவலாசிரியராக தி. ஜானகிராமனுக்குக் கவனம்பெற்றுத் தந்த படைப்பும் இதுவே. பாத்திரச் சித்தரிப்பு, பின்புலவலு, மொழிச் சரளம், வாசிப்பின் உயிரோட்டம் ஆகிய கூறுகளால் தனித்துநின்ற, நிற்கும் படைப்பு.

 

 *ரஷியப் புரட்சி: ஒரு புத்தகத்தின் வரலாறு

எஸ். வி. ராஜதுரை

1917 நவம்பர் ரஷ்யப் புரட்சி நிகழ்வுகளை நேரடியாகப் பார்த்துப் பதிவு செய்தவற்றில் ஜான் ரீடின் ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’, இருபதாம் நூற்றாண்டு வரலாற்று ஆவணங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. லெனினாலும் க்ரூப்ஸ்கயாவாலும் முன்னுரை எழுதப்பட்டு சிறப்பிக்கப்பட்ட அது ரஷியாவில் (சோவியத் யூனியனில்) ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தடை செய்யப்பட்டிருந்தது. அதற்கான அரசியல், வரலாற்றுப் பின்புலத்தை ஏராளமான ஆவணச் சான்றுகளுடன் விளக்குகிறது இந்தச் சிறு நூல்.

 

*விடுதலைப் புலிகளுக்கு அப்பால்

ராஜீவ் சர்மா

ராஜீவ் காந்தி படுகொலைக்கும், விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களுக்கும் என்ன தொடர்பு? இந்த விஷயத்தில் புலிகள் படுகொலைத் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்டார்களா? இல்லை  மூன்றாவது நாடு அல்லது அமைப்பின் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார்களா? ராஜீவ் காந்தியைக் கொல்வதன் மூலமாக இந்தியாவுடன் மிகப்பெரும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பது கூடத் தெரியாதவரா பிரபாகரன்? அப்படியும் அவர் இதைச் செய்ய என்ன காரணம்? இந்திய அமைதிப்படை முற்றிலுமாக வெளியேறிய பிறகு, பதவி ஏற்ற பிரேமதாசா அரசு, புலிகளோடு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய சமயத்தில்தான் புலிகள் பெரிய அளவில் ஆயுதக் கொள்முதல் செய்தார்கள். அதற்கு என்ன தேவை? 93ல் புலிகளின் தற்கொலைப் படையினரால் பிரேமதாசா கொல்லப்பட்டார். ராஜீவ் கொலைக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

 

———————————————————————————————-

*வால்காவிலிருந்து கங்கைவரை

-ராகுல சாங்கிருத்யாயன்

மனிதகுல வரலாற்றின் கி.மு.6000 முதல் இரண்டாம்உலகப்போர் நடக்கின்ற காலம் வரையிலான மனிதகுலவரலாற்றை மார்க்சீயம் அல்லது பொருள்முதல்வாதகண்ணோட்டத்தில் விளக்குகிற நூல் தான் வால்கா முதல்கங்கை வரை. இந்த நூல் தமிழில் அது பதிப்பாகிய 1954 லிருந்து 2009 வரை 28 பதிப்புகள் போடப்பட்டிருக்கின்றன.வால்கா முதல் கங்கை வரை நூல் மனிதகுல வரலாற்றை 20 கதைகளில் விளக்குகிறார். குகைகளில் வாழ்ந்த மனிதஇனம், அப்போது பேச்சு என்பதே இல்லை அதன் இன்னொருவடிவமான எழுத்து தோன்றியே 5000 வருடங்கள் தான்இருக்கும்.வேட்டை சமூகத்தில் உணவு தேடுவது மட்டும்தான் முக்கியவேலை, மக்கள் கூட்டங்கள் இனக்குழு எனபிரிந்திருந்தது. ஒரு குழு இன்னொரு குழுவுடன்வேட்டைக்கான வனத்தில் மோதல் ஏற்பட்டால் வெற்றிபெற்ற இனக்குழு தோற்ற இனக்குழுவின் பச்சைக்குழந்தைகளைக் கூட கொன்று போட்டது. அவர்கள்பயன்படுதிய ஆயுதங்கள் கல்லால் ஆனது. பின்னாளில் போரில் தோற்ற இனக்குழுவினரைக் கொல்லாமல்அவர்களை அடிமைகளாக வைத்திருந்தனர் இதுவேஅடிமைச் சமூகமாயிற்று. இப்படி அடிமைச் சமுதாயம், நிலப்பிரபுத்தவம், முதலாளித்துவசமூகம் வரைசமூகமாற்றத்தின் தேவையை எளிதாக விளக்குகிறார். மனிதன் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்துதான் அதுகற்காலம், உலோக காலம் என அழைக்கப்படுகிறது.

 

 சிந்துச்சமவெளிநாகரீகத்தின் சிறப்புக்காலம் கி.மு.2500. அப்போது அவர்கள்நகரவாழ்க்கையை வாழ்ந்தார்கள். நேரான வீதிகள், கழிவுநீர் செல்வதற்கு கால்வாய்கள், சுட்ட செங்கலால்கட்டப்பட்ட வீடுகள், குளியறை போன்ற வசதிகளுடன்கட்டப்பட்ட தடங்கள் தொல்லியல் ஆய்வில்கிடைத்துள்ளன.அவர்களை வென்ற ஆரியர்களுக்கு அந்தவீடுகள் ப்யனற்றையாகவே இருந்ததில் வியப்பில்லை. நாடோடிவாழ்க்கையாக ஆழ்ந்த ஆரிய இனக்குழுவினர்அவர்களிடமிருந்த கால்நடைகளை பறித்துக்கொண்டுஅவர்கள் தஸ்யுக்கள் அல்லது தாசர்களாகமாற்றினார்கள், தொடர்ந்து அவர்கள்கங்கைச்சமெவெளியில் குடியேறினார்கள். இமயமலைப்பகுதியில் வாழ்ந்த கிர் பழங்குடிகளை போரில்வென்றார்கள். சிந்துவெளி நாகரீக மக்கள் உயர்ந்தநாகரீகத்தில் வாழ்ந்தார்கள் என்பதை தொல்லியல்ஆயுவுகள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களிலிருந்துஆய்வு செய்திருக்கிறார்கள். சூரியக்கடிகாரம்பயன்படுத்தியிருக்கிறார்கள். வானியலைப் பற்றிஆராய்ந்திருக்கிறார்கள். விவசாயம் செய்து வாழ்ந்ததால்அவர்களுக்கு காலத்தை கணிக்க காலண்டர் அவசியமாகஇருந்திருக்கிறது.` தேவை` தான் கண்டுபிடிப்புகளின் தாய்என்கிறார்கள். ஒருவேளை ஆரியர்கள் அந்த நாகரீகத்தைஅழிக்காமல் இருந்திருந்தால் இந்தியா உலகின்முன்னொடியாக இருந்திருக்கலாம்.

 

அமெரிக்கா எப்படி குடியேறிவர்களின் நாடோஅதேபோன்று தான் இந்தியாவும். அமெரிக்காவில்குடியேறிய மக்கள் சில நூற்றாண்டுகளில், ஆனால்தற்போது இந்தியா என அழைக்கப்படுகிற பகுதிக்குகுடியேறிய மக்கள் பல நூற்றாண்டுகள் அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்பு எனலாம். இன்று ஆரியர்கள்எனவர்கள் யாருமே கிடையாது, அந்த அள்விற்கு இங்கேரத்தக்கலப்பு நடைபெற்றுவிட்டது. இந்தியாவிற்கு மற்றபிரதேசங்களிருந்து ஏன் வந்தார்கள் என்றால் இங்கேவாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்கிறது. இந்த நூல் மனிதகுல வரலாற்றைப் பற்றிய அறிவுப்பொக்கிஷம்என்றால் மிகையாகாது.

 

*இந்து இந்தி இந்தியா

எஸ்.வி.ராஜதுரை

 

இந்து வகுப்புவாதத்தை சங் பரிவாரமும் பாஜகவும் மட்டுமே வளர்க்கவில்லை. காங்கிரஸ் கட்சியிலும் இந்திய தேசியவாதத்திலும் தொடக்க காலத்திலேயே காணப்பட்ட இந்து வகுப்புவாதத்தைப் பட்டேல் முதல் சோனியா காந்திவரை பேணிப் பாதுகாத்துவந்துள்ளதை இந்த நூல் சொல்கிறது. காந்தியும் நேருவும் வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டே இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கியக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் வட இந்திய இந்துப் பெருமுதலாளிகள்; பார்ப்பன – பனியா மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்காகவே சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட செயற்கையான இந்தி ஆட்சி மொழியாக்கப்பட்டது. அரசு விவகாரங்களில் மதம் தலையிடாத, அனைத்துத் தேசிய இனங்களும் முழுமையான தன்னாட்சி பெற்ற புதிய இந்தியா தேவைப்படுகிறது போன்றவை இந்த நூலில் விவாதிக்கப்படுகின்றன. ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை ஆகியவற்றில் அக்கறையுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

 

* அண்ணல் அம்பேத்கர்: அவதூறுகளும், உண்மைகளும்’

 ம. மதிவண்ணன் எழுத்தில் வந்துள்ள இந்த புதிய நூல் அம்பேத்கரை இன்னும் எவ்வாறு ஆழமாக வாசிக்க வேண்டும் என்பதை கூறுகிறது. அவமதிக்கப்படும் ஒவ்வொர் அம்பேத்கர் சிலையும் எப்படிப் பன்மடங்காகிறதோ, அதே போல அருண் ஷோரி மற்றும் ஜெயமோகன்களின் அவதூறுகளுக்குப் பிறகும் அம்பேத்கரின் எழுத்துகள் அறிவாயுதங்களாய் திக்கெட்டும் முகிழ்த்தெழத்தவறவில்லை. அம்பேத்கர் சிலைகளை அவமதிக்கும் வன்கொடுமைகளுக்கும் அவர்தம் எழுத்துகள் மீதான கருத்தியல் வன்மங்களுக்கும் எவ்வித வேறுபாடுமில்லை.

* போலி அடையாளம்

ஹேஸல் எட்வர்ட்ஸ்

போலி அடையாளம்’ நெடுங்கதையில் நடப்பது இதுதான்:
தான் அறிந்திருந்த பாட்டி, “என் மரணத்திற்கு முன் திறக்கக்
கூடாது” என்ற ஒரே வாக்கியத்துடன் மரணத்திற்குப் பின்
பதின்ம வயதுப் பேத்திக்குத் திடீரென்று அறியாதவளாக
மாறிவிடுகிறாள். சிதறிப்போன குடும்பத்தின் ஒரு பகுதியாக,
தன் அம்மா அன்டார்ட்டிக்காவில் ஆய்வுப் பணிகளுக்காக
‘பனிக் காலர்’ என்ற முறையில் சென்றிருக்கும் சமயத்தில்
நிகழும் பாட்டியின் மரணத்தை எதிர்கொள்ளும்
சூழ்நிலையில், பாட்டி யாராக இருந்திருந்தாள் என்பது
பெரிய, புதிர் நிறைந்த கேள்வியாக அவள்முன் எழுகிறது’

 

* தத்துவத்தின் வரலாறு

ஆலன் உட்ஸ் (ஆசிரியர்), நிழல்வண்ணன், மு.வசந்த குமார் (தமிழில்)      

ஒவ்வொருவருக்கும் ஒரு ”தத்துவம்” இருக்கிறது என்று கூறினால் வியப்பாக இருக்கும் ஏனெனில் தத்துவம் என்பது ஒருவர் உலகைப் பார்க்கும் முறையாகும், உலகைப் பற்றி ஒருவரின் கண்ணோட்டமாகும். நம் எல்லோருக்கும், எது சரி, எது தவறு, எது நல்லது எது கெட்டது என்று பிரித்துப்பார்க்கத் தெரியும் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். இருப்பினும், இவையெல்லாம் மிகவும் சிக்கலான பிரச்சினைகளாகும், இவை வரலாற்றில், மாபெரும் மனிதர்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பிரச்சனைகளாக இருந்துள்ளன…..

 

*இந்திய வரலாறு:ஓர் அறிமுகம்

இ டி.டி.கோசாம்பி (ஆசிரியர்), சிங்கராயர் (தமிழில்)

இந்திய வரலாறு பற்றிய ஒரு மாபெரும் படைப்பு இந்த “இந்திய வரலாறு – ஓர் அறிமுகம்”. இப்புத்தகத்தில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப் பட்டுளள் அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவின விளக்க முறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை வழங்குகிறது.பேராசிரியர் டி டி கோசாம்பி புதிய பல கேள்விகளை கிளப்பியுள்ளார். அவர் முந்தைய பல தவறுகளையும் திருத்தியுள்ளார். ஆராய்வதற்குப் புதிய பல களங்களைத் திறந்துவிட்டுள்ளார்.

 

 

*அகம், புறம், அந்தப்புரம்
-முகில்

சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமான ராஜா, ராணிகள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்களே. அவர்களுடைய வாழ்க்கை எல்லாம் அப்படி சுவாரசியமானதாகத்தான் இருந்ததா? இல்லவே இல்லை, கதைகளைவிட மகாராஜா, மகாராணிகளின் நிஜ வாழ்க்கை பல மடங்கு சுவாரசியமானவை என்று ஆதாரங்களுடன் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு சமஸ்தானத்துக்குப் பின்னும், ஒவ்வொரு மகாராஜாவின் வாழ்க்கைக்குள்ளும் புதைந்து கிடக்கும் தகவல்களை, நுணுக்கமான விஷயங்களை அழகாக ஒரு கதைபோலச் சொல்லிச் செல்கிறது – அகம், புறம், அந்தப்புரம்.

கோமான்களின் வாழ்க்கை, ஆடம்பரக் கோமாளிகளின் வாழ்க்கையை மட்டும் அலங்காரத்துடன் சொல்லாமல், காலத்துக்கும் குருதி சிந்தி உழைக்கும் குடிமக்களின் வாழ்க்கையையும் அதற்குரிய அவலத்துடன் பதிவு செய்திருப்பது இந்தப் புத்தகத்துக்குரிய சிறப்பு. அரண்மனைக்குள்ளும் அந்தப்புரத்துக்குள்ளும் மட்டுமே சுற்றிவராமல், அதைத்தாண்டி வெளியில் பல அரிய வரலாறுகளையும், காலனியாதிக்க இந்தியா குறித்த சரித்திரத்தையும் ஒருங்கே சேர்த்துச் சொல்லும் இந்தப் புத்தகம், நிச்சயம் ஒரு வரலாற்றுப் பெட்டகம். இத்தனைப் பெரிய புத்தகமா, இதைப் படித்து முடிக்க இயலுமா என்ற மலைப்பு முதலில் தோன்றலாம். ஆனால், படிக்க ஆரம்பித்த பின், எந்தவொரு இடத்திலும் சலிப்போ, அலுப்போ தோன்றாமல், ஆசிரியரின் எழுத்துகள் நம்மை எங்கெங்கோ அழைத்துச் செல்கின்றன. நவரச அனுபவங்களைத் தருகின்றன. எழுதும் விதத்தில் எழுதினால் சரித்திரத்தைவிட சுவாரசியமான விஷயம் எதுவுமே கிடையாது என்பதை இந்நூல் பறைசாற்றுகிறது. புத்தகப் பிரியர்கள் ஒவ்வொருவருமே தங்கள் சேகரிப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகங்களில் இந்த நூலும் ஒன்று. ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் அவர்களது படைப்பில் மாஸ்டர் பீஸ் உண்டு. எழுத்தாளர் முகில் இதுவரை எழுதியுள்ள புத்தகங்களில், ‘அகம், புறம், அந்தப்புரம்’தான் அவருடைய மாஸ்டர் பீஸ்.
———————

*கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் : 
பனிப்போர் முதல் இன்று வரை- 
நந்திதா ஹக்ஸர் , (தமிழில் : செ. நடேசன்):

“கஷ்மீரின் வரலாறு மற்றும் அரசியல் குறித்து தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய, இன்றியமையாத நூல் இது.”
கஷ்மீர் தேசியத்தின் பல்வேறு முகங்களை ஆழமாக விவரிக்கும் நந்திதா ஹக்ஸரின் இந்தநூல் கஷ்மீரிகளை, கஷ்மீர் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள, கஷ்மீரிகளின் அர்த்தமுள்ள நியாயங்களை உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டு நல்ல தீர்வுகளை சிந்திக்க நம்மை வற்புறுத்துகிறது.

இந்த நூல் கஷ்மீரி தேசியத்தின் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட வரலாற்றின் தடயங்களை பனிப்போர் காலங்களில் அரசியலில் ஈடுபாடுகொண்ட கம்யூனிச தொழிற்சங்கத் தலைவரான கஷ்மீரி பண்டிதர் சம்பத் பிரகாஷ் மற்றும் கஷ்மீரி முஸ்லீம் அஃப்ஸல் குரு ஆகிய இரண்டு மனிதர்களின் வாழ்க்கை மூலமாகக் கண்டறிகிறது. பனிப்போர் முடிந்து, சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்து, பயங்கரவாதத்தின் மீதான போர் துவங்கிய காலகட்டத்தில் அஃப்ஸல் குரு கஷ்மீர் கிளர்ச்சியின் துவக்கத்தில் அரசியல்ரீதியாக ஈடுபாடுகொண்டவர். இந்தவகையில் இன்னும் பலரது கதைகளும் இதில் பின்னிப்பிணைந்துள்ளன.
—————————————

*வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை
– இஸ்மத் சுக்தாய்

இஸ்மத் சுக்தாய் அவர்களுடைய, வெகுவாய்க் கொண்டாடப்பட்ட நினைவுக்குறிப்புகளாகிய ‘காகஸி ஹை பைரஹன்’ நூலின் முழுமையான மொழியாக்க நூலாகிய ‘வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை’, அவருடைய வாழ்வின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வருடங்களின் நிகழ்வுகளை உற்சாகத்துடன் எடுத்துரைக்கிறது. அவற்றோடே, இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில், ஒரு பெரிய இசுலாமியக் குடும்பத்தில், போராட்டங்களூடே கழிந்த தன் பால்யம் குறித்த தெளிவான விவரணைகளையும் ஆசிரியர் தருகிறார்.

தனக்கான கல்வியைப் பெறுதற்காக அவர் கடந்துவந்த இடர்களையும், ஒரு எழுத்தாளராகத் தனித்துவமான அடையாளத்தை அடைவதற்காக அவர் சந்தித்த போராட்டங்களையும், வெகு நேர்மையுடன் சுக்தாய் பதிவு செய்திருக்கிறார். விளைவாக, உருது எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கதொரு எழுத்தாளரால் அளிக்கப்பட்ட மிக வலிமையானதொரு நினைவுக்குறிப்பு நூலை நாம் அடைந்துள்ளோம்.

‘இவர் இலக்கியப் புரட்சியை முன்னெடுத்து வழிநடத்தினார்’ – தி ஹிந்து.
“அறிவார்ந்த, சுய-விழிப்புணர்வுமிக்க, ஆய்வுப்பூர்வமான நூல்” – டைம் அவுட்


*ரூபி பாஸ்கேயின் மர்ம நோய்
– ஹஸ்தா சௌவேந்திர சேகர்
-தமிழில்-இரா.செந்தில்
காதாம்டுகி மக்கள் சொல்வது சரிதான், ரூபியின் நோய் அவளுடையது மட்டுமே அல்ல. அது புட்கியினுடையது, அது, சிதோ, தோஸோ மற்றும் துலாரியினுடையதும் ஆகும். அநேகமாக இது எல்லோரையுமே அழித்துவிடலாம், அவர்களுடைய மொத்தக் குடும்பத்தையும்.

—————————————————–

*.மண்ட்டோ படைப்புகள் 
: தமிழில் – ராமாநுஜம்

“ என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப் போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது”மண்ட்டோவின் எழுத்துக்கள் அடங்காமல் ஒடும் காட்டாறாய் ஒடுகிறது. நாமும் அவற்றினை கடக்க மிகவும் சிரமப் படுகிறோம். நம் பண்பாட்டு வெளிச்சத்தில் இருள் அள்ளி பூச முயலும் மண்ட்டோவின் எழுத்துக்கள் சற்று காத்திரமானவையே. ஆனால் உண்மைக்கு மிக அருகிலானவை என்ற முறைமையில்..ஒரு தேர்ந்த வாசகன் மண்ட்டோவின் ரசிகனாகிறான்.

மண்ட்டோவின் படைப்புகள் ஒரு தொகுதியாக தமிழில் கிடைக்கிறது. 20 க்கும் மேலான கதைகளும், அருமையானசொற்றோவியங்களும், ஆளுமைகள் குறித்த நினைவோடைகளும் , அவரது கடிதங்களும் என தொகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ராமாநுஜம் அவர்களுக்கு நன்றிகள்.

இந்திய பிரிவனை பற்றியும் மதரீதியிலான அடிப்படை வாதிகளின் கோரத்தையும் கலவரத்தையும் இதைவிட படம் பிடித்து காட்ட இயலாது. மத்த சிறுகதைகள் படிக்கும் போது உண்மையை காட்டியிருப்பார்கள் ஆனால் இவரின் சிறுகதையை படித்தால் நம் சட்டையை பிடித்து யாரோ உலுக்கிய உணர்வு

இந்திய துணைக்கண்டப் பிரிவினை பற்றி வேறு பல எழுத்தாளர்களின் படைப்புகள் இந்தச் சிதைவை மண்ட்டோ போல் வெளிக்கொணரவில்லை…. ஆரம்பித்திலிருந்தே அவர் ஆபாசம் என்ற நிழல் கொண்டவராகத்தான் கருதப்பட்டார். மண்ட்டோவின் நோக்கம் ஆபாசமல்ல, குரூரமல்ல என்று நிரூபிக்க வேண்டியிருந்தது. உடல்கள் கலாச்சார குறியீடுகளின் தாங்கிகளாக மாற்றப்படுவதை மண்ட்டோவால் சகிக்க முடியவில்லை…. உடல்கள் மீது வரையப்படும் அடையாளங்கள், வெற்றுடலே அடையாளங்களின் தாங்கிகளாக மாற்றப்படுவது என்பவற்றை அவர் எழுத்துக்கள் தொடர்ந்து கேலி செய்கின்றன.


* பிரபஞ்சன் கதைகள்[சிறுகதைகள்] – (மூன்று பாகங்கள்)

பிரபஞ்சனின் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானது. சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளான மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள் அன்பால் மட்டுமே மனிதர்கள் மீட்சி பெற முடியும் என்பதை வலியுறுத்துகின்றன. பிரபஞ்சன் கதைகளில் வரும் பெண்கள் அபூர்வமானவர்கள். வேதனைகளைத் தாண்டி வாழ்க்கையைக் காத்திரமாக எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள். அன்பின் பொருட்டு அவலங்களை சகித்துக் கொண்டு வாழ்பவர்கள். அந்த வகையில் அவரை தி.ஜானகிராமனின் வாரிசு என்றே கூறுவேன். மொழிநுட்பத்திலும், கச்சிதமான வடிவத்திலும் தேர்ந்த சிற்பம் போல கலைநேர்த்தி பெற்றுள்ளன பிரபஞ்சனின் சிறுகதைகள். – எஸ். ராமகிருஷ்ணன்
——————————————————————-

*கர்ப்பநிலம்

– குணா கவியழகன்

தொன்மமும் பண்பாட்டுத் தொடர்ச்சியும் கொண்ட ஈழத் தமிழ் மக்கள் தமது கூட்டு வாழ்வைக் காத்துகொள்ள அரசு என்றும் அலகில்லாததால் அவைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை வாழ்வுப் போக்கினூடு விரிக்க முயல்கிறது இந்த நாவல். அவர்களின் வேரையும் விழுதையும் தேடுகிறது.

—————————————————————————————————————-

கடவு

திலீப் குமார்

திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையாகப் பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே இன்னும் இவ்வளவு சிறப்பு அடையக் கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவருடையது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன

————————————————–
அசன்பே சரித்திரம்
– சித்தி லெவ்வை மரைக்கார்

இலங்கையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த, முஸ்லிம் உலகின் மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களுள் ஒருவரான எம்.சி.சித்திலெப்பையால் எழுதப்பட்டது.மேற்குலகுக்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான பண்பாட்டுத் திருமணம் பற்றிய ஒரு முற்போக்கான பார்வையை முன்வைக்கும் இந்நாவல், மேற்குலகும் முஸ்லிம் உலகும் பகைமை கொண்டு முரண்பட்டு நிற்கும் இன்றையச் சூழலில் கவனிக்கத்தக்கது.
—————————————————–

நதியின் மூன்றாவது கரை 
(லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் )

நதியின் மூன்றாவது கரை(லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் ) இந்தத் தொகுப்பில் உள்ள ஏழு கதைகளும் வெவ்வேறு தலைச்சிறந்த லத்தீன அமெரிக்க எழுத்தாளர்களின் கதைகளின் தொகுப்பு. இரண்டாம் உலகப் போரின் பிந்தைய காலகட்டத்தின். எழுச்சியூட்டும் எழுத்தாகக் கருதப்படும் இவர்களின் எழுத்து வடிவம். வழக்கமான கதைகளின் கட்டமைப்பை மீறி, அதன் வடிவத்தை மாற்றி அமைக்கக் கூடியது
————————————-

*திராவிட இயக்க வரலாறு – 
பகுதி 1- பகுதி II

– ஆர்.முத்துக்குமார்

தமிழகத்தின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்ன? ஆதிக்க பிராமண அரசியலுக்கும் பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் மாற்றாக திராவிட இயக்கம் முன்வைத்தவை யாவை? அரசியல் சார்புநிலை என்பதைத் தாண்டி தமிழர்களின் சமகால வரலாறும் பெருமளவில் அடங்கியிருக்கிறது என்ற ஒரு காரணத்துக்காகவே திராவிட இயக்கத்தை நாம் அறிந்துகொள்ளத்தான் வேண்டும். அதற்குத்தான் இந்த ‘திராவிட இயக்க வரலாறு.”அண்ணா மறைந்த 1969 தொடங்கி நேற்று வரையிலான இயக்க வரலாறு இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது.
————————————————————–

* தாகங்கொண்ட மீனொன்று – ஜலாலுத்தீன் ரூமி

ஜலாலத்தீன் முகம்மது ரூமி 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி இஸ்லாமியக் கவிஞர், இறையியலாளர். தொழிற்பெயர்களுக்குள் அடங்காத நெகிழ்ச்சியும் இறையன்பும் நிரம்பி வழிந்த வண்ணம் வாழ்ந்து அவற்றைக் கவிதைகளில் அள்ளித் தெளித்தவர். துருக்கியில் ‘மேவ்லானா’ என்றும், இரானிலும் ஆப்கானிஸ்தானிலும் ‘மௌலானா’ என்றும், ஆங்கிலம் வழங்கும் பகுதிகளில் ‘ரூமி’ என்றும் அறியப்படும் இவருடைய கவிதைகள் புதிய பாரசீக மொழியில் உள்ளன.

இறையன்பும் சமயமும் பெரும்பாலும் தனிப்பட்ட அனுபவங்களே என்னும் புரிதல் ரூமியின் பல கவிதைகளில் நமக்குக் கிடைக்கின்றன. தமது உண்மைக் காதலனாகிய இறைவனைப் பிரிந்திருத்தலால் வரும் துயரும், இறைவனென்னும் காதலனோடு மீண்டும் கலக்க வேண்டிக்கொள்ளும் ஏக்கமும் பிரிவாற்றாமையும் ரூமியின் கவிதைகளில் இழையோடி இருக்கின்றன.
————————————————————

*.கடவுள் என்னும் மாயை

– தருமி

அறிஞர்கள் தாம் சார்ந்த மதத்தை, விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்துள்ள பல நூல்களின் கருத்துகளைச் சுருக்கமாக வாசித்த மன நிறைவைத் தருகிறது இந்நூல்.

மகான்கள் தமது காலத்தின் சரிவாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். ஆனால் பின் வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேர் எதிராக மக்களை ஒடுக்கி ஆளும் வர்க்கத்தின் கேடயமாகவே மதங்களை அவர்களின் பெயரால் உருவாக்கினர் என்பதே உலகெங்கும் நாம் காணும் நடைமுறையாக உள்ளது.

—————————————————————

*கலிங்கு
-தேவகாந்தன்

‘2001இன் பின்னான நிகழ்வுகளின் காலக்களத்தைக் கொண்டிருப்பதாலேயே ‘கனவுச் சிறை’யின் தொடர்ச்சியாக இந் நாவலைக் கொண்டுவிடக் கூடாது. ‘கனவுச் சிறை’ கனவுகளற்ற இலங்கைத் தமிழ் மக்களின் போர்க் கால அவலங்களைச் சொல்லியது. அரசியல் பின்னணியிலிருந்து நாவலின் சகல தளங்களையும், அதில் உலவிய மனிதர்களின் வாழ்க்கையையும் உலுப்பிக்கொண்டிருந்தது. ‘கலிங்கு’ நேரடியாக அரசியலுக்குள் நுழைகிறது. அது கனவு மனிதர்களின், கனவுகளற்ற மனிதர்களினதே போன்ற அவலங்களைக் கணக்கெடுத்திருக்கிறது.

ஈழத்தைக் களமாகக்கொண்டு பயணிக்கும் நாவல் மிகுந்த உழைப்பைக் கோரிநின்றது. பலரும் கவனம் குவிக்காத அல்லது கவனத்தை மறைத்திருந்த திரைகளை விலக்கி அது காட்டும் திசைக்கோணம் நிச்சயமாக வாசகனை அதிரவைக்கும். இது அரசியல் பிரதியல்ல. எனினும் இது அரசியலைத் தவிர வேறெதுவும் சொல்லவில்லை. இதன் அர்த்தம், நிஜங்களின் இழைகளில் இது தனக்கான நியாயத்தை நெய்திருக்கிறது என்பதுதான். பாணனும், நிலாவும், சங்கவியும், நாகாத்தையும், பரஞ்சோதியும், குசுமவதியும், லோகீசனும், குணாளனுமென பெரும்பெரும் ஊழிகளை வாழ்ந்து கழித்தவர்களின் கதை இது. 
தமிழீழப் போரின் இறுதிகட்டத்தையும், அப்போரின் அரசியல், சமூக காரணங்களையும். நிறைகுறைகளையும் 2003 துவங்கி 2012 வரை விவரிக்கும் நால் தேவகாந்தனின் ”கலிங்கு”.தமிழ் ஈழப்போரையும் அதன் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள ஒரு மிக முக்கியமான அரசியல் நாவல்.

5 பகுதிகளாக 2003-2015 வரை காலகட்டத்தை பின்ணனியாக எழுதப்பட்ட நாவல்

1. 2003 – யுத்த நிறுத்த காலம்
2. 2006 – கருணா பிரிவு
3. 2009 – இறுதி யுத்தம் துவக்கம் – கீழக்கு வீழ்ந்த கதை
4. 2012 – யுத்தம் பிந்தைய காலம் – முகாம் வாழ்க்கை
5. 2015 – மீள் குடியேற்றம் – புலம் பெயர்ந்தோர் நிலை

முக்கியமாக ஈழ பௌத்த மடாலயங்கள் தங்களை தொடர்ந்து ஒரு அதிகார மையமாக நிலைநிறுத்த உருவாக்கும் அரசியலே இனப்போர் என்பதை பேசுகிறது.சிங்களப் பார்வையிலும், ஜேவிபி இயக்க வளர்ச்சி வீழ்ச்சி, புலிகள் குறித்த மக்கள் மனநிலை, புலம்பெயர்ந்தோர் நிலையில் ஈழப்போர் இப்படி பல கோணங்களில் விவரிக்கிறது இந்நாவல்.

இறுதி யுத்தத்தின்போது மக்கள் அடைந்த அவலங்களைவிட, அதன் பின்னால் அவர்களின் வாழ்வு மீட்சியற்ற விதமாய் சிதைந்துபோயிருப்பதையும், மனிதத்தை கலாச்சாரத்தை சகலதையும்தான் சிதைத்துக்கொண்டிருக்கும் போரின் உபவிளைவுகளையும் பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது நாவல்.’

———————————
* கொமோரா

– லஷ்மி சரவணகுமார்

கதிர் வீட்டிலிருந்து விடுதிக்கு அனுப்பப்பட்ட நாளில் கனவுகளில் சந்தோசப்படப் பழகினான். எல்லா சந்தோசங்களும் தற்காலிகமானவை என்பதை பால்யம் உணர்த்திய நாளில் அவனுக்குக் கனவுகளின் மீது வெறுப்புண்டானது. எதையெல்லாம் விரும்புகிறோமோ அதையெல்லாம் வெறுக்க நேரும் சூழல் வருந்தத்தக்கது.
பசியால் நிரம்பிய பகலும், பயத்தால் நிரம்பின இரவுகளும் வாய்க்கப்பெற்ற விடுதிக் காலத்தில் வெளிச்சம் கூடப் பாதுகாப்பாய் இருந்ததில்லையென கர்த்தரிடத்தில் அவன் மன்றாடாத நாளில்லை.

கர்த்தர் அவனிடம் பேசுவதுண்டு, அவன் பிரார்த்தனைக்குச் செவி சாய்ப்பதுண்டு. எல்லா வருத்தங்களையும் நான் நீக்கப் பண்ணுவேன், உன்னை வருந்தச் செய்கிறவர்களுக்கும் சேர்த்துப் பிரார்த்தி ஸ்தோத்திரம் என்பார்.- சாத்தானின் மனவெளிக் குறிப்புகள்
———————————————————–
*.கொம்மை

– பூமணி

மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தில் இன்னும் உயிர்ப்புடன் உலவும் அபலைப் பெண்களின் அவலத்தை முன்வைத்து மறுகுரலில் மக்கள் மொழியில் ஒரு பெரும் புதினம் புனைய வேண்டுமென்பது என் வாழ்நாள் கனவுகளில் ஒன்று.

மகாபாரதம் ஒரு மகாசமுத்திரம். அதில் அலையாடும் பெண்களை அணுகப் பேரச்சம். அவர்களுடன் உரையாட மலைப்பு.
——————————————–

*அம்பேத்கர்: இன்றும் என்றும்

– டாக்டர் அம்பேத்கர்

‘அம்பேத்கர் இன்றும் என்றும்’ ”அவரது ஆய்வுகள் பார்ப்பனியத்தின் பிம்பங்கள் அனைத்தையும் சிதைத்தன. அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படாத மக்களிடம் நம்பிக்கையை ஊட்டின. அவருக்குக் கிடைத்த அதிகார வாய்ப்புகள் ஒடுக்கபட்ட மக்களின் சமுகப் படிநிலைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தன.

தனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தவே அம்பேத்கர் முயன்றார். சாதிக் கொடுமையிலிருந்து விடுதலை, அறிவும் கல்வியும் அடைதல், அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய தளங்களில், தனது காலத்தின் பல்வேறு வகையான அவமானங்களுக்கும், ஒதுக்குதல்களுக்கும், அழுத்தங்களுக்கும் இடையில் அம்பேத்கர் சென்றடைந்த தூரம் வரலாற்றில் அரிய நிகழ்வே. தன் காலத்தின் விதிவிலக்காகவே அவர் செயலாற்றினார்.” பல்வேறு விடயங்கள் பற்றி அவரது சிந்தனைகளின் விரிவான தொகுப்பே இந்த பெரிய நூல்.
————————————

*பட்டினிப் புரட்சி

– பரிதி

இவ்வுலகில், கடைசி மரமும் வெட்டப்பட்ட பின்னர்தான் ,
கடைசி ஆறும் நஞ்சுகளால் நிரப்பப்பட்ட பின்னர்தான்,
கடைசி மீனும் பிடிக்கப்பட்ட பின்னர்தான்,
பணத்தை சாப்பிட முடியாது என்பதை
‘நாம்’ உணர்வோம்.

பசுமைப் புரட்சியின் உருவாக்கம் பற்றிய செய்தி உண்மையில் திடுக்கிட வைக்கிறது. பசுமைப் புரட்சி என்ற எண்ணம் உருவாகும் முன்னரே உலக மக்கள் அனைவருக்கும் தேவையான அளவை விட அதிகமான தானியங்கள் விளைந்து கொண்டு தான் இருந்தன. இரண்டாம் உலகப் போருக்காக அமைக்கப்பட்ட வேதிப் பொருள் தொழிற்சாலைகளை, போர் முடிந்த பின் என்ன செய்வது என்று யோசித்த போது, அதில் செய்யப்பட்ட முதலீடு இலாபம் ஈட்டாமல் இருந்து விடக் கூடாது என்பதற்காக, அதை வேளாண்மையில் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் உதித்திருக்கிறது. அதைப் பசுமைப் புரட்சி என்று அழைத்திருக்கிறார்கள்.

இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்பதைப் பற்றிய எந்தவிதமான கவலையும் படாமல், பட்டினி கிடக்கும் மக்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் போல் நடித்து அவர்களைக் காட்டி, தானிய உற்பத்தியை அதிகரித்து அவர்களுடைய பட்டினியைப் போக்குவதற்குத் தான் பசுமைப் புரட்சி என்று கதை சொல்லியிருக்கிறார்கள். இது மனித குலத்துக்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றம். ஆனால் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள், அதைத் தொடர்பவர்கள் பட்டம் பதவிகளைப் பெற்று மிகவும் சொகுசாக வாழ்கிறார்கள்.

பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்திய போது, அது தவறானது என்றும், சுற்றுப் புறத்தை மாசு படுத்தும் என்றும் கூறியவர்களை (காந்தி மற்றும் பொதுவுடைமையாளர்களை) உதாசீனம் செய்து விட்டுத் தங்கள் வழியே தொடர்ந்தவர்கள், இன்று நடந்துள்ள கேடான தாக்கங்களைக் கண்ட பிறகும் மனம் வருந்துவது போலத் தெரியவில்லை. இச்செய்திகள் முதலாளித்துவ அறிஞர்கள் அளித்துள்ள புள்ளி விவரங்களைக் கொண்டே இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக மனித உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தை அளிக்காத, ஒவ்வாத ஆற்றலை அளிக்கும் உணவு வகைகள் பெருகி வருவது ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல; வளர்ப்பு மிருகங்களுக்கும் அதே கதி தான். அதன் தொடர் விளைவாக அவற்றின் இறைச்சியைச் சாப்பிடும் மனிதர்களுக்குக் கூடுதல் கெடுதல்கள் விளைகின்றன. இந்நூலில் கூறப்பட்டுள்ள இச்செய்திகளை இந்நூலாசிரியர் கொடுத்திருக்கும் ஆதாரங்களில் இருந்து மட்டுமல்ல; நம் சொந்த அனுபவத்தில் இருந்தும் தெரிந்து கொள்ள முடியும்.

இயற்கை உணவுகளை உண்டு கொண்டு இருந்த காலத்தில் நீரிழிவு, இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு போன்ற நோய்கள் மிகச் சிலருக்கே இருந்தன. செயற்கை உரங்களினால் விளைந்த உணவை உண்டு கொண்டு இருக்கும் இக்காலத்தில் மிகப் பலரை, அதுவும் இளம் வயதிலேயே பாதிக்கின்றன. மேலும், இயற்கை உணவுகள் (இயற்கை உணவுகளை உண்ட மிருகங்களின் இறைச்சி உட்பட) உண்பதற்குச் சுவையாக இருந்தன. இப்பொழுது அவை சுவையாக இல்லை. இளைய தலைமுறையினர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால் முதியவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். இச்செய்தி இந்நூலில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

——————————————————————————————————————————-

* ஓநாய் குலச்சின்னம்

– ஜியாங் ரோங் (ஆசிரியர்), சி.மோகன் (தமிழில்)

ஜியோங் ரோங் எழுதிய Wolf Totem சீன நாவலை “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் விற்பனையான 21-ம் நூற்றாண்டின் மகத்தான நூலாக இது கருதப்படுகிறது. இந்நாவல் நம் வாழ்வுக்கான சுடர். ஞான சிருஷ்டி என்று புகழப்படுகிறது. இந்த நாவலை ஒரு கருத்தாகப் புரிந்து கொள்ள, காந்தியின் வரி ஒன்றே போதுமானது.

இயற்கை வளங்கள் சூறையாடப்படும் இந்தச் சமயத்தில் “ஓநாய் குலச்சின்னம்” நாவல் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஓர் அரசியல் செயல்பாடாகும். மனிதன் பேய் மழையையும், பனிப்புயலையும் உண்டாக்கும் ஆற்றலை இந்த நூற்றாண்டின் வழியே கண்டுபிடித்ததைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறான் என்ற கேள்வியை இந்த நாவல் நம்முன்னே வைக்கிறது.

அனைத்து வளங்களையும் மட்டு மீறிப் பயன்படுத்தும் பெரு நகரங்களைக் கட்டுப்படுத்த வழிவகை செய்யாமல் மேலும் மேலும் நகரங்கள் உப்பிப் பெருத்துக்கொண்டே செல்கின்றன. இதற்காகக் கையகப்படுத்தப்படும் எல்லா நிலங்களிலும் பூர்வகுடிகள் இருக்கிறார்கள். அவர்கள் மெளனிக்கப்படுகிறார்கள். அந்நியர்கள் ஒரு நிலத்தைக் கையகப்படுத்துவது என்பது எவ்வளவு புரிதலின்மையோடு வழிநடத்தப்படும் என்பது ஓநாய் குலச்சின்னம் நாவலில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மங்கோலிய நாடோடிகள் ஓநாயின் இயல்புகளைக் கொண்டவர்கள். அதன் போர் வியூகங்களைக் கற்றுக்கொண்டவர்கள். அதனால்தான் அவர்களால் சீனர்களை நூறு வருடங்களுக்கும் மேல் ஆள முடிந்தது. ஓநாயின் குணத்திற்கு மிகப் பெரிய சான்றாக வரலாறு இருப்பதை நாவல் சொல்கிறது.

—————————————————————-
* இஸ்மத் சுக்தாய் கதைகள்

இஸ்மத் சுக்தாய்,தமிழில்:ஜி. விஜயபத்

இஸ்மத் சுக்தாய் உருது மொழி பெண் இலக்கியவாதிகளில் முதன்மையானவர். மிகவும் துணிச்சலான சர்ச்சைக்குரிய எழுத்தாளர். 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி உத்தரப்பிரதேசம் பதௌனில் தன் பெற்றோருக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தவர். இவருடைய தந்தை மேஜிஸ்ட்ரேட்டாக இருந்தவர். இஸ்மத்துடன் பிறந்தவர்கள் பத்து பேர். நான்கு அக்காக்களும் நான்கு அண்ணன்களும் ஒரு தம்பியும் இவருக்கு இருந்தனர். தனது அண்ணன்மார்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியதால் நேரடியாகவும் துணிவுடனும் பேசுவதற்கும் எழுதுவதற்கும் முடிந்தது என்று இஸ்மத் கூறியிருக்கிறார்.

இஸ்மத் சுக்தாய் பல சிறுகதைகளையும், குறுநாவல்களையும், சினிமாவுக்கான திரைக்கதைகளையும் எழுதியிருக்கிறார். சிறுகதைகள்தான் அவருடைய படைப்பாக்கத்தைச் செம்மையாக வெளிப்படுத்தும் இலக்கிய வடிவங்களாக இருந்தன. உருது மொழியின் அடர்ந்த பண்பை தனது படைப்புகளில் செறிவுற்ற வகையில் கொண்டு வந்தது அவரது தனித்தன்மையாக இருந்தது. இளங்கலைப் பட்டப்படிப்பிலும் ஆசிரியர் கல்வியில் இளங்கலையிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். இளம் வயதிலிருந்தே அவர் தேவையற்ற விதிகளை எதிர்த்து வந்தவர். புரட்சி மனநிலையில் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார். முற்போக்குச் சிந்தனை எழுத்தாளர்களின் அணியில் கல்லூரியில் படிக்கும் போதே இணைந்துவிட்டிருக்கிறார். பெண்ணியச் சிந்தனை குறித்த அறிமுகம் இந்தியச் சூழலில் ஏற்படுவதற்கு முன்பே தன் படைப்புகளில் பெண்ணுக்குரிய தனி இடத்தை உருவாக்கியவர் இஸ்மத் சுக்தாய். கல்விக்கும் எழுத்துக்கும் பல எதிர்ப்புகள் ஏற்பட்ட போதும் அவற்றைத் திறம்படக் கடந்து வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய சுயசரிதையில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பல தடைகளைப் பற்றி வெளிப்படையாக விவாதித்திருக்கிறார்.

1930களில் பெண் எழுத்தும் பெண்களை பற்றிய எழுத்தும் அரிதான காலகட்டத்தில் பெண் எழுத்துக்களின் பரிட்சார்ந்த முயற்சிகள் அரிதானதாகவும் சமூக கேலிகளுக்கும் ஆளாகுவதாகவும் இருந்த கடுமையான சமூக நடைமுறைகளுக்கு இடையே இஸ்மத் சுக்தாய் பெண்ணின் பாலின பண்புகள் பற்றி ஒப்பற்ற துணிவுடன் பதிவு செய்திருக்கிறார். அவர் தனது காலத்தில் நிலவிய அரசியல் மற்றும் சமூக நெறிகள் குறித்து ஆய்வு செய்து அதை தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.


* அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலின் இரண்டாம் பாகம் (Part -2 )

என்ற புத்தகத்தின் வழி தமிழுலகுக்கு அறிமுகமானவர் ஜான் பெர்க்கின்ஸ்.இவர் இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட உலக புவிசார் அரசியல் அனுபவங்களின் மூலம் அமெரிக்க பேரரசு உருவாகி வந்த வரலாற்று உண்மையை இப்புத்தகத்தில் விவரிக்கிறார்.எல்லா நாடுகளையும் சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களின் கையாளாக அமெரிக்கா செயல்படுகிறது என்று சொந்த அனுபவங்களின் அடிப்படையில் உணர்ந்தவர் ஜான் பெர்கின்ஸ். பொருளாதார அடியாளாகப் பல்வேறு நாடுகளில் செயல்பட்டவர் அவர்.

பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் சுரண்டலைப் பற்றி எழுதத் தொடங்கினார். நேரடியான போர் முறையில் அல்லாது மறைமுகமாக உலகையே ஆள அமெரிக்கா கையாளும் தந்திரங்கள் இந்த இரண்டு நூல்களிலும் பதிவாகியிருக்கின்றன.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்கிற இந்த நூலாசிரியரின் முதல் பாக நூல் , தமிழ் வாசகர்களிடையே அதிகம் ஊன்றிப் படிக்கப்பட்டு, பல பதிப்புகளை கண்டது. இந்த நுள் அதன் இரண்டாம் பகுதியாகும். இந்த 2 பகுதிகளையும் ஒரு சேர வாசிப்பது சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களை அறிவுபூர்வமாய்
அறிந்து கொள்ள அரிய வாய்ப்பாகும்

——————————————

* தை எழுச்சி: குடிமைச் சமூகமும் அதிகார அரசியலும்

செ. சண்முகசுந்தரம்,. இரா. தமிழ்க்கனல், யமுனா ராஜேந்திரன்

வரலாற்றின் பல முக்கியப் பக்கங்கள் நினைவிலிருந்து அழியாமலிருக்க அவற்றை ஆவணப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். அப்படி யான வரலாற்றுத் தேவையை உணர்ந்து, கடந்த 2017 ஜனவரியில் சென்னை மெரினா கடற்கரையிலிருந்து தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் ‘தை எழுச்சி’யாகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்ட நிகழ்வு , 34 தமிழக ஆளுமைகளின் கட்டுரைகளால் ஆவணமாகி உள்ளது.

இந்தப் போராட்டம் தமிழகம் மட்டுமல்லாது, தென்னிந்திய மாநிலங்களிலும், உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் ஆதரவுக் கிளர்ச்சிகளை உண்டாக்கியது. தலைநகரான சென்னையை மட்டுமே மையமாகக் கொள்ளாமல் மதுரை, கோவையில் நடைபெற்ற நிகழ்வுகளையும் பற்றியதாகக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஏழு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள இக்கட்டுரைகளைச் சமூக தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் கள ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும் எழுதியிருக்கிறார்கள். ‘அரசியல் பகுப்பாய்வு: பன்முகப் பார்வைகள்’ எனும் தலைப்பிலான கட்டுரைகள் ஆழ்ந்த வாசிப்புக்கு நம்மை இட்டுச்செல்கின்றன

—————————————————————

மார்க்ஸ் -எங்கெல்ஸ்
தேர்வு நூல்கள்- 20 தொகுதிகள்

ந.முத்துமோகன், எஸ்.வி.ராஜதுரை, ரா.கிருஷ்னையா, ஆர்.கே .கண்ணன் போன்ற மார்க்சியர்களின் மொழிபெயர்ப்பில்….

அவர்களின் வாழ்க்கை வரலாறுகள், அரசியல்- பொருளாதார விமர்சனத்திற்கான பங்களிப்பு, குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், இயற்கையின் இயக்கவியல்,ஹெகலுடைய பங்களிப்பு, கம்யூனிச கோட்பாடுகள், கூலி உழைப்பும் மூலதனமும், முதலாளித்துவ வர்க்கமும் எதிர்ப் புரட்சியுயம், பிரான்சின் வர்க்கப் போராட்டம், மூலதனம் தொகுதிக்கான முன்னுரைகள், சமூக, ஜனநாயக வேலைத்திட்ட நகல்.மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய கடிதங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில்….

———————————————————————————————————————————————————————————————————————

* ஈழ இலக்கியம் : ஒரு விமர்சனப் பார்வை 
– ஜெயமோகன்

இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக்கட்டுரைகளாயினும் அவர்களை ஈழ இலக்கியம் என்னும் ஒட்டுமொத்தப்பரப்பில் வைத்து ஆராயும்போக்கு கொண்டவை. ஈழத்தின் கவிதையை சேரன் ஆகியோர் வழியாகவும் ஈழத்தின் சிறுகதையை அ.முத்துலிங்கம் ஆகியோர் வழியாகவும், ஈழத்தின் இலக்கிய சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி ஆகியோர் வழியாகவும் ஆராய்ந்திருக்கிறேன். – ஜெயமோகன்
———————————-
*ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை
-பாவ்லோ ஃப்ரையிரே
|தமிழில்: இரா.நடராசன்

இந்த நூல், கல்வியின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விமரிசனப் பார்வையுடன் ஆராய்கிறது. இருபது ஆண்டுக்காலம் கடுமையான ஆய்வுகளை களத்தில் நேரடியாக மேற்கொணடு பல தீர்க்கமான முடிவுகளைக் கண்டடைந்தார். வாழ்வனுபவங்களே அவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியாளராக மாற்றின. படிப்பறிவற்ற ஏழை எளிய மக்களுடன் பணியாற்றத்தொடங்கிய ஃப்ரையிரே, தான் கண்டடைந்த கல்வி முறையை விடுதலைக்கான கோட்பாட்டியல் என அழைத்தார். ஓர் இடத்தில் ஆற, அமர உட்காருவதற்கான நேரம்கூட வாய்க்கப் பெறாத கூலித் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் இருந்தனர். பிரேசில் நாட்டில், படிப்பறிவற்றவர் களுக்கு ஓட்டுப்போட அனுமதி -_உரிமை ஏதும் கிடையாது. அந்த நிலையை மாற்றிட அவர்களிடம் கல்வியறிவைக் கொண்டு செல்வதுதான் ஒரேவழி என வாழ்நாள் முழுக்க அப்பணிக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

1968-ல் இப்புத்தகம் போர்ச்சுக்கீசிய மொழியில் வெளியானது. 1970-ல் ஸ்பானிய, ஆங்கில மொழிகளில் இது வெளியான போது உலகில் 60 நாடுகள் தமது மக்களின் எழுத்தறிவுக்காகச் சட்டங்கள் இயற்றின. அதில் இந்தியாவும் ஒன்று. இந்தநூல் 1974 வரை பிரேசிலில் தடை செய்யப்பட்ட ஒன்று! நமது ‘மவுனக் கலாச்சார’த்தை உடைத்து ‘உரக்கப் பேச` வைக்கிற பதினேழு புத்தகங்களை எழுதியவர் பாவ்லோ ஃப்ரையரே. தமிழில் அவரின் கருத்துகளை முடிந்தவரை எளிமையாகத் தந்திருக்கிறார் இரா.நடராசன்.

“புரட்சிகரக் கோட்பாடு இல்லாது ஒருபுரட்சிகர இயக்கம் இயங்க முடியாது’’ என்பதன் அர்த்தம், ஒரு புரட்சியை வெறும் வார்த்தையாலோ அல்லது வெறும் செயல்களாலோ மட்டுமே நடத்தி விட முடியாது. மக்களின் மீதான கடப்பாடு என்பது அவர்கள் ஒடுக்கப்படும் யதார்த்தத்தை மாற்றுவதே. மாறுதல் கோட்பாடு தேவை என்றால், மாறுதல் செயல்பாடுகளுக்கான கோட்பாடான அது, மாறுதலின் அடிப்படைப் பங்களிப்பை அம்மக் களுக்கே வழங்கும் ஒன்றாக இல்லாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை– என்கிறார் பாவ்லோ ஃப்ரையிரே.

———————————————————————
*ரஷ்யப்புரட்சி ஒரு புத்தகத்தின் வரலாறு
–எஸ்.வி.ராஜதுரை
—————————————————

 

*வட்டுக்கோட்டையிலிருந்து

முல்லைத்தீவு வரை

-சி.கா. செந்தில்வேல்

இலங்கையின் தேசிய இன முரண்பாடும், தேசிய இனங்கள் மீதான அடக்குமுறையும் 2009ம் ஆண்டுக்குப் பின் புதிய நிலவரமொன்றுக்குள் நுழைந்திருக்கிறது. இதனை எதிர்கொண்டு சுமக்கம் போகும் அடுத்த தலைமுறை இதுவரை காலமான அடக்குமுறைகளையும் அதற்கெதிரான போராட்டங்களையும் வரலாறாகத்தான் அறிந்து கொள்ளப்போகிறது.அவ்வாறு அத்தலைமுறை அறிந்து கொள்ளப்போகும் வரலாறு எந்த வரலாறாக இருக்கப் போகிறது? எவருடைய வரலாறாக இருக்கப் போகிறது?

ஒரு பக்கம் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு- இன்னொரு பக்கம் இடதுசாரிப் பார்வையை முன்னிருத்திய போக்கு. இந்த நூல் பேசுவது தமிழீழக் கோரிக்கையின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் மார்க்சிச அணுகுமுறையின் ஊடாக பார்ப்பதாகும்.

இந்த நூலின் ஆசிரியர், இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் கடந்த 52 வருடகாலமாக செயற்பட்டு வருபவர். முழு நேர அரசியல் ஊழியர், இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை ஆயுதப் போராட்டமாகவும் போராகவும் முன்னெடுக்கப்பட்ட கடந்த 33 வருட காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல் , சமுக வரலாற்றை படிக்க விளையும் ஒருவருக்கு இந்த நூல் முக்கிய பதிவாகும்.

————————————————–

*யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்

– சாந்தசீலன் கதிர்காமர்

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (1924- 1934) வரலாறு 1980ம் ஆண்டு எழுதப்பட்டு நூலாக வெளிவந்தது. சாந்தசீலன் கதிர்காமர் கொழும்பு, யாழ் பல்கலைக்கழகங்களில் நவீன வரலாறு மற்றும் சர்வேதேச அரசியல் துறைகளில் போதனாசிரியராக பணியாற்றியவர்.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்தான் யாழ்ப்பாணத்தில் தோற்றம் கொண்ட தீவிரம் நிறைந்த இளைஞர் இயக்கமாகும். இந்த இளைஞர் காங்கிரஸ் பாரம்பரியமானது தேசிய இனப்பிரச்சினை விவகாரத்திலும், அது தொடர்பான விவாதங்களிலும் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது.ஆங்கிலத்தில் இந்த நூல் எழுதப்பட்டாலும், தமிழ், சிங்கள மொழிகளிலும் 1980களில் வெளியிடப்பட்டது.தமிழில் இப்போது அதன் திருத்தப்பட்ட மீள்பதிப்பு வெளிவந்துள்ளது.

—————————————————

*வேட்கை, சிறைப் பயணக் குறிப்புகள்

பிள்ளையான் – (சிவா சந்திரகாந்தன்)

கடந்த இரு வருடங்களாக அரசியல் கைதியாக இருக்கின்ற சந்திரகாந்தன் தனது அனுபவங்களை எழுதியுள்ளார்.பதினைந்தாவது வயதில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்த இவர், 2004 இல் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் ஏற்பட்ட பிளவின் போது அவ்வமைப்பிலிருந்து வெளியேறினார்.,2008ம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்றார். 4 வருடங்கள் கிழக்கு முதலமைச்சராக பதவி வகித்த அவர், கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த போது, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

தான் இயக்கத்திற்கு சேர்ந்த காலப்பகுதி தொடக்கம், இயக்க கால வாழ்க்கை, விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவு, பின் இரு தரப்புகளுக்குமிடையே நடந்த மோதல், முரண்கள், கிழக்கின் நிலைமை, தான் எதிர் கொண்ட நெருக்கடிகள், அரசியல் மாற்றங்கள், , என பல்வேறு தலைப்புகளில் தனது அனுபவங்களை கதை சொல்லும் மொழியில் எழுதியுள்ளார்.

———————————————–

*கேரள டயரீஸ்

அருளினியன்

ஈழத்திற்கும் கேரளாவிற்குமிடையிலான தொடர்பை, நூற்றாண்டுகளைத் தாண்டி தேடித் துவங்கும் ஒரு ஆய்வு எழுத்து இது. கேரளாவில் பயணம் செய்து, தான் பார்த்தவற்றை தமது வாழ்வோடும் மண்ணோடும் ஒப்பிட்டு பதிவு செய்துள்ளார்.ஈழத்தமிழர் பூர்வீகம் தொடர்பான தேடலில் தான் அறிந்தவற்றை சொல்லி இருக்கிறார். மாற்று பார்வை உள்ளோர் அதனையும் எழுத்தில் வைக்க இந்த நூல் தூண்டுகிறது.

———————————————————————————–

* புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்

(கட்டுரைகள்)

நிலாந்தன்

முள்ளிவாய்க்கால் முடிவின் பின், அரசியல் ஆய்வுப் பார்வையில் தமிழர் அரசியல் தொடர்பாக நிலாந்தனால் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2016ம் ஆண்டுவரை எழுதப்பட்ட , 44 கட்டுரைகளை உள்ளடக்கி உள்ளது இத் தொகுப்பு. நந்திக்கடலின் துன்பவியல் கதை தொடக்கம்… ஜெனிவா வரை நீள்கின்ற தமிழர் அரசியலின் உள்ளடக்கம் தொடர்பான, ஒரு தமிழ்த் தேசியரின் பதிவுகள், எதிர்வுகள், ஆலோசனைகள், விமர்சனங்கள் என அவரது பார்வை இந்த தொகுப்பில் பதிவு பெற்றுள்ளது. ஈழத் தமிழர் அரசியலில் ஈடுபாடுள்ளவர்கள் வாசிக்க வேண்டிய அரசியல் எழுத்துக் கொண்ட தொகுதி இது .

————————————————————————————————————————————————-

*சுதந்திர தாகம்

சி.சு.செல்லப்பா

(பகுதி 1, பகுதி 2, பகுதி 3)

ஐந்து கல்லூரி மாணவர்கள், ஒரு பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஒருவர். பேராசிரியர் மற்றும் முதல்வரின் மனைவிகள். இவர்களை இந்திய சுதந்திரப் போராட்டம் எவ்வாறு பாதித்தது என்பதுதான் “சுதந்திரதாகம்” நாவலின் கதை. போராட்ட நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, தேசபக்தி உணர்வு தலைதூக்கும்போது, இவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்ற கதை அன்றைய வரலாற்று சம்பவங்களின் பின்னணியில் சொல்லப்படுகிறது.

இந்திய சுந்தந்திரப் போராட்டத்தின் முக்கிய காலகட்டமான 1900 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர இந்தியா வரையான காலகட்டத்தை புனைவெழுத்தில் சொல்லும் முதல் தமிழ் நாவல் இது.மூன்று தொகுதிகளாக கிட்டத்தட்ட 2000ம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் காந்தியின் அரசியல் வரலாற்றையும், இந்து பாகிஸ்தான் பிரிவையும் , சுதந்திரப் போராட்ட காலத்தின் இலச்சக்கணக்கான மக்களின் பங்களிப்பினையும் பதிவு செய்கிறது.

————————————————————————————————————————————————-

*ராஜீவ் கொலை, மறைக்கப்பட்ட உண்மைகள்

-சிறைவாசி நளினி முருகன்

26 வருடமாக , ராஜீவ் படுகொலை குற்றச்சாட்டுக் காரணமாக சிறைப்படுத்தப்பட்டு வதைக்கப்படும் நளினியின் துன்பவியல் வரலாறு மட்டுமல்ல இந்த நூல் இந்தியா அரசின் உண்மை முகத்தினையும் அம்பலப்படுத்தும் ஆவணம். நளினியின் இச்சுயசரிதை, சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் நடக்கும் மனித உரிமைகளை நம்முன் வைக்கிறது.


*மொழியும் நிலமும்
– : ஜமாலன்

மொழியின் தோற்றத்தையும் அதன் பங்கையும் ஆராய்வது என்பது, பன்முக வாசல்களைத் திறக்கும் ஒரு பயணம்.இங்கு மொழி வழியாக ஒரு சமூகம் எப்படிக் கட்டமைக்கப்படுகிறது என்கிற நூலாசிரியரின் மாறுபட்ட பார்வைகளும் தகவல்களும் தமிழ் வாசகர்களுக்கு அரிய தரவுகளாகும்.

——————————
*யாப்பு-(டொனமூர் முதல் சிறிசேனா வரை)
-மு.திருநாவுக்கரசு

சர்வதேச உறவுகள், புவிசார் அரசியல், கொள்கை வகுப்பு, ராஜ தந்திரம், உலக வரலாறு, அரசியல் சிந்தனை வரலாறு, பொருளாதார வரலாறு, அரசியல் சித்தாந்தம் போன்ற துறை ரீதியான அறிவின் மூலமாக ஈழ அரசியலை ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம் இது. அதாவது காலனி ஆதிக்கம் முதல் இன்று வரை நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தும் ஈழத் தமிழனது இடுப்பை ஒடிப்பதற்காக எப்படிப்பட்ட வார்த்தை ஜாலங்களுடன் உருவாக்கப்பட்டன என்ற வரலாற்று நகர்வுகளுடன் இந்த நூல் பயணிக்கிறது.

சிங்கள இனவாதம் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு காரணமா? விடுதலைப் புலிகளை ஒடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் எண்ணம் மட்டுமே காரணமா? கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவுக்குப் பக்கத்தில் இலங்கை இருப்பதுதான் காரணமா?… என்றால் மூன்றுமேதான். இவை அனைத்தும் இதுவரை பேசப்பட்டன. ஆனால், மு.திருநாவுக்கரசு அதைத் தாண்டிய ஒரு காரணத்தைச் சொல்கிறார். சிங்கள – பெளத்தர்களுக்கும் இந்தியாவுக்கும் தொடர்ச்சியாக இருக்கும் பகைமைதான் இதற்குக் காரணம் என்கிறார்.
————————————————————

*உலக இலக்கியப் பேருரைகள்
எஸ். ராமகிருஷ்ணன்

ஹோமர், ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஹேமிங்வே, பாஷோ, ஆயிரத்தோரு இரவுகள் என உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகளைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய பேருரைகள் முக்கியமானவை. மறக்கமுடியாதவை. அந்த உரைகளின் தொகுப்பே இந்நூல்.

*அம்பை கதைகள் (1972 – 2014) (42 ஆண்டுக் கதைகள்)

நவீன தமிழ் இலக்கியத்தின் பெண் ஆளுமைகளில் ஒருவரான அம்பை கடந்த அரைநூற்றாண்டு காலம் எழுதிய கதைகளின் தொகுப்பு . மறுக்கப்பட்ட பெண்ணின் குரல் படைப்பின் வழியாக உயிர் கொள்கிறது.

இந்தக் கதைகளில் கதை சொல்லி, சிறுமியாக -மாணவியாக – களப்பணியாளராக-வளர்ந்த மகளாக-மத்திய வயதினை உடையவளாக பல வயதுகளில் வருகிறாள் . அம்பையின் மொத்த புனைகதைகளின் உலகம் இது.

—————————————————————————————————————–

*அசோகமித்திரன் (குறுநாவல்கள் முழுத் தொகுப்பு )

எளிய மனிதர்களின் வாழ்க்கையையே சாரமாக எடுத்திருக்கிறார் அசோகமித்திரன். அவரது கதை மாந்தர்களைப் போல் அவரது மொழியும் அலங்காரமற்றது ஆனால் பிரகாசமும் நுட்பமும் கொண்டது. ஒரு கதையை, அரசியலை ,வாழ்க்கையைச் சொல்லும்போது சமானியனின் குரலையே விபரிப்பு மொழியாகத் தேர்ந்தெடுக்கிறார்

அசோகமித்திரனின், 13 குறு நாவல்கள் இத்தொகுப்பில் உள்ளன.ஒரு நாளைப் போல் மாறாத மற்றொரு நாளுக்காகக் காத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் பாடுகள் தாம் அசோகமித்திரனின் இந்த குறு நாவல்கள்

————————————————————–

*இலங்கையில் சிங்களவர்

இந்திய இனத்தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும்

– பக்தவத்சல பாரதி

இலங்கை என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தமதமும் இனப் பிரச்சினையும்தான்.ஆனால் இன்றைய இலங்கை சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தனித் தீவல்ல, இந்தியாவின் நீட்சியாகவே இருந்தது.அப்படியானால் சிங்களவர் யார், அவர்களின் பூர்வீகம் என்ன, எங்கிருந்து சென்றார்கள் போன்ற வினாக்களுக்கு பக்தவத்சல பாரதியின் இந்நூல் சமூக-பண்பாட்டு மானிடவியல் நோக்கில் விடையளிக்கிறது.

இதை, சிங்கள மொழி, சிறீலங்கா உருவாக்கம், இனத்துவம் போன்றவற்றினூடாக சிங்களவர்களின் பண்பாடு, சாதிமுறை, திருமணம், அவர்களிடையே நிலவும் உறவுமுறை முதலியவற்றையும் தனித்தனி இயல்களில் காட்சிப்படுத்துகிறார்.சிங்களவர்கள் இந்திய இனத் தொடர்ச்சி கொண்டவர்கள் என்றாலும் மரபணு (டிஎன்ஏ) ரீதியான நெருக்கம் தமிழர்களுடன்தான் அதிகம் என்றும், அவர்கள் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சி கொண்டவர்கள் என்றும் பாரதி கூறுவது ஆர்வமூட்டுவதாய் இருக்கின்றன.

————————————————————————————————————–

*பூனைகள் நகரம்

ஹாருகி முரகாமி

– தமிழல்.ஜி.குப்புசாமி

இக் கதைகள் இன்றைய தமிழ் மனதுக்கு அளிக்கும் விசாலப்பார்வை அலாதியானது . கிட்டத்தட்ட போதையூட்டக் கூடியது. அதனால்தான் முரகாமியை முதன்முதலாக வாசித்த வாசகன் மேலும் மேலும் அவரைத் தேடித்தேடி வாசிக்கிறான்.நம் சமகால உலகில் சிறுகதைகளின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. இந்த பூமியின் வெவ்வேறு மூலைகளில் நிகழ்த்துகொண்டிருக்கும் மானுட வாழ்வின் காத்திரமான சில குறுக்குவெட்டுக் காட்சிகளை இக்கதைகள்.கடந்த பத்தாண்டுகளில் தமிழில் அதிகம் வாசிக்கப்பட்ட அயல் எழுத்தாளர் ஹாருகி முரகாமி.

———————————————————————————————————–

*சுல்தானின் பீரங்கி

தமிழில்.கார்த்திகைப் பாண்டியன்

நம் சமகால உலகில் சிறுகதைகளின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. இந்த பூமியின் வெவ்வேறு மூலைகளில் நிகழ்த்துகொண்டிருக்கும் மானுட வாழ்வின் காத்திரமான சில குறுக்குவெட்டுக் காட்சிகளை இக்கதைகள்.21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான உலகளவில் முக்கியமான 10 படைப்பளிகளின் கதைகளைக் கொண்ட முக்கியமான தொகுப்பு இது.

———————————————————————————

*பனைமரமே! பனைமரமே!

ஆ.சிவசுப்பிரமணியன்

தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப்பதிவுகளையும் இந்நூல் தன்னகத்தே கொண்டுள்ளது. கிறித்துவிற்கு முந்தைய காலத்திய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி இடைக்காலக் கல்வெட்டுகள்வரை, தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி – வாய்மொழி இலக்கியம் – நவீன இலக்கியம் வரை எனப் பல அரியதரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது.பனையும் தமிழ்ச் சமூகமும் பற்றிய ஆய்வு, சமூகவியல் தகவல்களை தேடும் ஆர்வலர்களுக்கு அறிய நூல் இது.

—————————————————————————————————————————————

*சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
எம்.ஏ. நுஃமான்

எம்.ஏ. நுஃமானின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூக யதார்த்தத்துக்கும் இலக்கியப் புனைவுக்கும் இடையிலான உறவு இக்கட்டுரைகளில் அலசப்படுகின்றன.
புதுமைப்பித்தன், மௌனி, ந. பிச்சமூர்த்தி, கலைவாணன், க.நா.சு., கி. ராஜநாராயணன், 
தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், வெங்கட் சாமிநாதன், அம்பை, நீல. பத்மநாபன், தோப்பில் முஹம்மது மீரான் முதலிய தமிழக எழுத்தாளர்கள் பற்றியும், தாகூர் பற்றியும், சமகால எழுத்துப் படைப்பாளிகள் சிலர் பற்றியும் நுஃமானின் கூரிய விமர்சனப் பார்வை இக்கட்டுரைகளில் பதிவாகியுள்ளது.
வலுவான கோட்பாட்டு அடிப்படையில் நடுநிலையான கருத்துக்களை முன்வைக்க முயலும் இந்நூல் தமிழ் விமர்சன உலகில் முக்கியமான வரவாகும்.
—————————————————
*வன்னியாச்சி
(சிறுகதைகள்)
தாமரைச்செல்வி

ஈழத்துப் புனைகதைஞர்களில் ஐந்தாம் தலைமுறை எழுத்தாளர்களுள் தாமரைச்செல்வியின் பங்கும் பணியும் மிக முக்கியமானவை.
‘சுமைகள்’, ‘விண்ணில் அல்ல விடிவெள்ளி’, ‘தாகம், ‘வீதியெல்லாம் தோரணங்கள்’, ‘பச்சை வயல் கனவு’ போன்ற கனதிமிக்க நாவல்கள்மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை இனம்காட்டியிருக்கும் இவர் ‘மழைக்கால இரவு’, ‘அழுவதற்கு நேரமில்லை’, ‘வன்னியாச்சி’ போன்ற சிறுகதைத் தொகுதிகளை ஏலவே அறுவடை செய்து சிறுகதைத்துறையிலும் அதிர்வை ஏற்படுத்தியவர்.
மெய்யனுபவங்களையும் பிறர் வாயிலாகக் கேட்டறிந்தவற்றையும் கலாரீதியாகக் கூறி வாசகரிடையே அவற்றினைத் தொற்றவைப்பதோடு தமிழ்ப்புனைகதை இலக்கியத்தில் முகிழ்விடும் நவீனச் செல்நெறிகள் பற்றிய பிரக்ஞைக்கு உட்பட்டு எழுதுவதும் தாமரைச்செல்வியின் வெற்றிக்கான காரணிகள் எனக் கொள்ளலாம்.
போர்க்காலச் சூழல், போரின் அவலச் சாவுகள். அழிவுகள். பதற்றம் நிறைந்த மனங்கள் ஆகியவற்றைத் தனது படைப்புகளில் யதார்த்தமாகச் சித்தரிப்பதில் தாமரைச்செல்வி தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். சக்தியற்ற பெண்களின் மௌன உணர்வுகளுக்கு வடிவங்கொடுப்பதில் வல்லமையானவர். இச்சிறுகதைத் தொகுதியும் இவரது திறனுக்குச் சாட்சி சொல்வதாகவே அமைந்திருக்கிறது.
——————————————————–
*ஜெயலலிதா: மனமும் மாயையும்
– வாஸந்தி
தமிழக அரசியல் வரலாற்றில்,பெரும் புதிராக வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா.அவரளவுக்கு மகத்தான வெற்றிகளையும் கடுமையான சரிவுகளையும் கண்டவர்கள் அரிது.

ஜெயலலிதாவின் உண்மையான பின்னணி மூலம் அவரது தனிப்பட்ட, பொது வாழ்வை ஆராய்ந்து – ஒரு இதழாளராக ஜெயலலிதாவின் செயற்பாடுகளை வெளியரங்கில் வைப்பதுடன், படைப்பாளராக அவரது மனப்பாங்குகளையும் உணர்ச்சிகரமான போக்குகளையும் நெருங்கி விவரிக்கிறார் இந்த நூலில் வாஸந்தி.

—————————————————–
*என் தந்தை பாலய்யா
-ஒய். பி. சத்தியநாராயணா

மீற முடியாத சமூக எல்லைகள், மன எல்லைகள், சமூக – பொருளாதார – கலாச்சார வெளிகள், சாதிகளுக்கிடையேயான உறவுகள், அதன் சட்டதிட்டங்கள், வாழும் வழிகள், விதங்கள், பேரங்கள், சமரசங்கள், லட்சியங்களோடு பின்னடைவுகளையும் கொண்ட தீண்டத்தகாதவர்களின் தனித்துவம் மிகுந்த உலகத்தின் பல்வேறு முகங்களைப் பிரித்துப்பார்க்கும் முயற்சி ‘என் தந்தை பாலய்யா’. தீண்டத்தகாத ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சமூகப் பாகுபாடுகளுக்கும் ஒடுக்கும் சாதிய முறைகளுக்கும் நிலப்பிரபுத்துவ முறைகளுக்கும் ஏளனப்படுத்தலுக்கும் அவமதிப்புக்கும் எதிரான போராட்டத்தின் வரலாற்றுப் பதிவாக இந்தப் புத்தகம் இருக்கிறது. சாதியத்தின் மனிதாபிமானமற்ற குரூரத்தையும் தனது நிதர்சனமாக அதை உள்வாங்கியுள்ள தீண்டத்தகாத சமூகத்தின் கையறு நிலையையும் இந்தப் புத்தகம் வெளிக்கொணர்கிறது.
————————————————————-
* மரணத்துள் வாழ்ந்தவர்
– கௌரி லங்கேஷ்

கௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழுத்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தகுந்தது. கௌரி உயிருடன் இல்லாவிட்டாலும். அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள் மனித நெயம், ஜனனாயகம் ஆகியவற்றைப் பேசும் மக்களிடம் இந்த நூல் மூலம்செல்கிறது.

அதிகாரம் மறுக்கும் அடிப்படையான விடயங்களை பெசுவது தனது கடமை என அவர் செயற்பட்டார்.தமது உயரிய செயற்பாடுகளின் காரணமாக உயிரை இழந்தார். மக்களை நேசித்து அவர் இழந்த உயிர் , இந்தியாவின் இன்றைய போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விதைகளில் ஒன்றுதான்.

கெளரி லங்கேஷ் பற்றி `மரணத்துள் வாழ்ந்தவர்’ தொகுப்பு”The way I see it” ( A Gauri Lankesh Reader, published during the Bangalore Lit Fest) என்கிற புத்தகத்தின் தமிழாக்கம் இது
——————————————————————
* நிலத்தின் விளிம்புக்கு
( நாவல்)
டேவிட் கிராஸ்மன்
தமிழில்: அசதா

இடைவிடாது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு யுத்தம், அதில் ஈடுபட்டிருக்கும் தன் பிள்ளை, எதுவோ விரும்பத்தகாதது நிகழப்போகிறது என்ற கிலேசம், தன்னை வந்து அடையப்போகும் கெட்ட செய்தியைத் தவிர்க்க வீட்டி லிருந்து வெளியேறி வயல்கள் ஓடைகள், ஆறுகள், மலைகள் என நெடிய நடைபயணத்தை மேற்கொள்கிறாள் தாய். ஒரு குடும்பத்தையும் அதனோடு பின்னப்பட்ட உறவுகளையும் ஒரு யுத்தம் எப்படி உள்ளும் புறமுமாகப் பாதித்து கடும் சிக்கலுக்கு ஆளாக்கவியலும் என்பதை அதிகமும் தனக்கும் தனது பிள்ளைக்குமான ஒரு தாயின் நினைவுப் பின்னணியில் வைத்து விவரிக்கும் இந்நாவல் நம் காலத்தின் மிகச் சிறந்த யுத்த எதிர்ப்பு நாவல்.
ஒரு இஸ்ரேலியப் படைவீரனது தாயின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் இஸ்ரேலிய – பாலஸ்தீனிய யுத்தத்தைப் பக்கச் சார்பின்றி அணுகியிருக்கும் நூலாசிரியர் இஸ்ரேலிய அரசாங்கத்தையும் தொடர்ந்து தீவிரமாக விமர்சித்து வருபவர். இஸ்ரேலியப் படைவீரனான தனது மகனை யுத்தத்தில் பறிகொடுத்தவர். ஒருவிதத்தில் நாவலில் வரும் தாயான ஓரா, டேவிட் கிராஸ்மன்தான். எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் படையிலிருக்கும் தனது மகனை இந்நாவல் காப்பாற்றும் என அவர் நம்பினார்.நிதானமும் அழகும் கூடிய ஒரு மொழியில் எழுதப்பட்டிருக்கும் படைப்பு இது.
—————————————————————————-

*எம்.எஸ்.
காற்றினிலே கரைந்த துயர்
டி.எம். கிருஷ்ணா
தமிழில்: அரவிந்தன்

எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி டி.எம். கிருஷ்ணா எழுதிய ஆங்கில கட்டுரை ஒன்று பெரும் விவாதத்துக்கும் தாக்குதலுக்கும் உள்ளானது. அந்தக் கட்டுரையின் மொழியாக்கம் காலச்சுவடு 2016, மே இதழில் வெளியானது. சமீபத்தில் டி.ஜே.எஸ். ஜார்ஜ் எழுதிய ‘எம்.எஸ். வாழ்க்கை வரலாறு’ நூலின் தெலுங்கு மொழியாக்க நூல் வெளியீட்டில் கலந்துகொண்ட கிருஷ்ணா கூறிய சில கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாயின.
இந்தப் பின்னணியில் டி.எம். கிருஷ்ணாவின் கட்டுரை தற்சமயம் நூல் வடிவம் பெறுகிறது, அவரது முன்னுரையுடன். எம்.எஸ். குறித்துப் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பர்வையையும் பிம்பங்களையும் கேள்விக்குட்படுத்தும் இந்நூல் அந்த மகத்தான கலைஞரின் நிஜ ஆளுமையை வெளிக்கொணர்கிறது.
————————————————————————————————–

*காட்டிலிருந்து வந்தவன்
சுதாராஜ்

சமகால ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகின் முக்கியமான ஆளுமைகளுள் சுதாராஜும் ஒருவர். இத்தொகுப்பில் சுதாராஜின் பத்துச் சிறுகதைகள் உள்ளன. ‘ஒரு துவக்கின் கதை’ இத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. யுத்தத்துக்கு முந்திய அமைதியான யாழ்ப்பாணக் கிராமத்துச் சூழலில் தொடங்கும் கதை; யுத்தம் உக்கிரமடைந்து, கிராமங்கள் அழிந்து, குடும்பங்கள் சிதைந்து, மக்கள் சிதறிப் புலம்பெயர்ந்த சூழலில் முடிகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் வன்முறைக்கு எதிராக எழுதப்பட்ட மிகச்சிறந்த ஈழத்துச் சிறுகதைகள் சிலவற்றுள் இதுவும் கட்டாயம் இடம்பெறும்.
சுதாராஜின் கதைகள் வெவ்வேறு வகையில் மனித ஆளுமையின் உடைவுகளையும் அதன் உயிர்ப்பையும் பேசுகின்றன. மனிதநேயமும், மனிதத்தின் உயிர்ப்புமே அவரது அரசியலாகவும் அழகியலாகவும் படைப்புகளூடாக வெளிப்படுகின்றன. அவரது இலக்கியத்தில் போலிப்பகட்டு, சுத்துமாத்து எதுவுமில்லை. எல்லாமே எளிமையானவை; வெளிப்படையானவை; நேரடியாகச் சொல்லப்படுபவை.
—————————————————–

*குடியேற்றம்
( நாவல்)
தோப்பில் மீரான்

பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கிழக்கு, மேற்கு கரைகளில் பறங்கியர்களுக்கும், கடலோரத்தில் வாழ்ந்த பறங்கியர்களுக்குமிடையே கடும்போர் நடைபெற்றது. இப்போரில் பல ஆயிரம் பேர் மரணித்துள்ளனர். மத மேலாண்மைக்காக, கலாசார திணிப்புக்காக , வியாபார குத்தகைக்காக அன்னியரான பறங்கியர் நடாத்திய அட்டூழியங்களை எதிர்த்து நின்ற மரைக்காயர்களின் வாழ்வு இது.

கொடூரம் நிறைந்த இந்தப் போரில் உற்றவர்களை இழந்து தங்கள் சொந்தங்கள், மற்றும் கடற்கரை மண்ணைத் துறந்து தமிழ் நாட்டின் பல உள்கிராமங்களுக்கு ஓடி தஞ்சமடைந்து, குடியேறி, அகதி வாழ்வு வாழ்ந்த மக்களின் பெரும்பாட்டை, அந்த மக்களின் பின் தலைமுறை வாழும் ஒரு கிராமத்தின் அவல வாழ்வை சாட்சிப்படுத்தும் பிரதி இது. இறந்தகாலத்தின் விழுதுகளைப் பற்றிக் கொண்டு இறங்குகிறது நவீன காலம்.

————————————————————-
* மஞ்சு
(இந்திய கிளாசிக் நாவல்)
எம்.டி. வாசுதேவன் நாயர்
தமிழில்: ரீனா ஷாலினி

எம்.டி. வாசுதேவன் நாயரின் இந்த நாவல் காத்திருப்புகளின் கதை. காலமும் இடமும் மனங்களும் இந்தக் கதையில் காத்திருக்கின்றன. 
கோடை நாட்கள் குளிர் பருவம் வரக் காத்திருக்கின்றன. தன்னைத் தேடிவரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு மலைப்பிரதேசம் காத்திருக்கிறது. ஒருபோதும் பார்த்திராத பளிங்குக்கண் தகப்பனுக்காக ஒரு சிறுவன் காத்திருக்கிறான். ஒருகாலத்தில் பார்த்துக் களித்த நீல நரம்புகள் துடிக்கும் முகத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள். ஒருமுறைகூடப் பார்த்துவிட முடியாத மரணத்துக்காக ஒரு மனிதன் காத்திருக்கிறான்.
காத்திருப்பின் தனிமையும் எதிர்பார்ப்பின் துயரமும் மூடுபனி யாக அந்த மனிதர்களை, இடத்தை, காலத்தை மூடுகிறது. அந்த உறைபனிக்குள் உணர்வுகள் உருகிச் சொற்களாக உருமாறி மௌனத்தின் இசையுடன் பெருகுகின்றன. கதையின் ஓட்டம் வாசிப்பவர்களின் மனவெளியில் மஞ்சுப் படலமாகப் படர்கிறது.

———————————————————
*உடைந்த குடை
(நாவல்)
தாக் ஸுல்ஸ்தாத்
தமிழில்: ஜி. குப்புசாமி

உலகின் மிக முன்னேறிய அமைதி யான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனை, இன்றைய கால கட்டத்தில் எத்தகைய அடையாள சிக்கல்களும் இருத்தலியல் ஐயங்களும் அலைக்கழிக்கின்றன என்பதைச் சொல்லும் நாவல் இது.
மிலன் குந்தேராவின் புகழ்பெற்ற நாவலான ‘The Unbearable Lightness of Being’இன் நார்வேஜிய வடிவம் என்று சொல்லக் கூடிய இந்நாவலில் எலியாஸ் ருக்லா என்ற மையப் பாத்திரத் தின் மூலமாக நவீன வாழ்வில் சிக்குண்டிருக்கும் மனிதன் ஒவ்வொருவனும் தனது அக உலகில் விடை காண முடியாத சூட்சுமக் கேள்விகளின் மூலமாக தனது அடையாளத்தை தேடித்தேடித் தோல்வியடைந்து மேலும் தனிமைப்படுத்திக் கொள்வதையும், விரத்தியும் உறவுகளோடு பாராட்டும் போலி அன்பும் மட்டுமே மிச்சமிருப்பதைக் கண்டுகொள்வதையும் தாக் ஸுல்ஸ்தாத் சித்தரிக்கிறார்.
பெரிதும் அகவயப்பட்ட இந்நாவல் நார்வேஜியக் கலாசாரப் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தாலும் தனிமையுற்றிருக்கும் எல்லா நாட்டு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற உலக நாவலாகவே இருக்கிறது.
————————————————————————————-

 

*கிராமத்து தெருக்களின் வழியே
-ந.முருகேசபாண்டியன்

முருகேசபாண்டியன் தனது சொந்த அனுபவங்களின் வழியே சமயநல்லூர் என்ற மதுரையை அடுத்த சிறிய ஊரின் சமூக,கலாச்சாரச் சூழல்களையும் அதை உருவாக்கிய காரணிகளையும் இன்றைய மாற்றத்தையும் அடையாளம் காட்டுகிறார்.

ஒரு ஊரின் ஐம்பதாண்டு காலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேசபாண்டியன், தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்திரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல், அது பண்பாட்டுரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழர் வாழ்க்கை எப்படிக் காலந்தோறும் உருமாறி வருகிறது என்று சுட்டிக்காட்டுவது இந்நூலின் சிறப்பு.
————-

*.எட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும்

எச். பீர்முஹம்மது

‘தமிழில் புதிய சிந்தனைப்போக்கிற்கான தேடல் அதிகரித்திருக்கிற காலம் இது. பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் என்று தகவல்கள் கணந்தோறும் பறந்து, உதிர்ந்து விழுகின்றன. இந்நிலையில் நாம் அந்த உதிர்த்தலோடு நிதானமாக பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. பொதுவாக ஆய்வில் நிதானமும், கவனமும், விரிவும், ஆழமும் தேவை. அதனை நோக்கியே என் எழுத்துப் பயணம் தொடர்கிறது. குறிப்பாக கீழைத்தேய ஆய்வுகள் குறித்த இந்த நூல் அதன் ஒரு பகுதி.’ என்று கூறும் எச். பீர் முகமது புகழ்பெற்ற கீழைத்தேய சிந்தனையாளரான எட்வர்ட் செய்த்தை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நூல்.
—————————-

*தன்னார்வக் குழுக்களும் 
புரட்சிகர நிலைப்பாடும்
– நிதின்

அரசு சாரா அமைப்பு (NGO) என்பதே தவறாகச் சூட்டப்பட்ட பெயர் ஆகும்.அரசு சாரா அமைப்புகள் அனைத்திற்கும் ஏகாதிபத்திய அமைப்புகள்,ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மற்றும் தரகு ஆட்சியினரால் நிதி உதவி அளிக்கப்படுகிறது.அரசு சாரா அமைப்புகள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு தொடர்புப் பாலமாகச் செயல்படுகின்றன.சுரண்டல்வாதிகள் சிவில் சமூகத்தின் கருத்துகளில் தாங்கள் விரும்பும் தாக்கங்களை ஏற்படுத்த இவற்றை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.அவர்கள் ஏகாதிபத்தியக் கைகளினால்,அந்த ஏகாதிபத்தியத்தின் நீண்டகாலக் குரிக்கோளை அடைவதற்காக ஆட்டுவிக்கப்படுகின்றனர்.

இவ்வாறாக வளர்ச்சித்திட்டம்,சமூக நீதி,மனித உரிமை,அடிமட்ட அளவிலான சனநாயகம் போன்ற பெயர்களில் அரசு சாரா அமைப்புகளின் கருவூலத்திற்குப் பெரும் நிதி வழங்கப்படுகிது.கடந்த புத்தாண்குகளில் உலக வங்கி மற்றும் பிற ஐ.நா.அமைப்புகள்,தமது நிதி யாவும் அரசு சாரா அமைப்புகள் மூலம் பயன்படுத்தப்படவேண்டும் என வற்புறுத்தி வருகின்றன..

——————

*ஜெயகாந்தனின்
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது
(தொ-ர்): சுகுமாரன்

தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே.ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இத்தொகுப்பு.
—————————————————————-

*தண்ணீர்
(தமிழ் கிளாசிக் நாவல்)
அசோகமித்திரன்

ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . .
‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை.
சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால் ஒதுக்கப்படுவதன் வலியையும் சுமக்கும் ஜமுனா. இராணுவத்தில் பணிபுரியும் கணவனைப் பிரிந்து பெண்களுக்கான விடுதியில் தங்கி பலவிதமான நெருக்கடிகளுக்கிடையில் பிழைக்கும் ஜமுனாவின் தங்கை சாயா. சீக்காளிக் கணவனுக்கும் வன்மத்தின் மறுஉருவமான மாமியாருக்கும் இடையே நம்பிக்கையின்றி துறவியின் மனவுறுதியுடனும் விரக்தியுடனும் காலந்தள்ளும் டீச்சரம்மா.

நகரத்தில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரும்போது மனித இயல்புகளும் உறவுகளும் மாற்றம்கொள்வதை இந்நாவல் துல்லியமாக விவரிக்கிறது. சாதாரண மக்களிடம் தவிப்பு, கோபம், தந்திரம், மிருகத்தனமான சுயநலம், இவற்றுடன் தாராள குணமும் மேன்மையும் தென்படுவதை நாம் உணரலாம்.
தினந்தோறும் தண்ணீரைத் தேடி அலைந்து சேகரித்து தேவைக்கேற்ப சேமித்து வைப்பதற்கான போராட்டம் எல்லோரையும்போல ஜமுனா, சாயா, டீச்சரம்மா ஆகியோரையும் அலைக்கழிக்கிறது. இவ்வலைக்கழிப்பு ஜமுனா, சாயாவிடம் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளுவதற்கான தெளிவையும் உறுதியையும் ஏற்படுத்துவதுதான் தண்ணீர் நாவலின் முதன்மைச் சரடு.
‘தண்ணீர்’ நகர்ப்புறச் சமூகத்தின் இயல்பைப் பற்றிய மகத்தான படைப்பு.

—————————————————
* காச்சர் கோச்சர்
விவேக் ஷான்பாக்
கன்னடத்திலிருந்து தமிழில்: கே. நல்லதம்பி

கன்னடத்தில் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் வெளிவந்த மகத்துவ மான புனைக்கதை காச்சார் கோச்சர். தற்கால பெங்களூரை எடுத்துக்கொண்டு இவ்வளவு உணர்வுபூர்வமாக, நுணுக்க மாக, மனதைத் தொடும் வகையில் மற்றொரு நாவல் வந்ததில்லை.
கிரீஷ் கார்னாட் – 
கன்னட எழுத்தாளர்
———————————————————

*வீழ்ந்தவர்கள்
லியா மில்ஸ்
தமிழில்: பெர்னார்ட் சந்திரா

கேட்டி கிரில்லி – பழைமைவாதச் சமூகத்துக்குள் தனது இடத்தைத் தேடமுயற்சி செய்துகொண்டிருக் கும் இளம்பெண் – அவள் எதை நினைத்துப் பயந்துகொண்டிருக்கி றாளோ அந்தச் செய்தியை அறிகிறாள்: அவளது அன்புக்குரிய இணைப் பிறவிச் சகோதரன், லியாம் மேற்குப் போர்முனையில் கொல்லப்பட்டான்.

ஒருவருடம் கழிந்தபின் திடீரென உயிர்ப்புத் திருநாள் விடுதலைக் கிளர்ச்சி வெடித்து டப்ளின் நகரம் வன்முறை யால் சூழப்பட்ட நிலையில் தனது சகோதரன் உயிரை விடக் காரணமாயிருந்த கொள்கைக்கும் தனது உணர்வுபூர்வமான நாட்டுப்பற்று, தனது நகரம் அதன் மக்கள் மேலுள்ள நேசத்துக்குமிடையே நிலைதடுமாறுகிறாள் கேட்டி. தனது நண்பர்கள் வீட்டில் அடைக்கலம்புகும் அவள், தனது சகோதரனுடன் போர் முனையிலிருந்த ஹ்யூபி வில்சனைச் சந்திக்கிறாள். அப்போது புதிய வாழ்க்கையைக் கனவுகண்டுகொண்டிருக்கும் அந்த இரு இளவயதினருக்கிடையே துடிப்பான உரசல்கள் கிளர்ந்தெழு கின்றன. விடுதலைக் கலவரத்தினால் தலைகீழாகப் போய்விட்ட கேட்டியின் வாழ்க்கையில், அவள் இதுவரை கற்பனை செய்திராத சாத்தியங்கள் தென்படுகின்றன.
‘வீழ்ந்தவர்கள்’ புதினத்தில் லியா மில்ஸ், வன்முறைக்கும் இழப்புக்கும் நடுவில் புரிதலையும் தன்னம்பிக்கையையும் உணர்ந்து ஆளாகும் ஓர் இளம்பெண்ணை வாசகர் மனதில் நிலைபெறும் வசீகரத்துடன் காட்சிப்படுத்துகிறார்.

லியா மில்ஸ்
அயர்லாந்து நாட்டு எழுத்தாளரான லியா மில்ஸ் நாவல், சிறுகதை, புனைவற்ற படைப்பு என்ற தளங்களில் இயங்கிவருபவர். இவரது முதல் படைப்பான ‘அனதர் ஆலிஸ்’ 1996இல் வெளிவந்து ‘ஐரிஷ் டைம்ஸ்’ பத்திரிகையின் சிறந்த நாவல் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 2005இல் வெளிவந்த அவரது இரண்டாவது நாவலான ‘நத்திங் சிம்பி’ளும் அந்த ஆண்டுக்கான அயர்லாந்தின் சிறந்த நாவலாகப் பரிந்துரை செய்யப்பட்டது.
‘யுவர் ஃபேஸ்’ என்ற இவரது தன் அனுபவ வாய்ப்புற்றுநோய் பற்றிய நூல் 2007இல் வெளிவந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றது. ‘ஃபாலன்’ என்ற அவருடைய இந்த மூன்றாவது புதினம் 2014இல் வெளியானது.
சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் கலைமேம்பாட்டுக் குழுக்களில் பங்குபெறுவதோடு கலை ஆலோசகராகவும் பணிசெய்கிறார்.
டப்ளினில் பிறந்து இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பல ஆண்டுகள் வசித்த பின்னர் தற்போது அயர்லாந்தில் வாழ்ந்துவருகிறார்.


* தமிழ் நாவல் இலக்கியம்
கைலாசபதி

வரலாறும் திறனாய்வும் கலந்த நோக்கில் தமிழில் வெளிவந்த முக்கியமான நாவல்களை முன்வைத்து இந்த ஆய்வு நூல் உருவானது. “படப்புக்கும் சமூகத்திற்குமான உறவு முதன்முதலாக தமிழில் கைலாசபதியால்தான் அழுத்தம் பெற்றது” என சுந்தர ராமசாமி இந்த நூலின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடுகிறார்.

நெடுங்கதையாகினும் நாவல் காப்பியத்திலிருந்து வேறுபட்டது, புனைகதையாகினும் சிறுகதையிலிருந்து வேறுபட்டது. நாவல் பெரிதும் யதார்த்தவாதம் சார்ந்த்தது, இயற்பண்புவாத இடையீடு கொண்டது என இந்த நூல் விளக்குகிறது. இலக்கியத்திற்கும் சமூதாயத்திற்கும் இடையேயுள்ள உறவு பற்றிய மிக முக்கியமான நூல் இது. 
————————————————————————————-

*சாதுவான பாரம்பரியம்
(உலக கிளாசிக் நாவல்)
ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா
தமிழில்:முடவன் குட்டி முகம்மது அலி

சீலன்பா, தாவர அறிவியலில் பெற்றிருந்த கல்விப் பயிற்சி, கிராமத்து மக்களையும் நிலத்துடன் அவர்கள் கொண்டிருந்த ஆழமான பிணைப்பையும் எழுத்தில் செழுமைப்படுத்த அவருக்கு உதவிற்று.
1860களின் ஃபின்லாந்தின் மிகப்பெரும் பஞ்சத்திலிருந்து தொடங்கும் நாவல், யூகா தொய்வோலா என்னும் ஏழைக் குத்தகைப் பண்ணை விவசாயியின் வாழ்க்கை வரலாற்றை ஃபின்லாந்தின் உள்நாட்டுப் போர் நிகழ்ந்த காலகட்டம்வரை (1917) பின்தொடர்கிறது. விவசாயம் செய்யும் அமைதியான குடியானவ மக்கள் ஆயுதமேந்திக் கிளர்ச்சியில் ஏன் ஈடுபட்டனர் என்பதை வாசகனிடம் சேர்ப்பிக்க விழைகிறார் ஆசிரியர். செஞ்சிவப்பு அணியின் சதியில் சிக்கிக்கொள்ளும் யூகா, செய்யாத கொலைக்காக மரண தண்டனைக்கு ஆளாகிறான். அவன் விதியை அடங்கிய தொனியிலும் ஆனால் பெரும் மனிதக் கருணையுடனும் பதிவுசெய்கிறார் சீலன்பா.

நாவலின் கருப்பொருள் நிலம். நாவல் முழுக்க நிலக்காட்சியாய் வியாபித்திருப்பது வட ஃபின்லாந்துச் சூழல்தான். அடிப்படைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி மிகச் சுருக்கமாக கதை சொல்லிய அதிசயம் நாவலில் சாத்தியமாகியுள்ளது.
அவலம், பரிவு, மென்மை என மனித உணர்வுகளை ஆழ்ந்த புரிதலுடன் நாவல் பேசுகிறது. நாவலின் உரைநடை கவிதையாய் உயர்கிறது.
———————————————————

*கன்னிகா
(குறுநாவல்)
ரகுநாதன்
நாளுக்கு ஒரு புதுமை – நாழிகைக்கு ஒரு புதுமை என இயற்கையின் உந்துதல்களால் அலைக்கழிக்கப்படுவது கன்னிப் பருவம். இந்தக் கிளர்ச்சிகளைத் தன்னுள் தானே அடக்கிக்கொள்ள முயல்வதும், சமூகமும் தன் வரையறை களால் கட்டுப்படுத்திக்கொள்ள முயல்வதும் எனப் பெரும் போராட்டத்தின் களமாக நிற்கிறாள் கமலா.

பெண்ணுடலையும் அதன் ரகசிய வேட்கைகளையும் இயற்கைக்குப் புறம்பான அறிவோடு இந்தியச் சமூகம் எதிர் கொள்ளப் பார்க்கிறது. ஆன்மிக உணர்வுகளையும் துணைக்கழைக்கிறது. இவற்றின் வழியாக காதலை உடல் இச்சைக்கு அப்பால் நிறுத்திப் பார்க்க வும் ஆத்ம ஒட்டுறவை நந்தாச் சுடராக அணையாது காக்கவும் விரும்புவதாக ஒரு கன்னி தன் காதல் உணர்வை வெல்லப் பார்க்கிறாள்; சமூக உள்ளுணர்வுகளோடு ஒத்திசைய லாம் என்பது அவளின் கற்பனை. இந்தக் கற்பனை காலத்தைக் கடந்து செல்லப் பார்க்கிறது. ஆனால் அந்தக் கற்பனை வெல்லுமா?
உடலியலை உளவியல் ரீதியான தன்மையில் அணுகுகிற இந்த நாவல், ஒரு புதிய உலகைத் திறக்கிறது. தமிழில் இதுவரை அறியப்படாத முயற்சியில் எழுதப்பட்டிருக்கிறது ‘கன்னிகா’.
————————————————————————

*கிளிக் கதைகள் எழுபது
(சுக ஸப்ததி)
ராஜ் கௌதமன்

எந்த ஆசையைச் சமண, பௌத்தம் கைவிடச் சொன்னதோ அந்த ஆசையை இந்தக் கிளிக் கதைகள் வழியாக வைதீக – பிராமணியம் அரசியலாக்கியுள்ளது.
சமண பௌத்தத்தை எதிர்த்த கலாச்சாரப் போராட்டத்தில் வைதீக பிராமணியம் நாட்டுப்புறப் பாலியல் பகடியைப் பயன் படுத்திய அரசியல் ஒன்றை இக்கதைகளில் இலைமறை காயாக இருப்பதை அவதானிக்கலாம். சமண – பௌத்த மார்க்கங்களை எதிர்த்த போராட்டத்தில் இவ்விதமான பாலியல் பகடி சார்ந்த அரசியல் வைதீக – பிராமணியத்தின் முக்கியமான புனைவுசார் அரசியலாக இந்திய உபகண்டம் முழுவதிலும் செயல்பட்டு வந்துள்ளது. எனவே கதைகள் வெறும் பொழுதுபோக்குக் கருவிகள் மட்டுமல்ல; அவை கலாச்சாரத் தளத்தில் நிகழ்த்தப்படுகிற கருத்தியல் போராட்டங்களின் வலிமை வாய்ந்த ஆயுதங்களாகவும் செயல்படுகின்றன.
———————————————————–

*மீனும் பண் பாடும்
(உலக கிளாசிக் நாவல்)
ஹால்டார் லேக்ஸ்நஸ்
தமிழில்: எத்திராஜ் அகிலன்

ஐஸ்லாந்து நாட்டின் கடலோரக் கிராமம் ஒன்றில் தற்செயலாகப் பிறக்க நேர்ந்த, தாய் தந்தையரை அறியாத அல்ஃப்க்ரைமுரின் இளமைக்கால மனப்பதிவுகளினூடாக விரிகிறது இந்த நாவல். அவன் வளரும் ப்ரெக்குகாட் இல்லம் விசித்திர மனிதர்களின் வாழ்விடம். தனது தாத்தாவாக வரித்துக்கொண்ட ப்யோர்னைப் போலவே தானும் ஒரு செம்படவனாக வேண்டும் என்று அல்ஃப்க்ரைமுர் விரும்பு கிறான். ஆனால் வாழ்க்கை அவனுக்கு வேறொன்றை விதித்திருக்கிறது. புகழ்பெற்ற பாடகராக அறியப்படும் கர்தர் ஹோமின் வருகையும் அவருடனான சந்திப்பும் அவனது வாழ்க்கைத் தடத்தை மாற்றுகிறது. முற்றிலும் ஒரு புதிய அத்தியாயத்திற்காக அந்தக் கடற்கரைக் கிராமத்திடமிருந்து விடைபெற்றுச் செல்கிறான் அல்ஃப்க்ரைமுர்.

வெளியுலகின் சலனங்களையும் காலத்தின் நகர்வையும் பிடிவாதமாக மறுத்து, தாங்களே வகுத்துக்கொண்ட மதிப்பீடு களின் வழி எளிய தேவைகளுடன் வாழ முயலும் பாசாங்கற்ற மனிதர்கள்தான் இந் நாவலின் மையப் பாத்திரங்கள். பாடகர் கர்தர் ஹோம் இறுதி வரையிலும் அவிழ்க்கப்படாத புதிர். நவீன வாழ்வின் வெற்றுப்பகட்டு, பேராசை இவற்றின் மீதான விமர்சனம் இந்நாவலில் உள்ளீடாகத் துலங்குகிறது. அற்புதக் கதைகளின் எளிமையும் ஈர்ப்பும், நாட்டார் கதைகளின் நகைச்சுவையும் கொண்ட இந்நாவலை தமிழ் வாசகர்கள் மிக நெருக்கமானதாக உணர்வார்கள்.


*செம்மீன் (நாவல்_
தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில்- சுந்தர ராமசாமி

சில ஆண்டுகளுக்கு முன், சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பில் மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய “செம்மீன்” நாவல் வாசிக்கக் கிடைத்தது. என்னைத் தீவிர இலக்கிய வாசகனாக மாற்றிய மிக முக்கியமான நூல்களில் செம்மீனும் ஒன்று. செம்மீன் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படமும் வெளிவந்திருப்பதைச் சமீபத்தில் அறிந்துகொண்டு மிகுந்த உற்சாகத்துடன் அத்திரைப்படத்தைப் பார்த்தேன். எஸ்.எல்.புரம் சதானந்தன் என்பவரது திரைக்கதையில் ராமு கார்யாட் இயக்கி, 1965ம் ஆண்டு செம்மீன் திரைப்படமாக வந்துள்ளது. மிக அட்டகாசமான முயற்சி!

நாவல்களை அடிப்படையாக வைத்துத் திரைப்படங்கள் வெளிவரும் போக்கு தமிழில் இல்லவே இல்லை என்னும் தற்போதைய சூழலில் செம்மீன் திரைப்படத்தைப் பற்றிப் பேசுவது அவசியமாகிறது. ஏனெனில், செம்மீன் ஒரு சாதாரண படம் என்று கடந்து செல்ல முடியாதபடி அது மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. 2015ம் ஆண்டு செம்மீன் வெளிவந்து ஐம்பதாண்டு நிறைவுற்றதை ஒட்டி கொண்டாட்டங்கள் நடத்தும் அளவிற்குக் கேரள மக்களின் மனங்களில் நீங்காத இடத்தை அது பெற்றிருக்கிறது!
——————————————

*ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம்

கார்லோஸ் புயந்தஸ் (ஆசிரியர்), ஸ்ரீதர் ரங்கராஜ் (தமிழில்)

நாவலின் தொடக்கத்தில், ஆர்தேமியோ க்ரூஸ் – ஓர் எல்லாம் வல்ல செய்தித்தாள் நிறுவனர் மற்றும் நிலப்பிரபு, மோசமாக நோயுற்ற நிலையில் படுக்கையில் கிடக்கிறார். கனவு போன்ற தெறிப்புகளில் அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டங்களை நினைவுகூர்கிறார். கார்லோஸ் புயந்தஸ் இந்தக் கலைடாஸ்கோப்பின் தொடர்காட்சிகளை திகைப்பூட்டும் விதத்தில் புதுமையான வகையில் கையாள்கிறார். ஒரு நினைவின்மீது மற்றொரு நினைவை அடுக்குகிறார், தொடக்ககாலத்தில் மெக்சிகோ புரட்சியின்போது க்ரூஸ்சின் நாயகத்தன்மை வாய்ந்த ராணுவ நடவடிக்கைகள், போருக்குப்பின் இரக்கமற்ற, நேர்மையற்ற முறையில் ஏழ்மையிலிருந்து செல்வத்தின் உச்சியில் பண்ணைவீட்டின் முதலாளியாக உயர்வது, தற்போது உடல்நலமில்லாத முதியவராக தனது நீண்ட, பல்வேறு வன்முறைகள் நிறைந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது என தொடர்கிறது.
—————————————-

*இரண்டு வார்த்தைகளும்
மூன்று துறவிகளும்

ஆர். சிவகுமார்

கடமை உணர்வுமிக்க ஒழுங்குநிறைந்த நேர்மையான ஒரு மனிதர் என் அப்பா நம்பிக்கையான சிலரை விசாரித்ததில் இளம்பிராயத்திலேயே இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு இந்த குணங்கள் இருந்தது தெரியவந்தது. நமக்குத் தெரிந்த மற்ற ஆண்களைவிடவும் அதிகம் மகிழ்ச்சி உள்ளவராகவோ அதிகம் சோகம் நிரம்பியவராகவோ அவர் இருந்தது இல்லை என்பது என்னுடைய நினைவுக்கே புலனாகிறது.


*ஊழல் – உளவு – அரசியல்
சவுக்கு சங்கர்.

தான் உண்டு, தன் வேலை உண்டு என்று அநேகம் பேர் போல் என்னால் இருக்கமுடியவில்லை. நான் பணிசெய்யும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலேயே பல்வேறு ஊழல்களும் முறைகேடுகளும் நடைபெறுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. சமூக நலன் சார்ந்து சிந்திக்கவேண்டிய, செயல்படவேண்டிய கட்டாயத்துக்கு நான் தள்ளப்பட்டேன் என்கிறார் சவுக்கு சங்கர்.
—————————–

*மெர்சோ: மறுவிசாரணை 
-காமெல் தாவூத்

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பிரெஞ்சு இலக்கியப் படைப்புகளில் மிகவும் பிரபலமாகிவிட்டிருக்கும் முதல் வரிகளில் ஒன்று: ‘இன்று அம்மா இறந்துவிட்டாள்.’ எழுபது ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான ஆய்வுகளுக்கும் பல புத்தகங்களுக்கும் ஊட்டமளித்திருக்கும் காம்யுவின் ‘அந்நிய’னின் தொடர்ச்சியாகவும், அதன் மறுபக்கமாகவும் ஒரு சுவாரஸ்யமான நாவலை அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுத் 2013இல் (ஆல்பெர் காம்யுவின் நூற்றாண்டு) வெளியிட்டு, பின்னர் 2014இல் பிரான்ஸிலும் வெளியிட்டார். பிரெஞ்சு இலக்கிய உலகில் இது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆல்பெர் காம்யு எழுதிய ‘அந்நியன்’ நாவலின்தொடர்ச்சியாகவும், அதன் மறுபக்கமாகவும், எதிரொலியாகவும்அமைந்திருக்கும் ‘மெர்சோ: மறுவிசாரணை’,‘அந்நியன்’ நாவலைப் படித்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய படைப்பு.அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுதுடைய எழுத்தின்துணிச்சலும், சவாலும், இவரிடம் காணப்படும் பிரஞ்சு மொழிஆளுமையும் பிரான்ஸில் இவருக்குப் பல இலக்கியவிருதுகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன..
——————————————————

*பயங்கரவாதி என புனையப்பட்டேன் 
– அப்பணசாமி

மொகமது ஆமிர் கான் – நந்திதா ஹக்ஸர் தமிழில் : அப்பணசாமி ‘அன்றைய இரவில் நான் தூங்கவே முடியவில்லை. குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் அலை, அலையாக என்முன்னே வந்து சென்றன. விடுதலையடைந்த பின்னர், இவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, போலீஸ் எப்படி என்னைக் கடத்திச்சென்று வழக்குகளில் சிக்க வைத்தார்கள் என்ற உண்மைக்கதையைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.’ ‘நாடாளுமன்றத் தாக்குதல் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது; அதேபோல, எல்லா இசுலாமியர்களும் தாக்குதலுக்கு ஆளாவதைப் பார்த்தும் அதிர்ச்சியடைந்தேன். அரசியலில் எனக்கு எப்போதுமே ஆர்வம் ஏற்பட்டதில்லை. இப்போது இந்தியாவில் இசுலாமிய மக்களின் எதிர்காலம் குறித்த கேள்வி மனதில் எழுகிறது.

——————————————-)

*கடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, 
வில்லியம் டேல்ரிம்பிள் இரா.செந்தில் (தமிழில்)

அரசர் பேச ஆரம்பித்தார். ‘நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை பிள்ளைகளே! கேளுங்கள்: இந்த அழிவை நான் கொண்டுவரவில்லை. எனக்கு செல்வங்களோ சொத்துக்களோ இல்லை. நிலமும் இல்லை, பேரரசும் இல்லை. நான் எப்போதுமே ஒரு பிச்சைக்காரன். ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு இறைவனைத் தேடிக்கொண்டிருக்கும் சூஃபி. என்னைச்சுற்றி சிலர் இருப்பதால் எனக்கான தினசரி ரொட்டியை நான் சாப்பிடுகிறேன். ஆனால் இப்போது மீரட்டில் பற்றவைக்கப்பட்ட ஒரு மாபெரும் தீநாக்கு அந்த ரொட்டியையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அது டெல்லியின் மீது விழுந்து இந்த மகத்தான நகரத்தை பற்றவைத்துவிட்டது. இப்போது நானும் என்னுடைய வம்சாவளியும் அழிந்துபோக இருக்கிறோம். மகத்தான தைமூரிய [முகலாயர்கள்] பேரரசர்களுக்கு உண்டான பெயர் இப்போதும் உயிர்த்திருக்கிறது, ஆனால் விரைவில் அந்தப் பெயரும் முற்றாக அழிக்கப்பட்டு மறக்கப்பட்டுவிடும்.
———————————-
*கடவுள் சந்தை
– மீரா நந்தா

தாராளமயம் இந்தியாவின் பொருளாதாரமாய் ஆகியிருக்கிறது. ஆகவே இந்தியா மேலும் இந்துமயமாகவும் ஆகியிருக்கின்றது.

நடுத்தர வர்க்க இந்தியர்கள், வளமடைகின்ற போதே செயலூக்கமுள்ள மதத்தன்மை கொண்டவர்களாகவும் ஆகிறார்கள். கடந்த பத்தாண்டுகள், ஆற்றல் மிகுந்த புதிய சாமியார்களின் பெருக்கம், கோயில் சடங்குகளில் மிகப்பெரிய அதிகரிப்பு, புதிய கடவுளரின் உருவாக்கம், பூசாரிகளின் தேவை அதிகரிப்பு ஆகிய வற்றைக் கண்டுள்ளன. அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சாரங்களில் பூசைகளையும் யாகங்களையும் கால ஒழுங்கோடு பயன்படுத்த முற்பட்டுவிட்டதால், இந்து மதமும் பொதுவாழ்க்கையில் நுழைந்துவிட்டது.

இந்த இந்துமயமாதலை அரசும் தனியார்துறை உதவியுடன் ஆதரிக்கிறது. மதச் சுற்றுலாக்களை ஊக்கத்துடன் மேம்படுத்தல், தனியார்துறை நிறுவனங்களிடம் உயர்கல்வியை ஒப்படைத்தல் (இவர்களில் சிலர் மத அறக்கட்டளைகள் வாயிலாக, மதிப்பீடுசார் கல்வியை அளிப்பதற்கு இந்த நிறுவனங்களை நடத்துகிறார்கள்), குருஜீக்களுக்கும் சாமியார்களுக்கும் நிலங்களை மிகவும் குறைந்த விலையில் வழங்குதல் போன்றவற்றுடன், அரசின் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளில் பல இந்துமதத்தை மேம்படுத்துவ துடன் தொடர்புள்ளவை.

ஏன் இது நடந்துள்ளது? இதற்கு அர்த்தம் என்ன? இது இந்திய மதச்சார்பின்மையின் மரணத்தை அறிவிக்கிறதா?

கண்ணைத் திறக்கும் இந்த நூலில், மீரா நந்தா மக்கள்சார் இந்துமதத்தின் எழுச்சியை நோக்குவதோடு, முதல்முறையாக, அரசு, கோயில், பெரும்வணிகக்குழும இந்தியா ஆகியவற்றுகிடையிலான நெருக்கத்தையும் உலகமயமாக்கத்தினுள் இந்தியாவின் தாவல், பொருளாதாரச் சீர்திருத்தம் இவற்றிற்குப் பின்னுள்ள குரூப உண்மையையும் விளக்குகிறார். நாட்டை மிகுந்த அபாயத்திற்குள் செலுத்தக்கூடிய தனது சொந்த, நயவஞ்சகமான அடிப்படைவாத வடிவத்தை இந்தியா உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று அவர் வாதிடுகிறார்.ஓங்கி அறைகின்ற, முரண்பாடான, வசீகரிக்கும் மெய்ம்மைகளைக் கொண்ட நூல் கடவுள் சந்தை, எல்லாக் குடிமக்களும் அவசியம் படிக்கவேண்டிய ஒன்று.
——————————-

*சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்
– ராஜ் கௌதமன்
—————————
*தமிழ் இன்று- கேள்வியும் பதிலும்
இ. அண்ணாமலை

——————————

*பேட்டை

தமிழ்ப் பிரபா

சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள இந்த நாவல் நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் இயல்பாகத் தன்னுள் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி உருவான விதம் அங்கு பகுதியின் தன்மையைத் தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள் தர்க்கத்துக்குள் அடங்காத வாழ்வின் கோலங்கள் ஆகியவை புனைவுத் தன்மையுடன் வெளிப்படுகின்றன.
ஓர் சமூகத்தை தோற்றுவித்த மூல வரலாற்றிலிருந்து ஆரம்பமாகிறது
நாவல்.கட்டமைக்கப்பட்ட ஓர் ஊரின் பின்னே இருந்த ஆங்கிலேயரின்
கிழக்கிந்தியக் கம்பெனியும்,அவர்களின் அடிவருடிகளாக வாழ்ந்த சில
தனவந்தர்களின் ஆசை என எந்தவிதப் பட்சாதாபமில்லாமல் தனதாக்கிக்கொள்கிறது
.
மிக வேகமாக பழைய இந்தியாவிலிருந்து புதிய இந்தியாவிற்குள்
பயணப்படுகிறது நாவல். மனித மாண்பையும்,அவர்களின் சின்னச் சின்ன
அபிலாசைகளையும்,கோபதாபங்களையும், அவர்களின் கஷ்ட
நஷ்டங்களையும்,இயலாமையையும்,பிரார்த்தனைகளையும்,இழப்புகளையும், மிகத்
தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் தமிழ்ப் பிரபா.ஒன்றன் பின் ஒன்றாக
வரிசைப்படும் கதாப்பாத்திரங்கள் ,தங்களின் அகப்பிறழ்வை ஒத்துக்கொள்ள
மறுக்கிறார்கள்.மனிதர்களின் பிடிவாதமே அவனது அறியாமையை,பொய்யான
நம்பிக்கைகளை ஒத்துக்கொள்வதில்லை தானே
————————————

*பெருவலி

சுகுமாரன்

இந்த நாவல் இரண்டு பகுதியாக எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதி முகலாயபேரரசின்அக்பர் காலம் முதல் பேரரசர் ஷாஜகான் காலம் வரை மூன்றுதலைமுறை மன்னர்களிடம் பணி செய்த பானிபட் என்ற வயது முதிர்ந்த ஆணின் (நபும்சகம்) பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பானிபட் இளவரசிஜஹனாராவின் நம்பிக்கைக்கு உரியவனாகவும், அரசியல் சதுரங்கத்தில் காய்கள் எவ்வாறு நகர்த்தப்படும் என்பதை தன் அனுபவங்களால் யூகிக்க தெரிந்தவனாகவும்இருக்கிறான்.இவன் கற்பனை பாத்திரம் என்றாலும் எனக்கு ராமாயணத்தில் வரும்கூனியை ஏதோ ஒருவிதத்தில் ஞாபகப்படுத்துகிறான். இவன் பார்வையில்தான் நாவல் துவங்குகிறது.

பேரரசர் ஜஹாங்கீர் பெயரில் நூர் மஹல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள்.
அதிகாரம் தன் கைகளுக்குள்ளேயே இருக்க சூழ்ச்சி செய்து தக்காணத்தில் ஷாஜ கானையும் அவன் குடும்பத்தையும் சிறை பிடிக்கிறாள். அந்த சூழ்ச்சியைதகர்த்து வெற்றி வீரனாய் ஷாஜகான் ஆட்சியில் அமர்வதில் ஆரமித்து, அவரின்அன்பு நாயகிமும்தாஜ் பேகம் பதினான்காவது பிரசவத்தின் போது அதிக ரத்தபோக்கால் இறந்ததுவரையான கதையைச் சொல்கிறான்.

“அதிகாரத்துக்காக மனிதர்கள் என்னவெல்லாம் செய்யக் கூடுமென்பதை மூன்று தலைமுறைகளாகப் பார்த்திருக்கிறேனே! பணிவு காட்டுவார்கள். நயந்து பேசுவார்கள், பாசம் பொழிவார்கள், சதி செய்வார்கள், உறவுபாராட்டுவார்கள். உறவு பாராட்டியவர்களுக்கே பகையாவார்கள்.பகைவனுக்கு நட்பாவர்கள். வாளால் வெட்டிக் கொல்வார்கள். வெற்றிஈட்டுவார்கள். வெற்றி பெற்றதும் எல்லாம் மறப்பார்கள். எல்லாரையும்அடக்கி ஆள்வார்கள். தனது ஆட்சி முடியாதது என்று கனவு காண்பார்கள்.அந்த கனவிலேயே புதையுண்டுகிடப்பார்கள்”.சுகுமாரன் என்ற ஆளுமையின் நுண்ணுணர்வு மற்றும் கவித்துவத் தெறிப்பு களையும் உணரமுடிகிறது. அது நாவலை இன்னும் மனதிற்கு நெருக்கமான பிரதியாக 
மாற்றுகிறது.
——————————

*மாயக்குதிரை- தமிழ்நதி

போர் சிதைத்த வாழ்க்கை, புகலிடத்தின் விரக்தி என இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் சிதிலமாக் கப்பட்ட ஒரு இனத்தின் மனிதத்தைப் பேசுகிறது. யூமா வாசுகி குறிப்பிடுவதுபோல மனக்கோலம், மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை, காத்திருப்பு கதைகள் உருவாக்கும் சோர்விலிருந்தும், வாழ்விலிருந்தும் உடனடியாக மீள முடியவில்லை. யதார்த்த உலகின் மனிதம் பேசும் இந்தச் சிறுகதைகள் மூலம் தமிழ்நதி எழுத்தின் வலிமையை மீண்டும் ஒருமுறை உசுப்பிவிடுகிறார்.

 


 

* நூற்பட்டியலுக்கான அடுத்த பக்கத்திற்கு செல்ல தொடக்கத்திற்கு சென்று இணைப்பினை அழுத்தவும் (பக்கம் 2)

 


 ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளுக்குள் ,லண்டனில் அமைந்துள்ள எமது படிப்பக நிலையத்தால்,இந்த நூல்களை வான் வழி பொதிச் சேவை மூலம் அனுப்பி வைக்க முடியும். இலங்கை மற்றும் மத்திய கிழக்கிலுள்ள வாசகர்கள்  நூல்கள் தேவைப்படின் தொடர்பு கொள்ளுங்கள். எம்மிடம் உள்ள நூல்களின் விபரம் தேவையானோரும், நூல்கள் தேவையானோரும் கீழ்வரும் தொலைபேசி, மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் .Mobile 0044 (0) 7817262980 . Email. eathuvarai@gmail.com.பிரித்தானியாவில் உள்ளவர்கள் 317, 1st Floor, High Street north, Eastham,LONDON, E12 6SL எனும் முகவரியில் திங்கள்,செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment